தமிழ்மொழிக்கு ஒரு சாபம் உண்டு தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள்; கவிஞர்களை காலம் இளம் வயதிலேயே இழுத்துக்கொள்வது தான் அது. மகாகவி பாரதியின் காலம் வெறும் 39 ஆண்டுகள் தான். எழுத்தாளர் புதுமைப்பித்தன் வெறும் 42 ஆண்டுகள் தான் வாழ்ந்தார். பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வெறும் 29 வயதில் மறைந்து போனார். இளம் வயதிலேயே இவர்கள் காலமாகிப் போனாலும் காலத்தால் மறக்க முடியாத , காலத்தினால் அழிக்க முடியாத மகாசக்தியாக இன்றும் இவர்களது எழுத்துகள் நின்று பேசுகின்றன. இவர்கள் இன்னும் பலகாலம் வாழ்ந்திருந்தால் இவர்கள் படைப்பு இன்னும் எவ்வளவு குவிந்திருக்கும் என்கிற ஏக்கமும் எதிர்பார்ப்பும் தமிழ் வாசகர்களை இன்றளவும் தொந்தரவு செய்கின்றன.
இந்த வரிசையில் ( இந்த வரிசை என்பது இளவயது இயற்கையெய்தியவர்களின் வரிசை என்று கொள்க; பாரதியோடோ, புதுமைப்பித்தனின் படைப்புகளோடோ அல்லது பட்டுக்கோட்டையின் பாடல்கோடோ ஒப்புமைப் படுத்த அவசியமில்லை. அவர்களின் உயரமும் தமிழ் இலக்கியத்துக்கான பங்களிப்பும் வேறு என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன் ) சமகாலத்தில் நான் வெகுவாக ரசித்த கவிஞர் நா.முத்துக்குமாரும் நாற்பத்து ஒரு ஆண்டுகள் தான் இந்த நிலத்தில் வாழ்ந்து போனார். ஆனாலும் அவரின் கவிதைகள் பாடல்கள் உரைநடை என அவருடைய எழுத்துகள் காலத்துக்கும் அவர் தந்து போன பொக்கிஷங்கள். எண்பதுகளின் மத்தியில் பிறந்த அவரது கவிதைகள் எண்பதுகளின் அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டவை. எண்பதுகள் எழுத்துலகில் பொற்காலம் தான். புதுக்கவிதை பெரும் வீச்சுடன் இயங்கிய காலம். நவீன கவிதை புது வெளிச்சத்தைக் கொண்டு வந்த காலம். இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டவை தொண்ணூறுகளில் எழுத வந்த நா.முத்துக்குமாரின் கவிதைகள்.
நா.முத்துக்குமாரின் அத்துணை கவிதைகளையும் வாசித்திருக்கிறேன். அவரது கவிதைகளை புதுக்கவிதைக்கும் நவீன கவிதைக்குமான ஒரு பாலமாகப் பார்க்கிறேன். புதிதாக எழுத ஆசைப்பட்டு வந்த மாணவர்கள் நண்பர்கள் பலருக்கு அந்தப் பாலத்தைக் காட்டியிருக்கிறேன். பரிசளித்திருக்கிறேன்.
நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன் இரண்டும் நான் சிலாகித்த இரு பெரும் கவிதைத் தொகுப்புகள் அவருடையன.
கணையாழி இதழ் விழா ஒன்றில் எழுத்தாளர் சுஜாதா பேசிய போது, “கணையாழி இதழில் வர்ற கவிதைகளைக், கடந்த 10 வருஷமா நான்தான் தேர்ந்தெடுத்துட்டு வர்றேன். இந்தக் கணையாழி இதழில் கூட ஒரு கவிதை வந்திருக்கு. தமிழில் வெளிவந்த சிறந்த 25 கவிதைகளை பட்டியலிடச் சொன்னால் ‘தூர்’ கவிதையை அதில் நான் சேர்ப்பேன்” என்றார். நா.முத்துக்குமாருக்கு அது மிகப்பெரிய வெளிச்சத்தைக் கொடுத்தது.அந்தக் கவிதை :
தூர்
வேப்பம் பூ மிதக்கும்எங்கள் வீட்டு கிணற்றில்தூர் வாரும் உற்சவம்வருடத்துக்கு ஒரு முறைவிஷேசமாக நடக்கும்.
ஆழ் நீருக்குள்அப்பா முங்க முங்கஅதிசயங்கள் மேலே வரும்...
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,துருப்பிடித்தக் கட்டையோடுஉள் விழுந்த ராட்டினம்,வேலைக்காரி திருடியதாய்சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்...எடுப்போம் நிறையவே ‘சேறுடா சேறுடா’ வெனஅம்மா அதட்டுவாள்என்றாலும்சந்தோஷம் கலைக்கயாருக்கு மனம் வரும்?
படை வென்ற வீரனாய்தலைநீர் சொட்டச் சொட்டஅப்பா மேலே வருவார்.
இன்று வரை அம்மாகதவுக்குப் பின்னிருந்துதான்அப்பாவோடு பேசுகிறாள்.
கடைசி வரை அப்பாவும்மறந்தேப் போனார்மனசுக்குள் தூர் எடுக்க
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நா.முத்துக்குமாரின் பயணம் ஏறு முகம் தான். சிறந்த கவிதைகளைப் படைத்தார் அதனினும் சிறப்பான திரைப்பாடல்களை எழுதினார். புகழின் உச்சிக்குச் சென்றார்.
நியூட்டனின் மூன்றாம் விதி தொகுப்பின் தலைப்புக் கவிதையே அழகானது. அடுக்குமாடிக் குடியிருப்பின் அவஸ்தைகளைச் சொல்ல முயன்ற கவிதை.
நியூட்டனின் மூன்றாம் விதி
மேல் வீட்டுக்காரன்
என்கிற உரிமையில்
நீ கைப்பற்றும் சுதந்திரம்
அதிகப்படியானது.
உன் ஒவ்வொரு அசைவும்
பூதாகரமாய் ஒலிக்கிறது
கீழ்த்தளச் சுவர்களில்
.
திட்டமிட்டு நகர்த்தும்
சாமார்த்தியமும் உனக்கில்லை.
பாக்கு இடிக்கும் பாட்டி;
சச்சதுர அம்மியில்
சார்க் புர்ரக்கென்ற
குழவி நகர்த்தும் அம்மா;
ஏதேதோ பாட்டுக்கெல்லாம்
எம்பிக்குதிக்கும் குழந்தைகள்;
என
உன் உறவுகள் கூட
உன்னைப் போலவே.
உன்னைப் பழிவாங்கும் விதமாக
என்னால் முடிந்தது ஒன்றுதான்.
எனதருமை மேல்தளத்து நண்பா…
தலையணையையும் மீறி
உன்காதுகளில்
சுழன்று கொண்டிருக்கும்
என் மின்விசிறி.
அடுக்குமாடிக்காரனின் அவஸ்தைகள் போலவே எதிர்வீட்டுக்காரனோடு
அனுசரித்துத் தான் வாழவேண்டிய நிலையையும் கவிதையாக்கியிருப்பார் இப்படி
புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன்
எங்களிடமிருந்து பறிக்கிறான்
பூனை வளர்க்கும் சுதந்திரம்
நா.முத்துக்குமாரின் கவிதைகள் எளிமையானவை. ஆனால் அழகானவை.
அட என ஆச்சர்யம் கொள்ளவும், அச்சச்சோ என ஆதங்கப்படவும் என
ஏதோ ஒரு உணர்வுச் சுழலுக்குள் நம்மை இழுத்து விடுவன.
குறுங்கவிதைகளிலும் அவர் சிறப்பான கவிதைகளைத் தந்துள்ளார்.
உள்ளும் புறமும்
அப்பாவின் சாயலில் உள்ள
பெட்டிக் கடைக்காரரிடம்
சிகரெட் வாங்கும்போதெல்லாம்
விரல்கள் நடுங்கின்றன
இது நா.முத்துக்குமாரின் பிரபலமான கவிதை. இது தரும் உணர்வு அவ்வளவு அனுக்கமானது. எண்பதுகளின் மற்றும் தொன்னூறுகளின் பதின் வயதுச் சிறுவர்களின் அனுபவ ஊறல்களில் இந்நினைவு ஊறிக் கிடந்திருக்கும்.
கூர்வாள்
நான் ஏன் நல்லவனில்லை
என்பதற்கு மூன்று காரணங்கள்.
ஒன்று
நான் கவிதை எழுதுகிறேன்.
இரண்டு
அதைக் கிழிக்காமலிருக்கிறேன்.
மூன்று
உங்களிடம் அதைப்
படிக்கக் கொடுக்கிறேன்
இந்தக் கவிதையும் , இவர் எழுதிய பொண்டாட்டி தாலியை அடகு வைத்து புத்தகம் போட்ட கவிதையும் எண்பதுகளின் ஏன் இப்போதைய வரைக்கும் இலக்கியவான்களின் நிலையைக் காட்டும் கண்ணாடி எனலாம்.
பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணடிகள்.
இது இவரது சிறப்பான ஹைக்கூக்களில் ஒன்று. இந்தக் கவிதை உருவாக்கித் தரும் காட்சி பிம்பங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சலூன்கடைக் கண்ணாடியில் தெரியும் நம் உருவத்தை முதன்முதலில் பார்த்த போது வந்த பரவசத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது. நெடுங்கவிதைகளோடு குறுங்கவிதைகளிலும் அழகியலையும் காட்சிப் படிமங்களையும் கொட்டித் தந்திருக்கிறார்.
பொருட்படுத்தா மனிதர்களை
நாற்றத்தால் அறைந்தது
குடல் சரிந்த நாய்.
சாலையில் நாம் கவனிக்காது கடந்து செல்லும் நிகழ்வுகளுக்கான எதிர்வினை இந்தக் கவிதை.
முதல் காதல்
காற்றில் பறந்து
பறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கிய
நடனம் முடியவில்லை!
இவர் கவிதைகளில் இவர் கட்டமைக்கிற காட்சிகள், இவர் உருவாக்கித் தருகிற மனித பிம்பங்கள், கதை சொல்லும் பாங்கில் கட்டமைக்கப்படுகிற கவிதை மொழி என எல்லாமே மிக எளியன.
கவிதைகளில் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். இவரது திரைப்பாடல்களின் இலக்கிய ரசனையைப் பற்றி எழுதினால் பக்கம் பக்கமாக எழுதலாம்.
இவரது கவிதை நடைக்கு நெருக்கமாக அமைந்த உரைநடைத் தொகுப்புகளான வேடிக்கை பார்ப்பவன் மற்றும் அணிலாடு முன்றில் கட்டுரைத் தொகுப்புகளும் அற்புதமான வாசிப்பு அனுபவத்தைத் தருவன.
வாழ்ந்த சொற்ப காலத்திலும், அழகான கவிதைகளையும் அதனினும் மிக அழகான திரைப் பாடல்களையும் எழுதி, மிக வேகமாக இந்த பூமியை விட்டுப் புறப்பட்டுவிட்ட நா.முத்துக்குமார் எனும் கலைஞன் மீது மிகப்பெரிய ஆதங்கம் வருகிறது.
இன்னும் கொஞ்ச வருடங்கள் இருந்திருக்கலாம் முத்துக்குமரா…
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
இரா.பூபாலன்
12-07-2020
அடடா அருமையாக எழுதியிருக்கீங்க நண்பரே
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்குஇதயம் வருடும் வரிகளுக்கு இமைகள் நனைக்கும் அஞ்சலி.
நீக்குமிகவும் அவசியமான கருத்துக்கள் நன்று வாழ்த்துக்கள்
நீக்குஅறற்புதவாசிப்பனுபவம்.கடைசிவரி விளக்கமுடியா,இனம்புரியா உணர்வுதந்தது.
நீக்குஅருமையான பதிவு. நா.முத்துக்குமார் கவிதைகளை ஒரு ரசிகனாவும் வாசகனாகவும் இருந்து சிலாகித்த உணர்ச்சிகளின் வெளிப்பாடாய் - இடையிடையே கவிதைகளுடன் உங்கள் பதிவு அருமை. நன்றி
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி. நன்றியும் அன்பும்
நீக்குஅடடா அருமையாக எழுதியிருக்கீங்க நண்பரே
பதிலளிநீக்குநல்ல விதமான கட்டுரை மிகவும் சிறப்பு
பதிலளிநீக்குமிக அருமையான பதிவு நண்பரே.
பதிலளிநீக்குநா முத்துக்குமார் இன்னும் சில காலம் வாழுந்து மேலும் பல சாதனைகளை புரிந்திருக்கலாம.. இறைவனின் ஆணையை யாரால மீறமுடியும். தொடரட்டும் உங்களது பதிவுகள்
எ. ஷுவேப் கான்
மிக்க நன்றியும் அன்பும்
நீக்குஅருமையான அலசல் அழகாயுள்ளது
நீக்குநன்று
பதிலளிநீக்கு....
நா. முத்துக்குமார் சிறந்த கவிஞர். இது அவருடைய பிறந்தநாளுக்காக நினைவுகூர்ந்து எழுதப்படும் கட்டுரை. நன்று.
பதிலளிநீக்குசிறப்பான பதிவு தோழர்...
பதிலளிநீக்குதிரைப்படப் பாடல்களில் புதிய உச்சம் தொட்டது நா.முத்துக்குமார் அண்ணண் அவர்களால்தான் என்றால் அது மிகையாகாது.... ஆண்டுக்கொரு தேசியவிருது பெற்று தமிழ்சினிமா பாடல்கள் தலைநிமிர்ந்தது இவரின் எழுத்தின் வன்மையால்.... கவிதை இயற்றும் உத்திகளை நேரடியாக முதுகலை படிப்பில் பெற்றமை வாழ்வின் தவப்பேறு... நா.முத்துக்குமார் பற்றிய தங்களின் விமிர்சனம் சிறப்பு.
பதிலளிநீக்குமிக்க நன்றியும் அன்பும்
நீக்குஅருமையான பதிவு அண்ணா 👍👍👍
பதிலளிநீக்குநான் எழுதப்பழகிய காலத்தில் தூர் கவிதை படித்து வியந்திருக்கிறேன் என்னை நவீன கவிதை நோக்கி அழைத்து வந்த பாலம் முத்துக்குமார் அண்ணன்
பதிலளிநீக்குநான் எழுதப்பழகிய காலத்தில் தூர் கவிதை படித்து வியந்திருக்கிறேன் என்னை நவீன கவிதை நோக்கி அழைத்து வந்த பாலம் முத்துக்குமார் அண்ணன்
பதிலளிநீக்குஎதார்த்தம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்த ஒரு மகாகவியின் கவித்திறனின் சீர்மிகு விவரனை... நன்றி நண்பரே
பதிலளிநீக்குஅருமை சார்
பதிலளிநீக்குஅருமை சார்
பதிலளிநீக்குரா.பூபாலனின் பொம்மைகளின் மொழி நல்ல கவிதை நூல்.அண்ணன் நா.மு பற்றிய நினைவுகள் நன்று.நன்றி.
பதிலளிநீக்கு