துயரத்தின் மீதும்,
ஆத்திரத்தின் மீதும்
அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன் இச்சொற்களை …
கீழே இணைத்துள்ள செய்தியைப் படியுங்கள் …
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த மிக மோசமான விபத்தில் இறந்து போனவர்கள் மொத்தம்
நான்கு பேர். அனைவரும் எனக்குத் தெரிந்தவர்கள்,
அதில் ஒருவனான நாகராஜ் (32), நான்
ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புப் படிக்கும் போது எனது உற்ற நண்பன். அவனது
குடும்பத்தினர் அனைவரும் எனக்கு நெருங்கிய
நண்பர்கள்.
விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டங்கள் நாம்
அனைவரும் அறிந்ததே. அப்படியான ஒரு கொண்டாட்டத்துக்கு ஊர்வலத்துடன்
கிளம்பிப் போனவர்கள் தான் இவர்கள். ஊர்வலம் முன்னால் செல்ல இவர்கள் பின்னால்
சாப்பாடு எடுத்துக் கொண்டு சென்றதாகச் சொல்கிறார்கள்.
ஒரு ஆட்டோவை முந்திச்
செல்லும்போது, பேருந்தில் நேருக்கு நேர் மோதிப் பின் மரத்தில் மோதி சுக்கு
நூறாகச் சிதறி உருக்குலைந்து போய்விட்டது வண்டி.
சம்பவ இடத்திலேயே நண்பன்
பலியாகிவிட்டான்.
விபத்துக்குக் காரணம் வேகம், தாறுமாறான
வேகம். வேகத்துக்குக் காரணம்....? வேறென்ன மது தான்.
விநாயகர் சதுர்த்திக்
கொண்டாட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட மதுவை தாராளமாகக் குடித்துவிட்டு வண்டியை
ஓட்டியிருக்கின்றனர். மூளைக்குள் பரவிவிட்ட மதுவின் வீரியம்
அவர்களின் எக்ஸிலேட்டரைப் பிடித்து மரண வேகத்தில் அழுத்தியிருக்கிறது. வேதனையான
நிகழ்வு.
கிளம்பும்போது நாகராஜுக்கு டாட்டா சொல்லி
அனுப்பி வைத்த மகளும், சீக்கிரம் வரச் சொல்லிக் கேட்டுக்கொண்ட
மனைவியும் அப்படிக் கதறி அழுகிறார்கள். அவர்களுக்கு யாராலும் ஆறுதல் சொல்ல
முடியவில்லை. முகம் சிதைந்த அவ்வுடலைப் பார்த்து இது தன் மகன் தான் என நம்பவே
மறுத்து அழும் அவனின் தாய்க்கும் யாராலும் ஆறுதல் சொல்ல முடியவில்லை. இது
இப்படி இருக்க இவனுடன் இறந்து போனவர்களில் திருமணமான ஒரு ஆண்டு மட்டுமே ஆன ஒருவன்
வீட்டை நினைத்தால் பதறுகிறது.இன்னொரு இளைஞன் 21
வயதானவன். அவனும்
இறந்து விட்டான், அவனது காதலி பேருந்தில் அழுது கொண்டே
கல்லூரிக்குப் போனாள் என்று யாரோ சொல்லக் கேட்ட போது வலிக்கிறது. எத்தனை
கனவுகள் அவர்களுக்குள் இருந்திருக்கும். அவள் அவனது உடலையாவது பார்க்கும்
வாய்ப்பைப் பெறுவாளா..? எப்படித் தன்னைத் தேற்றிக் கொள்வாள். எதையும்
நினைத்துப் பார்க்க முடியவில்லை.
நாகராஜை நினைக்கும் போது கோபமும், அழுகையும்
முட்டிக் கொண்டு வருகிறது. பத்தாவது படிக்கும் போதே கிராமத்துத்
திருவிழாவில் பியர் குடித்து விட்டு வந்தான்.
ரொம்பவே சண்டை போட்டேன். அப்போது
அவன் எனக்கு சத்தியம் செய்தான் இனி குடிக்க மாட்டேன் என்று. நினைவில்
வந்து போகிறது அவன் அம்மா மீது அவன் செய்து கொடுத்த சத்தியம்.
சென்ற வருடமே எங்கள் ஊரில் விநாயகர்
சதுர்த்திக்கு பணம் வசூலிக்க வீடு வீடாக வந்த நண்பர்களிடம் நான் சொன்னேன், தண்ணியடிக்காம
சாமி கும்பிடுவயா.? தண்ணியடிச்சுட்டு சிலையைத் தூக்க உனக்கு
எப்படி மனசு வருகிறது பின்னெதற்கு சாமி கும்பிடுகிறாய் என்றெல்லாம் கேட்டுவிட்டேன். எதுவுமே
சொல்லாமல் போய்விட்டார்கள். அவர்களுக்குத் தெரியும் வேறு பல நல்ல
காரியங்களுக்குக் கேள்வியே கேட்காமல் பணம் தந்திருக்கிறேன். அதனால்
இம்முறை அவர்களுக்கு என்னிடம் எந்த வருத்தமும் இருந்திருக்காது. மாறாக
அவர்களின் மனசாட்சி உறுத்தியிருந்தால் மகிழ்ச்சி.
இந்த வருடம் என்னிடம் பணம்
கேட்க வரவேயில்லை அவர்கள்.
ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்திக்கு
எத்தனை உயிர்கள் பலியாகியுள்ளன..? அப்படி என்ன ஒரு கொண்டாட்டம். மது
இல்லாமல் கொண்டாட மாட்டார்களா..? சென்ற வருடம் ஒரு இளைஞன் விநாயகரைக்
கரைக்கப் போய் ஆற்றில் தவறி விழுந்து இறந்து விட்டான்.
அவன் விழுந்ததைக் கவனிக்கக்
கூட இல்லாமல் ஆடியிருக்கிறான் அவனது சகோதரன்.
அவனும் முழுக்க போதையில்
இருந்திருக்கிறான். இம்முறையும் கோவையில் அப்படி ஒரு மரணம்
நிகழ்ந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை விட்டு விடலாம், பொதுவாக
தினமும் நிகழும் சாலை விபத்துகளில் எத்தனை உயிர் சேதம்,
பொருட்சேதம் ஏற்படுகின்றன. நன்றாக
யோசியுங்கள் யாராவது வண்டி ஓட்டத் தெரியாதவன் அல்லது புதிதாகப் பழகியவன் விபத்தை
ஏற்படுத்துகிறானா..? இல்லை;
அத்தனை பேரும் பல வருடங்கள்
ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் தான். பிறகு எப்படி ..?
ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. இந்தியாவில்
நடக்கும் விபத்துகளில் 72% விபத்துகளுக்குக் காரணம் குடி தான் …
குடித்துவிட்டுத் தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்துவதால் அவனது உயிர் மட்டுமா
போகிறது, எத்தனை உயிர்களை, எத்தனை குடும்பத்தின் எதிர்காலத்தைப்
பாதிப்புக்குள்ளாக்குகிறார்கள்.
சாலை விபத்துகள் தவிர்த்து குடியால்
கல்லீரல் கெட்டு, இதயம் கெட்டு,
என எத்தனையோ லட்சம் பேர்
செத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
மதுக்கடைகளைத் திறந்து வைத்துவிட்டு அடுத்த
முக்கில் நின்று குடித்துவிட்டு ஓட்டுபவர்களைப் பிடிப்பதாகச் சொல்லும் அபத்தம்
இங்குதான் நிகழ்கிறது. மேலும்
மதுக்கடைகளையும், மது தொ௳ழிற்சாலைகளையும் அரசாங்கமோ, அரசு
அதிகாரவர்க்கத்தின் பினாமிகளோ தான் நம் ஊரில் நடத்துகிறார்கள். பக்கத்து
மாநிலங்களில் மது புழங்கும் போது நாம் பூரண மது விலக்கைப் பற்றி யோசிக்கவே
முடியாது என்று சொன்னவர்கள் முகத்தில் கரியினைப் பூசும்படியாக கேரளா அரசு பூரண மது
விலக்குக்கான முதல் அடியை எடுத்து வைத்துவிட்டது.
பூனைக்கு முதல் மணியைக்
கேரளா கட்டியிருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.
கேரளாவில் பார்த்திருக்கிறேன், நம்
ஊரைப் போல கும்பலாக அடிதடியுடன் மதுச் சாலைகளில் நெருக்கித் தள்ளுவதில்லை. வரிசையில்
நின்று தான் வாங்கிப் போகிறார்கள், கேரள காவல் துறையும் நம் அளவுக்கெல்லாம்
இல்லை. குடித்து விட்டு வண்டி ஓட்டினால் உடனே நடவடிக்கை தான். பின்
பாக்கெட்டில் பணத்தைச் சொருகிவிட்டு இங்கு போல அங்கு தப்ப முடியுமா என்று
தெரியவில்லை. அதுவும் போக கள்ளுக்கடைகள் வீதிக்கொன்று இருக்கின்றன. குடி
அவர்களின் அன்றாட வாழ்வில் கலந்தே விட்டிருக்கிறது.
அப்படி இருக்கும் அவர்களே
பூரண மது விலக்கைப் படிப்படியாக அமல் படுத்தத் துணிந்து விட்டார்களென்றால் தமிழ்
நாட்டிலும் அது சாத்தியம் தானே.
அம்மா உணவகம்,
அம்மா மருந்தகம், வரிசையில்
அம்மா மதுச் சாலைகள் என்று விபரீத யோசனையை எந்த மந்திரியாவது சொல்லித் தொலைக்கும்
முன் மது என்கின்ற சாத்தானை முற்றிலும் அழிக்க பூரண மது விலக்கை கொஞ்சம்
கொஞ்சமாகத் தொடங்கி முடித்துவிட்டால், ஏராளமான குடும்பங்கள் தப்பிப் பிழைக்கும். நீங்கள்
செய்வீர்களா அம்மா ..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக