நின் நெஞ்சு நேர்பவள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நின் நெஞ்சு நேர்பவள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 நவம்பர், 2024

நின் நெஞ்சு நேர்பவள் - கவிஞர் ந.பெரியசாமி அறிமுகக் குறிப்பு

 



பெண் உடனான உறவு என்பதை காமத்தோடு மட்டும் தொடர்பு கொண்டு பார்ப்பது சமூகத்தின் சாபக்கேடு. அதிலிருந்து மாறுபட்ட சில குரல்களை கேட்பது நம்மை மகிழச் செய்யும். பூபாலன் நம்மை மகிழச் செய்துள்ளார்.

வெவ்வேறான பெண்களுடனான பழக்கம் புது புது உலகை திறப்புக்கொள்ளச் செய்யும். அபூர்வங்களையும் அசாத்தியங்களையும் நம்முள் நிகழ்த்தியபடி இருப்பர். மொழியை அவ்வளவு திறம்பட பயன்படுத்துவர். சின்னஞ்சிறு சொல்கூட நம் ஆயுளுக்கும் நம்முள் தங்கி மலர்த்தியபடி இருக்கும். நமக்கேயான சில பெண்களை நினைவில் அமரச் செய்தபடி இருக்கிறது இரா. பூபாலனின் இத்தொகுப்பு.

- கவிஞர் ந.பெரியசாமி



நின்நெஞ்சு நேர்பவள் - அறிமுகம் - விமர்சகர் ந.முருகேசபாண்டியன்

 அண்மையில் கவிஞர் இரா.பூபாலன் வெளியிட்டுள்ள நின் நெஞ்சு நேர்பவள் கவிதைத் தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. பூபாலன் அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட பெண்கள் பற்றி கோட்டோவியமாகக் கவிதைகள் எழுதியுள்ளார்.


காலந்தோறும் அப்பாகளின் நினைவுகளில் மிதக்கிற மகள் பற்றிய பிம்பத்தை முன்வைத்து ஏற்கனவே சில கவிஞர்கள் கவிதை எழுதியிருந்தபோதிலும், இரா.பூபாலனின் ஊசல் கவிதை வரிகள் தனித்து விளங்குகின்றன.
மகள் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினாலும் அப்பாவின் பார்வை, மகள் என்ற வட்டத்திற்குள்ளேயே சுற்றுவதுதான் நடைமுறை. ஊசல் கவிதையின் எளிய வரிகள் வாசிப்பில் அப்பாகளைத் தொந்தரவு செய்யும்.

ஊசல்
மகள்கள் வெகு வேகமாக
வளர்ந்து விடுகிறார்கள்
அம்மாக்களின் செருப்பை
அணிந்துகொள்ளும் அளவுக்கு.
அவர்களின் உடையையும்
அணிந்துகொள்கிறார்கள்
அம்மாக்கள் தங்கள்
அணிகலன்களை
கைப்பைகளை
பங்கிட்டுக்கொள்கிறார்கள்
கொஞ்சம் கொஞ்சமாக
அப்பாவின் மடியிலிருந்து தூரமாகி
அம்மாவின் தோழியாகிவிட்ட
ஒரு சிறுமியை
அப்பாக்கள் கனவுகளில்
துரத்தித் திரிகிறார்கள்

- எழுத்தாளர் ந.முருகேச பாண்டியன்





-

ஞாயிறு, 31 மார்ச், 2024

நின் நெஞ்சு நேர்பவள் - கவிதை நூல் வாசிப்பு அனுபவம் - கவிஞர் செ.கார்த்திகா

 கவிஞர்.இரா.பூபாலன் எழுதி கடந்த மாதம் வெளிவந்தக் கவிதை நூல்கள்.." நின் நெஞ்சு நேர்பவள்" மற்றும் "ஹோ.. என்றொரு கவிதை"




நின் நெஞ்சு நேர்பவள்..
****************************
கவிஞர் தன் வாழ்வில் தான் கண்ட, கடந்த, உடனிருக்கும் பெண்களின் அன்பை, அனுசரணையை, ஆதங்கத்தை, வலியை என எல்லா உணர்வுகளையும் கொஞ்சமும் மாறாமல் தன் எழுத்துகளில் தந்திருக்கிறார்..
தொகுப்பின் முதல் கவிதையான "செந்துளியின் சிறுதுளி‌" என்ற தலைப்பிலானக் கவிதை.. வாசிக்கையில் இன்று பணிபுரியும் இடத்தில் தண்ணீர் வசதியுடன் கழிவறை, நாப்கின் என வசதிகள் வந்துவிட்ட போதும் மாதவிடாய் நாட்கள் பெரும் அசௌகரியமான நாளாகத்தான் இருக்கிறது இன்னும்.. அப்படியிருக்கையில் தோட்டத்து வேலைக்குப் போன அம்மா.. ஓலைக் கீற்று தான் குளியலறையாக இருந்த போது எப்படி தன் மாதாவிடாயைக் கடந்து இருப்பாள் என்று நினைத்தால் இன்றும் வலிக்கிறது.. அந்த வலியை இந்தக் கவிதை இன்னும் கூட்டுகிறது.
"துணிகளில் படாது போன செந்துளியின் சிறுதுளி தான் நான்" என்று கவிஞர் தெரிந்து கொண்டது போல உண்மையை எல்லாரும் அறிந்து விட்டால் மாதவிடாய் அசூயையாகவோ தீட்டாகவோ யாருக்கும் தெரியாது.
சிறுவயதில் எல்லாப் பெண்பிள்ளைகளும் அப்பா பிள்ளைகள் தான்.. பெரும்பாலும் திருமணத்திற்குப் பிறகு நான் உட்பட பெண்பிள்ளைகள் அம்மாவோடு அதிக நெருக்கமாகிவிடுகிறார்கள்
"ஊசல்" கவிதை ,அப்பாவின் பிள்ளைகளாக இருந்து ஒரு குறிப்பிட்ட வயதிக்குப்பின் அம்மாவோடு நெருக்கமாகி விடுகிற பெண் பிள்ளைகள் பற்றியும் அம்மாற்றத்தின் போது அப்பாவின் எண்ண ஓட்டங்களைப் பற்றியும் பேசுகிறது.. .
என் சமையலறையிலும் எல்லா டப்பாக்களிலும் என் அம்மா அடைந்து இருக்கிறாள்.. அதனால் "அம்மாவை ஊற வைத்து விழுங்குபவள் "கவிதை மனதுக்கு நெருக்கமானதாக இருக்கிறது..
இப்படித் தொகுப்பெங்கும் வெவ்வேறு முகங்களுடைய பெண்களின் வாழ்வியலை ஆண்குரல் பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறது..ஆனால் அது இரா. பூபாலன் பூபாலன் அண்ணாவாக இருக்கும் போது ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை..
நல்ல மகனாக, கணவனாக, அப்பாவாக, தோழனாக என தன் வாழ்வில் எல்லா பெண்களிடமும் உண்மையும் நேர்மையுமாக வாழ்ந்து அவர்களின் வலிகளில் பங்கெடுத்துக் கொண்டு அவர்களின் வாழ்வில் நம்பிக்கைக்குரிய இடத்தில் நிற்கும் பூபாலன் பெண்களை எழுதுவதில்
வியப்பதற்கு ஏதுமில்லையே.. வாழ்வையே வார்த்தைகளில் கவிதையாகக் கொடுத்து இருக்கிறார்..
வழக்கம் போலவே அவரின் வளர்ப்பை நினைத்து வியக்கிறேன்..ஒரு ஆண்பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்ற கேள்விக்கு நான் எப்போதும் விரல் சுட்ட நினைப்பது இவரைத் தான்..
இந்தத் தொகுப்புப் பெண்களைப் பற்றியத் தொகுப்பு ...ஆண்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய தொகுப்பு..
வாழ்த்துகள் அண்ணா தொடர்ந்து எழுதுங்கள்...

வியாழன், 28 மார்ச், 2024

நின் நெஞ்சு நேர்பவள் - கவிதைகல் ஒரு பார்வை - கவிஞர் பொன் குமார்




நின் நெஞ்சு நேர்பவள் - கவிதைகள் - இரா. பூபாலன்- 98422 75662 

 ஒரு பார்வை - பொன். குமார்

கவிஞர் இரா. பூபாலன் சமீபங்களில் கவிதை உலகின் கவனத்தை ஈர்த்து வருபவர்.  கவிதை எழுதுவதிலும் ஒரு நிதானமான போக்கைக் கடைப்பிடித்து நல்ல கவிதைகளை எழுதி வருபவர்.  பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு, ஆதிமுகத்தின் காலப்பிரதி, அரூபத்தின் வாசனை,  திரும்புதல் சாத்தியமற்ற பாதை, தீ நுண்மிகளின் காலம், ஹோ.. என்றொரு கவிதை என்னும் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.   அவரின் ஒரு புதிய கவிதைத் தொகுப்பு ' நின் நெஞ்சு நேர்பவள்'. முழுக்க பெண்களைப் பற்றியது. தாய் முதல் தோழி வரை அனைத்து உறவுகளையும் பாடியுள்ளார். 

" அம்மாவிலிருந்து தொடங்கிய இந்த உலகம் அவளையே சுற்றிச்

சுற்றி வந்தபடி அவள் தந்த, அவள் காட்டிய பெண்களின் கைகளைப்

பற்றியபடியே தான் சுழன்றுகொண்டிருக்கிறது. என் வாழ்வின் பெண்கள்

எல்லோரும் சேர்ந்து பிசைந்து உருவாக்கிய பிண்டம் தான் நான் என்பது எனக்குத் தெரியும். நாம் அனைவருமே அப்படித்தான். இல்லையென்றால் பெண்களற்ற நம் பூமி எப்போதோ கருகிப் போயிருக்கும் " என என்னுரையிலே தெளிவாக எழுதி தொகுப்பைத் தொடங்கியுள்ளார். 

அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே

என்னும்  குறுந்தொகை பாடலிலின் இறுதிவரியிலிருந்து நின் நெஞ்சு நேர்பவள் என்னும் தலைப்பைத் தேர்ந்தெடுத்து பொருத்தமாக வைத்துள்ளார். குறுந்தொகையின் மீதான பற்றையும் காட்டியுள்ளார். 

அப்பாவின் பழைய லுங்கிகளை
சதுர சதுரமாக வெட்டி
குளியலறை எரவானத்தில்
பத்திரப்படுத்தியிருப்பாள் அம்மா
பால்யத்தில் நான் அவற்றைக்
கேள்விகளால் துளைத்துப்பார்த்துவிட்டேன்
உனக்கு அது தேவை இல்லாததென்ற
ஒரு பதிலில் கடந்துவிடும் அம்மாவுக்கு
ஐந்து நாட்கள் விடுமுறைக் கணக்கில்லை
சோர்ந்து படுத்து ஒரு நாளும் பார்த்ததில்லை
துணிகளில் படாமல் போன
செந்துளியின் சிறுதுளி தான்
நானெனப் பின்னாளில் அறிந்துகொண்ட போது
அம்மாவின் உடல்
வன தேவதையின் உடலெனப் பச்சையம் பூசியிருந்தது

என அம்மாவிலிருந்தே கவிதையைத் தொடங்கியுள்ளார். அம்மாதானே அனைவருக்கும் தொடக்கம். இக்கவிதையின் தலைப்பு செந்துளியின் சிறுதுளி. மாதவிடாய் காலத்தில் அம்மாவின் அவஸ்தையை உணரச்செய்துள்ளார். ஒரு மகனிடமிருந்து மறைப்பதற்கு அம்மா படும் இம்சையையும் கூறியுள்ளார். எனினும் இக்கவிதை 

மனைவிக்கு
மகளுக்கு
தோழிகளுக்கு
அந்த நாட்களின் தேவைகளின் பொருட்டு 
மருந்துக் கடைக்குப் போக
தேநீர் கலந்து கொடுக்க
சிறு சிறு உதவிகள் செய்ய
என்னைப் பணித்தவை
அந்த லுங்கிச் சதுரங்கள் தாம்

என தொடர்கிறது. அம்மா படும் அவஸ்தையே அம்மா பட்ட இம்சையே பின்னாளில் மனைவி, மகள், தோழிகளுக்கு உதவ காரணமாக இருந்தது என்கிறார். அம்மாவின் மூலம் பெண்களின் நிலையை உணரச்செய்துள்ளார். ஆண்களும் மாத விடாய்க் காலங்களில் உதவியாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது கவிதை. மேலும் இக்கவிதையை

அம்மாவும் ஒரு லுங்கிச் சதுரம் தான்
அப்பாவுடைய
என்னுடைய
இன்ன பிற ஆண்களுடைய
கறைகளை
மனதின் எரவானத்தில்
யாரும் பாராமல்
ஒளித்துவைத்தே இருக்கிறாள்

என நிறைவுச் செய்து அம்மாவை உயர்த்திக் காட்டியுள்ளார். அம்மா என்பவள் ஆண்களின் கறையையும் மூடி மறைத்தே வாழ்பவர் என்கிறார். 

பிள்ளைகளுடன் விளையாடுவதில் அம்மாக்களுக்கு எப்போதுமே அலாதி பிரியம். பொதுவாக விளையாட்டு என்றால் வெற்றிப் பெறுவதாகவே இருக்கும். பிள்ளைகளுடனான அம்மாக்களின் விளையாட்டில் அம்மாக்கள் தோற்கவே விரும்புவார்கள். விளையாடுவார்கள். பிள்ளைகளை வெற்றிப்பெற வைப்பதிலேயே அம்மாக்களின் குறிக்கோள் இருக்கும். பிள்ளைகளின் மகிழ்ச்சியே பெற்றவளின் மகிழ்ச்சி. 'அம்மாவுடனான விளையாட்டு ' அருமை. 

அவள் தோற்றுத் தோற்றுத்தான்
ஆணாக்கியிருக்கிறாள்
என்னை
அப்பாவை

என கவிஞர் விளையாடி இருக்கிறார். கவிஞரின் விளையாட்டும் அருமை. ஒரு மகனை ஆணாக்கியிருப்பது அம்மாவின் தோல்வியல்ல. அதுவே அவளின் வெற்றி. இதுவே கவிஞரின் வெற்றி. ' பொய்ச் சிலை ' யும் அம்மாவின் வின் விளையாட்டையே காட்டுகிறது. அம்மா பொய்ச் சிலை அல்ல. மெய்ச் சிலை. 

ஒரு பூக்காரியின் மீது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது ' இன்மையின் சன்னதம்'.  தினமும் சாலையில் பார்க்கும் பூக்காரி பூ வாங்கக் கோரும் போதெல்லாம் வாங்காமல் செல்கிறார். ஒரு நாள் பூக்காரியைக் காணாமல் மனம் வாடுகிறார்.

நாளை அவள் வந்துவிடவேண்டும்.
யாருக்காகவாவது
ஒரு முழம் பூவை வாங்கிவிட்டால் போதும்
என்றிருக்கிறது

என எண்ணுகிறார். தினசரி காணும் பூக்காரியை ஒரு நாள் காணாத போதே அவளிடம் பூ வாங்க முடிவெடுக்கிறார். பூ விற்றால்தானே பிழைப்பு நடத்த முடியும்?  பூக்காரி பெண்ணுக்கான கவிதை இது. 

'யாசகம்' ஒரு நல்ல கவிதை. பேருந்தில் யாசகம் கேட்கும் சிறுமிக்கு ஒருவன் பொம்மையை யாசகம் அளிக்கிறான்.  பொம்மையைப் யாசகம் பெற்ற சிறுமி தனக்குக் கிடைத்த சில்லறைகளை யாரோ ஒருத்திக்கு தந்து விட்டு பொம்மையுடன் செல்கிறாள்.  காட்சியாக விரிகிறது கவிதை. பொம்மையும் சிறுமியும் கண்முன் காட்சியளித்துக் கொண்டே இருக்கிறார்கள். பணத்தை விட பொம்மையே சிறுமிக்கு பிடித்தமானதாக உள்ளது. 

' பழைய நகைச்சுவைக் காட்சி' அம்மாவின் நினைவுக்கூர்தலான அப்பாவைப் பற்றிய கவிதை. புகைப்படம் எடுக்கும் போது புகைப்படக்காரர் சிரிக்கச் சொல்வது வழக்கம். ஆனால் அப்போதுதான் சிரிப்பே வராது. அப்புகைப்படத்தைக் காணும் போதே சிரமப்பட்டு சிரித்ததே நினைவு வரும். 

பொண்டாட்டி தான் தள்ளி நிக்கறாங்களே
என்று புகைப்படக்காரனின் நகைச்சுவைக்கு
இப்போது மீண்டும் புன்னகை சிந்தினாள்
அப்பாவோ
அந்த நகைச்சுவைக்கு
இப்போது தான்
முதன் முதலாகப் புன்னகைக்கிறார்
என்பது  கவிஞரின் கவிபுனைவைக் காட்டுகிறது. 
எந்த ஒன்றிலும் 
மிச்சமாவதை
விரும்பத் துவங்குவாள்
தனக்கென எதுவும்
தயாரிக்காதவள்

என்னும் 'மிச்சத்தை விரும்பாதவள்' தாய்க்கு மட்டுமல்ல எல்லா பெண்களுக்கும் பொருந்தும்.  பெண்களின் பொதுவான குணமாகும். ஆயினும் 

இரவும் பணி தொடர்வதால்
வீட்டுக்கு வர முடியாது
என்று அவர் சொன்னபின்
மிச்சமான சாப்பாட்டை
புளியூற்றி வைத்துவிடுகிறாள்
பாலை உறையூற்றி வைத்துவிடுகிறாள்
எல்லா மிச்சங்களையும்
சரிக்கட்டிவிடும் அவள்
மிச்சமிருக்கும்
இந்த இரவை எதுவும்
செய்ய முடியாமல்
பார்த்துக்கொண்டிருக்கிறாள்

என்னும் 'கையறு நிலை' யில் மிச்சமிருக்கும் இரவில் பெண்கள் படும் நிலையைக் காட்டியுள்ளார். 

மருந்தகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணின் மனிதநேயத்தையும் இரக்கக்குணத்தையும் வெளிப்படுத்தியது 'வலி நிவாரணி'. மருத்துவர் எழுதி தந்த மொத்த மருந்துகளையும் வாங்க காசில்லா ஏழை முதியோர்க்கு பாதி தொகையில் முழு மருந்தையும் தந்து உதவுகிறாள். 

இன்று மாலை
இடிக்கும் கணக்கையும்
பிடிக்கும் சம்பளத்தொகையையும் பற்றிய
கவலைகளின்றி
வலிநிவாரணிகளை அடுக்கியபடியிருக்கிறாள்
என அப்பெண்ணை போற்றச்செய்கிறார். 

அன்றாட இல்லப்பணிகளில் வலிகள் இருந்தாலும் வேதனைகள் தொடர்ந்தாலும் பெண்கள் வெளியில் காட்டிக்கொள்ளாதவர்கள் என்று கூறும் கவிதை ' வலிகளின் நழுவல்'. 

மலைக்காட்டின் வாசம், யாரும் பார்த்திராதது, கடவுளுக்கு முந்தைய, நேர்த்திக் கடன், ஒரு தரம்.. இரண்டு தரம்.. மூன்று தரம்.. ஆகியவை மலை குறித்தானவை. அப்பா மகள் உரையாடல்கள் மூலம் மலையை வியக்கச் செய்கிறார். 

மலைக் கோவில்
எப்போதிருந்து இருக்கிறது அப்பா? 
நாம் பிறப்பதற்கு முன்பிருந்து
மலை எப்போதிருந்து
இருக்கிறது அப்பா?
கடவுள் பிறப்பதற்கு
முன்பிருந்து
என்னும் 'கடவுளுக்கு முந்தைய' கவிதையே கவனத்தை ஈர்க்கிறது. 
மகள்கள் வெகு வேகமாக
வளர்ந்து விடுகிறார்கள்
அம்மாக்களின் செருப்பை
அணிந்துகொள்ளும் அளவுக்கு.
அவர்களின் உடையையும்
அணிந்துகொள்கிறார்கள்
அம்மாக்கள் தங்கள்
அணிகலன்களை
கைப் பைகளை
பங்கிக்கொள்கிறார்கள்
கொஞ்சம் கொஞ்சமாக
அப்பாவின் மடியிலிருந்து
தூரமாகி
அம்மாவின் தோழியாகிவிட்ட
ஒரு சிறுமியை
அப்பாக்கள் கனவுகளில்
துரத்தித் திரிகிறார்கள்

என்னும் ' ஊசல் ' நெகிழ்ச்சியானது. மகளின் அபரித வளர்ச்சியைக் காட்டுகிறது. மகள்கள் வளர வளர அப்பாக்களிடமிருந்து விலகிச் செல்வதைச் சொல்கிறது. ஆனால் அப்பாக்கள் மகளை நேசிப்பவர்களாகவே இருக்கிறார்கள் என்கிறார். 

கோபமென்றால்
எதையாவது உருட்டுவாள்
நிலம் அதிர நடப்பாள்
முந்தைய நாள்
விருப்பப்பட்டுக் கேட்ட உணவை
சமைத்து வைத்துவிட்டு

என்னும் 'அவள் அப்படித்தான்'  பெண்களின் பேரன்பைக் காட்டுகிறது. இங்கு அவள் அம்மா, மனைவி, மகள், தோழி என எவளாகவும் இருக்கலாம். 

பெண்கள் இட ஒதுக்கீடுக்காக போராடியும் சமூகத்தில், நாட்டில் இட ஒதுக்கீடு முழுமையாக கிடைக்கவில்லை. ஆனால் வீட்டில் சமையலறை பெண்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. மீறினால் பக்தி அறை. ஆண்கள் சமையலறை பக்கம் எட்டியே பார்க்க மாட்டார்கள். சமையலறையே அம்மாக்களின் உலகம். பணத்தைக் கூட பாதுகாப்பாக வைக்க சமையலறை பயன்படும். அம்மாவிற்கு ஏற்படும் சகலவலிகளுக்கும் சமையலறையிலேயே மருந்தும் இருக்கிறது என்கிறது 'அம்மாவை ஊறவைத்து விழுங்குபவள் ' கவிதை. சளிக்கு மிளகு, காயத்திற்கு மஞ்சள், தலை வலிக்கு சுக்கு, மாதாந்திர வலிக்கு அவள் என சமையறையிலையே சகல நிவாரணிகளும் பெண்களின் கைவசம் உள்ளன என சமையலறை உலகம்  காட்டுகிறது. 

புகைப்படத்தை வைத்துக்கொண்டு அம்மாவிடம் மகளும் மகளிடம் அம்மாவும் பேசி பேசி அன்புக் காட்டிக்கொள்வதை கவிஞர் ' பழைய பைத்தியங்கள்' என்கிறார். இன்னும் அலைபேசி அறியாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்பு என்பதே ஒருவித பைத்தியக்காரத் தனம்தானே..? 

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை

ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கில்லை

என கவிஞர் கந்தர்வன் எழுதி எல்லோருக்கும் விடுமுறை நாளானாலும் பெண்களுக்கு மட்டும்

இல்லை விடுதலை என்கிறார். 'எனக்கான காற்று' தொகுதியில் கவிஞர் எ. ராஜலட்சுமியும்

'எனக்கு' கவிதையில்

உனக்கு ஞாயிறு விடுமுறை

எனக்கு? 

என வினா எழுப்பியுள்ளார். இதே தொனியில் இதே பாணியில் கவிஞர் கிருஸ்ணப்ரியாவும் ' அரூபப் புலம்பல்கள்' கவிதையில் ஞாயிறு அன்றும் பெண்களுக்கு ஓய்வில்லை என்கிறார். 

வீடு மொத்தமும்
தொலைக்காட்சி, அலை பேசி என்று
தன்னைப் புறக்கணிப்பதை
பொறுத்தக் கொள்ளவியலாமல்
தேம்பும் ஞாயிறு
பார்க்கத் தவறுகிறது
விடுமுறை நாளின் விசேஷ சமையலுக்காக
சமையலறையில் கட்டப் பட்டிருக்கும்
அவளை.. 

ஞாயிற்றுக் கிழமை என்பது அனைவருக்குமான விடுமுறை நாள். ஆனால் வீட்டுப்

பெண்மணிகளுக்கு மட்டும் விடுமுறை இல்லை. மற்ற நாளகளை விட கூடுதலாகவே

பணியாற்ற வேண்டி உள்ளது. கவிஞரும் பெண்களுக்குக் குரல் கொடுத்துள்ளார். பெண்களுக்கு

விடுதலைக் கிடைக்கும் வரை இது போன்ற குரல்கள் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்

பெண் விரும்பும் 'ஆசையாய் ஒரு நாள் ' என்று வரும் என்று வேண்டியுள்ளார் வெட்கத்தில் நனைகின்ற தொகுப்பில் கவிஞர் கிருஸ்ணப்ரியா.  கவிஞர் இரா. பூபாலன் ' நகலத்து நங்கை'க்கு ஞாயிற்றுக்கிழமையும் பணி என்கிறார். இது ஒரு நகல்தான். இன்னும் அசல்கள் இருக்கின்றன.

விடுமுறை நாளொன்றின்
அதிகாலையில்
உறங்கிக் கொண்டிருந்தவனை
உலுக்கி எழுப்பினாள்
"அப்பா ரோஜா செடி எவ்ளோ அழகா
பூத்திருக்கு வாங்க பாருங்க" என்றபடி
இதழ் இதழாய் விரிந்து பூத்திருந்த
முகத்தைப் பார்த்துச் சொன்னேன்
“ரோஜா எவ்ளோ அழகு"

என்னும் கவிதையின் தலைப்பு ' ரோஜாக்களின் அழகு '. மகளுக்கு ரோஜா அழகு. அப்பாவிற்கு மகளே ரோஜா போன்ற அழகு. ஆகக் கூடி கவிதையும் அழகு. 

எப்போது எதற்கு அழுதாலும்
உன்னால தான் என்பாள்
எதற்கு எப்போது
சிரித்துக் கொண்டாலும்
உன்னை நினைத்துத்தான் என்பாள்
அவள் தான்
கடைசிக் கடிதத்தின்
முதல் வரியிலேயே எழுதித் தொலைத்திருந்தாள்
என் சாவுக்கும்
அவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென

இக்கவிதையின் தலைப்பு ' உன்னால் தான்'. தொகுப்பின் நிறைவுக்கவிதையான இது நெஞ்சில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெண்கள் ஆண்களைக் காட்டித்தருவதில்லை என்கிறார். 

கவிஞர் இரா. பூபாலனின் 'நின் நெஞ்சு நேர்பவள்' என்னும் தொகுப்பு முழுவதும் பெண்களைப் பற்றிய கவிதைகள். ஓர் ஆணின் பார்வையில் பெண்கள் குறித்து எழுதியுள்ளார். பொதுவாக பெண்கள் என்று சொல்லாமல் அம்மா, மனைவி, மகள், தோழி என வகைப்படுத்தி அவர்கள் குறித்து கவிதை இயற்றியுள்ளார். எனினும் பொதுவாக பெண்களைப் பற்றியே பேசியுள்ளது. பெண்களின் வலிகளும் உண்டு. வேதனைகளும் உண்டு. அன்பும் உண்டு. ஆதரவும் உண்டு. பண்பும் உண்டு. பாசமும் உண்டு.  பெண்களின் பலபடிநிலைகளைக் கவிதையில் காட்டியுள்ளார். கவிதைகள் உரத்து பேசவில்லை என்றாலும் உண்மைகளை பேசியுள்ளன. உரத்து பேசியுள்ளன. அம்மாவிற்கு மகனாக, மனைவிக்குக் கணவனாக, மகளுக்கு அப்பாவாக, தோழிக்கு தோழனாக தன்னை முன்னிறுத்தி ஒரு கவிஞனாக வெற்றிப்பெற்றுள்ளார். கவிதையின் செய்நேர்த்தி சிறப்பு. கவிதையை வாசிக்கத் தொடங்கும் போது தெரிகிறது. தானாகவே வாசிப்பு முடிவடைகிறது. கவிதை சொல்ல வேண்டியதை மையப்புள்ளியில் இருந்து விலகாமல் சொல்லியுள்ளார்.  சொற்கள் சொக்கச் செய்கின்றன. வரிகள் வசீகரிக்கின்றன. பாடுபொருள் பாராட்டச் செய்கின்றன.  பொள்ளாச்சி இலக்கிய வட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். கவிஞர் இரா. பூபாலன் பெண் சமூகத்தின் பெரும் அக்கறைக் கொண்டவரென உறுதிச் செய்கிறது நின் நெஞ்சு நேர்பவள் என்னும் தொகுப்பு. ஒரு கவிஞராக பெண்கள் மனத்திலும் இடம் பிடிப்பார். கவிதை உலகிலும் வலம் வருவார். அம்மாவை அவள் என்பது அன்பின் வெளிப்பாடு. " அம்மாவாக, மனைவியாக, மகளாக, தோழிகளாக, அக்காக்களாக,

தங்கைகளாக என்னை நானாக்கிய பெண்கள் தாம் இந்தக் கவிதைகள்

அவர்களை ஒன்று திரட்டி ஒரு தொகுப்புக்குள் கொண்டு வந்திருக்கிறேன். அது உங்கள் கைகளில் தவழ்கிறது. உங்கள் வாசிப்பில் அவர்கள் இன்னும் கொஞ்சம் அழகாகக் கூடும் " என அழைப்பு விடுத்துள்ளார். அழகாக்குவது வாசகர் பொறுப்பு. கடமை. 

வெளியீடு 

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் 

9842275622

திங்கள், 11 மார்ச், 2024

நின் நெஞ்சு நேர்பவள் கவிதைத் தொகுப்பு நூல் அறிமுகம் - கவிஞர் இளையவன் சிவா

 நின்நெஞ்சு நேர்பவள் கவிதைத் தொகுப்பு

- இரா.பூபாலன்



பதிப்பு 2023 டிசம்பர்
பக்கம் 72
விலை ரூ 120
வெளியீடு பொள்ளாச்சி இலக்கிய வட்டம் பொள்ளாச்சி
தொடர்புக்கு : 9842275662

பொள்ளாச்சியில் செயல்படும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் என்ற இலக்கிய அமைப்பின் செயலாளர் கொலுசு இலக்கிய இதழின் பொறுப்பாசிரியர் டில்லியில் நடந்த இளம் கவிஞர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்டு கவிதை வாசித்தவர் ஏழு கவிதை நூல்களை வெளியிட்டவர் என்ற சிறப்புக்குரிய
இரா பூபாலன் அவர்களின் எட்டாவது கவிதை தொகுப்பு இது.
அம்மாவாக மனைவியாக மகளாக தோழிகளாக அக்காக்களாக என்னை நானாக்கிய பெண்கள் தான் இந்த கவிதைகள் என்று தனது முன்னுரையில் குறிப்பிடும் பூபாலன் பெண்களுக்கான கவிதைகளை எழுதி தனித் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்.
பெண்ணின் பெருந்தக்க யாவுள என்ற மொழியின் வீரியத்தை வாழும் உயிர்களுக்குள் துடித்திடும் இதயத்தின் தன்னலமற்ற சேவையென உணர்த்திடத் துடிக்கும் வரிகளைக் கொண்டு மங்கையரின் மாண்புகளை மாலையிடுகிறது நின்நெஞ்சு நேர்பவள் கவிதைத் தொகுப்பு.
உலகத்தின் இயக்கத்திற்கு சூரியனின் மையமும் கோள்களின் நிலையற்ற நகர்தலும் காரணங்களாகச் சொல்லப்பட்டாலும் உயிர்களின் நகர்தல் தொடங்கும் புள்ளியும் தொடர்ந்து இயங்கும் புள்ளியும் பெண்ணின் கரங்களுக்குள் ஒளிந்து கிடப்பதை மறுப்பதற்கில்லை. மகளாக மனைவியாக அன்னையாக பாட்டியாக சகோதரியாக என பலவித பரிமாணங்களில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் மகளிரின் வாழ்வின் எல்லாத் தருணங்களையும் கொண்டாடித் தீர்த்திட சுழன்றிடும் கவிதைகளைக் கொண்டு அழகு பார்த்திடும் கவிஞரின் திறமைக்கு வாழ்த்துக்களும் பேரன்பும் உரித்தாகுக.
மனித வாழ்வின் நிலையாமைப் பொழுதுகளை உயிர்ப்பிக்கச் செய்து நகர்ந்திடும் தருணங்களை அர்த்தமுள்ளதாக மாற்றிடும் சக்தியும் பேராற்றலும் பெண்ணின் மனங்களுக்குள் பூத்திடும் அதிசயமாக புதைந்து கிடக்கிறது. இல்லறத்தின் சராசரி இயக்கத்தைக் கூட சிறப்பானதாக மாற்றி இமயத்தைத் தொட்டுவிடும் சாதனைகளை எட்ட வைக்கும் திறனை தங்களுக்குள் தேக்கி வைத்தே வழிநடத்திடும் மங்கையரின் வாழ்வில் வசதிகள் வளராமல் போனாலும் நிம்மதியும் ஆனந்தமும் நிலைகொண்டு நின்றிடும்.
ஆணும் பெண்ணும் சமமென்றே அறிவினை ஊட்டி வளர்த்திட்டாலும் ஏடுகளில் எழுதி உரைத்திட்டாலும் பேச்சிலும் உரையிலும் போற்றி வளர்த்தாலும் நிகழ்வுகளை கவனிக்கையில் சமத்துவத்தின் பாதையில் தடங்கல்கள் நிறைகின்றன. ஆணின் மனதில் இன்றும் கூட பெண்ணின் மனதை வாசிக்க முடியாத பக்கங்கள் நிறைகின்றன. பெண்ணை உடலை வைத்து எடை போடும் மனங்களே மிகுந்து நிற்கின்றன. கல்வியும் சிந்தனையும் இன்னும் சில ஆண்களின் மூளைக்குள் பெண்ணை போகப் பொருளாகப் பயன்படுத்திப் பார்க்கும் எண்ணத்தையே விதைக்கின்றன. விடியும் ஒவ்வொரு நாளும் செய்திகளில் கதறிடும் பெண்ணின் வலிகளை வேதனைகளை பாலியல் சீண்டல்களை வாசித்து விட்டும் கண்டும் காணாது கடந்து போகும் இன்றைய சமூகப் போக்கில் இவற்றைப் பற்றிய பிம்பங்களை உருவாக்கும் பிரச்சனைகளின் மூலத்தை ஆராய்தல் காலத்தின் அவசர அவசியமாகிறது.
கல்வி முறைக்கும் குடும்பத்தில் ஆண் பிள்ளைகளை வளர்த்திடும் விதமும் பெண் பிள்ளைகளை வளர்த்திடும் விதமும் பெண்களைப் பற்றிய சரியான புரிதல்களை விதைத்திடுதல் அவசியம். அதற்கு பெண்ணின் பரிமாணங்களை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. பெண்களின் மீதான புறச்சீண்டல்களை சமூகம் கொடுக்கும் வெளி அழுத்தங்களைப் பற்றி நம்மிடையே விசனப்படாமல் வேதனைப்படாமல் பெண்ணின் அகத்தையும் அதன் வழியே அவர்களின் வாழ்வு முறையையும் அவர்களின் மனங்களுக்குள் மலர்ந்திடும் கனவுகளின் நிகழ்வுகளையும் கவிதைகளாக்கி கல்வெட்டுகளாய் நமக்குள் புகுத்தி விடுகிறார் கவிஞர்.
எல்லா உயிர்களும் இந்த உலகின் இயக்கத்தை அதன் பேராற்றலை முதன்முதலாக அவரவர் தாயின் விழிகளின் வழியே தான் உணரத் துவங்குகின்றன. அவற்றின் வளர்ச்சியும் அவரவர் தாயின் நகர்தலுக்கேற்ப நினைவுகளை உருவாக்கி நிலை கொள்கின்றன. தாய்மையைக் கொண்டாட விரும்பாத மனங்கள் கிடையாது. ஆனால் தாய்மையின் மனமோ தன்னைத்தானே கொண்டாடி மகிழ விரும்பாது. தனக்கான வாசனையைத் தானே உணராத மலரின் புன்னகை காண்போருக்கு மகிழ்வை பிறப்பிப்பதைப் போல தனக்கான விருப்பங்களைப் புதைத்துக் கொண்டு தன்னை நம்பி நின்றிடும் குடும்பத்தின் உயர்வைக் கொண்டாடிடும் உள்ளம் தாய்மையன்றி வேறொன்றுமில்லை. அத்தகைய தாய்மையின் கரங்களைக் கைவிடாது பிடித்துக் கொள்ளும் உயிர்கள் தங்களின் வாழ்வை சிறப்பான உயரத்துக்கு எடுத்துச் சென்று விடுகின்றன.
குடும்பத்தின் உயர்வில் அன்றாட நிகழ்வுகள் இடைவிடாது நடந்தால் மட்டுமே இயக்கம் சீரான ஒன்றாக மாறி இன்பத்தைக் கொடுக்கும். இல்லறத்தை நல்லறமாக்கும் எல்லா செயல்களிலும் ஆணின் பங்கு இருக்கிறதா என்பதை பட்டியலிடுகையில் விடுபடுதல் வரலாம். ஆனால் பெண்களின் நுழைவுகள் இல்லாது பிரபஞ்சமும் அசைவதில்லை என்பதைப் போன்றே குடும்பத்தின் செயல்களும் அமைந்து விடுகின்றன.
சமையலறை என்னும் ஒற்றை அறைக்குள் சிறைப்பட்டுப் போயினும் தன்னைச் சுற்றியே வீட்டின் அசைவுகள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் தாய்மையின் நெஞ்சம் போற்றப்பட வேண்டும் பாராட்டப்பட வேண்டும். ஆனால் நம்மை நாமே கவனித்துக் கொள்ளும் உலகத்தில் இருந்து விடுபட்டு வேகமான ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கையில் நின்று நிதானித்து கவனித்துச் சொல்லும் கனிவான சொற்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
நின் நெஞ்சு நேர்பவள் நூலின் வழியே தாய்மையின் தவத்தையும் தனிச்சிறப்பையும் பேரன்பினாலும் பெரு மகிழ்வினாலும் எழுதிப் பார்த்து நிறைவு கொள்கிறது கவிஞரின் மனம். தவறு செய்யும் மனங்களை மன்னிப்பதில் தொடங்கும் பெண்களின் அன்பு வீட்டிலும் பெரியவர்களின் தவறுகளை பெரிது படுத்தாது மன்னித்தும் மறந்தும் கடந்து விடுகிறது..

"அம்மாவும் ஒரு லுங்கிச் சதுரம் தான் அப்பாவுடைய
என்னுடைய
இன்ன பிற ஆண்களுடைய
கறைகளை
மனதின் எரவானத்தில்
யாரும் பாராமல்
ஒளித்து வைத்தே இருக்கிறாள் "

என்பதான கவிதையின் வழியே தனக்கான வலிகளை வேதனைகளை குடும்பத்தில் பெரிதாக்கிடாமல் தாங்கிக் கொள்ளும் தாய் தான் எல்லா ஆண்களின் நடத்தைக்கும் அடித்தளம் இடுகிறாள்.
பொம்மைகள் மீதான நேசமும் விளையாட்டுகள் மீதான பிரியமும் வளர்ப்பு உயிரிகள் மீதான அக்கறையும் பெண் குழந்தைகளுக்கு இயல்பாகவே ஆனந்தத்தை உருவாக்கி விடுகின்றன தங்க மீன்களை வளர்க்கும் குழந்தை நாளடைவில் மீன் தொட்டிக்குள் நீந்தியுடியே தனது வாழ்வை நகர்த்துகிறது என்பதை வாசிக்கையில் இளமைப் பருவத்தின் கவலையற்ற பொழுதுக்குள் நாமும் நுழைந்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்தை விதைக்கிறது.
" எந்த ஒன்றிலும்
மிச்சமாவதை
விரும்பத்துவங்குவாள்
தனக்கென எதுவும்
தயாரிக்காதவள் "

என்ற வரிகள் நமக்குச் சொல்லும் பாடத்தை இன்றும் எல்லோர் இல்லங்களிலும் காண முடியும். விரும்பி அன்பாலும் பாசத்தாலும் சுவைபட தயாரித்த உணவைக்கூட வீட்டில் எல்லோருக்கும் பரிமாறி விட்டு மிச்சத்தை மட்டுமே ருசி பார்க்கும் எத்தனையோ பெண்கள் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இங்கே உணவு மட்டுமல்ல தனக்கான கனவுகள் தனக்கான கட்டமைப்புகள் என எதிலும் பெண்கள் தனியான அட்டவணையை அவ்வளவு எளிதில் நீட்டி விடுவதில்லை.
பொதுவெளியிலும் கையறு நிலையிலும் தவித்துக் கிடக்கும் உயிர்கள் மீதான பெண்களின் மனப்பார்வையை காட்சிப்படுத்தி இருக்கும் கவிதைகளில் உலகத்தின் மீதான பச்சையம் நிரம்பி வழிகிறது உயிர்களின் மீதான கருணையும் கை நீட்டலும் நீண்டு நெகிழ்கிறது. மருந்து வாங்கப் போதுமான பணம் இல்லாத நிலையில் கிழவி அறியாமலும் மொத்த மருந்துகளையும் கொடுத்துவிட்டு இடிக்கும் கணக்குக்கும் பிடிக்கும் சம்பளப் பணத்திற்கும் கவலைப்படாத பெண்ணின் மனதில் விளையும் அன்பே அவளுக்கான வலி நிவாரணியாக மாறிவிடக் கூடும் என்பதை ரசனையுடன் விளம்புகிறது வலி நிவாரணி கவிதை.
ஆசைகளின் கோட்டைக்குள் தனக்கு பிடித்தவற்றோடு உறவாடி விளையாடும் பெண்களின் பருவத்தில் எல்லா நாளும் சிறப்பாய் அமைவதில்லை. காலமும் பருவமும் பெண்ணை குடும்ப அமைப்பிற்குள் நுழைத்து விடுகையில் தனக்கான பிடித்தமானவைகளை தொலைத்து விட்டு ஓட வேண்டிய கட்டாயத்தில் மாட்டிக் கொள்ளும் நிலையின் கையறு கணத்தை பதிவு செய்கிறது டெய்ரி மில்க்குகளை அடுக்குபவள் கவிதை.
மகளுடனான உரையாடல்களை காட்சிப்படுத்தும் பல கவிதைகளில் சூழலியில் பார்வையும் இயற்கை வளத்தின் மீதான கவிஞரின் நேசமும் சிறப்புற வெளிப்படுகின்றன. மலைகளை காடுகளை பாதுகாக்க வேண்டிய அமைப்புகளையும் அதில் பொதிந்துள்ள நுண் அரசியலையும் பகடி செய்தும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
இயற்கையும் பெண்ணும் சற்றொப்ப சமமானவர்கள் எனலாம். இருவருமே தனது வாழ்வை பிறருக்காக அமைத்துக் கொடுப்பதிலும் பிறரின் நலனுக்காக இடையறாது உதவுவதிலும் உழைப்பதிலும் சிறப்பானவர்களே. அதனால் தான் கவிஞரும் பெண்மையைப் போற்றும் எண்ணங்களுக்குள் இயற்கை நலத்தையும் பேணிக் காக்க அறைகூவல் விடுக்கிறார்.
"எல்லா காலங்களிலும்
மந்திரங்களால்
எங்களை காக்கிறவள்
தனக்கென ஒரு போதும்
சுழற்றியதில்லை
தன் மந்திரக்கோலை"

என்ற கவிதை வரிகளே இந்த நூலின் ஒட்டுமொத்த ஆழ்மன எண்ணத்தை விளக்கி விடுகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவரும் இன்றைய சூழலில் பெண் குழந்தைகளைப் பெற்றோரின் அச்சமும் பயமும் அதிகரித்து வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விடுமோ என்ற காலகட்டத்தில் பெண்கள் மீதான புரிதலையும் அன்பையும் நமக்குள் விதைக்கும் நின் நெஞ்சு நேர்பவள் எல்லோர் மனதிற்குள்ளும் நல்லாட்சி புரிவாள் என்பது நிச்சயம்.

- நூல் அறிமுகம் கவிஞர் இளையவன் சிவா



நின் நெஞ்சு நேர்பவள் கவிதை நூலுக்கு கவிஞர் ஜி.சிவக்குமார் நூல் அறிமுக உரை

எனது நின் நெஞ்சு நேர்பவள் கவிதை நூலுக்கு எழுத்தாளர் ஜி.சிவக்குமார் அவர்கள் எழுதிய நூல் அறிமுக உரையை இங்கு பகிர்கிறேன்... 

நின் நெஞ்சு நேர்பவள்


கவிதைகள்


- இரா.பூபாலன்

பொள்ளாச்சி இலக்கிய வட்ட வெளியீடு
பக்கங்கள் 72
விலை ரூ120
தொடர்புக்கு 9842275662

குளு குளு பொய்கள் சொல்லி எனை வெல்வாய். அது தெரிந்த போதும் அன்பே, மனம் அதையேதான் எதிர்பார்க்கும் என்று தாமரையின் திரைப் பாடல் நினைவில் உள்ளதா? பெண்களுக்கு, அது பொய்யாக இருந்தாலும், தன் அழகைப் புகழும் ஆணைப் பிடிக்கும்.
பெண்களுக்கு தன் அழகைப் புகழும் ஆணை விட, தன் வலியை உணர்ந்தவனை ரொம்பவும் பிடிக்கும்.
கவிஞர் இரா.பூபாலனின், நின் நெஞ்சு நேர்பவள் என்கிற இந்தத் தொகுப்பு அந்த வகையில் பெண்களுக்கும்,பெண்களின் வலிகளை உணர்ந்த ஆண்களுக்கும் மிக மிக நெருக்கமான ஒன்றாக இருக்கும்
அப்பாவின் குளியலறை எரவானத்தில் பத்திரப்படுத்தி இருந்த அப்பாவின் பழைய லுங்கிச் சதுரங்கள்,இன்று பஞ்சடைக்கப்பட்ட பாதுகாப்பான நாப்கின்களாக மாறியிருக்கலாம்.ஆனால்,வலி மாற்றமின்றி அப்படியேதானே தொடர்கிறது.அந்தத் துணிகளில் படாமல் போன செந்துளிகளில் ஒரு துளி நான் என்று சொல்லும் பூபால வார்த்தைகளை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்?
குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளுக்காக தன் கைவளை ஒன்றை மந்திரக்கோலாக மாற்றி, எதை எதையோ தந்து, தனக்கென ஒருபோதும் மந்திரக் கோலை சுழற்றிக் கொள்ளாத, விளையாட்டுகளிலும்,வாழ்விலும் தோற்றுத் தோற்று அப்பாவையும், நம்மையும் ஆளாக்குகிற அம்மாவைப் பற்றி ஆயிரக்கணக்கான கவிதைகள் எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. மழையைப் போலவே, அவையும் ஒரு போதும் வாசிக்கச் சலிப்பதில்லை.
எந்த ஒன்றிலும்
மிச்சமாவதை
விரும்ப துவங்குவாள்
தனக்கென எதுவும்
தயாரிக்காதவள்
இது அம்மா.
கோபமென்றால்
எதையாவது உருட்டுவாள்
நிலம் அதிர நடப்பாள்
முந்தைய நாள்
விருப்பப்பட்டு கேட்ட உணவை
சமைத்து வைத்துவிட்டு
இது மனைவி.
நீங்கள் சொல்வது உண்மைதான் பூபாலன்.தாயோ,மனைவியோ. பெண்கள் அப்படித்தான். அவர்களால் அப்படித்தான் இருக்க முடியும்.
உடற் கூராய்வு அறைக்கு வெளியே அப்பாவுக்கு வலிக்காம ஊசி போடுங்க என்று சொல்கிற சிறு பெண், பழைய நெகிழிப் போத்தலொன்றில், நிகழ்காலத்தைப் பூக்கும் செடி வளர்ப்பவள், பணப் பற்றாக்குறையால் இரண்டு நாளைக்கு போதும் என சொன்ன முதுமகளிடம் தனது சம்பளத்தில் பிடிக்கப்பட போகும் தொகையும் சேர்த்து மொத்த மருந்துகளையும் தரும் மருந்து விற்பனை கடைப் பணிப் பெண், மழையை கைகளில் ஏந்தி செடி மீது தெளிக்கும் தொடர் விளையாட்டை அத்தனை மகிழ்ச்சியோடு விளையாடுப்வள், இன்னும் குழந்தை இல்லையா என்ற கேள்வியை அப்புறம் வேறு என்ன என்று சிரித்த திசை மாற்றுகிறவள், ஒரு நிறை குப்பி தூக்க மாத்திரைகளை விழுங்குவதற்கு முன் கணம் மேலெழும்பி வந்த ஒரு முகத்தை முதலில் விழுங்குகிறவள், சில நாட்கள் உடனிருந்து ஒரு கடும் கோடை காலத்தை ஆணுக்கு பரிசளித்து சென்றவள்,
இப்படி கவிதைகளில் இரத்தமும் சதையுமாய் உயிர்ப்போடு நம் முன் அசையும் எத்தனை எத்தனை பெண்கள்.
இத்தனை பெண்களால் சூழப்பட்டிருக்கும் பூபாலன் அதிர்ஷ்டசாலி பூபாலனைச் சூழ்ந்திருக்கும் பெண்களும் அதிர்ஷ்டசாலிகள் தான்
அப்பாவுக்கு மகளுக்குமான உரையாடல்களாய் அமைந்த கவிதைகள் மிக அழகாக இருக்கின்றன.இந்த கவிதையைப் பாருங்கள்
மலைக் கோயில்
எப்பொழுதிருந்து இருக்கிறது அப்பா?
நாம் பிறப்பதற்கு முன்பிருந்து..
மலை எப்போதிருந்து
இருக்கிறது அப்பா?
கடவுள் பிறப்பதற்கு
முன்பிருந்து.
இப்படி ஒரு தகப்பனைப் பெற்ற குழந்தை மிகத் தெளிவாக மிகச் சரியாக வளரும்.
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும்
சாலையில் கடக்கும்
ஏதோ ஒரு புல்லட் சத்தத்துக்கும்
சேலையைச் சரி செய்து கொள்வாள்
கண்ணாடியை ஒரு முறை
பார்த்துக் கொள்வாள்
நாக்கைக் கடித்துக் கொண்டு
நிகழ் காலத்திற்கு மீள்வாள்.
இந்தச் சிறு கவிதையில் விரிகிற பெருங் கதையை நீங்களும் உணர்கிறீர்கள் தானே?
முழு ஆடையும் உடுத்தி
முகமெங்கும் வண்ணம் தீட்டி
சலங்கைகள் அதிர
மேடையில் ஏறும் கணத்தில்தான்
சுண்டியிழுக்கிறது வயிறு
நாட் கணக்கு பிசகி
எதிர்பாராத கணத்தில் பொங்கத் துவங்கி விட்டது
மாதாந்திரச் சிவப்பு
என்று துவங்குகிற,குங்குமத்தில் சிரிக்கும் காளி, கவிதையை உயிர் நடுங்காமல் உங்களால் வாசித்துக் கடந்து விட முடியுமா?
சொல்லாமல் வந்துவிட்ட விருந்தாளியாய் குருதி பெருகும் போதும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட மேடையில், துளிச்சிவப்பும் மேடையில் தெறித்திடக் கூடாது என்ற அச்சத்துடன் அவள் ஆடித்தானே தீர வேண்டியிருக்கிறது. இது மேடையில் ஆடுபவர்களுக்கு மட்டும் தானா? வீட்டிலும், அலுவலகத்திலும் இருக்கும் பெண்களுக்குமானதுதானே?
தொகுப்பின் கவிதைகளை,இது நாள் வரை என் வாழ்வில் நிறைந்திருந்த,நிறைந்திருக்கும் பெண்களையெல்லாம் நினைத்தபடிதான் வாசித்தேன்.தொகுப்பை வாசிக்கிற யாரும் அதைத்தான் செய்வார்கள்.
எங்கிருந்தோ ஒரு பெண்ணின் வழியாகத்தான் இங்கு வந்தோம். அவளால்தான் ஆளானோம்.அம்மாவென்றும்,பாட்டியென்றும், அத்தையென்றும்,சகோதரியென்றும், தோழிகள் என்றும், காதலியென்றும், மனைவியென்றும், பிள்ளைகளென்றும், பேத்திகளென்றும், பெண்ணோடு தோன்றி, பெண்ணோடு வாழும் இந்த வாழ்வில், நம்மில் எத்தனை பேர் பெண்களுக்கு அவர்கள் தந்ததில் ஒரு சிறு துளியையாவது திருப்பித் தந்திருக்கிறோம்? இந்த தொகுப்பின் வழி இரா. பூபாலன் அதை நிறைவாகச் செய்திருக்கிறார்.

நூல் அறிமுகம் : கவிஞர் ஜி.சிவக்குமார்




இந்த நூல் அறிமுகம் புக்டே இதழிலும் வெளியானது..

வாசிக்க :