செவ்வாய், 31 ஜூலை, 2018

சிற்பி இலக்கிய விருது 2018

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் பொள்ளாச்சியில் கவிஞர் சிற்பி அவர்களது அறக்கட்டளையின் பெயரில் சிற்பி இலக்கிய விருது விழா நடைபெறும் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி சனிக்கிழமை, பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியில் நடைபெறுகிறது..

இந்த முறை விருது பெறுபவர்கள் என் மதிப்பிற்கும் அன்புக்கும் உரியவர்கள், தொடர்ந்து நான் அவர்களது படைப்புகளையும் செயல்பாடுகளையும் விரும்பி கவனித்து வருகிறேன். நான் மட்டுமல்ல, தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் அத்துணை பேருக்கும் தெரிந்த முகங்கள்.

இந்த ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருது பெறுபவர்  கவிஞர் மகுடேஸ்வரன் அவர்கள். மிகச் சிறந்த கவிஞர்,  எழுத்தாளர், பேச்சாளர், அற்புதமான தமிழ் அறிஞர்,ஆய்வாளர்,ஆர்வலர், பல்வேறு புதிய தமிழ்ச்சொற்களையும் , மொழிபெயர்ப்புச் சொற்களையும் தமிழுக்கு தொடர்ந்து வழங்கி வருபவர். 

கவிஞர் மகுடேஸ்வரனை நான் எனது கல்லூரிக் காலத்திலிருந்து வாசித்து வருகிறேன். எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தனது கற்றதும் பெற்றதும் பகுதியில் மகுடேஸ்வரனின் பல்வேறு கவிதைகளையும் குறுங்கவிதைகளையும் அறிமுகம் செய்துள்ளார்.

வாழ்ந்து கெட்டவனின் 
பரம்பரை வீட்டை 
விலை முடிக்கும்போது 
உற்றுக் கேள் 
கொல்லையில் 
சன்னமாக எழும் 
பெண்களின் விசும்பலை

கவிஞர் மகுடேஸ்வரனின் இந்தக் கவிதையை பல நிகழ்வுகளில், மேடைகளில் நான் சொல்லி வந்திருக்கிறேன்.

 ஆட்டுக்குட்டிகள்
 முதுகு தேய்த்துரச உதவட்டும்
 என் கல்லறைச் சுவர்

- இதுவும் அவர் கவிதை தான். எப்போதும் நினைவில் இருக்கும் கவிதை. என்னை அடீங்கோ, கொல்லுங்கோ எனத்துவங்கும் ஒரு கிராமத்துப் பெண்ணின் குரலில் ஒலிக்கும் கவிதையும், அந்தக்காலம் போலில்லை இந்தக்காலம் என்கிற அவரது கவிதையும் எப்போதும் நினைவில் ஊறிக்கொண்டேயிருக்கக் கூடிய கவிதைகள்.


பல்வேறு கவிதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகளுக்குச் சொந்தக்காரர். தனித் தமிழ் எழுத்தும் பேச்சும் இவரது சிறப்பு. கவிஞர் மகுடேஸ்வரன் பெறும் விருது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது

வாழ்க நீங்களும் தங்களது தமிழ்ப்பணியும் அண்ணா ...

மேலும் கவிஞர் மகுடேஸ்வரனுடன் இந்த ஆண்டு சிற்பி அறக்கட்டளையின்  பி.எம்.எஸ் விருது மணல் வீடு ஆசிரியர் மு.ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மு.ஹரிகிருஷ்ணன் தவசி கருப்புசாமி என்ற பெயரில் கவிதைகளை எழுதி வருகிறார். மணல்வீடு என்ற சிற்றிதழை கடின உழைப்போடும் அர்ப்பணிப்போடும் தொடர்ந்து மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாது  நாட்டுப்புறக் கூத்து, மரப்பாவை, தோற்பாவைக் கூத்து முதலிய கூத்துக்கலையையும் நாடகக் கலையையும் ஆவணப்படுத்தியும் அழிந்துவிடாமல் காக்கவும் களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் என்ற அமைப்பைத் துவங்கி ,  தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்.மணல் வீடு இலக்கிய வட்டம் மூலமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இலக்கிய விருதுகளும் வழங்கி வருகிறார்.

மணல் வீடு பதிப்பகம் மூலம் நவீன இலக்கியத்தின் முக்கியமான புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருப்பவர் என பல்வேறு முகம் கொண்ட ஆளுமை.  ஹரிகிருஷ்ணனுக்கான விருதும் மிகப் பொருத்தமானது.

வாழ்த்துகள் மு.ஹரிகிருஷ்ணன்.


எழுத்தாளர் நாஞ்சில்நாடன் வாழ்த்துரை வழங்க தமிழறிஞர் கரு.ஆறுமுகத் தமிழன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.. விருது விழா, தமிழ்த் திருவிழாவாக இருக்கப் போகிறது ..

நிகழ்வின் அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன் .. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வருக..



செவ்வாய், 17 ஜூலை, 2018

கேடுகெட்ட உலகம்


                இவ்வளவு எதிர்மறையாக என்றுமே நான் எழுதியதாக நினைவில் இல்லை. ஆனால், இந்த உலகம் கேடு கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது, சீரழிந்து கொண்டிருக்கிறது என்று மட்டுமே நினைக்கத் தோன்றுகிறது இந்தச் செய்தியைப் படித்தவுடன்..

சென்னை அயனாவரத்தில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில்  வசிக்கும் 11 வயதான சிறுமி சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படிக்கிறார்.
வாய் பேசும், காது கேட்கும் திறன் குறைபாடு உள்ள அந்த மாணவி, தினந்தோறும்  தனது வீட்டுக்கும், பள்ளிக்கும் செல்லும்போது குடியிருப்பில் உள்ள லிப்டை பயன்படுத்துவார். ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்களோடு அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அனைவரிடமும் வெகுளித்தனமாக அந்தச் சிறுமி பேசுவாராம்.

இதைப் பயன்படுத்தி ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்கள் 4 பேர் முதலில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ‘விஷயத்தை வெளியில் சொன்னால் உன்னைத் தீர்த்துக்கட்டிவிடுவோம்’, என்று கத்தியைக் காட்டி மிரட்டியதால் அந்தச் சிறுமியும் விஷயத்தை வெளியே சொல்ல பயந்து அமைதியாக இருந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்

முதலில் அந்த 4 காமக் கொடூரன்களின் இச்சைக்கு பலியான அந்தச் சிறுமி, அடுத்தடுத்து அடுக்குமாடிக் குடியிருப்பில் காவல் பணிக்கு வரும் மேலும் 5 காவலாளிகளின் காமப்பசிக்கு இரையாக்கப்பட்டு இருக்கிறாள். அக்குடியிருப்பின் மொட்டை மாடி பகுதியிலும், ‘லிப்ட்’டுக்குள் வைத்தும் இந்த காமக் கொடூரர்கள் அந்த சிறுமியை தங்கள் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். அத்தோடு விடாமல் அக்குடியிருப்புக்கு பல்வேறு வேலைகளுக்காக வந்த பிளம்பர்கள், எலெக்ட்ரீசியன்கள் என்று மொத்தம் 22 பேர் கடந்த 7 மாதங்களாக ஒவ்வொருவராக தங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

கேட்கவே உடல் நடுங்குறது. ஒரு 11 வயது சிறுமியை 23 வயது முதல் 60 வயது வரை உள்ள 22 ஆண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியிருப்பது மிகுந்த பதற்றத்தையும், அச்சத்தையும், பெரும் கோபத்தையும் வரவழைக்கிறது.. 22 பேரில் 17 பேரை இப்போது கைது  செய்திருக்கிறார்கள்.

இவர்களை என்ன செய்வது ?????

பிடிபட்ட குற்றவாளிகளின் படம் இதோ ..

மாற்றுத் திறனாளி மாணவி விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்கள்.


இவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க வேண்டும். இந்த வழக்கில் கிடைக்கும் தண்டனை ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

இந்தக் கொடுமையை தனது பெற்றோரிடம் சொல்லத் தயங்கியிருந்த சிறுமி,  வெளிமாநிலத்தில் தங்கி படித்துக்கொண்டிருந்த தனது மூத்த சகோதரி விடுமுறையில் வீட்டுக்கு வந்த போது அவரிடம் சொல்லி அழுதிருக்கிறார். அதன் பின்னர் தான் இந்தக் கொடுமை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்த இந்தக் கொடுமையை ஏன் பெற்றோரிடம்  உடனே சொல்லவில்லை, குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையில் ஏதோ ஒரு இடைவெளி இருக்கிறதல்லவா ?  பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே இருக்கும் இந்த இடைவெளி நவீன காலச் சூழலில் அதிகரித்துக் கொண்டே போவது மிகுந்த ஆபத்தை விளைவிக்கும். சரியோ தவறோ எதுவாக இருப்பினும் பெற்றோரிடம் பகிர வேண்டும், அதற்கான இடத்தையும் நேரத்தையும் பெற்றோர் அல்லவா தரவேண்டும். நாம் அதைத் தருவதில்லை.

இந்த நிலையை நாம் களைய வேண்டும்.. தினமும் சிறிது நேரம் நம் பிள்ளைகளுடன், பெற்றோர்களாக அல்லாது நண்பர்களாக உரையாட வேண்டும். அவர்கள் அன்றாடம் சிறு செயல்களில் விளையும் சிறு சிறு வெற்றிகளைப் பாராட்ட வேண்டும், சிறு சறுக்கல்களுக்கு அவர்களைப் பக்குவப்படுத்த வேண்டும்.

நல்ல தொடுகை, கெட்ட தொடுகையைக் கற்றுத் தருவதின் அவசியமும் இப்போது உணரப்படுகிறது.

இன்னும் இந்த உலகம் மோசமாகிக் கொண்டே தான் இருக்கப் போகிறது. நமது குழந்தைகளை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்...

அவர்களது எதிர்காலம் நமது கைகளிலும் இருக்கிறது...