திங்கள், 27 மார்ச், 2017

இங்கி பிங்கி பாங்கி

இங்கி பிங்கி பாங்கி  - 
                    கவிஞர் மு.அறவொளி அவர்களின் கவிதைத் தொகுப்பை முன்வைத்துகவிதைகளின் மீதான அன்பு நம் அனைவரிடமும் நிறைந்து கிடக்கின்றது. அதன் பொருட்டு தான் நாம் நாளிதழ், வார இதழ் , முதற்கொண்டு சுண்டல் மடித்துத் தரப்படும் காகிதம் வரைக்கும் கவிதைகளை வாசிக்கத் தேடுகிறோம். கவிதை எழுதுதல் என்பது பெரும் கலையன்று. ஆயினும் கவிதையாக எழுதுதல் உண்மையில் பெரும்கலை தான்.

கவிதைகளை ஒரே ஒரு முறை ஏதோ ஒரு காரணத்துக்காக முயற்சித்துப்பார்க்கும் ஒருவருக்கும் சரி, தொடர்ந்து தனது நாட்களை கவிதையின் வசமே ஒப்படைத்திருக்கும் கவிதைக் காதலர்களுக்கும் சரி உரைநடையில் சொல்ல இயலாத ஏதோ ஒன்று கவிதை தன்வசம் வைத்திருப்பதாகப்படுகிறது. அல்லது ஒரு உணர்வை , உரைநடையில் சொல்வதில் ஒரு போதாமை தோன்றுகிறது. அந்தப் போதாமை தான் கவிதைகளை நாடச்செய்கிறது.

மின்னிதழ் ஆசிரியராக, பொறியாளராக, ஓய்வுபெற்ற ராணுவ வீரராக , சமூகப்பணிகளுக்குத் தோள் கொடுக்கும் தோழராக என பல அரிய முகங்களுடன் அறியப்பட்ட திரு.மு.அறவொளி அவர்கள் தன்வசம் நிறைய கவிதைகள் வைத்திருந்திருக்கிறார். இத்தனை முகங்களுக்கிடையிலும் தனது கவிதை முகத்தை இழக்காமல் உடன் அழைத்து வந்தே இருக்கிறார் என்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது.

குழந்தைகளின் உலகுக்குள் நுழைந்து கவிதைகளைக் கொண்டு வருவது கவிஞர்களுக்கு வெகு இலகுவாக இருக்கிறது. ஆனால் , கொண்டு வரும் கவிதைகளின் கவித்துவத்தைக் காப்பாற்றுவது தான் கவிஞர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விழுக்காடுகளில் வித்தியாசப்படும் இடம். குழந்தையையே கவிதையாகக் கண்ணுறும் நாம் குழந்தைமையையும் அவ்வாறே காண்கிறோம் .

யாழினியின் கதைகளில், கற்பனைகளில் ஒரு காடு இருக்கிறது. அது உலக வழக்கத்துக்கு எதிராக இருக்கிறது. வளர்ந்த மனிதர்களின் அப்பட்டமான உண்மைகளுக்கு எதிர் திசையில் இருக்கிறது. அவளின் விதிப்படி மான்கள் தான் புலியைத் துரத்துகின்றன , சிட்டுக்குருவி சிங்கத்திடம் விளையாடுகிறது , இப்படி இன்னும் நீள்கிறது கற்பனை


யாழினியின் காடே அதிர்ந்தது

மான் கூட்டம் புலியைத் துரத்த
சிட்டுக்குருவி சிங்கத்தின் பிடரிக்குள்
புகுந்து விளையாட
கரடி கழுத்தில் குரங்கொன்று
பேன் பார்க்க
முதலையின் முதுகில்
முயல் குட்டி பயணிக்க
சாப்பிட வாடி என்ற அதட்டலில்
யாழினியின் காடே அதிர்ந்தது

யாழினி வைத்திருக்கும் கற்பனைக் காடு கவிதையின் வழியாக நமது நாடாகிறது. பெருகிக் கிடக்கும் வன்மம் நிஜ வாழ்க்கையாகிறது அதைத்தாண்டிய அன்பு நம் கனவாகிறது. இப்படித்தான் ஒரு குழந்தைக் கவிதை பெரியவர்களுக்குமான கவிதையாகிறது.

குழந்தைகளின் அறிவு வளர்ச்சியும் , முதிர்ச்சியும் அபரிமிதமானது. நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவது.  நிலவை வைத்து இத்தனை காலம் கவிதை எழுதுகிறோம், இத்தனை காலம் ஆராய்கிறோம்,  இத்தனை செயற்கைக்கோள்கள் நிலவை வட்டமடிக்கின்றன, இறங்கியும் ஆராய்கின்றன, ஆனால் யாழினியின் மிகப்பெரும் கண்டுபிடிப்பை இந்த நூற்றாண்டில் எந்த விஞ்ஞானமும் நிகழ்த்தியதாகத் தெரியவில்லை.

வானின் பின் பக்கம்

வானின் பின் பக்க வண்ணம்
வெள்ளைதான் அப்பா

எப்படிக் கண்டு பிடித்தாய்

அதோ அந்த ஓட்டை
வழியாகத்தான் என்று
நிலவைக் காட்டினாள் யாழினி
பெருமிதத்துடன்

வானத்தின் பின்பக்க வண்ணத்தைப் பிரதிபலிக்கும் ஓட்டையாக நிலவைக் கற்பனை செய்பவள் எத்தனை அழகானவள், எவ்வளவு கொண்டாடப்பட வேண்டியவள். இதோ நான் கொண்டாடுகிறேன். வாரியணைத்து உச்சி முகர்கிறேன் யாழினியை, இந்தக் கவிதையை, இந்தக் கவிஞனை .

சொற்களின் அரை வேக்காட்டுத்தனம் எப்போதும் ஆபத்தானது. கவிஞர்கள் எழுத்தாளர்களையும் தாண்டி ஒவ்வொரு மனிதனுக்கும் சொற்கள் அவ்வளவு முக்கியமானவை . மனித இனத்தை மேம்பட்ட இனமாக மாற்றிய ஒன்றாக மொழியையும் குறிப்பிடலாம். மொழியின் வெளிப்பாடு சொற்கள். அவற்றை வைத்து நாம் எதுவும் செய்யலாம். கலை, இலக்கியம், அரசியல் என அனைத்திலும் சொற்களை வைத்தே மாற்றப்பட்ட வரலாறு நிறைய உண்டு.

                  செரிமானம்

எப்போதும் நன்கு வேகவைத்து
பின் பரிமாறுங்கள்
இல்லையெனில்
செரிமானம் ஆகாமல் அங்கே
சிக்கிக் கொள்ளலாம்
சில சொற்கள்


சொற்கள் நம் தலையெழுத்தையும் மாற்றும் சக்தி கொண்டவையாக இருக்கும். ஆக, ஒரு தத்துவார்த்தமான கவிதையில் சொற்களைப் பிரயோகிப்பதின் முக்கியத்துவத்தை கவிஞர் பதிவு செய்கிறார்.

காலம் காலமாக இருக்கும் நமது நம்பிக்கைகளை , மூட நம்பிக்கைகளை உடைத்து உண்மையை உரக்கச் சொல்லி அறிவூட்டுவது தான் அறிவியல்.

மாறாக அறிவியலின் உண்மைகளையும் , நிதர்சனங்களையும் தாண்டி , அதை அழகியலாகப் பார்ப்பது தான் படைப்பின் கண்.          வழி மறந்து

வழி மறந்து 
நிற்கின்றன
மலை ஏறிய
பாறைகள்

மலை மேல் கிடக்கும் பாறைகள் , மலையேறி வழி மறந்து போனதால் தான் கிடக்கின்றன என கவிதை பேசுவது அறியாமையை அல்ல, அது அழகியல். கவிதை அறிவியல் உண்மைகளை வளர்ந்த மனிதர்களைப்போன்ற அறிவுக்கண்களால் பார்பது அன்று. அது, அழகியல் நிரம்பிய ஒரு குழந்தையின் கண்களால் இந்த பிரம்மாண்ட உலகைப் பார்ப்பதுவும் கூட என்பதைத்தான் இந்தக் கவிதை உணர்த்துகிறது.

எதை விடவும் கவிஞனின் உணர்வுகளை , கவிதையின் பொருளை அசைத்துப்பார்ப்பது ஒரு மரணமாக இருக்கக்கூடும்.  அதிலும் ஒரு எளிய உயிரின் மரணம் கவிதையின் ஆன்மாவை நிச்சயம் அசைத்துப்பார்க்கும்

சாமரம் வீசிக்கொண்டிருந்தது

உறங்குகிறதோ  என
எண்ணிக் கொண்டு
சாமரம் வீசிக்கொண்டிருந்தது
ஆறாவது வாகனம்
அந்தப் பறவையின் மீது
ஏறிக் கடந்த பின்னும்
அதில் ஒட்டிக் கொண்டிருந்த
மிச்சம் மீதி சிறகுகள்

பறவையின் மரணத்தைப் பதிவு செய்த கவிதைகள் ஏராளம் . அது ஒரு குறையாகவே தெரியாதவாறு இன்னும் இன்னும் அழகான பதிவுகள் வந்த வண்ணமேயுள்ளன. . காரணம், அத்தனை மரணங்கள் நிகழ்கின்றனவே.

இது கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பு, முதல் தொகுப்புக்கான அத்தனை வழமைகளையும் கொண்டிருக்கும் தொகுப்பில் அதை மீறியும் துருத்திக்கொண்டு சில கவிதைகள் அழகாகத் தெரிகின்றன. அதன் பின்னணியில் கவிஞனின் புலமையும் அனுபவமும் மட்டுமல்லாமல் அவரது மனதும் புலப்படுகிறது.

கவிதையை ஒரு விளையாட்டுப்பொருளைப்போல பாவித்தல் எப்போதும் சரியான விளைவுகளைத் தந்துவிடாது. இன்னும் கொஞ்ச மெனக்கெடல்களும் இருந்திருந்தால் இந்தத் தொகுப்பு இன்னும் உயரத்தைத் தொட்டிருக்கும். இப்போதும் ஒன்றும் குறையில்லை. தோகை விரித்தாடும் மயில் அழகு, விரிக்க முயலும், விரித்து சுருக்கி போக்குக் காட்டும் மயிலும் அழகுதான்.

இங்கி பிங்கி பாங்கி போட்டுத் தேர்வு செய்ய வேண்டியதில்லை எல்லாக் கவிதைகளுமே வெற்றி தான். அவசியம் வாசித்துப்பாருங்கள்.

வாழ்த்துகள் கவிஞருக்கு

ஆசிரியர் : மு.அறவொளி
வெளியீடு : கொலுசு , பொள்ளாச்சி
தொடர்புக்கு : 94861 05615