திங்கள், 22 செப்டம்பர், 2014

அன்பு சூழ வாழ்கிறோம் ...

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் செய்தி மடல்களை பிரதி எடுக்க கோவையில் நகலகத்துக்குச் சென்றிருந்தேன் வெள்ளிக்கிழமை. 70 பிரதிகள் வேண்டுமெனச் சொல்லிவிட்டுக் காத்திருக்கையில் வந்தான் நக்கல் பிடித்த நண்பனொருவன். "என்ன ணா இலக்கியமா" என்று அருகில் அமர்ந்தவன் மொக்கையைத் துவங்கினான். செய்திமடல் கைக்கு வந்ததும் அதைப் பார்த்துவிட்டு எல்லாமே "சம்பளப் பணமா ணா" என்று கேட்டான். "ஆமாம்" என்றேன். "ஏன் ணா இப்படி..?” என்றவனின் பாக்கெட்டிலிருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து" இந்த மாதிரியெல்லாம் நான் நாசமாப் போற செலவு பண்றதில்லை" என்று சொன்னேன். சிரித்தான்.

நண்பர் பொள்ளாச்சி அபி அவர்களின் சிறுகதை தினமணியில் பரிசு பெற்றது. மேலும் ராமகிருஷ்ண விஜயத்திலும் சிறுகதைப் போட்டியில் பரிசு வென்றார். தினமணி கதை சூழலியல் பற்றியது. மிகவும் பிடித்த்து எனவே நண்பர்கள் அனைவருக்கும் அந்தக் கதையைத் தர விரும்பி அதை ஐம்பது பிரதிகள் எடுக்க கடைக்காரப் பெண்ணிடம் தரும் போதே இவன் ஆரம்பித்தான், “ ணா, உங்க கதையா ணா “ “ இல்லை டா, நண்பருடையது “என்றேன் கடுப்பாக.

ஏன் ணா உன் கதைய எடுத்து எல்லாருக்கும் தந்தா ஒத்துக்கறேன் நீ உருப்படியாத் தான் செலவு பண்ற னு; வேற ஒருத்தர் கதைய எதுக்குணா இத்தனை எடுத்து இப்படித் தர “

அடேய்.. கம்முன்னு கிளம்பு. கதை நல்லா இருக்கு. அதான் எல்லாருக்கும் பரிசா தர விரும்பி எடுக்கிறேன் னு “ சொன்னேன்.

ஓ… ஊரான் புள்ளைய ஊட்டி வளர்த்தா உன் பிள்ளை தானே வளரும் னு நினைப்பா “ னு கேட்டான். இங்க எதுக்கு இந்தப் பழமொழி. இருந்தும் கொஞ்சம் காட்டமாக பதிலளித்தேன்

ஊரான் பிள்ளைனு ஏதோ ஒரு பிள்ளைய கூட நான் சொல்ல மாட்டேன், இருந்தாலும் உன் பேச்சுப்படி உன் அண்ணனோட பிள்ளைய ஊரான் பிள்ளை னு சொல்லுவியா ? நான் இந்தக் கதையை என் அண்ணனின் கதையாகவே எண்ணுகிறேன், அப்படி இல்லாத போதும் இந்தக் கதை ரொம்பப் பிடித்துவிட்டது என்பதாலும் நம் நண்பர் என்ற காரணத்தாலும் இதைச் செய்கிறேன் “ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டேன். "ணா சும்மா தான், வாங்க டீ சாப்பிடலாம் "என்றான். "ஏற்கெனவே எரியுது கிளம்பு" என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டேன். இதே போலத்தான் கனகராஜன் அண்ணனின் புத்தகத்தை நிறையப் பேருக்கு வாங்கிப் பரிசளித்த போதும், இளஞ்சேரல் அவர்களின் சிறுகதையொன்றைப் பிரதியெடுத்த போதும் கேள்விகளை எதிர் கொண்டேன்….. ஒரு நல்ல வாசகன் இப்படித்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன் பிடித்த, நெருக்கமான படைப்புகளை மற்றவர்களுக்கும் பரிந்துரைப்பதில், பரிசளிப்பதில் மகிழ்ச்சி தான். இந்தப் பழக்கமும் இலக்கிய வட்டம் தொடங்கிய போது தான் ஆரம்பமானது. இப்போது யாழியின் கவிதைத் தொகுப்பை வாங்கித் தர ஆரம்பித்திருக்கிறேன்.

சொன்னது போலவே, இலக்கிய வட்ட நண்பர்கள் அனைவரும் ஒரு வகையில் குடும்ப உறுப்பினர்களைப் போலவே நெருங்கி விட்டோம்…
அதில் முக்கியமானவர் சித்ராதேவி அம்மா. இவரது மகன் மதன்ரா௺ஜ் அமெரிக்காவில் பணியில் இருக்கிறார். மேலும் குறும்படங்களை நண்பர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் தனியாக இங்கு வசிக்கிறார். வாசிப்பு தான் துணை. எங்களோடு தொடர்ந்து இலக்கிய வட்டத்தில் இணைந்திருக்கிறார். நிறைய முறை பொருளாகவும்,அன்பாகவும், உழைப்பாகவும் இலக்கிய வட்டத்துக்கு உதவிகள் செய்து கொண்டே இருக்கும் ஒரு ஆத்மா.

சென்ற கூட்டங்களின் போதே சொல்லிக் கொண்டே இருப்பார், ஏன் சிறப்பு விருந்தினர்களுடன் ஓட்டலில் சாப்பிடுகிறீர்கள் பணம் விரயம், பக்கத்தில் தானே வீடு வாருங்கள் என்று. எங்களுக்குத் தயக்கமாகவும், அவரைத் தொந்தரவு செய்து விடக் கூடாது என்பதாலும் போவதே இல்லை.
இந்த மாத அழைப்பிதழை அவரிடம் கொடுத்த போது அவர் சொன்ன இரண்டு விஷயங்கள் யோசிக்க வைத்தது. ஒன்று ஹோட்டலுக்குச் சென்றால் சாப்பிட்டு விட்டு உடனே கிளம்பியாக வேண்டும் வீடு என்றால் அப்படி இல்லை ஆற அமர உட்கார்ந்து பேசலாம் என்றார்.

உண்மைதான், சிறப்பு விருந்தினர்கள் தூரத்திலிருந்து அடித்துப் பிடித்து நிகழ்ச்சிக்கு வருகிறார்கள். நிகழ்ச்சிக்கு முன்னால் அவர்களுடன் பேச வாய்ப்பு அமைவதில்லை. நிகழ்ச்சி முடிந்ததும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு எங்கு அமர்ந்து பேசுவது? எனவே விரைந்து கிளம்பிவிடுவோம். வீடாக இருந்தால் இந்தக் குறை தெரியாது என்ற அம்மாவின் கருத்து சரியெனவே பட்டது.

இன்னொரு விஷயம் அவர் சொன்னது, நான் எப்போதும் தனியாகவே இருக்கிறேன் நீங்கள் வந்தால் உங்களுடன் பேசிக் கொண்டிருந்தால் ஆறுதலாக இருக்கும் என்று சொன்னார். இதுவும் கொஞ்சம் யோசிக்க வைத்தது. முன்பு சில முறை அவர் வீட்டுக்குப் போகின்ற போதெல்லாம் தன் தனிமையைப் பற்றிச் சொல்லிக் கண் கலங்குவார். இதற்காகவே அவருக்கு மட்டும் நேரில் போய் அழைப்பிதழ் தந்து விட்டுக் கொஞ்ச நேரம் பேசி விட்டு வருவோம்.

ஆக, இந்த இரண்டு விஷயங்களையும் யோசித்து இந்த முறை மதிய உணவுக்கு வருவதாகக் கூறியிருந்தோம். அவரும் நிகழ்ச்சி முடிவதற்கு கொஞ்ச நேரம் முன்னால் கிளம்பிப் போய் சாப்பாடு வைத்து விடுகிறேன் என்று சொல்லி இருந்தார். காலையில் நிகழ்ச்சிக்கு வரவில்லை. காரணம் கேட்டால் அவரது அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை என்றார். சங்கடமாகப் போய்விட்டது. அம்மா நீங்கள் பாருங்கள் ஹோட்டலுக்குப் போகிறோம் என்றோம். ஆனால் சாப்பாடு செய்தாகி விட்டது என்று சொல்லி வரச்சொல்லி வற்புறுத்தினார். அவரது அம்மா தனது தங்கை வீட்டுக்குப் போயிருப்பதாகச் சொன்னார்.

ஒரு வழியாக மதிய உணவுக்குஅவரது வீட்டுக்குப் போய் சுவையாகவும் மனம் நிறையவும் சாப்பிட்டு விட்டு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவருடன், நான்,அம்சப்ரியா, நிலாரசிகன்,சு.வேணுகோபால் மற்றும் நண்பர்களும் பேசிக் கொண்டிருந்தோம்.

ரொம்ப மன நிறைவாக இருந்தது. பேச்சில் அம்மா தனது தந்தையாரைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசியதும் அனைவரும் வாய்பிளந்து அதிர்ச்சியாகி விட்டார்கள்.
அவரது தந்தையின் பெயர் முல்லை தங்கராசன். சித்திரக்கதை உலகின் மன்னனாகத் திகழ்ந்தவர் பக்திக்கதைகள் முதல் இரும்புக்கை மாயாவி வரை இவரது படைப்புகளைப் பற்றிச் சொன்னவர் மும்பைக்கு இயக்குனர் ராண்டார்கை அவரை ஒரு திரைப்பட விஷயமாகச் சந்தித்துப் பேசப் போனபோது தவறி விட்டதாகச் சொல்லி வேதனைப்பட்டார். மேலும், ஜெயகாந்தன், கண்ணதாசனுடன் அவருக்கு இருந்த உறவு, புகைப்படங்கள் அனைத்தையும் காட்டிப் பேசினார். நேரம் போனதே தெரியவில்லை. நம்மவர்கள் மிகுந்த ஆச்சர்யத்திலும், ஆனந்தத்திலும் இருந்தார்கள். கிளம்பும் போது வயிறும் மனமும் நிறைந்து கிடந்தது. அன்பைத் தவிர வேறொன்றும் தெரியாத சித்ராதேவி அம்மாவைப் போன்ற அற்புதர்களால் இந்த வாழ்வு இன்னும் இனிமையானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆகிறது.இன்னும் இருக்கிறார்கள் த.வாசுதேவன் அய்யா, கார்த்தி, ஆனந்தகுமார், இன்பரசு, செந்தில்குமார் .. ஒவ்வொருவரையும் பற்றி வாய்ப்புக் கிடைக்கும் போது பதிய வேண்டும்... 

பொள்ளாச்சி இலக்கியவட்டம் பதினேழாவது சந்திப்பு

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் பதினேழாவது சந்திப்பு நேற்று நடந்தது. இன்னுமோர் இனிமையான நாள்.

படித்ததில் பிடித்தது பகுதியில் தாங்கள் படித்த / கேட்ட கவிதைகளையும் சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டனர். பின்னர் கவிஞர் அம்சப்ரியா அவர்களின் வரவேற்புரையை அடுத்து நான் கவிஞர் நிலாரசிகன் அவர்களின் கடலில் வசிக்கும் பறவை தொகுப்பின் வாசிப்பனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன்.


அடுத்ததாக தோழன் ராசாவின் இலக்கியப் பணிகள் மற்றும் அவரது சமூகப் பணிகள் அறிமுகத்தை அம்சப்ரியா நிகழ்த்தினார். பின்னர் தோழன் ராசாவின் ஏற்புரை. கவிதைகளை நான்கு சுவர்கள் நிரம்பிய அறையொன்றில் வாசித்துவிட்டு அப்படியே விட்டுப் போய்விடுவதில்லை எனவும் களத்தில் இறங்கி மக்களுடன் மக்களாக அவர்களின் விழிப்புணர்வுக்கும் அடிப்படைத் தேவைகளுக்குமாகப் போராடிக் கொண்டிருப்பதையும் இயல்பாக எடுத்துரைத்தார்.

சு.வேணுகோபால் ஐயா அவர்கள் இரா.முருகவேள் அவர்களின் மிளிர்கல் நாவலை விமர்சனம் செய்து பேசினார். ஆம். நான் எனது வாசிப்பனுபவத்தை மட்டுமே பகிர்கிறேன் எப்போதும். இவர் தான் விமர்சனம் செய்தார். மிளிர்கல் ஏராளமான தகவல் தரவுகளை உள்ளடக்கிய கருத்துப் பெட்டகம், ஆனால் அதை ஒரு நாவலாக ஏற்க முடியவில்லை அதற்கான வடிவத்தில் அது இல்லை என்றும் பேசினார். மேலும் தனக்கு அதன் வடிவத்தின் மேல் தான் அதிருப்தி என்றும் அதன் உள்ளடக்கத்திலும் கருத்துகளிலும் உடன்பாடு என்றே பேசினார். மிளிர்கல் கண்ணகியின் பயணப் பாதையில் உள்ள ஏராளமான தகவல்களை உள்ளடக்கிய நாவல் என்று அதில் குறிப்பிடப்பட்ட சில தகவலகளையும், மேலும் அதில் சொல்லப்படாத பல தகவல்களையும் குறிப்பிட்டுப் பேசி ஆச்சர்யப் படுத்தினார்.

கொஞ்சம் ஆசுவாசமாக்க, தமுஎக தோழர் பாலன் அவர்கள் ஒரு பாடலைப் பாடினார். பின்னர் முருகவேள் தனது ஏற்புரையாற்றினார். தனது ஏற்புரையில் மிகச் சாதுர்யமாக சு.வேணுகோபால் அவர்களின் விமர்சனத்தை எதிர்கொண்டு பேசியவர், நாவல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வடிவத்தையே உடைப்பதாக இருக்கட்டுமே என்று பேசினார். இந்த வடிவத்தில் தான் கவிதை இருக்க வேண்டும் என்ற வரையறையை எல்லாரும் பின்பற்றி இருந்தால் புதுக்கவிதை, நவீன கவிதைகள் எப்படி உருவாகியிருக்கும் என்று முத்தாய்ப்பாகச் சொன்னார். அதானே, எழுத்தாளன் தனது எழுத்துக்களின் மீது முதலில் நம்பிக்கையும், காதலும் கொள்வது இயல்புதான். பாராட்டக் கூடியதும்தான்.

பொள்ளாச்சி இலக்கியவட்டம் சார்பாக ஆசிரியர் புன்னகை ஜெயக்குமார் அவர்களுக்கு சாதனை ஆசிரியர் விருது வழங்கப்பட்டது. அரசுப்பள்ளியில் பல நடைமுறைச் சிக்கல்களைக் கடந்து தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக கணினியியல் துறையில் பன்னிரண்டாம் வகுப்பில் நூறு சதவிகிதம் தேர்ச்சியைக் கொண்டு வந்த்தோடு இந்த வருடம் கூடுதலாக ஒரு மாணவியை தமிழகத்திலேயே முதல் முதலாக அரசுப் பள்ளியில் கணினியலில் இருநூற்றுக்கு இரு நூறு மதிப்பெண்கள் எடுக்க வைத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தனது படிகள் அறக்கட்டளை மூலம் தனது சொந்தப் பணத்தில் நிறைய மாணவர்களின் கல்விக்கான உதவித் தொகையைத் தந்திருக்கிறார். இவை போதாதா இவருக்கு விருது வழங்கிச் சிறப்பிக்க ..?

அடுத்ததாக தோழன் ராசா அவர்களின் தொடர் இலக்கிய, சமூகப் பணிகளைக் கெளரவிக்கும் பொருட்டு அவருக்கு இலக்கியச் சுடர் விருது வழங்கப்பட்டது.

இந்த முறையைப் போலவே கொஞ்சம் பொருளாதார நிலை ஒத்துழைத்தால், ஒவ்வொரு முறையும் சிறப்பாக இயங்கும் தகுதியானவர்களுக்கு விருதளிக்க வேண்டும் என்பது எங்களின் எண்ணம். இது அவர்களுக்கு நிச்சயம் ஊக்கமாகவும், அடுத்தடுத்த பயணங்களுக்கான உத்வேகத்தையும் தரும் என்றும் நம்புகிறோம்.

அடுத்ததாக, நிலாரசிகன் பேசினார். எப்போதும் நேர்மறை எண்ணங்களை வார்த்தெடுப்பதில் தொடங்கி தனது கவிதைகளின் படிமங்களை அவர் பேசி முடித்ததும் நிறைய கைதட்டல்கள். அய்யா சிவசக்தி ராமசாமி அவருடன் விவாதித்ததும் கூட ஆரோக்யமாகவே அமைந்தது. கவிஞர் பாலுசாமி அவர்கள் கவிதைகளில் படிமங்கள் குறியீடுகள் குறித்து தனது கவிதைப் பயிற்சிப்பட்டறையை செவ்வெனே செய்தார்.

தொடர்ந்து கவியரங்கம், இருபத்தி ஐந்து கவிஞர்கள் தங்களது கவிதைகளை தங்களது குரலில் வாசித்த்து மகிழ்ச்சியான அனுபவம்.
இறுதியாக எனது நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்த்து.

இந்த நாளையும் அற்புதமாக்கித் தந்த அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும் நிறைய அன்பும்..


இந்த இலக்கிய சந்திப்புக்கு முன்பும், பின்பும் நிறைய நெகிழ் சம்பவங்கள் நடந்ததைத் தனியாகப் பதிய வேண்டும். பிறகு…..

திங்கள், 15 செப்டம்பர், 2014

இன்னும் மிச்சமிருக்கிறது காதல் ...சென்ற வெள்ளிக்கிழமை மாலை உக்கடம் பேருந்து நிலையத்தில் கிடைத்த ஒரு அனுபவம் கொஞ்சம் என்னை நெகிழ்த்தி விட்டது. இது சாதாரண அனுபவமாகக் கூட இருக்கலாம்: அப்போது இருந்த எனது மன நிலையில் இது பெரிய விஷயமாகக் கூடப் பட்டிருக்கலாம். இருப்பினும் இன்னும் மனதில் அது இருக்கிறது.


பேருந்தின் சன்னல் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருக்கிறேன். சன்னல் இருக்கையில் ஒரு இளைஞன்.

சன்னலுக்கு வெளியே வழக்கம் போலவே ஒரு இளைஞி. அவனது காதலி. பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


ஒட்டுக் கேட்கவெல்லாம் இல்லை. நன்றாகவே கேட்ட்து. அவர்களது உரையாடல்.

“ கார்த்தி, பாத்துப் போடா”

“ ம். சரி டி. நீ போய் சாப்பிடு”

“ பசிக்கல, நீ பாத்துப் போ, போனதும் கூப்பிடு. பழனியில இறங்கினதும் சாப்பிடு, ஜூஸ் குடி அப்பறம் அண்ணனுக்குக் கூப்பிடு, நடந்து போகாத சரியா. பாப்பாக்கு எதாவது வாங்கிட்டுப் போ. அண்ணன் கூட சண்டைக் கட்டாத என்ன சொன்னாலும் சரி பாத்துக்கலாம்னு சொல்லு”"சரி டி, நான் பாத்துக்கறேன் நீ கிளம்பு பஸ் வந்துடும்"

"இல்லடா உன் பஸ் எடுக்கற வரைக்கும் இருக்கேன்."

இப்போது பேருந்து கொஞ்ச தூரம் முன்னால் நகர்கிறது. ஓடி வந்து மீண்டும் சன்னலுக்கு அருகில் நின்று கொள்கிறாள்.

" எப்போ டா வருவ.?"

"அட லூஸு, ரெண்டு நாள் தான் வந்துடுவேன்."

இப்போது அவள் " அச்சோ மறந்துட்டேன் நீ போய்ச் சேர மூணு மணி நேரம் ஆகும்" என்றபடி ஓடியவள் இவன் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கையில் டெய்ரிமில்க், குட் டே மற்றும் அம்மா குடிநீருடன் வந்து விட்டாள்.

இப்போது பேருந்து இன்னும் கொஞ்சம் நகர்ந்து முன்வரிசைக்கு வந்து விட்டது. அங்கும் வந்து நின்றாள். அடுத்து நகரப் போவது எங்கள் பேருந்து தான் என்பது எனக்கே கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

"உனக்கு ரொம்ப லேட்டாச்சு டி. கிளம்பு. நான் போய்க்குவேன்."

" நீ தயவு செய்து சீக்கிரம் வா டா , பாத்துப் போய்ட்டு வா " என்று அநேகமாக பத்து அல்லது அதற்கும் அதிகமான முறையாகச் சொல்லி விட்டாள்.


பேருந்து இப்போது கிளம்பி நகர்ந்து விட்ட்து, கொஞ்ச தூரம் நடந்து கையசைத்துக் கொண்டே வந்தவளைக் கடந்து வந்துவிட்டோம்.

ஒரு பத்து நிமிடம் தான் பேருந்து பேருந்து நிலையத்தில் எங்களுடன் நின்றிருக்கும், அதற்குள் இத்தனை நிகழ்வுகள்.

அவளின் முகம் அப்படி ஒளிவீசிக் கொண்டிருந்தது இப்போது என் மனதில்.

வழக்கமாக இந்தக் காட்சியில் பெண் பேருந்தில் அமர்ந்திருப்பாள். ஆண் அவளை இப்படி வழியனுப்புவதைப் பார்த்திருக்கிறேன். இங்கு இந்தப் பெண் இவ்வளவு காதலோடு இருப்பதைப் பார்க்கும் போது நல்ல காதல் இன்னும் இருப்பதை உணர வைத்த்து.


அவளது முகத்தில் ஒரு துளி கூடக் கலப்படத்தை என்னால் உணர முடியவில்லை என்பதே என்னை அவளைப் பற்றி இங்கு எழுத வைத்த்து.


பேருந்து கிளம்பி வெளியில் வந்ததுமே அவனது அலைபேசி தொடுதிரை ஒளிர்ந்தது.. அம்மு காலிங் என்று. அவளாகத்தானிருக்கும். பாத்துப் போ என்று தான் சொல்லியிருப்பாள். நான் மெல்லக் கண்மூடி ஒரு கானகத்தில் பட்டாம் பூச்சியின் பின் ஓடிக் கொண்டிருக்கும் சிறுமியொருத்தியைப் பற்றிய கனவிலிருந்தேன். வெண்ணிற உடையைத் துருத்திக் கொண்டு சிறகுகள் முளைத்திருந்த அச்சிறுமியின் முகம் அந்தக் காதலியின் சாயலிலிருந்த்து.


நான் என்னைப் பற்றிய நினைவுகளுக்கு வந்தேன்.

என்னைக் குழந்தையைப் போல பார்த்துக் கொண்ட பார்த்துக் கொள்கிற மற்றும் தன்னை ஒரு குழந்தையாக முற்றிலும் என்னிடம் ஒப்படைத்து விட்ட என் காதலியை நினைத்துக் கொள்கிறேன். மனம் நெகிழும் நிறைய சம்பவங்கள் காட்சிகளாக சட சடவென வந்து போகின்றன.


எனது நிறுத்தத்துக்குச் சற்று தூரம் முன்பு வரைக்கும் கண்களை மூடியே இருந்தேன். வேண்டுமென்றே கூட. எனது நிறுத்த்தை நெருங்கும் போது

“ கார்த்தி, எப்பவும் இதே காதலோடு சந்தோஷமாக இருங்க. மாறிடாதிங்க” என்று அவசரமாக சொல்லிவிட்டு ( நிஜமாக) வேகமாக இறங்கிவிட்டேன். என்ன நினைத்தான் , என்னைப் பார்த்தானா என்றெல்லாம் கவனிக்கவே இல்லை. வேகமாக இறங்கிவிட்டேன்

கொடுத்து வைத்த மற்றுமொருவன் ..

அவர்கள் காதலில் வென்று மிக மகிழ்ச்சியுடன் பல காலம் வாழப் பிரார்த்திக்கிறேன் ..

அந்தக் காலம் மீண்டும் வந்தது …அம்மாவின் வருகையை ஒட்டியா என்று தெரியவில்லை கோவை நகரின் சுவர்களெங்கும் பளிச்சென சுண்ணாம்பு பூசப்பட்டு ஓவியங்களால் நிறைக்கப் பட்டிருக்கின்றன. ஒரு மாதத்துக்கு முன்பே இவற்றைப் பார்த்து விட்டேன். என்றால், இது அம்மாவின் வருகைக்காக இருக்காது என்று கூட நினைத்தேன். எது எப்படியோ மிக அழகாக உள்ளன. முன்பெல்லாம் இச்சுவர்கள் சினிமா சுவரொட்டிகளாலும் , அரசியல் அலப்பறை வாசகங்களாலும் இன்ன பிற அழுக்குகளாலும் நிறைந்து கிடக்கின்ற சுவர்களில் இப்போது குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, இயற்கையக் காப்போம், பெண்களைப் போற்றுவோம் போன்ற வசனங்களுடன் கைகளால் வரைந்த ஓவியங்கள்.


முன்பெல்லாம் சுவர் ஓவியக்காரர்களுக்கு இருந்த மதிப்பையும், டிஜிட்டல் உலகம் வந்த போது தங்கள் தொழிலை இழந்து வேறு வேலைகளுக்கு அவர்கள் சென்று விட்டதைப் பற்றியும் இளஞ்சேரல் அவர்கள் பேசியதாக நினைவு. மிகுந்த திறமைசாலிகளாக அறியப்பட்டவர்கள் தங்களது திறமைகளுக்கான வாய்ப்புகளை பிளக்ஸ், போஸ்டர்கள் போன்ற நவீன யுத்திகளிடம் இழந்து விட்டு வீட்டுக்கு வண்ணம் பூசுதல் மற்றும் இன்ன பிற தொழில்களுக்குச் சென்றிருப்பார்கள்.


அவர்களின் திறமையை மீட்டெடுக்கும் முயற்சியாகவே இச்சாலை ஓவியங்கள் பட்டன எனக்கு. அவர்களுக்கு சுவர்கள் வேண்டும். போஸ்டர்கள் பிளக்ஸ்களுக்குக் கூட சுவர்கள் தேவையில்லை.


இருக்கும் சுவர்களை சாலை ஓவியர்களுக்கான ஒரு வாய்ப்பாக தமிழகம் முழுவதும் தந்தால் அவர்களுக்கும் பேருதவியாக இருக்கும். மேலும், மக்களுக்கும் பழைய நினைவுகளை வித்தியாசமான கோணங்களில் பார்க்கும் வாய்ப்பைப் பரிசளித்த மாதிரி இருக்கும்.சரிதானே…

தமிழில் எழுதுபவனுக்கு ஆங்கிலத்தில் ஒரு விருது .. Best Author Award 2014தமிழில் எழுதுபவனுக்கு ஆங்கிலத்தில் ஒரு விருது


கொஞ்ச நாட்கள் முன்பு உடுமலையிலிருந்து Youths Club India என்ற அமைப்பிலிருந்து அழைத்தார்கள். அவர்களின் ஆண்டு விழாவில் சிறந்த தொழிலதிபர், சமூக சேவகர், என்று பத்து விருதுகள் தருவதாகவும் அந்த வரிசையில் சிறந்த எழுத்தாளர் விருதுக்கு என்னைப் பரிந்துரைக்கப் போவதாகச் சொன்னார்கள். திடுக்கிட்டுவிட்டேன். நான் அப்படியெல்லாம் எதுவும் பெரியதாக எழுதவில்லையே என்ற போது எனது கவிதைகள், வலைப்பூ, முகநூலைப் பார்த்திருப்பதாகவும் எனது கவிதைத் தொகுப்பைப் படித்திருப்பதாகவும் சொல்லி எனது சுயவிவரக் குறிப்பைக் கேட்டார்கள். நான் இன்னும் பெரிதாக எதுவும் எழுதவில்லை வேண்டுமானால் இந்த விருதுக்கு நான் நன்றாக எழுதிக் கொண்டிருக்கக் கூடிய நல்ல எழுத்தாளர்களைப் பரிந்துரைக்கிறேன் என்றேன். அதையும் செய்யுங்கள் மேலும் உங்கள் சுயவிவரக் குறிப்பையும் கொடுங்கள் என்றார்கள்.

ஒரு வாரம் கழித்து நான் கையில் கொங்குப் பகுதியைச் சேர்ந்த எட்டுப்
பேருடைய பட்டியலுடன் அவர்களுக்கு அழைத்தேன். அப்போது தான் தங்களது இரண்டு விதிமுறைகளைச் சொன்னார்கள் ஒன்று எழுத்தாளர்கள் 34 வயதுக்குள் இருக்கவேண்டும் என்றார்கள் முதல் விதிமுறையிலேயே ஏழு பேர் அவுட். மீதமிருந்த ஒருத்தரும் அடுத்த விதிமுறையில் கழிந்தார் அது உடுமலை அல்லது பொள்ளாச்சிக்காரராக இருக்க வேண்டும்….. முடியவில்லை. விடாப்பிடியாக எனது சுய விவரத்தை மட்டும் வாங்கிக் கொண்டார்.

பிறகொரு நாள் பேசும் போது 32 பேர் தேர்வுப் பட்டியலில் இருப்பதாகச் சொன்னார் 32 பேரா..? நம்பிக்கையோ எதிர்பார்ப்போ இல்லாமல் தான் இருந்தேன். ஆனாலும் ஆச்சர்யம் , இரண்டு நாட்களில் ஒரு குறுஞ்செய்தியில் அறிவுப்பு நீங்கள்தான் தேர்வாகியிருக்கிறீர்கள் என்றும் செப்டம்பர் 14 அன்று விழா என்றும். அந்தக் குறுஞ்செய்தி வந்த அன்று தான் புதுக்கோட்டைப் பயணம். பயணத்தில் யாழி தனது நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் தருகிறார். வாழ்த்துரை இரா.பூபாலன் என்று இருந்த வரிகள் அத்தனை ஆனந்தத்தையும் அதிர்ச்சியையும் ஒருங்கே தந்தது. காரணம் நூல் வெளியீட்டு விழா செப்டம்பர் 14 என்னைக் கேட்காமலே என் பெயரைப் போட்டுக் கொள்ளாலாம் என்ற நம்பிக்கை யாழிக்கு வந்ததற்கு என் அன்பு தான் காரணமாயிருக்கும். யாழியின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாய் நானிருக்கிறேன் என்பதே மகிழ்ச்சி. எப்படிக் கலந்து கொள்வது என்று மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தேன்.யாழியிடமும் லேசாகச் சொல்லி வைத்தேன்.

நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னாள் நிகழ்ச்சி நிரல் தந்தார்கள் விருது விழாவுடன் கண்தானம், ரத்த தானம் என்று பல நிகழ்ச்சிகளுடன் முழுநாள் நிகழ்வாக இருந்தது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. யாழி நூல் வெளியீட்டு விழா காலை பத்து முதல் ஒரு மணி வரை . உடனே அலைபேசியில் அவர்களிடம் கேட்டேன் சரியாக விருது விழா எப்போது என்று. 3.30க்கு என்று சொன்னதும் மிக்க மகிழ்ச்சி. காலையில் நூல்வெளியீட்டு விழா , அடித்துப் பிடித்துப் போனால் போய் விடலாம்.

செப்டம்பர் 14 அன்று காலை 9.30க்கு அர்த்ரா அரங்கில் ஆஜர். ஆனால் விழா துவங்க 11 ஆகி விட்டது. முன் அனுமதி வாங்கிக் கொஞ்சம் முன்னதாகவே பேசிவிட்டுக் கிளம்பி கொஞ்சம் தாமதமாக விருது விழாவுக்கு 4 மணிக்குப் போய்ச் சேர்ந்தேன்.

மனம் உறுத்தலாகவே இருந்தது. எந்த நிகழ்ச்சியிலும் இப்படி இடையில் அவசரமாகச் செல்லும் பழக்கம் இருந்தது இல்லை. அத்தனை பெரிய மனிதனும் இல்லை. நிறைய நண்பர்கள் வந்திருந்தார்கள் தூரத்திலிருந்தும். அவர்களுடன் கதைத்திருக்கலாம் தான்… உறுத்தலாக இருந்ததால் யாழி, இளஞ்சேரல், இளவேனில், வைகறை என அனைவருக்கும் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி விட்டேன் மன்னிக்கும் படி.


விருதுக்கு வருவோம், தாமதமாகப் போனதால் விருது தாமதமாகி அங்கேயே இரவு ஏழு ஆகி விட்ட்து. இருப்பினும் அங்கும் முகநூல் நட்பான பரிசல்காரன், ஆர்த்தி மங்களா சுப்ரமணியன் ஆகியோரைச் சந்தித்தது மகிழ்ச்சி.


ஆர்த்தி, பல திறமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள பெண், எழுதுகிறார், பாடுகிறார், இசையமைக்கிறார், இயக்குகிறார் எல்லாம் சேர்த்துக் குறும்படமாக்குகிறார் அதைவிடவும் சிறப்பு அவர் ஒரு தேர்ந்த MAGICIAN. மேடையிலேயே சில தந்திரக் காட்சிகளைச் செய்து கைதட்டல்களை அள்ளினார். இன்னும் உயரங்கள் காத்திருக்கிறது தோழி.

சொன்னது போல, தமிழில் கவிதைகள் எழுதிக் கொண்டிருப்பவனுக்கு Best Author என்று ஆங்கிலத்தில் விருது கொடுத்தார்கள். உள்ளூரில் வேறெந்தக் கெட்ட விஷயங்களுக்கும் போகாத ஒரு இளைஞன் உருப்படியாக ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறான் அல்லது எழுத முயற்சிக்கிறான் என்று அவதானித்து இந்த விருதைக் கொடுத்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.


Youth’s Club Indiaவிற்கு நன்றி. பிரபு, கதிரவன், மணிகண்டன் போன்ற இளைஞர்கள் இவ்வமைப்பை உருவாக்கி மிகச் சிறந்த சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த இளைஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் பகிர்கிறேன்.


இனியேனும் எழுத வேண்டும் நல்லபடியாக …


இந்த விருதைச் சாத்தியமாக்கிய பொள்ளாச்சி இலக்கிய வட்டச் செயல்பாடுகள், கருந்துளை சிற்றிதழ் மற்றும் என் கவிதைகளை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன் …

திங்கள், 8 செப்டம்பர், 2014

துயரத்தின் மீதும், ஆத்திரத்தின் மீதும் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன் இச்சொற்களை …துயரத்தின் மீதும், ஆத்திரத்தின் மீதும் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன் இச்சொற்களை …

கீழே இணைத்துள்ள செய்தியைப் படியுங்கள் … கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த மிக மோசமான விபத்தில் இறந்து போனவர்கள் மொத்தம் நான்கு பேர். அனைவரும் எனக்குத் தெரிந்தவர்கள், அதில் ஒருவனான நாகராஜ் (32), நான் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புப் படிக்கும் போது எனது உற்ற நண்பன். அவனது குடும்பத்தினர் அனைவரும் எனக்கு  நெருங்கிய நண்பர்கள்.
 விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டங்கள் நாம் அனைவரும் அறிந்ததே. அப்படியான ஒரு கொண்டாட்டத்துக்கு ஊர்வலத்துடன் கிளம்பிப் போனவர்கள் தான் இவர்கள். ஊர்வலம் முன்னால் செல்ல இவர்கள் பின்னால் சாப்பாடு எடுத்துக் கொண்டு சென்றதாகச் சொல்கிறார்கள். ஒரு ஆட்டோவை முந்திச் செல்லும்போது, பேருந்தில் நேருக்கு நேர் மோதிப் பின் மரத்தில் மோதி சுக்கு நூறாகச் சிதறி உருக்குலைந்து போய்விட்டது வண்டி. சம்பவ இடத்திலேயே நண்பன் பலியாகிவிட்டான்.
விபத்துக்குக் காரணம் வேகம், தாறுமாறான வேகம். வேகத்துக்குக் காரணம்....? வேறென்ன மது தான். விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட மதுவை தாராளமாகக் குடித்துவிட்டு வண்டியை ஓட்டியிருக்கின்றனர். மூளைக்குள் பரவிவிட்ட மதுவின் வீரியம் அவர்களின் எக்ஸிலேட்டரைப் பிடித்து மரண வேகத்தில் அழுத்தியிருக்கிறது. வேதனையான நிகழ்வு.

கிளம்பும்போது நாகராஜுக்கு டாட்டா சொல்லி அனுப்பி வைத்த மகளும், சீக்கிரம் வரச் சொல்லிக் கேட்டுக்கொண்ட மனைவியும் அப்படிக் கதறி அழுகிறார்கள். அவர்களுக்கு யாராலும் ஆறுதல் சொல்ல முடியவில்லை. முகம் சிதைந்த அவ்வுடலைப் பார்த்து இது தன் மகன் தான் என நம்பவே மறுத்து அழும் அவனின் தாய்க்கும் யாராலும் ஆறுதல் சொல்ல முடியவில்லை. இது இப்படி இருக்க இவனுடன் இறந்து போனவர்களில் திருமணமான ஒரு ஆண்டு மட்டுமே ஆன ஒருவன் வீட்டை நினைத்தால் பதறுகிறது.இன்னொரு இளைஞன் 21 வயதானவன். அவனும் இறந்து விட்டான், அவனது காதலி பேருந்தில் அழுது கொண்டே கல்லூரிக்குப் போனாள் என்று யாரோ சொல்லக் கேட்ட போது வலிக்கிறது. எத்தனை கனவுகள் அவர்களுக்குள் இருந்திருக்கும். அவள் அவனது உடலையாவது பார்க்கும் வாய்ப்பைப் பெறுவாளா..? எப்படித் தன்னைத் தேற்றிக் கொள்வாள். எதையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

நாகராஜை நினைக்கும் போது கோபமும், அழுகையும் முட்டிக் கொண்டு வருகிறது. பத்தாவது படிக்கும் போதே கிராமத்துத் திருவிழாவில் பியர் குடித்து விட்டு வந்தான். ரொம்பவே சண்டை போட்டேன். அப்போது அவன் எனக்கு சத்தியம் செய்தான் இனி குடிக்க மாட்டேன் என்று. நினைவில் வந்து போகிறது அவன் அம்மா மீது அவன் செய்து கொடுத்த சத்தியம்.

சென்ற வருடமே எங்கள் ஊரில் விநாயகர் சதுர்த்திக்கு பணம் வசூலிக்க வீடு வீடாக வந்த நண்பர்களிடம் நான் சொன்னேன், தண்ணியடிக்காம சாமி கும்பிடுவயா.? தண்ணியடிச்சுட்டு சிலையைத் தூக்க உனக்கு எப்படி மனசு வருகிறது பின்னெதற்கு சாமி கும்பிடுகிறாய் என்றெல்லாம் கேட்டுவிட்டேன். எதுவுமே சொல்லாமல் போய்விட்டார்கள். அவர்களுக்குத் தெரியும் வேறு பல நல்ல காரியங்களுக்குக் கேள்வியே கேட்காமல் பணம் தந்திருக்கிறேன். அதனால் இம்முறை அவர்களுக்கு என்னிடம் எந்த வருத்தமும் இருந்திருக்காது. மாறாக அவர்களின் மனசாட்சி உறுத்தியிருந்தால் மகிழ்ச்சி. இந்த வருடம் என்னிடம் பணம் கேட்க வரவேயில்லை அவர்கள்.

ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்திக்கு எத்தனை உயிர்கள் பலியாகியுள்ளன..? அப்படி என்ன ஒரு கொண்டாட்டம். மது இல்லாமல் கொண்டாட மாட்டார்களா..? சென்ற வருடம் ஒரு இளைஞன் விநாயகரைக் கரைக்கப் போய் ஆற்றில் தவறி விழுந்து இறந்து விட்டான். அவன் விழுந்ததைக் கவனிக்கக் கூட இல்லாமல் ஆடியிருக்கிறான் அவனது சகோதரன். அவனும் முழுக்க போதையில் இருந்திருக்கிறான். இம்முறையும் கோவையில் அப்படி ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை விட்டு விடலாம், பொதுவாக தினமும் நிகழும் சாலை விபத்துகளில் எத்தனை உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்படுகின்றன. நன்றாக யோசியுங்கள் யாராவது வண்டி ஓட்டத் தெரியாதவன் அல்லது புதிதாகப் பழகியவன் விபத்தை ஏற்படுத்துகிறானா..? இல்லை; அத்தனை பேரும் பல வருடங்கள் ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் தான். பிறகு எப்படி ..?

ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. இந்தியாவில் நடக்கும் விபத்துகளில் 72% விபத்துகளுக்குக் காரணம் குடி தான் … குடித்துவிட்டுத் தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்துவதால் அவனது உயிர் மட்டுமா போகிறது, எத்தனை உயிர்களை, எத்தனை குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதிப்புக்குள்ளாக்குகிறார்கள்.
சாலை விபத்துகள் தவிர்த்து குடியால் கல்லீரல் கெட்டு, இதயம் கெட்டு, என எத்தனையோ லட்சம் பேர் செத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

மதுக்கடைகளைத் திறந்து வைத்துவிட்டு அடுத்த முக்கில் நின்று குடித்துவிட்டு ஓட்டுபவர்களைப் பிடிப்பதாகச் சொல்லும் அபத்தம் இங்குதான் நிகழ்கிறது. மேலும்  மதுக்கடைகளையும், மது தொ௳ழிற்சாலைகளையும் அரசாங்கமோ, அரசு அதிகாரவர்க்கத்தின் பினாமிகளோ தான் நம் ஊரில் நடத்துகிறார்கள். பக்கத்து மாநிலங்களில் மது புழங்கும் போது நாம் பூரண மது விலக்கைப் பற்றி யோசிக்கவே முடியாது என்று சொன்னவர்கள் முகத்தில் கரியினைப் பூசும்படியாக கேரளா அரசு பூரண மது விலக்குக்கான முதல் அடியை எடுத்து வைத்துவிட்டது. பூனைக்கு முதல் மணியைக் கேரளா கட்டியிருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

கேரளாவில் பார்த்திருக்கிறேன், நம் ஊரைப் போல கும்பலாக அடிதடியுடன் மதுச் சாலைகளில் நெருக்கித் தள்ளுவதில்லை. வரிசையில் நின்று தான் வாங்கிப் போகிறார்கள், கேரள காவல் துறையும் நம் அளவுக்கெல்லாம் இல்லை. குடித்து விட்டு வண்டி ஓட்டினால் உடனே நடவடிக்கை தான். பின் பாக்கெட்டில் பணத்தைச் சொருகிவிட்டு இங்கு போல அங்கு தப்ப முடியுமா என்று தெரியவில்லை. அதுவும் போக கள்ளுக்கடைகள் வீதிக்கொன்று இருக்கின்றன. குடி அவர்களின் அன்றாட வாழ்வில் கலந்தே விட்டிருக்கிறது. அப்படி இருக்கும் அவர்களே பூரண மது விலக்கைப் படிப்படியாக அமல் படுத்தத் துணிந்து விட்டார்களென்றால் தமிழ் நாட்டிலும் அது சாத்தியம் தானே.

அம்மா உணவகம், அம்மா மருந்தகம், வரிசையில் அம்மா மதுச் சாலைகள் என்று விபரீத யோசனையை எந்த மந்திரியாவது சொல்லித் தொலைக்கும் முன் மது என்கின்ற சாத்தானை முற்றிலும் அழிக்க பூரண மது விலக்கை கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்கி முடித்துவிட்டால், ஏராளமான குடும்பங்கள் தப்பிப் பிழைக்கும். நீங்கள் செய்வீர்களா அம்மா ..?திங்கள், 1 செப்டம்பர், 2014

கடவுளுக்கு லிப்ட் ....


                சூரியன் சுட்டெரிக்கும்
கோடை நாளொன்றின்
நண்பகலில் என்
இரு சக்கர வாகனத்தில்
விரைந்து கொண்டிருந்தேன்.

காலாண்டுத் தேர்வை
முடித்துவிட்டு
புத்தகப்பையுடன்
வேக வேகமாக
நடந்து கொண்டிருந்த
கடவுளின் அருகில்
நிறுத்தி அவரை
ஏற்றிக்கொண்டேன்

கடவுளின் ஊர்
ஐந்து கிலோ மீட்டருக்கு
அப்பாலெனத் தெரிந்ததும்
இரண்டு கிலோ மீட்டரில்
இருக்கும் எனது
ஊரைக் கடந்து
கடவுளின் ஊரிலேயே
அவரை இறக்கி விடுவதெனத்
தீர்மானித்தேன்.

ஒரு கதையோ பாடலோ
சொல்லும் படிக் கேட்டதும்
பாடல் வடிவிலேயே ஒரு
கதை சொன்னார்
கடவுள்.

ஏற்ற இறக்கமான
குரலில் கதை நீள
சாலையின் இரு பக்கங்களிலும்
ஓங்கி வளர்ந்தன
பசுமையான மரங்கள்
வழியெங்கும்
நிழலினை நிறைத்து.

கடவுளின் ஊர் வந்ததும்
லாவகமாக வண்டியிலிருந்து
குதித்த கடவுள் என்னைக்
குனியச் சொல்லி
நெற்றிப்பொட்டில்
முத்தமொன்றை இட்டு
நன்றி என்று
சொல்லிக் கையசைத்தார்

வரமே தந்துவிட்ட
பிறகு
நன்றியெதற்கென
கேட்க நினைத்தவன்

கேட்க மறந்து விட்டேன்

கடவுளின் பெயரை…………


# லிப்ட் கொடுக்கும் அனுபவத்தில் முன்பொருநாள் எழுதிய கவிதை

லிப்ட் கொடுக்கிறேன் வருகிறீர்களா ..முந்தாநாள் ஞாயிற்றுக் கிழமை. காலை முதல் இரவு வரை வண்டியிலேயே சுற்றும் படி நிகழ்ச்சிகள் இருந்தன. அதற்கான திட்டமிடல்கள் சரியாகச் செய்து வைத்திருந்தேன். காலையில் பொள்ளாச்சியில் புன்னகை ரமேஷ் அவர்களின் மகள்களுக்கு காது குத்து விழா, முடித்துவிட்டு கோவை இலக்கிய சந்திப்பு, அதை முடித்து விட்டு மதியம் கோவை அருகம்பாளையம் கிராமத்தில் இருக்கும் உறவினரைப் பார்க்கச் செல்ல வேண்டும். உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். ஆக, காலை முதல் மாலை வரை சரியாக இருக்கும்.


காலை 8.30க்கு கிளம்பி பொள்ளாச்சி போனேன். காதுகுத்து விழா முடிய 10 ஆகி விட்டது. அவசரமாகக் கிளம்பி இலக்கிய சந்திப்புக்குச் செல்கிறேன். எப்படி வேகமாகப் போனாலும் 11 ஆகிவிடும். அதற்கும் மேல் தாமதமாகப் போகக் கூடாது. வண்டி கோவில்பாளையத்தைத் தாண்டும் போது ஒரு மனிதர் லிப்ட் கேட்டுக் கையசைத்தார். மிக நல்ல உடை, பின்புறம் தொங்கவிடப்பட்ட பை அனைத்தையும் வைத்து அவரை ஒரு விற்பனைப் பிரதிநிதியாக யூகம் செய்து கொண்டேன். வயது 40 தான் இருக்கும். சரி எங்காவது பக்கத்தில் தான் போவார் என்று நினைத்து ஏற்றிக் கொண்டேன். ஏறியதும் எங்கு போக வேண்டும் எனக் கேட்டதற்கு கிணத்துக்கடவு என்றார். ஒரு கணம் அதிர்ச்சியாகிவிட்டேன். கோவில் பாளையத்துக்கும் கிணத்துக்கடவுக்கும் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர். இதை இவர் ஏன் நடந்து செல்லத் திட்டமிட்டார். இதற்கும் இவர் கோவில்பாளையம் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் தான் நடந்து போய்க் கொண்டிருந்த போது என்னிடம் லிப்ட் கேட்டார். எனக்கு மனம் நிறையக் கேள்விகளால் குழப்பிக் கொண்டிருந்தது. பாவம் பேருந்துக்குப் பணம் இருந்திருக்காது என்று நினைத்துக் கொண்டேன். காலையில் ஒருவருக்கு உதவிய திருப்தியுடன் போகலாம் என்று அவரிடம் எதுவும் கேட்கவில்லை.

கொஞ்சதூரம் தான் அந்த மன திருப்தி. ஒரு கிலோமீட்டர் தூரம் கூட வந்திருக்க மாட்டோம். திடீரென கத்தினார் அய்யோ சார்... சார் என்று. பதறிவிட்டேன். சட்டென வண்டியை நிறுத்தி தலைக் கவசத்தைக் கழற்றி என்ன ஆச்சு சார். எதையாவது கீழே போட்டு விட்டீர்களா என்றேன். இல்லை சார் ஏன் இப்படி வேகமாகப் போகிறீர்கள் மெதுவாகப் போங்கள் என்றார். கடுப்பாகி விட்டது. இதற்கும் 70 கி.மீ வேகத்தில் தான் போய்க் கொண்டிருக்கிறேன். கடுப்பைக் காட்டாது வண்டியைக் கிளப்பி, நல்லா பிடிச்சு உக்காருங்க எனக்கு அவசரம் ஒரு மீட்டிங்குக்குப் போய்க்கொண்டிருக்கிறேன் இந்நேரம் ஆரம்பித்திருப்பார்கள் என்று சொல்லிவிட்டு ஓட்டினேன். மீண்டும் கத்துகிறார். என்ன இப்படி பிரேக் போடறீங்க, ஏன் இத்தன வேகமா ஓட்டறீங்க மெதுவாப் போங்க என்றார்.இல்லை சார் எனக்குக் கொஞ்சம் அவசரம் அதும் இல்லாம 70ல் தான போறேன் என்றேன். கொஞ்ச தூரத்தில் மீண்டும் பதற்றப் படுத்திவிட்டார். ஒரு காருக்குப் பின்னால் பிரேக் அழுத்தி நிற்கப் போகும் போது வடிவேலுவின் ஒரு படத்தில் வருவதைப் போல தோள்களைக் குலுக்கு குலுக்கென்று குலுக்கி நிறுத்தினார். சார் நான் தான் பயமா இருக்குனு சொல்றேன் திரும்ப திரும்ப வேகமா ஓட்டறீங்க, நானெல்லாம் வண்டி எடுத்தா 30க்கு மேல போக மாட்டேன் என்றார். ரொம்பக் கடுப்பாகி அதுக்கு நீங்க தள்ளிட்டு நடந்தே போகலாம் சார் என்றபடி தாமரைக் குளம் நிறுத்தம் வந்ததும் நிறுத்தி சார் இறங்குங்க பேருந்துக்குப் பணம் தருகிறேன் பேருந்தில் வாங்க என்றேன். இல்லை சார் வர்றேன் ப்ளீஸ் என்றார். பாவமாகவும் இருந்தது. ஏற்றிக் கொண்டு 50லேயே வந்தேன். பின்னிருக்கைக் கைப்பிடியை இறுகப் பற்றிக் கொண்டு அமர்ந்து வந்தார். கிணத்துக்கடவு முதல் பேருந்து நிலையத்திலேயே இறக்கி விட்டேன். விட்டதும் கேட்டார், சார், கோயமுத்தூர் போறீங்களா..?

“ ஐயோ, இல்லீங்ணா, கிழக்கால போறேன்" என்று சொல்லிவிட்டு முறுக்கினேன். அரை மணிநேரம் தாமதமாக 11.30க்குத் தான் கோவை இலக்கியசந்திப்பு அரங்கத்தில் நுழைகிறேன். ஒரு நூல் அறிமுகம் முடிந்தது, அடுத்த நிகழ்வு நடந்து கொண்டிருந்தது.


இது நமக்கு முதல் முறையல்ல, இப்படி நிறைய சம்பவங்கள் நடந்ததுண்டு. மெல்ல அசை போடுகிறேன். என்னிடம் ஒரு கெட்ட/நல்ல பழக்கம், எத்தனை அவசரத்தில் போகும் போதும் யாராவது லிப்ட் கேட்டால் நிறுத்தி ஏற்றிக் கொண்டுதான் போவேன். அப்பா அடிக்கடி சொல்வார், இரவில் யாரையும் ஏற்றாதே அதிகம் குடிகாரர்கள் தான் இந்தச் சாலையில் வருவார்கள் உனக்குத்தான் பிரச்சினை என்று. நிறுத்தி அவர்கள் அவர்கள் தானா என்று பார்த்துவிட்டு அவர்களை மட்டும் தவிர்த்து விடுவேன்.

ஒருமுறை இரவில் ஒரு இளைஞனை ஏற்றிச் சென்று இறக்கிவிட்டபின் பின்னாலிருந்த பை திறந்திருப்பதை வீட்டுக்குப் போய்த்தான் பார்த்தேன். 1000 ரூபாய் கொடுத்து வாங்கியிருந்த கால்குலேட்டர் போச்சு. நன்றாகத் தெரிந்துவிட்டது எடுத்தது அவன்தான் என்று. நல்லவேளை தோழி ஒருவர் தன்னிடம் இருந்த கால்குலேட்டரைக் கொடுத்து அப்போதைக்கு உதவினார். தேர்வு சமயம் அது, மாதக் கடைசியும் கூட. அன்றிலிருந்து லிப்ட் கொடுப்பதையெல்லாம் நிறுத்தவில்லை, லிப்ட் கொடுக்கும் போது பையை முன்னால் வைத்துக் கொள்ளப் பழகியிருக்கிறேன்.

இதையெல்லாம் பொருட்டாக எடுத்து உதவுவதை நிறுத்திவிட்டால் எப்படி ?

ஒருமுறை மாற்றுத் திறனாளி ஒருவரைப் பார்த்து நானாக நிறுத்தி பொறுமையாக ஏற்றிக் கொண்டு போனேன். கோவில் பாளையத்தில் இறக்கி விடச் சொன்னார் பேருந்து ஏறிக்கொள்வதாக. நான் , இல்லை பொள்ளாச்சி தான் போறேன் என்று சொல்லி அவர் போக வேண்டிய தேவாலயத்தின் முன்னாலேயே கொண்டு போய் இறக்கி விட்டேன். அப்போது உள்ளிருந்து ஓடி வந்த அவரது மனைவியும், குழந்தையுமாக மூவரும் நன்றி சொல்லி, நல்லவேளை சீக்கிரம் வந்தீங்க என்று அவர் மனைவி அவரிடம் சொல்லியபடி உள்ளே போனார்கள். எதற்கு அந்த நல்லவேளை என்று தெரியவில்லை. ஆனால் நாம் செய்வது மிகச் சிறிய உதவி என்ற போதும் அது அவர்களுக்கு மிக முக்கிய உதவியாகக் கூட அமைந்து விடலாம் என்பதை நினைத்தால், இது போன்ற எந்த உதவும் குணத்தையும் என்னால் கைவிட முடிவதில்லை. உதவி செய்து பல சமயங்களில் ஏமாந்து போன போதும் ...