வியாழன், 27 அக்டோபர், 2022

கவிதை ரசனை 8

 

கவிதைகள் உயிருள்ள பிராணிகள். அதுவும் மனிதரிடமிருந்து பிறப்பதனாலோ என்னவோ அவற்றுக்கு மனித குணம், மனித மனம், மனித சிந்தனை தாம். அவை தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமும் மனிதர்களைப் போன்றே ஒவ்வொரு விதமாக இருக்கின்றன. சொல்ல வந்ததைப் பட்டென்று போட்டு உடைத்துவிடுவர் சிலர். தயங்கித் தயங்கி சொல்லவந்ததைச் சொல்லியும் சொல்லாமலும் மருகி நிற்பர் சிலர். சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் குறிப்புணர்த்தும்படி வேறெதோ ஒன்றைச் சொல்லி அதன் வழி நாம் அவர் சொல்ல வந்ததை உணரச் செய்வர் சிலர். கவிதைகளுக்கும் இதே குணமுண்டு. சில கவிதைகள் வெளிப்படையாகப் பேசி விடுகின்றன. சில கவிதைகள் சொற்களை வாசலாக்கி பொருளை உட்பக்கமாக ஒளித்து வைத்திருக்கின்றன. தாழிடப்பட்டிருக்கும் சொற்களை ஒவ்வொன்றாகத் திறந்து கவிதையின் பொருளைக் கண்டடையும் படி இருக்கின்றன. நவீன கவிதைகள் நேரடியாக பெரும்பாலும் பேசுவதில்லை. அவை சொல்ல வந்த பொருளை சொற்களுக்குள் ஒளித்து வைத்திருக்கின்றன. கவிதையின் சொற்களே தாழ்களாயிருக்கின்றன அவையே சாவியுமாக இருக்கின்றன. வாசகன் சொற்களைக் கொண்டே சொற்களைத் திறந்து பொருளை அடைய வேண்டியிருக்கும். இது ஒரு மகத்தான அனுபவமாக இருக்கும். ஆகவே தான் நவீன கவிதைகள் கொண்டாடப்படுகின்றன. பொருளும் கூட ஒன்றாயிராது. வாசகரைப் பொறுத்து, வாசிக்கும் மனநிலையைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலையிலும் புதிய புதிய வாசல்களை நவீன கவிதைகள் திறந்து காட்டியபடி இருக்கின்றன.

கவிதைகளின் வாசல்களுக்குள் பயணிப்பது என்பது அலாதியானது. ஒரு இருட்குகைக்குள் பயணிக்கும் சாகச உணர்வோடும் ஒரு வெட்டவெளியின் சுதந்திரத்தோடும் நாம் அவற்றுக்குள் பயணிக்க முடியும். கவிதைக்குள் கவிஞனுக்கான இடமென்ற ஒன்றுண்டு. அவனுக்கான சிம்மாசனம் அது. வாசகன் கவிதையின் ஒவ்வொரு சொல்லாகத் திறந்து திறந்து அதை அடைய வேண்டும். சமயங்களில் அவன் அடைவது அதனினும் உயர்வான ஒன்றாயிருக்கக் கூடும். அந்தச் சுதந்திரத்தைத் தான் நவீன கவிதைகள் தருகின்றன. ஒரு நிலைக்கண்ணாடியைப் போலல்லாமல் ஒரு மாயக் கண்ணாடி போல நாம் நினைத்ததையெல்லாம் காட்டும் வல்லமை படைத்தவை கவிதைகள். 

கவிதைகள் நிகழ்விலிருந்து விலகி நின்று எதிர்க்கோணத்தில் அதை தரிசிக்க வல்லவை. அவ்வாறே நமக்கும் புலப்படுத்துபவை. பெரு.விஷ்ணுகுமாரின் இந்தக் கவிதை அதற்குச் சான்று


சிரசாசனம்


முதல்முறையாக நான் சிரசாசனம் பழகுகையில் 

வானத்தின்மீது சம்மணமிட்டு நிமிர்ந்து நின்றேன் 

அடுத்த கணம் உச்சந்தலையில் நிலம் முட்டியது 

நம்ப முடியவில்லை

ஆகாயத்திலிருந்து பூமி தொடும் தூரம்தானா...

விடையிலிருந்து எம்பும்போது மட்டும் ஏனோ

கேள்வியின் கிளை எளிதாகச் சிக்கிவிடுகிறது

தற்சமயம் 

நான்தான் என் வீட்டைப்போல 

இவ்வுலகு மொத்தத்தையும் சுமந்துகொண்டிருக்கிறேன்

உதவிக்கு ஒருவர்கூட இல்லாதபோதும் 

நான் மட்டுமே செய்வதற்குச் சற்றுச் சிரமமான காரியம்தான் 

என்றாலும்

மறுநாள் வீதியில் நடந்துசெல்கையில்

அனைவருக்கும் நான் யாரெனத் தெரிந்திருந்தது


- பெரு.விஷ்ணுகுமார் 

“ அசகவதாளம்” தொகுப்பிலிருந்து , காலச்சுவடு வெளியீடு, தொடர்புக்கு 04652278525தலைகீழாய் நடக்கும் போது நமக்கு உலகமே தலைகீழாய் இருப்பதான ஒரு மயக்கத்தைத் தருவது போதை தான். இந்த போதையை ஒரு போதை வஸ்து தான் தரவேண்டுமென்பதில்லை. கவிதை தரும்.  இந்தக் கவிதையை தலைகீழாய் இருக்கும் ஒருவனின் தலைகீழ்ப் பார்வை என நேரடியாக ரசிக்கலாம் தான்; ஆனாலும் இந்தத் தலைகீழ்த் தனத்தை வேறெதுவோடாவது பொருத்திப் பார்த்துக்கொள்ளக் கூடிய இடத்தையும், சுதந்திரத்தையும் இக்கவிதை தருகிறது. தான் தான் இந்த வீட்டைப் போல இவ்வுலகு மொத்தத்தையும் சுமந்து கொண்டிருக்கிறேன் என்பதான நினைப்பு தான் ஒருவனின் இருப்பை பதற்றமாக்குகிறது. அந்நினைப்பு தான் இக்கவிதைக்கான பொறி. சிரசாசனம் என்கிற தலைப்பே பொருத்தமாயிருக்கிறது. அது தானொருவன் மட்டும் தலைகீழாய் நிற்பதன் குறியீடாக இருக்கிறது. தலைகீழாய் நிற்பது என்பதே இயல்பிலிருந்து பிறழ்ந்த ஏதோ ஒன்றின் குறியீடாக இருக்கிறது. ஏதோ ஒன்று என்பது இங்கு ஒரு கோடிட்ட இடம். நிரப்பிக்கொள்தல் சூழல் தரும் வாய்ப்பு. மறுநாள் வீதியில் நடந்து செல்கையில் அனைவருக்கும் நான் யாரெனத் தெரிந்திருந்தது என்கிற கடைசி வரிகள் ஒருமுறை வாசிப்பில் இறுமாப்பின் உணர்வைத் தருகிறது. மறுமுறை வாசிப்பில் பகடியாகத் தெரிகிறது. நவீன கவிதையை எந்தக் கோணத்திலும் அணுகிவிட முடியும் என்பதையும் உணர்த்துகிறது இந்தக் கவிதை.  கவிஞர் இசையின் கவிதைகள் நல்லுணர்வைத் தருவன. நல்ல வாசிப்பனுபவத்தைத் தருவன.  எப்பேர்ப்பட்ட பிரம்மாண்டத்துக்கும் பிரம்மாண்டமளிப்பது ஒரு சின்னஞ்சிறியது என்பதை தத்துவ மொழிதலைப் போலல்லாமல் கவித்துமாக மொழிதல் ஆசுவாசமானது. ஒரு சின்னஞ்சிறியது குறித்த கவிதைசின்னஞ்சிறியது


நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஓவியம் ஒன்று 

ஏலத்திற்கு வந்தது.

பிரம்மாண்ட அரண்மனையின் விண்முட்டும் கோபுரம் 

அதன் உச்சியில் ஒரு சிறுபுறா.

வாங்கி வந்து

வரவேற்பறையில் மாட்டிவைத்தேன்.

ஒவ்வொரு நாளும்

அந்தப் புறா இருக்கிறதாவெனத்

தவறாமல் பார்த்துக்கொள்வேன்

எனக்குத் தெரியும்

அது எழுந்து பறந்துவிட்டால்

அவ்வளவு பெரிய பிரம்மாண்டம் 

சடசடவெனச் சரிந்துவிடும்.


- இசை

“உடைந்து எழும் நறுமணம்” தொகுப்பிலிருந்து, காலச்சுவடு வெளியீடு, தொடர்புக்கு 04652278525


அவ்வளவு பெரிய மாளிகை ஓவியத்தையும் பிரம்மாண்டமாகக் காட்டுவது அதில் உயிர்ப்போடு வரையப்பட்டிருக்கும் ஒரு சிறு புறா என நினைப்பது கவிதை மனது. ஒரு பிரம்மாண்டத்தைக்  காட்சிப்படுத்த ஒரு சின்னஞ்சிறியது தேவைப்படுகிறது. ஒரு கோட்டை பெரிய கோடெனக் காட்ட அருகில் சின்னக் கோடு வரைவது போலான எளிய அறிவியலும் இந்தக் கவிதைக்குள் இருக்கிறது. ஒரு புறா தான் அவ்வோவியத்தின் பிரம்மாண்டம் என்கிற அழகியலும், ஒரு சிறு உயிர்ப்பு தான் அந்தக் கட்டிடத்தின் பிரம்மாண்டத்தைப் பறைசாற்றுகிற ஒன்று என்கிற அறிவியலுமாக இந்தக் கவிதை காட்சிப்படுத்தப்படுகிறது. பழங்கதைகளில் மந்திரவாதியின் உயிர் ஒரு சிறுகிளியிடம் இருப்பதைப் போல இந்த ஓவியத்தின் பிரம்மாண்டம் இந்தச் சிறு புறாவிடம் இருக்கிறது. 


-


ஒவ்வொரு மாதமும் வாசித்த புத்தகங்களிலிருந்து நேசித்த சில கவிதைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் - இரா.பூபாலன்