திங்கள், 11 செப்டம்பர், 2017

வாய்பிளந்து காத்திருக்கும் நீலத்திமிங்கலங்கள்

கொலுசு மின்னிதழில் நான் எழுதும் கட்டுரைத்தொடரான தேநீர் இடைவேளையில் இந்த மாதம் வெளியாகியிருக்கும் கட்டுரை ...

தேநீர் இடைவேளை # 15

வாய்பிளந்து காத்திருக்கும் நீலத்திமிங்கலங்கள்

செல்பேசியில் எனக்கே தெரியாத பல வேலைகள என் பையன் பார்க்கிறான். செல்ல அவன் கையில குடுத்தா அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு மேய்ஞ்சுடறான்.

என் பொண்ணுக்கு செல்லு குடுத்தா போதும் அழவே மாட்டா அமைதியா படுத்திருப்பா.

இப்படியான பெருமையான தம்பட்டங்களை அடிக்கடி கேட்டிருக்கலாம். இதெல்லாம் பெருமையா என்ன ?

செல்பேசிகளால் உறக்கம் போகின்றன, கண்கள் போகின்றன, மனம் அமைதியிழக்கிறது, செல்பேசிகளை சட்டைப்பையில் வைத்தால் இதயத்துக்கு பாதிப்பு, காற்சட்டைப் பையில் வைத்தால் ஆண்மை போகும் போன்ற தொலை தூர பாதிப்புகளையெல்லாம் நிறையக் கேட்டுவிட்டோம். இவற்றையெல்லாம் தாண்டி செல்பேசிகள் உயிரைப் பறிக்கும் கொலைக் கருவிகளாக மாறி வெகுநாட்களாகின்றன.

கடலலைகளுக்கு முன்னால், மலையுச்சியில், புகை வண்டிப்பாதையில் என ஆபத்தான பல இடங்களில் சுயமி எடுப்பதாக உயிரை இழந்தவர்கள் எத்தனை பேர். வாகனங்கள் ஓட்டும் போது செல்பேசியில் பேசிக்கொண்டும், குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டும் கவனக்குறைவாக ஓட்டி விபத்துகள் ஏற்படுத்தி உயிரை விட்டதுடன் உயிர்களை எடுப்பவர்களும் எத்தனை பேர் ?  இவையெல்லாம் விபத்துகள். செல்பேசிகளால் தற்கொலைகள் நிகழுமா? நிகழும். நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.



சமீப நாட்களாக செய்திகளில் அடிபடும் ஒரு விளையாட்டின் பெயர் ப்ளூ வேல் கேம். இதைத் தற்கொலை விளையாட்டு என்றும் இணையத்தில் சொல்லிக் கொள்கின்றனர். இது மற்ற விளையாட்டுகளைப் போல ஒரு அப்ளிகேசன் அல்ல, ஆன்லைனில் விளையாடும் விளையாட்டு .இளைஞர்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் இந்த விபரீத விளையாட்டு ரஷ்யாவில் 2013-ல் உருவாக்கப்பட்டது.  இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு அட்மின்களிடமிருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்படும். மொத்தம் ஐம்பது கட்டளைகள். முதலில்  அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஆன்லைனில் வரும் வீடியோக்களைப் பார்க்க வேண்டும், புகைப்படமெடுத்துப் பதிய வேண்டும், ஏதாவது மொட்டை மாடிக்கோ அல்லது கடல் அலைகளிலோ நின்று கொண்டு சுயமி எடுத்து  வெளியிட வேண்டும் என்பது போல ஆரம்பிக்கும் இந்தக் கட்டளைகள் போகப் போக கத்தியால் கையைக் கீறிக்கொள்ள வேண்டும், கையில் திமிங்கல உருவத்தை பிளேடால் கீறி வரைந்து அதைப் புகைப்படமெடுத்துப் பதிய வேண்டும் என்று நீண்ட பின்பு இறுதி ஐம்பதாவது கட்டளை என்ன தெரியுமா ? மொட்டை மாடியிலிருந்து குதித்து அல்லது வேறு வகையில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.  நம்ப முடிகிறதா ? யாராவது இதற்கு உடன்படுவார்களா ? ஆனால் உண்மை தான். இப்படித்தான் நடக்கிறது இந்த விளையாட்டு. இதிலும் நிறைய இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஈடுபடுவதாகக் கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது.




இந்த விளையாட்டால் கடந்த 3 ஆண்டுகளில் ரஷ்யாவில் மட்டுமே 130 பேர் தற்கொலை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனா, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த விளையாட்டு, தற்போது இந்தியாவிலும் விபரீதம் காட்ட ஆரம்பித்திருக்கிறது.

கேரள மாநிலம் பாலக்காடு அருகிலுள்ள  பள்ளிக்குளம் என்ற ஊரில் வசித்துவந்த ஆஷிக். கல்லூரியில் பி.காம்., இறுதி ஆண்டு படித்து வந்தார். கடந்த மார்ச் 30-ம் தேதி, தனது வீட்டுக்குள்ளேயே அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த மரணத்துக்குக் காரணம் ப்ளூ வேல் என்பது தான் கேரளத்தையே அதிரவைத்துக் கொண்டிருக்கிறது.
இந்தச் சம்பவம் நடப்பதற்கு ஒரு சில மாதங்களாகவே, ‘நான் இருந்து என்ன செய்யப்போகிறேன். தற்கொலை செய்யப்போகிறேன்!’ என்றெல்லாம் அடிக்கடி பிதற்றி வந்துள்ளார் ஆஷிக். இரவு நேரங்களில் ஆன்லைன் ‘கேம்’கள் விளையாடுவதும், அடிக்கடி தனிமை வயப்படுவதுமாய் இருந்திருக்கிறார். இந்த விவகாரம் கேரள ஊடகங்களில் செய்திகளாக விரிந்ததை அடுத்து, திருச்சூரில், எர்ணாகுளத்தில், கோழிக்கோட்டில் என இதுவரை 5 பேருக்கு மேல் ‘ப்ளூ வேல்’ விளையாட்டில் சிக்கி தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கேரளத்தில் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஊரெல்லாம் சுற்றிக்கொண்டிருந்த நீலத் திமிங்கலம் சென்னையையும் தாக்கியுள்ளது இப்போது. விருகம்பாக்கத்தில் கல்லூரி மாணவி ஒருவர் 7வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மக்களை அதிர வைத்துள்ளது. படுகாயமடைந்த மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் மும்பையில் 14 வயது சிறுவன் ஒருவன், வீட்டின் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறான். இந்த விளையாட்டை உருவாக்கிய ரஷ்யாவைச் சேர்ந்த ஃபிலிப் புடேக்கின் என்ற நபர் கடந்த ஆண்டே கைதுசெய்யப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள். இந்த விபரீத விளையாட்டை ஏன் உருவாக்கினாய் என்று அவரிடம் போலீஸார் விசாரித்தபோது, ’எந்தவித மதிப்பும் இல்லாதவர்களைத் தற்கொலை செய்துகொள்ள வைத்து சமூகத்தைச் சுத்தப்படுத்த வேண்டும். அதற்காகவே இந்த கேம் உருவாக்கினேன்’ என்று  சொல்லியிருக்கிறான் ஃபிலிப் புடேக்கின். பிலிப் கைதாகி உள்ளே இருந்தாலும் இந்த விளையாட்டு இணையத்தில் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. தடுக்க முடியாமல் தவிக்கிறது சைபர் க்ரைம்.

ஹேஷ் டேக் மூலமாக, வித விதமான தொடர்புகளிலிருக்கிறார்கள் இந்த விளையாட்டை விளையாடுபவர்கள். இவர்கள் யாரை, எப்படி இந்த விளையாட்டின் உள்ளே இழுக்கிறார்கள், அவர்களுக்கு என்ன மாதிரியாக தூண்டில் வீசுகிறார்கள் என்பது பெரிய மர்மமாகவே உள்ளது. ஆனால், தனிமை,வெறுமை,ஏமாற்றம் என ஏதாவது ஒரு வகையில் மனச்சோர்வுடன் இருப்பவர்களைக் குறி வைக்கிறார்கள். ஒருமுறை இந்த விளையாட்டில் ஈடுபட்டு அவர்களது சுய விவரங்களை அளித்துவிட்டால் போதும், மொத்தக் கணக்கையும், சுய விவரங்களையும் திருடிக்கொள்கிறார்கள், வைரஸ்களை அனுப்பி.

இந்த விளையாட்டின் ஐம்பது டாஸ்க்குகள் என்ன தெரியுமா ? 1) ஒரு ரேஸர் கொண்டு கையில் "f57" என்று செதுக்கி, அதை புகைப்படமெடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும். 2) அதிகாலை 4.20 மணிக்கு எழுந்து, கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் சைக்கடெலிக் (மாயத்தோற்றமான) மற்றும் பயமுறுத்தும் வீடியோக்களை பார்க்க வேண்டும். 3) ஒரு ரேஸர் கொண்டு நரம்புகளோடு சேர்த்து மணிக்கட்டை வெட்டிக்கொள்ள வேண்டும், ஆனால் மிகவும் ஆழமாக வெட்டிக்கொள்ள கூடாது.வெறும் 3 வெட்டுக்கள் நிகழ்த்தி அதை புகைப்படம் எடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.4)காகிதத்தில் ஒரு திமிங்கிலத்தை வரைந்து, அதை புகைப்படம் எடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும். 5) நீங்கள் ஒரு திமிங்கிலமாக மாற தயாராக இருந்தால், காலின் மீது "YES" என்று வெட்ட வேண்டும். இல்லையென்றால் - கைப்பகுதியில் பல முறை வெட்டிக்கொள்ள வேண்டும்


ஐந்துக்கு மூச்சு வாங்கி உடல் நடுங்குகிறதா ? அடுத்தடுத்த டாஸ்க்குகள் இன்னும் பயங்கரம், அதிகாலையில் மிக உயரமான கூரை மீது ஏறி புகைப்படம் எடுக்க வேண்டும், உடலில் காயங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், நள்ளிரவில் சுடுகாட்டுக்குச் சென்று படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என நீள்கிறது. யாராவது அதிகாலை 4 மணிக்கு எழுவதையோ அல்லது கை கால்களில் கீறல்களுடன் இருந்தாலோ கொஞ்சம் உஷாராக கவனிக்க வேண்டும் போல.

ப்ளூவேல் விளையாட்டின் பின்னணியில் இருந்து தற்கொலை தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்து வந்த 17 வயது ரஷ்ய சிறுமியை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.இந்த சிறுமிதான் உத்தரவுகளுக்கு கீழ்படியாவிட்டால் உறவினர்களையோ, அல்லது நெருக்கமானவர்களையோ கொன்று விடுவதாக ப்ளூவேல் விளையாட்டை விளையாடி வந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்து வந்தவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்
கைது செய்யப்பட்ட சிறுமியும் ஆர‌ம்பத்தில் ப்ளூவேல் விளையாடியவர்தான் என்றும், ஆனால் கடைசி கட்ட சவாலை தேர்ந்தெடுக்காமல், மற்றவர்களை தற்கொலைக்கு தூண்டும் அட்மினாக செயல்படும் பணியை தேர்ந்தெடுத்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இன்னும் எத்தனை பேர் இதற்கு பலியாகியிருக்கிறார்களோ, காத்திருக்கிறார்களோ தெரியவில்லை.
இந்த விளையாட்டில் அதிகமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தான் ஈடுபடுகிறார்கள்.

இந்த வயதினருக்கு ஒரு அசட்டு தைரியம் இருக்கும். அது இந்த விளையாட்டில் ஈடுபடச் செய்துவிடுகிறது.
ஆரம்பத்தில் உங்கள் ஆர்வத்தை தூண்டுவது போலவும், உங்களைச் சுற்றியிருப்பவர்களை தவிர்த்து தனிமையில் உங்களை இருக்கச் செய்திடும். பிறரது எதிர்ப்பையும் மீறி இந்த விளையாட்டினை விளையாட ஆர்வமாக இருக்கிறீர்களா என்று கண்காணிக்கும். ஆரம்பத்திலேயே கொடூரமான பேய்ப்படங்களை அதிகாலையிலேயே பார்ப்பதால் அது ஆழ்மனதில் பதிந்து இயற்கையிலேயே நமது வக்கிர எண்ணங்களையும் வெறுப்புகளையும் கோபத்தையும் தூண்டிவிடுகிறது.

உங்களது விருப்பு வெறுப்புகளை தாண்டி சொல்லப்படும் டாஸ்க்குகளை எல்லாம் செய்கிறீர்களா என்று கண்காணிக்கும். இப்படி உங்களைச் சுற்றியிருக்கும் ஓர் வட்டத்தை முற்றிலும் அழித்த பிறகு உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கும்
ப்ளூ வேல் விளையாட்டுக்கு மாற்றாக மனதில் அன்பை விதைக்கும் விளையாட்டாக பிங்க் வேல் என்று ஒரு விளையாட்டினை உருவாக்கியிருக்கிறார்களாம் இப்போது. இது எவ்வளவு தூரம் நன்மை பயக்கும் என்று சொல்வதற்கில்லை.

அடிப்படையில் குழந்தைகளின் மனதில் அன்பையும் அறத்தையும் விதைக்கும் பணிகளைச் செய்தாலே இம்மாதிரியான கொடூரங்களிலிருந்து தற்காத்துக்கொள்ளும் சக்தியை அவர்களுக்கு நாமே வழங்கிவிட முடியும். கதைகளின் வழியாக , பாடல்களின் வழியாக, உரையாடல்களின் வழியாக நாம் அவர்களிடம் அவற்றை விதைக்க வேண்டும். மாறாக நாம் அவர்களை அழுத்தம் தந்து கசக்கிப் பிழிகிறோம். படிக்கச் சொல்லியும் மதிப்பெண்கள் எடுக்கச் சொல்லியும் ஆகப்பெரும் வன்முறைகளை நிகழ்த்துகின்றோம். லாப நோக்கில் பிரதிபலன் பார்த்து வளர்க்கப்படும் சமூகம் சக மனிதனுக்கும் தனக்குமே நல்லது செய்ய வேண்டும் என எப்படி எதிர்பார்ப்பது.
பள்ளிகளில், கல்லூரிகளில் நமது மொழியை, பண்பாட்டை, நீதிநெறியை, சொல்லிக்கொடுக்கும்படியான ஒரே ஒரு வேளை வகுப்பிருந்தால் கூடத்தான் நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம். நடக்குமா ? நூற்றுக்கு நூறு தான் நமது குறிக்கோள். மருத்துவம் தான் நமது லட்சியம். பணம் புகழ் சம்பாதிப்பது மட்டுமே நமது வாழ்க்கை. சாதாரணங்களுக்கு இங்கே இடமே இல்லை. பிறகெப்படி நாம் இம்மாதிரி அநீதிகளிடமிருந்தெல்லாம் விடியலைப் பெறுவது ?

நமது பிள்ளைகளை கவனிக்க, கண்காணிக்க அவர்களோடு நேரம் செலவிட, அவர்களோடு பேச, அவர்களோடு அமர்ந்து ஒரு வாய் சோறுண்ண, அவர்களுக்கு பிடித்தமான தருணங்களைப் பரிசளிக்க நம்மிடம் நேரமில்லை. மனமுமில்லை. நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம் கண்ணுக்கே தெரியாத இலக்குகளுடன் அசுரவேகத்தில்.

நாம் தயாராயிருக்க வேண்டியது, இந்த நீலத்திமிங்கலத்திடமிருந்து தப்பிப்பதற்கு மட்டுமல்ல. இதுபோல எண்ணற்ற திமிங்கலங்களும், சுறாக்களும் நமது வாழ்வையும், நமது பிள்ளைகளின் வாழ்வையும் பலி வாங்க வாய் பிளந்து காத்துக் கிடக்கின்றன. அவற்றிடமிருந்து தப்பி வாழ்வதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

கொலுசு மின்னிதழில் வாசிக்க

10 கருத்துகள்:

  1. அருமையான கட்டுரை குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. இன்னும் நிறைய இருக்கின்றன. தெரிந்ததையும் படித்ததையும் எழுதியிருக்கிறேன்

      நீக்கு
  3. இதனைப் பற்றி அவ்வப்போது வாசிக்கிறேன். அதிர்ச்சியாக உள்ளது. குழந்தைகளை கவனமாக கவனித்து வருதல் நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அய்யா. அவர்களோடு நாம் பெரும்பான்மையான நேரத்தைச் செலவிட வேண்டும்

      நீக்கு
  4. அருமையான கட்டுரை. நாங்களும் இது போன்ற செய்திகளை வாசிக்கிறோம்.....அதிர்ச்சி அளிக்கிறது. குழந்தைகளை பெற்றோர் அன்புடன் கவனித்து மனம் வீட்டுப் பேசி நட்புடன் நிறைய நேரம் செலவழிக்க வேண்டும்....நீங்கள் சொல்லி இருப்பது போல்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். அன்பும் அனுசரணையும், நேரமும் அவர்களுக்குத் தந்தால் போதும்

      நீக்கு
  5. பயனுள்ளகட்டுரை நண்பரே
    பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலம்இது

    பதிலளிநீக்கு