செவ்வாய், 5 ஜூலை, 2011

ரகசியம்

   
என்னிடம் சொல்வதற்கு
தன்னிடம் ஒரு
ரகசியம் வைத்திருப்பதாக
ஓடி வந்து சொல்கிறாள்
குழந்தை.
 
 
மேலும் அதை
யாரிடமும் சொல்லிவிடக்
கூடாதென
சத்தியமும் வாங்கிவிடுகிறாள்.
 
 
பின்பும் பல
பீடிகைகளுடன்
காதில் கிசுகிசுப்பாள்.
 
 
அது ஒன்றும்
அத்தனை பெரிய
பிரபஞ்ச ரகசியமாயிருக்காது.
ரகசியமே அல்ல என்று
அதைப் புறந்தள்ளவும்
முடியாத அந்த
ரகசியத்தை உங்களிடம்
என்னால் சொல்ல முடியாது
சத்தியத்தை மீறி.
நாளை அவளே
உங்களிடம் சொல்வாள்
 
 
" என்னிடம் ஒரு ரகசியம்
உள்ளது யாரிடமும்
சொல்லி விடாதீர்கள் "
என்றபடிக்கு.
 
- விகடனில் வெளியான கவிதை