சனி, 11 ஜூன், 2022

கவிதை ரசனை - 5

கவிதை ரசனை - 5 - இரா.பூபாலன்


கவிதைக்கு எத்தனை கண்கள் தெரியுமா ? அவற்றின் உடலெங்கும் கண்கள். அவையும் விநோதமானவை 360 டிகிரியிலும் சுழன்று பார்க்கும் தனித்திறமை பெற்றவை. அவற்றின் பார்வைகளிலிருந்து சிறு எறும்பு ஊர்வதும் தப்ப முடியாததாகிறது. மேலும் சாதாரணக் கண்கள் பார்க்கும் கோணத்துக்கு எதிர்க்கோணத்திலிருந்து கவிதைகள் பார்க்கத் துடிக்கின்றன. எனவே தான் கவிதைகள் நம் அகக் கண்களைத் திறந்தபடியிருக்கின்றன. ஒரு சாதாரண சம்பவத்தில் இருந்து அசாதாரண கோணத்தில் அசாதாரண் காட்சிகளையும் கருத்துகளையும் எடுத்துக்கொண்டு வந்து காட்டுவது கவிதையின் செயல்பாடுகளில் ஒன்றாக இருக்கிறது. கவிதைகளின் முடிவிலி அழகுகளில் இதுவும் ஒன்று.

 

எல்லோருக்குமான சாலையில், தனக்கான தனித் தடத்தைக் கண்டுகொண்டும், தனித்த பாதையை உருவாக்கிக் கொண்டும் நடக்கின்ற கவிதையின் கால்கள் பெரும் பயணம் போகின்றன. இந்த பூமி இவ்வளவு தான் என்று சொல்லிவிட முடியுமா என்ன ? மனிதக் கால்கள் படாத பூமியின் எத்தனை எத்தனை நிலப்பரப்புகள் இருக்கின்றன ? மனிதக் காலடிகள் நுழைந்த , நுழையாத இடங்களுக்கெல்லாம் படைப்பின் பாதங்கள் பயணப்பட்டிருக்கின்றன. படைப்பாளனின் கற்பனைகளில் உருவாகும் பூமி இன்னும் அழகானதாக இருக்கிறது. இவ்வளவு தான் என நாம் நினைத்த வழக்கமான பூமியையே ஒரு புகைப்படக் கலைஞன் மிக அழகாகக் காட்சிப்படுத்தி நம்மை வியக்க வைக்கிறானல்லவா ? அப்படித்தான் ஒரு கவிஞன் நாம் அன்றாடம் கடந்து செல்லும் சம்பவங்களிலிருந்து ஒரு துண்டுக் காட்சியை எடுத்து தனது சொற்களின் நிறம் குழைத்துத் தரும் போது அது அசாதாரண அழகாகிவிடுகிறது. நாம் அந்தப் பாதையை, அந்தச் சம்பவத்தைப் பேராச்சர்யத்துடன் திரும்பிப் பார்க்கிறோம். அந்தக் காட்சி நம்மைப் பார்த்து க்ளுக்கெனச் சிரிக்கிறது.

 

இளம் கவிஞர் மதார் அவர்களுடைய வெயில் பறந்தது தொகுப்பில் பல கவிதைகள் சிறப்பாக, அழகியலுடன் இருந்தன. அதிலொரு கவிதையின் கோணம் திகைக்க வைத்தது.

 

ஒரு பூக்கடையை

முகப்பெனக் கொண்டு

இந்த ஊர்

திறந்து கிடக்கிறது

 

பூக்கடைக்காரி

எப்போதும் போல்

வருகிறால்

பூக்களைப் பின்னுகிறாள்

கடையைத் திறப்பதாகவும்

கடையை மூடுவதாகவும்

சொல்லிக்கொண்டு

ஊரையே திறக்கிறாள்

ஊரையே மூடுகிறாள்

 

-    மதார் (வெயில் பறந்தது கவிதைத் தொகுப்பு, அழிசி வெளியீடு,9597069069 )

 

ஒரு கவிதை தன்னை நவீன கவிதையென அடையாளப்படுத்திக் கொள்வது அதன் மொழியில் மட்டுமன்று, மொழிதலிலும் இருக்கிறது. ஒரு பூக்கடையை முகப்பெனக் கொண்டு திறந்து கிடக்கிறது இந்த ஊர் என்பது அழகுற மொழிதல். ஊரின் முகப்பில் இருக்கும் பூக்கடையை அவ்வூரின் கதவு என்பதான கற்பனை அழகு.  கடையைத் திறப்பதாகவும் மூடுவதாகவும் சொல்லிக்கொண்டு அவள் ஊரையே திறக்கவும் மூடவும் செய்கிறாள் என்பது அவ்வழகியிலின் பூரண வெளிப்பாடு. இந்தக் கோணத்தில் ஒரு ஊரை, பூக்கடையை யாரும் காட்சிப்படுத்தியிருப்பதாகத் தெரியவில்லை. அதன் காரணமாகவே கவிதை புதியதாக இருக்கிறது. கடைசி இரண்டு வரிகள் தரும் புத்துணர்ச்சி அலாதியானதாக இருக்கிறது.

 

கவிதையின் கண்கள் காணும் காட்சிகளுக்கு இன்னுமொரு சிறப்பான உதாரணக் கவிதையாக சமீபத்தில் வாசித்த அன்புக்குரிய கவிஞர் கலாப்ரியா அவர்களின் கவிதை.. சங்க காலத்து வெயில் எனும் புதிய கவிதைத் தொகுப்பிலிருந்து..

 

இசை நாற்காலி

விளையாட்டில்

இசை நிற்கிற போது

ஆட்டத்திலிருந்து விலகும்

நாற்காலி குறித்த

வருத்தம் உண்டா

யாருக்கேனும்

 

         - கலாப்ரியா (சங்ககாலத்து வெயில்- தொகுப்பிலிருந்து , 044-24896979)

 

இசை நாற்காலி விளையாட்டில் தோற்றுப்போகும் குழந்தைகளுக்கு இரங்கும் கண்களுக்கு மத்தியில் தோற்றுப்போனதாக விலக்கி வைக்கப்படும் நாற்காலிக்காக இரங்கும் கண்கள் கொண்டது இந்தக் கவிதை. கவிதையின் கண்கள் பார்த்த கோணம் நெகிழ்ச்சியானதாக இருக்கிறது, அஃறிணைகளுக்காகவும் கவிதைகள் இரங்கும் துடிக்கும் என்பது தெளிவாகிறது. இந்தக் காட்சியின் பின்னணியில் நமது மனதுக்குள் உருவாகும் அன்பு என்பது விலக்கிவைக்கப்படும் நாற்காலிக்கானதாக மட்டுமல்லாமல், விலக்கிவைக்கப்படும் குழந்தைகளுக்கானதாக மட்டுமல்லாமல், தேவை அல்லது பயன் முடிந்ததும் விலக்கிவைக்கப்படும் யாவற்றுக்குமானதாக பொருந்திப் போகிறது. ஒரு விலக்கலின் போது, இந்தக் கவிதையின் சொற்கள் நினைவில் வந்து போகும் என்பது இந்தக் கவிதையின் வீரியத்தைக் காட்டும்.

 கவிதைகள் இயல்பானவை, இயல்பற்றவை என்பதெல்லாம் கணக்கிலில்லை. அவற்றின் இயல்பு, இறுகிய மனதை இலகுவாக்கி சிறகு பொருத்தி ஒரு பறவையாக்குவது தான். உயர உயரப் பறக்க. கவிதையின் சில சொற்கள் தரும் சிறகுகள் போதுமானதாக இருக்கின்றது. சிறகுகள் மட்டுமல்லாமல் கவிதைகள் நமக்கான ஆகாயத்தையும் தருகின்றன பறக்க.

அதன் பொருட்டே கவிதைகள் எழுதப்படுகின்றன.

 மூத்த கவிஞர் கலாப்ரியாவும் இளம் கவிஞர் மதாரும் நிகழ்த்திக் காட்டியிருக்கும் அற்புதங்கள் இந்த இரு கவிதைகள். ஒரு கவிதையை வாசித்து முடித்தவுடன் வரும் மன அமைதி அல்லது மன நடுக்கம் அனுபவித்து உணர வேண்டிய ஒன்று. மற்ற எந்த போதைக்கும் குறைந்ததில்லை கவிதை தரும் கண நேர போதை. பூக்காரிக் கவிதை நிகழ்த்திய அழகியலும், ஒதுக்கப்பட்ட நாற்காலிக்கு இரங்கும் கவிதையின் அன்பியலும் கவிதையின் பிரத்யேகக் குணங்கள். வாசிப்பின் வழி நாம் காணத் தவறிய அழகியலையும், உணரத் தவறிய அன்பியலையும் அடைந்து விடலாம்..

 

ஒவ்வொரு மாதமும் வாசித்த புத்தகங்களிலிருந்து நேசித்த சில கவிதைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் - இரா.பூபாலன்