ஞாயிறு, 10 டிசம்பர், 2017

அன்பின் நிமித்தம் ...

கொலுசு மின்னிதழில் கவிஞர் மு.அறவொளி அவர்கள் எனக்கு போதித்தவர்கள் என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுதி வருகிறார். ஒவ்வொரு மாதமும் தன்னை பாதித்த மனிதர்களைப்பற்றிய பதிவுகளைப் பதிந்து வருகிறார்.

இந்த மாதம் அந்தப் பகுதியில் என்னைப் பற்றிப் பதிவு செய்துள்ளார்.
பகிர்கிறேன் இங்கு ...


அன்பின் நிமித்தம் நடைபெறும் அத்துணை செயல்களும் அன்பையே விதைக்கின்றன.

நன்றி திரு.அறவொளி அவர்களுக்கு.

இந்த உறவு நீளட்டும்

கொலுசு மின்னிதழில் வாசிக்க :

http://kolusu.in/kolusu/kolusu_dec_17/mobile/index.html#p=3

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மகாகவி

அன்பு செய்தல்

இந்தப் புவிதனில் வாழும் மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ? 

வேறு

மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்குமென்றே?
யானெதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
என்மதத்தைக் கைக் கொண்மின்;பாடுபடல்வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்;உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!


மனிதர்க்குத் தொழில் இங்கு அன்பு செய்தல் மட்டும் தான் எனச் சொன்ன பாரதியின் பிறந்தநாள் இன்று.

ஒவ்வொருவருக்கும் சக மனிதர்களின் மீதும் சக உயிரினங்களின் மீதும் அன்பு பெருகுமாயின் இந்த உலகம் எத்துணை அழகாய்ச் சுழலும் ? 

சக மனிதனின் மீது நேர்மையான அன்பு நீடிக்குமானால் சமுதாயத்தின் எந்தப் பிறழ்வுகளும் , கொடுமைகளும் , இன்னல்களும், தீமைகளும் சாத்தியமற்றுப் போய்விடும்.

ஆகவே தான் அன்பு செய்தால் போதுமென்றான் பாரதி.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மகாகவி ...

அன்பைத்தான் படைப்புகளின் வழியும் உரையாடல்களின் வழியும் செயல்பாடுகளின் வழியும் தொடர்ந்து தேடிக்கொண்டும் விதைத்துக்கொண்டுமிருக்கிறோம் ..

திங்கள், 4 டிசம்பர், 2017

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் விருது

நண்பர்களுக்கு வணக்கம்,

இன்னுமோர் மகிழ்வான செய்தி

தேனியில், தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பை நடத்தி வருகிறார் தோழர் விசாகன்.

ஒவ்வோர் ஆண்டும் சிறந்த படைப்புகளுக்கு, படைப்பாளர்களுக்கு, இலக்கிய செயல்பாட்டாளர்களுக்கு என பல்வேறு விருதுகளை தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை வழங்கி  கெளவரவித்து வருகிறது. சென்ற ஆண்டு எனக்கு வளரும் படைப்பாளர் விருது வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு சிறந்த இலக்கிய செயல்பாட்டாளருக்கான எச்.ஜி.ரசூல் நினைவு விருது எனக்கு வழங்கப்படுகிறது.

அதைவிடவும் மகிழச் செய்வது பொள்ளாச்சி இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் கிடைக்கப்போகும் விருதுகள் பற்றிய அறிவிப்பு

பொள்ளாச்சி இலக்கிய வட்டத் தலைவர் கவிஞர் க.அம்சப்ரியா மற்றும் கவிஞர் சோலைமாயவன் . கவிஞர் ஆன்மன், கவிஞர் யாழ் தண்விகா ஆகியோருக்கு அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருது வழங்கப்படுகிறது.

கவிஞர் ஜெ.நிஷாந்தினி, கவிஞர் ச.ப்ரியா மற்றும் கவிஞர் வே.கோகிலா ஆகியோருக்கு வளரும் படைப்பாளர் விருது வழங்கப்படுகிறது.

மக்கள் கவி இன்குலாப் நினைவு படைப்பாக்க மேன்மை விருது 
கவிஞர் செங்கவின் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் விருதுப்பட்டியலில் 118 படைப்பாளர்கள் இருக்கிறார்கள். பேராச்சர்யமும் பேரானந்தமுமாக இருக்கிறது. இத்துணை படைப்பாளர்களையும் தேடிப்பிடித்து அவர்களைச் சிறப்பு செய்வது மிகப்பெரிய மகத்தான காரியம். விசாகனுக்கும் , தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்புக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும்.

விருது பெறுகின்ற அத்துணை படைப்பாளர்களும் மனதுக்கு நெருங்கிய நண்பர்கள், மதிக்கும் ஆளுமைகள். இவர்கள் அனைவரையும் விருது விழாவில் ஒருங்கே சந்திக்க வாய்த்தாலே அது பெரிய கொண்டாட்டம் தான். 

விருது பெறுகிற நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
தேர்வுக்குழுவினருக்கும் தோழர் விசாகன் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி...


செவ்வாய், 14 நவம்பர், 2017

குழந்தைகள் தினம்

Inline image 1


ஒரு கதை கேட்கிறது குழந்தை
என்னிடம் ஓராயிரம் கதைகள் இருப்பினும்
குழந்தைக்கான ஒரு கதையை
என் மனப் பாத்திரத்தின் அடியாழத்தில் துழாவி
எடுக்க வேண்டியே இருக்கிறது
அந்தக் கதை நான் என்
பால்யத்தில் சேமித்தது
அந்தக் கதை என்
பால்யத்தைப் பாதுகாத்தது
அந்தக் கதையைக் குழந்தைக்குச் சொல்ல
நானும் ஒரு குழந்தையாகிறேன்
மேலும்
நான் என் அப்பத்தாவுமாகிறேன்

---

வாசலில் விளையாடிக் கொண்டிருக்கிற
குழந்தை
வாசலுக்கு அழைத்து வந்திருக்கிறது
ஒரு வனத்தை
ஒரு காய்கறித் தோட்டத்தை
ஒரு கனவு இல்லத்தை

மேலும் 
ஒரு அழகான வாழ்வையும்
அதனினும் அழகான மனிதர்களையும்
இந்தக் குடிசை
வாசலுக்கு..

---

குழந்தைகள் தினத்தின் பொருட்டேனும்
புத்தகங்கள்
எழுதுகோல்கள்
சங்கிலிகள்
ஆயுதங்கள்
வன்முறைகள்
அத்துணை தளைகளையும்
களைந்து விட்டு
மீண்டும் அந்தச் சிறகுகளைப் 
பொருத்திப் பார்க்கலாம்
வானம் அதிர அதிர

----

ஒரே ஒரு முத்தத்தை
இடமாற்றம் செய்வதன் மூலம்
இல்லாமல் செய்கிறார்கள் குழந்தைகள்
வெற்று மனது ஓயாமல் எழுப்பிக் கொண்டிருக்கும்
வலியின் சத்தத்தை

----

உதிர்ந்து சுழன்று விழும்
ஒரு இலையை
ஓடோடிப் போய்
ஏந்திக் கொள்கிறது குழந்தை
பச்சையம் மங்கிக் கொண்டிருக்கும்
அவ்விலையில் 
மீண்டும் துளிர்க்கத்துவங்கும் ஒரு வனம்

--
அதோ உங்கள் முற்றத்தில்
கைகளை அகல நீட்டி
மழைத்துளிகளைத் தெளித்து
விளையாடியபடியிருக்கும் உங்கள்
குழந்தையின் பிஞ்சுப் பாதங்களில்
கிடத்தியபடித் திரும்புகிறேன் 
    உங்களுக்கென
கொண்டு வந்த வன்மத்தை

வியாழன், 28 செப்டம்பர், 2017

பச்சை இதயக்கறி

எனக்கு இருப்பது இரண்டே கைகள்
அதை அகல விரித்துத்தான் உங்களை
அணைத்துக் கொள்கிறேன்.

எனக்கு இருப்பது இரண்டே கால்கள்
உங்களுக்காகவும் உங்களுடனும்
நடந்து ஓய்கிறேன்

எனக்கு இருப்பது இரண்டே காதுகள்
உங்களின் குரலைத்தான்
அதிகம் கேட்கிறேன்

ஆனால் பாருங்கள்
பயன்பாடுகளையெல்லாம் புறந்தள்ளி
இருக்கும் ஒற்றை இதயத்தைத்தான்
ஓயாமல் குத்தி
ரணமாக்கிவிடுகிறீர்கள்

போனால் போகட்டும்

கொஞ்சம் உப்பும் மிளகுத்தூளும்
தூவுங்கள் கீறல்களில்

பச்சை இதயக்கறி
அவ்வளவு மகத்தானதாம் உடலுக்கு

நீங்கள் இன்னும் வலுவாகுங்கள்

திங்கள், 18 செப்டம்பர், 2017

கவிதைகளுக்கான அங்கீகாரம் - த.மு.எ.க.ச விருது விழா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கும் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த கவிதைத் தொகுப்புக்கான வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் - செல்லம்மாள் ப.ஜெகந்நாதன் நினைவு விருது கடந்த 16.09.2017 அன்று எனக்கு வழங்கப்பட்டது.

எனது அத்துனை இன்ப துன்பங்களிலும் உடன் இருக்கும் மாமா , ச.தி.செந்தில்குமார் அவரும் நானும் சென்றிருந்தோம்.
விழா நிகழ்வு முழு நாள் நிகழ்வாகத் திட்டமிடப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. நாகர்கோவிலில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில்  காலை முதல் மாலை வரை விருது பெற்ற ஒன்பது நூல்களின் ஆய்வரங்கம் நடைபெற்றது.

எனது ஆதிமுகத்தின் காலப்பிரதி நூலின் ஆய்வரங்கத்துக்குக் கவிஞர் குமரித் தோழன் தலைமை தாங்கினார்.  கவிதைத் தொகுப்பின் அறிமுகத்தையும் எனது நூல் தேர்வானதன் காரணங்களையும் தோழர் , கவிஞர் அ.லெட்சுமி காந்தன் மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார். எனது சில கவிதைகளைக் குறிப்பிட்டு வாசித்து அறிமுகம் செய்தவர், நான் உணர்ந்து எழுதிய ஒரு கவிதையை வாசிக்கையில் தானும் உணர்ச்சி வசப்பட்டார்.
உண்மையையும் அனுபவங்களையும் நேர்மையாக எழுதும் போது தான் இவ்வாறான தருணங்கள் வாய்க்கின்றன என்பதை உணர்ந்தேன்.

அந்தக் கவிதை இதோ 

வாழ்வை எதை விடவும்
அதிகம் வெறுத்த அம்மா
அடுக்களையில் மறைவாக
ஒளிந்து
சாணிப்பவுடரைக் 
குடிக்கப் போன சமயம்
எனக்கொரு வாய் 
குடுங்க அம்மா என்று
கேட்ட போது தான்
அவள் சாவை விடவும்
கொடுமையான இந்த
வாழ்வைத் தேர்ந்தெடுத்தாள் 
அதன் பின்னர் எனது ஏற்புரை. வழக்கத்தினும் வழக்கமாக என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது நான் ஏன் கவிதை எழுதுகிறேன் என்று. வழக்கத்தினும் வழக்கமாக நான் அதற்கு பதில் சொல்கிறேன் என் ஆத்ம திருப்திக்காக என்று. ஆனால், இந்த ஆத்மாவைத் திருப்திப் படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. அதற்கான சிறு சிறு முயற்சிகள் தான் என் கவிதைகள். உண்மையையும், அனுபவங்களையும் சொற்களாக்கிக் கவிதை செய்கிறேன். எந்தத் திட்டமிடலும் எந்த எதிர்பார்ப்புகளும் எப்போதும் இருப்பதில்லை.


மாலை கிருஷ்ணன் கோவிலில் திறந்த வெளி மைதானத்தில் விருது வழங்கும் விழா மக்கள் மத்தியில் பிரம்மாண்டமாக ஏற்பாடாகியிருந்தது.
நிகழ்வின் துவக்கத்தில் களரி கலைக்குழுவினரின் பறையிசை நடனம், கும்மியாட்டம் போன்ற நிகழ்வுகள் மேடையை அதிரச் செய்தன.

ஒன்பது விருதாளர்களையும் ஒரே மேடையில் அமரவைத்து விருதளித்தார்கள். த.மு.எ.ச மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் விருதளித்து வாழ்த்துரை நிகழ்த்தினார்.

 
                                    

இந்த விருது இன்னும் எழுத வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்திருக்கிறது. சோர்ந்து கிடக்கும் எனக்கு ஒரு பிடி உற்சாகத்தைக் கையளித்திருக்கிறது.

த.மு.எ.க.ச நிர்வாகிகளுக்கும், விருது தேர்வுக்குழுவினருக்கும், உடன் இருக்கும் நண்பர்களுக்கும் எப்போதைக்குமான அன்பு.

புதன், 13 செப்டம்பர், 2017

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் விருது 2016

நண்பர்களுக்கு வணக்கம்

மிக்க மகிழ்வான செய்தி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கும் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த கவிதைத் தொகுப்புக்கான வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் - செல்லம்மாள் ப.ஜெகந்நாதன் நினைவு விருதுக்கு எனது மூன்றாவது தொகுப்பான ஆதி முகத்தின் காலப்பிரதி கவிதை நூல் தேர்வாகியிருக்கிறது.

இந்தத் தருணம் மனநிறைவாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது. உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் அது இரட்டிப்பாகிறது.

ஆதிமுகத்தின் காலப்பிரதி எனது மூன்றாவது கவிதை நூல். இந்த நூலுக்கு இது மூன்றாவது விருது.

முதலிரண்டு விருதுகள் :
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து வழங்கும் 2016ஆம் ஆண்டுக்கான் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான கே.சி.எஸ் அருணாசலம் நினைவு விருது 2016 
  • நாங்கள் இலக்கியகம் வழங்கும் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த கவிதைத் தொகுப்புக்கான இரண்டாம் பரிசு

விருது வழங்கும் விழா 16.09.2017 அன்று நாகர் கோவிலில் - கிருஷ்ணன் கோவில், கே.முத்தையா திடலில் திறந்த வெளி அரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. அன்று காலை முதல் விருதுபெற்ற நூல்களின் அறிமுக நிகழ்வுகள் முழுநாளும் நடைபெற இருக்கின்றன. இத்துடன் அழைப்பிதழ் இணைத்துள்ளேன்.
வாய்ப்புள்ள நண்பர்கள் அவசியம் வருக
சிறந்த நாவலுக்கான விருது பெறும் தோழர் இரா. முருகவேள்
சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது பெறும்
தோழர் அ.கரீம் Kareem Aak
சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது பெறும்
தோழர் அப்பணசாமி Appanasamy Apps
மற்றும் உடன் விருதுபெறும் எழுத்தாளர்கள் , சி. லஷ்மணன்- கோ.ரகுபதி,முனைவர் கா.அய்யப்பன்,
உதயசங்கர், ஆர்.பாலகிருஷ்ணன் , இரா.வேங்கடாசலபதி அனைவர்க்கும் என் மனம் நிறைந்த
நல்வாழ்த்துகள்.

உடன் இருக்கும் நண்பர்கள் அனைவர்க்கும் என் மனமார்ந்த நன்றி.

அன்பு செய்வோம்.

திங்கள், 11 செப்டம்பர், 2017

வாய்பிளந்து காத்திருக்கும் நீலத்திமிங்கலங்கள்

கொலுசு மின்னிதழில் நான் எழுதும் கட்டுரைத்தொடரான தேநீர் இடைவேளையில் இந்த மாதம் வெளியாகியிருக்கும் கட்டுரை ...

தேநீர் இடைவேளை # 15

வாய்பிளந்து காத்திருக்கும் நீலத்திமிங்கலங்கள்

செல்பேசியில் எனக்கே தெரியாத பல வேலைகள என் பையன் பார்க்கிறான். செல்ல அவன் கையில குடுத்தா அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு மேய்ஞ்சுடறான்.

என் பொண்ணுக்கு செல்லு குடுத்தா போதும் அழவே மாட்டா அமைதியா படுத்திருப்பா.

இப்படியான பெருமையான தம்பட்டங்களை அடிக்கடி கேட்டிருக்கலாம். இதெல்லாம் பெருமையா என்ன ?

செல்பேசிகளால் உறக்கம் போகின்றன, கண்கள் போகின்றன, மனம் அமைதியிழக்கிறது, செல்பேசிகளை சட்டைப்பையில் வைத்தால் இதயத்துக்கு பாதிப்பு, காற்சட்டைப் பையில் வைத்தால் ஆண்மை போகும் போன்ற தொலை தூர பாதிப்புகளையெல்லாம் நிறையக் கேட்டுவிட்டோம். இவற்றையெல்லாம் தாண்டி செல்பேசிகள் உயிரைப் பறிக்கும் கொலைக் கருவிகளாக மாறி வெகுநாட்களாகின்றன.

கடலலைகளுக்கு முன்னால், மலையுச்சியில், புகை வண்டிப்பாதையில் என ஆபத்தான பல இடங்களில் சுயமி எடுப்பதாக உயிரை இழந்தவர்கள் எத்தனை பேர். வாகனங்கள் ஓட்டும் போது செல்பேசியில் பேசிக்கொண்டும், குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டும் கவனக்குறைவாக ஓட்டி விபத்துகள் ஏற்படுத்தி உயிரை விட்டதுடன் உயிர்களை எடுப்பவர்களும் எத்தனை பேர் ?  இவையெல்லாம் விபத்துகள். செல்பேசிகளால் தற்கொலைகள் நிகழுமா? நிகழும். நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.சமீப நாட்களாக செய்திகளில் அடிபடும் ஒரு விளையாட்டின் பெயர் ப்ளூ வேல் கேம். இதைத் தற்கொலை விளையாட்டு என்றும் இணையத்தில் சொல்லிக் கொள்கின்றனர். இது மற்ற விளையாட்டுகளைப் போல ஒரு அப்ளிகேசன் அல்ல, ஆன்லைனில் விளையாடும் விளையாட்டு .இளைஞர்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் இந்த விபரீத விளையாட்டு ரஷ்யாவில் 2013-ல் உருவாக்கப்பட்டது.  இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு அட்மின்களிடமிருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்படும். மொத்தம் ஐம்பது கட்டளைகள். முதலில்  அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஆன்லைனில் வரும் வீடியோக்களைப் பார்க்க வேண்டும், புகைப்படமெடுத்துப் பதிய வேண்டும், ஏதாவது மொட்டை மாடிக்கோ அல்லது கடல் அலைகளிலோ நின்று கொண்டு சுயமி எடுத்து  வெளியிட வேண்டும் என்பது போல ஆரம்பிக்கும் இந்தக் கட்டளைகள் போகப் போக கத்தியால் கையைக் கீறிக்கொள்ள வேண்டும், கையில் திமிங்கல உருவத்தை பிளேடால் கீறி வரைந்து அதைப் புகைப்படமெடுத்துப் பதிய வேண்டும் என்று நீண்ட பின்பு இறுதி ஐம்பதாவது கட்டளை என்ன தெரியுமா ? மொட்டை மாடியிலிருந்து குதித்து அல்லது வேறு வகையில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.  நம்ப முடிகிறதா ? யாராவது இதற்கு உடன்படுவார்களா ? ஆனால் உண்மை தான். இப்படித்தான் நடக்கிறது இந்த விளையாட்டு. இதிலும் நிறைய இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஈடுபடுவதாகக் கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது.
இந்த விளையாட்டால் கடந்த 3 ஆண்டுகளில் ரஷ்யாவில் மட்டுமே 130 பேர் தற்கொலை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனா, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த விளையாட்டு, தற்போது இந்தியாவிலும் விபரீதம் காட்ட ஆரம்பித்திருக்கிறது.

கேரள மாநிலம் பாலக்காடு அருகிலுள்ள  பள்ளிக்குளம் என்ற ஊரில் வசித்துவந்த ஆஷிக். கல்லூரியில் பி.காம்., இறுதி ஆண்டு படித்து வந்தார். கடந்த மார்ச் 30-ம் தேதி, தனது வீட்டுக்குள்ளேயே அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த மரணத்துக்குக் காரணம் ப்ளூ வேல் என்பது தான் கேரளத்தையே அதிரவைத்துக் கொண்டிருக்கிறது.
இந்தச் சம்பவம் நடப்பதற்கு ஒரு சில மாதங்களாகவே, ‘நான் இருந்து என்ன செய்யப்போகிறேன். தற்கொலை செய்யப்போகிறேன்!’ என்றெல்லாம் அடிக்கடி பிதற்றி வந்துள்ளார் ஆஷிக். இரவு நேரங்களில் ஆன்லைன் ‘கேம்’கள் விளையாடுவதும், அடிக்கடி தனிமை வயப்படுவதுமாய் இருந்திருக்கிறார். இந்த விவகாரம் கேரள ஊடகங்களில் செய்திகளாக விரிந்ததை அடுத்து, திருச்சூரில், எர்ணாகுளத்தில், கோழிக்கோட்டில் என இதுவரை 5 பேருக்கு மேல் ‘ப்ளூ வேல்’ விளையாட்டில் சிக்கி தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கேரளத்தில் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஊரெல்லாம் சுற்றிக்கொண்டிருந்த நீலத் திமிங்கலம் சென்னையையும் தாக்கியுள்ளது இப்போது. விருகம்பாக்கத்தில் கல்லூரி மாணவி ஒருவர் 7வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மக்களை அதிர வைத்துள்ளது. படுகாயமடைந்த மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் மும்பையில் 14 வயது சிறுவன் ஒருவன், வீட்டின் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறான். இந்த விளையாட்டை உருவாக்கிய ரஷ்யாவைச் சேர்ந்த ஃபிலிப் புடேக்கின் என்ற நபர் கடந்த ஆண்டே கைதுசெய்யப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள். இந்த விபரீத விளையாட்டை ஏன் உருவாக்கினாய் என்று அவரிடம் போலீஸார் விசாரித்தபோது, ’எந்தவித மதிப்பும் இல்லாதவர்களைத் தற்கொலை செய்துகொள்ள வைத்து சமூகத்தைச் சுத்தப்படுத்த வேண்டும். அதற்காகவே இந்த கேம் உருவாக்கினேன்’ என்று  சொல்லியிருக்கிறான் ஃபிலிப் புடேக்கின். பிலிப் கைதாகி உள்ளே இருந்தாலும் இந்த விளையாட்டு இணையத்தில் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. தடுக்க முடியாமல் தவிக்கிறது சைபர் க்ரைம்.

ஹேஷ் டேக் மூலமாக, வித விதமான தொடர்புகளிலிருக்கிறார்கள் இந்த விளையாட்டை விளையாடுபவர்கள். இவர்கள் யாரை, எப்படி இந்த விளையாட்டின் உள்ளே இழுக்கிறார்கள், அவர்களுக்கு என்ன மாதிரியாக தூண்டில் வீசுகிறார்கள் என்பது பெரிய மர்மமாகவே உள்ளது. ஆனால், தனிமை,வெறுமை,ஏமாற்றம் என ஏதாவது ஒரு வகையில் மனச்சோர்வுடன் இருப்பவர்களைக் குறி வைக்கிறார்கள். ஒருமுறை இந்த விளையாட்டில் ஈடுபட்டு அவர்களது சுய விவரங்களை அளித்துவிட்டால் போதும், மொத்தக் கணக்கையும், சுய விவரங்களையும் திருடிக்கொள்கிறார்கள், வைரஸ்களை அனுப்பி.

இந்த விளையாட்டின் ஐம்பது டாஸ்க்குகள் என்ன தெரியுமா ? 1) ஒரு ரேஸர் கொண்டு கையில் "f57" என்று செதுக்கி, அதை புகைப்படமெடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும். 2) அதிகாலை 4.20 மணிக்கு எழுந்து, கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் சைக்கடெலிக் (மாயத்தோற்றமான) மற்றும் பயமுறுத்தும் வீடியோக்களை பார்க்க வேண்டும். 3) ஒரு ரேஸர் கொண்டு நரம்புகளோடு சேர்த்து மணிக்கட்டை வெட்டிக்கொள்ள வேண்டும், ஆனால் மிகவும் ஆழமாக வெட்டிக்கொள்ள கூடாது.வெறும் 3 வெட்டுக்கள் நிகழ்த்தி அதை புகைப்படம் எடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.4)காகிதத்தில் ஒரு திமிங்கிலத்தை வரைந்து, அதை புகைப்படம் எடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும். 5) நீங்கள் ஒரு திமிங்கிலமாக மாற தயாராக இருந்தால், காலின் மீது "YES" என்று வெட்ட வேண்டும். இல்லையென்றால் - கைப்பகுதியில் பல முறை வெட்டிக்கொள்ள வேண்டும்


ஐந்துக்கு மூச்சு வாங்கி உடல் நடுங்குகிறதா ? அடுத்தடுத்த டாஸ்க்குகள் இன்னும் பயங்கரம், அதிகாலையில் மிக உயரமான கூரை மீது ஏறி புகைப்படம் எடுக்க வேண்டும், உடலில் காயங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், நள்ளிரவில் சுடுகாட்டுக்குச் சென்று படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என நீள்கிறது. யாராவது அதிகாலை 4 மணிக்கு எழுவதையோ அல்லது கை கால்களில் கீறல்களுடன் இருந்தாலோ கொஞ்சம் உஷாராக கவனிக்க வேண்டும் போல.

ப்ளூவேல் விளையாட்டின் பின்னணியில் இருந்து தற்கொலை தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்து வந்த 17 வயது ரஷ்ய சிறுமியை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.இந்த சிறுமிதான் உத்தரவுகளுக்கு கீழ்படியாவிட்டால் உறவினர்களையோ, அல்லது நெருக்கமானவர்களையோ கொன்று விடுவதாக ப்ளூவேல் விளையாட்டை விளையாடி வந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்து வந்தவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்
கைது செய்யப்பட்ட சிறுமியும் ஆர‌ம்பத்தில் ப்ளூவேல் விளையாடியவர்தான் என்றும், ஆனால் கடைசி கட்ட சவாலை தேர்ந்தெடுக்காமல், மற்றவர்களை தற்கொலைக்கு தூண்டும் அட்மினாக செயல்படும் பணியை தேர்ந்தெடுத்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இன்னும் எத்தனை பேர் இதற்கு பலியாகியிருக்கிறார்களோ, காத்திருக்கிறார்களோ தெரியவில்லை.
இந்த விளையாட்டில் அதிகமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தான் ஈடுபடுகிறார்கள்.

இந்த வயதினருக்கு ஒரு அசட்டு தைரியம் இருக்கும். அது இந்த விளையாட்டில் ஈடுபடச் செய்துவிடுகிறது.
ஆரம்பத்தில் உங்கள் ஆர்வத்தை தூண்டுவது போலவும், உங்களைச் சுற்றியிருப்பவர்களை தவிர்த்து தனிமையில் உங்களை இருக்கச் செய்திடும். பிறரது எதிர்ப்பையும் மீறி இந்த விளையாட்டினை விளையாட ஆர்வமாக இருக்கிறீர்களா என்று கண்காணிக்கும். ஆரம்பத்திலேயே கொடூரமான பேய்ப்படங்களை அதிகாலையிலேயே பார்ப்பதால் அது ஆழ்மனதில் பதிந்து இயற்கையிலேயே நமது வக்கிர எண்ணங்களையும் வெறுப்புகளையும் கோபத்தையும் தூண்டிவிடுகிறது.

உங்களது விருப்பு வெறுப்புகளை தாண்டி சொல்லப்படும் டாஸ்க்குகளை எல்லாம் செய்கிறீர்களா என்று கண்காணிக்கும். இப்படி உங்களைச் சுற்றியிருக்கும் ஓர் வட்டத்தை முற்றிலும் அழித்த பிறகு உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கும்
ப்ளூ வேல் விளையாட்டுக்கு மாற்றாக மனதில் அன்பை விதைக்கும் விளையாட்டாக பிங்க் வேல் என்று ஒரு விளையாட்டினை உருவாக்கியிருக்கிறார்களாம் இப்போது. இது எவ்வளவு தூரம் நன்மை பயக்கும் என்று சொல்வதற்கில்லை.

அடிப்படையில் குழந்தைகளின் மனதில் அன்பையும் அறத்தையும் விதைக்கும் பணிகளைச் செய்தாலே இம்மாதிரியான கொடூரங்களிலிருந்து தற்காத்துக்கொள்ளும் சக்தியை அவர்களுக்கு நாமே வழங்கிவிட முடியும். கதைகளின் வழியாக , பாடல்களின் வழியாக, உரையாடல்களின் வழியாக நாம் அவர்களிடம் அவற்றை விதைக்க வேண்டும். மாறாக நாம் அவர்களை அழுத்தம் தந்து கசக்கிப் பிழிகிறோம். படிக்கச் சொல்லியும் மதிப்பெண்கள் எடுக்கச் சொல்லியும் ஆகப்பெரும் வன்முறைகளை நிகழ்த்துகின்றோம். லாப நோக்கில் பிரதிபலன் பார்த்து வளர்க்கப்படும் சமூகம் சக மனிதனுக்கும் தனக்குமே நல்லது செய்ய வேண்டும் என எப்படி எதிர்பார்ப்பது.
பள்ளிகளில், கல்லூரிகளில் நமது மொழியை, பண்பாட்டை, நீதிநெறியை, சொல்லிக்கொடுக்கும்படியான ஒரே ஒரு வேளை வகுப்பிருந்தால் கூடத்தான் நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம். நடக்குமா ? நூற்றுக்கு நூறு தான் நமது குறிக்கோள். மருத்துவம் தான் நமது லட்சியம். பணம் புகழ் சம்பாதிப்பது மட்டுமே நமது வாழ்க்கை. சாதாரணங்களுக்கு இங்கே இடமே இல்லை. பிறகெப்படி நாம் இம்மாதிரி அநீதிகளிடமிருந்தெல்லாம் விடியலைப் பெறுவது ?

நமது பிள்ளைகளை கவனிக்க, கண்காணிக்க அவர்களோடு நேரம் செலவிட, அவர்களோடு பேச, அவர்களோடு அமர்ந்து ஒரு வாய் சோறுண்ண, அவர்களுக்கு பிடித்தமான தருணங்களைப் பரிசளிக்க நம்மிடம் நேரமில்லை. மனமுமில்லை. நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம் கண்ணுக்கே தெரியாத இலக்குகளுடன் அசுரவேகத்தில்.

நாம் தயாராயிருக்க வேண்டியது, இந்த நீலத்திமிங்கலத்திடமிருந்து தப்பிப்பதற்கு மட்டுமல்ல. இதுபோல எண்ணற்ற திமிங்கலங்களும், சுறாக்களும் நமது வாழ்வையும், நமது பிள்ளைகளின் வாழ்வையும் பலி வாங்க வாய் பிளந்து காத்துக் கிடக்கின்றன. அவற்றிடமிருந்து தப்பி வாழ்வதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

கொலுசு மின்னிதழில் வாசிக்க

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

தழல் - முத்தமிழ் மன்ற துவக்க விழா

பல்லடம் கண்ணம்மாள் நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் சுப்ரமணியம் அய்யா அவர்கள் தீவிர வாசகர். பல்வேறு எழுத்து ஆளுமைகளுடனும் நட்பைப் பேணுபவர். ஆங்கில வழிப் பள்ளி நடத்தினாலும் தமது மாணவர்களுக்கு தமிழ்ப்பற்றை தொடர்ந்து ஊட்டி வருபவர். அவரது தலைமையில், அவரது பேத்தியும் பள்ளியின் நிர்வாக அறங்காவலருமான செல்வி அபராஜிதா பள்ளியைத் திறம்பட நடத்தி வருகிறார்கள்.
தோழி கவிஞர் செமிழியின் மூலமாக அவர்களது அறிமுகம் கிடைத்தது. பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் குழந்தைகள் கலைக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சுப்ரமணியம் அய்யா அவர்கள் தொகுத்த பாலும் தெளிதேனும் எனும் நீதி நூல் தொகுப்பு அன்பளிப்பாக அளித்தார்கள்.

பள்ளியில் தமிழ் மன்றம் துவங்க வேண்டும் அதைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பது அவர்களது விருப்பம். கடந்த 19.08.2017 அன்று தழல் பாரதி ஜெயகாந்தன் இலக்கிய மன்றம் என்ற பெயரில் பள்ளியில் இலக்கிய மன்றம் துவங்கப்பட்டது.

பள்ளியின் இலக்கிய மன்றத்துக்கு என்னைத் தலைவராகவும் கவிஞர் செமிழியை செயலாளராகவும் நியமித்திருக்கிறார்கள்.

அன்றைய நிகழ்வின் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களும் , விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் அய்யா அவர்களும் வந்திருந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.நிகழ்வுக்காக , பள்ளிக்குள் நுழையும் போதே பிரம்மாண்ட ஏற்பாட்டோடு வரவேற்பு காத்திருந்தது. மாணவர்கள் அணிவகுத்து நின்று வரவேற்றனர். ஒவ்வொருவரும் எங்களைப் பார்த்து வணக்கம் வாழ்க வளமுடன் என்று சொல்லி வரவேற்றது புதுமையாகவும் நெகிழ்வாகவும் இருந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு துவங்க, சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றினர், சிறப்பு விருந்தினர்க்குச்  பொன்னாடை அணிந்து மரியாதை செய்யப்பட்டது.


நிகழ்வின் சிறப்புரையில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் பாரதியையும் ஜெயகாந்தனையும் மிகச்சிறப்பாக மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். பாரதி ஏன் இன்றைக்குமான மகாகவி என்பதற்கான சான்றுகளை அவரது நெருப்பு வரிகளை முன்வைத்து உரை நிகழ்த்தினார்.

திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்கமலைகள் உடைந்து -வெள்ளம் 
பாயுது பாயுது பாயுது - தாம்தரிகிட
தக்கத் ததுங்கிட தித்தோம் - அண்டம்
சாயுது சாயுது சாயுது - பேய் கொண்டு
தக்கை யடிக்குது காற்று - தக்கத்
தாம் தரிகிட தாம் தரிகிட தாம் தரிகிட தாம் தரிகிட

வெட்டியடிக்குது மின்னல் - கடல்
வீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம் -கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய - மழை
எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!

பாரதியின் இந்த வரிகளை என்ன குரலில் எவ்வாறு வாசிக்க வேண்டும் என அவர் சொல்லிய விதம் மெய்சிலிர்க்க வைத்தது. அவ்வாறு வாசிக்கச் சொல்லித்தான் தனது தமிழ் ஆசிரியர் சொல்லித் தந்ததாக சொன்னார்.

ஜெயகாந்தன் ஏன் எழுத்தாளர்களில் ஒரு சிங்கத்தைப் போல மதிக்கப்பட்டார் என்பதற்கான அவரது வாழ்வில் நடந்த சில சம்பவங்களின் மூலமாக சிறப்பாக எடுத்துரைத்தார். பாரதியையும் ஜெயகாந்தனையும் தெரிந்திருந்தாலும் தெரியாமல் இருந்திருந்தாலும் இந்த உரை நிச்சயம் ஒரு திறப்பு. இதன் வாயிலாக நல்ல மாணவர்கள் பாரதியையும் ஜெயகாந்தனையும் தேடி வாசிப்பார்கள்.

வேலாயுதம் அய்யா அவர்கள் தமது சுருக்கமான வாழ்த்துரையில் மாணவர்களின் வாசிப்பு பற்றியும் புத்தகங்கள் குறித்தும் உரையாற்றினார். பள்ளியின் நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் இருக்கின்றன அதில் ஒரு ஆண்டில் எந்த மாணவர் நிறைய புத்தகங்கள் எடுத்து வாசிக்கின்றாரோ அவருக்கான ஒரு சிறப்புப் பரிசை வழங்குவதாக அறிவித்தார்.


எனது உரையில், தழல் என்ற அமைப்பின் அவசியத்தையும், அதன் நோக்கத்தையும் எடுத்துக்கூறியதோடு, வாசிப்பின் அவசியத்தையும் அது தரும் இன்பத்தையும் சொன்னேன்.


கவிஞர் செமிழி, சூழலியல் விழிப்புணர்வு ஏற்படும் விதமாக காஸ்டிக் சோடா தயாரிப்பு நிறுவனத்தின் தீமையை, அது தரும் பாதிப்புகளை எடுத்துரைத்து மாணவர்களுக்கு சமூகம் சார்ந்த விழிப்புணர்வும் அக்கறையும் இருத்தல் வேண்டும் என வலியுறுத்தினார்.மாணவிகளின் பரதம், தமிழின் வரலாற்றையும் பெருமையையும் எடுத்துரைத்த மாணவி ரக்‌ஷனாவின் அழகிய தமிழ் உரை, மாணவர்களின் யோகா கலை நிகழ்வு என ஒரு பரிபூர்ண நிகழ்வாக இருந்தது. நிகழ்வைத் தொகுத்தளித்த தமிழாசிரியை ஷர்மிளா அவர்களின் தமிழும் உச்சரிப்பும் சிறப்பாக இருந்தது.

துவக்கம் சிறப்பாக இருக்கிறது இனி தொடர்ந்து செயல்பாடுகளின் மூலம் நிறைய மாணவர்களை . தமிழ் உணர்வாளர்களாகவும், பேச்சாளர்,எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளராகவும்  வடிவமைக்க வேண்டும்.


வியாழன், 10 ஆகஸ்ட், 2017

பாரத் மாதா கீ ஜே

கொலுசு மின்னிதழில் நான் எழுதும் கட்டுரைத்தொடரான தேநீர் இடைவேளையில் இந்த மாதம் வெளியாகியிருக்கும் கட்டுரை :
                        
                                  பாரத் மாதா கீ ஜே

ஏழையென்றும் அடிமை யென்றும்
எவனுமில்லை ஜாதியில்- இழிவு கொண்ட
மனிதரென்ப திந்தியாவில் இல்லையே - பாரதி

நீ தீர்க்க தரிசி பாரதி. எத்தனை ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருக்கிறாய். இந்தியா எப்பேர்ப்பட்ட நாடு என்று. உனது தீர்க்கதரிசனம் குறித்து இப்போதெல்லாம் அடிக்கடி நினைத்துக்கொள்கிறோம். அப்போதெல்லாம் நெஞ்சு விம்மி விம்மித் துடிக்கிறது.

நீ பாடிவிட்டுப் போய்விட்டாய் பாரதி. இப்போதெல்லாம் இந்தியா எவ்வளவு ஏற்றத்திலிருக்கிறது தெரியுமா ?

ஏழைகளே இல்லாத நாடு என்பதால் எங்களுக்கு இனி ரேஷன் இல்லை, எரிவாயு இல்லை எந்த சலுகைகளும் இல்லை பாரதி. எங்கள் பணம் செல்லாது என்று அறிவித்து விட்டார்கள், எங்கள் உடைகளை, எங்கள் உணவை அவர்களே தீர்மானிக்கிறார்கள். நரமாமிசம் உண்பவர்களெல்லாம் நல்லபடியாய் வாழும் போது மாட்டுக்கறி ஆகாதென்கிறார்கள், மேலும் இனி நாங்கள் பிறக்கவும் , இறக்கவும் ஆதார் தான் ஆதாரம். பிறந்தவுடன் எங்கள் நெற்றியில் பொறிக்கப்படும் அந்த எண் எங்களை எரிக்கும் போதும் இருக்க வேண்டும் என்பது கட்டளை. இல்லையெனில் எரிமேடையும் மறுக்கப்படும் என்பதாக எங்கள் அரசு சொல்கிறது. நல்ல வேளை பாரதி நீ உன் கவிதைகளை நிறுத்திக்கொண்டு கிளம்பிவிட்டாய். இப்போது நீ இருந்திருந்தால் என்ன பாடு பட்டுப் புலம்பியிருப்பாய் ?

இழிவு கொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே என்று பாடினாய், இன்றும் கைகளால் மலமள்ளிக் கொண்டிருப்பவர்கள் இந்தியர் தான். அதனினும் இழிவு ஏதுமுண்டோ இந்த தொழில் நுட்ப வளர்ச்சியில்.

பெண்களை எப்படியெல்லாம் போற்றினாய் நீ … நாங்களும் போற்றிக்கொண்டிருக்கிறோம் பாரதி.

காதல் ஒருவனைக் கைப்பிடித்தே, அவன்
காரியம் யாவினும் கை கொடுத்து,
மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி! - பாரதி

பெண் விடுதலையில், காதல் செய்து ஒருவனைக் கை பிடித்து வாழச் சொல்லி அறிவுறுத்தினாய் அப்போதே. ஒரு நூற்றாண்டு கழிந்தது. இப்போதும் எங்கள் பெண்கள் காதலித்தால் என்ன நடக்கிறது தெரியுமா பாரதி.

எங்கள் நந்தினி காதலித்தாள். இந்தியாவின் மகள் தான் அவள். மணிகண்டன் எனும் ஆணை. ஓர் ஆண்டு காதலால் விளைந்த விளைவாக 16 வயது சிறுமி அவள் கர்ப்பமானாள். திருமணம் செய்து கொள்ள மணிகண்டனை வற்புறுத்த, அவள் தலித் என்ற காரணத்தைக் காட்டி மறுத்ததோடு, அவளை நண்பர்களோடு கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்து அவளது பிறப்புறுப்பை பிளேடால் அறுத்து அவளது வயிற்றிலிருந்த சிசுவைக் கொன்று அவளையும் கொன்று பாழும் கிணற்றில் தள்ளி விட்டனர். பதினாறு நாட்கள் கழித்து தான் அவளது சடலத்தைத் தேடி எடுத்தனர். இதோ இன்னும் அவளுக்கான நீதியைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். கிடைத்தபாடில்லை.

கொளசல்யா காதலித்த சங்கருக்கு என்ன நேர்ந்தது தெரியுமா ? நடுரோட்டில் கண்ட துண்டமாய் வெட்டிக் கொல்லப்பட்டான் அநியாயத்திலும் அநியாயமாக. கோகுல்ராஜ் கூட அப்படித்தான் ஆனான் தெரியுமா ?

மிகச் சமீபத்தில் போன வாரத்தில் உத்திரப் பிரதேசத்தில் இரண்டு தலித் காதலர்கள் பட்ட பாடு அறிவாயா பாரதி. அங்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தலித் காதல் ஜோடியை ஆர்.எஸ்.எஸ் உயர் வகுப்பை சேர்ந்த சிலர் சுற்றி வளைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பின்னர் காதலர்களை நிர்வாணமாக்கிய வன்முறையாளர்கள் ஒருவரை ஒருவர் சுமந்து கொண்டு வர வற்புறுத்தி அவர்களை ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது காதலர்களை அவர்கள் இரும்புக் கம்பிகளால், இரக்கமின்றி தாக்கிக்கொண்டே வந்தனர். இந்த சம்பவத்தை அவர்களே வீடியோ எடுத்து பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்ததை அடுத்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. காதலர்கள் ஒருவரை ஒருவர் நிர்வாணமாக சுமந்து கொண்டும் அழுது கொண்டும் அத்தனை பேர் முன்னிலையில் பட்ட பாட்டைப் பார்த்திருந்தாள் நீ என்ன செய்திருப்பாய் பாரதி. இது தான் இந்தியா. அந்தக் கும்பலில் சிலர் கத்தினார்கள் " பாரத் மாதா கீ ஜே " என. பாரத மாதா என்னவாகியிருக்கிறாள் பார்த்தாயா ?

இனி எப்படிக் காதலிப்பது ? இனி எப்படி வாழ்வது ?

மனிதருணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ?

மனிதர் உணவை மட்டுமல்ல மனிதர் உரிமையை, மனிதர் உணர்வை, மனிதர் வாழ்வை, மனிதர் மொழியை எல்லாம் வேறு வேறு மனிதர்கள் தாம் தீர்மாணித்துக்கொண்டும், மனிதர்கள் நொந்து போவதை ரசித்துக்கொண்டும் தான் இருக்கிறார்கள்.

தாய்மொழி வழியில் கல்வி தேவையில்லை என அவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் இதைப் படித்தாலே போதுமானது என தமிழர்களுக்கு வலியுறுத்தப்படுகிறது.
பாரத நாடு பழம்பெரும் நாடு
நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் - பாரதி

உண்மைதான் மகாகவி, பாரத நாடு மிகப் பழமையான நாடு. இந்த நினைவு அகலவேயில்லை எங்களுக்கு. சொல்லப்போனால், இந்த நினைவு தான் எங்களைக் கொலையாய்க் கொல்லுகிறது. இத்தனை பழமையான இந்தியாவில், இத்தனை பழமைவாத மனிதர்களோடு, இத்தனை பழமைவாத எண்ணங்களோடு எப்படி வாழ்ந்து தொலைப்பது என்று.

எத்தனை பழமையென்றால், இன்னும் பழைய சாதிகள் உயிரோடு இருக்கின்றன, இன்னும் பழைய தீண்டாமை உயிர்ப்போடு இருக்கிறது, இன்னும் பழைய பெண்ணடிமைத்தனம் ஓங்கி நிற்கிறது, இன்னும் பழைய சுரண்டல்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன, இன்னும் பழைய கடவுள்கள் உயிரோடு இருக்கிறார்கள், புதிது புதிதாய் மனிதக் கடவுள்கள் வேறு அவதாரம் எடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள், இன்னும் பழைய அடிமைகள் புதிது புதிதாகப் பிறந்து கொண்டேயிருக்கின்றார்கள்.

பெண்ணுக்கு விடுதலையென்றிங்கோர் நீதி,
பிறப்பித்தேன் அதற்குரிய பெற்றி கேளீர்
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வமென்றால்
மனையாளுந் தெய்வமன்றோ? மதிகெட்டீரே!
விண்ணுக்குப் பறப்பது போற் கதைகள் சொல்வீர்!
விடுதலையென்பீர் கருணை வெள்ளமென்பீர்!
பெண்ணுக்கு விடுதலை நீரில்லை யென்றால்
பின்னிந்த வுலகினிலே வாழ்க்கையில்லை

பெண்ணுக்கு விடுதலை இல்லையென்றால் உலகில் வாழ்க்கையில்லை என்று எத்தனை பகுமானமாய்ப் பாடிவிட்டுப் போனாய் நீ.

இன்று எத்தனை விடுதலை தெரியுமா பெண்களுக்கு. இதோ இப்போது தான் சப்பாத்தி வட்டமாக இல்லையென்று ஒரு பெண் தனது கணவனால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டாள். பக்கத்து வீட்டு ஆணுடன் அலைபேசியில் இரு முறை பேசி விட்டாள் என்று ஒரு பெண் கடப்பாரையேற்றிக் கொல்லப்பட்டாள், இரவில் தாமதமாக வீடு திரும்பும் போது ஒரு பெண் வன்புணர்வு செய்து ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகிறாள், மற்ற ஆண்களைப் பார்த்து விடக்கூடாது என்பதாலேயே ஒரு நவநாகரீகப் பெண் நிர்வாணமாகவே ஆண்டுகளாக வீட்டிலேயே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறாள், காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் திராவகம் வீசப்படுகிறது, பொது இடங்களில் வைத்து வெட்டிக் கொல்லப்ப்படுகிறாள், கூட்டாக வன்புணர்வு செய்யப்படுகிறாள், பின்பும் வெறி தீராமல் பிறப்புறுப்பில் கம்பிகள்,கடப்பாறைகள் சொருகப்பட்டுக் கொல்லப்படுகிறாள்,
அய்யோ பாரதி பதறாதே பாதியைத்தான் சொல்லியிருக்கிறேன்.
இன்னும் புள்ளிவிவரங்களைப் பார்த்தால் நெஞ்சு வெடிக்கும்.

நெஞ்சு பொறுக்கு தில்லையே- இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்

இப்படி உனது பாடலைத்தான் இப்போதும் புலம்பித் திரிகிறோம் பாரதி. அவ்வப்போது வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜே என முழங்குகிறோம் அதைச் செய்யாவிடில் என்ன நடக்குமோ என்ற அச்சம்.

"பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்.,"

கொலுசு மின்னிதழில் வாசிக்க :


http://kolusu.in/kolusu/z_want_to_see_book.php?parameter=25K34K1099

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

விகடன் தடம் இதழில் எனது முகம்

ஆகஸ்ட் மாத , விகடன் தடம் இதழில் எழுத்துக்கு அப்பால் பகுதியில் எனது சிறு நேர்காணல் வெளியாகியுள்ளது ..

நன்றி ஆசிரியர் குழுவினர்க்கு ..


வியாழன், 27 ஜூலை, 2017

காலத்தைப் பின்னோக்கி நகர்த்துபவள்


இயற்கைக்கு விரோதியவள்.
பெளதீக விதிகளனைத்தையும் உடைத்தெறிந்துவிட்டு
என் காலத்தை அவ்வப்போது
பின்னகர்த்தி விளையாடுவாள்.
ஆங்காங்கே பல்லிளிக்கும் வெண்நரைகள் வேகமாக உருமாற
இன்னும் இளமையாவேன் அவளது நகர்த்தலில்
இளம் பிராயத்தில் மிச்சமாகிப் போன காதலையும் முத்தங்களையும்
மிச்சம் வைக்காமல் தரச் செய்வாள்.
ஆன மட்டும் ஆசை தீரக் காதலிப்பவள்
இன்னும் கொஞ்சம்
என் காலத்தை சுழலவிடுவாள்.
இம்முறை ஒரு சிறுவனாகியிருப்பேன்.
அவளது பாவாடை சரிகைகளில் முகமுரச
பால்யத்தின் மடியில் கிடத்தி அவ்வயதின் ஐஸ் குச்சிகளையும்
கடலை மிட்டாய்களையும் படைப்பாள்.
மேலும் துணிந்தவள்
இன்னும் என்னை சிறுபிள்ளையாக்கி
மடி கிடத்தி அன்னையாகிறாள் அமுதூட்டி.
இன்னும் அவள் நகர்த்தலில்
செல்லாத தூரம் என்பது
கருவறை தான்.
அதையும் செய்வாள்
ஒரு நாள்
பின்னகர்த்திய காலம்
உறைந்து நிற்க
அவளது கருவறையில்
சிசுவாவேன்
அப்போதும் வயிறு தடவி
முத்தமிட்டுச் சிரிப்பாள்
பாவி

திங்கள், 24 ஜூலை, 2017

நான் ஏன் கவிதை எழுதுகிறேன் ?

இந்த மாதம் நான்காவது கோணம் சிற்றிதழில் வெளியான எனது நேர்காணலும் கவிதைகளும் ... 

சிறு வயதில் சித்திரக்கதைகளை வாசிக்கத் துவங்கியது முதல், பல்வேறு எழுத்து வடிவங்களையும் வாசித்துவிட்டு கவிதையின் வசம் ஈர்ப்பாகி கவிதைகளைத் தேடித் தேடி வாசிக்கத் துவங்கியது மனம். வாசிப்பின் வழியும் அனுபவங்களின் வழியும் கண்டடைந்த ஒரு மொழி தான் கவிதை எனக்கு.

தனிமைப் பொழுதுகளில் நிரம்பி வழியும் சேமித்த கணங்களின் சொற்களை எழுத்தாக்கிப் பார்த்தேன். கொஞ்சம் அவை கவிதை வடிவத்தை ஒத்திருந்தன. சிற்றிதழ்களில் , வணிக , இலக்கிய இதழ்களில் கவிதை அனுப்பி பிரசுரமாக, நம்பிக்கை வந்து எழுதுவதைத் தொடர்ந்து கொண்டேன்.

அதிகம் பேசத் தெரியாதவனிடம் சேகரமாகும் அனுபவங்களை, என்ன செய்வது ? நான் அவற்றை  எழுத்துகளாக்கி அனுப்பி விடுகிறேன். யாரோ ஒருவரிடம் அல்லது சிலரிடம் பகிரப்பட வேண்டிய அன்பும், வலியும் , சினமும் யாவும் கவிதையில் பொதுவானதாகி விடுகிறது. வாழ்வு பொதுவானது தானே.

எனது ரசனைகளை, நான் கேட்க விரும்பிய கேள்விகளை, நான் வெளிக்காட்டிக் கொள்ள நினைக்கிற ஆதங்கத்தை , ஆற்றாமையை, என் ரகசிய விருப்பங்களை, நான் விரும்பியணிந்து கொள்ள நினைக்கிற ஒரு முகமூடியை, கடந்து செல்லும் முகம் தெரியாச் சிறுமியின் கையசைப்பு போன்ற ரம்மியக் காட்சிகளை, நான் கவிதையாக்கிச் சேமிக்கிறேன். அவை என் வாழ்வின் சாட்சியங்களாக என்றென்றைக்கும் இருக்கும் என நம்புகிறேன்.

ஒரு திரைப்படத்தில் அடுத்த பதினைந்து நிமிடங்களில் அனைத்தும் மறந்து போகும் வியாதி இருக்கும் நாயகன் புகைப்படங்களாக தான் சந்திக்கும் மனிதர்களை சேமித்து வைத்துக்கொள்வது போல நான் சந்திக்கும் கணங்களை, என் இருப்பை, என் வாழ்வை நான் கவிதைகளாக்கிச் சேமிக்கிறேன்.கவிதைகளை உண்மையையும் அனுபவங்களையும் கொஞ்சம் அழகியலுக்காக கற்பனையையும் சேர்த்துச் சமைக்கிறேன். ஆக, என் கவிதைகள் என் இருத்தலுக்கான சாட்சியங்கள்.

கவிதைகளை நம்புகிறேன் யாவற்றையும் விடவும் யாரையும் விடவும். ஆகவே கவிதை எழுதுகிறேன். வாழ்வு தரும் அழுத்தங்களிலிருந்து அவ்வப்போது காப்பாற்றும் கருவியாக கவிதைகள் இருக்கின்றன.துணையற்ற தனிமைக் கொடுங்கணங்களிலும் ஏதாவது ஒரு கவிதை ஆறுதலாகவும் துணையாகவும் அமைகிறது என்பதைத் தாண்டி கவிதையிடம் எந்த எதிர்பார்ப்புமில்லை.

ஆனாலும், அவை என் அடையாளமாகி நிற்கின்றன. என்னை எங்கு கண்டாலும் என் கவிதைகளோடு தான் காண்கிறார்கள், என் கவிதைகளோடு தான் பேசுகிறார்கள் என்பது பெருமையாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது. கவிதை எனக்கு நிறைய உறவுகளைத் தந்திருக்கிறது  போலவே நிறைய உறவுகளை வெட்டி விட்டிருக்கிறது. தனிமையிலிருந்து காப்பாற்றிக் கை பிடித்து அழைத்து வந்திருக்கிறது அதே சமயம் இன்னும் பெரிய தனிமையையும் தந்திருக்கிறது.

ஆனாலும் அவ்வளவு மோகித்திருக்கிறேன் இந்தக் கவிதைகள் மீது ...

--

கவிதைகள் :

1.

வாகனத்தை உதைத்துக் கிளம்பியதும்
புன்னகைத்து வழியனுப்புகிறார்கள்
சாலையின் இருமருங்கிலும்
தலையாட்டி பூச்சொரிகின்றன
வழக்கம் போல மரங்கள்
முகமறியாச் சிறுவனொருவன்
கையசைத்து உற்சாகப் படுத்துகிறான்
மூலக்கடைகிட்ட இறக்கி விட்டுடு மகராசா
என உரிமையுடன் ஏறி இறங்கிக் கொள்கிறாள் கிழவி
முகப்பு விளக்கை அணைக்கச் சொல்லி
சைகையில் காட்டிவிட்டு 
வெட்கமாகச் சிரித்துவிட்டுக் கடக்கிறது
ஸ்கூட்டி
பொன்னந்தியில் ஒளிரும் ஆரஞ்சு வர்ண
சூரியனை வாகனத்தை நிறுத்தி
புகைப்படமெடுக்க முயற்சிக்கிறேன்
கூடு திரும்பும் பறவைகளின்
கீச்சொலிகளில் இன்றைய நாளைக்கான
மொத்தக் குதூகலமும் தொற்றிக்கொள்கிறது

எனது வாகனம் பழையது தான்
ஆனாலும்
சரியான பாதையில் தான் போய்க்கொண்டிருக்கிறேன்
போய் வருகிறேன்

2.

அகாலத்தில் திடுக்கிட்டு விழித்துக்கொள்பவன்
பெருந்துயரக்காரன்.
தூரத்து நாயொன்றின் ஊளை
அவனை இன்னும் திடுக்கிடச் செய்யும்.
அருகில் ஆழ்ந்த நித்திரையிலிருப்பவர்கள்
மீது ஆத்திரம் வரலாம்.
சன்னமான ஒலியில் ஒரு இசை
அலைபேசி வெளிச்சத்தில் ஒரு புத்தகம்
என
உறக்கத்தை மீட்டெடுப்பதற்கான
பிரயத்தனங்கள் பொய்த்துப் போக
விறுவிறுவென மொட்டைமாடிக்குச் செல்வான்
அநாதையாய்க் கவிழ்ந்து கிடக்கும்
இரவையும் 
தூரத்தில் தனித்து ஒளிரும்
தெருவிளக்கையும்
துணையாக்கி
கதைபேசிக் கழிப்பான் அவ்விரவை.
மெல்ல விடிந்து விலகும் இரவு
அவனுக்குத் தந்து போனதாயிருக்கும்
இந்தக் கவிதை.

3.

ரட்சகி

சாலை விபத்தில்
தலை நசுங்கி
இறந்து கிடக்கும் ஒருவனை
கூட்டமாக  நின்று வேடிக்கை பார்க்கின்றன
பரிதாபத்தின் கண்கள்.
கூட்டத்திலிருந்து விடுபட்ட
பதின்பருவச் சிறுமியொருத்தி
முன்பின் அறிந்திராத அவனுக்காக
தன் நெஞ்சில் சிலுவைக்குறியிட்டு
ப்ரார்த்திக்கிறாள்.
முன் பின் அறிந்திராத
ஒருவனுக்காக ஒரு கணம்
கலங்கியிருக்கின்றன அவளது கண்கள்.
இறந்து கிடந்தவனின்
ஒரு பாதிப் பாவங்களை
ஒற்றைச் சிலுவைக்குறியில்
ரட்சித்தவள்
பேருந்தில் அவளையே கவனித்தபடி
கடந்த என் மனதின்
சாத்தான் இருளின்
ஒரு பாதியை
மெல்ல விலக்கி ரட்சித்தவளுமாகிறாள்


நன்றி :

நான்காவது கோணம் ஆசிரியர் குழு
கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா