வியாழன், 27 ஜூலை, 2017

காலத்தைப் பின்னோக்கி நகர்த்துபவள்


இயற்கைக்கு விரோதியவள்.
பெளதீக விதிகளனைத்தையும் உடைத்தெறிந்துவிட்டு
என் காலத்தை அவ்வப்போது
பின்னகர்த்தி விளையாடுவாள்.
ஆங்காங்கே பல்லிளிக்கும் வெண்நரைகள் வேகமாக உருமாற
இன்னும் இளமையாவேன் அவளது நகர்த்தலில்
இளம் பிராயத்தில் மிச்சமாகிப் போன காதலையும் முத்தங்களையும்
மிச்சம் வைக்காமல் தரச் செய்வாள்.
ஆன மட்டும் ஆசை தீரக் காதலிப்பவள்
இன்னும் கொஞ்சம்
என் காலத்தை சுழலவிடுவாள்.
இம்முறை ஒரு சிறுவனாகியிருப்பேன்.
அவளது பாவாடை சரிகைகளில் முகமுரச
பால்யத்தின் மடியில் கிடத்தி அவ்வயதின் ஐஸ் குச்சிகளையும்
கடலை மிட்டாய்களையும் படைப்பாள்.
மேலும் துணிந்தவள்
இன்னும் என்னை சிறுபிள்ளையாக்கி
மடி கிடத்தி அன்னையாகிறாள் அமுதூட்டி.
இன்னும் அவள் நகர்த்தலில்
செல்லாத தூரம் என்பது
கருவறை தான்.
அதையும் செய்வாள்
ஒரு நாள்
பின்னகர்த்திய காலம்
உறைந்து நிற்க
அவளது கருவறையில்
சிசுவாவேன்
அப்போதும் வயிறு தடவி
முத்தமிட்டுச் சிரிப்பாள்
பாவி

திங்கள், 24 ஜூலை, 2017

நான் ஏன் கவிதை எழுதுகிறேன் ?

இந்த மாதம் நான்காவது கோணம் சிற்றிதழில் வெளியான எனது நேர்காணலும் கவிதைகளும் ... 

சிறு வயதில் சித்திரக்கதைகளை வாசிக்கத் துவங்கியது முதல், பல்வேறு எழுத்து வடிவங்களையும் வாசித்துவிட்டு கவிதையின் வசம் ஈர்ப்பாகி கவிதைகளைத் தேடித் தேடி வாசிக்கத் துவங்கியது மனம். வாசிப்பின் வழியும் அனுபவங்களின் வழியும் கண்டடைந்த ஒரு மொழி தான் கவிதை எனக்கு.

தனிமைப் பொழுதுகளில் நிரம்பி வழியும் சேமித்த கணங்களின் சொற்களை எழுத்தாக்கிப் பார்த்தேன். கொஞ்சம் அவை கவிதை வடிவத்தை ஒத்திருந்தன. சிற்றிதழ்களில் , வணிக , இலக்கிய இதழ்களில் கவிதை அனுப்பி பிரசுரமாக, நம்பிக்கை வந்து எழுதுவதைத் தொடர்ந்து கொண்டேன்.

அதிகம் பேசத் தெரியாதவனிடம் சேகரமாகும் அனுபவங்களை, என்ன செய்வது ? நான் அவற்றை  எழுத்துகளாக்கி அனுப்பி விடுகிறேன். யாரோ ஒருவரிடம் அல்லது சிலரிடம் பகிரப்பட வேண்டிய அன்பும், வலியும் , சினமும் யாவும் கவிதையில் பொதுவானதாகி விடுகிறது. வாழ்வு பொதுவானது தானே.

எனது ரசனைகளை, நான் கேட்க விரும்பிய கேள்விகளை, நான் வெளிக்காட்டிக் கொள்ள நினைக்கிற ஆதங்கத்தை , ஆற்றாமையை, என் ரகசிய விருப்பங்களை, நான் விரும்பியணிந்து கொள்ள நினைக்கிற ஒரு முகமூடியை, கடந்து செல்லும் முகம் தெரியாச் சிறுமியின் கையசைப்பு போன்ற ரம்மியக் காட்சிகளை, நான் கவிதையாக்கிச் சேமிக்கிறேன். அவை என் வாழ்வின் சாட்சியங்களாக என்றென்றைக்கும் இருக்கும் என நம்புகிறேன்.

ஒரு திரைப்படத்தில் அடுத்த பதினைந்து நிமிடங்களில் அனைத்தும் மறந்து போகும் வியாதி இருக்கும் நாயகன் புகைப்படங்களாக தான் சந்திக்கும் மனிதர்களை சேமித்து வைத்துக்கொள்வது போல நான் சந்திக்கும் கணங்களை, என் இருப்பை, என் வாழ்வை நான் கவிதைகளாக்கிச் சேமிக்கிறேன்.கவிதைகளை உண்மையையும் அனுபவங்களையும் கொஞ்சம் அழகியலுக்காக கற்பனையையும் சேர்த்துச் சமைக்கிறேன். ஆக, என் கவிதைகள் என் இருத்தலுக்கான சாட்சியங்கள்.

கவிதைகளை நம்புகிறேன் யாவற்றையும் விடவும் யாரையும் விடவும். ஆகவே கவிதை எழுதுகிறேன். வாழ்வு தரும் அழுத்தங்களிலிருந்து அவ்வப்போது காப்பாற்றும் கருவியாக கவிதைகள் இருக்கின்றன.துணையற்ற தனிமைக் கொடுங்கணங்களிலும் ஏதாவது ஒரு கவிதை ஆறுதலாகவும் துணையாகவும் அமைகிறது என்பதைத் தாண்டி கவிதையிடம் எந்த எதிர்பார்ப்புமில்லை.

ஆனாலும், அவை என் அடையாளமாகி நிற்கின்றன. என்னை எங்கு கண்டாலும் என் கவிதைகளோடு தான் காண்கிறார்கள், என் கவிதைகளோடு தான் பேசுகிறார்கள் என்பது பெருமையாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது. கவிதை எனக்கு நிறைய உறவுகளைத் தந்திருக்கிறது  போலவே நிறைய உறவுகளை வெட்டி விட்டிருக்கிறது. தனிமையிலிருந்து காப்பாற்றிக் கை பிடித்து அழைத்து வந்திருக்கிறது அதே சமயம் இன்னும் பெரிய தனிமையையும் தந்திருக்கிறது.

ஆனாலும் அவ்வளவு மோகித்திருக்கிறேன் இந்தக் கவிதைகள் மீது ...

--

கவிதைகள் :

1.

வாகனத்தை உதைத்துக் கிளம்பியதும்
புன்னகைத்து வழியனுப்புகிறார்கள்
சாலையின் இருமருங்கிலும்
தலையாட்டி பூச்சொரிகின்றன
வழக்கம் போல மரங்கள்
முகமறியாச் சிறுவனொருவன்
கையசைத்து உற்சாகப் படுத்துகிறான்
மூலக்கடைகிட்ட இறக்கி விட்டுடு மகராசா
என உரிமையுடன் ஏறி இறங்கிக் கொள்கிறாள் கிழவி
முகப்பு விளக்கை அணைக்கச் சொல்லி
சைகையில் காட்டிவிட்டு 
வெட்கமாகச் சிரித்துவிட்டுக் கடக்கிறது
ஸ்கூட்டி
பொன்னந்தியில் ஒளிரும் ஆரஞ்சு வர்ண
சூரியனை வாகனத்தை நிறுத்தி
புகைப்படமெடுக்க முயற்சிக்கிறேன்
கூடு திரும்பும் பறவைகளின்
கீச்சொலிகளில் இன்றைய நாளைக்கான
மொத்தக் குதூகலமும் தொற்றிக்கொள்கிறது

எனது வாகனம் பழையது தான்
ஆனாலும்
சரியான பாதையில் தான் போய்க்கொண்டிருக்கிறேன்
போய் வருகிறேன்

2.

அகாலத்தில் திடுக்கிட்டு விழித்துக்கொள்பவன்
பெருந்துயரக்காரன்.
தூரத்து நாயொன்றின் ஊளை
அவனை இன்னும் திடுக்கிடச் செய்யும்.
அருகில் ஆழ்ந்த நித்திரையிலிருப்பவர்கள்
மீது ஆத்திரம் வரலாம்.
சன்னமான ஒலியில் ஒரு இசை
அலைபேசி வெளிச்சத்தில் ஒரு புத்தகம்
என
உறக்கத்தை மீட்டெடுப்பதற்கான
பிரயத்தனங்கள் பொய்த்துப் போக
விறுவிறுவென மொட்டைமாடிக்குச் செல்வான்
அநாதையாய்க் கவிழ்ந்து கிடக்கும்
இரவையும் 
தூரத்தில் தனித்து ஒளிரும்
தெருவிளக்கையும்
துணையாக்கி
கதைபேசிக் கழிப்பான் அவ்விரவை.
மெல்ல விடிந்து விலகும் இரவு
அவனுக்குத் தந்து போனதாயிருக்கும்
இந்தக் கவிதை.

3.

ரட்சகி

சாலை விபத்தில்
தலை நசுங்கி
இறந்து கிடக்கும் ஒருவனை
கூட்டமாக  நின்று வேடிக்கை பார்க்கின்றன
பரிதாபத்தின் கண்கள்.
கூட்டத்திலிருந்து விடுபட்ட
பதின்பருவச் சிறுமியொருத்தி
முன்பின் அறிந்திராத அவனுக்காக
தன் நெஞ்சில் சிலுவைக்குறியிட்டு
ப்ரார்த்திக்கிறாள்.
முன் பின் அறிந்திராத
ஒருவனுக்காக ஒரு கணம்
கலங்கியிருக்கின்றன அவளது கண்கள்.
இறந்து கிடந்தவனின்
ஒரு பாதிப் பாவங்களை
ஒற்றைச் சிலுவைக்குறியில்
ரட்சித்தவள்
பேருந்தில் அவளையே கவனித்தபடி
கடந்த என் மனதின்
சாத்தான் இருளின்
ஒரு பாதியை
மெல்ல விலக்கி ரட்சித்தவளுமாகிறாள்


நன்றி :

நான்காவது கோணம் ஆசிரியர் குழு
கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா