வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

ஒரு தலைவர் எழுத்தாளர் / வாசகராக இருந்தால்…

 

ஒரு தலைவர் எழுத்தாளர் / வாசகராக இருந்தால்

  ஓர் எழுத்தாளர் , புத்தகங்களை நேசிக்கும் வாசகர், தலைமையிடத்தில் இருந்தால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறேன்.. பள்ளிகளில், கல்லூரிகளில் பேசுவதற்குச் செல்லும் போதெல்லாம் ஓர் ஆசிரியர் வாசிப்பாளராக இருந்தால் அந்தக் கல்விக்கூடமும் மாணவர்களும் எவ்வளவு மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பார்க்கிறேன் அது குறித்துப் பேசியும் இருக்கிறேன். மருத்துவர்கள் வாசகர்களாக இருப்பதால் நிகழும் அதிசயங்களையும் பார்க்கிறேன்.. இப்படி, புத்தக வாசிப்பு என்பது வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாது அது புதிய சிந்தனைகளின் வாசலாக, புதிய புதிய கருத்துருவாக்கங்களின் வெளியாக மாறுகிறது என்பது தான் கண்கூடாகக் கண்ட உண்மை. நாம் கண்ட மகத்தான தலைவர்கள் எல்லோரும் சர்வ நிச்சயமாக புத்தக வாசிப்பாளராகத் தான் இருந்திருக்கிறார்கள். உலக அளவில் எடுத்துக்கொண்டாலும் இது தான் உண்மை.

 

கோவையில் ஆறாவது ஆண்டாக புத்தகக் கண்காட்சி சிறப்புற நடைபெற்றிருக்கிறது. அன்றாடம் சிறப்புரைகள், எல்லா அரங்குகளிலும் நூல் வெளியீடுகள், உரைகள், பட்டிமண்டபம், கலை நிகழ்ச்சிகள் என எல்லா புத்தகக் கண்காட்சிகளையும் போல ஆரவாரமான பத்து நாட்கள். எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்குமான திருவிழா.

 

கோவையில் இம்முறை ஒரு சிறப்பு. ஒரு நாள் முழுதும் தொழிலாளர்களின் கலை நிகழ்வுகள், விவாத அரங்கு, நாடகம், தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான போட்டிகள், பரிசளிப்புகள், நிறுவனங்களில் சிறந்த வாசகருக்கான விருதுகள் என தொழிலாளர்களுக்கான திருவிழாவாகவும் இந்தப் புத்தகத் திருவிழா மாறியிருக்கிறது.. இதற்கெல்லாம் காரணமாக ஒரு மூளையின் சிந்தனை மிளிர்கிறது. அது சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களது மூளை.

 

நான் கோவையில் உள்ள ரூட்ஸ் நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். நான் பணிபுரியும் நிறுவனத்தில் மனிதவளத்துறையின் இயக்குநராக இருப்பவர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன். நாடறிந்த பேச்சாளர், தன்னம்பிக்கை எழுத்தாளர். தற்போது கோவை புத்தகக் கண்காட்சியின் ஆலோசனைக் குழுவில் இருப்பவர். அவரது ஆலோசனையின்படியும் வழிகாட்டுதலின் படியும் தொழிலாளர்களுக்கான இத்துணை சிறப்பான நிகழ்வுகளும் ஒரு நாள் முழுவதும் நடந்தது. வாசிப்பின் மகத்துவத்தை உணர்ந்த ஓர் ஆளுமையால் தான் இப்படியான தொலைநோக்கு சிந்தனையைக் கொண்டுவர முடியும்.

 

இதுமட்டுமல்லாது, எங்கள் நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் இருந்தும் பல தொழிலாளர்களை அரைநாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பில் புத்தகக் கண்காட்சிக்கு நிறுவனத்தின் பேருந்தில் அழைத்து வந்து புத்தகங்களைப் புரட்டிப்பார்த்து வாங்க, வாசிக்க ஒரு நல்வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறார். மேலும் இந்த யோசனைகளின் சிகரமாக, விருப்பபடும் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூபாய் 500 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். அவர்கள் அதே தொகைக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் சம்பளத்தில் ரூபாய் 250 மட்டுமே பிடித்தம் செய்யப்படும். மீதி 250 ரூபாயை நிறுவனமே செலுத்தும். இந்தத் திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் புத்தகங்களை வாங்கினர்; அதில் பலர் முதன்முறையாக புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள். முதன்முறையாக புத்தகத்தை வாங்குபவர்கள். வாசிப்பைப் பரவலாக்க, இதைவிடவும் வேறு என்ன திட்டத்தைச் செய்துவிட முடியும்? இவர் இவ்வளவும் செய்வதற்கும் இன்னும் இன்னும் பல புதிய திட்டங்களைச் செயல்படுத்தவும் எங்கள் நிறுவனத்தின் தலைவர் மேன்மைமிகு திரு.ராமசாமி ஐயா எப்போதும் மனமுவந்து வாழ்த்தி வரவேற்பார். மேலும் சமுதாயத்துக்கும், இயற்கைக்கும் எப்போதும் பயன்படும்படி நம் ஒவ்வொரு அடியும் இருக்க வேண்டும் என்பதே அவரது குறிக்கோளும் கூட.

 

இது ஒரு வாசகனாக, புத்தகங்களின் காதலனாக, எழுத்தாளனாக நான் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களுக்கு நன்றி செலுத்தும் பதிவு..

 

அன்பின் நன்றி.. வாசிப்பின் வாசல்களைத் தொழிலாளர்களுக்கும் திறந்துவிட்டமைக்கு

 

 

சனி, 11 ஜூன், 2022

கவிதை ரசனை - 5

கவிதை ரசனை - 5 - இரா.பூபாலன்


கவிதைக்கு எத்தனை கண்கள் தெரியுமா ? அவற்றின் உடலெங்கும் கண்கள். அவையும் விநோதமானவை 360 டிகிரியிலும் சுழன்று பார்க்கும் தனித்திறமை பெற்றவை. அவற்றின் பார்வைகளிலிருந்து சிறு எறும்பு ஊர்வதும் தப்ப முடியாததாகிறது. மேலும் சாதாரணக் கண்கள் பார்க்கும் கோணத்துக்கு எதிர்க்கோணத்திலிருந்து கவிதைகள் பார்க்கத் துடிக்கின்றன. எனவே தான் கவிதைகள் நம் அகக் கண்களைத் திறந்தபடியிருக்கின்றன. ஒரு சாதாரண சம்பவத்தில் இருந்து அசாதாரண கோணத்தில் அசாதாரண் காட்சிகளையும் கருத்துகளையும் எடுத்துக்கொண்டு வந்து காட்டுவது கவிதையின் செயல்பாடுகளில் ஒன்றாக இருக்கிறது. கவிதைகளின் முடிவிலி அழகுகளில் இதுவும் ஒன்று.

 

எல்லோருக்குமான சாலையில், தனக்கான தனித் தடத்தைக் கண்டுகொண்டும், தனித்த பாதையை உருவாக்கிக் கொண்டும் நடக்கின்ற கவிதையின் கால்கள் பெரும் பயணம் போகின்றன. இந்த பூமி இவ்வளவு தான் என்று சொல்லிவிட முடியுமா என்ன ? மனிதக் கால்கள் படாத பூமியின் எத்தனை எத்தனை நிலப்பரப்புகள் இருக்கின்றன ? மனிதக் காலடிகள் நுழைந்த , நுழையாத இடங்களுக்கெல்லாம் படைப்பின் பாதங்கள் பயணப்பட்டிருக்கின்றன. படைப்பாளனின் கற்பனைகளில் உருவாகும் பூமி இன்னும் அழகானதாக இருக்கிறது. இவ்வளவு தான் என நாம் நினைத்த வழக்கமான பூமியையே ஒரு புகைப்படக் கலைஞன் மிக அழகாகக் காட்சிப்படுத்தி நம்மை வியக்க வைக்கிறானல்லவா ? அப்படித்தான் ஒரு கவிஞன் நாம் அன்றாடம் கடந்து செல்லும் சம்பவங்களிலிருந்து ஒரு துண்டுக் காட்சியை எடுத்து தனது சொற்களின் நிறம் குழைத்துத் தரும் போது அது அசாதாரண அழகாகிவிடுகிறது. நாம் அந்தப் பாதையை, அந்தச் சம்பவத்தைப் பேராச்சர்யத்துடன் திரும்பிப் பார்க்கிறோம். அந்தக் காட்சி நம்மைப் பார்த்து க்ளுக்கெனச் சிரிக்கிறது.

 

இளம் கவிஞர் மதார் அவர்களுடைய வெயில் பறந்தது தொகுப்பில் பல கவிதைகள் சிறப்பாக, அழகியலுடன் இருந்தன. அதிலொரு கவிதையின் கோணம் திகைக்க வைத்தது.

 

ஒரு பூக்கடையை

முகப்பெனக் கொண்டு

இந்த ஊர்

திறந்து கிடக்கிறது

 

பூக்கடைக்காரி

எப்போதும் போல்

வருகிறால்

பூக்களைப் பின்னுகிறாள்

கடையைத் திறப்பதாகவும்

கடையை மூடுவதாகவும்

சொல்லிக்கொண்டு

ஊரையே திறக்கிறாள்

ஊரையே மூடுகிறாள்

 

-    மதார் (வெயில் பறந்தது கவிதைத் தொகுப்பு, அழிசி வெளியீடு,9597069069 )

 

ஒரு கவிதை தன்னை நவீன கவிதையென அடையாளப்படுத்திக் கொள்வது அதன் மொழியில் மட்டுமன்று, மொழிதலிலும் இருக்கிறது. ஒரு பூக்கடையை முகப்பெனக் கொண்டு திறந்து கிடக்கிறது இந்த ஊர் என்பது அழகுற மொழிதல். ஊரின் முகப்பில் இருக்கும் பூக்கடையை அவ்வூரின் கதவு என்பதான கற்பனை அழகு.  கடையைத் திறப்பதாகவும் மூடுவதாகவும் சொல்லிக்கொண்டு அவள் ஊரையே திறக்கவும் மூடவும் செய்கிறாள் என்பது அவ்வழகியிலின் பூரண வெளிப்பாடு. இந்தக் கோணத்தில் ஒரு ஊரை, பூக்கடையை யாரும் காட்சிப்படுத்தியிருப்பதாகத் தெரியவில்லை. அதன் காரணமாகவே கவிதை புதியதாக இருக்கிறது. கடைசி இரண்டு வரிகள் தரும் புத்துணர்ச்சி அலாதியானதாக இருக்கிறது.

 

கவிதையின் கண்கள் காணும் காட்சிகளுக்கு இன்னுமொரு சிறப்பான உதாரணக் கவிதையாக சமீபத்தில் வாசித்த அன்புக்குரிய கவிஞர் கலாப்ரியா அவர்களின் கவிதை.. சங்க காலத்து வெயில் எனும் புதிய கவிதைத் தொகுப்பிலிருந்து..

 

இசை நாற்காலி

விளையாட்டில்

இசை நிற்கிற போது

ஆட்டத்திலிருந்து விலகும்

நாற்காலி குறித்த

வருத்தம் உண்டா

யாருக்கேனும்

 

         - கலாப்ரியா (சங்ககாலத்து வெயில்- தொகுப்பிலிருந்து , 044-24896979)

 

இசை நாற்காலி விளையாட்டில் தோற்றுப்போகும் குழந்தைகளுக்கு இரங்கும் கண்களுக்கு மத்தியில் தோற்றுப்போனதாக விலக்கி வைக்கப்படும் நாற்காலிக்காக இரங்கும் கண்கள் கொண்டது இந்தக் கவிதை. கவிதையின் கண்கள் பார்த்த கோணம் நெகிழ்ச்சியானதாக இருக்கிறது, அஃறிணைகளுக்காகவும் கவிதைகள் இரங்கும் துடிக்கும் என்பது தெளிவாகிறது. இந்தக் காட்சியின் பின்னணியில் நமது மனதுக்குள் உருவாகும் அன்பு என்பது விலக்கிவைக்கப்படும் நாற்காலிக்கானதாக மட்டுமல்லாமல், விலக்கிவைக்கப்படும் குழந்தைகளுக்கானதாக மட்டுமல்லாமல், தேவை அல்லது பயன் முடிந்ததும் விலக்கிவைக்கப்படும் யாவற்றுக்குமானதாக பொருந்திப் போகிறது. ஒரு விலக்கலின் போது, இந்தக் கவிதையின் சொற்கள் நினைவில் வந்து போகும் என்பது இந்தக் கவிதையின் வீரியத்தைக் காட்டும்.

 கவிதைகள் இயல்பானவை, இயல்பற்றவை என்பதெல்லாம் கணக்கிலில்லை. அவற்றின் இயல்பு, இறுகிய மனதை இலகுவாக்கி சிறகு பொருத்தி ஒரு பறவையாக்குவது தான். உயர உயரப் பறக்க. கவிதையின் சில சொற்கள் தரும் சிறகுகள் போதுமானதாக இருக்கின்றது. சிறகுகள் மட்டுமல்லாமல் கவிதைகள் நமக்கான ஆகாயத்தையும் தருகின்றன பறக்க.

அதன் பொருட்டே கவிதைகள் எழுதப்படுகின்றன.

 மூத்த கவிஞர் கலாப்ரியாவும் இளம் கவிஞர் மதாரும் நிகழ்த்திக் காட்டியிருக்கும் அற்புதங்கள் இந்த இரு கவிதைகள். ஒரு கவிதையை வாசித்து முடித்தவுடன் வரும் மன அமைதி அல்லது மன நடுக்கம் அனுபவித்து உணர வேண்டிய ஒன்று. மற்ற எந்த போதைக்கும் குறைந்ததில்லை கவிதை தரும் கண நேர போதை. பூக்காரிக் கவிதை நிகழ்த்திய அழகியலும், ஒதுக்கப்பட்ட நாற்காலிக்கு இரங்கும் கவிதையின் அன்பியலும் கவிதையின் பிரத்யேகக் குணங்கள். வாசிப்பின் வழி நாம் காணத் தவறிய அழகியலையும், உணரத் தவறிய அன்பியலையும் அடைந்து விடலாம்..

 

ஒவ்வொரு மாதமும் வாசித்த புத்தகங்களிலிருந்து நேசித்த சில கவிதைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் - இரா.பூபாலன்