சனி, 13 ஜூன், 2020

மெய்யுறுதல் கவிதைத் தொகுப்பு

நேற்று அலுவலக வாசலுக்கே வந்து தனது மெய்யுறுதல் கவிதைத் தொகுப்பை அன்புடன் தந்துவிட்டுப் போனார் கவிஞர் பொன் இளவேனில்.

 290 பக்கங்கள் உள்ள கனமான தொகுப்பு. இந்தத் தனிமைக் காலம் தந்த  அனுபவங்களை தினம் தினம் பதிவு செய்த கொரானா கால கவிதைகள் இவை.

கிட்டதட்ட 166 கவிதைகள்... இரண்டு மாதங்களுக்குள் கிடைத்த தனிமையிலும் மன எழுச்சியிலும் எழுதிய கவிதைகள்.. இந்தக் காலத்தின் அரசியலை, சமகால நிகழ்வுகளை, தனிமைக்காலம் தரும்  அக உணர்வுகளை, இந்தக் காலகட்டத்தில் நடந்தேறிய கூத்துகளை என யாவற்றையும் தனக்கே உரித்தான நையாண்டியும் நயமும் கூடிய மொழியில் பதிவு செய்து இருக்கிறார் கவிஞர் பொன் இளவேனில்.

எழுத்தாளர் இளஞ்சேரல் எழுதி இருக்கும் நீண்ட அணிந்துரையும் அட்டகாசம். 

தொகுப்பின் ஒரு கவிதை இங்கு ...

கைவிடப்பட்டவர்கள்

நெடுஞ்சாலையில் யாருமில்லை
கைவிடப்பட்டவர்களின்
வழியாக அமைந்திருந்தது
கைகளிலும் தோள்களிலும்
குழந்தைகளையும் 
மூட்டை முடிச்சுகளையும் 
அள்ளிக் கொண்டு நடந்தார்கள்
எல்லா உயிர்களும்
பொருள்களான போதும் 
அவர்கள் நடந்தார்கள் 
யாரார் எங்கு எங்கு என்று 
யாருக்கும் புரியாமல் 
நடந்தார்கள் 
பசியின் கடவுள்கள் 
அழைத்த இடம் எதுவென்று
யாருக்கும் தெரியவில்லை தூரத்திலிருந்து கைவிட்டவர்களைப்  போல
அரசர்களைப் போல
கடவுள்களைப் போல 
பார்த்துக் கொண்டிருக்கிறோம்


வெளியீடு

அகத்துறவு, கோவை

நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்ள

கவிஞர் பொன் இளவேனில்
96296 46320

நண்பர்கள் அவசியம் வாங்கி வாசியுங்கள்

புதன், 3 ஜூன், 2020

கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் - இனிய உதயத்தில்

இந்த மாத இனிய உதயம் இதழில் கவிஞர் சேலம் ராஜா எழுதிய கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் கவிதை நூலுக்கான எனது வாசிப்பு அனுபவம் வெளியாகியுள்ளது
உங்கள் வாசிப்புக்கு இங்கு

முதல் கவிதைத் தொகுப்புக்கான கவிதைகளை நாம் பால்யத்திலிருந்து தொகுக்க ஆரம்பிக்கிறோம், பள்ளிக்கூடங்களில் கொஞ்சம், இளமைக் கொண்டாட்டங்களில் கொஞ்சம், பதின்பருவக் காதலில் கொஞ்சம், இளமைக் கோபத்தின் கங்குகளில் கொஞ்சம், நெகிழும் அன்பில் கொஞ்சம் என பக்கங்களாகத் தொகுக்கப்படுகின்றன பெரும்பாலும். முதல் தொகுப்புக்கென தயாரான கவிதைகளில் பெரும்பான்மையைத் தவிர்க்க இயலாது நம்மால். ஆனால் எவ்வளவு கவிதைகளை இரக்கமின்றி தவிர்த்துவிட்டு நமது நிகழ்கால கவிதைப் போக்குடன் ஒன்றிய கவிதைகளை கவனத்தில் கொள்கிறோமோ அவ்வளவு நல்லது முதல் கவிதைத் தொகுப்புக்கு. சேலம் ராஜாவின் முதல் தொகுப்பு கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் இவற்றின் எல்லா சாதக பாதகங்களுடனும் தொகுக்கப்பட்டிருக்கின்றது. காதல், அரசியல், சமூகம், நட்பு, குழந்தைமை, தத்துவம், கிராமம் என பல பாடுபொருட்களினாலான கதம்பக் கவிதைத் தொகுப்பு. 

கவிதையில் அரசியலை எங்கிருந்து துவக்குவது. ? முதல் வரியிலிருந்து தான். கவிதைத் தொகுப்பில் அரசியலை எங்கிருந்து துவங்குவது ? முதல் கவிதையிலிருந்து தான்.

அழகிய 
கோபுரத்தில் தொடங்கி
அம்பேத்கர் சிலையோடு
முடிந்து விடுகிறது
எங்கள் ஊர்

என்கிற முதல் கவிதையோடு துவங்குகிறது கவிஞர் சேலம் ராஜாவின் கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் கவிதைத் தொகுப்பு. மேட்டுக்குடியின் அழகிய கோபுரத்தில் தொடங்கி தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியின் அம்பேத்கர் சிலையோடு முடிகிறது எங்கள் ஊர் என்கிறார். அழகிய கோபுரம் ஒரு சாராரைக் குறிக்கும் குறியீடாகவும் அம்பேத்கர் சிலையை ஒரு சாராரின் குறியீடாகவும் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்தக் கவிதை நமக்கு நமது ஊரை, மாநிலத்தை, நாட்டை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக இருக்கிறது. ஊரின் / நாட்டின் முதன்மையாக மேட்டுக்குடி தான் இருக்கிறது கடைக்கோடியில் தள்ளப்பட்டிருக்கிறது தாழ்த்தப்பட்டவர்களின் இருப்பிடமும் இருப்பும். எல்லா நலத்திட்டங்களும் வளர்ச்சிப் பணிகளும் மேலும் மேலும் கோபுரங்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல, சேரிகள் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன. ஒரு யானையின் மிடுக்கோடு மேட்டுக்குடியில் துவங்கும் நலத்திட்டங்கள் ஊரின் கடைக்கோடிக்கு வரும் போது தேய்ந்து தேய்ந்து ஒரு சிற்றெரும்பைப் போல ஒரு சிறு துளியாகிப் போகிறது. இந்தக் கவிதையின் பின்புலத்தில் இப்படியான கொடும் வரலாற்றுக் காட்சிகள் ஒளிந்திருக்கின்றன. அவற்றைன் மீது கொஞ்சம் வெளிச்சத்தைப் பாய்ச்சத்தான் இந்தக் கவிதை.

கருப்பி கவிதையின் நாயகி நம் எல்லோருக்கும் நெருங்கிய தோழி. 
“ பீரியட்ஸ் டைம் டா வயிறுவலி முடியல, நாப்கினே நனஞ்சிடுச்சு “ என்று எந்த சங்கோஜமுமின்றி நம்மிடம் சொல்லத் தெரிந்தவள். காதுகளுக்கு வார்த்தைகளை ஊட்டுபவள் என்கிற தலைப்பே கவிதையாக இருக்கிறது. தலைப்புக் கவிதையான கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் ஒரு ஞாயிற்றுக் கிழமையின் கவிச்சி வாடையை நம் நாசித்துவாரங்களுக்கு அருகில் அழைத்து வருபவை.

ஒரு கிராமத்துக் கவிஞன் தனது வயல்வெளிகளின் மத்தியில், மனிதர்களின் மத்தியில் என எடுத்துக்கொண்ட சொற்களையும், கருவையும் கவிதையாக்கியிருக்கிறார் இந்தத் தொகுப்பின் அநேகப் பக்கங்களில்.இந்தத் தொகுப்பிலும் நாம் அநேகம் புலங்கிடாத சில புதிய கிராமத்துச் சொல்லாடல்களை அறிந்து கொள்ள முடிகிறது. போடுவாசி, வல்லி, நரூசு, என அடிக்குறிப்புகளுடன் சில சொற்கள் நமக்கு அறிமுகமாகின்றன.


சேலத்துக்கும் எடப்பாடிக்கும் தூரமில்லை என்றும், சுவாதிகள் நந்தினிகள் விஷ்ணுப்ரியாக்களெல்லாம் தெய்வத் தவறுகள் என்றும்  அரசியல் பேசும் கவிதைகளும் இவரது தார்மீக அறச்சீற்றத்தைத் தாங்கியிருக்கின்றன.
அப்பாவைப் பற்றிய சில கவிதைகளும் நெகிழ்வானவை.
உயிரின் துடிப்பு

வலிமைமிகு உடலுடன்
உலக உருண்டையை ஒருவன்
தூக்கிச் சுமந்தபடி இருக்கும்
அட்லஸ் சைக்கிளைத்தான் அப்பா வைத்திருந்தார்
தன்னைக் கவனித்துக் கொள்கிறாரோ இல்லையோ
தினமும் அதிகாலையிலேயே
சைக்கிளுக்கு எண்ணெய் விட்டு
அப்பா சைக்கிள் துடைக்கும் பிம்பத்தில் தான்
நான் விழிப்பேன்
துடைத்து முடிந்த கையோடு
பெரியசாமி கடைக்குத் தேநீர் பருக
சென்று வந்த பின் என்னை
முன்பக்கக் கம்பியில் அமர்த்தி
பள்ளிக்கு அழைத்துச் செல்வார்
அப்பொழுதெல்லாம்
“ ப்பா வேகமா போப்பா “ என்று கூச்சலிடுவேன்
அவரின் இதயத் துடிப்பை
என் செவி உணரும்
புதிதாக நான் வாங்கிய
இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து வந்தவர்
“மெல்லப் போப்பா” என்றார்
இப்போது அவரின் இதயத் துடிப்பை
என் செவி உணரவில்லை

 மகன் தந்தைக்காற்றும் நன்றியாக தந்தையை நகர் உலா அழைத்துச் செல்லும் மகனுக்கும் அப்பாவுக்குமான பிணைப்பை நெகிழ்ந்து சொல்லியிருக்கிறார். மெல்லப் போப்பா என்பது அனைத்து அப்பாக்களின் குரலாக ஒலிக்கிறது. அனைத்து மகன்களுக்குமான கவிதையாக இருக்கிறது இந்தக் கவிதை.

அழுதுகொண்டே இருக்கும் ஆட்டுக்குட்டிக்கு புதுச் சட்டை வாங்கி வரச் சொல்லும் காயத்ரி அருள் பாலிக்கும் கவிதைகளின் குழந்தைமை அழகாயிருக்கின்றது.  மேலும்,

உன் 
கரம் பிடித்த
தூரம் வரை தான்
எனக்குப்
பாதையிருந்தது

என்று காதல் பேசும் கவிதைகளும் காமம் பேசும் கவிதைகளும் அதிகம் இருக்கின்றன. நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன் என்பது எளிய ஒப்புதல் வாக்குமூலம் தான். அதை உலகக் காதலர்கள் அனைவரும் ஒரு நாளில் சொல்லிவிடுகிறார்கள் தான். உலகக் கவிஞர்கள் எல்லோரும் ஒரு கவிதையிலேனும் எழுதி விடுகிறார்கள் தான். நாம் அதே உணர்வை அதே சொற்களில் எப்படி வெளிப்படுத்தியிருக்கிறோம் என்பதில் இருக்கும் பரிமாணங்கள் தான் காதல் கவிதைகள் இத்தனை ஆண்டுகாலம் தொடர்ந்து எழுதப்பட்டு வருவதற்கும் வாசிக்கப்பட்டு வருவதற்குமான நம்பிக்கையைத் தருகின்றன். உனது கரம் பிடித்து வரும் தூரம் வரை தான் எனக்கு வாழ்க்கைப் பாதை இருக்கிறது என்பது அழகிய சொல்லாடல். அதன் பின் இருப்பது கல்லும் முள்ளும் நிறைந்த ஒரு வழித்தடமாக இருக்கலாம். இருப்பேன் ஆனாலும் உன் கரம் பற்றிப் போகும் போது தான் எளிதான பயணமாக இந்த வாழ்க்கை இருக்கும் என்கிற வாக்கு மூலம் இந்தக் கவிதை.

முதல் கவிதைத் தொகுப்பை எப்போதும் கசக்கிடாமல் கைகளில் ஏந்திக் கொள்வது புதியவர்கள் கவிதைக்குள் பயந்திடாமல் நுழைய வழிவிடுவதற்கான தார்மீகப் பொறுப்பு. எப்போதும் அதைச் செய்தே வந்திருக்கிறேன். இந்த முதல் தொகுப்பும் அழகான கவிதைகளுடன், ஆங்காங்கே மின்னலென மிளிரும் சில வரிகளுடன், புருவத்தை உயர்த்தும் சில சிந்தனைகளுடன் ஒரு நல்ல தொகுப்பாகிக் கை சேர்ந்திருக்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள் ராஜா.. உங்களின் சித்திரக் குறிப்பை உங்களின் கவிதைகளே எழுதிக் கொள்ளும்.வெளியீடு : இடையன் இடைச்சி நூலகம், சில்லாங்காட்டுப் புதூர் , ஈரோடு பேச: 98412 08152
ஆசிரியர் : கவிஞர் சேலம் ராஜா , பேச : 91599 19739
விலை : ரூ 100