வெள்ளி, 29 ஏப்ரல், 2016

குழந்தைகள் கலைக்கொண்டாட்டம்

வணக்கம்,

ஒவ்வொரு வருடமும் மே மாதம் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் குழந்தைகள் கலைக்கொண்டாட்டம் நிகழ்வை ஒருங்கிணைக்கிறது. இந்த முறை சுமார் 300 குழந்தைகளுக்கு கதை,பொம்மலாட்டம்,ஓவியம்,நாடகம் என பல்வேறு நிகழ்வுகளுடன் முழு நாள் நிகழ்ச்சி ஒன்றைத் திட்டமிட்டுள்ளோம்.

குழந்தைகளுக்கு மதிய உணவு,இனிப்பு,தின்பண்டங்கள், எழுது பொருட்கள்,புத்தகங்கள் என அனைத்தையும் வழங்கிவிடுவோம்.
இந்த நிகழ்வில் நீங்களும் குழந்தைகளும் அவசியம் கலந்துகொள்ளுங்கள் என அன்புடன் அழைக்கிறோம். மேலும், உங்கள் ஆதரவையும் உதவியையும் செய்யுங்கள் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.


புதன், 27 ஏப்ரல், 2016

ஜெய்க்குட்டி அப்பா (எ) வைகறை (எ) ஜோசப் பென்சிஹர் க்கு...


நான் இதை எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன். அந்தச் செய்தி ஒரு பெரிய இடிச்சத்தமாக என் காதுகளில் விழுந்த கணத்திலிருந்தே பேச்சற்றிருந்தேன். இப்போது வரைக்கும் அதை நம்பவோ ஏற்றுக்கொள்ளவோ மனம் தயங்கிக்கொண்டே இருக்கிறது.அப்போது தொடங்கி சில நாட்கள் வரைக்கும் முகநூல் பக்கம் வரவேயில்லை. வந்த சில கணங்களில் நான் பார்த்ததெல்லாம் வைகறையின் முகம் தான். அனைவரும் அவர் இறந்து விட்டதாக அவரது புகைப்படத்தைப்போட்டு இரங்கல் செய்தி எழுதிக் கொண்டிருந்தனர். அதைப் பார்க்கவே சக்தியில்லை. ஆகவே, ஒரு இரங்கல் குறிப்போ அல்லது ஒரு தகவலுக்கான நிலைத்தகவலோ கூடப் போட என்னால் முடியவில்லை. சாக வேண்டிய வயதா இது..? காலமா இது..?
இப்போதுவரைக்கும் அதைப்பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை. கடந்த சில நாட்களாக நான் எனக்குள்ளேயே பேசிக் கொண்டிருக்கிறேன். வைகறையுடனே பேசிக்கொண்டிருக்கிறேன். நான் இப்படி இருப்பது கூடாது.
எதையாவது எழுதியாவது நான் இதிலிருந்து ஒரு பகுதியேனும் வெளிவந்துவிட நினைக்கிறேன். ஆகவே இதை எழுதுகிறேன் 
..
ஜெய்க்குட்டி அப்பா () வைகறை () ஜோசப் பென்சிஹர் க்கு...

இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இப்படியான ஒரு அடுக்கில் தான் மனதில் நீங்கள் இருந்தீர்கள் வைகறை. நாம் அறிமுகமானது இப்படி அல்ல. வைகறையைத் தெரியும் முதலில்; பிறகு அவர் ஜெய்க்குட்டியின் அப்பா என்பது தெரியும்; மிகக் கடைசியாகத் தான், அதுவும் பெயருக்குத்தான் தெரியும் அவரது பெயர் ஜோசப் பென்சிஹர் என்பது.

வைகறையை முதன் முதலில் எப்போது பார்த்தேன் என்பது வழக்கம்போலவே எனக்கு நினைவில் இல்லை. இதைச் சொல்லியே ஒரு முறை அவரிடம் கேட்டபோது அவர் சொன்னதுதான் என் நினைவுகளுக்குள் இருக்கிறது. 2010ல் வெளியான எனது முதல் தொகுப்பான பொம்மைகளின் மொழி தொகுப்பைப் பார்த்துவிட்டு 2011ன் ஆரம்ப நாட்களில் என்னை அழைத்து அரை மணி நேரம் உரையாடினார் அதுதான் எங்களது முதல் பேச்சு. பின்பு பல மாதங்கள் கழித்து அவரை கோவை இலக்கிய சந்திப்பில் முதன் முதலாகச் சந்தித்தேன். யாழி அறிமுகப்படுத்தி வைத்தார். ஒரு பெரும் புன்னகையுடன் தோளை அணைத்துக் கொண்டு பேசிய முதல் சந்திப்பிலேயே நெருக்கமாகிவிட்டார்.


அதன் பின்னர் ஒவ்வொரு சந்திப்பிலும், ஒவ்வொரு அழைப்பிலும் நெருக்கமாகி நெருக்கமாகி இறுக்கமாகிவிட்டார். எப்போது அழைத்தாலும் வணக்கம் நண்பரே என்று ஆரம்பிப்பார். முடிக்கும் போது நல்லது, நல்லது, நல்லது என்பார். இடையில் கொஞ்சம் இடைவெளி விட்டால் அதை ஒரு பெரிய ம்ம்ம் என்று போட்டு நிரப்புவார். வழக்கமாகப் பேசுவதற்கு எதுவுமே இல்லையென்று நான் நினைத்த தருணங்களிலும் எதையாவது பேசிக்கொண்டிருப்பார். பேருந்தில் பார்த்த காட்சிகள், பள்ளியில் நடந்தது, ஜெய்குட்டியின் சேட்டை, கவிதை என எதையாவது பேசுவார். எப்போது அவர் பேசி முடித்து வைத்த போதும் மனம் கொஞ்சம் லேசாகியிருப்பதை உணர முடியும்.

தர்மபுரியில் பணியில் இருந்த போது ஒவ்வொரு மாதமும் தவறாமல் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துக்கு வந்து விடுவார். பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தைப் பற்றி பல இடங்களில் பல மேடைகளில் குறிப்பிட்டுப் பேசியும் இருக்கிறார். வரும் போதெல்லாம் அவர் வந்து சேர்வது நள்ளிரவு பன்னிரண்டு அல்லது ஒரு மணியாக இருக்கும். அழைக்க மாட்டார். பேருந்து நிலையத்திலேயே அமர்ந்திருந்துவிட்டு காலையில் தான் அழைப்பார். நீங்கள் நன்றாகத் தூங்கும் நேரம் ஏன் தொந்தரவு செய்யனும்னு அழைக்கலை என்பார். பலமுறை திட்டியுள்ளேன். ஒரு முறை நானாக இரவு ஒரு மணிக்கு அழைத்து வந்து விட்டார் எனத் தெரிந்த பின்பு போய் வீட்டுக்கு அழைத்து வந்தேன். இன்னொரு முறை காலை 4 மணிக்கு அழைத்து வந்தேன். பின்னர் நகருக்குள் நண்பர் சோலைமாயவன் அறையெடுத்துவிட்டதால் எப்போது வந்தாலும் அவரது அறைக்குச் சென்று விடுவார்.
சென்ற வருட புத்தகக் கண்காட்சிக்கு எங்களது தொகுப்பைக் கொண்டு வரலாம் என்று முடிவானவுடன் வைகறையும் இணைந்தார். கவிதைத் தொகுப்பின் ஆரம்ப வேலைகளை நாங்கள் பார்த்துக்கொள்ள, இறுதிக்கட்ட வடிவமைப்பில் இரவு முழுதும் எங்கள் கூடவே இருந்தார். அவரது ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப்படுகிறான் கவிதைத் தொகுப்பின் ஒவ்வொரு எழுத்திலும் நாங்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறோம். சென்னையில் புத்தகங்கள் அச்சடிக்க கூடவே வந்தார். நான் , நிலாரசிகன் மற்றும் வைகறை மூவரும் மணி ஆப்செட் சென்றது புத்தகங்களை அச்சுக்குத் தந்துவிட்டு ஒரு சிறிய கடையில் வியர்க்க வியர்க்க பிரியாணி சாப்பிட்டது எல்லாம் இன்னும் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.
வெளியீட்டு விழாவுக்கு நூல்கள் வெளியிட்ட க.அம்சப்ரியா,நான்,நிலா ரசிகன்,புன்னகை ஜெயக்குமார், சோலை மாயவன் ஆகியோருடன் சேர்ந்து பல வேலைகளை இழுத்துப்போட்டு செய்தார்.
புதுக்கோட்டைக்கு மாற்றலாகிப் போகும் போது அழைத்தார். தர்மபுரியில் இருக்கும் வரை மாதா மாதம் வர முடிந்தது. இனி அது முடியுமா எனத் தெரியவில்லை என வருந்தினார். பரவாயில்லை நீங்கள் அங்கு தனியாக இலக்கியக் கூட்டங்களை ஒருங்கிணையுங்கள் நாங்கள் வருகிறோம். அங்கும் நிறையக் கூட்டங்கள் நடக்கும் அவர்களுடன் இணைந்து செயல்படுங்கள் என்றோம். அங்கு போன பின்பும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கொருமுறை வந்து விடுவார். அங்கு சென்றதுமே கவிதைகளால் பேசுவோம் என்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். 24-செப்டம்பர்-2014ல் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.யாழி,பிராங்க்ளின்
நந்தன்ஸ்ரீதரன்கனிமொழிஜி.கீதா,அனாமிகா,சோழநிலா,நாணற்காடன்,தமிழ்வரதன் என நண்பர்கள் அனைவரையும் சந்தித்ததும் பேசியதுமாக மனதில் நிற்கும் நிகழ்வாக அமைந்தது.

தொடர்ந்து, வலைப்பதிவர் திருவிழா, வீதி இலக்கியக் கூட்டம் என புதுகைக்குச் செல்ல நேர்ந்த சமயங்களிலெல்லாம் வைகறை மிகுந்த அன்புடன் கவனித்துக்கொள்வார். அண்டனூர் சுரா அவர்களின் நூல் அறிமுகம் பொள்ளாச்சியில் வைத்திருந்தோம். அவர் எனது நூல் அறிமுகத்தை கந்தர்வக்கோட்டையில் வைத்தார். இந்தச் செய்தியை வைகறையிடம் சொன்ன போதே, சிறப்பு நண்பரே முதல் நாளே வாங்க, வீட்டில் தங்கிவிட்டு இருவரும் கந்தர்வக்கோட்டை செல்லலாம் என்றார். சனிக்கிழமை காலையில் அவரது வீட்டுக்குச் சென்றுவிட்டு, மாலை கந்தர்வக்கோட்டை சென்று இரவு வீடு திரும்பி அடுத்தநாள் காலை கிளம்பி திண்டுக்கல் சென்றுவிட்டு ஞாயிறு மாலை விடு திரும்பினேன். சனிக்கிழமை ரோஸ்லின் சகோதரி செய்த மீன்குழம்பைப் பற்றி ஒரு பதிவே எழுதினேன். அன்றே நான் வந்ததை கீதா அம்மா, ஜெயா அம்மாவிடம் சொல்ல அவர்களும் என்னைப் பார்க்க புத்தகப்பரிசுடன் வந்துவிட்டார்கள். மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்தது.எல்லாமே இப்போது நடந்தது போல இருக்கிறது.

எப்போதும் வாரம் ஒருமுறை அல்லது இருமுறையாவது பேசிவிடுவோம், ஆனால் இந்த மாதம் மட்டும் தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கொருமுறை அழைத்து விடுவார் அல்லது அழைத்து விடுவேன்.
எனது அடுத்த கவிதைத்தொகுப்பு தயாராகிறது நீங்கள் இணைய விரும்புகிறீர்களா எனக் கேட்டேன். இல்லை நண்பரே கொஞ்சம் பொருளாதாரத்தைத் தயார் செய்து விட்டுச் செய்யலாம் என்றார். பொருளாதாரம் எப்போதும் நமக்குப் பிரச்சினை தான் சொல்லுங்கள் தயார் செய்கிறேன் என்றேன். வேண்டவே வேண்டாம் என்று சொன்னார். ஆனால் ஒரு தொகுப்புக்குக் கவிதைகள் தயார் என்றார் அதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இன்னொரு தொகுப்பும் தயார் அதை மின்னூலாக்கலாமா என்றார். நான் இதை அவரிடம் ஏற்கனவே சொல்லியிருந்தேன் எனது ஒரு கவிதைத் தொகுப்பு, கட்டுரைகள் மற்றும் அம்சப்ரியா அவர்களது கட்டுரைகள் ஆகியவற்றை மின்னூலாக்கி பதியலாம் என்று. இப்போது அவரும் தனது கவிதைகளைத் தயார் செய்திருந்தார். எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். அதன் தலைப்பு " மரணத்தின் இசைக்குறிப்புகள்". அப்போது அது உறுத்தவில்லை. இப்போது உயிர்வரை உறுத்துகிறது. இன்னும் மின்னூல் வடிவில் என்னிடம் உள்ளது. ஜூன் அல்லது அதன் பின்னர் வெளியிடலாம் என்று சொல்லியிருந்தேன்.

எனது முந்தைய கவிதைத் தொகுப்பில் நன்றி பகுதியில் வைகறையின் பெயரை விட்டுவிட்டேன். உரிமையாய்க் கேட்டார் என்னாய்யா நியாயம் இது ..? என்று. அது தான் வைகறை. மனதில் எதுவும் வைத்துக்கொள்ளத் தெரியாதவர். அடுத்த கவிதைத் தொகுப்பு தயாராகிறது இதில் உங்க பேர் இருக்கு வைகறை னு எப்படி சொல்றது.
கவிதைத் தொகுப்பு தயாரானதும் அனுப்புங்க என்றார். மின்னஞ்சலில் அனுப்பியதும் நான்கு நாட்கள் கழித்து அழைத்தவர் இரண்டு மணி நேரம் பேசினார். நிறையக் கவிதைகளை சிலாகித்தவர். சில கவிதைகளின் வரிகளை முன்னுக்குப் பின் மாற்றினால் நன்றாக இருக்கும் என்றார். ஒரு ஆச்சர்யமும் நடந்தது. ஒரு கவிதையின் கடைசி வரியை நான் எழுதிவிட்டு பின் மாற்றிவிட்டேன். அவர் அழைத்த போது இது இந்தக் கவிதைக்கு அழுத்தம் தரல என்று சொல்லி நான் முதலில் எழுதியிருந்த முடிவையே அச்சு பிசகாமல் சொன்னார். நான் அதைத்தான் முதலில் எழுதி வைத்திருந்தேன் என்று சொன்னதும் அதானே, பூபாலன் அப்படித்தான் யோசிச்சிருக்க முடியும் என்றார். கவிதைகளின் மீது , ஹைக்கூக்களின் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் , புரிதலும் , பேரன்பும் கொண்ட மனிதர். அடுத்த மாதம் எனது கவிதைத் தொகுப்பை வெளியிடப் போகிறேன். இப்போது வைகறை இல்லை. ஆனால் என் கவிதைகளில் நிச்சயம் இருப்பார்.

நிறையக் கனவுகள் வைத்திருந்தவர் என்பதுதான் பதைபதைப்புக்குள்ளாக்குகிறது. கொஞ்ச நாட்களாக நிறையப் பேசினோம். நிறையத் திட்டங்கள் போட்டோம். நந்தலாலா இணைய இதழை மீண்டும் சிறப்பாகத் துவங்கி நடத்துவது, நூல்கள் அறிமுகம் செய்ய, நூல் விமர்சனங்களுக்கென்றே தனியாக ஒரு இணைய தளம் துவங்கலாம் என்று ஒரு நாள் சொன்னார். சில தினங்களில் துவங்கியும் விட்டார். தொடர்ந்து இதையும் செய்யலாம் என்றார். முடிந்தால் அந்த இணையத்தைப் பாருங்கள் www.noolvaasal.com

உயிர்மையின் பத்து நூல்கள் வெளியீட்டுவிழாவுக்கு நான்,அனாமிகா,வைகறை அனைவரும் போக வேண்டும் நண்பர்களை உற்சாகப் படுத்த வேண்டும் என நிறையப் பேசி வைத்திருந்தோம். என்னால் வர முடியாததால், அவர் மட்டும் சென்று வந்தார். வந்ததும், அந்த பத்து நூல்களையும் புதுக்கோட்டையில் சிறப்பாக அறிமுகம் செய்ய வேண்டும் என்றார். கொஞ்ச நாளில் அதன் நடைமுறைச் சிக்கல்களை உணர்ந்தவர் முதலில் அண்ணன் ( யாழி),பிராங்க்ளின் சார், கனிமொழி மேடம் புத்தகத்தை மட்டும் நல்லா அறிமுகம் செய்யலாம் என்று தனது கடைசி நாட்களுக்கு முன்னர் கூடச் சொல்லியபடி இருந்தார். நானும் நிச்சயம் வந்து ஒரு நூலைப் பற்றிப் பேசுவதாகச் சொன்னேன். இன்னும் சிலரிடம் கூட இதைப்பற்றிப் பேசி அவர்களிடம் சொல்லி வைத்திருந்தார் என்பதும் எனக்குத் தெரியும்.

கடைசி சில நாட்களில் பல்வேறு மன அழுத்தத்தில் இருந்தார். அதிகம் புலம்பாவிட்டாலும் சில விசயங்களைச் சொல்லி வருந்துவார். இதெல்லாம் சொந்த வாழ்க்கையிலும், இலக்கியத்திலும் சாதாரணம் நிச்சயம் எல்லாம் மாறும் இதிலிருந்து வெளியே வாருங்கள் என்றேன். கண்டிப்பாக பூபாலன், இதிலிருந்து வெளியே வந்து விடுவேன் என்றார். தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டவர்கள் நிச்சயம் ஒருநாள் தனது அன்பையும் புரிந்து கொள்வார்கள் என்று நம்பினார். கடைசி வரை வெளியே வரவேயில்லை.
யார் மீதும் புகார்களற்றவர். ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை, என்னைத் தவறாக நினைத்து விட்டார், சூழ்நிலையும் அப்படி அமைஞ்சுது அவ்வளவுதான். மாறும். என்றுதான் சொல்வார்.
கவிதைகளின் மீது அளவில்லாத காதல் கொண்டவர், ஹைக்கூக்களின் மீதும் மிகுந்த ரசனையும் ஈடுபாடும் கொண்டவர். ஹைக்கூ எழுதுவதற்கென்றே தனியே ஒரு நோட்டுப்புத்தகத்தை வைத்திருந்தார். ஒரு நல்ல கவிதையைப் படித்துவிட்டால் பொறுக்க மாட்டார். படைப்பாளிக்கே அழைத்தோ அல்லது செய்தியிலோ பேசிவிடுவார் அல்லது நண்பர்களுக்கு அழைத்து அதைச் சிலாகிப்பார். அப்படி என்னிடம் நிறையப்பேரைப் பற்றி நிறைய முறை பேசியுள்ளார்.

அவரது மறைவுக்கு ஒருநாள் முன்பு பேசும் போது அவரது குரலில் கொஞ்சம் வலி தெரிந்தது. என்ன ஆச்சு வைகறை என்று கேட்டதற்கு ஒன்றுமில்லை நண்பரே கோடையிலும் கொஞ்சம் சளி பிடிச்சிருக்கு என்று சமாளித்துவிட்டார். அந்த நாட்களில் வயிற்று வலி இருந்ததாகவும் அதை அல்சர் என்று தவறாக நினைத்து மருந்துக்கடையில் மாத்திரை மட்டும் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அலட்சியமாக இருந்துவிட்டதாக நண்பர்கள் சொல்வதைக் கேட்க மனம் துடிக்கிறது. கொஞ்சமாவது யாரிடமாவது சொல்லியிருந்தால் எத்தனை பேர் ஓடி வந்திருப்போம் அவருக்கு உதவ.. என்ன சொல்லி அழ எனத் தெரியவில்லை.

அவரது உடல் கிடத்தப்பட்ட அறைக்குள் நுழைகிறேன். கனிமொழி ஜி சொன்னதுபோல உறங்குவது போலவே படுத்திருக்கிறார். அடக்க முடியவில்லை.ரோஸ்லின் சகோதரி இதுக்குத்தானா அண்ணா அவசர அவசரமா எல்லோரையும் அழைத்து கடைசியா விருந்து வச்சாரா எனக் கேட்டு அழுத போது முற்றிலும் உடைந்து விட்டேன். வெளியில் எதுவும் அறியாது அமர்ந்திருந்த ஜெய்குட்டியின் தலையைத் தடவிக் கொடுக்கிறேன்.இவனுக்கு விவரம் தெரியும் போது ஒரு கதாநாயகனைப் போல வாழ்ந்த தனது தந்தையை எவ்வளவு இழப்பான் என நினைத்தால் வலி கூடுதலாகிறது.

கண்முன்னால் நிறையக் காரியங்கள் இருக்கின்றன. வைகறையின் மலை போன்ற இழப்பால் வாடும் அவரது குடும்பத்துக்கு சிறு கல்லளவாவது நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும்.
கடைசியாக , வைகறையின் புதுக்கோட்டை வீட்டின் அவரது அறைக்கு நான் ஒரு முறை சென்று பார்க்க வேண்டும் போலுள்ளது. எப்படியும் அவர்கள் அந்த வீட்டைக் காலி செய்துவிடுவார்கள். எனக்குத் தெரியும் அங்கு வைகறை எப்படி அமர்வார், எங்கு எழுதுவார், புத்தகங்களை எப்படி வைத்திருப்பார் என்று.... அது ஒரு தவம் போலானது என்பதை நான் அறிவேன்.மேலும், வைகறையின் கனவான கவிதைத் தொகுப்புகளைக் கொண்டு வரவேண்டும்.

எல்லாவற்றையும் மீறி , உங்களைக் குளிப்பாட்டி சவப்பெட்டியில் இறக்கிவைத்த அந்தக் கடைசிக் கணத்தில் வழக்கத்திற்கு மாறான உங்கள் புன்னகையற்ற முகத்தை நான் பார்க்காமல் இருந்திருக்க வேண்டும் வைகறை. அதற்கும் முன்பே அந்த இடத்தை விட்டுக் கிளம்பியிருக்க வேண்டும்.

புதன், 13 ஏப்ரல், 2016

கடவுளின் பிள்ளை

இன்று மாலை பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். ஒரு நிறுத்தத்தில் ஏறினான் ஒரு மாணவன். பேருந்தின் முன்பக்கத்தில் ஏறியவன் ஓவெனக் கத்தியபடியே கடைசி இருக்கைக்கு ஓடினான். பேருந்தே அவனைத் திரும்பிப் பார்த்தது. நடத்துனரும் அவனைப் பார்த்து சிரித்தபடி எதுவும் சொல்லாமல் முன்னால் யாருடனோ கத்திக்கொண்டிருந்தார். கடைசி இருக்கைக்கு ஓடிவந்தவன் படிக்கட்டுக்குப் பின்னால் இருக்கும் நீள் இருக்கையில் இருந்த பெரியவரிடம் "ணா ஜன்னலோரம் நா உக்காந்துக்கறேன்" என்று உரிமையாய்க் கேட்டான். அவரும் வழிவிட்டு அமர்ந்து கொண்டார். அந்த இருக்கையே காலியாகத்தான் இருந்தது.

பார்த்ததுமே தெரிந்தது அவன் ஒரு சிறப்புக் குழந்தை என்று. ஆம், மன வளர்ச்சி குன்றியவன்.

அடுத்த ஒரு நிறுத்தத்தில் இன்னொரு பெரியவர் அவன் அருகில் ஏறி அமர்ந்தார்.
அவன் பாட்டுக்கு பாடிக்கொண்டும் பேசிக் கொண்டும் வந்தான். அருகில் அமர்ந்த பெரியவர் பத்து ரூபாயை நீட்டி பயணச்சீட்டு வாங்கினார். நடத்துனர் அவரிடம் சத்தமாகக் கத்தினார். "மூணு ரூபாய்க்கி எல்லாரும் பத்து ரூபா குடுத்தா சில்லறைக்கு நான் எங்க போறது? எங்கயாவது கொள்ளையடிச்சுட்டுத்தான் வரணும். சில்லறை இருந்தா குடுங்க. இல்லனா இறங்கிக்கங்க " என்று. பெரியவர் பாவமாக அவர் முகத்தைப் பார்த்தபடி இருக்க, அந்தப்பையன் மூணு ரூபாயை எடுத்து நடத்துனரிடம் நீட்டினான். நடத்துனர் " நீ ஏண்டா குடுக்கற ?” எனக் கேட்க, உடனே ஒரு மனப்பாடச் செய்யுளைச் சொல்வதைப் போல சொன்னானே பார்க்கலாம்.
“ நாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். மற்றவர்களுக்குச் செய்யும் உதவி கடவுளுக்குச் செய்யும் உதவி " என்று ஒப்பித்துவிட்டு நடத்துனரிடம் மூன்று ரூபாயைத் தந்து பயணச்சீட்டை வாங்கிப் பெரியவரிடம் கொடுக்கும் போது ஒரு புன்னகை செய்தானே.. சொக்கி விட்டேன். பதிலுக்கு பெரியவர் பத்து ரூபாய்த் தாளை அவனுக்கே தந்து விட , மறுப்பேதும் சொல்லாமல் அதே புன்னகையுடன் சட்டைப்பையில் வைத்துக் கொண்டான்.
நான், படியில் சென்று நின்று கொண்டேன். அவனிடம் பேச வேண்டும் போலத் தோன்றியது.

 "தம்பி உன் பேர் என்ன ..?”
"அக்கீம் ( ஹக்கிம் ) ணா. உங்க பேரு என்ன ணா ?”
"“பூபாலன். எத்தனாவது படிக்கிற"
"ணா. நான் ஹேண்டிகேப் ( Handicapped) ஸ்கூல்ல படிக்கிறேன்.”
"அது எனக்கே தெரியும் டா. எத்தனாவது படிக்கிற னு கேட்டேன்.”
"ணா, சொல்றத முழுசா கேளுங்க. அங்க எத்தனாவதுனு எல்லாம் இல்ல ணா. பதினெட்டு வயசு வரைக்கும் படிக்கலாம். எல்லாமே சொல்லிக் குடுப்பாங்க. அப்புறம் வேலைக்குப் போலாம்.”
" நீ அப்ப ஒன்னு சொன்னயே உதவி செய்யனும் னு. அதைச் சொல்லு "
“ நாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். மற்றவர்களுக்குச் செய்யும் உதவி கடவுளுக்குச் செய்யும் உதவி "
இவன் கடவுளின் பிள்ளை. அவனுக்குக் கை கொடுத்தேன். "ரொம்ப நல்லது நல்லா இரு" என்று சொல்லிவிட்டு சட்டைப்பையில் இருந்த மிட்டாய் ஒன்றை அவனுக்குத் தந்து விட்டு இறங்கினேன்.
இந்த நடு நிசியில் என்னைத் தூங்க விடாமல் செய்கிறது அவன் முகமும், குரலும். ஆகவே இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். அவனது பெற்றோர்களை வணங்குகிறேன்.

“ நாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். மற்றவர்களுக்குச் செய்யும் உதவி கடவுளுக்குச் செய்யும் உதவி " 

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூடப் பிறந்தவனா ..?

சென்ற வாரம், ஒரு வாட்சப் குழுவில் சிறு பிரச்சினை. தோழர் ஒருவர், குழுவில் உள்ள தோழிக்கு இரண்டு மூன்று முறை அழைத்துத் தொந்தரவு செய்துள்ளார். நள்ளிரவும் ஒரு முறை அழைத்துள்ளார்.  தோழி என்னிடம் முறையிட்டதும், அவரை அழைத்துப் பேசி இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள் என்று எச்சரித்தேன். அவர் தெரியாமல் நடந்துவிட்டது நள்ளிரவில் தானாக அழைப்பு சென்றுவிட்டது என்று சொன்னார்.
பிரச்சினை அதுவல்ல ..

அவரிடம் இது குறித்துப் பேசும்போது அவர் சொன்ன ஒரு வார்த்தை        " தோழர், என்னை என்ன அந்த மாதிரி ஆள்னு நினைச்சுட்டிங்களா ? நானெல்லாம் அக்கா தங்கச்சி கூடப் பிறந்தவன். அப்படியெல்லாம் தப்பா நடக்க மாட்டேன் " என்றார்.

இதுதான் ஒரு வாரமாக மண்டைக்குள்ளேயே எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இதே சிந்தனையாகவே இருக்கிறது. யாராவது எதாவது பெண்களிடம் தவறாக நடக்கும்போது பொதுவாக நாம் திட்டுவது நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கலயா என்றுதான். இந்தப் பொதுப்படையான கருத்தில் இச்சமூகம் என்ன நம்புகிறது.? அக்கா தங்கச்சி கூடப் பிறந்தவன் பெண் பிள்ளைகளின் கஷ்டம் அறிந்து அவர்களை மரியாதையாக நடத்துவான் என்றா.? அல்லது அனைத்துப் பிள்ளைகளையும் தனது அக்கா, தங்கச்சி போலத்தான் எண்ணுவான் என்றா ?

அப்படியானால், அக்கா தங்கச்சி  கூடப் பிறக்காமல் தன்னந்தனியனாகவோ அல்லது ஆண்களுடன் பிறந்தவர்களுக்கோ பெண்களின் மீதான பார்வை தவறாக இருக்கும் என்றா எடுத்துக் கொள்வது?

ஒரு நாளைக்கு எத்தனை பாலியல் வன்கொடுமைகள், பெண் சித்திரவதைகள், கொலைகள், பெண்கள் மீதான அவதூறுகள், மோசடிகள், பித்தலாட்டங்கள் என பெண்கள் மீது எத்தனை லட்சம் ஆண்கள் பாய்கிறார்கள். அவர்களெல்லாம் அக்கா தங்கச்சி கூடப் பிறக்காதவர்கள் மட்டும் தானா.

எங்காவது புள்ளி விவரங்கள் கிடைக்குமா எனத் தேடிப்பார்த்தேன். பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை. பொறுமையும் இல்லாததால் விட்டுவிட்டேன்.
சமீபமாக நான் கண்ட , கேட்ட , படித்த செய்திகளை மனக்கண்ணில் ஓட்டிப்பார்த்தேன்.

அக்கா, தங்கச்சி, அம்மா என பெண்களுடன் வாழ்ந்தவர்கள் தான் அனேகம் பேர் பிறழ்ந்துள்ளார்கள். ஏன் ? தந்தையே மகளுக்கு, அண்ணன் தங்கைக்கு, தம்பி அக்காவுக்கு, தாத்தா பேத்திக்கு என அனைத்து வகை ஆண் உறவுகளும் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாலியல் தொந்தரவு தாண்டியும், திராவகம் வீச்சு, திருமண மோசடி, கொலைகள் என எல்லாப் புள்ளி விவரங்களிலும் அக்கா தங்கச்சி கூடப் பிறந்தவன் பல்லிளிக்கிறான்.

அக்கா தங்கச்சி கூடப் பிறந்தால் மட்டும் போதுமா ..? பெண்களின் கஷ்ட நஷ்டங்கள் புரிந்து விடுமா .? அல்லது அக்கா தங்கச்சி கூடப் பிறக்காத ஒருவனால் பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாதா ..?

அக்கா, தங்கச்சி என யாருடனும் பிறக்காத தனியன் தான் நான். அதனாலேயே சிறு வயது முதல் பெண்குழந்தைகள் மீது தனி ஈர்ப்பு. பக்கத்து வீட்டுத் தோழர்கள் , தோழிகள் எப்போதும் என்னுடனே விளையாடி என் வீட்டிலேயே இருப்பார்கள். என் சக வயது தோழன்களை நான் வாடா போடா என்று அதட்டும் போது எதுவும் கண்டுகொள்ளாத அம்மா. என் சக வயது வகுப்புத் தோழியோ அல்லது என்னை விடவும் இளைய பிள்ளையையோ வாடி போடி என்று சொன்னாள் ஒப்புக் கொள்ள மாட்டார்.
“ அதென்ன , பொட்டப்புள்ளைய வாடி, போடினு மரியாதை இல்லாம கூப்பிடற, பேர் சொல்லியாச்சும் கூப்பிடு " என அதட்டுவார். அந்த விதையாகக் கூட இருக்கலாம். பெண்கள் மீது ஒரு மரியாதையுடனும், கொஞ்சம் எட்ட நின்றும் பழகுவதற்கு என்னைப் பக்குவப் படுத்தியது.

சிறு வயது முதலே தனியாயிருத்தல் கொஞ்சம் கொடுமையாகவும் கொஞ்சம் இனிமையாகவும் இருந்தது. சுகன்யா, சியாமளா என்ற பக்கத்து வீட்டு தனா அக்காவின் குழந்தைகள் எப்போதும் என்னுடனே இருப்பார்கள். சாப்பிட மட்டுமே அவர்கள் வீட்டுக்குப் போவார்கள். அதன்பின்னர், சித்தி மகள் நித்யாவை கைக்குழந்தையிலிருந்து ஐந்து வயதுவரை, சாப்பிட வைப்பது குளிக்க வைப்பது முதல் அனைத்தையும் நான் எட்டாம் வகுப்புப் படிக்கும் காலத்திலேயே செய்து அவளை வளர்த்தியிருக்கிறேன். இப்படியான அனுபவங்களும் எப்போதும் பெண் குழந்தைகளின் மீது ஒரு பிரியம் வரக் காரணமாயிருக்கலாம்.

அப்படி ஒரு குழந்தைதான் காயத்ரி. எப்போதும் எங்கள் வீட்டில் என்னோடும் ஆத்தாவோடும் தாயம் விளையாடிக் கொண்டும், பல்லாங்குழி விளையாடிக் கொண்டும் இருப்பாள் விடுமுறை நாட்களில். அவளுக்கு ஏழு வயது இருக்கும் அப்போது. எப்போதும் தனது தம்பி கார்த்தியை கூடவே கூட்டிக் கொண்டு திரிவாள். எங்களோடு தாயம் விளையாடும் போது கூட கார்த்தியைத் தன் மடியில் படுக்க வைத்து உறங்க வைத்துக் கொண்டே விளையாடுவாள். அவன் உறக்கத்திலேயே சிறு நீர் கழித்துவிடுவான் அவள் ஓடிப் போய் அவள் வீட்டில் மாற்று உடை எடுத்து வந்து இவனையும், தரையையும் சுத்தம் செய்து உடை மாற்றிவிடுவாள். தம்பி மீது அவ்வளவு பாசம். கார்த்தியும் அவளைப் பிரிந்து இருக்கவே மாட்டான். ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் காயத்ரிக்குத் திருமணம் ஆனது. எங்களால் போக முடியவில்லை. அம்மா மட்டும் போய் வந்தார். போன மாதம் கார்த்தி ஊர் முழுதும் பிரபலமாகிவிட்டான். ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணைக் காதலித்து அவளுடன் ஏற்பட்ட தகராறில் அவளைக் கொன்று விட்டானாம். கேட்டதும் பயங்கர அதிர்ச்சி. அதற்கும் முன்னரே சில பெண்களுடன் தொடர்பிருந்திருக்கிறது எனவும் பேசிக் கொள்கிறார்கள். அவன் பாசக்கார , நேர்மையான அக்காவுடன் பிறந்து அவளது கண்காணிப்பிலேயே வளர்ந்தவன் தான். இப்படி பல கதைகள் நம்மிடம் உள்ளன.

பெண் பிள்ளைகள் உள்ள வீட்டுக்கு எப்போதும் தனி அழகு கூடும். அவள் ஒரு ஆணை நிச்சயம் பக்குவமானவனாக வளர்ப்பதில் தனிக் கவனத்தோடு இருப்பாள் தான். ஆனால், ஒருவன் பக்குவமானவனாக வளர அது மட்டும் போதுமா?

அக்கா தங்கச்சி கூடப் பிறப்பது மட்டும் ஒரு ஆண் நல்ல ஆணாக வளர்வதற்கான சாத்தியங்களைத் தந்துவிடுமா என்ன ..?

நன்றி : கொலுசு மின்னிதழ்
http://www.kolusu.in/kolusu/kolusu_apr_16/index.html#p=44