செவ்வாய், 20 டிசம்பர், 2016

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையில் நூல் அறிமுகம்

கடந்த 17.12.2016 அன்று தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையில் எனது ஆதிமுகத்தின் காலப்பிரதி கவிதை நூல் அறிமுகம் செய்யப்பட்டது.



மாலை 4.30க்கு நிகழ்வு எனச் சொல்லி இருந்தார்கள். பகல் பன்னிரண்டுமணிக்குக் கிளம்பினோம். நான், அதிரூபன்,சோலைமாயவன், மற்றும் தம்பி சரவணன். செல்லும் வழியில் வத்தலகுண்டு சென்று ஜெயதேவன் அய்யா அவர்களைச் சந்தித்து ஐந்து நிமிடம் பேசிவிட்டுக் கிளம்பினோம். இருப்பினும் குறித்த நேரத்துக்கு நிகழ்வுக்கு ஆஜர்.

இலக்கிய நிகழ்வுகளுக்கே உரிய எழுதப்படாத விதியாக நிகழ்வு ஆரம்பிக்கும் போது ஆறு மணிக்கும் மேல் ஆகிவிட்டது ( ஆள் வந்தால் தானே ஆரம்பிக்க முடியும் ).

நிறைய நேரம் இருந்ததால் நண்பர்களுடன் பேச முடிந்தது.. பிறகு இப்படி வகை வகையாக புகைப்படங்கள் எடுக்கவும் முடிந்தது













மூன்று புத்தகங்கள் அறிமுகம், ஒவ்வொரு புத்தகத்தையும் இருவர் அறிமுகம் செய்வது மற்றும் ஒரு சிறப்புரை , ஒரு தலைமையுரை என தோழர் விசாகன் கன கச்சிதமாகத் திட்டமிட்டிருந்தார்.

தோழர் சிவசங்கர் அவர்களுடைய கடந்தைக் கூடும் கேயாஸ் தியரியும் சிறுகதை நூல், நாகராஜ் அவர்களுடைய தென்றலதிகாரம் கவிதை நூலுடன் எனது நூலும் அறிமுகம் செய்யப்பட்டது.

எனது கவிதைத் தொகுப்பை இளங்குமரன் அவர்கள் அறிமுகம் செய்துவைத்துப் பேசினார். முதன் முறையாக அவரைச் சந்திக்கிறேன். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கும் முன்பாகவே அவருடைய கூட்டுத் தொகுப்பு ஒன்றுக்கு கவிதை அனுப்பியிருக்கிறேன். அவர் எனது முகவரியை குறுஞ்செய்தி வழி கேட்டிருக்கிறார். நான் கவனக்குறைவாலும் மறதியாலும் அனுப்பாமல் விட்டிருக்கிறேன். அதைக் குறிப்பிட்டு அந்த நூலை அப்போது எனக்கு மேடையிலேயே பரிசளித்தார்.

எனது கவிதைகளைக் குறிப்பிட்டு எளிய , அழகான அறிமுகத்தை இளங்குமரன் அவர்கள் நிகழ்த்தினார். ஏற்புரையில் வழக்கம் போலவே சுமாராகப் பேசினேன். முதல் தொகுப்புக்காரர்களான இளையவர்களை ஒவ்வொரு கூட்டத்திலும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும் எனவும்விசாகன் அவர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்தேன்.
( பின்னணி யாதெனில், பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் எட்டு நூல்களையும் அறிமுகம் செய்வதாக சொல்லியிருந்தார், நானும் நூல் ஆசிரியர்களிடம் சொல்லி வைத்திருந்தேன். அது தவறிவிட்டது.. அதே தான் )

என்னுடைய தொகுப்பை அறிமுகம் செய்திருக்க வேண்டிய இன்னொருவர் மணிமொழி அவர்கள் வரவில்லை என விசாகன் அவர்கள் தகவல் தெரிவித்தார். அது தானே நமது அதிர்ஷ்டம் எப்போதும்...


நறுமுகை தேவி அவர்கள் வழக்கம் போல தனது கறார் பேச்சால் கவிதைத் தொகுப்பை அறிமுகம் செய்தார். அவருடைய கோணத்தில் விமர்சனமாக அமைந்தது அவரது உரை.


 நாகராஜ் அவர்களின் கவிதை நூலை அறிமுகம் செய்த இன்னொரு பேச்சாளர் எழுத்தாளர் திரு.எஸ்.செந்தில்குமார் அவர்கள். மிகவும் தண்மையாகப் பேசினார். டால்ஸ்டாய் குழந்தைகளைப் பற்றி எதுவுமே எழுதவில்லை எனத் துவங்கியவர். டால்ஸ்டாயின் வாழ்க்கையப் பற்றி சிறப்பான உரையொன்றைக் கொடுத்தார். அவரது பேச்சு மிக அனுக்கமாக இருந்தது.
ஒரே குறை, தனது வகுப்புத் தோழர், கவிஞர் நாகராஜ் அவர்களின் கவிதை நூல் அறிமுகம் செய்ய வந்தவர் அதைப்பற்றி, அவரது கவிதைகளைப் பற்றி அதிகம் பேசவில்லை. அது தான் அவசியம் என நினைக்கிறேன்.


கடந்தைக்கூடும் கேயாஸ் தியரியும் நூலை இருவர் அறிமுகம் செய்தனர் மிக எளிய பேச்சில், தனது அனுபவத்தினூடாகவும் வாசிப்பினூடாகவும் அந்தச் சிறுகதைத் தொகுப்புக்கு அழகான உரையை கண்மணிராசா வழங்கினார். அவரது பேச்சு சிறப்பாக அமைந்தது. ரேவதி முகில் அவர்களும் தனது கோணத்தில் கதைகளை அறிமுகம் செய்து வைத்துப்பேசினார். ஒரு கதையை அவர் அழகாக அறிமுகம் செய்துவைத்துப் பேசப் பேச , இன்னும் வாசிக்காமல் வைத்திருக்கும் அந்தத் தொகுப்பின் மீதான ஈர்ப்பு கூடியது.






ஏற்புரையில் சிவசங்கர் தனது பரந்துபட்ட பன்மொழி வாசிப்பைச் சொன்னபோது ஆச்சர்யமாகவும் பெருமையாகவும் இருந்தது, ஒரு நல்வாசகன் நல்ல எழுத்தாளனாவதில் ஆச்சர்யப்பட எதுவுமே இல்லை தான்.

கடைசியாகப் பேச வந்த திரு.பொன்முடி அவர்கள் நாக்ராஜ் அவர்களின் கவிதைகளை சிலாகித்தும், கூட்டத்தை சிலாகித்தும் ஒரு நீண்ண்ட உரையை வழங்கினார். அருமையான பேச்சு. ஆனாலும் நேரம் ..??

நிகழ்வில் படைப்பாளர்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டு விசாகன் வியப்பான ஏற்பாடொன்றைச் செய்திருந்தார். அது ரோஜா மாலை. ஆளுயர ரோஜா மாலை போட அரசியல் கூட்டமா இது. உங்கள் அன்பும் அன்பளிப்பாக சில புத்தகங்களும் போதுமே தோழர். 

இலக்கியக் கூட்டங்களில் பொன்னாடை, மாலை, துதி, காலில் கபக்கென விழுதல் போன்ற அசம்பாவிதங்களை மனம் ஏற்கவே மறுக்கிறது.



கிளம்பும் போதே ஒருவரை சந்திக்கத் திட்டமிட்டிருந்தேன், வீட்டுக்கே சென்று சந்திக்க தயாராக வந்திருந்தேன். அது இயலாமல் போனது. ஆனாலும் அவசர வேலைகளுக்கிடையிலும் அன்புடன் நிகழ்வுக்கு வந்து தனது கவிதை நூலைத் தந்துவிட்டு ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு, கொஞ்ச நேரம் உடன் அமர்ந்து நிகழ்ச்சியை கவனித்துவிட்டு என மகிழ்ச்சியைத் தூவிச் சென்றார் எழுத்தாளர் நந்தன் ஸ்ரீதரன். அவருக்கு என் அன்பு...


கவிஞர் ஸ்ரீதர் பாரதி அவர்களும் வந்திருந்தார். அவரை நீண்ட நாட்களுக்குப்பின் சந்தித்ததில் மகிழ்ச்சி.

நிகழ்வு முடிய முடியக் கிளம்பி இரவு இரண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் .. மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை... பொள்ளாச்சி இலக்கிய வட்டம் இருக்கிறது. நிறைய வேலைகள் இருக்கின்றன நேரமே கிளம்பவேண்டும், அதற்கு நேரமே எழ வேண்டும்.... கொர்ர்

( இருந்த , நல்ல புகைப்படங்களைப் பதிவிட்டிருக்கிறேன் )

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

உடல் உறுப்பு தானம் - ஒளியேற்றும் மெழுகுவர்த்தியாதல்

கொலுசு மின்னிதழில் நான் எழுதும் கட்டுரைத் தொடரான தேநீர் இடைவேளையில் இந்த மாதம் உடல் உறுப்பு தானம் பற்றிய என் கட்டுரை ...


உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
                             - திருமூலர்

பொருள் : உடம்பு அழியும் போது,அந்த உடம்பைப் பற்றி நின்ற உயிரும் இறந்து அழிந்து செயலின்றி நிற்கிறது. எனவே உடம்பு அழியும் போது,உயிர் இயங்கி அடைய வேண்டிய குறிக்கோள்களான தவமாகிய துணையைப் பெறுதல்,மற்றும் இறையுணர்வை அடைதல் ஆகியவை இயலாத காரியமாகி விடுகின்றன. எனவே நான் உடம்பு அழியாது நிலைபெற்று நிற்பதற்கான வழிகளை அறிந்து,உடலை வளர்ந்து அழியாது நிலைபெறச் செய்வதன் மூலம்,உயிர் அல்லது ஆன்மாவினை வளர்த்து நிலைபெறச் செய்து,ஆன்மாவின் குறிக்கோள்களை அடைய எத்தனிக்கிறேன்.

உடல் - நமது ஆதார சக்தி. உடலோ , உடலின் உறுப்புகளோ இல்லையெனில் நாம் நாமல்ல. சுவரின்றி சித்திரம் வரைய இயலாது என்பதில் சுவர் என்பது உடல். உடலின்றி, உடலைப் பேணாமல் நாம் வாழ்வது இயலாது. இந்த உடல் பல்வேறு உறுப்புகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் உடலை இயக்குவதற்கான ஒவ்வொரு முக்கியப் பணியை ஓய்வின்றி செய்து வருகின்றது. ஏதாவது ஒரு உறுப்பு ஏதாவது ஒரு காரணத்தினால் செயலற்றுப் போகும் போது சிக்கல் எழுகிறது. இங்குதான் உடல் உறுப்புகள் தானம் செய்வதின் தேவைகள் அத்தியாவசியமாகின்றன.



உடல் உறுப்புகள் தானம் செய்வது சமீப நாட்களில் பெருகி வருகிறது. நல்ல விழிப்புணர்வு அடைந்து வருவதாக உணரப்படுகிறது.
சர்வதேச உடலுறுப்புதான நாள் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்திய உறுப்பு தான வாரம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.. கடந்தவாரம் இது கொண்டாடப்பட்டதையொட்டியே இந்தப்பதிவு.

உடல் உறுப்பு தானம் என்பது, உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, உயிருடன் இருக்கும் போதோ அல்லது மூளைச்சாவு அடைந்த பின்போ  மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் உடல் உறுப்புகள் தேவைப்படும் ஒருவருக்கு, அல்லது பல்வேறு நபர்களுக்கு  தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.

உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் அல்லது மூளைச் சாவு அடைந்த பின்னர் தருவது. உயிருடன் இருக்கும் போது இருக்கும் இரண்டு சிறு நீரகத்தில் ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவற்றை தானம் செய்யலாம். இறந்த அல்லது மூளைச்சாவு அடைந்த பின்னர் இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா), இதயம், தசை, எலும்பு மஜ்ஜை, இரத்த நாளம் போன்ற  இருபத்தி ஐந்து வகையான உறுப்புகளையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புகளை தானமாக தர முடியும்.

ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத் - மூளைச் சாவு), அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்குப் பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம். ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு,  நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.18 வயது முதல் 60 வயது வரை யில் உள்ள ஆண்,பெண் இருவரும் உறுப்புதானம் செய்யலாம்.
உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு எந்த ஆபத்தும் நேராது என மருத்துவ உலகம் ஆணித்தரமாகக் கூறுகிறது. இரண்டு சிறுநீரக ங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பாதிப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தானம் செய்தபின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும்.நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதி சீராக வேலை செய்யும்.

ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும்.
ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட்டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக் கூடாது,மது அருந்தி இருக்கக் கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பிட்டிருக்கக் கூடாது,  உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகை இருக்கக் கூடாது, குறைந்தது மூன்று மாதங்களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூடாது, தோல் வியாதிகள், எய்ட்ஸ் போன்ற இரத்தத்தால் பரவும் வியாதியினராக இருக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொ ம்ளாமல், நிராகரித்து விடும். இதற் கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடீஸ் தா ன் காரணம். ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் “ப்ளாஸ்மா பெரிஸிஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறு வை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப் பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.”

தானம் செய்த உறுப்புகள் மற்றவர் உடலில் சரியாகப் பொருந்தி சரியாக வேலை செய்யுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும் பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொள்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடீஸ் தான் காரணம். ஆனால் தானமாக பெற்ற உறுப்பைப் பொருத்துவதற்கு முன்னால் “ப்ளாஸ்மா பெரிஸிஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை. மேலும், பல விதிமுறைகளைப் பரிசோதித்து ரத்த வகை உட்பட பல சோதனைகளை மேற்கொண்ட பின்னரே உடல் உறுப்புகள் பொருத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் வரை4,992 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன என்று தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உடல் உறுப்பு தானம் அதிகமாக உள்ளது, விழிப்புணர்வும் அதிகமாக உள்ளது. 2008-ஆம் ஆண்டு 7 நபர்கள் உடல் உறுப்புதானத்துடன் தொடங்கிய இந்தத் திட்டத்தில் தற்போது 895 பேர் உடல் உறுப்புகளை தானமளித்துள்ளனர். மொத்தம் 4,992 உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன. தற்போது 2 நாளைக்கு ஒருவர், என்ற நிலையில் மூளைச்சாவு அடைத்தவர்களின் உடல் உறுப்புகள் தானம் பெறப்படுகின்றன என்ற தகவலையும் அளித்துள்ளார். உடல் உறுப்பு தானத்தில் தேசிய அளவில் தமிழகம் தான் முதல் நிலையில் உள்ளது. அதற்காக மத்திய அரசு சமீபத்தில் தமிழகத்தை விருது வழங்கி கெளரவித்துள்ளது.

உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புவோருக்காக பிரத்யேகமாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், ஆன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் உறுப்பினராக பதிவு செய்யலாம் http://www.transtan.org/

எல்லாம் சரி. உடல் உறுப்பு தானம் குறித்து உங்களுக்கு இருக்கும் சில சந்தேகங்கள் எனக்கும் இருக்கின்றன

உடல் உறுப்பு தானம் குறிப்பிட்ட விழிப்புணர்வு அடைந்துவிட்ட நிலையில், நான் பார்த்த வரையில் ஒரு அறுவை சிகிச்சை கூட அரசு மருத்துவமனையில் ஏழை நோயாளிக்கு செய்து உறுப்பு தானம் தரப்பட்டதாக கேள்விப்படவேயில்லை. அனைத்தும் தனியார் மருத்துவமனைகளில் மிகவும் வசதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த வரம் கிடைக்கிறது. சும்மா சொல்லவில்லை, புள்ளிவிவரமும் அதைத்தான் சொல்கிறது.


தமிழகத்தில், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வசதிகள் உள்ளன. இதயம், சிறுநீரகம், நுரையீரல் உட்பட, 348 உடல்உறுப்புகள் தேவையானோருக்கு பொருத்தப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளில், 2,517 உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனைகளில், உடல் உறுப்பு மாற்று சிகிச்சை வசதிகள் இல்லாததே, பெரும்பாலான உடல் உறுப்புக்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்க காரணம் என்கிறார்கள். இதனால், உடல் உறுப்பு தான திட்டம், தனியார் மருத்துவமனைகள், அங்கு சிகிச்சை பெறும் பணக்காரர்களுக்கு மட்டுமே பயன்பெறும் வகையில் மாறிவிட்டது. இதனால் இது ஒரு பெரிய வியாபாரமாக வளர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனைகள் இதில் பணம் கொழிக்கிறார்கள். இதற்கு மாற்றாக தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவக்கல்லுாரி   மருத்துவமனைகளிலும், உடல் உறுப்பு தான மாற்று அறுவை சிகிச்சை வசதியை ஏற்படுத்த வேண்டும்; அப்படி செய்தால், ஏழை நோயாளிகளுக்கும், உடல் உறுப்பு தானத்தின் பலன் கிடைக்கும்.

அடுத்து, உடல் உறுப்புகள் கொள்ளை பணத்துக்கு வியாபாரமாக்கப்படுவதால் , உடல் உறுப்புகளுக்காக மூளைச்சாவு உண்மையில் அடையாத விபத்து ஏற்பட்டவர்களை மருந்து கொடுத்து மூளைச்சாவு அடைய வைத்து, பின்பு அவரது உறுப்புகள் எடுக்கப்பட்டு விற்கப்படுவதாக செய்திகள் உலவுகின்றன. இதில் சில தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்கள் தவிர இடைத்தரகர்கள் என பலர் பணத்துக்காக இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபடுகின்றனர். இதை நினைத்தாலே நடுக்கமாக இருக்கிறது. ஒரு திரைப்படத்தில் காட்டியது உண்மையாக இருந்தால் கார்பன் மோனாக்ஸைடு கொடுத்து, ஒருவனை மூளைச்சாவு அடைய வைக்க முடியும், அதன் மூலம் அவர்கள் நினைத்ததை அடைய முடியும். உயிர் காக்கும் மருத்துவமனைகள் உயிர் பிடுங்கும் கொலைக்களங்களாக மட்டும் ஆகிவிடவே கூடாது என்பதே வேண்டுதல்.

எது எப்படியோ, தெரிந்தே மண்ணுக்குள் மக்கப்போகும் உடல் உறுப்புகளை தானம் செய்வது இறந்து கொண்டிருக்கும் ஒரு உயிரை பிழைக்க வைப்பதல்லவா. அதை அனைவரும் செய்ய வேண்டும். இன்னும் இன்னும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பல்வேறு வகைகளிலும் அதிகமாக வேண்டும்.

மனிதம் மரித்துக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் அதிகமானோர் உறுப்புகளைத் தானம் செய்யத் தயங்குகின்றனர். மண்ணில் மக்கியோ, நெருப்பில் எரிந்து சாம்பலாகியோ வீணாய்ப் போகும் இந்த உடல் உறுப்புகள், பிறருக்குப் பொருத்தப்படுவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்க்கும், அவரது குடும்பத்தினர் உட்பட உறவினர்களுக்கும் வாழ்வில் ஒளியாகலாம் அல்லவா. ஆகவே உடல் உறுப்புகளை தானம் செய்ய நாம் முன்வர வேண்டும். அதற்கான விதிமுறைகளையும் வழிமுறைகளையும் நாம் அறிந்திருக்க வேண்டும். இறந்த சிலமணி நேரங்களில் கொடுக்கப்படாத உறுப்புகள் வீண் தான்.