வெள்ளி, 30 அக்டோபர், 2015

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் முப்பதாவது இலக்கிய சந்திப்பு

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் முப்பதாவது இலக்கிய சந்திப்பு 18.10.2015 அன்று பாலக்காடு சாலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

 வழக்கமாக சனிக்கிழமையே நிகழ்ச்சி நடக்கும் பள்ளிக்குச் சென்று வகுப்பறையைச் சுத்தம் செய்து இருக்கைகளை ஒழுங்கு படுத்தி துடைத்து வைத்து விட்டு வருவோம். இந்த முறை அப்படிப் போன போது பள்ளி பூட்டப்பட்டிருந்தது. காவலரின் வீட்டைத் தேடிப் போன போது தனக்குக் கொஞ்சம் வேலை இருப்பதாகவும் மாலை வந்து சுத்தம் செய்து வைத்து விடுவதாகவும் சொன்னார். மாலை வைரமுத்து அவர்கள் தலைமை ஏற்கும் மரபின் மைந்தன் முத்தையா அவர்களுக்கு விருது வழங்கும் விழா பொள்ளாச்சியில் இருப்பதால் அங்கு சென்றுவிட்டோம். நிகழ்ச்சி முடியவே 8 மணிக்கு மேல் ஆகி விட்டதால் பள்ளிக்கு வந்து பார்க்க முடியவில்லை.
வைரமுத்து நிகழ்வில் ஆயிரம் பேருக்கு மேல் திரண்டிருந்தனர். வழக்கத்தை விடவும் மோசமான பேச்சு வைரமுத்து அவர்களிடமிருந்து. அரை மணி நேரத்துக்கு மேல் பேசினால் அதுவும் சுவாரஸ்யம் இல்லாமல் பேசினால் வைரமுத்துவாகவே இருந்தாலும் யாரும் கேட்கமாட்டார்கள் என்பது நிரூபணமானது. நிகழ்ச்சியின் பின்னர் நான் பேசிய அனைவரும் இதையே சொன்னார்கள்.

முன் தினம் அரங்கம் தயார் செய்யப்படாததால் அடுத்த நாள் காலை 8 மணிக்கு நான் போய்ப் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது அத்தனை குப்பை, நாற்காலிகள் இல்லை, பேனர் மாட்டவில்லை... நானும் தம்பி கார்த்தியும் மட்டுமே வந்திருந்தோம். அவசர அவசரமாக அறையைக் கூட்டிச் சுத்தம் செய்து, நாற்காலிகளை எடுத்துப் போட்டு தயார் செய்ய 9.30 ஆகி விட்டது. ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.

நிகழ்ச்சியின் முதலில் படித்ததில் பிடித்தது. வாசகர்கள் தாங்கள் படித்ததில் பிடித்த கவிதை, கதை, செய்திகளைப் பகிர்ந்து கொண்டிருக்க தவமணி என்ற வாசகர் தனது மனைவியின் இழப்பை, தனது சொந்தக் கதையைச் சொல்லி அனைவரையும் அழ வைத்து விட்டார். இலக்கிய நிகழ்ச்சிகளில் நமது திட்டமிடல்களையும் தாண்டி இப்படியும் நடக்கும்.
கவிஞர் லாவண்யா சுந்தரராஜனின் மூன்று கவிதைத் தொகுப்புகள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. நீர்க்கோல வாழ்வை நச்சி என்ற கவிதைத் தொகுப்பை கவிஞர் க.அம்சப்ரியா அறிமுகம் செய்துவைத்தார். இரவைப்பருகும் பறவை என்ற கவிதைத் தொகுப்பை கவிஞர் வைகறை அறிமுகம் செய்து வைத்தார். அறிதலின் தீ என்ற கவிதைத் தொகுப்பை எழுத்தாளர் அசதா அறிமுகம் செய்துவைத்துப் பேசினார்.
கவிஞர் லாவண்யா சுந்தரராஜன் தனது ஏற்புரையில் நான் முதலில் இணையத்தில் தான் எழுதத் துவங்கினேன், தொடர் வாசிப்புப் பழக்கமும் தேடலுமே என் எழுத்துகளை செழுமைப்படுத்தியது..என்னுடைய கவிதையில் நான் யாருடைய பாதிப்பும் இல்லாது பார்த்துக் கொள்வதில் மிகக் கவனமாக இருக்கிறேன். புதிதாக கவிதைகள் எழுத வருவோர்க்கு எங்கே எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் என்ற வழிகாட்டுதலையும், அவர்களுக்கான தொடர்ந்து ஒரு இயங்கு தளத்தையும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் தந்து வருகிறது. தமிழ் இலக்கியச் சூழலில் கவிதை எழுதுபவர் அதிகம் ஆனால் வாசிப்பவர் குறைவு என்ற குறைபாட்டை பொள்ளாச்சி இலக்கிய வட்டம் போன்ற அமைப்புகள் தீர்த்து வைக்கும். தொடர்ந்து இளம் கவிஞர்களை ஊக்கப்படுத்தியும் அவர்களுக்கான வழிகாட்டுதல்களையும் இது போன்ற இலக்கிய அமைப்புகள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று பேசினார்.

ரசனை பகுதியில் லக்குமி குமாரன் ஞானதிரவியம் கவிதைகளில் ரசித்த கவிதைகளைப் பகிர்ந்து கொண்டார் புன்னகை ஜெயக்குமார்.

நிகழ்வில் படிகம் - கவிதைகளுக்கான சிற்றிதழ் அறிமுகம் செய்யப்பட்டது.
கவிஞர் ரோஸ் ஆன்றா எழுதிய நிலமெங்கும் வார்த்தைகள் என்ற கவிதைத் தொகுப்பை நான் அறிமுகம் செய்துவைத்துப் பேசினேன். மேலும் படிகம் சிற்றிதழும் அறிமுகம் செய்தேன்.
வாசகர்கள் கவிஞர்கள் கலந்து கொண்ட கவியரங்கம் நடந்தது .

நிகழ்வில் முக்கியமாக, பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் சார்பாக அரசுப் பணிகளுக்கான தேர்வு எழுதுபவர்களுக்கு இலவசப் பயிற்சி மையம் துவங்குவதைப் பற்றிய அறிவிப்பை சையத் அவர்கள் வழங்கினார்.

கவிஞர் அம்சப்ரியா அவர்களுடைய நன்றியுரையுடன் விழா இனிது முடிந்தது


நிகழ்வில் செய்தி மடல் வெளியிடப்பட்டது. உங்கள் பார்வைக்கு

செவ்வாய், 20 அக்டோபர், 2015

ஞானசேகரனைக் கொத்தித் தின்னும் ஞானசேகரன்ஞானசேகரன் செத்து
பதினாறாம் நாள் காரியத்தில்
படையலிட்டிருந்தார்கள்.
அவனே காகமாகி வந்து
முதல் பருக்கையைத் தின்றால் தான்
தின்பதாகக் காத்திருந்தோம்.
உச்சந்தலையில் அடிபட்டு
புண்ணோடு வந்த காகம்
முதல் பருக்கையைக் கொத்த
ஞானசேகரனே வந்துவிட்டானென
கண்ணீர் கோர்க்க சிலாகித்தனர்.
விபத்தில் அடிபட்டு
இறந்து போனவனின்
உடல் திசுக்களை
தார்ச்சாலையில் இதே காகம்
கொத்திக் கொண்டிருந்ததை
நான் பார்த்தேன்.

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இலவச அரசுத்தேர்வுகளுக்கான பயிற்சி மையம்

அன்புடையீர் ,

வணக்கம்.

பொள்ளாச்சி இலக்கியவட்டம் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமைகளில் இலக்கிய சந்திப்பை நடத்தி வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இலக்கியப்பணிகள் மட்டுமல்லாது பொள்ளாச்சி இலக்கிய வட்டம் பல்வேறு சமூகப் பணிகளையும் செய்து வருகிறது. அதன் மிக முக்கியமான அங்கமாக, பொள்ளாச்சியில் ஏழை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான அரசுப்பணித் தேர்வுகளுக்கு ஒரு பயிற்சி மையத்தைத் தொடங்கி இலவசமாக ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்பெடுக்கவும் அவர்களுக்கு எல்லா வகையிலும் வழிகாட்டிடவும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்கள், அரசுத் தேர்வுக்குத் தயாராக விரும்பும் இளைஞர்கள் அனைவரும் பயன்பெறுவார்கள்.

இது ஒரு கூட்டுமுயற்சியாக தங்கள் அனைவரின் ஒத்துழைப்போடுதான் சாத்தியமாகும். ஆகவே இம்முயற்சியின் முதல் கட்டமாக, இந்தச் செயல்பாட்டுக்குத் தங்களின் மேலான ஆலோசனைகள் உடனடியாக வரவேற்கப்படுகின்றன. கல்விமுறை,இடம்,பாடத்திட்டங்கள், தகவல்கள் என எல்லாத் தரப்பு ஆலோசனைகளையும் எங்களுக்கு அனுப்பலாம். மின்னஞ்சலில் அனுப்ப : ilakkiyavattampollachi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். அலைபேசியிலும், அஞ்சல் வழியிலும் தங்களது கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், இந்த முயற்சியில் எங்களோடு கரம் கோர்க்க விரும்பும் ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி உபகரணங்கள் வழங்குவோர் ஆகியோரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

தங்கள் மேலான ஆதரவை வேண்டி ..

பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
பில்சின்னாம்பாளையம்,
சமத்தூர் அஞ்சல்
பொள்ளாச்சி - 642123


பேச : 90955 07547 , 98422 75662

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

குழந்தைமை ததும்பும் கவித்துவம்

குழந்தைமை ததும்பும் கவித்துவம் கவிதைகளின் தேவைகளும் தேடல்களும் நமது வாழ்வில் நீக்கமற நிறைந்திருப்பதை அனுபவப்பூர்வமாக உணர்கிறேன்கவிதைகள் தமது புஷ்பக விமானத்தில் ஏற்றி நம்மை பிரபஞ்ச உலா அழைத்துச் செல்லக் கூடியவைஅதே சமயம்பெரும் பிரளயங்களை நம் மனதுக்குள் கிளர்த்தி நம்மை நாம் அறியாமலே சுக்கு நூறாக உடைத்து உருக்குலைத்து விடக் கூடையவையும் கூடபல சமயங்களில் புன்னகைகளைத் தருகின்ற இந்தக் கவிதைகள் தான் விழியோரம் சலனமற்று வழியும் ஒற்றைத் துளிக் கண்ணீரையும் நமக்குப் பரிசளிக்கின்றன.

ஏன் கவிதைஎதற்குக் கவிதைஎப்படிக் கவிதை என கவிதைகளைக் கேள்விகளாலும் கேலிகளாலும் எதிர்கொள்பவர்களுக்குச் சொல்ல என்னிடம் தத்துவங்கள் இல்லைஆனால் இந்தச் சின்னஞ்சிறிய மனிதனிடம் சில அனுபவங்கள் உள்ளனகவிதைகளால் ஆன அனுபவம்.அவற்றின் வழியே தான் இவன் இந்தக் கவிதைகளைப் பார்க்கிறான்இந்த உலகைப் பார்க்கிறான்.இந்தக் கவிதைகளால் ஆன உலகை நேசித்து வாழ்கிறான்கவிதைகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால் இந்த வாழ்வு அத்தனை ஆதூரமாய் இருக்காது என்பதை ஆணித்தரமாக நம்புகிறான்.

ஒரு அணுகுண்டு என்பது எந்த வடிவத்தில் இருந்தால் வெடித்துச் சிதறி தன்னோடு சேரும் அத்தனையையும் சாம்பலாக்கும் என்று கணக்குள்ளதா.?  போலவேகவிதை எந்த வடிவத்தில் இருந்தாலும் மனதுக்கு நெருக்கமாக இருக்கும்பட்சத்தில் அதைக் கொண்டாட எங்கோ யாரோ இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்மரபுக்கவிதைபுதுக்கவிதை,நவீன கவிதைஹைக்கூ,சென்ரியு என பெயர்கள் வேறு வேறாக இருக்கலாம் வகைமைக்காகஆனால் கவிதை ஒன்று தான்அளவில் சிறியது என கவிதைகளைக் கவனிக்காமல் இருக்க முடியாதுஇரண்டடித் திருக்குறளும் ஒரே அடி ஆத்திச்சூடியும் உலகின் ஒட்டு மொத்தக் கவித்துவத்தையும் தமக்குள் கொண்டவைதாம்.

கவிதைக்கான கருப்பொருள்களில் மிக நெருக்கமானவையாக கவிஞனுக்கும் வாசகனுக்கும் ஒரே சமயத்தில் பொருந்திப்போவது வெகு சில மட்டுமேஅவ்வாறானவற்றில் கூடுதல் கவனிப்புக்குள்ளாவது குழந்தைமைஒவ்வொரு கலைஞனுக்குள்ளும் ஏன் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு குழந்தை இருக்கிறது என்பது தான் பிரதானமான காரணமாகிறது இதற்கு.என்றாலும்கவிஞனுக்குள் அந்தக் குழந்தை மனம் சற்று தூக்கலாகவே இருக்கிறது குதூகலம் கொப்பளிக்கும் பால்யத்துடன்.

குழந்தைமை மிதக்கும் கவிதைகளில் ஒரு மென்னுலாப் போவது வாழ்நாள் வரமென்பதை விரும்பி அனுபவிக்கிறேன்கவிதைகள் உண்மையில் குழந்தைகளின் பிஞ்சு விரல்களில் நம்மை இறுகப் பற்றி அழைத்துப் போகின்றன சுகந்தம் வீசும் பூக்காட்டுக்குள்திரும்பி வருதல் சாத்தியமற்று இக்கவிதைகளில் தொலைந்து போதல் சாத்தியமானால் மனம் விரும்பித் தொலைந்து போவேன்.

கவிஞர் ஜான் சுந்தர்  சொந்த ரயில்காரி எனும் தனது முதல் தொகுப்பின் பக்கங்கள் ஒவ்வொன்றிலும் தனது குழந்தைகளை அல்லது தனது கவிதைகளை ஒரு மெல்லிசையில் நடனமாட வைத்திருக்கிறார்மனதை மயக்கும் இசையில் லயித்திருக்கையில் திடும்மென உயரும் உச்சஸ்தாயி ஸ்வரத்தில் ஒருகணம் அதிரச் செய்து மீண்டும் தாலாட்டுகிறார்.
இவரது கவிதைகளெங்கும் பரவிக் கடக்கும் படிமங்களிலும் நுணுக்கமான அன்பினாலும் நாம் நம்மை இழந்து விடுகிறோம் ஒரு கணம்.


        உயிர்க்கொல்லி

பாப்பாவின் கனவில்
அடிக்கடி வருகிறதொரு
கரடி பொம்மை
பாப்பாவை விடவும் உயரமான
பொம்மையொன்றைப் பரிசளிப்பதாக
அப்பாவுக்கும் உண்டு ஒரு கனவு

கடைக்காரர் சொன்ன விலை தடுக்கி
கனவிலிருந்து கீழே விழுந்தார் அப்பா.

சிங்கம் புலி விளையாட்டின் போது
குழந்தையின் நினைவடுக்குகளில் இருந்து
எதிர்பாராவிதமாக வெளிப்படுகிறது கரடி
மூர்ச்சையாகிறார் அப்பா

கரடி வரும்போதெல்லாம்
இப்படி சமயோசிதமாக
மூச்சை அடக்கிக் கொண்டு
செத்தது போல் நடிக்கிறார்
அல்லது செத்து செத்துப் பிழைக்கிறார்.


புருவம் உயர்த்த வைக்கிறது கவிதைஒரு சிறுகதையின் பாங்கைஅதன் அழுத்தத்தைத் தந்து விடுகிறது இந்தக் கவிதைமகள் விரும்புமொரு கரடி பொம்மையை வாங்க இயலாத அப்பாவின் பாத்திரம் செத்துச் செத்துப் பிழைப்பது நம்மையும் அழுத்தி மரண வலியை உணர வைக்கிறது.இப்படி வலிகளையும் இயலாமைகளையும் எள்ளல் தொனியில் ஒரு கொண்டாட்டத்தைப் போல வார்த்தைகளாக்கிவிடுகின்ற கவிதை மனம் அபூர்வமானதல்லவாகரடி பொம்மையைக் குறியீடாக்கிக் கொண்டால் குழந்தையும்தந்தையும் தாமாகக் குறியீடாகிக் கொள்ள இது வாழ்வுக்கான ஒரு தத்துவக் கவிதையாகவும் பரிமாணம் கொள்கிறது.

குழந்தை மணம் கமழும் கவிதைகளை மனம் அசை போடும் போதெல்லாம் ஒரு கவிஞனின் பெயர் மனதுக்குள் தானாக வந்தமர்ந்து கொள்ளும்அவர் முகுந்த் நாகராஜன்தனது வசீகர கவிதை வரிகளால் தனக்கென ஒரு பிரத்யேக கவிதை சொல்லலில் தனிப்பட்டு நிற்பவர்அவரது ஒரு கவிதை

நீர் தெளித்து விளையாடுதல்

முன் பின் பழக்கம் இல்லாத
பயண வழி உணவு விடுதியில்
சாப்பிட்டு விட்டு
கை கழுவப் போனேன்.
சாதாரண உயரத்தில்
இரண்டு வாஷ்பேசின்களும்
மிகக்குறைந்த உயரத்தில்
ஒரு வாஷ்பேசினும் இருந்தன.
கை கழுவும்போது
காரணம் தெரிந்து விட்டது.
குள்ள வாஷ்பேசின் முன்
இல்லாத குழந்தையின் மேல்
செல்லமாக தண்ணீர் தெளித்து
விளையாடி விட்டு
விரைவாக வெளியே வந்து விட்டேன்.

-    முகுந்த் நாகராஜன்


இங்கு கவிதை வரிகளில் குழந்தை இல்லைஇல்லாத குழந்தைதான் கவிதையாகியிருக்கிறது.யாருமற்ற ஒரு இடத்தில் அது குழந்தைகளுக்கான இடம் என்ற கணத்திலேயே அங்கு ஒரு குழந்தையை உருவகம் செய்து கூட விளையாடச் செய்வது அற்புதமான கவிமனத்தின் நிலையே.

குழந்தைகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த மனிதர்கள்தாம் வன்புணர்ந்து,தூக்கிலிட்டு,குரல்வளை நெறித்து,குப்பைத் தொட்டியில்வீசி என குழந்தைகள் மீதான வன்முறைகளையும் நிராகரிப்புகளையும்குரூரமாக நிகழ்த்திவருகின்றனர் என்பது மறுக்கவும் மறைக்கவும் இயலா உண்மைகுழந்தைகளின் மீதான வன்முறைகளைக் காலத்தின் குரலில் பதிவு செய்ய வேண்டியதும் ஒரு கவிஞனின் கடமைநரன் அதைச் செய்திருக்கிறார் இந்தக் கவிதையில்.

சிறிய தோட்டா

கடைசி மாவில் ஒரு குட்டி தோசை
குழந்தைக்கென
தைத்து மிஞ்சிய சிறு துணியில் குட்டி கீழாடை அவளுக்கு
அரசின் ஆயுதத் தொழிற்சாலைகளில்
மிஞ்சிய கடைசி உலோகத்தை வீணாக்காமல்
ஒரு சிறிய தோட்டா
குழந்தையின் உடலுக்கென

-    நரன்

குழந்தைகளுக்கான தயாரிப்புகளைப் போலவே தான் கவனமாகப் பார்த்துப் பார்த்துச் செய்யப்படுகின்றனவா அவர்களுக்கான ஆயுதங்களும் எனக் கவிஞன் கேட்கும் கேள்வி நம் நெஞ்சைப் பதறச் செய்கிறதுபாலச்சந்திரன் உட்பட ஈழக் குழந்தைகளையும்சிரியாஆப்கன் என அனைத்து உலகக் குழந்தைகளின் உருவங்களும் நம் கண்களின் முன் ஒரு நீர்த்திரையாகத் தொங்கவிடச் செய்யும் உணர்வுகளைத் தூண்டிவிடச் செய்யும் வரிகள் தாம் நரன் எழுதியிருப்பது.

குழந்தைகளையும் குடும்பத்தையும் பொருளீட்டலின் பொருட்டுப் பிரிந்து தூர தேசத்தில் இருக்கும் நண்பர்கள் நமக்கு இருப்பார்கள்அவர்களின் வலிகளை நிறையக் கவிதைகள் பேசியிருக்கின்றனஅதில் ஒன்றுதான் ஸ்டாலின் எழுதிய விகிதங்கள் என்ற கவிதை.

      விகிதங்கள்

பொருள் வயின்
பிரிந்து சென்ற தகப்பனிடம்
அரையாண்டுத் தேர்வு
மதிப்பெண்களை
அலைபேசியில் சொல்கிறாள்
ஐந்து வயது சிறுமி
தமிழில் 48க்கு 50
ஆங்கிலத்தில் 98க்கு 100

.. .. .. …
கடல் கடந்து சென்றவனுக்கு
கண்களில் கசிகிறது
நிரப்பவியலாப் பிரியத்தின்
தலைகீழ் விகிதங்கள்

-    கே.ஸ்டாலின்

தமது குழந்தைகளையேஅலைபேசியின் வழி மட்டுமே அறிமுகமாகியிருக்கிற அப்பாக்கள் இருக்கிறார்கள்பத்துக்குப் பத்து அறையொன்றில் அவர்கள் தங்களின் குழந்தைகளுக்கான அரண்மனைகளைக் கட்டிக்கொண்டிருகிறார்கள்அவர்களது மனோநிலையையைப் பதிவு செய்யும் கவிதையாக இருக்கிறது இது.

குழந்தைகளின் குதூகலமான உணர்வுகளைக் கவிதைவரிகளில் பதிவு செய்யும் ப்ராங்க்ளின் குமாரின் கவிதையொன்று ..
    ஞாபகம்

மனனம் செய்த
மளிகைப் பொருட்களை
ஜெட் புகையில்
தவற விட்டு
வீட்டுக்கே திரும்புகிறது
குழந்தை

-    பிராங்க்ளின் குமார்

ப்ராங்க்ளின் அற்புதமான புகைப்படக் கலைஞன் அதைவிடவும் கூடுதல் சிறப்புமிக்க கவிஞன்.அவரது கவிதைகளில் காட்சிப் படிமங்கள் செறிந்து கிடக்கும்அவரது புகைப்படக் காட்சிகளிலோ கவித்துவாம் நிறைந்திருக்கும்அவரது ஞாபகம்  கவிதை நமது பால்ய நினைவுகளைக் கிளறிவிடும் செயலைச் செய்கிறதுவீட்டிலிருந்து அம்மா சொல்லியனுப்பிய மளிகைப் பொருட்களை மந்திர உச்சாடனம் போலச் சொல்லிக் கொண்டே போன டவுசர் கால ஞாபகங்கள் நம்மைப் புன்னகைக்க வைக்கின்றன இவரது வரிகளில்சமீபத்தில் வெளியான தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் விளம்பரக் காணொலியிலும் இப்படி ஒரு காட்சி இருக்கும்நமது மென் ரசனைகளைத் தூண்டும் இப்படியான கவிதைகள் நமது ஆழ்மனதின் குழந்தைத் தனத்தை மட்டுமல்லாது கவித்துவத்தையும் சற்றே கிளறிவிட்டுவிடுகின்றன.

கவிஞர் வைகறையின் தனிச்சிறப்பான கவிதைகளும் குழந்தைக் கவிதைகளேகுழந்தைகளைக் கொண்டாடும் ஜன்னலைத் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான்என்ற ஒரு கவிதைத் தொகுப்பையே அளித்தவர்அந்தத் தொகுப்பிலுள்ள அழகான ஒரு கவிதை இதோ

   துவட்டிவிடும் முன்

முழுவதும் நனைந்தவனாய்
வீட்டிற்குள் வந்த ஜெய்குட்டியைத்
துவட்டி விடும்முன்
முத்தமிடுகிறாள் அம்மா,
இன்று ஜெய்குட்டி
மழைக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறான்
ஒரு அம்மாவின் முத்தத்தை

- வைகறை

குழந்தைகளைக் கவிதையாக்கி மழையைக் கவிதையாக்கிமழைக்கு ஒரு கவிதை முத்தம் தரச் செய்து என இந்தக் கவிதை ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைத் தரும் மனதுக்கு நெருக்கமான கவிதை.

கவிதைகளில் நிறைந்து கிடக்கின்ற குழந்தைமை நமதாகநம்மை பிரதிபலிப்பதாக இருப்பதாலேயே இந்தக் கவிதைகள் நமக்குக் கூடுதல் நெருக்கமாகின்றனகுழந்தைக் கவிதைகளில் இருக்கும் அழகியல் சாதாரண வாசகரிலிருந்து தீவிர இலக்கிய வாசகர் வரைக்கும் ஒரு புன்னகையை உள்மனச் சிலிர்ப்பை வரவழைக்கும் திறனைக் கொண்டுள்ளன.
கவிதைகளின் பால் ஆர்வமற்றுவாசிப்புப் பழக்கமற்று இருக்கும் யாவர்க்கும் கூட புரியும் எளிய கவிதைகள் இவைஇதன் காரணத்தினாலேயே கொண்டாடப்பட்டும்பரவலாகக் கவனிக்கப்பட்டும்,வெகுஜன ஊடகங்களிலும் அதிக அளவில் பிரசுரிக்கப் பட்டும் இந்தக் கவிதைகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன.

ஒரு நல்ல கவிதை எதையாவது செய்ய வேண்டும் எனச் சொல்வோம்எதையும் செய்ய வேண்டிய நிர்பந்தம் இல்லையெனவும் வாதிடுவோம்இருப்பினும் நல்ல மனநிலையில் ஒரு குழந்தையின் புன்னகையை யாரால் நிராகரிக்க முடியும்.? அவ்வாறாகவே இக்கவிதைகளின் அழகியலையும் அது தரும் நெருக்கமான உணர்வையும் நம்மால் நிராகரிக்கவே முடியாது.

கடைசியாக எனது ஒரு கவிதை

குழந்தைகளின் மொழி
அம்மாக்களுக்கு மட்டுமே
புரிவது போலவே
பொம்மைகளின் மொழி
குழந்தைகளுக்கு மட்டுமே புரிகின்றது..

இரா.பூபாலன்

ஆம்பொம்மைகளின் மொழியைப் புரிந்து கொள்ள நாம் நமது கிரீடங்களைக் கழற்றி வைத்துவிட்டுநமது முகமூடிகளை அவிழ்த்து விசிறிவிட்டுஒரு குழந்தையாகிவிடுவது அவசியம்.


அப்போதுதான் கவிதைகள் இனிக்கும் ..

குறிப்பு :
நந்தலாலா இணைய இதழ்-20ல் வெளியான கட்டுரை

http://www.nanthalaalaa.com/2015/10/12.html 

நன்றி : கவிஞர் வைகறை