வெள்ளி, 21 ஜூன், 2019

மகள் எனும் தாய்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாரதி ...தனது உணவின்
முதல் கவளத்தை
எப்போதும் எனக்கு
ஊட்டி விட்டுப் பின்
உண்பாள்
ஆதலினால் மகள் என் தாய்தப்பும் தவறுமான
வாழ்தலில்
எனது எல்லாப் பிழைகளையும்
ஒரு புன்னகையால்
நேர் கொள்வாள்


சிநேகிதனோடு விளையாடுவது போல
விளையாடி
ஆசிரியனிடம் கற்றுக் கொள்வது போல
கற்றுக்கொண்டு
மாணவனுக்குச் சொல்லித் தருவது போல
கற்றுத் தந்து
அப்பாவை அவள் அவ்வப்போது
உருமாற்றிக் கொள்வாள்கூகுளில் தேடிப் பார்
என்று சொன்ன சிநேகிதிக்கு
அப்பா தான் என் கூகுள்
என்று பதில் சொல்லி
என்னிடம் கேட்கிறாள் அந்தக் கேள்வியை
நான் புதிது புதிதாய்ப் பிறக்கிறேன்இந்த வாழ்க்கையை
ஏன் வாழ்கிறாய் என்று கேட்கப்பட்ட
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு காரணம் இருந்திருக்கிறது
இனி எப்போதும்
என் வாழ்வின் காரணமாக
அவள் இருப்பாள்எனக்கு மகளாக இந்த நாளின் ஒரு
பின் மாலைப் பொழுதில் பிறந்தாள்
அப்போது தெரியவில்லை
நானும் அப்போது தான்
பிறந்திருக்கிறேன் என்றுயாருக்கு யாராக இருந்தாலும்
மகளுக்குக் கதாநாயகனாக
இருத்தலின் காரணமாகவே
இன்னும் நல்லவனாக்கிக் கொண்டிருக்கிறேன்
என்னைஉனது ஒரு பொம்மையாக
என்னை
உறைய வைத்து விடாதா
இந்தக் காலம் ?ஒரு பிறந்த நாளை
அழகாக்க
ஒரு முத்தம் போதும்
என்பது எவ்வளவு அழகானதுஒவ்வொரு முறையும்
தனது
குறும்புகளால்
இந்த ஆயுளை நீட்டித்து விட முடிகிறது
மகளால்புத்தாடை
இனிப்புகள்
நண்பர்கள்
பரிசுகள்
யாவற்றையும் தாண்டி
கோழிக் குஞ்சுக்கு
வழக்கமான இரையை
சிதறவிட்டுவிட்டுப் பள்ளிக்குப் போகிறவள்
பிறந்தநாளில் இன்னுமொரு முறை மலர்கிறாள்