புதன், 30 மார்ச், 2016

எழுத்து அமைப்பின் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா

எழுத்து அமைப்பின் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா கோவை பாரதிய வித்யா பவன் பள்ளியில், 29/03/2016 அன்று மாலை நடந்தது. நான், ஆன்மன், அனாமிகா மூவரும் சென்றிருந்தோம்.

நிகழ்வு திட்டமிட்டபடி சரியாக 6 மணிக்குத் துவங்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் , பாரதிய வித்யாபவன் பள்ளியின் தலைவர் கிருஷ்ணராஜ வானவராயர் தலைமையில் நடந்தது. கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மட்டும் தாமதமாக வந்தார். மற்றவர்களுடன் நிகழ்வு குறித்த நேரத்தில் ஆரம்பிக்க, வைரமுத்து அவர்கள் இடையில் வந்து சேர்ந்து கொண்டார்.

நிகழ்வில் கவிஞர் ஜெயதேவன் அவர்களின் அம்மாவின் கோலம் என்ற கவிதை நூலும், தஞ்சாவூர்க் கவிராயர் அவர்களின் கைராட்டைக் கோபம் என்ற சிறுகதை நூலும் வெளியிடப்பட்டது.

முன்னதாக, வரவேற்புரை மரபின்மைந்தன் முத்தையா அவர்கள் பேசினார். எழுத்து அறிமுகமாகப் பேசிய ப.சிதம்பரம் அவர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். முதல் முறையாக அவரது இலக்கிய சம்பந்தமான அரசியல் அல்லாத உரையைக் கேட்கிறேன். நிதானமான, அழகான குரல், நல்ல செய்திகள் எனத் தெளிவான பேச்சு. அவர் எழுத்து அமைப்பின் துவக்கம், நோக்கம் பற்றி விரிவாகப் பேசினார்.

எழுத்து அமைப்பு துவங்கப்பட்ட நோக்கமே இதுவரை தொகுப்புகள் வெளியிடாத நல்ல படைப்பாளிகளை அறிமுகம் செய்வதாகத்தான் படித்திருந்தேன்,கேள்விப்பட்டிருந்தேன். இன்று அப்படி இல்லாமல் மூத்த படைப்பாளர்கள் இருவரது நூல்கள் வெளியிடப்படுவது குறித்து எனக்கும் இருந்த சந்தேகத்தைத் தெளிவுபடுத்திப் பேசிய ப.சிதம்பரம் அவர்கள் எங்களுக்கு இளைஞர்களின் நூல்கள், நல்ல முதல் படைப்பு நூல்கள் வேண்டும் என்பதுதான் நோக்கம். ஆனால், வந்தவற்றில் இளைஞர்களின் நூல்களும், முதல் படைப்பு நூல்களும் தரமானதாக இல்லாததால் இந்த நூல்களைப் பதிப்பிக்கிறோம் என்றார். தமிழில் எழுத்தாளர்களின் எண்ணிக்கை, தரம் இரண்டுமே குறைந்து விட்டது. இந்தி, மராத்தி, தெலுங்கில் பல செம்படைப்புகள் வருகின்றன ஆனால் தமிழில் அவை மிக மிகக் குறைவு என்று பேசினார்.

தலைமையுரை கிருஷ்ணராஜ வானவராயர் அவர்கள். கொங்கு தமிழில் மிகச் சிறப்பாகப் பேசினார். தலைமை அவுக ( ப.சிதம்பரம் ) பேசனும், நான் வரவேற்புரை பேசியிருக்கனும். ஏன்னா அவுக தான் நம்ம ஊருக்கு வந்திருக்காங்க. நம்ம அரங்கத்தைத் தேர்வு செஞ்சதுக்கு நன்றி என்றெல்லாம் அத்தனை எளிமையான பேச்சாக இருந்தது அவரது பேச்சு.

நூல் வெளியீட்டுக்குப் பிறகு நூல் அறிமுக நிகழ்வு. தஞ்சாவூர்க் கவிராயரின் சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுகம் எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்கள் பேசினார். அவர் பேசியது மிகுந்த வருத்தத்தையும் கோபத்தையும் தந்தது. நிகழ்வில் அவருக்குத் தரப்பட்டது ஒரு படைப்பாளனின் நூலை அறிமுகம் செய்து வைத்துப் பேசும் பணி. அந்தப்பணியைச் செவ்வனே செய்தால் தான் பார்வையாளர்களுக்கு அந்த நூலை வாங்கிப் படிக்கும் ஆர்வம் வரும், மேலும் அதுதான் அந்தப் படைப்பாளிக்குச் செய்யும் மரியாதையும். ஆனால் அவரோ முதல் வார்த்தையிலேயே நான் இந்தத் தொகுப்பைப் பற்றி எதுவும் பேசப்போவதில்லை நீங்கள் புத்தகம் வாங்கிப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டுத் தனது பராக்கிரமங்களை அடுக்கினார். தனக்கு என்னென்ன தெரியும், யார் யாரைத் தெரியும் என்பதாக இருந்த பேச்சு மிகுந்த மனவருத்தத்தைத் தந்தது.

ஜெயதேவன் அய்யா அவர்களின் கவிதைத் தொகுப்பை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய கணையாழி ம. ராஜேந்திரன் அய்யாவும் ஆரம்பத்தில் கொஞ்சம் நெளிய வைத்தார். ஒரு அரசியல்வாதியின் மேடையிலேயே,அவரை வைத்துக்கொண்டே இன்னும் கொஞ்சநாளில் அரசியல்வாதிகள் திருவோட்டைத் தூக்கி வருவது போல ஓட்டுப் பிச்சை வாங்க வந்து விடுவார்கள் என்று பேசும் போது நான் சிதம்பரம் அவர்களது முகத்தையே பார்த்தபடி இருந்தேன். ஒரு வேளை திட்டமிட்ட பேச்சு தானோ. அது ஒன்று தான் குறை. பிறகு அவர் பேசியதெல்லாம் கவிதை குறித்துத் தான். ஜெயதேவன் அவர்களின் சில கவிதைகளை அவர் சிலாகித்துப் பேசியது சிறப்பாக அமைந்தது.

பிறகு பேசிய கவிஞர் சிற்பி அவர்கள் இரண்டு படைப்பாளர்களுக்கும் உரிய மரியாதையைச் செய்தார். இருவரது படைப்புகளையும் அற்புதமாக எடுத்தாண்டு பேசினார். தஞ்சாவூர்க் கவிராயரின் கதைகளை மட்டுமல்லாது கவிதைகளையும் பேசியது கூடுதல் சிறப்பானது. ப.சிதம்பரம் அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக, இளைஞர்கள் எழுதுவதில்லை என்பதெல்லாம் இல்லை. ஏராளமானவர்கள் எழுதுகிறார்கள். அதில் திறமையானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் எழுத்து அமைப்புக்கும் ஒரு பாலம் இல்லை அவ்வளவுதான் என்று சொன்னவர். நான் சற்றும் எதிர்பாராத நேரத்தில், இப்போது கூட உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் சிறந்த இளம் படைப்பாளர் விருதை பூபாலன் என்ற இளைஞருக்குத் தரப்பட்டது என்று என் பெயரைக் குறிப்பிட்டுப் பேசினார். எனக்கு மிக நெகிழ்ச்சியாக இருந்தது. எனக்கும் பின் வரிசையில் அமர்ந்திருந்த சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் உட்பட நண்பர்களும் அவர் உங்கள் பெயரைச் சொல்லும் போது நீங்கள் எழுந்து நின்றிருக்க வேண்டும் உங்கள் மீது அனைவரின் கவனமும் விழுந்திருக்கும் என்று சொன்னார்கள். எனக்குத் தோன்றவில்லை.  நான் எழுந்திருந்தால், ஒரு சலசலப்பு ஏற்பட்டிருக்கும் அது ஒரு விளம்பரமாகக் கூட இருந்திருக்கும் அது தேவையில்லை என்று தோன்றியது. கொஞ்சம் கூச்சம் வேறு.

கவிப்பேரரசு இறுதியாகப் பேசினார். வழக்கம் போலவே சிறப்பான பேச்சு. ஆனாலும் இவரிடமும் ஒரு வருத்தம். இவர் தான் எழுத்து அமைப்பின் அறங்காவலர். ஆனால், பேசும்போதே நான் இன்னும் இரண்டு தொகுப்புகளையும் வாசிக்கவில்லை என்று தான் சொன்னார். நூல்களைத் தேர்வு செய்யும் தேர்வுக்குழுவின் தலைமைப் பொறுப்பில் இருப்பார். தேர்வு செய்யும் போது வாசிக்கவில்லை சரி. மேடையில் அமர்ந்திருக்கும் போதோ , பயணத்திலோ இரண்டு பக்கங்களைப் படித்து விட்டு அவற்றைப் பற்றிப் பேசியிருந்தால் படைப்பாளிகளின் மனம் மகிழ்ந்திருக்குமே.



அப்புறம், இரண்டே நூல்கள் வெளியீடு ஆனால் இரண்டு நூல்களின் படைப்பாளர்களுக்கு ஏற்புரையாற்றும் வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இருவர் சார்பாகவும் இரண்டு நிமிடம் மட்டும் தஞ்சாவூர்க் கவிராயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதுவும் ஒரு குறை.
எழுத்து அமைப்பின் நோக்கம், திட்டம் அனைத்தும் மிக அத்தியாவசியமான, சிறப்பான தன்மை கொண்டவைதான். எழுத்தாளர்களைக் கெளரவிக்கும் பொருட்டு அவர்களின் புத்தகங்களை 2000 பிரதிகள் அச்சிட்டு வெளியீட்டன்றே நூல்கள் விற்றதாகக் கணக்கு எடுத்துக்கொண்டு படைப்பாளர்களுக்கு மேடையிலேயே உரிய பணத்தைத் தந்தது மிகப்பெரிய விசயம்.
நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்ததும் மரபின் மைந்தன் அவர்கள், வைரமுத்து அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.இவர்தான் சிற்பி அவர்கள் சொன்ன பூபாலன். என்று.

சிற்பி அவர்களுக்கும், மரபின் மைந்தன் அவர்களுக்கும் என்னைப் பற்றிப் பேச என்ன  இருக்கிறது. அவர்களின் ஆளுமைக்கு முன் நான் ஒன்றுமில்லை. ஆனாலும் தனக்குத் தெரிந்த, இளையவனை ஊக்குவிக்க வேண்டும் என்பது தான் அவர்களது நோக்கம். மேன்மக்கள் மேன்மக்களே. இது என்னினும் இளையவர்களின் மீது நான் காட்டும் அன்புக்கான மேலதிக ஊற்றுக்கண்களைத் திறந்துவிடும் செயலாகிவிட்டது. இவர்களுக்கு நானாற்றும் நன்றிக்கடனும் அதுவாகவே இருக்கும்.

நிகழ்ச்சி முடிந்ததும் தவறிய அழைப்புகளைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு அழைத்தால், நாளை பள்ளியில் பாப்பாவுக்கு நடன நிகழ்ச்சி. வெள்ளைக் கையுறை, வெள்ளை ரிப்பன், வெள்ளைக் கம்மல் வேண்டுமாம். மணி வேறு ஒன்பது ஆகிவிட்டது, நான் , ஆன்மன், அனாமிகா, அகிலா, உமாபாரதி அனைவரும் ஆளுக்கொரு முக்கில் அலைந்து ஏறாத கடையெல்லாம் ஏறியும் கிடைக்கவில்லை. என்னால் அவர்களும் பசியோடு அலைந்தது தான் மிச்சம் டவுன் ஹாலில் போய்ப் பார்க்கலாம் என்று கிளம்பி பாதி தூரம் வந்தபோது அகிலா அழைத்து ஒரு கடையில் இருந்ததாகவும், வாங்கி விட்டதாகவும் சொல்லி உமாபாரதி அவர்கள் கொண்டு வந்தார். இரவு பத்தரை மணி. ஒரு போலி அன்னபூர்ணா மட்டுமே திறந்திருக்க , கடை சாத்தப்படும் போது கடைசி வாடிக்கையாளராகச் சாப்பிட்டுவிட்டு, நள்ளிரவில் வீடு திரும்பி அனைவரும் உறங்கி விட்டபின் கள்ளச்சாவி கொண்டு வீட்டைத் திறந்து சத்தமில்லாமல் தூங்கிவிட்டேன். காலையில் பத்தரை மணிக்கே வந்து விட்டதாகக் கணக்குச் சொல்லிவிடலாம். நிச்சயம் பத்து மணிக்கே தூங்கியிருப்பார்கள்.

அழகான மாலைப் பொழுது.