சில விஷயங்களை எழுத ரொம்ப யோசிப்பேன். தயக்கங்களையெல்லாம் தாண்டி ஏதோ ஒரு எண்ணம் எழுதச் சொல்லும். அப்படிப் பல முறை யோசித்த பின் தான் இதை எழுதுகிறேன்.
சமீபத்தில் ஊரில் ஒரு அதிர்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டேன். ஊர் பள்ளியில் இரண்டு குழந்தைகள் தவறாக நடந்து கொண்டார்கள் என்று. குழந்தைகள் என்றால் சின்னஞ்சிறு குழந்தைகள் மூன்று, நான்கு வயதிருக்கும். ஊரில் அங்கன்வாடியில் படிக்கிறார்கள். அங்கன்வாடியில் ஏதோ ஒரு இடைவேளையில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண்குழந்தையும் செடிகளுக்குப் பின்னால் ஒதுங்கியிருக்கிறார்கள்.
இதில் அதிர்ச்சியாக என்ன இருக்கிறது, குழந்தைகள் தானே என நினைத்தேன். பிறகு கேள்விப்பட்டது தான் அதிர்ச்சியான செய்தி. அவர்கள் பெரியவர்கள் உடலுறவு கொள்வதைப்போலான செயல்களைச் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள்.
திடீரென குழந்தைகளைக் காணவில்லையென்று தேடிய ஆசிரியை, அவர்களைக் கண்டு அதிர்ச்சியாகியுள்ளார். சின்னக்குழந்தைகள் , அடிக்கவோ திட்டவோ கூடாதென முடிவெடுத்தவர், அவர்களுக்கு கொஞ்சம் பக்குவமாகச் சொல்லியுள்ளார். பின்னர், ஊர்த்தலைவர் அம்மாவுடன் இணைந்து அவர்களது பெற்றோர்களை வரவழைத்துப் பேசியுள்ளார் , அறிவுரை சொல்லி அனுப்பியுள்ளார். இதைக்கேட்டதிலிருந்து மனது என்னவோ செய்தபடியிருக்கிறது.
பெரிதாக அதிர்ச்சியடைய , வருந்த எதுவுமற்ற நிகழ்வு என்று கூட சிலர் சொல்லலாம். இந்நிகழ்வின் பின்னணியிலிருக்கும் உளவியலும் , இப்படியான விதிமீறல்களுக்குப் பின்புலக் காரணிகளாக இருக்கும் பல்வேறு சமூகக் காரணிகளும் பல கோணங்களில் சிந்திக்க வைப்பன.
உளவியல் , மருத்துவ நிபுணர்களின் சில கருத்துகளைப் படித்த ஞாபகம் . பிறந்த குழந்தைகளுக்குமே பாலுணர்வு இயற்கை. அதன் வெளிப்பாடு தான் கை சூப்புதல், உறுப்புகளை தேய்த்தல், போன்ற பல செய்கைகள். இவையெல்லாம் இயற்கைக் காரணிகள். இவற்றை விட்டு விடலாம். புறத்திலிருந்து நமது குழந்தைகளுக்கு என்ன மாதிரியான நெருக்கடிகள் வருகின்றன என நினைத்துப் பாருஙகள்.
இந்தக் குழந்தைகளின் நடத்தையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் பொதுவாக வந்த தகவல்களில் ஒன்று, இவர்கள் பிற்படுத்தப்பட்ட ஏழ்மையான குழந்தைகள். ஒரே அறையைக் கொண்ட குடிசையில் மூன்று குழந்தைகள் , கணவன் , மனைவி என வசிக்கும் படி வாய்த்தவர்கள். அவர்களுடைய அப்பா, அம்மா இருவருமே குடிப்பார்களாம் , குடித்துவிட்டு போதையில் குழந்தைகள் பார்ப்பதைக் கூட கவனிக்காமல் அல்லது பார்க்கவில்லை என்ற நினைப்பில் உறவில் ஈடுபடுவார்கள் அதைப் பார்த்த குழந்தைகள் நிலை என்ன ஆகும் என யோசித்துப் பாருங்கள் என்கிறார்கள் . இது உண்மையாகவும் இருக்கலாம் இல்லாமலும் போகலாம். ஆனால், இப்படியான வசிப்பிடம் தான் நம்மில் பலருக்கும் வாய்த்திருக்கிறது.
ஒரே அறையில் குழந்தைகளுடன் தூங்க நேர்கிறது . கணவன் மனைவிக்கு என்று பிரத்யேக அறை இருப்பதில்லை. பெரும்பாலான நடுத்தர வர்க்க தம்பதிகள் குழந்தை உறங்குவதற்காகக் காத்திருக்கிறார்கள் அல்லது விடுமுறை நாட்களில் குழந்தைகள் ஊருக்குப் போவதற்காகக் காத்திருக்கிறார்கள். இது முற்றிலும் மறுக்க முடியாத உண்மை. ஒருவேளை தங்கள் அப்பா அம்மா அந்நியோன்யமாக இருப்பதைப் பார்க்க நேரிடும் குழந்தைகள் மனதில் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் ? அதை அவர்கள் ஒரு விளையாட்டாக நினைத்து , அதை முயற்சித்துப் பார்க்கும் அபாயம் கூட இருக்கிறதல்லவா. அப்படியும் நடந்திருக்கலாம் மேற்சொன்ன சம்பவம்.
முக்கியமாக, குழந்தைகளின் மீதான பாலியல் அத்துமீறல்களும், பாலியல் வன்முறைகளும் அவர்களின் உளவியல் சிக்கல்களுக்கு வழிவகுக்கின்றன.
தாத்தா, மாமா, அண்ணன், தூரத்து உறவு, பக்கத்து வீட்டுக்காரர்களால் சீரழிக்கப்பட்ட குழந்தைகளைப் பற்றிய செய்திகள் எத்தனை படித்திருக்கிறோம். அவையெல்லாம் செய்தியாக வந்தவை. செய்தியாக வராமல், வெளியுலகுக்குத் தெரியாமல் இன்றும் தொடர்பவை ஏராளம் உள்ளன. இவர்களிடமிருந்தும் குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பு பெற்றவர்களுடையதாகிறது.
குடும்பத்தில் நடக்கும் இம்மாதிரியான நிகழ்வுகளை மட்டும் குழந்தைகள் பிரதிபலிப்பதில்லை, நமது சமூக ஊடகங்கள் தரும் பாடமும் இவை தான். சினிமாவும் குறிப்பாக தொலைக்காட்சியும் கற்றுத் தரும் கல்வி பெரும் கல்வி.
( நன்றாக வாசிக்கவும் 'கல்வி' என்று தான் குறிப்பிட்டுள்ளேன் ).
கடந்த மாதம், காலாண்டு விடுமுறை சமயம், அண்ணன் மகள் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். வீட்டுக்கு வந்திருந்தாள். வீட்டில், அவளும், பாரதி(9 வயது), இனியா(5 வயது) மூவரும் இருப்பார்கள். நிறைய கதைகள், புத்தகங்கள் , விளையாட்டு இப்படித்தான் நேரத்தைச் செலவு செய்யச் சொல்லி இருக்கிறேன். இருப்பினும் தொலைக்காட்சி பார்க்காமலா இருப்பார்கள். முந்தைய நாள் , ஒரு நண்பன் நான்கு திரைப்படங்கள் பென் டிரைவில் கொடுத்தான். அதில் ஒரு படத்தைப் பார்த்து விட்டு அப்படியே பென்டிரைவை தொலைக்காட்சிப்பெட்டியிலேயே விட்டு விட்டு வந்துவிட்டேன். பென்டிரைவில் நிறைய குழந்தைகள் திரைப்படமும் வைத்திருந்தேன். அவர்கள் பார்ப்பதற்காக.
நண்பன் எனக்குக் கொடுத்த திரைப்படங்களில் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற காவியப்படமும் ஒன்று. நான் அதைப் பார்க்கவேயில்லை. இரண்டு நாட்கள் கழித்து நண்பன் சொன்னான். அண்ணா, திரிஷா இல்லனா நயன் தாரா னு ஒரு படம் அதுல இருக்கும் அதைக் குடும்பத்தோட பார்க்க முடியாது கவனமாகப் பாருங்க என்றான். எனக்கு பகீரென்றது. அப்போது தான் பென்டிரைவ் தொலைக்காட்சியிலேயே இருப்பது உறைத்தது.
அன்று வீட்டுக்குப் போனதும் வழக்கம் போல பாப்பாக்களிடம் கேட்டேன், இன்னிக்கு என்னென்ன செய்தீர்கள் என, விளையாட்டு, சைக்கிள் ஓட்டம், படிப்பு என அனைத்துடன் டிவியும் பாத்தோம் என்றார்கள். நான் பதைபதைப்புடன் படம் பார்த்தீர்களா என்றேன். ஆமாம் ரெட் பலூன் பார்த்தோம் என்றார்கள். எனக்கு அப்பாடா என்றிருந்தது. இருந்தாலும் கேட்டேன். த்ரிஷா இல்லனா நயன் தாரானு ஒரு படம் பார்த்தீர்களா என்றேன். அவர்கள் அது நேத்தே பார்த்தோம் ஜோக்காக இருந்தது என்றார்கள். அதிர்ந்து போய், மிகவும் வருத்தப்பட்டேன் . அன்று இரவுதான் அந்தப் படத்தை முழுமையாகப் பார்த்தேன் . குழந்தைகள் பார்த்திருப்பார்கள் என்பதை மனதில் வைத்துக் கொண்டே பார்த்தேன். குப்பையிலும் குப்பை. அத்தனை ஆபாசம் படத்தில், காட்சிகளில், வசனத்தில் என அத்தனையும் ஆபாசம்.
திரையரங்கத்துக்குச் சென்று குழந்தைகள் இந்த மாதிரிப் படங்களையெல்லாம் பார்க்க மாட்டார்கள் தான். வயது வந்தோருக்கு மட்டும் என்று சான்றிதழ் அளிக்கப்பட்டு A முத்திரையுடன் வரும் அது ஒரு வகையில் நிம்மதி. ஆனால், இன்னும் சில மாதங்களில் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்று அறிவித்தபடி நடுவீட்டுக்கு தொலைக்காட்சியில் வருமே அப்போது யார் தடுப்பது. பெரியவர்கள் கூட இருந்தால் சேனல் மாற்றி குழந்தைகள் பார்க்காமல் தடுக்கலாம். இல்லாவிடில் ??? இது ஒரு எடுத்துக்காட்டுக்குத் தான். தொலைகாட்சிகளில் வரும் பாடல்கள், சீரியல்கள் ஏன் விளம்பரங்களைக் கூட கவனித்துப்பாருங்கள் அத்தனையும் ஆபாசம் அத்தனையும் வன்முறை.
குழந்தைகள் பங்குபெறும் நிகழ்ச்சிகளைப் பாருங்கள் ஆபாசமான பாடல்களை முக்கல் முனகல்களுடன் குழந்தைகளைப் பாட வைப்பது, இடுப்பை வளைத்து வளைத்து ஆட வைப்பது, அறிவு ஜீவிகளாகக் குழந்தைகளைக் காட்டுவதாக அசட்டுத்தனம் செய்வது என நமது பேராசைகளுக்கும் புகழ் போதைக்கும் குழந்தைகளைப் பணயம் வைக்கிறோம்.
இப்படி வீட்டுக்குள்ளேயே விசத்தை வைத்திருக்கிறோமே என்று எத்தனை நாள் நாம் யோசித்திருக்கிறோம். இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் தணிக்கை வருமா வராதா ?
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஆபாசம் ஒரு புறம், அக்கம் பக்கத்தில் மற்றும் சொந்த வீடுகளில் கேட்க, பார்க்கக் கிடைக்கும் ஆபாசங்கள் ஒரு புறமுமாக வளரும் குழந்தைகள் வேறெதைக் கற்றுக் கொள்வார்கள்.
நவீன காலக் குழந்தைகளை மிக மிக கவனமாக வளர்க்க வேண்டியுள்ளது. அவர்களின் கேள்விகளை, நாட்களை, அனுபவங்களை, நடத்தையை கவனமாகக் கையாள வேண்டியுள்ளது. அந்தப் பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மட்டுமல்ல பக்கத்து வீடு, எதிர் வீடுகளில் இருந்தாலும் நமக்கும் உள்ளது. சிந்திப்போம்
இதற்கான தீர்வுகளை நாம் நமது வசம் தான் வைத்திருக்கிறோம். எனது சிற்றறிவுக்கு எட்டியவரை சிலவற்றைக் கோடிட்டுக் காட்டுகிறேன் நண்பர்கள் உங்கள் பரிந்துரைகளையும் இங்கு பகிரலாம். அறியாமையை அகற்ற உதவும்
- குழந்தைகளிடம் பெற்றவர்கள் அதிகமாக உரையாட வேண்டும். அவர்கள் பள்ளியில், வெளியில் தினமும் என்ன நடக்கிறது என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதற்கு அவர்கள் என்ன எதிர்வினையாற்ற வேண்டும் என்பதை தோழமை உணர்வுடன் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்
- குழந்தைகளை முடிந்த வரை தனிமையில் விடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- தொலைக்காட்சி , திரைப்படங்கள் பார்ப்பதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும். முக்கியமாக செல்பேசியைப் பயன்படுத்தி விளையாடுதல்
- குழந்தைகளின் கேள்விகளுக்கு நாம் செவி சாய்க்க வேண்டும். நமக்கு பல்வேறு வேலைகள் இருப்பதைக் காரணம் காட்டி அதெல்லாம் கேட்காத போய் விளையாடு, போய் டீவி பாரு என்று அனுப்புவது ஆகாது
- குழந்தைகளுக்கு குட் டச் எது, பேட் டச் எது என அவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் சொல்லித் தருதல் அவசியம்
- மிக முக்கியமான ஒன்று, குழந்தைகளுக்கு நாம் செய்ய மறந்த ஒன்று கதை சொல்லுதல். நீதிக்கதைகளின் மூலம் சிறு வயதிலிருந்தே அவர்களின் மனதில் அறவுணர்ச்சியைத் தூண்டுவது கதைகள் தாம். முடிந்த வரை தினமும் நல்ல கதைகளைச் சொல்ல வேண்டும்.
- குழந்தைகளின் மனங்களில் தீய எண்ணங்கள் வளர்க்கும் செயல்களை, எதிர்மறை எண்ணங்களை விதைக்கும் செயல்களைப் பெரியவர்கள் குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாது.
நன்று! நண்பரே!மேலோட்டமாக பார்த்தால் ஒன்றுமில்லாத விஷயம்போல் தோன்றினாலும் உளவியல் ரீதியாக நோக்குகையில் அதன் பின்புலமும், எதிர்கால பயம் பற்றிய உந்துதலும் ஏற்படுகின்றது. சமூகப் பொறுப்புணர்வுள்ள பதிவு இது. பாராட்டுகள்!
பதிலளிநீக்குமிக்க நன்றியும் அன்பும் நண்பரே
நீக்குஅத்தனை அருமையான கூட்டுத்தொகுப்பு இந்த கட்டுரை அண்ணா.. கட்டாயமாக அனைவரும் வாசிக்க வேண்டிய கடைபிடிக்க வேண்டிய ஒன்று.
பதிலளிநீக்குப்ரியங்கள் அபி
நீக்குஉங்களது பதற்றத்தை,அக்கறையை அதே விசையோடு பகிர்ந்துகொள்கிறேன் தோழா!
பதிலளிநீக்குமிக்க நன்றியும் அன்பும்
நீக்குஉண்மைதான்பா பிஞ்சிலேயே பழுத்துவிடுகிறார்கள்....மனம் வேதனையான ஒன்று....
பதிலளிநீக்குநன்றி அம்மா
நீக்குபெற்றோர்கள் எவ்விதம் நடந்த்க்கொள்ள வேண்டும் என்பதை மிக சரியாக சொல்லியிருக்கீங்க பூபாலன்.
பதிலளிநீக்குஏழைகளின் வீடுகளில் தனி அறைகள் இல்லையென்பதும் அதுவும் குழந்தைகளின் வளரும் பருவத்தில் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணும் என்பது உண்மை.
ஆனால் தனி அறைகள் இருக்கும் உயர்வான மத்தியதர குடும்பங்களில் என்ன நடக்கிறது தெரியுமா...பிள்ளைகளை வைத்துக்கொண்டே பெற்றொர் கட்டிப்பிடித்தலும் முத்தமிடலும் 'I love u' சொல்லிக் கொள்வதும் நடக்கிறது. அதை அப்படியே குழந்தைகள் பள்ளியில் அரங்கேற்றுவதை நாங்கள் பார்க்கிறோம்.
பிள்ளைகளைப் பெற்றதும் நாம் பெற்றோர் என்னும் பொறுப்பிற்குள் நுழைய வேண்டும்.
சிக்மெண்ட் பிராயிட் சொன்னது இயற்கையானது. டிவி மற்றும் பெற்றோரின் அறியாமையால் விளைவது நாமே உண்டு பண்ணுவது.சமூகத்தில் நடக்கும் செயல்களின் மூலம் நமது குடும்பம்தான். அங்கு நல்லது ஊட்டப்பட்டால் சமூகம் நல்வழியில் நடை போடும்.
நீங்க சொல்லியிருப்பது அனைத்தும் உண்மை. மிக அருமையான பதிவு பூபாலன்.
மிக்க நன்றி. நான் குறிப்பிடத் தவறிய மேல் தட்டுக் குழந்தைகளின் பிரச்சினைகளையும் குறிப்பிட்டமைக்கு நன்றி
நீக்குஒரு உளவியல் மாணவனாக கூறுகிறேன். . .
பதிலளிநீக்கு* குழந்தைகளுக்கு சிரிய வயது முதலே புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். . .
* இறையியல் கோட்பாடுகளையும், ஒழுக்க மாண்புகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும். . .
* தனிமனித ஒழுக்கத்தையும், சமுதாய கடமைகளையும் சொல்லி கொடுக்க வேண்டும்.
* சமுதாயத்தைப் பற்றி அறிவை சிறு வயது முதலே கொடுக்க வேண்டும். இது நண்பர்களை தேர்ந்தெடுக்க உதவும்...
* கட்டுப்பாட்டற்ற சுதந்திரம், அளவிற்கு அதிகமாக செல்லம் காட்டுதல் கூடாது...
நன்றி
கருத்துகளுக்கு மிக்க நன்றி தோழர்
நீக்கு
பதிலளிநீக்கு"இந்நிகழ்வின் பின்னணியிலிருக்கும் உளவியலும், இப்படியான விதிமீறல்களுக்குப் பின்புலக் காரணிகளாக இருக்கும்." என்பதை வரவேற்கிறேன். பொறுப்புள்ள பெற்றோர்கள் தான் திருந்த வேண்டுமே தவிர, குழந்தைகளை நொந்து பயனில்லையே!
உண்மைதான். இது பெற்றோர்களுக்காகத்தான்
நீக்குஅருமையான விஷயங்கள் தோழரே. ஆனால் டிவி-யில் தனிக்கை ஏற்படுத்தினால் தற்க்கால அரசு அதை பயன்படுத்தி எப்பயாவது சொல்லகூடிய நல்ல விஷயங்களை சொல்லமல் தடுத்துவிடுமே. 100% படத்தில் 2 % வித படம்தான் நல்ல கருத்துகளை சொல்லுகிற படமாக இருக்கிறது மறைமுகமாக 18% படங்கள் வருகிறது. அதில் அவர்கள் சொல்ல வர கருத்தை தடுத்துவிடுகிறது. ஆனால் தனிக்கை துறை 80% தவறான படங்களில் 40 % படத்தை எந்த கேள்வியும் இல்லமால் அரசியல் காரணங்களுக்காகவும், மற்ற சில காரணங்களுக்காகவும் வெளியிடுவதை போல். தொலைகாட்சி நிகழ்ச்சயுலும் நல்ல விஷயங்களை சொல்லவிடாமல் தடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதே
பதிலளிநீக்குசகோ.
அருமையான விஷயங்கள் தோழரே. ஆனால் டிவி-யில் தனிக்கை ஏற்படுத்தினால் தற்க்கால அரசு அதை பயன்படுத்தி எப்பயாவது சொல்லகூடிய நல்ல விஷயங்களை சொல்லமல் தடுத்துவிடுமே. 100% படத்தில் 2 % வித படம்தான் நல்ல கருத்துகளை சொல்லுகிற படமாக இருக்கிறது மறைமுகமாக 18% படங்கள் வருகிறது. அதில் அவர்கள் சொல்ல வர கருத்தை தடுத்துவிடுகிறது. ஆனால் தனிக்கை துறை 80% தவறான படங்களில் 40 % படத்தை எந்த கேள்வியும் இல்லமால் அரசியல் காரணங்களுக்காகவும், மற்ற சில காரணங்களுக்காகவும் வெளியிடுவதை போல். தொலைகாட்சி நிகழ்ச்சயுலும் நல்ல விஷயங்களை சொல்லவிடாமல் தடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதே
பதிலளிநீக்குசகோ.
தீயவற்றைத் தவிர்த்தால் போதும் நல்லவை தானாய் வெளிவரும்
நீக்குஇங்கு வெளிவரும் பல படங்கள் மற்றும் திரைப்படக்காணொளிகள் பாலுணர்ச்சிகளைத் தூண்டுவதாக மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதற்கு இது முக்கிய சான்று... மாறாக எந்த காட்சியும் காணொளியும் படங்களும் மனித சமூகத்தை முன்னேற்றவியலாத சாக்கடைக்குள்ளே கிடக்கிறது என்பது கண்ணாடித்தெளிவு
பதிலளிநீக்கு