புதன், 28 செப்டம்பர், 2016

புன்னகை கல்விச்சுடர் விருது 2016

சோலை மாயவன்

கவிஞர் , ஆசிரியர் சோலை மாயவன் (எ) மூர்த்தி அவர்களுக்கு கடந்த பொள்ளாச்சி இலக்கியவட்டத்தில், புன்னகை சிற்றிதழ் சார்பாக கல்விச்சுடர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த விருது, தொடர்ந்து கல்வி மற்றும் சமுதாயப் பணிகளில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது. இந்த ஆண்டுதான் முதன் முதலில் இந்த விருதை புன்னகை அறிவித்திருக்கிறது.

இந்த விருது ரூபாய் மூவாயிரம் ரொக்கப்பணத்தையும், சான்றிதழையும் பட்டயத்தையும் உள்ளடக்கியது.

கவிஞர் சோலைமாயவன் சிறந்த கவிஞர், நல்ல வாசகர், மிகச்சிறந்த ஆசிரியர். நேர்மையான நல்ல மனிதர். கடின உழைப்பாளியும் சேவகரும் கூட. சமத்தூர் அரசுப்பள்ளியில் உதவித் தலைமையாசிரியாரகப் பணியாற்றுகிறார். கொலுசு மின்னிதழ் மற்றும் புன்னகை சிற்றிதழின் ஆசிரியர் குழுவிலும் இருக்கிறார்.

தொடர்ந்து பொள்ளாச்சி இலக்கிய வட்டம், புன்னகை ஒருங்கிணைக்கும் இலக்கிய நிகழ்வுகள்,சமுதாயப் பணிகள் அனைத்திலும் முழு ஈடுபாட்டுடன் இறங்கி செயலாற்றும் செயல் வீரர்.
ஒவ்வொரு மாதமும் இலக்கிய வட்ட நிகழ்வுகளுக்காக ஓடி ஓடி வேலை செய்பவர்.
வனத்தில் மிதக்கும் இசை எனும் கவிதைத் தொகுப்பை, பொள்ளாச்சி இலக்கிய வட்ட வெளியீடாக கடந்த 2014ஆம் ஆண்டு வெளியிட்டிருப்பவர்.
கடந்த சென்னை வெள்ளத்தின் போது, பொள்ளாச்சி இலக்கிய வட்டம் மற்றும் புன்னகை சார்பாக வெள்ள நிவாரணப் பொருட்கள் கிட்டத்திட்ட இரண்டு லட்சத்த்துக்கும் அதிக மதிப்பிலாக சேகரித்து கடலூரின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது. அப்போது பொள்ளாச்சியிலும் மழை. மழையிலும் இரவு முழுவதும் அலைந்து பொருட்களைச் சேகரிப்பது, சேகரித்த பொருட்களை பொட்டலம் கட்டுவது, வண்டி பிடித்து அனுப்புவது என அனைத்துப் பணிகளிலும் மிகச்சிறப்பாக எங்களுடன் இணைந்து பணியாற்றியவர்.
ஒவ்வொரு வருடமும் தான் பணிபுரியும் பள்ளியில் தமிழில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கும், அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்ளுக்கும் தனது சொந்தப்பணத்தை பரிசுத்தொகையாக சில ஆயிரங்கள் வழங்குகிறார்.
மேலும் மாணவர்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். கொலுசு நூலகத்துக்கும் இவர் தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.
சரியான நபருக்கு, சரியான சமயத்தில் இந்த விருது அளிக்கப்பட்டது மிகவும் மகிழச் செய்கிறது.
சோலைமாயவன் அவர்கள் தனது அடுத்த தொகுப்புக்கு தயாராகி வருகிறார். அந்தத் தொகுப்பு நவீன கவிதைகளில் நல்ல வரவேற்பைப் பெறும்.
இந்த விருது அவரது தொடர் பயணத்துக்கான கிரியா ஊக்கியாக இருக்கும். இன்னும் உத்வேகத்துடனும் தன்முனைப்புடனும் அவர் பல நற்செயல்களைத் தொடர வழிகாட்டும். இன்னும் பலவிருதுகள் அவரை அடையட்டும்.
கவிஞர் சோலை மாயவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவரை இயங்கச் செய்யும் அவரது காதல் மனைவி அனிதா மூர்த்தி அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளும் அன்பும்.
புன்னகை கல்விச்சுடர் விருதைத் துவங்கி , அதை சிறந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து வழங்கும் புன்னகை கவிதை இதழுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும்.
பொள்ளாச்சியில் நிகழும் பல இலக்கிய மாற்றங்களுக்கான முதற்புள்ளியாக விளங்கும் புன்னகையின் ஆசிரியர்கள் கவிஞர் க.அம்சப்ரியா மற்றும் கவிஞர் செ.இரமேஷ்குமார் ஆகியோருக்கு தீரா அன்பு என்றென்றைக்கும் ...பெயரில் என்ன இருக்கிறதுஇரண்டு மாதங்களாக
புத்தகங்கள்
தெரிந்தவர்கள்
சோதிடர்
எல்லோரையும் புரட்டி

இருபது பெயர்களைச்
சேகரித்து
ஆறு பெயர்களை
வடிகட்டி
இரண்டு பெயர்களாக்கி

குலதெய்வக்
கோவிலில்
திருவுளச் சீட்டு போட்டு
எனக்குப் பெயர்
தேர்வு செய்தேனென்று
பெருமையாய்ச்
சொல்லிக்கொண்ட அப்பா

இதுவரை
ஒரு முறை கூட
அழைத்ததில்லை என்னை
பெயர் சொல்லி

இது எனது பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு கவிதைத் தொகுப்பில் வெளியான எனது கவிதை. பொதுவாகவே எனது அனுபவங்கள் தாம் என் கவிதைகள். இதுவும் அனுபவமே தான். எனக்கு நினைவு தெரிந்தவரை, இதுவரை ஒருமுறை கூட என்னை பெயர் சொல்லி அழைத்ததில்லை அப்பா.
அப்பா மட்டுமல்ல வேறு யாரும் கூட என்னை என் முழுப்பெயரைச் சொல்லி அழைப்பதில்லை ... அழைக்கவும் முடியாது :-)

என்னுடைய முழுப்பெயர் பூபாலகிருஷ்ணமூர்த்தி ( மூச்சு வாங்குதா ). இதை என் அப்பா அரும்பாடு பட்டு தேர்வு செய்து வைத்தார். திருமணமாகி நான்கு வருடங்கள் குழந்தையில்லாமல், திருமூர்த்தி மலையில் வேண்டுதல் செய்த பிறகு பிறந்தேனாம். சிவன், பிரம்மா,விஷ்ணு என மும்மூர்த்திகளின் கோவில் அது என்பார்கள் ( அது ஒரு சமணக் கோவில் என்ற தகவலும் உண்டு ). ஆகவே அந்தக் கோவிலின் மும்மூர்த்திகளின் பெயரையும் சேர்த்து வைத்துவிட்டார்கள்.இது மட்டுமா, வருபவர்கள் எல்லாம் எனக்கு ஒரு பெயர் வைத்தார்கள். முருகேஷ் சித்தப்பா , இறந்து போன தன் நண்பனின் நினைவாக எனக்கு ரமேஷ் என்று பெயர் வைத்தார். இன்றும் கிராமத்தில் , உறவினர்கள் எல்லோரும் ரமேஷ் என்று தான் அழைப்பார்கள் ( பூபால கிருஷ்ணமூர்த்தி என்று அழைத்துவிட முடியுமா கிழவிகளால் ). ஆத்தா கணேஷ் என்று பெயர் வைத்தாராம் ( யார் ஞாபகமோ ), இன்னும் ஒரு பெயர் கூட வைத்தார்களாம் காளிதாஸ் என்று. எந்தப் பெயரும் நிலைக்கவில்லை ..பள்ளியில் பெயர் கொடுக்கும் போது அப்பா பூபால கிருஷ்ண மூர்த்தி என்றே கொடுத்துவிட்டார். அன்று முதல் இன்று வரை எந்தப் பதிவேட்டிலும் யாரும் ஆங்கிலத்தில் என் பெயரை சரியாக எழுதியதாக சரித்திரமே இல்லை. இன்றும் அலுவலகக் குறிப்பேட்டில் தவறாகத்தான் உள்ளது. வங்கிக் கணக்கிலும் அப்படித்தான்.
ஏன் ஐந்தாம் வகுப்புவரை நானே குழம்பிப்போவேன் எழுத.எழுதுவதைக் கூட விடலாம். இதுவரை வெகு வெகு சிலரே என்னை முழுப்பெயர் சொல்லி அழைப்பார்கள்.  எனது நினைவுகளின் படி, நண்பனின் தங்கை, ஒரு நண்பன், எப்போதாவது விளையாட்டுக்காக சில நண்பர்கள் தான் அப்படி அழைத்திருக்கக் கூடும். பள்ளியில் வருகைப்பதிவேட்டில் ஆசிரியர் அழைப்பார். அவ்வளவு தான். வேறு எங்கும் யாரும் அழைத்ததாக நினைவில்லைவீட்டில் அப்பாவும் அம்மாவும் தம்பி என்று தான் அழைப்பார்கள்.

கவிதை எழுதத் துவங்கிய பள்ளிக் காலங்களில் நானாக இரா.பூபாலன் என்று எழுதத் துவங்கினேன். இன்று வரை அந்தப்பெயரிலேயே எழுதி வருகிறேன். பூபால் என்றும் பூபாலன் என்றும் சுருக்கி நண்பர்கள் அழைப்பார்கள். மோகன், அனாமிகா இருவரும் பூப்ஸ் என்று (செக்ஸியாக ???)  சுருக்கி அழைப்பார்கள். நண்பர் ப்ரேம் இன்னும் மிகச்சுருக்கி பூ என்று தான் அழைப்பார் இன்று வரை.அதற்குமேல் சுருக்க முடியாததால் அப்படி. பள்ளியில் தோழி ஒருத்தி வைத்த சங்கேதப்பெயர் ஃப்ளவர் மில்க்
( Flower Milk = பூ பால் அய்யஹோ ).கூகுளாண்டவரிடம் விசாரித்த வரை இந்தப் பெயர் உலகின் எந்த மூலையிலும் எந்த மனிதனுக்கும் இல்லை என்னைத் தவிர. ஆக, உலகின் தனித்துவமான பெயர் என்னுடையது .

அப்பாவிடம் என் பெயரின் நீளத்தைப்பற்றி ஒரு முறை குறைபட்டுக் கொண்டபோது சொன்னார். அது ஒரு மசக்காலத்துல அப்படி வச்சுட்டேன். உனக்கு வேணும்னா இப்ப புடிச்ச மாதிரி மாத்திக்கோ என்று.


மாற்றிவிட விருப்பமில்லை.. இப்படியே இருக்கட்டும்....


புதன், 14 செப்டம்பர், 2016

சும்மா விளையாட்டுக்கு ...

கொலுசு மின்னிதழில் வெளியாகும் எனது கட்டுரைத் தொடரான தேநீர் இடைவேளையின் இம்மாதக் கட்டுரை ..

தேநீர் இடைவேளை - 6

சும்மா விளையாட்டுக்கு ...

ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்துவிட்டன. சிந்து பேட்மின்டன் போட்டியில் வெள்ளியும், ஷாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்தில் வெண்கலமும் வென்று இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றியுள்ளார்கள். நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். இது மிகப்பெரிய சாதனைதான். அவர்களுக்குப் பரிசுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அரசு இவர்கள் உட்பட நான்கு வீரர்களுக்கு கேல்ரத்னா விருதை அறிவித்துள்ளது. மேலும் பல பரிசுகளும், நாடு முழுவதுமிருந்து பல பாராட்டுகளும் அவர்களுக்குக் குவிந்தவண்ணம் இருக்கின்றன. மகிழ்ச்சி. அவர்கள் இதை அடைய எத்தனை தடைகளைத் தாண்டி வந்திருப்பார்கள். வாழட்டும்.

இரண்டு பதக்கங்களுடன் இந்தியா 67ஆவது இடத்தில் உள்ளது பதக்கப்பட்டியலில். எப்போது இந்த மாதிரி சர்வதேசப் போட்டிகள் நடக்கும்போதும், குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகளில் நம்மால் பெரிய அளவில் சோபிக்க முடியாமல் போய்விடுகிறது. இதைப்பற்றி பல்வேறு ஊடகங்கள், நிபுணர்கள் தங்கள் ஆதங்கங்களைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

எத்தனையோ குட்டிக் குட்டி நாடுகள், வறுமையில் உழலும் நாடுகள் எல்லாம் பதக்கப்பட்டியலில் முந்திக்கொண்டு போக, 120 கோடிக்கும் மேல் மக்களையும், மக்கள் வளத்தையும் , வைத்துக்கொண்டு நாம் ஏன் ஒரே ஒரு தங்கப்பதக்கம் கூட வாங்க முடியாமல் போகிறது. சர்வதேச அளவில் நாம் நமது வீரர்களைத் தயார் செய்வதில் பிரச்சினையா, வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் பிரச்சினையா என பல கேள்விகள் ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் ஓடிக்கொண்டுதான் இருக்கும். அதெல்லாம் இந்த ஒலிம்பிக் வெளிச்சம் கண்களிலிருந்து மறையும் வரைக்கும் தான். பிறகு அடுத்த 4 வருசத்துக்கு எந்த சத்தமும் இருக்காது. இடையில் ஒரு பத்திரிகையின் கடைசிப்பக்கத்தின் பெட்டிச்செய்திகளில் எங்காவது ஒரு விளையாட்டு வீரன் அல்லது வீராங்கனை ஏதாவது ஒரு ஊரில் வெற்றி பெற்றதாகச் செய்தி வரும் அல்லது போட்டிக்கே போக முடியாத அளவு பொருளாதாரத் தடை, அந்தத் தடை இந்தத் தடை என்று கூட செய்தி வரும். நாம் அதையெல்லாம் படிக்கவே மாட்டோம். இப்படியாக கண்டுகொள்ளாமலே இருந்து, ஒலிம்பிக் அறிவிப்பு வந்து, நம்மவர்கள் கலந்து கொண்டு, காலிறுதி வரைக்கும் வந்துவிட்டால் கமான் இந்தியா என்று கத்துவோம், வெற்றி பெற்றுவிட்டால் கொண்டாடுவோம் அவ்வளவுதான்.

விளையாட்டு துறையில், மற்ற எல்லா துறைகளையும் போலவே லஞ்சம் ஊழல் என சகலமும் மலிந்து கிடப்பதால் தான் நம் நாடு முன்னேறவே இல்லை என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

நம் ஊரில் விளையாட்டுத்துறையில் சாதிப்பதென்பது மிகப்பெரிய விசயம், பாதைகளே இல்லை, வழிகாட்டிகள் இல்லை, ஆனாலும் பயணிப்பது அதில் வெற்றியும் பெறுவதென்பது சாதனை தானே அப்படியான சாதனை தான் ஷாக்சியும், சிந்துவும் இன்னும் பலரும் நிகழ்த்துவது.

நாம் குற்றாலீஸ்வரனைத் தெரிந்து வைத்திருப்போம்.13 வயதில் இங்கிலிஷ் கால்வாயை நீந்திக் கடந்தவர்.அதே வருடத்தில் பட படவென உலகின் பெரிய மற்ற 5 கால்வாய்களையும் நீந்தி உலக சாதனை படைத்தவர். உலகத்தில் தலை மன்னார் பாக் ஜலசந்தி முதல் இத்தாலியின் மெஸ்ஸின்னா ஜலசந்தி வரை நீந்தி நீந்தி உலகக் கடலையே கலக்கினார். ஒரு நடுத்தரக் குடும்பச் சிறுவன் இந்தச் சாதனையை நிகழ்த்தியதும் இந்தியாவே திரும்பிப் பார்த்தது. இந்தியாவில் பல பெற்றோர்கள் குற்றாலீஸ்வரனை ரோல் மாடலாக நினைத்து தங்கள் குழந்தைகளை நீச்சலுக்குப் பழக்கினர். ஒரு உலக சாதனை, இப்படித்தான் நிறைய இளம் சாதனையாளர்களை தன்பக்கம் திரும்ப வைக்கும். அவருக்கு தனது 17ஆவது வயதிலேயே அர்ஜூனா விருது கிடைத்தது. ஆனால் , அதன் பின்னர் அவர் என்ன ஆனார்..? இந்தியாவுக்கு பல தங்கப் பதக்கங்களைத் தந்திருக்க வேண்டியவர் சத்தமில்லாமல் எங்கோ வாழ்கிறார் என்பது எதனால் ?

13 வயதில் தனக்கு வந்த பல வெளிநாட்டு வாய்ப்புகளை யாரிடமும் கேட்காமல் எனக்கு இந்தியா தான் உயிர் என்று சொல்லி மறுத்துவிட்டார். ஆனால் அடுத்த சில மாதங்களில் சாதனை நடத்தியவுடன் பேசியவர்கள், ஊக்கமளித்தவர்கள், இந்திய அரசாங்கம், அரசு, அரசியவாதிகள், எல்லாம் அவரை மெதுவாகக் கை கழுவி விட ஆரம்பித்தன. ஒரு பெரிய நீச்சல் போட்டியில் உலக அளவில் கலந்து கொள்ள பணம் தேவை. முதலில் அரசாங்கத்தை நாடினார். இங்கே அங்கே என்று அழைக்கழித்தார்கள். அடுத்து பிரைவேட் நிறுவனங்களை நாடினார். கடலில் நீந்தும் போது கூட்டம் வராது என்று கிரிக்கெட் பக்கம் திரும்பிக் கொண்டார்கள்.அவர் அப்பாவே தன் சேமிப்பில் இருந்து செலவு செய்து போட்டிக்கு அனுப்பினார். இப்படி ஒவ்வொரு முறையும் அலைய முடியாமல், அரசாங்கத்தின், அதிகாரிகளின் ஆதரவு கிடைக்காமல், அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து, இன்று IBM ல் சாப்ட்வேர் என்ஜினீயராக கலிபோர்னியாவில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார். யோசித்துப் பாருங்கள். இன்று அமெரிக்காவில் அவர் ஒலிம்பிக் நீச்சல் போட்டியை பார்க்கும் போது எப்படி அவரின் மனது என்னவெல்லாம் நினைத்துப் பார்க்கும் ? எப்படி வலிக்கும்?

இது நமக்குத் தெரிந்த கொஞ்சம் வெற்றிகளுடன் வெளியில் வந்த ஒரே ஒரு குற்றாலீஸ்வரனின் கதை. இப்படித் தெரியாமல் முளையிலேயே வசதியும் வாய்ப்பும் இல்லாமல் எத்தனை சாதனையாளர்கள் முடக்கப்பட்டிருப்பார்கள். யார் சிந்திப்பார்கள் ?

இந்த ஒலிம்பிக்கில் கூட மாரத்தான் போட்டியில் ஓடிய ஓபி ஜெய்சாவின் நேர்காணலைப் படித்தபோது கண் கலங்கியது. ஆத்திரமாக வந்தது நம் மீதே.

இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் மாரத்தான் ஓடிய பெண் இந்திய சாதனையாளர் ஓபி ஜெய்ஷா. அவர் 42கிமீ தூரத்தை 2 மணி 47 நிமிடத்தில் கடந்திருக்கிறார். ஆனால் அவரது சென்ற ஆண்டு சாதனை 2 மணி 34 நிமிடங்கள். சென்ற முறையை விட இந்த முறை ஏன் இவ்வளவு மோசமாக ஓடியிருப்பார் ?
எந்த ஒரு மாரத்தான் ஓட்டமும் மிகுந்த உழைப்பும், திட்டமிடலும் தேவை. ஏனென்றால் தொடர்ந்த இயக்கத்தால் உடல் தனது நீர்ச்சத்தை இழந்து விடும். தாதுக்களை இழந்து விடும். இவற்றைத் தொடர்ந்து வழங்கா விட்டால் தசைப்பிடிப்பும் அதீத நீரிழப்பால் மரணமும் கூட நடக்கும்.இதைத் தவிர்க்க வழி நெடுக நீர் வழங்க வசதிகள் இருக்கும்.
ஒலிம்பிக் மாரத்தானில் இந்த நீரையும் இதர சத்துப் பொருட்களையும் வழங்கும் நிலையங்கள் 2.5 கிலோமீட்டருக்கு ஒன்று என்று வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அங்கே அந்தந்த நாடுகளின் விளையாட்டு வீரர்களுக்கு அவர்கள் அணியைச் சேர்ந்தவர்கள் நீரையும் சக்தி அளிக்கும் பிற உணவுகளையும் வைத்து நிற்பார்கள். தலையைத் துடைத்துக் கொள்ள ஐஸில் நனைக்கப்பட்ட ஸ்பாஞ்ச் போன்றவற்றை நீட்டுவார்கள். ஊக்கப்படுத்துவார்கள். உள்ளூர் மாரத்தான்களில் கூட ஒவ்வொரு 2.5 கிலோ மீட்டருக்கும் நீர், எலுமிச்சை, உப்பு, ஆரஞ்சு, வாழைப்பழம், கடலைமிட்டாய் என்று வைத்திருப்பார்கள்.
ஆனால் இந்தியாவின் சார்பில் போட்டி நெடுக எந்த நிலையத்திலும் யாருமே நிற்கவில்லை என்கிறார் ஜெய்ஷா. இந்திய நிலையங்களில் வெறும் கொடி மட்டும் நட்டு வைத்து இருந்தார்களாம்.வேறு அணியினர் தரும் எதையும் வாங்கவோ அருந்தவோ கூடாது என்பது விதி. 8 கிலோ மீட்டருக்கு ஒன்று என்று ரியோ ஒலிம்பிக் அணியினர் வைத்திருக்கும் நிலையங்களில் வேண்டுமானால் நீர் அருந்தலாம். இதனால் ஒவ்வொரு எட்டு கிலோமீட்டருக்கு ஒரு முறை மட்டுமே நீர் அருந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் ஜெய்ஷாவும் அவருடன் ஓடிய கவிதாவும். அதுவும் அந்த வேகத்தில் ஓடும்போது இது தற்கொலைக்கு சமம்.
இறந்து விடுவோம் என்ற அச்சத்துடன்தான் ஓடி இருக்கிறார் ஜெய்ஷா. முடிவுக் கோட்டில் மயங்கி விழுந்தவர் மூன்று மணி நேரம் கழித்து ஏழு பாட்டில்கள் குளுகோஸ் இறக்கிய பிறகு எழுந்திருக்கிறார். அப்போதும் இந்திய மருத்துவக் குழு அருகில் இல்லை. ரியோ மருத்துவக் குழுவினர்தான் அவரைக் கவனித்திருக்கிறார்கள்.இதுதான் இந்தியாவின் ஒலிம்பிக் அமைப்பினர் ஒலிம்பிக் வீரர்களை கவனித்துக் கொள்ளும் லட்சணம். இப்படி அலட்சியமாக இருக்கும் இந்த நாட்டில் இரண்டு பதக்கங்களை இரண்டு பெண்கள் கொண்டு வந்திருப்பதே மிகப்பெரும் சாதனை தானே.
மேலும், வெற்றிபெற்றவர்களை மட்டும் கொண்டாடும் மனநிலை நம் ஊரில் மட்டும் அல்ல , மனித சமுதாயத்துக்கே உரித்தான மனநிலை தான். ஆனால், வெற்றிக்கான வாய்ப்புகளையும், வாசல்களையும் திறந்து விடும் அமைப்பு நம் ஊரைக் காட்டிலும் மற்ற இடங்களில் அதிகம். விளையாட்டு என்றால் நமக்கு கிரிக்கெட் தான் கிரிக்கெட்டையும் கிரிக்கெட் வீரர்களையும் நாம் கொண்டாடும் அளவுக்கு, நமது தேசிய விளையாட்டான ஹாக்கி மற்றும் நம் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, மல்யுத்தம் போன்றவற்றை நாம் மருந்துக்காவது நினைத்துப்பார்க்கிறோமா என்றால் இல்லவே இல்லை.

விளையாட்டு வகுப்பு என்று ஒன்று பள்ளியில் இருக்கும். வாரத்தில் ஒரு நாள். ஒன்பதாம் வகுப்பு,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அந்த வகுப்பு இருக்கவே இருக்காது. கணக்கு வாத்தியார் அல்லது அறிவியல் வாத்தியார் அதையும் கடன் வாங்கி மிச்சமாகிப்போன பாடங்களை நடத்திவிடுவார்கள். பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. நேர்ந்து விடப்பட்டவர்கள்.
எட்டாம் வகுப்பு வரை பள்ளியைச் சுற்றிலும் இருக்கும் குப்பைகளைப் பொறுக்கியது போக, வாத்தியார்களுக்கு டீ வாங்கித்தந்தது போக, ரெக்கார்டு ரூமை சுத்தம் செய்தது போக, கொடிநாள் அந்த நாள் இந்தநாள் என பேரணி போனது போக மிச்சமிருக்கும் ஏதாவது ஒரு நாளில் விளையாட்டு பீரியடில் விளையாட விடுவார்கள். மைதானம் பிரம்மாண்டமாக இருக்கும். விளையாட்டு உபகரணங்கள் கேள்விக்குறிதான். சில பள்ளிகளில் கிரிக்கெட் மட்டைகள், சாப்ட் பால் மட்டைகள் இருக்கும் பந்துகள் இருக்காது இப்படி பல பல சிக்கல்களைத் தாண்டி, உற்சாகமாக வீட்டிலிருந்து கொண்டு போன மட்டையோ பந்தையோ வைத்து ஒரு மணி நேரம் விளையாடலாம். விளையாட்டு உடற்பயிற்சி எதற்கும் பள்ளிகளில் முக்கியத்துவம் இல்லை. சிறு வயதிலிருந்தே பல்வேறு விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுத்தினால் தானே ஆர்வம் வரும். பின்னர் பெரியவர்களானதும் எந்த விளையாட்டில் அதிக நாட்டம் இருக்கிறதோ அதைத் தொடர்வோம்? அப்படி ஒரு அமைப்பே இங்கு இல்லையே.

அரசுப்பள்ளிகளிலாவது இப்படி இருக்கும், தனியார் பள்ளிகளில் வெறும் படிப்பு படிப்பு தான். காரணம் மதிப்பெண் மட்டும் தான் இலக்கு. அடிப்படை அமைப்பையே நாம் இப்படி வைத்துக்கொண்டு, சாதிக்கனும் மெடல் வாங்கனும் என்றெல்லாம் கனவு கண்டால் எப்படி நடக்கும் ..?

மாற வேண்டும். யார் மாற்றுவது ..?
.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்


போதிப்பவர்களெல்லாம் ஆசிரியர்கள் அல்லர்
யார் கற்றுக்கொடுக்கிறார்களோ அவர்களே ஆசிரியர்கள்
  • கதே

சிறு வயதிலிருந்தே என் கனவு ஆசிரியர் ஆகவேண்டும் என்பது தான். இதற்கான முதல் விதையைத் தூவியவர் என் கனவு ஆசிரியராகவும் பக்கத்து வீட்டு வழிகாட்டியாகவும் வந்தவர் ஆசிரியர் பஞ்சலிங்கம் அவர்கள். நான் ஏழாம் வகுப்புவரை படித்தது ஆனைமலை அருகிலுள்ள எனது சொந்த ஊரான பெத்தனாயக்கனூரில். ஆறாம் வகுப்பு வரை அதே பள்ளியில் தான் படித்தேன் என்றாலும் ஏழாம் வகுப்பு போகும்போது தான் அந்தப்பள்ளிக்கு மாற்றலாகி வந்திருந்தார் பஞ்சலிங்கம் வாத்தியார். முறுக்கு மீசை, வெள்ளை வேட்டி சட்டை, கண்டிப்பான பார்வையுடன் அவர் எங்கள் பள்ளிக்கு வந்ததுமே பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். கற்பித்தல் முறை, மாணவர்களின் எழுத்து வடிவம் என அனைத்தையும் மாற்றினார். அவரிடம் நான் படித்தது ஆறுமாத காலம் தான் அதற்குள் நாங்கள் அந்த ஊரை விட்டு இடம் பெயர்ந்துவிட்டோம்.

வகுப்பில் வந்த முதல் நாளிலேயே என்னை இனம் கண்டுகொண்டார் போலும் , ஆனாலும் என்னிடம் எதுவும் சொன்னதில்லை. பள்ளியில் அவர் சேர்ந்து சில வாரங்களிலேயே எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் குடியேறினார். அவர்களது மகள்களும் மகனும் எனக்கு நெருக்கமான நண்பர்களானார்கள். விடுமுறை நாட்களில் ஒன்றாகவே இருப்போம். அவர் பள்ளிக்கு வந்து ஒரு மாதத்திலேயே என் அப்பாவைச் சந்தித்து என்னைப்பற்றி பெருமையாக சொல்லியிருக்கிறார். நான் நன்றாக வருவேன் என. அப்பாவுக்கு ரொம்பப் பெருமிதம். அதனாலேயே அப்பாவுக்கும் அவரைப் பிடிக்கும்.

பள்ளியில் சீருடையில் ஒழுங்காக வருவது, காலந்தவறாமை, பாடங்களை மிக எளிமையாகக் கற்பிப்பது என ஒரு நல்லாசிரியரின் அனைத்துச் செயல்பாடுகளையும் செவ்வனே செய்தார், அதுமட்டுமல்ல, தினமும் மாலை டியூசன் எடுப்பார். பணம் கட்டாயமில்லை. கொடுப்பவர்கள் கொடுக்கலாம். அதில்தான் அனைத்து வகுப்பு மாணவர்களையும் மிகச் சிறப்பாக வழிநடத்தினார். ஆங்கிலம் முக்கியம் எனச் சொல்லி வினைத்தொகைகள், சொற்றொடர்கள் , விடுப்பு விண்ணப்பம் போன்றவற்றை பிரத்யேகமாக சொல்லிக்கொடுத்தார். ஆங்கில எழுத்துகளை வித்தியாசமாக பெட்டி பெட்டியாக எழுத வைத்தார். எங்கள் பள்ளி மாணவர்கள் அனைவரும் அவ்வாறே எழுத ஆரம்பித்தனர். பார்ப்பதற்கு கையெழுத்து அவ்வளவு அழகாக இருக்கும். முதன் முதலாக பள்ளியில் சுதந்திர தினவிழாவை சிறப்பாகக் கொண்டாட வைத்து, என்னை வட்டாட்சியர்முன்னால் பேச்சுப்போட்டியில் பேச வைத்து என் தன்னம்பிக்கையை வளர்த்தது என இப்போது வரைக்கும் என் மனதில் நிற்கும் ஆசிரியர் அவர்.


ஏழாம் வகுப்பு அரையாண்டுக்கே, வடக்கிபாளையம் பள்ளியில் சேர்ந்தேன். அந்தப்பள்ளியின் சூழலுக்கு என்னை மாற்றுவதற்கே கொஞ்சம் திணறிய சமயம். என்னை நம்பி பல்வேறு பணிகளைப் பணித்து, எனக்கு பாரதியை அறிமுகம் செய்து, என்னைப் பேச்சுப்போட்டிகளில் பங்கெடுக்க வைத்தவர் தமிழாசிரியர் கந்தவேல் அய்யா. பள்ளியில் சேர்ந்த சில மாதங்களிலேயே பள்ளி முழுதும் நல்ல பெயர் வரக் காரணமானவர் அவர்தான். ஒரு மாணவி நான் போடி வாடி எனத் திட்டிவிட்டதாக தலைமையாசிரியரிடம் புகார் அளித்த போது தானாகவே வந்து இவன் அப்படிப் பேசியிருக்க வாய்ப்பேயில்லை என்று தலைமையாசிரியரின் முன்னால் அவர் பேசியபோது நான் கண்கலங்கிப் போனேன். அவரிடம் படித்தது ஆறுமாதம் தான். நான்கு வருடங்கள் கழித்து பேருந்து நிலையத்தில் என்னைப் பார்த்து அடையாளம் கண்டவர், தான் பிடித்துக்கொண்டிருந்த சிகரெட்டை அவசரமாகப் போட்டுவிட்டு நீ பூபாலன் தானே நல்லா இருக்கியா என அவராக வந்து பேசினார். ஆசிரியர் என்பவர் யார், அவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணங்களாக இன்றைக்கு வரைக்கும் என் மனச்சித்திரங்களில் இவ்விரு ஆசிரியர்கள் தான் இருப்பர்.

அதே பள்ளியின் கலாவதி டீச்சர், ஆசிரியர் மாணவன் உறவைத் தாண்டி சொந்த மகனைப்போலக் கொண்டாடியவர். பள்ளியில் இறுதி நாட்களின் ஆண்டுவிழாவில் நான் நடித்த நாடகம், பேசிய பேச்சையெல்லாம் கேட்டுவிட்டு என் பையன் இப்படித்தான் சுட்டியா இருப்பான் என்று ஒரு எட்டாம் வகுப்பு மாணவனான என்னை மடியில் அமரவைத்து அணைத்துக்கொண்டாரே.. அந்தக் கதகதப்பில் தான், அந்த அன்பில் தான் நான் உருவானேன்.

ஒன்பதாம் வகுப்புக்கு காளியண்ணன் புதூர் பள்ளியில் சேர்ந்தேன். சேர்ந்து மூன்றாம் நாள் காலையில் முதல் வகுப்பில் மாணவர்கள் பரபரப்பாக இருக்கிறார்கள். தமிழ் அய்யா வருவாராமாடா, எல்லாம் சுத்தம் பண்ணுங்க என்று அறையை ஒழுங்கு செய்து மணியடிக்கும் முன்பே அனைவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து அமைதியாக இருக்கின்றனர். எனக்கே ஆச்சர்யம். மாணவர்கள் பலர் ஐந்தாம் வகுப்பிலிருந்தே அதே பள்ளியில் படித்தவர்கள் அவர்களுக்குத் தெரியும் அவரைப்பற்றி. 9 மணிக்கு மணியடிக்கும் சத்தத்துடன் வகுப்பறைக்குள் ஆஜானுபாகுவான உடலுடன் நுழைகிறார் தமிழ் அய்யா. கிருட்டினசாமி என்பது அவர் பெயர் என்று மூன்று நான்கு மாதம் கழித்துத்தான் தெரியும்.

முதல் நாள் முதல் வகுப்பிலேயே பாடம் நடத்தத் துவங்கிவிட்டார். முதல் வகுப்பில் அவர் நடத்தியது கம்பரின் கடவுள் வாழ்த்துப்பாடலான " உலகம் யாவையும் " பாடல். ஒரு முறை ஒவ்வொரு வார்த்தையாக, ஒவ்வொரு வரியாக படித்து அதற்கான அர்த்தங்களைச் சொல்லி, கதை சொல்வது போல விளக்கம் சொல்லி, கடைசியாக அவர் முழுச் செய்யுளையும் படித்தார் எங்களை கூடவே ஒருமுறை சொல்லச் சொன்னார். அவ்வளவுதான் அன்றைக்கு அவர் நடத்திய அந்தச் செய்யுள் அதன் பிறகு எங்குமே படிக்காமலும் இன்னும் எனக்கு மனப்பாடமாகத் தெரியும். அது தான் அய்யா.

பாடம் நடத்தி முடித்தவுடனேயே மாணவர்களை அந்தச் செய்யுளை பார்க்காமல் ஒப்பிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். திக்கென்று ஆகிவிட்டது அனைவருக்கும். செய்யுளைச் சரியாக ஒப்பித்தவர்கள் மட்டும் வகுப்பறைக்குள் இருக்கச் சொல்லிவிட்டு , மற்றவர்கள் வெளியே போகலாம் மரத்தடிக்கு. மனப்பாடம் செய்து ஒப்பித்துவிட்டு உள்ளே வரலாம் என்றார். முதல் முறையிலேயே ஒப்பித்து வகுப்பறைக்குள்ளேயே இருந்தது நான்கைந்து பேர் தான் என்பது நினைவு. நான், சந்திரசேகர், ராமச்சந்திரன், பூங்குழலி, செல்வி அவ்வளவு தான் மற்ற அனைவரும் மரத்தடியில் தான். அவருக்கு அவரது கற்பித்தல் மேல் அத்தனை நம்பிக்கை.

மிகக் கண்டிப்பான தமிழ் அய்யா சிரித்துக்கூட நான் பார்த்ததில்லை. புல்லட்டில் தான் வருவார். புல்லட் சத்தம் கேட்டாலே வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் மாணவர்கள் தெறித்து ஓடுவார்கள் வகுப்பறைகளுக்குள். காலாண்டுத்தேர்வு வந்தது, தமிழ் இரண்டாம் தாளில் ஆறு தன் வரலாறு சொல்லுதல் கதை என்ற கேள்விக்கு அல்லது என்று குறிப்பிட்டு வரதட்சனை என்ற தலைப்பில் பதினைந்து வரிகளுக்குள் கவிதை எழுதவும் எனக் கேட்கப்பட்டிருந்தது. கட்டுரை இரண்டுபக்கமாவது எழுத வேண்டும் அல்லவா, அதற்கு சோம்பேறித்தனப்பட்டு கவிதையைத் தேர்ந்தெடுத்தேன். நான் ஒருத்தன் தான் கவிதையை எழுதியிருக்கிறேன் என்பது பின்புதான் தெரிந்தது.

வகுப்பில் விடைத்தாள் கொடுக்க வந்தார் தமிழ் அய்யா. முதல் மதிப்பெண் என்று ஒரு மாணவிக்கு 97 மதிப்பெண்களுக்கு கை தட்டி கொடுத்தவர் தொடர்ந்து ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். 50க்கும் கீழ் வாங்கியவர்களுக்கு ஒரு அடி, இரண்டு அடி என போய்க்கொண்டிருந்தது. அஸ் புஸ்ஸென கைகளில் வாங்கிக் கொண்டு வந்து அமர்கிறார்கள். என் விடைத்தாளைத் தரவேயில்லை. எனக்கு நடுக்கமாகிவிட்டது என்னது இன்னும் என் பேப்பர் வரலியே ரொம்பக் கம்மியோ, அடி வெளுக்கப் போறாரோ என பயந்தபடியே இருந்தேன். கடைசியாக என் பேப்பரை எடுத்தவர் என்னை அருகில் அழைத்து நிற்கவைத்தார்.நடுங்கிக்கொண்டே நின்றேன். டேபிளுக்கு முன்னால் வந்து நின்று இவன் 91 மதிப்பெண்கள் எடுத்துள்ளான் என்றார். எனக்கு போன உயிர் கொஞ்சம் திரும்பி வந்தது. ஆனால் ஏன் …? நான் நினைப்பதற்குள் அவரே தொடர்ந்தார். அதுவல்ல முக்கியம். பூபாலன் மட்டும் தான் ஒரு கவிதை எழுதியுள்ளான் என்று சொல்லி வரதட்சணை என்பது முதுகெலும்பற்ற மூடர்களின் தேவை என்பதாக நான் எழுதிய கவிதையை உரக்க வாசித்தார். மாணாவர்கள் கை தட்டினார்கள். பெருமையாகச் சொன்னார் ரொம்ப அற்புதமா எழுதியிருக்க தம்பி. நல்லாயிருக்கு நல்லாயிருக்கு என்று. நெகிழ்ந்து போனேன். அதுமட்டுமா உடனே தலைமையாசிரியரிடம் அழைத்துப்போனார், அதே குரலில் படித்துக்காட்டினார். அப்போது அவ்வளவு பெரிய ஆஜானுபாகுவான உடல் ஒரு குழந்தையைப் போலக் குழைவதை நான் கண்டேன். ஒரு சிறுவன் அதுவும் தன் மாணவன் எழுதிய கவிதையைத் தன் தலையில் தூக்கிக் கொண்டாடிய ஒரு நல்லாசிரியரைக் கண்டேன். அடுத்தநாள் ப்ரேயரில் அந்தக் கவிதையைப்பற்றிச் சொல்லி என்னை வாசிக்கவும் வைத்தார்.

இவை அனைத்துமே எனக்குப் புதுமையாக இருந்தது. எனக்கு மட்டுமல்ல பள்ளிக்கே அவரது செயல் புதுமையாகவும், மிகுந்த ஆச்சர்யத்தைத் தருவதாகவும் இருந்தது. அவர் விதைத்த விதை, அவர் தெளித்த உயிர் நீர் தான் அன்று முதல் இன்று வரைக்கும் என் கவிதைகள் வேர்பிடிக்கக் காரணமாயிருந்தது.

இந்த ஆசிரியர்களையெல்லாம் அதன்பின்னர் ஒரு நாளும் நான் சந்தித்ததில்லை. இப்போது எங்கு எப்படியிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. ஆனால், இன்னும் என் நினைவில் வாழ்கிறார்கள். இப்படி எத்தனை மாணவர்களை அவர்கள் உருவாக்கியிருப்பார்கள். ஒழுக்கசீலனாக, மனிதனாக, ஒரு படைப்பாளனாக, கலைஞனாக, அதிகாரியாக என எத்தனை விதைகள் முளைத்திருக்கும் இவர்களால்.

நாடு முழுவதும் பல நல்ல ஆசிரியர்களின் செயல்பாடுகளைப் பார்த்து வருகிறோம். தனது சொந்தப்பணத்தை மாணவர் நலனுக்காக செலவழிப்பது, அடிப்படை வசதிகள் கூட இல்லாத பள்ளியிலும் திறமையான மாணவர்களை உருவாக்க மெனக்கெடுவது, மாறிவரும் காலகட்டத்துக்கு ஏற்ப தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பாடம் நடத்துவது என அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மிகப்பெரும் சாதனைகளைச் செய்துவருகிறார்கள்.

என் நட்பு வட்டத்திலும் நிறைய ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் அவ்வளவு பெருமையாக இருக்கும். சமுதாயத்தின் பெருமைமிகு பணி மட்டுமல்லாது சமுதாயத்தை உருவாக்குவதில் பெரும்பணி இவர்களது. கவிஞர் க.அம்சப்ரியா தனியார் பள்ளி தமிழாசிரியர் அவர் மாணவர்களிடத்தில் செலுத்தும் அன்பு, மாணவர்கள் அவரிடம் காட்டும் மரியாதை ஆகியவற்றைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அவருடன் எங்கு போனாலும் ஒரு மாணவன் அல்லது ஒரு மாணவி அய்யா என்று வந்து நிற்பார், உதவிகள் செய்வர். கவிஞர் சோலைமாயவன், புன்னகை ஜெயக்குமார் ஆகியோர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள். இவர்கள் மாணவர்களுக்கு கற்பித்தலைத் தாண்டியும் செய்யும் உதவிகளும் , செயல்பாடுகளும் இவர்கள் மீது பெரும் மரியாதை கொள்ளச் செய்தது.

தனது பள்ளியில் திறம்படக்கேள் என்னும் நிகழ்ச்சியை மாணவர்களுக்காக சிரமப்பட்டு நடத்தி வரும் ஆசிரியர் பாலமுருகன், மாணவர்களுக்கு மிகச்சரியான பாதைகளை அமைத்துத் தந்து வழிகாட்டும் செந்திரு, பானுமதி அம்மா, ஜீவாபாரதி, அனிதா, இவர்கள் மட்டுமல்லாது நிறைய ஆசிரியர்கள் என் முகநூல் நட்பில் இருக்கிறார்கள் … இரா.எட்வின், வசந்த்,ப்ராங்க்ளின், ராம்ராஜ்,  இவர்களையெல்லாம் பார்த்து ஏங்குகிறேன் நான் ஆசிரியராக இல்லாமல் போனதற்காக .. இவர்களெல்லாம் உண்மையிலேயே கனவு ஆசிரியர்கள்

ஆசிரியர் பணியை தவம் போலச் செய்யும் அத்தனை பேருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..