செவ்வாய், 24 மே, 2016

ஞாயிறு போற்றுபவர்கள்

மடித்துக்கட்டிய லுங்கியுடனோ
பூப்போட்ட டவுசர் உடனோ
கறிக்கடையில் நிற்கிறீர்கள் நீங்கள்.
பாரதியின் மீசை வரைந்த டீ சர்ட்டுடன் 
நெஞ்சு பொறுக்குதில்லையே என 
இலக்கியம் பேசத்துவங்குகிறார்கள் அவர்கள். 


எல் ஈ டி பெருந்திரையில்
இந்தியாவும் இலங்கையும் எதிர்கொள்வதை
நேரலையில் காண சிப்ஸ் பாக்கெட்டுகளுடன்
காணத் தயாராகிறீர்கள் நீங்கள்.
இன அழிப்புக்கு எதிராக
தொண்டைத் தண்ணீர் வற்ற
நாற்சந்தியில் தோழர்களுடன் கத்திக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள். 


குடும்பத்துடன் பொட்டலச் சாப்பாடுகளுடன்
உங்கள் வாகனத்தில்
மலைவாசஸ்தலத்துக்குக் கிளம்புகிறீர்கள்
அங்கும் அவர்கள் நெகிழிப்பைகளைப்
பொறுக்கி தூய்மைப்படுத்த
சூழலியல் வாசகங்கள் தாங்கிய பதாகைகளுடன்
காத்திருக்கிறார்கள். 


மென் விளக்கொளியில் உங்கள் தோழிகளுடன்
கோப்பைத் திரவம் சிந்தா லாவகத்துடன்
மேற்கத்திய இசைக்கு உருகி நடனமாடுகிறீர்கள்.
பறையைத் தோளில் மாட்டிக்கொண்டு
அதிர அதிர இசைத்தபடி
பிரச்சாரத்திலிருக்கிறார்கள் அவர்கள்
.
உங்கள் ஞாயிற்றுக்கிழமைகள் அவர்களுக்கில்லை
உங்கள் வாழ்வும்

வியாழன், 19 மே, 2016

மழை போலான கவிதைகள்...


நண்பர் ஃபிரோஸ்கான் ஜமால்தீன் இலங்கையில் வசிக்கிறார். சிறு வயது முதல் தீவிர இலக்கிய ஈடுபாட்டாளர். பல்வேறு விருதுகளுக்கும், தொகுப்புகளுக்கும் சொந்தக்காரர். தனது கவிதைத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதித் தரக் கேட்டிருந்தார். எழுதி அனுப்பியிருந்தேன். நூல் வெளிவந்துவிட்டது. அசத்தலான வடிவமைப்பு, நல்ல கவிதைகள் என மெனக்கெட்டு கொண்டுவந்திருக்கிறார்கள். வாழ்த்துகள் நண்பரே.
அவரது கவிதைத் தொகுப்பான என் முதுகுப்புறம் ஒரு மரங்கொத்திக்கு நான் எழுதிய அணிந்துரை இங்கு ...


மழை போலான கவிதைகள்...

அநாதரவாக மழை பெய்யுமா. மழை யாருக்காவது அநாதரவாயிருக்குமா அல்லது மழைக்கு யாராவது அநாதரவாக இருந்துவிட முடியுமா.? மழையுடன் முரண்பட்டுவிட்டு பிறகென்ன வாழ்வு. மழை அனைத்து உயிர்களுக்கும் ஆதரவாகத்தான் பெய்கிறது. மழை போலத்தான் கவிதைகளும். எல்லா நேரங்களிலும் மனிதத்துக்கு ஆதரவாகவே, உயிர்களுக்கு ஆதரவாகவே மழையைப் போலவே பெய்கின்றன கவிதைகள். கவிதைகளுக்கு ஒருவன் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டால் போதும்; கவிதை இறுக அணைத்துக் கொள்ளும் , வலிகளுக்கு மருந்தாகும், போராட்டக் குரலாகும், சறுக்கல்களில் தாங்கிக் கொள்ளும், அழும் வேளைகளில் அணைத்துக் கொண்டு தேற்றும்.

கவிதைகள் செய்ய வேண்டியவையல்ல, மலர வேண்டியவை அல்லது பிறக்க வேண்டியவை. வற்புறுத்தலின் பொருட்டோ, வேண்டுகோள்களின் பொருட்டோ கவிதை செய்ய முடியாது செய்தாலும் அது கவிதையாக இராது. சூழல்களுக்கு ஏற்ப அனிச்சையாக அவை கவிஞனிலிருந்து மலரும். அத்தருணம் கவிஞனும் முன் அறிந்திலன். அத்தருணத்தைத் தடுத்துவிடவும் கருவியில்லை.

ஃபிரோஸ்கான் ஜமால்தீனிடம் நிறைய சொற்கள் இருக்கின்றன. அவை கவிதைகளாக வடிவம் பெறுகின்றன இவரது தன் முனைப்பில். எப்போதும் கவிதைக்கான சொற்களுக்கு நாம் அலைய வேண்டிய அவசியம் இல்லை. நம்மைச் சுற்றிலும் நிறைந்து கிடக்கின்றன கவிதைகள். கண்டெடுக்கத்தான் கலைக்கண் தேவையிருக்கிறது நமக்கு. இவரது இந்தக் கவிதை, இயல்பான தாய்மையின் பதிவு தான். கவிதைக் கண்கள் திறந்து கொண்டதால் ஒரு தாய்மையின் சக உயிர்களின் மீதான அரவணைப்பு கவிதையாகியிருக்கிறது.

தாய்க்குணம்

கரப்பான் பூச்சி
மயிர்க்கொட்டிப் புழு
பல்லி - எனப் பார்த்து
அம்மா பயந்து கொள்ளும் பட்டியலில்
பூனையும் உண்டு
நேற்றிரவு பக்கத்து வீட்டுப் பூனையின்
பிரசவத்தின் போது
அம்மா கூடவே இருந்தாள்.
எங்க வீட்டு நாயின் பசி வேட்டைக்கு
பூனைக்குட்டிகள் ஆளாகிவிடக்கூடாது என்பதற்காய்

தாய்மையின் ஸ்பரிசத்தைத் தந்து போகின்ற எந்தக் கவிதையும் நல்ல கவிதைதான். நவீனச் சொற்களும், அடர்த்தியான உட்கட்டமைப்பும் அவசியமற்றது தான் அந்த ஸ்பரிசத்தின் முன். அப்படியான கவிதை தான் இது.

பொய்களால் தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது மனித வாழ்வு. அன்றாட நிகழ்வுகளிலும் , நமது வாக்குகளிலும் உண்மையைப் புறந்தள்ளிவிட்டு பொய் நம்மைச் சூறையாடி பல காலம் ஆகிவிட்டதல்லவா. உண்மையை மட்டுமே பேசிக் கொண்டிருப்பவன் எனச் சொல்லிக்கொள்வதில் தான் ஆச்சர்யம் அடங்கியிருக்கிறது. பொய் அத்தியாவசியமாகிவிட்டது.


நமது பொய்களை நம்பும் படி ஆக்குவதும் அவற்றை உண்மையாக்குவதும் தான் நமது வெற்றிக்கான, இருத்தலுக்கான செயல்முறை என்றாகிவிட்டது. என்றாலும், பொய்யின் கோரமுகத்துக்குப் பின் எப்போதும் ஒளிந்து கொண்டிருக்கும் உண்மையின் பயந்த முகம் சொல்லும் ஒரே ஒருவனையாவது உறுத்திக் கொல்லும்.

பச்சைப்பொய்

தீராப்பசி கொண்டலையும் நாக்குக்குப்
பொய்களைப் புசிப்பதென்றால்
அலாதிப் பிரியம்
அதுவும்
பச்சை பச்சையாகப் புசித்துவிடுவதில்
அபாரம்
புசித்தலுக்குப் பின்
தன் உதடுகளால் சொட்டும் குருதியில்
சில நேரம் காணக்கிடைக்கலாம்
பொய்களின் உண்மை முகம்

உலகின் ஆதி உயிர் எதிர்கொண்ட முதல் பெரும் சரிவு துரோகத்தில் தான் தொடங்கியிருக்கும்.
துரோகத்தின் கரங்கள் எப்போதும் நமது குரல்வளையை நெறிக்க நெருங்கியபடியே தான் இருக்கின்றன. மதியுள்ளவன் தப்பிக் கொள்கிறான். ஏமாந்தவன் இழந்து விடுகிறான். சக மனிதனின் சறுக்குதல்களுக்கும், வஞ்சிக்கபட்டவனின் தேற்றுதல்களுக்கும் நீளும் முதல் கரம் கவிதைக் கரமாக இருப்பதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது. கவிதையின் வேலையும் கவிஞனின் வேலையும் அதுதானே. இங்கு கவிஞன் அக்குணத்தை அழகாக வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.
நீட்டும் கை

ஒரு துரோகத்தின் ஆர்ப்பரிப்புக்குள்
மறைந்திருக்கிறேன்
அவற்றைத்தாண்டி
என்னை மீட்ட
யார் தான் வருவார்
அகந்தையின் ஆரவாரத்துக்கடியில்
வஞ்சகத்தின் பதுங்குகுழியினுள்
கோபத்தின் திமிறலில்
அடர்ந்த வனத்தினுள் அறியப்படாத
வண்ணத்துப்பூச்சியின் முட்டை போல
ஒளிந்திருக்கிறது அவனது ஆன்மா
பிடிவாதத்தை விட்டு வரச்சொல்லி
அடம்பிடிக்கும் தனிமையை உடைத்தெறிந்து
அவனை மீட்க
நீட்டும் கைகள் என்னுடையது.

துரோகத்துக்கு உள்ளானவனுக்கு ஆதரவாகவும், எளியோர்க்கான ஊன்றுகோலாகவும் நீளும் கவிஞனின் கைகளுக்கு பிரியமாகக் கைகுலுக்குகிறேன்.

ஃபிரோஸ்கான் ஜமால்தீனின் தொகுப்பில் நிறைய நல்ல கவிதைகள் காணக் கிடைக்கின்றன. அதை விடவும் மகிழ்ச்சியளிப்பது நல்ல கவிஞன் காணக் கிடைப்பது. கவிதைகளின் கட்டமைப்பிலும், பொருள் தேர்தலிலும், சொற்களிலும் நம்பிக்கைக்குரிய கவிஞன் தென்படுகிறான். இவை யாவற்றையும் விட பெருமகிழ்ச்சியளிப்பது இந்தக் கவிதைகளில் தெரியும் மனிதமும் அன்பும். அவை இந்தக் கவிதைகளுக்குக் கூடுதல் உயிர்ப்பைத் தருகின்றன. நல்ல கவிதைகளை இன்னு கூடுதலாக அணி செய்கின்றன.

ஃபிரோஸ்கான் ஜமால்தீன் தன்னைக் கவிதைகளின் வசம் ஒப்படைத்திருக்கிறார். கவிதைகள் இவரைக் காப்பாற்றும். நல்ல கவிதைகளின் வரம் அது.

மனமார்ந்த நல்வாழ்த்துகள் கவியே ...

செவ்வாய், 10 மே, 2016

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

கொலுசு மின்னிதழில் நான் எழுதும் கட்டுரைத் தொடரான " தேநீர் இடைவேளை" இம்மாதக் கட்டுரை

ஆறிலும் சாவு நூறிலும் சாவு


கவிஞர் வைகறை அவர்கள் கடந்த இருபத்தியொன்றாம் தேதி அகால மரணமடைந்து விட்டார் ( இந்த வார்த்தையைத் தட்டச்சும்போதே விரல்கள் நடுங்குகின்றன. அவர் மரணமடைந்துவிட்டார் என்பதையே ஏற்க முடியவில்லை ). வெறும் 37 வயது தான் அவருக்கு. நல்ல கவிஞர், பண்பான மனிதர்,சிறந்த ஆசிரியர், ஜெய்குட்டி எனும் 4 வயதுப் பையனுக்கு மிகச்சிறந்த அப்பா இப்படி எல்லாக் கோணங்களிலும் அழகான ஒரு மனிதன் திடீரென மறைந்து விட்டார் என்பது பேரதிர்ச்சியாக உள்ளது. நன்றாக இருந்தவர் தான். அவரது மரணத்துக்குக் காரணம் கணையத்தில் ஏற்பட்ட பாதிப்பு. கணையம் சாதாரணமாகவெல்லாம் பாதிப்புக்குள்ளாகாது, மேலும் ஒரே நாளிலெல்லாம் மரணம் வரை திடும்மென செயலிழக்காது. பிறகெப்படி இந்த இழப்பு ..?

வைகறைக்கு அடிக்கடி வயிறு வலி வந்திருக்கிறது. வாயுக்கோளாறு, அமில எரிச்சல் என்று எதையாவது நினைத்துக் கொண்டு மருத்துவரிடம் செல்லாமல் இவரே மருந்துக்கடையில் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார்.இது எவ்வளவு தவறான செயல். என்ன வியாதி, எங்கு பாதிப்பு என ஆராயாமல், நாமாக ஒரு முடிவு எடுத்துக்கொண்டு மருந்துக்கடையில் மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவது மிகப்பெரிய முட்டாள் தனமல்லவா ? இப்போது அவரை இழந்து அவர் குடும்பம் வாடிக் கொண்டிருக்கிறது. படித்தவர்கள் படிக்காதவர்கள் என நாம் அனைவரும் செய்யும் மிகப்பெரிய தவறு இது.

முன்பெல்லாம் 100 வயது 90 வயது வரை ஆரோக்கியமான மனிதர்கள் இருந்தார்கள். அப்போதைய உணவுப் பழக்கவழக்கங்களும், சுற்றுச்சூழலும் அவர்களை வாழவைத்தது. இப்போது அப்படியா..? ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்னும் பழைய பழமொழி இப்போது தான் சரியாகப் பொருந்துகிறது.
மருந்து மாத்திரைகளில் தான் உயிர் வாழ்கிறோம். காரணம் உணவே மருந்து என்னும் நமது பழைய கோட்பாட்டைப் புறந்தள்ளிவிட்டதால். எதற்கெடுத்தாலும் மருந்து மாத்திரைகள் தான் இப்போதெல்லாம். எனக்குத் தெரிந்த நிறையப் பெண்கள் தங்களது கைப்பையிலேயே தலைவலி மாத்திரைகள் ஒரு அட்டை வைத்திருக்கிறார்கள். சாரிடான் போட்டால் தான் தலைவலி நிற்கும் என்பார்கள். தினம் ஒன்று கூட சாப்பிடுவார்கள் என நினைக்கிறேன். இதன் பக்க விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பார்களா அவர்கள் .?
லேசாக சளி, காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி என்று எது வந்தாலும் உடனடியாகக் கைவசம் வைத்திருக்கும் ஆங்கில மருந்துகளைப் போட்டுக் கொள்வது நமக்கு வழக்கமாகிவிட்டது. முன்பெல்லாம் இந்த சிறு சிறு வியாதிகளுக்கு பாட்டி வைத்தியம், கை வைத்தியம் என்ற பெயரில் நமது சமையலறை அஞ்சறைப்பெட்டிகளிலேயே மருந்துப் பொருட்களைக் கண்டு வைத்திருந்தோம். மஞ்சள் , குருமிளகு,வெற்றிலை,சுக்கு இப்படி.. ஆனால் இப்போது பெட்டி நிறைய கலர் கலராக மாத்திரைகளைக் குவித்து வைத்திருக்கிறோம்.


வீட்டில் எப்போதும் அப்பா விக்ஸ் ஆக்ஸன் 500 மாத்திரை ஒரு அட்டை நிறைய வைத்திருப்பார். தனக்கும்,யாருக்கும் லேசாக காய்ச்சல், உடல் வலி என்றால் போதும் அதைத்தான் போடுவார், கொடுப்பார். இரண்டு வருடங்களுக்கு முன்பே வெளிநாடுகளில் அந்த மாத்திரை தடை செய்யப்பட்டது என்ற செய்தி வெளியானது. அப்போதே நான் அவரிடம் சொல்லி அந்த மாத்திரை வாங்குவதை நிறுத்தினேன். ஆனால், இத்தனை நாட்கள் கழித்து நமது அரசு இப்போதுதான் அந்த மாத்திரையைத் தடை செய்திருக்கிறது. அப்படியென்றால் இத்தனை நாட்களும் அந்த மாத்திரையை அனுமதித்து மக்களின் உயிரோடு விளையாடியிருக்கிறது இந்த அரசாங்கம். அப்படித்தானே.?

விசயத்துக்கு வருவோம், நண்பர் வைகறை கொஞ்சம் முன்னர் சுதாரித்து ஒரு மருத்துவமனைக்குச் சென்று தகுந்த பரிசோதனைகளைச் செய்திருந்தால் எளிய வைத்தியங்களிலேயே இந்த நோயைக் கண்டறிந்து சரி செய்திருக்கக் கூடும். அலட்சியம் ஆபத்தாகிவிட்டது.

எங்கள் நிறுவனத்தில் ஒரு நண்பர் இருந்தார். நல்ல வசதியான மனிதர். வயது 35 தான் இருக்கும். நன்றாக இருந்தவர் திடீரென சில காலங்கள் நோயாளியாகி விட்டார். பணியில் அமர்ந்திருக்கும் போதே திடீரென மயங்கி விழுந்தவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்ற போது கல்லீரல் பாதிப்பு என்று சொல்லியிருக்கிறார்கள். நோய் முற்றிய நிலையில் சென்னை, கேரளா என்று பல இடங்களில் காட்டியும் சரியாகவில்லை. ஒரு நாள் இறந்துவிட்டார். அவருக்கும் ஐந்து வயதேயான ஒரு குழந்தை இருக்கிறது. இளம் வயதிலேயே இப்போதெல்லாம் நிறைய வியாதிகள் வந்து விடுகின்றன.

பற்றாக்குறைக்கு போலி மருத்துவர்களின் கூட்டமும் உள்ளது. எங்கள் கிராமத்தில் ஒரு டாக்டர் இருந்தார். டாக்டரென்றால் டாக்டரில்லை. பொள்ளாச்சியில் ஒரு டாக்டரிடம் செவிலியராகப் பணியிலிருந்தார். அவர் தான் எங்கள் கிராமத்துக்கு டாக்டர். அவர் வீட்டின் ஒரு அறை தான் அவரது கிளினிக். தினமும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை அவரிடம் சிறு வியாதிகளுக்கு ஊசி போட்டுக்கொள்ளலாம். நன்றாகத்தான் பார்க்கிறார் காய்ச்சல், வலிகளெல்லாம் ஒரே ஊசியில் சரியாகிவிடுகிறது என்று சொன்னார்கள். ஒரு நாள் ஒரு பெரியவரின் காய்ச்சலுக்கு ஊசி போட்டு ஏதோ பிரச்சினையாகி அவருக்கு வலதுபக்க உடல் முழுவதும் செயலிழந்து விட்டது.அப்புறம் பெரிய கலவரமாகி, போலீஸ் கேஸ் என அலைந்தார்.

பெரியவர்கள் இந்தத் தவறை தாங்கள் செய்கிறார்கள் என்பதோடு மட்டுமல்லாது குழந்தைகள் விசயத்திலும் இப்படி அஜாக்கிரதையாக இருப்பவர்களை நினைத்தால் கடுப்பாக இருக்கிறது. குழந்தைக்குத் தடுப்பூசி போட பொள்ளாச்சி மருத்துவமனையில் காத்திருந்த போது அவசரமாக ஒருவர் தனது குழந்தையைக் கையில் தூக்கியபடி மருத்துவமனைக்குள் ஓடினார். என்ன ஏது என்று பார்க்கப் போனால், மருத்துவர் அவரைக் கண்டபடித் திட்டிக் கொண்டு அவசரச் சிகிச்சைப் பிரிவில் குழந்தையைச் சேர்த்து மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார். என்ன ஏது என்று அருகில் விசாரித்தால், குழந்தைக்கு காய்ச்சலாம் அதற்கு வீட்டில் இருந்த எதோ மாத்திரையில் பாதியைக் கொடுத்திருக்கிறார்கள். குழந்தையின் அப்பா தான் இது பாராசிட்டமால் தான் 200 மில்லி கிராம் தான். என்றெல்லாம் அறிவுப்பூர்மாக யோசித்துக் கொடுத்திருக்கிறார். விளைவு குழந்தையின் உடலெங்கும் தடித்து சிவந்து, அடிக்கடி வாந்தி வேறு எடுத்திருக்கிறது. பிறகு தூக்கிக் கொண்டு ஓடி வந்திருக்கிறார். இவர்களையெல்லாம் என்ன சொல்ல.

ஏதாவது நமக்கு வியாதி என்று பக்கத்தில் யாரிடமாவது சொல்லிப் பாருங்கள். ஆளாளுக்கு மருத்துவர் ஆகிவிடுவார்கள். ஆளுக்கொரு மருந்து ஆளுக்கொரு வைத்தியம் சொல்வார்கள். கல்லூரியில் படிக்கும் போது வெயிலில் அலைந்து அடிக்கடி சூடு பிடித்துக் கொள்ளும், என் நண்பனுக்கும் அப்படி ஆகிறதாகவும் அதற்கு ஒரு மருந்து இருக்கிறது என்றும் சொல்லி ஒரு மருந்தைக் கொடுத்தான். அதைக்குடித்த இரவு கடுமையான வயிற்று வலி. பயந்து போய் காலையில் மருத்துவரிடம் போனால், எல்லோருக்கும் வருவது ஒரே வியாதிதான் என்றாலும் எல்லோருக்கும் ஒரே மருந்தைக் கொடுக்க முடியாது. அவரவர் உடல்நிலையைப் பொறுத்து, மருந்தும் மருத்துவமும் மாறும் என்று சொல்லி வேறொரு மருந்தைக் கொடுத்தார். உண்மைதான்.

மருந்து சாப்பிடுவது எவ்வளவு அபத்தமானதோ அவ்வளவு அபத்தமானது தொட்டதுக்கெல்லாம் மருத்துவமனைக்கு ஓடுவது. குழந்தைகள் மருத்துவமனையில் காத்திருந்த போது ஒரு மருத்துவர் சொன்னது, முதலில் கூட்டுக்குடும்பமாக இருந்தபோது பாட்டி, தாத்தாக்கள் குழந்தைகளுக்கு வரும் சிறு சிறு நோய்களுக்கு கை வைத்தியத்தில் சரி செய்து விடுவர். ஆனால் இப்போது யாருமற்று தனிக்குடும்பமாக , கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவராக இருக்கும் தாய் தந்தைகள் சிறு பிரச்சினைக்கும் மருத்துவமனைக்கு வந்து விடுகின்றனர் என்று சொன்னார். ஒரு அரை நாள் மருத்துவமனையிலேயே இருந்து பார்த்தேன். டாக்டர் குழந்தை ரெண்டு நாளா மோசன் போகல என்று ஒருவர், அஜீரண வாந்தியெடுத்ததுக்கு டாக்டர் குழந்தை ரெண்டு முறை வாந்தியெடுத்துடுச்சு என்று ஒருவர், டாக்டர் குழந்தை சாயங்காலம் படுத்தது காலைல 9 மணிக்கு தான் எழுந்தாள் 14 மணி நேரம் தூங்கினா எதாவது பிரச்சினையா என்று ஒருவர் என இப்படி அறியாமையாலும் பயத்தாலும் மருத்துவமனைக்கு நிறையப் பேர் வந்த படியே இருந்தனர். மருத்துவரும் சிரித்தபடியே, இதெல்லாம் சகஜம் என்று சொல்லி அனுப்பிக்கொண்டும், அப்படியும் சமாதானமாகாதவர்களுக்கு சத்து டானிக் எழுதிக் கொடுத்தும் அனுப்பிக் கொண்டிருந்தார்.

மருந்து மாத்திரைகளைக் காரணமின்றியும், மருத்துவரின் ஆலோசனைகளின்றியும் வாங்கி உண்ண வேண்டாம். இந்த உடல், இந்த உயிர், இந்த வாழ்வு அனைத்தும் நமக்குக் கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பு. ஒரே வரம். சிதைத்துவிட வேண்டாம்.


தேநீர் இடைவேளைகளில் நாம் பேசுவதற்கு ஏராளமான விசயங்கள் இருக்கின்றன.... பேசலாம் ….

கொலுசு மின்னிதழில் வாசிக்க 

http://www.kolusu.in/kolusu/kolusu_may_16/index.html#p=17