வியாழன், 25 டிசம்பர், 2014

சட்டமும் நீதியும் எளிய மனிதர்களுக்கானது அல்ல

கிரிஜா அம்மா.

கிரிஜா அம்மாவைக் கடந்த நான்கு மாதங்களாகத் தெரியும். நான்குமாதங்களாகத் தொடர்ந்து கோவையிலிருந்து தனியாக பொள்ளாச்சி இலக்கிய வட்ட நிகழ்வுக்கு வந்து கலந்து கொள்பவர். ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிபவர். ஒரு பேருந்துப் பயணத்தில் நாகப்பன் என்கிற அதே பள்ளியின் ஆசிரியர் பழக்கமாகி அவர் மூலமாக கிரிஜா அம்மா இலக்கிய வட்டத்துக்கு வரத் தொடங்கினார்

சென்ற ஞாயிறு நடந்த இலக்கியக் கூட்டத்துக்கு நாகப்பன், கிரிஜா அம்மா இருவரும் வரவில்லை. நாகப்பனிடம் கேட்கலாம் என்று அழைத்தேன். அவர் கிரிஜா அம்மாவுக்கு சிறு விபத்து, கையில் அடி. கங்கா மருத்துவமனையில் நான்கு நாட்களாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அறுவை சிகிச்சை முடிந்தது என்றும் சொன்னார். பதறிவிட்டேன். வயதானவர், சர்க்கரை நோயாளி வேறு என்று. நேற்று மாலை அவரைப்பார்க்கலாமென மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன்.

கடந்தவாரம் பள்ளி வேலைகள் முடிந்து மாலை நேரமாகி வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார். சாலையோரத்தில் நடந்து போய்க்கொண்டிருந்தபோது ஒருவன் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து நிலை தடுமாறி மோதிவிட்டான். அவன் நிலையிலேயே இல்லை. கடும் போதையாம். இடித்துவிட்டு எழுந்து என்ன ஆச்சு என்று கேட்டானாம். இவருக்குக் கையில் பலத்த அடி கை எலும்பு துருத்திக் கொண்டு வெளியில் தெரியுமளவிற்கு பலத்த அடி. அப்படியே பக்கத்திலிருந்த காவல் நிலையத்தில் தான் முதலில் புகார் செய்திருக்கிறார். அதற்குள் இவருடன் பணிபுரியும் ஆசிரியர்களும் காவலர்களும் வந்து விட்டனர்.

கொஞ்ச நேரத்தில் காவல்நிலையத்தில் அழைத்து விசாரிப்புக்குப் பின் அவனை அனுப்ப முடிவு செய்து , நீங்க போங்க நாங்க பாத்துக்கறோம் என்று சொல்லிவிட்டார்களாம்.. காரணம் அவன் அமைச்சரின் உறவினன் என்றாம். அந்த அமைச்சர் மீது எனக்குக் கொஞ்சம் மரியாதை இருந்தது. ஒரு நண்பனின் நூல் வெளியீட்டு விழாவுக்கு எளிமையாக வந்திருந்தார். அப்போது நண்பன் என்னிடம் சொன்னபடி நிறைய எளிய மனிதர்களுக்கு உதவும் குணம் கொண்டவராம். இவன் அவரது பெயரைச் சொல்லித் தப்பிக்கிறான். இதைக்கேள்விப்பட்டதும் அங்கிருந்த ஆசிரியர்கள் கத்தி கூச்சலிட்டு FIR போட வைத்திருக்கிறார்கள். அப்படியே ஆனாலும், பெரிய அளவில் சேதமோ, உயிரிழப்போ இல்லாததால் அதிகபட்சம் கொஞ்சம் அதாவது 5000 ரூபாய்க்குள் அபராதம் கிடைக்கும் என்கிறார்கள்.

கிரிஜா அம்மாவை மருத்துவமனையில் பார்க்கும் போது கண் கலங்கினார். அவருக்கு சொந்தம் என்று யாருமே இல்லை, பத்தாம் வகுப்புப் படிக்கும் ஒரே மகன். அவனுக்குத் தேர்வு இப்போது. எனவே பக்கத்தில் நண்பர் வீட்டில் தங்கி பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறான்.

இதுவரை ஒரு லட்சம் ரூபாய் செலவாகியிருக்கிறது. இவரிடம் கொஞ்சம் கூட பணம் இல்லை. பள்ளி நிர்வாகம் தான் செலவு செய்து பார்க்கிறது என்றார். எப்படியானாலும் அந்தப் பணத்தை திரும்ப பணிக்கு வந்து கட்டியாக வேண்டும். இவருக்கு குணமாக, இன்னும் முன்று மாதங்கள் ஆகிவிடும். கையில் 6 போல்ட்டு மற்றும் நட் வைத்திருக்கிறார்கள். இருபது நாட்கள் படுக்கையிலேயே இருக்க வேண்டும். இவர் மருத்துவமனையிலிருந்த நாட்களில் கூட உடன் பணிபுரிந்த ஆசிரியர்கள் தான் தினம் ஒருவராக இரவும் பகலும் உடன் தங்கி கவனித்துக் கொண்டுள்ளார்கள். இருபது நாட்களும் தூரத்து உறவு ஒருவர் வீட்டில் தங்கச் சொல்லியிருக்கிறார்கள். இந்த விபத்து இவரது வாழ்க்கையை அடியோடு மாற்றுகிறது எனக் கண்கலங்குகிறார்..

மிகவும் வேதனையாக இருக்கிறது. சட்டம் எத்தனை ஓட்டைகளைக் கொண்டுள்ளது. அதில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உள் நுழைந்து வெளி வரலாம் என்பது எத்தனை நகைப்புக்குரியது.

எளிய மனிதர்கள் வேறு எங்கு போவது நியாயம் வேண்டி.?

கிளம்பும் போது கிரிஜா அம்மா சொன்னார். இலக்கிய வட்டத்துக்கான உங்கள் குறுஞ்செய்தி வந்தபோது நாகப்பனிடம் சொன்னேன் " சே, கை நல்லா இருந்திருந்தா இந்நேரம் பொள்ளாச்சில இருந்திருப்போம்ல " என்று , மேலும் " அடுத்த மாதம் யாருங்க சிறப்பு விருந்தினர் ? கவலைப்படாதீர்கள் அடுத்த மாத இலக்கிய வட்டத்துக்கு வந்துடுவேன் " என்று. கண்கள் கலங்கின. அதற்குமேல் அங்கு இருக்க முடியவில்லை சீக்கிரம் குணமாகி வாங்கம்மா போதும் என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டேன்.

வாழ்க நமது சட்டமும், அதை தம் இஷ்டத்துக்கு வளைத்து ஒடிக்கும் அரசியல்வாதிகளும் பெரியமனிதர்களும்.

எளிய மனிதர்களே உங்களை நீங்களே கவனித்துக்கொள்ளுங்கள். ஒரே ஒரு ஓட்டு போட்டுவிட்டு நாம் அவர்களிடம் எதுவும் எதிர்பார்க்க வேண்டாம். அந்த ஒரே ஒரு ஓட்டுக்கு அவர்கள் நம் காலடியில் கிடந்த நாடகத்தை கணக்கில் கொள்ளவும் வேண்டாம்.

அரசியல்வாதிகளின் அடிப்பொடிகள் கூட அவரது நிழலில் இருந்துகொண்டு இந்தச் சமூகத்தையே சித்ரவதை செய்துகொண்டிருக்கிறார்கள். யார் மாற்றுவது ..?


மின்சாரம் அது மின்சாரம் ...

மேட்டுப்பாளையம் - கோவை சாலையில் குருடம்பாளையம் ஊராட்சியில் மட்டும் மின்னுகிறது சூரியசக்தி மின் விளக்கு.

மகிழ்ச்சியாக இருக்கிறது, பெருகி வரும் மின் தேவையிலும், குறைவாக இருக்கும் ( குறையாகவும்) மின் உற்பத்தியிலும் மாற்று எரிசக்தி என்று சொல்லப்படுகிற Renewable Energy Sources ல் மிக முக்கியமான சூரிய ஒளியைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் அத்தியாவசியமானது. சூரிய ஒளி தீர்ந்துவிடவா போகிறது..?

குருடம்பாளையம் ஊராட்சி இந்த விஷயத்தில் கோவைக்கு முன்னுதாரணம். மற்ற எல்லா தெரு விளக்குகளும், நெடுஞ்சாலை விளக்குகளும் சூரிய சக்தியில் இயங்க ஆரம்பித்தால் எத்தனை சிறப்பாக இருக்கும்.? மின்சக்தி நிறைய சேமிப்பாகும், பராமரிப்பு செலவொன்றும் பெரிய அளவில் இருக்காது. மின்கலன்களை மட்டும் முறையாகப் பராமரித்தால் போதும்.

சில நாட்கள் முன்பு டெல்லியிலிருந்து அலுவல் நிமித்தம் வாடிக்கையாளர் ஒருவர் வந்திருந்தார். அவருடன் பேசியது சுவாரஸ்யம். காரில் போகும் போது இந்த சூரிய சக்தி மின்விளக்கைக் காட்டிப்பேசும் போது அவர் சொன்ன சம்பவம் அதிர்ச்சியடைய வைத்தது.

அவர் ஊரில் கோடைக்காலம் கொடுமையாக இருக்குமாம், கிட்டத்தட்ட 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை போகுமாம். அப்படி வெயிலின் உக்கிரம் தீவிரத்தைக் காட்டும்போது ட்ரான்ஸ்ஃபார்மர்கள் செயலிழந்து விடுகின்றன. எனவே மின் வினியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிடுகிறது. இது பலநாட்கள் தொடரும் என்கிறார்.

ஒரு முறை பத்து நாட்களாக அவ்வூரில் மின் வினியோகம் தடை செய்யப்பட்டதால், பலமுறை முறையிட்டும் கண்டுகொள்ளாத நிலையில் மக்கள் கொதித்துப் போய் மின்சார வாரியத்தை முற்றுகையிட்டிருக்கிறார்கள்.. கிட்டத்தட்ட 500 பேருக்கும் மேல் கூடிவிட்டார்கள் என்றார். மின்வாரிய உயரதிகாரிகள் வந்து விசயத்தை விசாரித்தார்களாம்.

முழு விபரத்தையும் பொறுமையாகக் கேட்ட அதிகாரிகள் சரி, நீங்கள் இந்த முறையீட்டை அப்படியே எழுத்தில் எழுதிக் கொடுங்கள் மேலும் அந்த முறையீட்டுடன் நீங்கள் கடைசியாகக் கட்டிய மின்கட்டண ரசீதையும் இணையுங்கள் நீங்கள் மின்வாரியத்துக்கு பணம் செலுத்துகிறீர்கள் உங்கள் குறைகளைக் களைய வேண்டியது எங்கள் கடமை என்று சொல்லி இருக்கிறார்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அங்கு ஒரு ஆள் கூட இல்லையாம்.

இங்குதான் நிறுத்தினார். வியப்பாக ஏன் என்றேன்.

அந்த ஊர் நல்லவங்க மின்கட்டணம் கட்டி பல வருடங்கள் ஆகின்றனவாம், மின் கட்டணம், அபராதம் எல்லாம் சேர்த்தால் ஆளுக்கு பல லட்சங்கள் கணக்கு வருமாம்.

அதிர்ந்து விட்டேன். அவர் சொன்ன தொனியைக் கேட்டதும் அப்படி சிரிப்பு வந்து விட்டது. பின்பு கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தது.

அவரது இந்தத் தகவல் அதிர்ச்சியாக இருந்தாலும், அவருக்கு நம்மவர்கள் தந்தது இன்னும் சிறப்பு. கோவை அழகான ஊர், மக்கள் பண்பானவர்கள் என்றெல்லாம் சொன்னார். தமிழ் தனக்குப் பிடித்த மொழி என்று அவர் சொன்ன போது பெருமையாக இருந்தது. தமிழில் சில வார்த்தைகள் தெரியுமென்றும் சொன்னார். என்னென்ன வார்த்தைகள் தெரியுமெனக் கேட்டேன். வணக்கம், சாப்பிடுங்க என்று மெளன ராகம் சர்தார்ஜி போல சொன்னார். ரேவதியைப்போல யாரோ சொல்லிக் கொடுத்திருக்ககூடும். மேலும் அவர் சொன்ன வார்த்தையில் தான் அதிர்ந்து விட்டேன். தமிழில் நான் வெறுக்கும் மிக மோசமான கெட்ட வார்த்தையைச் சொன்னார். அதிர்ச்சியுடன் இது மிகக் கேவலமான வார்த்தை யார் சொல்லித்தந்தது எனக் கேட்டேன். சென்னையில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் சொல்லிக் கொடுத்ததாம். அந்த ஓட்டுநர் யாரோ குறுக்கே வந்த போது நடந்த சண்டையில் திட்டினாராம் இந்த வார்த்தையில். இவர் இது என்ன வார்த்தை , பணம் பாக்கி தர வேண்டிய இவருக்குக் கீழே இருக்கும் விற்பனையாளர்களைத் திட்ட இந்த வார்த்தையை உபயோகித்துக் கொள்ளலாம் என்று ஓட்டுநரிடம் கேட்டதற்கு விரிவாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

தயவுசெய்து இந்த வார்த்தையை உபயோகிக்காதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டு அவரை வழியனுப்பி வைத்தேன்.


இவருடன் ஒரு மூன்றுநட்சத்திர உணவகத்துக்கு உணவருந்தச் சென்றிருந்தேன். அன்றைக்கு இருபதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பெண்கள் அங்கு உணவருந்த வந்திருந்தார்கள். உணவுக்குப்பின் நம்மாட்கள் வெளியில் புகைத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த வெளிநாட்டுப் பெண்கள் இவர்களை விட நீளமான வெண்குழல்வர்த்தியை எடுத்துப் புகைக்க ஆரம்பித்துவிட்டார்கள். நம்மாட்கள், என்ன கலாச்சாரம் இது பெண்களும் புகைக்கிறார்கள் என்று புகைந்தார்கள். கொஞ்ச நேரத்தில் அவர்கள் புகைத்து முடித்த மிச்சத் துண்டை எங்கு வீசுவது எனத் தேடிக்கொண்டிருந்தார்கள். காரணம் அங்கு குப்பைத் தொட்டியே இல்லை. நம்மாட்களோ காலுக்கடியில் போட்டு ஏற்கெனவே நசுக்கியிருந்தார்கள். வாயிற்காப்பாளர் ஓடி வந்து இங்கேயே ஓரமாகப் போட்டுவிடுங்கள் சுத்தம் செய்பவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று சொல்லியும் கேட்கவில்லை, அவர்கள் கேட்டும் கொடுக்கவில்லை. எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மீண்டும் நெடுந்தூரம் உள்ளே நடந்து உணவறைக்கு வெளியே இருந்த குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டே வந்தார்கள். நம்மவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

# கெட்டதுலயும் நல்லது இருந்தா கத்துக்க வேண்டியதுதானே ..? நல்லதைமட்டும் ….


திங்கள், 22 டிசம்பர், 2014

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் இருபதாவது சந்திப்பு

பொள்ளாச்சி இலக்கிய வட்ட இருபதாவது சந்திப்பு நேன்று இனிதே நடந்தது.

படித்ததில் பிடித்தது பகுதியில் தாங்கள் வாசித்த அனுபவங்களை புன்னகை ஜெயக்குமார், ஆனந்தக்குமார் ஆகியோர் பகிர்ந்து கொள்ள , வீராசாமி அவர்களின் சூழலியல் பாடலுடன், தவில் செல்வராஜ் அவர்களின் அதிரும் தவில் இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது.

இதே நாளில் குரூப் 4 தேர்வு நடப்பதால் வழக்கமாக வரும் சில நண்பர்களும், மாணவர்களும் முந்தைய நாளிலும் அன்றைய காலையிலும் அழைத்து வர முடியாது என்று சொல்ல சொல்ல என் முகம் சுருங்கிக் கொண்டே போனது. நிறையப் பேர் விடுமுறை விண்ணப்பத்தை அளித்துவிட்டார்கள். தேர்வின் காரணமாக வழக்கமாக நடக்கும் பள்ளியை விடுத்து வேறு அரங்கத்தில் நடத்த நேர்ந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். காரணம் , நமது நண்பர்களில் பலருக்கு பொள்ளாச்சி இலக்கிய வட்ட சந்திப்புக்கு அழைக்க வேண்டியதே இல்லை. சரியாக மூன்றாவது ஞாயிறு அந்தப்பள்ளியின் அந்த அரங்கத்துக்கு அன்புடன் வந்து விடுவார்கள். இந்த முறை அனைவருக்கும் இட மாற்றத்தைச் சொல்லி விட்டோம் என்றாலும், அலை பேசியைத் தவற விட்டுவிட்ட கோகிலா, என் குறுஞ்செய்தியைப் பார்க்க மறந்த வீராசாமி அய்யா, மாணவன் நாகராசு உட்பட ஆறு பேர் அங்கு சென்று எனக்கு அழைத்து என்ன இன்று இலக்கியக் கூட்டம் இல்லையா என்று கேட்டதும் மனம் நெகிழ்ந்தது. அவர்களை அரங்கத்துக்கு வர சொல்லிவிட்டு முதல் வேலையாக அந்தப்பள்ளிக்குச் சென்று அதன் வாசலில் " இன்று இங்கு நடக்க இருந்த பொள்ளாச்சி இலக்கியவட்டம் இடமாற்றம் " என்ற அறிவிப்பை எழுதி ஒட்டிவிட்டு ஓடி வந்தோம்.

அன்போடு எங்களை வழிநடத்தும் வாசுதேவன் அய்யா , சித்ராதேவி அம்மா இருவருக்கும் கண் அறுவை சிகிச்சை. அவர்களும் வர இயலவில்லை. காலை பத்து மணி வரையிலுமே அரங்கில் யாரும் இல்லை. இன்னும் சோகமாகிப் போனேன். சிறப்பு விருந்தினர்களையும் சாப்பிட வைத்து அரங்கத்துக்கு அழைத்து வந்தாகிவிட்டது. இப்போது மொத்தம் பத்து பேர்தான் என்பது என்னை இயங்க விடாமல் அமர வைத்து விட்டது. பத்து பேர் என்பது ஒரு குறையில்லை. பத்து பேர் மட்டுமே இருந்து நடத்தும் கூட்டங்களும் பல இடங்களில் சிறப்பாக நடக்கின்றன. ஆனால் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வேறு. இங்கு வாசகர்கள் ஒருபோதும் ஐம்பது பேருக்கும் குறைந்ததில்லை. நாங்கள் ஒரு குடும்பத்தைப்போல இணைந்து விட்டோம். இந்த ஐம்பது பேரில் குறைந்தபட்சம் முப்பது பேர் வாடிக்கையாக வருபவர்கள். மீதி புதுமுகங்கள்.

இப்படி இருக்க இன்று கூட்டம் மிகக் குறைவாக இருந்தது வருத்தத்தைத் தந்தது. தூரத்திலிருந்து எழுத்தாளர்களை அழைத்து வந்திருக்கிறோம். அவர்களுக்கும் அது ஒரு குறையாகத் தெரியும்.

கோவையிலிருந்து யாழி, அனாமிகா, இலக்கியன் விவேக் வந்துவிட்டார்கள். ஒரு வழியாக இருபது பேருடன் கூட்டத்தை ஆரம்பித்தோம். படித்ததில் பிடித்தது நிகழ்ச்சி தொடங்கும் போதே 11 ஆகிவிட்டது. ஆச்சர்யம், நண்பர்கள் வந்தே விட்டார்கள்...

இம்முறை நிறையப் புது நண்பர்கள், கோவையிலிருந்து கோவை சேது, மகி வனி, செளவி, யுவன் பாலாஜி, உமாபாரதி, போன்ற முகநூல் நண்பர்கள் வந்ததும் மனம் சமாதானமானது. இன்னும் கொஞ்ச நேரத்தில் இன்னும் சில நண்பர்கள் வந்து விட, அரங்கம் நிறைந்தது. கூடுதலாக பேராசிரிய நண்பர் ராம்ராஜ் அவர்களின் மாணவிகள் ( சென்ற இலக்கிய சந்திப்பில் கவிதைகளைக் காட்சியாக நடித்துக்காட்டியவர்கள் ) நாகசியாமளா,தாரிணி,தமிழ்ப்பிரியை,காருண்யா,செல்வப்ரியா ஆகியோரும் வந்ததும் உற்சாகமானது

இன்றும் அரங்கம் நிறைந்தது...

கவிஞர் ஸ்டாலின் அவர்கள் எழுதிய வனமிழந்த கதை - கவிதைத் தொகுப்பை கவிஞர் நாணற்காடன் அறிமுகம் செய்து பேசினார். நான் குறித்து வைத்திருந்த கவிதைகளை குறிப்பிட்டுப் பேசினார். பின்னர் கவிஞர் ஸ்டாலின் அவர்களின் ஏற்புரையில் தனது சகோதரர் எழில் அவர்களின் நினைவுகளையும் அவரது கவிதைகளையும் கனத்த மனதுடன் பகிர்ந்து கொண்டார், தமது கவிதைகள் அனுபவத்தின் குறிப்புகள் என்பதைப் பதிவு செய்தார்.

பின்னர், கவிஞர் ஆழி வீரமணி எழுதிய ஆழ்கடலுள் இறங்கும் மண்குதிரை -கவிதைத் தொகுப்பை முன்வைத்து கவிஞர் ந.முத்து பேசினார். ஆழி வீரமணியின் குரல் அடிமைத்தனத்தை, ஆதிக்கத்தை எதிர்க்கும் ஒரு கலகக்காரனின் குரல் என்பதை தனது பாணியில் அற்புதமாகப் பதிவு செய்தார். ஆழி வீரமணியின் ஏற்புரையிலும் அவரது குரல் ஓங்கி ஒலித்தது சுருக்கமாக இருந்தாலும்.

பொள்ளாச்சி இலக்கியவட்ட செய்திமடலை எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வெளியிட பூ.சா.கோ மாணவிகள் நாகசியாமளா,செல்வப்ரியா,தமிழ்ப்ரியை ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் அவர்கள், உடுமலை ப..பொன்னுசாமி அவர்களின் இரு நாவல்கள் குறித்து முதலில் பேசினார், பின்பு சூழலியல் குறித்து நீண்ட நல்ல விளக்கவுரையை அளித்தார்.

பின்னர் ரதிபாலா , சுப்ரபாரதி மணியன் அவர்களின் சுற்றுச் சூழல் கட்டுரைகள் தொகுப்பான மேகவெடிப்பு நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார்.

பின்னர் நடந்த கவியரங்கில் க.ஆனந்தகுமார்,புன்னகை ஜெயக்குமார், யாழி,அனாமிகா,செந்தில் பாலாஜி,கயல்மொழி,சு.நாகராசு, நாகசியாமளா ஆகியோர் கவிதை வாசித்தனர்.

பின்னர் நண்பர்களுடன் உரையாடிவிட்டு, கெளரிகிருஷ்ணாவில் மதிய உணவுண்டுவிட்டுக் கிளம்பி வீட்டுக்கு வந்தால் மணி ஆறு.

இன்றைய நாளை இன்னுமொரு இனிமையான நாளாக்கிய நண்பர்களுக்கு நன்றி.