செவ்வாய், 20 டிசம்பர், 2016

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையில் நூல் அறிமுகம்

கடந்த 17.12.2016 அன்று தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையில் எனது ஆதிமுகத்தின் காலப்பிரதி கவிதை நூல் அறிமுகம் செய்யப்பட்டது.மாலை 4.30க்கு நிகழ்வு எனச் சொல்லி இருந்தார்கள். பகல் பன்னிரண்டுமணிக்குக் கிளம்பினோம். நான், அதிரூபன்,சோலைமாயவன், மற்றும் தம்பி சரவணன். செல்லும் வழியில் வத்தலகுண்டு சென்று ஜெயதேவன் அய்யா அவர்களைச் சந்தித்து ஐந்து நிமிடம் பேசிவிட்டுக் கிளம்பினோம். இருப்பினும் குறித்த நேரத்துக்கு நிகழ்வுக்கு ஆஜர்.

இலக்கிய நிகழ்வுகளுக்கே உரிய எழுதப்படாத விதியாக நிகழ்வு ஆரம்பிக்கும் போது ஆறு மணிக்கும் மேல் ஆகிவிட்டது ( ஆள் வந்தால் தானே ஆரம்பிக்க முடியும் ).

நிறைய நேரம் இருந்ததால் நண்பர்களுடன் பேச முடிந்தது.. பிறகு இப்படி வகை வகையாக புகைப்படங்கள் எடுக்கவும் முடிந்தது

மூன்று புத்தகங்கள் அறிமுகம், ஒவ்வொரு புத்தகத்தையும் இருவர் அறிமுகம் செய்வது மற்றும் ஒரு சிறப்புரை , ஒரு தலைமையுரை என தோழர் விசாகன் கன கச்சிதமாகத் திட்டமிட்டிருந்தார்.

தோழர் சிவசங்கர் அவர்களுடைய கடந்தைக் கூடும் கேயாஸ் தியரியும் சிறுகதை நூல், நாகராஜ் அவர்களுடைய தென்றலதிகாரம் கவிதை நூலுடன் எனது நூலும் அறிமுகம் செய்யப்பட்டது.

எனது கவிதைத் தொகுப்பை இளங்குமரன் அவர்கள் அறிமுகம் செய்துவைத்துப் பேசினார். முதன் முறையாக அவரைச் சந்திக்கிறேன். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கும் முன்பாகவே அவருடைய கூட்டுத் தொகுப்பு ஒன்றுக்கு கவிதை அனுப்பியிருக்கிறேன். அவர் எனது முகவரியை குறுஞ்செய்தி வழி கேட்டிருக்கிறார். நான் கவனக்குறைவாலும் மறதியாலும் அனுப்பாமல் விட்டிருக்கிறேன். அதைக் குறிப்பிட்டு அந்த நூலை அப்போது எனக்கு மேடையிலேயே பரிசளித்தார்.

எனது கவிதைகளைக் குறிப்பிட்டு எளிய , அழகான அறிமுகத்தை இளங்குமரன் அவர்கள் நிகழ்த்தினார். ஏற்புரையில் வழக்கம் போலவே சுமாராகப் பேசினேன். முதல் தொகுப்புக்காரர்களான இளையவர்களை ஒவ்வொரு கூட்டத்திலும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும் எனவும்விசாகன் அவர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்தேன்.
( பின்னணி யாதெனில், பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் எட்டு நூல்களையும் அறிமுகம் செய்வதாக சொல்லியிருந்தார், நானும் நூல் ஆசிரியர்களிடம் சொல்லி வைத்திருந்தேன். அது தவறிவிட்டது.. அதே தான் )

என்னுடைய தொகுப்பை அறிமுகம் செய்திருக்க வேண்டிய இன்னொருவர் மணிமொழி அவர்கள் வரவில்லை என விசாகன் அவர்கள் தகவல் தெரிவித்தார். அது தானே நமது அதிர்ஷ்டம் எப்போதும்...


நறுமுகை தேவி அவர்கள் வழக்கம் போல தனது கறார் பேச்சால் கவிதைத் தொகுப்பை அறிமுகம் செய்தார். அவருடைய கோணத்தில் விமர்சனமாக அமைந்தது அவரது உரை.


 நாகராஜ் அவர்களின் கவிதை நூலை அறிமுகம் செய்த இன்னொரு பேச்சாளர் எழுத்தாளர் திரு.எஸ்.செந்தில்குமார் அவர்கள். மிகவும் தண்மையாகப் பேசினார். டால்ஸ்டாய் குழந்தைகளைப் பற்றி எதுவுமே எழுதவில்லை எனத் துவங்கியவர். டால்ஸ்டாயின் வாழ்க்கையப் பற்றி சிறப்பான உரையொன்றைக் கொடுத்தார். அவரது பேச்சு மிக அனுக்கமாக இருந்தது.
ஒரே குறை, தனது வகுப்புத் தோழர், கவிஞர் நாகராஜ் அவர்களின் கவிதை நூல் அறிமுகம் செய்ய வந்தவர் அதைப்பற்றி, அவரது கவிதைகளைப் பற்றி அதிகம் பேசவில்லை. அது தான் அவசியம் என நினைக்கிறேன்.


கடந்தைக்கூடும் கேயாஸ் தியரியும் நூலை இருவர் அறிமுகம் செய்தனர் மிக எளிய பேச்சில், தனது அனுபவத்தினூடாகவும் வாசிப்பினூடாகவும் அந்தச் சிறுகதைத் தொகுப்புக்கு அழகான உரையை கண்மணிராசா வழங்கினார். அவரது பேச்சு சிறப்பாக அமைந்தது. ரேவதி முகில் அவர்களும் தனது கோணத்தில் கதைகளை அறிமுகம் செய்து வைத்துப்பேசினார். ஒரு கதையை அவர் அழகாக அறிமுகம் செய்துவைத்துப் பேசப் பேச , இன்னும் வாசிக்காமல் வைத்திருக்கும் அந்தத் தொகுப்பின் மீதான ஈர்ப்பு கூடியது.


ஏற்புரையில் சிவசங்கர் தனது பரந்துபட்ட பன்மொழி வாசிப்பைச் சொன்னபோது ஆச்சர்யமாகவும் பெருமையாகவும் இருந்தது, ஒரு நல்வாசகன் நல்ல எழுத்தாளனாவதில் ஆச்சர்யப்பட எதுவுமே இல்லை தான்.

கடைசியாகப் பேச வந்த திரு.பொன்முடி அவர்கள் நாக்ராஜ் அவர்களின் கவிதைகளை சிலாகித்தும், கூட்டத்தை சிலாகித்தும் ஒரு நீண்ண்ட உரையை வழங்கினார். அருமையான பேச்சு. ஆனாலும் நேரம் ..??

நிகழ்வில் படைப்பாளர்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டு விசாகன் வியப்பான ஏற்பாடொன்றைச் செய்திருந்தார். அது ரோஜா மாலை. ஆளுயர ரோஜா மாலை போட அரசியல் கூட்டமா இது. உங்கள் அன்பும் அன்பளிப்பாக சில புத்தகங்களும் போதுமே தோழர். 

இலக்கியக் கூட்டங்களில் பொன்னாடை, மாலை, துதி, காலில் கபக்கென விழுதல் போன்ற அசம்பாவிதங்களை மனம் ஏற்கவே மறுக்கிறது.கிளம்பும் போதே ஒருவரை சந்திக்கத் திட்டமிட்டிருந்தேன், வீட்டுக்கே சென்று சந்திக்க தயாராக வந்திருந்தேன். அது இயலாமல் போனது. ஆனாலும் அவசர வேலைகளுக்கிடையிலும் அன்புடன் நிகழ்வுக்கு வந்து தனது கவிதை நூலைத் தந்துவிட்டு ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு, கொஞ்ச நேரம் உடன் அமர்ந்து நிகழ்ச்சியை கவனித்துவிட்டு என மகிழ்ச்சியைத் தூவிச் சென்றார் எழுத்தாளர் நந்தன் ஸ்ரீதரன். அவருக்கு என் அன்பு...


கவிஞர் ஸ்ரீதர் பாரதி அவர்களும் வந்திருந்தார். அவரை நீண்ட நாட்களுக்குப்பின் சந்தித்ததில் மகிழ்ச்சி.

நிகழ்வு முடிய முடியக் கிளம்பி இரவு இரண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் .. மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை... பொள்ளாச்சி இலக்கிய வட்டம் இருக்கிறது. நிறைய வேலைகள் இருக்கின்றன நேரமே கிளம்பவேண்டும், அதற்கு நேரமே எழ வேண்டும்.... கொர்ர்

( இருந்த , நல்ல புகைப்படங்களைப் பதிவிட்டிருக்கிறேன் )

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

உடல் உறுப்பு தானம் - ஒளியேற்றும் மெழுகுவர்த்தியாதல்

கொலுசு மின்னிதழில் நான் எழுதும் கட்டுரைத் தொடரான தேநீர் இடைவேளையில் இந்த மாதம் உடல் உறுப்பு தானம் பற்றிய என் கட்டுரை ...


உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
                             - திருமூலர்

பொருள் : உடம்பு அழியும் போது,அந்த உடம்பைப் பற்றி நின்ற உயிரும் இறந்து அழிந்து செயலின்றி நிற்கிறது. எனவே உடம்பு அழியும் போது,உயிர் இயங்கி அடைய வேண்டிய குறிக்கோள்களான தவமாகிய துணையைப் பெறுதல்,மற்றும் இறையுணர்வை அடைதல் ஆகியவை இயலாத காரியமாகி விடுகின்றன. எனவே நான் உடம்பு அழியாது நிலைபெற்று நிற்பதற்கான வழிகளை அறிந்து,உடலை வளர்ந்து அழியாது நிலைபெறச் செய்வதன் மூலம்,உயிர் அல்லது ஆன்மாவினை வளர்த்து நிலைபெறச் செய்து,ஆன்மாவின் குறிக்கோள்களை அடைய எத்தனிக்கிறேன்.

உடல் - நமது ஆதார சக்தி. உடலோ , உடலின் உறுப்புகளோ இல்லையெனில் நாம் நாமல்ல. சுவரின்றி சித்திரம் வரைய இயலாது என்பதில் சுவர் என்பது உடல். உடலின்றி, உடலைப் பேணாமல் நாம் வாழ்வது இயலாது. இந்த உடல் பல்வேறு உறுப்புகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் உடலை இயக்குவதற்கான ஒவ்வொரு முக்கியப் பணியை ஓய்வின்றி செய்து வருகின்றது. ஏதாவது ஒரு உறுப்பு ஏதாவது ஒரு காரணத்தினால் செயலற்றுப் போகும் போது சிக்கல் எழுகிறது. இங்குதான் உடல் உறுப்புகள் தானம் செய்வதின் தேவைகள் அத்தியாவசியமாகின்றன.உடல் உறுப்புகள் தானம் செய்வது சமீப நாட்களில் பெருகி வருகிறது. நல்ல விழிப்புணர்வு அடைந்து வருவதாக உணரப்படுகிறது.
சர்வதேச உடலுறுப்புதான நாள் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்திய உறுப்பு தான வாரம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.. கடந்தவாரம் இது கொண்டாடப்பட்டதையொட்டியே இந்தப்பதிவு.

உடல் உறுப்பு தானம் என்பது, உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, உயிருடன் இருக்கும் போதோ அல்லது மூளைச்சாவு அடைந்த பின்போ  மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் உடல் உறுப்புகள் தேவைப்படும் ஒருவருக்கு, அல்லது பல்வேறு நபர்களுக்கு  தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.

உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் அல்லது மூளைச் சாவு அடைந்த பின்னர் தருவது. உயிருடன் இருக்கும் போது இருக்கும் இரண்டு சிறு நீரகத்தில் ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவற்றை தானம் செய்யலாம். இறந்த அல்லது மூளைச்சாவு அடைந்த பின்னர் இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா), இதயம், தசை, எலும்பு மஜ்ஜை, இரத்த நாளம் போன்ற  இருபத்தி ஐந்து வகையான உறுப்புகளையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புகளை தானமாக தர முடியும்.

ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத் - மூளைச் சாவு), அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்குப் பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம். ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு,  நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.18 வயது முதல் 60 வயது வரை யில் உள்ள ஆண்,பெண் இருவரும் உறுப்புதானம் செய்யலாம்.
உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு எந்த ஆபத்தும் நேராது என மருத்துவ உலகம் ஆணித்தரமாகக் கூறுகிறது. இரண்டு சிறுநீரக ங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பாதிப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தானம் செய்தபின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும்.நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதி சீராக வேலை செய்யும்.

ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும்.
ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட்டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக் கூடாது,மது அருந்தி இருக்கக் கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பிட்டிருக்கக் கூடாது,  உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகை இருக்கக் கூடாது, குறைந்தது மூன்று மாதங்களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூடாது, தோல் வியாதிகள், எய்ட்ஸ் போன்ற இரத்தத்தால் பரவும் வியாதியினராக இருக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொ ம்ளாமல், நிராகரித்து விடும். இதற் கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடீஸ் தா ன் காரணம். ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் “ப்ளாஸ்மா பெரிஸிஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறு வை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப் பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.”

தானம் செய்த உறுப்புகள் மற்றவர் உடலில் சரியாகப் பொருந்தி சரியாக வேலை செய்யுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும் பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொள்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடீஸ் தான் காரணம். ஆனால் தானமாக பெற்ற உறுப்பைப் பொருத்துவதற்கு முன்னால் “ப்ளாஸ்மா பெரிஸிஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை. மேலும், பல விதிமுறைகளைப் பரிசோதித்து ரத்த வகை உட்பட பல சோதனைகளை மேற்கொண்ட பின்னரே உடல் உறுப்புகள் பொருத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் வரை4,992 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன என்று தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உடல் உறுப்பு தானம் அதிகமாக உள்ளது, விழிப்புணர்வும் அதிகமாக உள்ளது. 2008-ஆம் ஆண்டு 7 நபர்கள் உடல் உறுப்புதானத்துடன் தொடங்கிய இந்தத் திட்டத்தில் தற்போது 895 பேர் உடல் உறுப்புகளை தானமளித்துள்ளனர். மொத்தம் 4,992 உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன. தற்போது 2 நாளைக்கு ஒருவர், என்ற நிலையில் மூளைச்சாவு அடைத்தவர்களின் உடல் உறுப்புகள் தானம் பெறப்படுகின்றன என்ற தகவலையும் அளித்துள்ளார். உடல் உறுப்பு தானத்தில் தேசிய அளவில் தமிழகம் தான் முதல் நிலையில் உள்ளது. அதற்காக மத்திய அரசு சமீபத்தில் தமிழகத்தை விருது வழங்கி கெளரவித்துள்ளது.

உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புவோருக்காக பிரத்யேகமாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், ஆன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் உறுப்பினராக பதிவு செய்யலாம் http://www.transtan.org/

எல்லாம் சரி. உடல் உறுப்பு தானம் குறித்து உங்களுக்கு இருக்கும் சில சந்தேகங்கள் எனக்கும் இருக்கின்றன

உடல் உறுப்பு தானம் குறிப்பிட்ட விழிப்புணர்வு அடைந்துவிட்ட நிலையில், நான் பார்த்த வரையில் ஒரு அறுவை சிகிச்சை கூட அரசு மருத்துவமனையில் ஏழை நோயாளிக்கு செய்து உறுப்பு தானம் தரப்பட்டதாக கேள்விப்படவேயில்லை. அனைத்தும் தனியார் மருத்துவமனைகளில் மிகவும் வசதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த வரம் கிடைக்கிறது. சும்மா சொல்லவில்லை, புள்ளிவிவரமும் அதைத்தான் சொல்கிறது.


தமிழகத்தில், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வசதிகள் உள்ளன. இதயம், சிறுநீரகம், நுரையீரல் உட்பட, 348 உடல்உறுப்புகள் தேவையானோருக்கு பொருத்தப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளில், 2,517 உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனைகளில், உடல் உறுப்பு மாற்று சிகிச்சை வசதிகள் இல்லாததே, பெரும்பாலான உடல் உறுப்புக்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்க காரணம் என்கிறார்கள். இதனால், உடல் உறுப்பு தான திட்டம், தனியார் மருத்துவமனைகள், அங்கு சிகிச்சை பெறும் பணக்காரர்களுக்கு மட்டுமே பயன்பெறும் வகையில் மாறிவிட்டது. இதனால் இது ஒரு பெரிய வியாபாரமாக வளர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனைகள் இதில் பணம் கொழிக்கிறார்கள். இதற்கு மாற்றாக தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவக்கல்லுாரி   மருத்துவமனைகளிலும், உடல் உறுப்பு தான மாற்று அறுவை சிகிச்சை வசதியை ஏற்படுத்த வேண்டும்; அப்படி செய்தால், ஏழை நோயாளிகளுக்கும், உடல் உறுப்பு தானத்தின் பலன் கிடைக்கும்.

அடுத்து, உடல் உறுப்புகள் கொள்ளை பணத்துக்கு வியாபாரமாக்கப்படுவதால் , உடல் உறுப்புகளுக்காக மூளைச்சாவு உண்மையில் அடையாத விபத்து ஏற்பட்டவர்களை மருந்து கொடுத்து மூளைச்சாவு அடைய வைத்து, பின்பு அவரது உறுப்புகள் எடுக்கப்பட்டு விற்கப்படுவதாக செய்திகள் உலவுகின்றன. இதில் சில தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்கள் தவிர இடைத்தரகர்கள் என பலர் பணத்துக்காக இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபடுகின்றனர். இதை நினைத்தாலே நடுக்கமாக இருக்கிறது. ஒரு திரைப்படத்தில் காட்டியது உண்மையாக இருந்தால் கார்பன் மோனாக்ஸைடு கொடுத்து, ஒருவனை மூளைச்சாவு அடைய வைக்க முடியும், அதன் மூலம் அவர்கள் நினைத்ததை அடைய முடியும். உயிர் காக்கும் மருத்துவமனைகள் உயிர் பிடுங்கும் கொலைக்களங்களாக மட்டும் ஆகிவிடவே கூடாது என்பதே வேண்டுதல்.

எது எப்படியோ, தெரிந்தே மண்ணுக்குள் மக்கப்போகும் உடல் உறுப்புகளை தானம் செய்வது இறந்து கொண்டிருக்கும் ஒரு உயிரை பிழைக்க வைப்பதல்லவா. அதை அனைவரும் செய்ய வேண்டும். இன்னும் இன்னும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பல்வேறு வகைகளிலும் அதிகமாக வேண்டும்.

மனிதம் மரித்துக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் அதிகமானோர் உறுப்புகளைத் தானம் செய்யத் தயங்குகின்றனர். மண்ணில் மக்கியோ, நெருப்பில் எரிந்து சாம்பலாகியோ வீணாய்ப் போகும் இந்த உடல் உறுப்புகள், பிறருக்குப் பொருத்தப்படுவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்க்கும், அவரது குடும்பத்தினர் உட்பட உறவினர்களுக்கும் வாழ்வில் ஒளியாகலாம் அல்லவா. ஆகவே உடல் உறுப்புகளை தானம் செய்ய நாம் முன்வர வேண்டும். அதற்கான விதிமுறைகளையும் வழிமுறைகளையும் நாம் அறிந்திருக்க வேண்டும். இறந்த சிலமணி நேரங்களில் கொடுக்கப்படாத உறுப்புகள் வீண் தான்.

செவ்வாய், 22 நவம்பர், 2016

கலை இலக்கியப் பெருமன்ற விருது விழாவும் புதுக்கோட்டை நினைவுகளும்


எனது ஆதிமுகத்தின் காலப்பிரதி கவிதைத் தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து வழங்கும் சிறந்த கவிதை நூலுக்கான கே.சி.எஸ் அருணாசலம் நினைவு விருது கடந்த நவம்பர் பன்னிரண்டாம் தேதி புதுக்கோட்டையில் வைத்து வழங்கப்பட்டது.

விருது அறிவித்தவுடன் நண்பர்களுக்கு தகவல் பரிமாறியிருந்தேன் வாய்ப்புள்ளவர்கள் வரட்டும் என்று. பல்வேறு அலுவல்களால் உடன் யாரும் வர இயலவில்லை. எச்சந்தர்ப்பத்திலும் உடன் இருக்கும் மாமா செந்தில்குமார் மட்டும் வருவதாக முன்பே கூறியிருந்தார். இருவரும் மகிழ்வுந்தில் செல்லலாம் என முடிவானது. நெடுந்தூரம் என்பதால் ஓட்டுநராக தம்பி சரவணனை உடன் அழைத்துக்கொண்டோம்.. கவிஞர் கோவை சசிக்குமார் அவர்களும் இணைந்து கொண்டார்.

புதுக்கோட்டை செல்வதின் பிரதான நோக்கங்களில் ஒன்று சகோதரி ரோஸ்லின் வைகறையையும் , ஜெய்குட்டியையும் சந்திப்பது. அவர்களிடம் முந்தைய நாள் அலைபேசியில் பேசிய போது பள்ளி இருப்பதாகக் கூறினார். எனவே நான் சனிக்கிழமை இரவு விருது விழா நிகழ்வு முடிந்ததும் அறையில் தாங்கிவிட்டு ஞாயிற்றுக்கிழமைக் காலை அவர்களைச் சந்திக்க வருவதாகத் தான் கூறியிருந்தேன்.

காலை ஆறுமணிக்குக் கிளம்பி அங்கு சென்ற போது பன்னிரண்டு மணி ஆகியிருந்தது. விழாவுக்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். பேருந்து நிலையத்துக்கு எதிரிலேயே அறை எடுத்திருப்பதாகவும் அங்கு சென்றுவிட்டு நகர்மன்றத்துக்கு வந்துவிடுமாறும் சொல்லியிருந்தார்கள்.
விடுதியின் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி உள்ளே இருக்கும் பையை எடுக்கக் குனிந்தேன். பின்னால் யாரோ என்னத் தொட்டு அழைப்பது போல உணர்ந்து திரும்பிப்பார்த்தால் இன்ப அதிர்ச்சியாக ஜெய்குட்டி நின்றிருந்தான். உடன் அவனது அம்மாவும். உண்மையிலேயே இன்ப அதிர்ச்சி தான். ஜெய்குட்டி என்று அவனைக் கட்டிக்கொண்டேன். அப்போதுதான் கவனித்தேன். அவனது கையில் ட்ரிப்ஸ் போட்ட ஊசி அப்படியே இருந்தது. ரோஸ்லின் சகோதரி சொன்னார் நான்கு நாட்களாக சரியான காய்ச்சல் , இப்போது மருத்துவமனை போய் ட்ரிப்ஸ் போட்டு வந்தோம் இன்று பள்ளிக்கு இருவரும் விடுமுறை என்றார். அவரை, காரில் அனுப்பி வைத்துவிட்டு தம்பியை அவர்களை வீட்டில் விட்டுவிட்டு வீட்டையும் பார்த்து வா என்று அனுப்பினோம். அதற்குள் நாங்கள் கொஞ்சம் பழங்கள் வாங்கிக் கொண்டோம். இப்போதே அவர்களது வீட்டுக்குச் சென்று பார்த்து வரலாம் என்று முடிவானது.

கொஞ்ச நேரத்தில் அவர்களது வீட்டுக்குச் சென்றுவிட்டோம். வைகறையின் இழப்புக்குப் பின் இப்போது தான் இந்த வீட்டிற்கு வருகிறேன். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். வைகறையின் இழப்பு அவர்களை நிலைகுலைய வைத்திருக்கிறது என்பது சத்தியமான உண்மை. சகோதரி அழுதுகொண்டே இருந்தார். சமாதானம் சொல்லிக்கொண்டே இருந்தோம். பிறகு பிரிய மனமில்லாமல் ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டோம்.

மாலை ஆறுமணிக்கு நகர்மன்றத்தில் விருது விழா துவங்கியது. ஒரு விருது விழா எப்படி ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக நிறைவாகச் செய்திருந்தார்கள். விருதாளர்களை மேடையின் இடப்பக்கம் தனியிருக்கையில் அமர வைத்தனர். விருதாளர்கள் மிக நல்ல முறையில்  பொறுமையாக ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்டனர். அவர்களது நூல் விவரங்கள், செயல்பாடுகள் அடங்கிய சுய விவரக்குறிப்பை புத்தகமாக அச்சடித்துக் கொடுத்திருந்தனர் அனைவர்க்கும். மேடையில் முஸ்தபா அவர்கள் அழகான குரலில் மீண்டும் அறிமுகம் செய்து ஒவ்வொருவராக அழைத்தார்.

என் முறை வந்த போது , விழா மேடையின் நடு நாயகமாக முதலில் அழைத்து அமர வைக்கப்பட்டேன். அப்போது என்னைப்பற்றிய குறிப்புகள் வாசிக்கப்பட்டன. பின்னர் பா.பா.ரமணி அய்யா அவர்கள் பொன்னாடை போர்த்தினார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விருதும் பொற்கிழியும் அளித்தார். பின்னர் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.நிகழ்வில் அனைவரும் சிறப்பாகப் பேசினர். பாடல்களாலும் மேடை அழகானது. மொத்தத்தில் மிகச் சிறப்பான விழா. மகிழ்வாகவும் பெருமையாகவும் உணர்ந்த தருணம்.

எனக்காக நிகழ்வுக்கு வந்திருந்த தேவதா தமிழ் கீதா அம்மா  மற்றும் அமிர்தா தமிழ் ஆகியோர் பொன்னாடையுடனும் புத்தகப் பரிசுடனும் வந்து நிகழ்வு முடியும் வரை இருந்து வாழ்த்திவிட்டுச் சென்றனர். தோழி வினோ தாஸ் அவர்களும் நிகழ்வுக்கு வந்து இறுதிவரை இருந்துவிட்டுச் சென்றார்.
அடுத்தநாள் காலையில் கிளம்பி தஞ்சை பெரிய கோவில் சென்றுவிட்டு ஊர் திரும்பினோம். மறக்க முடியாத நிகழ்வு … நினைவுகளில் பல காலம் நிற்கும்.
வைகறை மனைவிக்கு தக்க சமயத்தில் கொஞ்சம் பணம் கொடுத்தோம். அது உண்மையிலேயே அவசியமான சமயம் என்பதையும் உணர்ந்திருந்தேன். பணம் கொடுத்த போது அவர் வாங்க வில்லை. ஆனாலும் அது எங்களது கடமைகளிலும் வைகறைக்குப் பட்டிருக்கும் கடன்களிலும் ஒன்று என்று சொல்லி கைகளில் திணித்தோம். அது எனது பணமாக மட்டும் இருந்திருந்தால் இங்கு குறிப்பிட்டிருக்கவே மாட்டேன். என்னை நம்பி வைகறை வீட்டுக்குப் போகிறேன் என்று சொன்னதும் பணம் கொடுத்து விட்டவர்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் எனவே நான் வைகறை மனைவியிடம் கொடுத்த பணத்தை, விபரங்களோடு இங்கு குறிப்பிடுகிறேன்.

இரா.பூபாலன்
5000
அமிர்தா முத்துவேலவன்
5000
சோலை மாயவன்
3500
.தி.செந்தில்குமார்
1000
கோவை சசிக்குமார்
1000
மொத்தம்
15500

இது முதல் தவணைதான், இன்னும் சில மாதங்களில் மீண்டும் அவருக்கு நம்மாலானதைச் செய்ய வேண்டும். செய்வோம்.

புதுக்கோட்டைக்காரர்களை நினைத்தால் பெருமையாக உள்ளது. இரண்டு ஆண்டுகள் தான் வைகறை அங்கு இருந்திருப்பார். அவர்களோடு பழகியிருப்பார். அவரது இறப்புக்கு அணி திரண்டு வந்ததாகட்டும், பின்பும் தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு பல்வேறு வகைகளில் உதவுவதாகட்டும் மனதை நெகிழச் செய்கிறது. நன்றாக இருப்பீர்கள் நண்பர்களே.

தங்கம் மூர்த்தி அய்யாவின் பள்ளியிலேயே ரோஸ்லின் சகோதரிக்கு வேலை தந்துள்ளார் அதுமட்டுமல்லாது ஜெய்குட்டியையும் செலவின்றிப் படிக்க வைப்பதாக உறுதியளித்துள்ளார் என்பதைக் கேட்க மனம் நெகிழ்கிறது. கொஞ்ச நாட்களில் முத்துநிலவன் அய்யா உள்ளிட்ட வீதி, விதைக்கலாம் குழு மற்றும் அத்துனை புதுக்கோட்டை நண்பர்களும் இணைந்து இரண்டரை லட்சத்தைத் திரட்டி வைகறையின் குடும்பத்துக்கு நிதியாக அளித்துள்ளனர். எத்தனை இடங்களில் இப்படிச் செய்வர். சில ஊர்களில் கூட இருந்தவன் சகபடைப்பாளி போய்விட்டால் ஒர் இரங்கற்கவிதையோடு கடமையை முடித்துக்கொள்வோம். அவனது குடும்பத்தைப் பற்றி நினைத்திடோம். மீறி ஏதாவது செய்யலாம் என்றாலும் ஆயிரம் அரசியல்கள், ஈகோக்கள், இழவு வீட்டிலும் எதிர்பார்க்கப்படும் மாலைகள் மரியாதைகள் என நிறைய நிறையத் தடைகள் உண்டு... அத்தனையையும் தாண்டி வைகறை என்ற நல்ல படைப்பாளிக்கும் மிகச்சிறந்த மனிதனுக்கும் புதுக்கோட்டை மண் நல்ல மரியாதையைச் செய்திருக்கிறது. மனம் நிறைந்த நன்றி.

வியாழன், 17 நவம்பர், 2016

SIM SWAP FRAUD – நவீன யுத்தியில் வங்கிக்கணக்கைத் திருடுதல்

SIM SWAP FRAUDஇன்று எனது வங்கியிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது SIM SWAP FRAUD பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் வங்கிக் கணக்கை பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று. அப்போதுதான் SIM SWAP FRAUD என்றால் என்ன என தேடிப்பார்க்கத் துவங்கினேன்.

தொழில்நுட்பம் மிக வேகமாக வளர வளர, தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் கும்பலின் மதிநுட்பமும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதில் மிகவும் நவீனமான திருடும் முறை தான் SIM SWAP FRAUD.

அதாவது, சகல உதவிகளுடனும் ஒரு திருடன் உங்களது எண்ணை தனதாக்கிக் கொள்வான். சிம் கார்டு தரும் நெட்வொர்க் நிறுவனத்தினரின் உதவியோடோ அல்லது வேறு எந்த வகையிலோ அவன் உங்களது எண்ணிலேயே புதிய சிம் கார்டை வாங்கி விடுவான். உங்களது பழைய சிம் கார்டு செயலிழந்து விடும். பிறகென்ன, உங்களுக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் எல்லாம் அந்த எண்ணுக்குத் தானே வரும். இது சாத்தியமா என்றால் சாத்தியம் தான். நாமே சிம் தொலைந்து விட்டது என புகார் அளித்தால் அடையாள அட்டையை வாங்கிக் கொண்டு புதிய சிம் தருகிறார்கள் அல்லவா . அப்படித்தான். ஆனால் இது சட்டத்துக்குப் புறம்பாக நமது சிம் கார்டை வேறொருவர் அபகரித்தல்.

ஒரு திருடனிடம் உங்கள் வங்கிக் கணக்கின் இணையப் பரிவர்த்தனைக்கான பயனர் எண், கடவுச்சொல் ஆகியவற்றை திருட முடிந்து விட்டால் அடுத்த கட்டம் முன்பெல்லாம் உங்களுக்கு அழைத்து வங்கியிலிருந்து வரும் One Time Password ( OTP ) எண்ணை எப்படியாவது நயவஞ்சகமாகப் பேசி கேட்டு வாங்கி உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைத் திருட முடியும். இப்போது, உங்கள் எண் அவன் வசம் இருப்பதால் அதற்கு அவசியமற்று எளிதில் திருடிக் கொள்வான்.

மேலும், மொபைல் பேங்கிங் மூலம் வெகு சுலபமாக உங்களது மொத்த வங்கிக் கணக்கையும் மேலாண்மை செய்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

இது எப்படி செயல்படலாம் என்றால்

  • இணைய திருடர்கள் உங்களது மின்னஞ்சலிலோ, வாட்சப் அல்லது முகநூல் வழியாகவோ ஒரு லிங்கை அனுப்பி நீங்கள் அதைத் தொடுவதன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கு ஏனைய விவரங்களை எடுத்துக்கொள்ள அல்லது உங்களிடமே வாங்கிக் கொள்வார்கள்
  • பிறகு உங்களது எண்ணை மொபைல் ஆப்பரேட்டர்களிடம் சொல்லி ப்ளாக் செய்வார்கள்
  • போலியான ஆதாரங்களையும் , ஆவணங்களையும் கொடுத்து உங்கள் பெயரிலேயே அந்த எண்ணை அவர்கள் வாங்குவார்கள்
  • இப்போது நீங்கள் உங்கள் எண்ணை எதற்கெல்லாம் உபயோகித்தீர்களோ அதற்கெல்லாம் அவர்கள் உங்கள் முகமூடியுடன் எளிதில் உபயோகிப்பார்கள்


இதை எளிதில் விளக்கும் படியாக வங்கிகள் சில தகவல்களைத் தந்துள்ளன அவற்றை இங்கு நீங்கள் பார்க்கலாம்

இதிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம் ?

  • வழக்கத்துக்கு மாறாக நமது அலைபேசியில் சிக்னல் நெடுநேரம் இல்லாமல் போனால் வேறு எண்ணிலிருந்து உடனடியாக மொபைல் ஆபரேட்டரைத் தொடர்பு கொண்டு என்ன ஆகியிருக்கிறது என விசாரிக்க வேண்டும்
  • உங்கள் எண் வேறு யாரோ ஒருவரால் ப்ளாக் செய்யப்பட்டிருப்பின் புகார் அளிக்க வேண்டும், மேலும் அந்த எண்ணைக் கொடுத்திருக்கும் வங்கிகளிலும் புகார் அளிக்க வேண்டும்
  • வெளிநாட்டு எண் அல்லது தெரியாத எண்ணிலிருந்து வெறுப்பேற்றும்படி தொடர்ந்து அழைப்பு வந்தால் பதிலளிக்க வேண்டாம், அதற்கு பயந்து செல்பேசியை அணைத்து வைக்கவும் கூடாது. இதுவும் அவர்களது ஒரு யுத்தி.
  • வங்கிப் பரிவர்த்தனையை அவ்வப்போது கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும்
  • நமது செல்பேசியின் IMEI எண்ணை எக்காரணத்தைக் கொண்டும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது
  • வங்கியிலிருந்து அழைப்பதாகச் சொன்னாலும் நமது பயனர் கணக்கு, கடவுச்சொல், OTP போன்ற தகவல்களை யாருக்கும் சொல்லக் கூடாது.
நூற்றில் ஒருவருக்கு அல்லது ஆயிரத்தில் ஒருவருக்கு இப்படி நடக்கலாம் .. ஆனால் அது நாமாக இருக்கக் கூடாது அல்லவா ? விழிப்புடன் இருப்போம். பகிருங்கள்

சனி, 12 நவம்பர், 2016

வைகறையும் பொள்ளாச்சி இலக்கியவட்டமும்

கடந்த மே மாதம் கந்தகப்பூக்கள் இதழ் கவிஞர் வைகறை சிறப்பிதழாக வந்தது. அதில் வைகறையும் பொள்ளாச்சி இலக்கியவட்டமும் என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையை இங்கு பகிர்கிறேன் ...

வைகறையும் பொள்ளாச்சி இலக்கியவட்டமும்கவிஞர் வைகறை இப்போது நம்மோடு இல்லை. கவிதைகளாகவும், கவிதைகளின் மீதான தீராத வேட்கையுடனும், கவிதை இலக்கிய செயல்பாடுகள் மீதான கொள்ளைக் கனவுகளோடும் வாழ்ந்த ஒரு மனிதன், சக கவிஞன், நெருங்கிய ஸ்நேகிதன் வைகறை தனது 36ஆவது வயதிலேயே மிக அவசரமாக வாழ்வை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

வைகறையோடு எனக்கும், எங்களது பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துக்கும் மிக நெருக்கமுண்டு.
பொள்ளாச்சி இலக்கிய வட்டம் 17.03.2013 அன்று நானும், கவிஞர் க.அம்சப்ரியா அவர்களும் இன்னும் சில நண்பர்களுடன் இணைந்து துவக்கினோம். ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிறு இலக்கியக் கூட்டம் நடைபெறும். எட்டாவது இலக்கியக் கூட்டத்துக்கு முதன் முதலில் கவிஞர் வைகறை வந்திருந்தார்.

வைகறை அநேகமாக தமிழ்நாட்டின் அனைத்து நல்ல இலக்கியக் கூட்டங்களுக்கும் ஒரு முறையாவது போயிருப்பார், நல்ல கவிஞர்களுடன் ஒரு முறையாவது எப்படியாவது பேசியிருப்பார். கவிதைகளின் மீது அவ்வளவு அன்பும் ஈடுபாடும் கொண்டவர். ஹைக்கூக்களின் மீதும் மிகுந்த ரசனையும் ஈடுபாடும் கொண்டவர். ஹைக்கூ எழுதுவதற்கென்றே தனியே ஒரு நோட்டுப்புத்தகத்தை வைத்திருந்தார். ஒரு நல்ல கவிதையைப் படித்துவிட்டால் பொறுக்க மாட்டார். படைப்பாளிக்கு அழைத்தோ அல்லது செய்தியிலோ பேசிவிடுவார் அல்லது நண்பர்களுக்கு அழைத்து அதைச் சிலாகிப்பார். அப்படி என்னிடம் நிறையப்பேரைப் பற்றி நிறைய முறை பேசியுள்ளார். முதன் முறையாக பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துக்கு வந்து விட்டுச் சென்ற இரவே பேருந்தில் செல்லச் செல்ல அலைபேசியில் பேசினார். இலக்கியவட்டம் மிகச் சிறப்பாக நடந்தது எனவும் வேறெங்கும் பார்க்காத கூட்டம் வந்ததாகவும் குறிப்பாக பெண்களின் கூட்டம் இங்கு அதிகம் வந்திருப்பது மிகச் சிறப்பான ஒன்று எனவும், படித்ததில் பிடித்தது, கவியரங்கம், செய்தி மடல் வெளியிடுவது என ஒவ்வொரு செயல்பாடுகளையும் பாராட்டினார்.அவருக்கு அப்போதே இலக்கிய வட்டம் மிகப்பிடித்தமானதாகிவிட்டது.

தர்மபுரியில் பணியில் இருந்த போது ஒவ்வொரு மாதமும் தவறாமல் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துக்கு வந்து விடுவார். பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தைப் பற்றி பல இடங்களில் பல மேடைகளில் குறிப்பிட்டுப் பேசியும் இருக்கிறார். வரும் போதெல்லாம் அவர் வந்து சேர்வது நள்ளிரவு பன்னிரண்டு அல்லது ஒரு மணியாக இருக்கும். அழைக்க மாட்டார். பேருந்து நிலையத்திலேயே அமர்ந்திருந்துவிட்டு காலையில் தான் அழைப்பார். நீங்கள் நன்றாகத் தூங்கும் நேரம் ஏன் தொந்தரவு செய்யனும்னு அழைக்கலை என்பார். பலமுறை திட்டியுள்ளேன். ஒரு முறை நானாக இரவு ஒரு மணிக்கு அழைத்து அவர் வந்து விட்டார் எனத் தெரிந்த பின்பு போய் வீட்டுக்கு அழைத்து வந்தேன். இன்னொரு முறை காலை 4 மணிக்கு அழைத்து வந்தேன். பின்னர் நகருக்குள் நண்பர் சோலைமாயவன் அறையெடுத்துவிட்டதால் எப்போது வந்தாலும் அவரது அறைக்குச் சென்று விடுவார்.

ஒரு கூட்டத்தில் அவரது நந்தலாலா இணைய இதழை அறிமுகம் செய்து வைத்தோம். பொள்ளாச்சி இலக்கிய வட்டப் படைப்பாளிகளை நந்தலாலாவுக்கு படைப்புகள் அனுப்பச்சொல்லிக் கேட்டுக் கொண்டோம். அது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. தொடர்ந்து ஜனனன் பிரபு, லாவண்யா சுந்தரராஜன் என சிலரது நூல்களை பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கக் கேட்டுக் கொண்டோம். உற்சாகமாக வந்து சிறப்பாக அறிமுகம் செய்து பேசிச்சென்றார்.

சென்ற வருட புத்தகக் கண்காட்சிக்கு எங்களது தொகுப்பைக் கொண்டு வரலாம் என்று முடிவானவுடன் வைகறையும் இணைந்தார். கவிதைத் தொகுப்பின் ஆரம்ப வேலைகளை நாங்கள் பார்த்துக்கொள்ள, இறுதிக்கட்ட வடிவமைப்பில் இரவு முழுதும் எங்கள் கூடவே இருந்தார். அவரது ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப்படுகிறான் கவிதைத் தொகுப்பின் ஒவ்வொரு எழுத்திலும் நாங்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறோம். சென்னையில் புத்தகங்கள் அச்சடிக்க கூடவே வந்தார். நான் , நிலாரசிகன் மற்றும் வைகறை மூவரும் மணி ஆப்செட் சென்றது புத்தகங்களை அச்சுக்குத் தந்துவிட்டு ஒரு சிறிய கடையில் வியர்க்க வியர்க்க பிரியாணி சாப்பிட்டது எல்லாம் இன்னும் நிழலாடிக் கொண்டிருக்கின்றன. கவிதைகளின் மீது மட்டுமல்ல கவிதை நூல் வடிவமைப்பிலும் அவரது ஆர்வமும் அறிவும் வியக்க வைத்தது. ஒவ்வொரு பக்கத்தையும் பார்த்துப் பார்த்து வடிவமைத்தார்.

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் ஆறு நூல்களும் முதற்கட்டமாக சென்னையிலும் பின்னர் பொள்ளாச்சியிலும் வெளியிட்டோம். சென்னையில் அவரது தொகுப்பை திரை இசையமைப்பாளரும் வைகறையின் சகோதரருமான என்சோன் பாக்கியநாதன் வெளியிட கவிஞர் யாழி பெற்றுக்கொண்டார். கவிஞர் செந்தில்பாலா அவரது தொகுப்பை மிகச்சிறப்பாக அறிமுகம் செய்துவைத்தார். பொள்ளாச்சியில் அவரது தொகுப்பை இளஞ்சேரல் அவர்கள் வெளியிட பூக்குட்டி கண்ணனுடன் விழாவுக்கு வந்திருந்த அனைத்துக் குழந்தைகளையும் மேடைக்கு அழைத்துப் பெற்றுக்கொள்ள வைத்தார். அது தான் வைகறை. அன்றைய நிகழ்வுக்கு தனது மனைவி மற்றும் மகன் ஜெய்குட்டியுடன் வந்திருந்தார். அவரது தொகுப்பை சுரேஷ் மான்யா அறிமுகம் செய்துவைத்தார்.

பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் தொகுப்புகளை பல்வேறு இடங்களில் அறிமுகம் செய்து வைத்தார். எனது மற்றும் கவிஞர் அம்சப்ரியா அவர்களின் தொகுப்புகளை புதுக்கோட்டை வீதி அமைப்பில் அறிமுகம் செய்ய ஏற்பாடு செய்தார். வலைப்பதிவர் திருவிழாவில் பொள்ளாச்சி இலக்கிய வட்டக் கவிஞர்களை கவிதைப்போட்டியில் கலந்துகொள்ளச் சொல்லி ஊக்குவித்தார். இப்படி அவர் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துக்கு மிக நெருக்கமானவராக இருந்தார்.

இந்த வருடம் பத்து நண்பர்கள் தொகுபபு வெளியிடலாம் என்றிருக்கிறோம் உங்களது தொகுப்பையும் வெளியிடலாமா எனக் கேட்டேன். இல்லை நண்பரே கொஞ்சம் பொருளாதாரத்தைத் தயார் செய்து விட்டுச் செய்யலாம் என்றார். பொருளாதாரம் எப்போதும் நமக்குப் பிரச்சினை தான் சொல்லுங்கள் தயார் செய்கிறேன் என்றேன். வேண்டவே வேண்டாம் என்று சொன்னார். ஆனால் ஒரு தொகுப்புக்குக் கவிதைகள் தயார் என்றார் அதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இன்னொரு தொகுப்பும் தயார் அதை மின்னூலாக்கலாமா என்றார். நான் இதை அவரிடம் ஏற்கனவே சொல்லியிருந்தேன் எனது ஒரு கவிதைத் தொகுப்பு, கட்டுரைகள் மற்றும் அம்சப்ரியா அவர்களது கட்டுரைகள் ஆகியவற்றை மின்னூலாக்கி பதியலாம் என்று. இப்போது அவரும் தனது கவிதைகளைத் தயார் செய்திருந்தார். எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். அதன் தலைப்பு " மரணத்தின் இசைக்குறிப்புகள்". அப்போது அது உறுத்தவில்லை. இப்போது உறுத்துகிறது. இன்னும் மின்னூல் வடிவில் என்னிடம் உள்ளது. ஜூன் அல்லது அதன் பின்னர் வெளியிடலாம் என்று சொல்லியிருந்தேன். மேலும் இன்னொரு தொகுப்புக்கான கவிதைகளையும் சிறப்பாகத் தொகுத்து அனுப்பியிருந்தார் அதன் தலைப்பு " நான்காவது தோட்டாவுக்கான குறி ". ஆக, இரண்டு தொகுப்புகளுக்கான கவிதைகள் என்னிடம் உள்ளன. அவற்றை பொள்ளாச்சி இலக்கிய வட்டம் மூலமாக வெளியிட வேண்டும் என்பதுதான் அவரது ஆசை. அந்தக் கனவை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும். அவரது நூலை வெளியிடுவது மட்டுமல்லாது, அவரது குடும்பத்துக்கு பொருளாதார ரீதியாகவும் பொள்ளாச்சி இலக்கிய வட்ட நண்பர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்துள்ளோம். விரைவில் அதையும் செய்ய வேண்டும்.

மே மாதம் 22ம் தேதி பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் குழந்தைகள் கலைக்கொண்டாட்ட நிகழ்வுக்கு குடும்பத்துடன் வரவேண்டும் என்று சொல்லியிருந்தேன். அவசியம் வருகிறேன் உங்கள் வீட்டில் தான் தங்குவோம் எனச் சொல்லியிருந்தார். மே 22 வந்துவிட்டது. வைகறைதான் வர முடியாத தூரத்துக்குப் போய்விட்டார்..


காலம் அவரை வெகு சீக்கிரத்தில் அழைத்துக்கொண்டுவிட்டது. அவரது கவிதைகள் இருக்கின்றன காலம் இருக்கும்வரைக்கும் வைகறையின் பெயரைச் சொல்லிக்கொண்டிருக்க...

வியாழன், 10 நவம்பர், 2016

தீபாவளி - ஒரு நாள் கூத்தின் ஊழித்தாண்டவம்

கொலுசு மின்னிதழில் நான் எழுதும் கட்டுரைத் தொடரான தேநீர் இடைவேளையின் எட்டாவது பாகம் இந்த மாதம் ....

தேநீர் இடைவேளை # 8

தீபாவளி - ஒரு நாள் கூத்தின் ஊழித்தாண்டவம்
எப்போது வேண்டுமானாலும்
ஆகலாம் ஞானியாக
இனி எப்போது மாறுவேன்
குழந்தையாக

- .அம்சப்ரியா

கவிஞர் க.அம்சப்ரியா அவர்களின் இந்தக் கவிதை எனக்குப் பிடித்தமான ஒன்று. இந்த பிரபஞ்ச இயக்கம் முன்னோக்கி நகர்வது. காலம் தான் இந்த பிரபஞ்ச ரகசியங்களில் கணிக்க முடியாத, கலைக்க முடியாத ஒரு அமைப்பு. நிகழ்காலம் மட்டும் தான் நம் வசம். நிகழ் காலம் என்பது என்ன ? இந்த வருடமோ , இந்த மாதமோ, இந்த வாரமோ ஏன் இந்த நாளோ கூட அல்ல. இந்த நொடி. இந்தக் கணம் மட்டும் தான் நிகழ்காலம். இந்தக்கணத்தைத் தாண்டிய எதுவுமே நம் கைகளில் இல்லை. அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்களும், போன நொடி தந்துவிட்டுப் போன அனுபவங்களும் தான் இந்த பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கின்ற தொய்வற்ற சக்தி. மனித இனத்தை ஓடு ஓடு என விரட்டிக்கொண்டேயிருக்கிற மகாசக்தியும் அதுவே.

நமக்கு எப்போதுமே நாஸ்டால்ஜியா கொஞ்சம் தூக்கலாக இருக்கும். நமது பாரம்பர்யம், தொன்மை , அந்தநாள் ஞாபகங்கள் என மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருப்போம் முடிவற்று. அப்படி இந்த தீபாவளிக்கு ஊரிலிருந்து வாழ்த்துச் சொல்ல அழைத்த நண்பன் ஒருவன் நாஸ்டால்ஜியா கணக்கைத் துவங்கிவைத்தான்.

சிறுவயது முழுமையும் கிராமமும், கொண்டாட்டமும், நண்பர்களும் நிறைந்தது. கூடவே வறுமையும் . அந்த நாளில் தீபாவளி , பொங்கலுக்கு ஏங்குவோம். மற்ற நாட்களில் கிடைக்காத இனிப்பு, உடைகள் , கொண்டாட்டங்களைக் கொண்டுவருபவை இந்தப் பண்டிகைகள் தாம்.

தீபாவளிகளில் கொஞ்சம் பட்டாசு வாங்கித் தருவார்கள், பசங்களுடன் சேர்ந்து கொண்டாட்டமாக அதை வெடித்துவிட்டு , வெடிப்பவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டும், சேட்டைகள் செய்தபடியும் ஊர்சுற்றுவோம். விஜயகாந்த் ரசிகர் மன்றத் தலைவர் தெரிந்த அண்ணன், தலைவர் படம் ரிலீஸ் ஆனால் இலவச டிக்கெட் தந்து விடுவார். பிரதியுபகாரமாக சாக்குப்பைகளில் லாட்டரி டிக்கெட்களைக் கிழித்து நிறைத்துத் தருவார்கள். தலைவர் திரையில் தோன்றும் காட்சிகளிலெல்லாம் ஹேய் என கத்தியபடி தூக்கி வீசி ஆரவரிக்க வேண்டும். அப்படி சில திரைப்படங்களுக்குப் போனதுண்டு. உறவினர்கள் வீட்டுக்கு வருவார்கள் , ராக்கெட் விட்டு அடுத்த வீட்டில் விழுந்து பஞ்சாயத்தான கதை, யாருடைய வேட்டியிலாவது பட்டாசு தெறித்து ஓட்டையாக அவர் துரத்திய கதை, கையிலேயே வெடி வெடிப்பதாக சீன் போட்டு கை வெந்த கதை என தீபாவளிக் கதைகள் நிறைய உண்டு. இப்படி பால்யத்துக்குத் திரும்பமுடியாத ஏக்கம் எப்போது மனதில் வந்தாலும் கவிஞர் அம்சப்ரியாவின் இந்தக் கவிதை நினைவுக்கு வரும்.

கொஞ்சம் வளர்ந்த பிறகு வெடி வெடிப்பது படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. கொஞ்சம் வாசிக்க ஆரம்பித்தபின்பு சூழலியலில் கவனம் செலுத்திய பின்பு சுத்தமாக விட்டுவிட்டேன். திருமணமாகி குழந்தை பிறந்தபின்பு அவளுக்காக கொஞ்சமே கொஞ்சம் வெடி, மத்தாப்பூ விடுவதோடு சரி. சென்ற வருடம் பாரதியிடம் சொல்லி இருந்தேன் இந்த வருடம் தான் கடைசி வெடிகள் வேண்டாம் , பறவை விலங்குகளெல்லாம் பயந்து ஓடுகின்றன பார் என்று. அவளும் அடுத்த வருசம் வேண்டாம் என்று சொல்லி இருந்தாள். இந்த வருடம் கேட்ட போது ஆமாம் இந்த வருடம் பசுமை தீபாவளி கொண்டாடலாம் என முடிவு செய்துவிட்டோம். ஆனாலும் அவளுக்குக் கொஞ்சம் ஆசையிருப்பதை உணர்ந்து கொண்டேன். குழந்தை தானே. இரண்டு பெட்டிகள் கம்பி மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம் மட்டும் வாங்கித்தந்துவிட்டேன். மகிழ்ந்தாள். அடுத்த வருடம் இன்னும் வளர்ந்துவிடுவாள். இதுவும் தேவையிருக்காது..

நான் பார்த்த வரைக்கும், வழக்கத்தை விடவும் இந்த வருடம் பட்டாசு விற்பனை, வெடிப்பது எல்லாம் வெகுவாகக் குறைந்துவிட்டதாகவே தோன்றியது. இதை உறுதிப்படுத்திக்கொள்ள செய்திகளில் தேடினால், பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கடந்த ஆண்டை விடவும் பட்டாசு விற்பனை இந்த ஆண்டு இருபது சதவீதத்துக்கும் மேல் குறைந்து விட்டதாக செய்தி வெளியிட்டிருந்ததைப் பார்த்தேன். அதற்கு அவர் பல்வேறு காரணங்கள் சொல்லியிருந்தார். ஆர்வமின்மை, விடுமுறைகள் அதிகமின்மை, மேலும் சீனப்பட்டாசுகளின் ஆதிக்கம் என பல்வேறு காரணங்கள்.

சென்ற ஆண்டை விடவும் சீனப்பட்டாசுகளின் விற்பனையும் இறக்குமதியும் இந்த ஆண்டு குறைந்துள்ளது. காரணம், இணையம், முகநூல், வாட்சப் என அனைத்து ஊடகங்களிலும் சிவகாசிப் பட்டாசுகளை வாங்குங்கள் சீனப்பட்டாசுகள் வேண்டாம் என தொடர்ந்து விழிப்புணர்வு தந்ததின் விளைவாகக் கூட இருக்கலாம். ஒட்டு மொத்தமாக பட்டாசு வெடிப்பது குறைந்ததற்கும் இப்படியான விழிப்புணர்வு விளம்பரங்களும் ஒரு காரணமாக இருப்பதை மறுப்பதற்கில்லை. நல்ல விஷயம் தானே.

சென்ற ஆண்டை விடவும் பட்டாசுகளின் விற்பனை குறைந்திருந்தாலும் அதன் விளைவுகள் அதிகரித்திருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. அதன் விளைவுகளில் இரண்டு முக்கிய விளைவுகள் சென்ற ஆண்டை விட கணிசமாக அதிகரித்துள்ளன.. ஒன்று தீபாவளியை ஒட்டி பட்டாசுகளால் ஏற்படும் விபத்துகள். இரண்டு பட்டாசுகளால் ஏற்படும் ஒலி மாசு. விபத்துகளும், ஒலி மாசுவும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகம். எப்படி ? கீழ்க்கண்ட புள்ளி விவரங்களை செய்தித்தாள்கள் தருகின்றன.

தீபாவளியன்றும் அதற்கு முந்தைய தினமும் பட்டாசு வெடித்ததில் தமிழகம் முழுவதும் 781 பட்டாசு தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட பல மடங்கு அதிகமாகும்.

தீபாவளி பண்டிகையான சனிக்கிழமை மற்றும் அதற்கு முந்தைய தினத்தில் பட்டாசு வெடித்ததில் தமிழகம் முழுவதும் மொத்தம் 781 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. சென்னையைப் பொருத்தவரை 141 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
இதில், 24 பேர் காயம் அடைந்துள்ளனர். இரண்டு தினங்களிலும் ராக்கெட் பட்டாசுகள் மூலம் 446 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. சாதாரண பட்டாசு மூலம் 335 விபத்துகள் நடந்துள்ளன.

இவற்றை முன்பே கணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 900 தீயணைப்புப் படை வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். 39 தீயணைப்பு நிலையங்கள் தவிர மக்கள் நெருக்கம் அதிகமுள்ள 34 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்டாசு விபத்து குறித்து மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கூற்றின்படி, “2012-ல் 911 பட்டாசு விபத்துகளும், 2013-ல் 301 விபத்துகளும், 2014-ல் 62 விபத்துகளும், 2015-ல் 84 பட்டாசு விபத்துகளும் நடந்துள்ளன”.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தீ விபத்துகள் பல மடங்கு அதிகமாகியுள்ளன. இதற்கு முக்கியக் காரணம் மழையின்மை. கடந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பே மழை பெய்ததால் பல இடங்களில் ஓலைக் குடிசைகள் உள்ளிட்டவை நனைந்து இருந்தன. எனவே அதிக தீ விபத்துகள் ஏற்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு மழை தாமதமானதால் பல இடங்களில் பட்டாசு தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன.. 

இரண்டாவது விளைவு ஒலிமாசு , தீபாவளிப் பண்டிகையின் போது வெடிக்கும் பட்டாசுகளின் காரணமாக காற்றில் ஒலி மாசு அதிகமாகும் . இந்த ஆண்டு அது மிகவும் அதிகமாகக் காணப்பட்டது. சென்னை உட்பட சில நகரங்களில் ஒலி மாசு முன்பைவிடவும் குறைந்திருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் அதிகரித்தே இருந்திருக்கிறது.

ஒலி மாசு, பகல் நேரத்தில் அதிகபட்சமாக 55 டெசிபல் அளவும்; இரவில் 45 டெசிபல் அளவும் இருக்கலாம். ஆனால், தீபாவளிக்கு முன்பு 73 டெசிபல் என்றிருந்த ஒலி அளவு, தீபாவளியன்று 88 லிருந்து 90 டெசிபல் வரை உயர்ந்திருக்கிறது. இதற்கும் மழை இல்லாமல் போனது காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. காற்றில் ஈரப்பதமின்மை, தூசிகள் நிறைந்திருப்பது போன்றவை முக்கிய காரணங்கள்.

ஆக , மனிதர்கள் உட்பட அனைத்து உயிர்களும் இயற்கையால் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகிறது. மரங்களை வெட்டி வீழ்த்துவதன் மூலம் மழையை இழக்கிறோம், மழையை இழப்பதன் மூலம் அனைத்தையுமே இழக்கிறோம். நாளுக்கு நாள் புவி வெப்பமயமாகி வருகிறது. மேலும் அனைத்து விதத்திலும் நாம் வாழ்வாதாரங்களை இழந்து வருகிறோம். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது முற்றிலும் உண்மைதான்.

அது மட்டுமா , தீபாவளிக்கு நாம் வெடித்துத் தீர்க்கும் பட்டாசுகள் கக்கும் புகை நமக்கு மிகப்பெரிய பகை. அதன் மூலம் காற்று மாசு கடுமையாக இருக்கிறது. டெல்லியில் காற்று மாசு காரணமாக மக்கள் அல்லாடிக் கொண்டிருப்பதை செய்திகளில் பார்க்கிறோம் அல்லவா. அப்படி ஒரு நிலை நம் ஊருக்கும் வர அதிக காலம் ஆகாது. தொழற்சாலைகள், வாகனங்கள், பட்டாசுகள் எல்லாமே பெருகி காற்றை காலி செய்ய ஆரம்பித்துவிட்டன. நாம் விழிப்புணர்வுடன் செயல்படவில்லை என்றால்.. விளைவுகள் மோசமானதாக இருக்கும்.

இவை நேரடியாக பட்டாசுகளின் பாதிப்புகள் இவற்றைத் தாண்டி மேலும் ஒரு செய்தியைப் படித்தேன் அது இன்னும் அதிர்ச்சியைத் தந்தது. பட்டாசுகள் வெடிப்பதன் மூலம் டன் கணக்கில் ஒரே நாளில் நாம் சாலைகளில் குப்பைகளைக் குவிக்கிறோம். அதுவும் பெரிய ஆபத்து தானே. சென்னை நகரில் மட்டும் தெருக்கள், சந்துகள் மற்றும் சாலைகளில் சேர்ந்த பட்டாசு குப்பைகள் 91 டன். அவை இரவுக்குள் அகற்றப்பட்டன. எப்படித் தெரியுமா ? கூடுதலாக 1,120 துப்புரவுப் பணியாளர்களைப் பணியமர்த்தி மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். ஊரே தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்க நமது குப்பைகளை அவர்கள் அள்ளிக் கொண்டிருந்திருக்கின்றனர். இவர்கள் மட்டுமல்ல ஓட்டுநர்கள், நடத்துனர்கள், காவலர்கள், மின் ஊழியர்கள், இப்படி முக்கியப் பணியில் இருக்கும் பலருக்கும் ஏது பண்டிகைகள் ?

இப்படியாக ஒரே ஒரு நாள் கூத்துக்காக , பணத்தை வாரியிறைத்து, பட்டாசுகள் வெடித்து காசைக் கரியாக்குகிறோம், அதன் மூலம் விபத்துகளை ஏற்படுத்தி உயிர்,உடமைகளைச் சேதப்படுத்துகிறோம், அதன் மூலம் ஒலி மாசு ஏற்படுத்தியும், புகைகளைக் கக்கியும் காற்றைக் களங்கம் செய்கிறோம், அதன் மூலம் டன் கணக்கில் குப்பைகளைக் கொட்டி நிலத்தைக் களங்கம் செய்கிறோம்,

ஒரே ஒரு நாளுக்காக அதன் பாதிப்புகளை வருடம் முழுதும் ஏற்றுக்கொள்ளவும் தயாராகிவிட்டோம் … நமது கொண்டாட்டங்களை மறுபரிசீலனை செய்தால் தான் என்ன ? வெடிகள் இல்லாமல் அல்லது இயற்கையை பாதிக்காத மருந்துகளற்ற நவீன வெடிகளைக் கண்டுபிடித்தால் தான் என்ன ?

கொலுசு மின்னிதழில் இந்தக் கட்டுரையை வாசிக்க :

http://kolusu.in/kolusu/kolusu_nov_16/index.html#p=14 

வெள்ளி, 4 நவம்பர், 2016

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது விழா அழைப்பிதழ்

நண்பர்களுக்கு வணக்கம் ,

எனது ஆதிமுகத்தின் காலப்பிரதி கவிதைத் தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து வழங்கும் சிறந்த கவிதை நூலுக்கான கே.சி.எஸ் அருணாசலம் நினைவு விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.ஆதிமுகத்தின் காலப்பிரதி எனது மூன்றாவது கவிதை நூல். இரண்டாவது கவிதை நூலான பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு நூலுக்கு உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் சிறந்த இளம் படைப்பாளருக்கான விருது கிடைத்தது. முதல் தொகுப்பான பொம்மைகளின் மொழி கவிதை நூலுக்கு இளம் இந்தியா அமைப்பு வழங்கிய சிறந்த இளம் எழுத்தாளருக்கான விருது கிடைத்தது.

தமிழ் நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் நவம்பர் பன்னிரண்டாம் தேதி , மாலை ஐந்து மணிக்கு , புதுக்கோட்டையிலுள்ள நகர்மன்றத்தில் நடைபெற இருக்கிறது.
இத்துடன் அழைப்பிதழை இணைத்துள்ளேன் ..விருது பெறும் தருணம், நண்பர்களின் அருகாமை தான் விருதின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன். வாய்ப்புள்ள நண்பர்கள் நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டுகிறேன். சந்திக்கலாம்.

புதுக்கோட்டை எனக்கு நெகிழ் நிலம் ... அவ்விடத்தில் விருது விழா ஏற்பாடானது மனதை இன்னும் நெகிழச் செய்கிறது.

உடன் இருக்கும், இருக்கப்போகும் நண்பர்களுக்கு எனது நன்றியும் மனம் நெகிழ் ப்ரியங்களும். நண்பர்களால் தான் சாத்தியமாகிறது எத்துயரிலிருந்தும் மீள வருதல்.

உடன் விருது பெறும் எழுத்தாளர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்...

புதன், 26 அக்டோபர், 2016

மழை = கவிதை

# 1
பெருங்கோடை நிலத்தில்
நாலே நாலு துளி தான்
பெய்திருக்க
அவசரமாய் வந்து
கவிதை கேட்கிறாய்
மழை வேண்டுமா
கவிதை வேண்டுமா

# 2

மென் தூறல் கிளர்த்தும்
மண் வாசனைக்கு
மயங்குபவன்
தவறவிடுகிறான்
நகரத்துக்குச் செல்லும் கடைசிப் பேருந்தை

# 3

முன்னேற்பாடுகள்
எதுவுமின்றி ஒரு
மழைநாளில்
நமக்குள் நிகழ்ந்துவிடுகின்ற
ஒரு முத்தத்தை

இன்னும் என்னால்
கவிதையாக்க முடியவில்லை.

# 4

முற்றத்தில்
மழை கவிதை எழுதிக்கொண்டிருக்க
மழைக் கவிதைதான் வேண்டுமா

# 5

முதன் முதலில் 
என்னைச் சபித்தபடிப் பெய்கிறது 
இந்த மழை. உன் கண்களில் பெய்யும் 
மழையைப் பொருட்படுத்தாது 
வழியனுப்பி வைக்கிறேன் நான்