செவ்வாய், 25 ஜனவரி, 2022

எங்கள் தாய்ப்பறவை சிற்பி ஐயாவுக்கு பத்மஸ்ரீ விருது

பொள்ளாச்சி மண்ணின் இலக்கிய அடையாளம்...

கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது ...


எனது வாழ்வின் பெரும் மகிழ்ச்சியான நாளென்று இந்த நாளையும் சொல்லிக்கொள்வேன்... வேறென்ன சொல்ல?

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பொள்ளாச்சியில் அமர்ந்து எழுதி, தனது கவிதைகளின் மூலம் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார் ...
வாழ்க இன்னும் பல்லாண்டு.. வளர்க தங்களது தமிழ்ப்பணி...

அருகில் இருந்து பார்க்கிறேன் அவரது ஆளுமையை.. விஸ்வரூப தரிசனமாகத் தெரிகிறது...

ஓய்வின்றி உழைக்கும் எழுத்தாளர்...
சலிக்காத வாசிப்பு
ஞானம்
அன்பு
தீர்க்கம்

என வியந்து போற்ற எத்துணை குணங்கள்?

சிற்பி ஐயா பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்..

கவிஞர் சிற்பி அவர்களின் கவிதையை மீண்டும் ஒருமுறை பகிர்கிறேன்..

என் மொழிக்கில்லாமல்  எனக்கு மட்டும் சுதந்தரமா ?

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து
மொழியாம் என் மொழி
பள்ளிக் கூட வாசலில் கூடக். 
காலடி வைக்க முடியாதாம்
கிழித்தெறி புறப்பொருள் வெண்பா மாலையை-
எனக்கு மட்டும் எதற்குச் சுதந்தரம் ?
உயிரியல்  படிக்க வக்கில்லாததாம்
எடுத்தெறி அந்தக் குறுந்தொகை நெடுந்தொகை-
எனக்கு மட்டும் எதற்குச்  சுதந்தரம் ? 
பொறியியல்  படிக்கப் பொருத்தமில்லாத தாம்
போடு குப்பையில் புறநானூற்றை
எனக்கு மட்டும் எதற்குச் சுதந்தரம் ?
மேற்கோள் சொல்லத் தான் திருக்குறளாம்
பிறகென்ன நாக்கு வழிக்கவா முப்பால் சுவடி ?
எனக்கு மட்டும் எதற்குச் சுதந்தரம் ?
இந்தி தெரிந்தால் தான் இந்தியரென்றால்
இந்தியனாகி என்ன செய்யப் போகிறேன்?
கழிசடைத் தமிழனாகவேனும் 
காலம் கழிக்கிறேன் அதுவே போதும் !

கவிஞர் சிற்பி அவர்களின் மொழிபெயர்ப்பு :

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால் .
--------
கே.சச்சிதானந்தன்
(தமிழில் :சிற்பி)
ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
அவளைக் கல்லினுள்ளிருந்து
உயிர்ப்பிப்பது என்று பொருள்.
அடிமுதல் முடிவரை காதலால் நீவி
சாபமேற்று உறைந்து போன ரத்தத்தில்
கனவுகளின் சூடேற்றுவது என்று பொருள்.
ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
கரியும் எண்ணெய்ப் பிசுக்கும் கலந்த அவளது பகலை
சொர்க்கத்து மகரந்தம் சுவாசிக்கின்ற
வானம்பாடியாக மாற்றுவது,
இரவில் அத்தளர்ந்த சிறகுகளுக்கு ஓய்வு தர
தோள் குனிந்து கொடுக்கும்
தளிர் அடர் மரமாக மாறுவதாகும்.
ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
காற்றும் மழையும் நிறைந்த கடலில்
மேகங்களின் கீழே புதியதோர் பூமியைத் தேடி
காலம் செலுத்துதல் என்று பொருள்.
நமக்குச் சொந்தமான வீட்டு வாசலில்
முளைத்த ஒரு மலர்ச்செடியை
யாரும் இதுவரை கண்டிராத கடற்கரையில்
கொண்டுபோய் நட்டுவளர்த்தல் என்று பொருள்.
ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
தன் தசைநார்களின் ஆற்றல் முழுவதையும்
ஒரு சௌகந்திகப் பூவின் மென்மைக்குக்
கைமாற்றம் செய்து கொள்வதாகும்.
மணிமுடியும் ராணுவ உடையும் கழற்றியெறிந்து
மற்றொரு வானம் கடந்து
மற்றொரு வீட்டிலுள்ள
காற்றிற்கும், மற்றொரு நீருக்கும்
தன் தசையை விட்டுக்கொடுப்பதாகும்.
ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
அவளுடைய பழமையான காயங்களிலிருந்து
சூரிய கிரணம் போல் ஒரு வாளை உருவாக்க
அவளுக்கு உதவுவதாகும்.
பின்னர் இரத்தம் வடிந்து தீரும் வரை
அக்காயத்தில் நம் இதயத்தை அழுத்திக் கிடப்பதாகும்.
நான் ஒரு பெண்ணையும் காதலித்ததில்லை.






ஞாயிறு, 9 ஜனவரி, 2022

முகந்து தீராக் கடல் - கவிஞர் சிற்பி எனும் மகாசமுத்திரத்தின் புதிய புதிய அலைகள்

ஜனவரி மாத கொலுசு இதழில் வெளியான கவிஞர் சிற்பி அவர்களின் முகந்து தீராக் கடல் - கவிதைத் தொகுப்புக்கான எனது வாசிப்பு அனுபவம்...




கடல் முகந்து தீராதது. கடலின் கொள்ளளவை முகந்துவிடக் கூடிய கொள்கலன் இந்தப் பூமியில் படைக்கப்படவில்லை. கடலின் இருப்பால் தான் இந்த பூமியில் இன்னும் பல்லுயிர்கள் பல்கிப் பெருகி வாழ்கின்றன. கடலின் பிள்ளைகள் தான் நாம். ஆனாலும், கடலைக் கரையளவு அல்லது கால்பாகம் கூட அறிந்திருப்போமா என்பது நம் அறிவெல்லைக்கும் கடலெல்லைக்குமான ஆழத்தை உணர்த்தும்.  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய நம் மூத்த மொழி தமிழும் ஒரு மகாசமுத்திரம் தான். அதன் ஆழங்களில் மூழ்கி அங்கு புதைந்துகிடக்கும் நல்முத்துகளை, அளப்பரிய செல்வங்களை அறிந்து கொண்டவர் , அனுபவித்தவர் வெகு குறைவு. தமிழின் இலக்கியப் பெருஞ்செல்வங்களை நாம் முகந்து தீராக் கடல் எனலாம். கவிதை தமிழின் தொல் இலக்கிய வடிவங்களின் ஆதாரம். அதன் ஆகிருதியையும் முகந்து தீராக் கடல் எனலாம். தமிழெனும் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியை, அதன் அளப்பரிய இலக்கிய செல்வங்களை, தமிழ்க் கவிதையை முகந்து தீராக் கடல் என எந்நாளும் போற்றலாம். காரணம் கடலின் பிள்ளைகள் நாம்.


கவிஞர் சிற்பி 85 வயதைக் கடந்த மூத்த தமிழ்க்கவிதை ஆளுமை. மரபில் வேரூன்றி புதுக்கவிதையில் கிளைபரப்பி வளர்ந்து நிற்கும் பெருமரம். தற்காலக் கவிதைகளிலும் ஓயாமல் இயங்கும் பெரும் சக்தி அவர். இன்றைக்கும் கவிதைகள், உரைநடைகள், மொழிபெயர்ப்புகள் என தினமும் அவரது பங்களிப்பு தமிழ் இலக்கியத்துக்கு இருந்து கொண்டேயிருக்கிறது. ஓய்வறியாச் சூரியன் அவர். அவரது சமீபத்திய முகநூல் கவிதைகளைத் தொகுத்து முகந்து தீராக் கடல் எனும் தலைப்பில் டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடாக வெளியிட்டிருக்கிறார். தமிழ்க் கவிதையைப் போலவே அதன் மரபுக்காலம் தொட்டு ஆழங்காற்பட்டு கவிதையோடு தொடர்ந்து வாழ்க்கையை தகவமைத்துக் கொண்டு வந்த கவிஞர் சிற்பியின் கவிதைகளையும் முகந்து தீராக் கடல் என்றே சொல்லலாம். 1963ஆம் ஆண்டு வெளியான நிலவுப்பூ எனும் கவிதைத் தொகுப்பு இவரது முதல் கவிதைத் தொகுப்பு. 21ஆவது கவிதைத் தொகுப்பாக 2021ல் வெளியாகியிருக்கும் இந்தத் தொகுப்பின் தலைப்பு தான் ஒட்டு மொத்த சிற்பி அவர்களின் கவிதைகள் குறித்த என் அவதானமும். அது முகந்து தீராக் கடல் தான்.


ஓர் எழுத்து எங்கு நிற்கிறது என்பதும், எழுத்தாளன் எப்பக்கம் நிற்கிறான் என்பதிலும் இருக்கும் அறம் எழுத்தை, எழுத்தாளனை வணங்கவும் அல்லது விலக்கவும் நமக்கு இரு வாய்ப்புகளை வழங்கவல்லது. எவ்வளவு கற்றுணர்ந்தும் எவ்வளவு எழுதித் தீர்த்தும் இன்னும் அறத்தின் பக்கம், மானுடத்தின் பக்கம் நில்லாமல், சாதியின் பக்கம், அதிகாரத்தின் பக்கம் , பணத்தின் பக்கம் என அண்டிக் கிடக்கும் எழுத்தை காலம் எந்நாளும் கணக்கில் கொள்ளாது. மாறாக, எப்போதும் அறத்தின் பக்கம் நிற்கும் எழுத்து எப்படி இருக்கும் என்றால்…


                  மறுபக்கம்
என் பேச்சு 
தேசத் துரோகம்
என் எழுத்து
சட்ட மீறல்
என் கண்ணசைவு
உளவின் மொழி
என் கை உயர்த்தல்
புரட்சிக்கு அழைப்பு
என் அடிவைப்பு
போராட்ட அணிவகுப்பு
என்று பிதற்றுகிறாய்
எனில் அறிக நீ
நான் எச்சில் உமிழ்ந்தால்
அது சுனாமி ஆகும்
நான் சிறுநீர் கழித்தால்
அது பிரளயமாகும்
இது என் புகழ் மஞ்சரி அல்ல
இது என் புனைவுப் பெருமிதம்
அல்லவே அல்ல
நீ தீட்டிய பிரசார ஆயுதத்தின்
மறுமுனை இது


மறுபக்கம் என்கிற இந்தக் கவிதையின் முதல் பாதி ஒரு தன்னிலை விளக்கம் போலானது. அதிகாரம் போராடுபவர்களின் மீது ஏவப் பார்க்கும் ஆயுதத்தின் ஒரு முனை இது. ஆனால் அதன் மறுமுனை என கவிஞர் தரும் கவிதையின் அடுத்த பகுதி அடக்க அடக்கத் திமிர்ந்து எழும் சுதந்திர வேட்கை.


எழுத்தாளன் பஞ்சபூதங்களின் காதலன் ஆகாயத்தில் கற்பனைச் சிறகுகளால் பறந்து திரிபவன், எழுத்துகளில் நெருப்பை எப்போதும் கனன்றுகொண்டிருக்கச் செய்பவன், அவன் எழுத்து நீரென ஆற்றவும் வெள்ளமெனப் பாயவும் செய்யும், காற்றின் குணமும் உண்டு எழுத்துக்கு. தென்றல் புயல் என இரு முகங்கள் இருக்கவே செய்யும். பஞ்சபூதங்களின் காதலனானாலும் எழுத்தாளனுக்கு வேர் தன் நிலத்தில் இருக்கிறது என்பதை இந்தக் கவிதையில் உணரலாம்


                ஐம்பூதங்கள்


ஐம்பூதங்களில் உங்களுக்கு
எது பிடிக்கும் என்று கேட்கிறாய்
கண்ணின் தவமான
நீல ஆகாயம்
உயிரின் சரடான காற்று
அடி வானம் வரை
விரிந்து கிடக்கும் நிலம்
ஆயிரம் நாக்குகள் நீட்டி
ஆர்த்தெழும் நெருப்பு
கண்ணாடிப் பாதங்களால்
கிடந்தும் நடந்தும் வரும் நீர்
ஐந்தும்
தமக்கே உரிய
தனித்துவம் பூண்டவை
ஆயினும்
நிலமே எனக்கு இனியது
காரணம்
கருவறையானதும்
மணவறையானதும்
கல்லறையாவதும் அதுவே


தனக்குக் கருவறை மணவறை என வாழ்வைத் தந்து மரணத்திலும் தன்னைத் தாங்கிக் கொள்ளக் கூடிய நிலமே தனக்கு இனியது என்கிற இந்தக் கவிதையின் கிளைகளெங்கும் ஆயிரம் மலர்கள் மலர்கின்றன. நிலத்தின் மீதான பேராசை தான் நம்மை அடிமைப் படுத்தியது, நிலத்தின் மீதான அன்பும் நேசமும் தான் நாம் சுதந்திரமாக வாழும் இந்த வாழ்க்கையைத் தந்தது. நிலம் நம் வாழ்வுரிமை என்கிற மறைபொருளையும் இந்தக் கவிதையிலிருந்து வாசகன் கண்டுணர முடியும். 


மொழிக்கான இனத்துக்கான விடுதலையில் உலகம் முழுவதும் கோடானு கோடிப் போராளிகள் தங்களை ஒப்புக்கொடுத்தபடியே இருக்கிறார்கள். போராட்டக் களத்திற்கு வெளியேயும் பலர் தங்களது எதிர்ப்பை வலுவாக குரலாக, எழுத்தாக, கலையாக வெளிப்படுத்தியபடியே இருப்பார்கள். கலைஞர்களின் போராட்டக்களம் கலை தான். எழுத்தின் வழியே களத்தில் போராடும் போராட்டக்காரர்களுக்கு உத்வேகத்தைத் தந்த பல எழுத்தாளர்கள் உண்டு. அவ்வகையில் கவிஞர் சிற்பியின் இந்தக் கவிதை நிச்சயம் ஓர் உயிராயுதம் தான்.  


என் மொழிக்கில்லாமல்  எனக்கு மட்டும் சுதந்தரமா ?

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து
மொழியாம் என் மொழி
பள்ளிக் கூட வாசலில் கூடக். 
காலடி வைக்க முடியாதாம்
கிழித்தெறி புறப்பொருள் வெண்பா மாலையை-
எனக்கு மட்டும் எதற்குச் சுதந்தரம் ?
உயிரியல்  படிக்க வக்கில்லாததாம்
எடுத்தெறி அந்தக் குறுந்தொகை நெடுந்தொகை-
எனக்கு மட்டும் எதற்குச்  சுதந்தரம் ? 
பொறியியல்  படிக்கப் பொருத்தமில்லாத தாம்
போடு குப்பையில் புறநானூற்றை
எனக்கு மட்டும் எதற்குச் சுதந்தரம் ?
மேற்கோள் சொல்லத் தான் திருக்குறளாம்
பிறகென்ன நாக்கு வழிக்கவா முப்பால் சுவடி ?
எனக்கு மட்டும் எதற்குச் சுதந்தரம் ?
இந்தி தெரிந்தால் தான் இந்தியரென்றால்
இந்தியனாகி என்ன செய்யப் போகிறேன்?
கழிசடைத் தமிழனாகவேனும் 
காலம் கழிக்கிறேன் அதுவே போதும் !


ஓர் இனத்தை அழிக்க நினைக்கும் எந்த அதிகாரமும் முதலில் தன் வேலையைத் தொடங்குவது அந்த இனத்தின் தொன்மையை, அதன் மொழியை அழிப்பதில் தான். மனிதனின் குரல்வளையை நெறிப்பதன் மூலம் அவனது மொழியை நசுக்கி அவனை எளிதில் அடிமைப்படுத்தி விடலாம் என்பது அரசியல் சாணக்யத்தனம் ஒரு வகையில் அது அயோக்யத்தனமும் கூட. நம் மொழியின் மீது நமக்குத் தெரியாமலேயே மெல்ல விஷமெனப் பரவி வரும் அந்நிய மொழிகளின் ஆதிக்கம் நமது வேரை அரிக்கத் துவங்கி இருக்கிறது. வேரில் தொடங்கப்படும் இந்த அழித்தொழிப்பை நாம் மனமுவந்து வரவேற்றுவிட்டோம். விளைவுகள் பேரழிவென நிகழ்கையில் தான் நாம் நமது மொழியை இழந்து வாழ்வை இழந்து அடையாளத்தை இழந்து நிற்கக்கூடும். வருமுன் காத்துக்கொள் என படைப்பாளர்களும் கலைஞர்களும் சதா உரத்துக் கூவிய படியே இருக்கின்றனர். காலத்தின் காதுகளில் விழ. நம் மொழிக்கு இல்லாத சுதந்திரம் எனக்கு மட்டும் எதற்கு எனக் கேட்கும் ரெளத்திரம் கவிஞர் சிற்பியினுடையது. இந்த ரெளத்திரம் பாரதியின், பாரதிதாசனின் ஆன்மா கவிஞர் சிற்பிக்குள்ளிருந்து ஒலிக்கச் செய்கிறது பெருங்குரலாக.


சமூகத்துகான எழுத்து தான் எப்போதும் தனது என்பதை ஒரு தொகுப்பின் பல கவிதைகளில் உரக்கச் சொல்லியபடியே தான் நகர்கிறார்


காவல் நிலையங்களின்
குண்டாந் தடிகளில்
பறக்கிறது தேசத்தின் கொடி


நடப்பு அரசியலை, காவல் நிலைய மரணங்களை, அதிகாரத்திமிரை நோக்கி ஒரு பெரும் கல்லென எறிகிறார் கவிதையை என்பது இந்த வரிகளில் கூடத் தெரியவருகிறது. நம் காலத்து நாயகனாக, மக்கள் கவிஞனாக நாம் கொண்டாட வேண்டிய ஆளுமையல்லவா இவர் ? 


கவிஞர் சிற்பி எப்போதும் இயற்கையின் காதலர். அனலைக் கக்கும் அவரது எழுதுகோல் இயற்கையின் மடியில் ஒரு சின்னஞ்சிறு பறவையென உடல் குறுகிப் படுத்துக் கொள்ளும். பிரியத்தின் உடலமென குழைந்து போய்விடும்.


என்னொடு உரையாட
இயலாத துக்கத்தில்
விம்மலும் அழுகையுமாய்
விடைபெற்றுப் போனதோ
இரவு மழை


என்று அவர் ஒரு கவிதையில் பேசும் போது கேட்கிறது மழையின் விசும்பலொலி. எப்போதும் தன் கிராமத்து நதியை, ஆழியாற்றின் அழகை தனது நினைவுகளில் நிரப்பிய படியே இருக்கும் கவிஞரின் மனமெங்கும் இயற்கையின் மீதான பெருங்காதலும் பெரும் கருணையும் நிரம்பித் ததும்புவதை அவரது பல படைப்புகளில் காணலாம்.


கலை கலைக்காகவா மக்களுக்காகவா என்று தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் விவாதங்களினூடே கலையம்சம் குறையாது மக்களுக்கான கவிதையை எழுதிவிட முடியும் என வெகு சிலரே தங்கள் எழுத்தை நிரூபித்திபடி இருக்கின்றனர். கவிஞர் சிற்பியின் கவிதைகளை அவ்விடத்தில் வைத்துப்பார்க்கலாம். மரபின் கட்டுக்கோப்புகளையும் இசைத்தன்மையையும் எடுத்துக்கொண்டு, புதுக்கவிதையின் அழகியலோடு எழுதப்படும் கவிதைகள் இவருடையவை. இருபது கவிதைத் தொகுப்புகளின் வழியே தன்னை தமிழ்க்கவிதையுலகின் உயரிருக்கையில் அமர்த்திக்கொண்ட போதிலும் இருபத்தியொன்றாவது தொகுப்பில் இன்னும் இளமையாக, புதிய பாடுபொருட்கள் புதிய சொல்லாடல்கள் என முற்றிலும் புதிதாக வெளிப்பட்டு வியப்பிலாழ்த்துகிறார்.


முகந்து தீராக் கடல் ஒரு முது கவிஞரின் இளமைத் தாண்டவம். இளம் கவிஞர்களுக்கான ஒரு கரும்பலகையும் கூட.

ஒரு மாணவனாக நான் இந்தப் பலகையைப் பார்த்து நிறைய குறிப்பெடுத்துக்கொள்கிறேன். அது கவிஞர் சிற்பி அவர்கள் ஒரு கொடையென எனக்குத் தந்திருக்கும் வாய்ப்பு. நமக்கும் தந்திருக்கும் வாய்ப்பு… இன்னும் இருபது தொகுப்புகள் வேண்டும் இன்னும் இன்னும் கவிதைகளாக… 


முகந்துதீராக் கடல்

வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை

நூல் வாங்க தொடர்புக்கு :  87545 07070




கொலுசு இதழ் வேண்டுவோர் தொடர்பு கொள்ள : 9486105615