இரண்டு
மாதங்களாக
புத்தகங்கள்
தெரிந்தவர்கள்
சோதிடர்
எல்லோரையும்
புரட்டி
இருபது
பெயர்களைச்
சேகரித்து
ஆறு
பெயர்களை
வடிகட்டி
இரண்டு
பெயர்களாக்கி
குலதெய்வக்
கோவிலில்
திருவுளச்
சீட்டு போட்டு
எனக்குப்
பெயர்
தேர்வு
செய்தேனென்று
பெருமையாய்ச்
சொல்லிக்கொண்ட
அப்பா
இதுவரை
ஒரு
முறை கூட
அழைத்ததில்லை
என்னை
பெயர்
சொல்லி
அப்பா மட்டுமல்ல வேறு யாரும் கூட என்னை என் முழுப்பெயரைச் சொல்லி அழைப்பதில்லை ... அழைக்கவும் முடியாது :-)
என்னுடைய முழுப்பெயர் பூபாலகிருஷ்ணமூர்த்தி ( மூச்சு வாங்குதா ). இதை என் அப்பா அரும்பாடு பட்டு தேர்வு செய்து வைத்தார். திருமணமாகி நான்கு வருடங்கள் குழந்தையில்லாமல், திருமூர்த்தி மலையில் வேண்டுதல் செய்த பிறகு பிறந்தேனாம். சிவன், பிரம்மா,விஷ்ணு என மும்மூர்த்திகளின் கோவில் அது என்பார்கள் ( அது ஒரு சமணக் கோவில் என்ற தகவலும் உண்டு ). ஆகவே அந்தக் கோவிலின் மும்மூர்த்திகளின் பெயரையும் சேர்த்து வைத்துவிட்டார்கள்.
இது மட்டுமா, வருபவர்கள் எல்லாம் எனக்கு ஒரு பெயர் வைத்தார்கள். முருகேஷ் சித்தப்பா , இறந்து போன தன் நண்பனின் நினைவாக எனக்கு ரமேஷ் என்று பெயர் வைத்தார். இன்றும் கிராமத்தில் , உறவினர்கள் எல்லோரும் ரமேஷ் என்று தான் அழைப்பார்கள் ( பூபால கிருஷ்ணமூர்த்தி என்று அழைத்துவிட முடியுமா கிழவிகளால் ). ஆத்தா கணேஷ் என்று பெயர் வைத்தாராம் ( யார் ஞாபகமோ ), இன்னும் ஒரு பெயர் கூட வைத்தார்களாம் காளிதாஸ் என்று. எந்தப் பெயரும் நிலைக்கவில்லை ..
பள்ளியில் பெயர் கொடுக்கும் போது அப்பா பூபால கிருஷ்ண மூர்த்தி என்றே கொடுத்துவிட்டார். அன்று முதல் இன்று வரை எந்தப் பதிவேட்டிலும் யாரும் ஆங்கிலத்தில் என் பெயரை சரியாக எழுதியதாக சரித்திரமே இல்லை. இன்றும் அலுவலகக் குறிப்பேட்டில் தவறாகத்தான் உள்ளது. வங்கிக் கணக்கிலும் அப்படித்தான்.
ஏன் ஐந்தாம் வகுப்புவரை நானே குழம்பிப்போவேன் எழுத.
எழுதுவதைக் கூட விடலாம். இதுவரை வெகு வெகு சிலரே என்னை முழுப்பெயர் சொல்லி அழைப்பார்கள். எனது நினைவுகளின் படி, நண்பனின் தங்கை, ஒரு நண்பன், எப்போதாவது விளையாட்டுக்காக சில நண்பர்கள் தான் அப்படி அழைத்திருக்கக் கூடும். பள்ளியில் வருகைப்பதிவேட்டில் ஆசிரியர் அழைப்பார். அவ்வளவு தான். வேறு எங்கும் யாரும் அழைத்ததாக நினைவில்லை. வீட்டில் அப்பாவும் அம்மாவும் தம்பி என்று தான் அழைப்பார்கள்.
கவிதை எழுதத் துவங்கிய பள்ளிக் காலங்களில் நானாக இரா.பூபாலன் என்று எழுதத் துவங்கினேன். இன்று வரை அந்தப்பெயரிலேயே எழுதி வருகிறேன். பூபால் என்றும் பூபாலன் என்றும் சுருக்கி நண்பர்கள் அழைப்பார்கள். மோகன், அனாமிகா இருவரும் பூப்ஸ் என்று (செக்ஸியாக ???) சுருக்கி அழைப்பார்கள். நண்பர் ப்ரேம் இன்னும் மிகச்சுருக்கி பூ என்று தான் அழைப்பார் இன்று வரை.அதற்குமேல் சுருக்க முடியாததால் அப்படி. பள்ளியில் தோழி ஒருத்தி வைத்த சங்கேதப்பெயர் ஃப்ளவர் மில்க்
( Flower Milk = பூ பால் அய்யஹோ ).
கூகுளாண்டவரிடம் விசாரித்த வரை இந்தப் பெயர் உலகின் எந்த மூலையிலும் எந்த மனிதனுக்கும் இல்லை என்னைத் தவிர. ஆக, உலகின் தனித்துவமான பெயர் என்னுடையது .
அப்பாவிடம் என் பெயரின் நீளத்தைப்பற்றி ஒரு முறை குறைபட்டுக் கொண்டபோது சொன்னார். அது ஒரு மசக்காலத்துல அப்படி வச்சுட்டேன். உனக்கு வேணும்னா இப்ப புடிச்ச மாதிரி மாத்திக்கோ என்று.
மாற்றிவிட விருப்பமில்லை.. இப்படியே இருக்கட்டும்....
அடடா எத்தனை விதமான விளித்தல்.
பதிலளிநீக்கு