திங்கள், 20 ஏப்ரல், 2015

பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் இருபத்தி நான்காவது சந்திப்பு

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இருபத்தி நான்காவது இலக்கிய சந்திப்பு சென்ற ஞாயிற்றுக் கிழமை(19.04.2015)  பாலக்காடு சாலை, நகரமன்ற ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

எப்போதும் போல படித்ததில் பிடித்தது என்பது முதல் அமர்வு. வாசகர்கள் யார் வேண்டுமானாலும் தாங்கள் படித்த கதை, கவிதை சம்பவங்கள் எது குறித்தும் பேசலாம். அதில், ச.தி.செந்தில்குமார் அவர்கள் இளஞ்சேரல் அவர்களின் கருட கம்பம் நாவல் வாசிப்பனுபவத்தை சிலாகித்துப் பேசினார். தான் வாசித்த நாவல்களில் மிக முக்கியமானதானதாக் குறிப்பிட்டார். கனகீஸ்வரி எனது கவிதைத் தொகுப்பான பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு நூலிலிருந்து தான் ரசித்த இரண்டு கவிதைகளைக் குறிப்பிட்டுப் பேசினார். பின்னர் எழுத்தாளர் ஜெயகாந்தனின் நினைவலைகளில் சி.நா.மலையப்பன், பொள்ளாச்சி அபி , அம்சப்ரியா ஆகியோர் பேசினர்.பின்னர் நிகழ்ச்சி எனது வரவேற்புரையுடன் தொடங்கியது. எழுத்தாளர் இரா.தட்சிணாமூர்த்தி அவர்கள் எழுதிய வகுப்பறைக்கு வெளியே என்ற நூலை புன்னகை ஜெயக்குமார் அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். ஜெயக்குமார் ஆசிரியர் என்பதால் அந்தக் கட்டுரைகளின் தாக்கம் அவரது பேச்சில் வெளிப்பட்டது. ஒரு ஆசிரியரின் மிக முக்கியக் கடமை மாணவனுக்கு வகுப்பறைக்கு வெளியே என்ன கற்பிக்கிறார் என்பதில் இருக்கிறது என்று பேசியது அருமை.

கவிஞர் கடங்கநேரியான் எழுதிய " யாவும் சமீபத்திருக்கிறது" என்ற கவிதை நூலை மழைக்காதலன் அவர்கள் அறிமுகம் செய்து வைத்துப்பேசினார். மழைக்காதலன் சில கவிதைகளைக் குறிப்பிட்டு பாராட்டவும் சில கவிதைகளை விமர்சித்தும் பேசினார். கடங்கநேரியானிடம் இன்னும் எதிர்பார்ப்பதாகக் கூறி முடித்தார்.

திணை காலாண்டிதழை க.அம்சப்ரியா அறிமுகம் செய்தார். சிற்றிதழ்களின் தேவை, அவற்றின் நிலை குறித்தும் தனது சிற்றிதழ் அனுபவங்கள் குறித்தும் பேசினார். திணை ஏழாவது இதழின் கதைகள், கட்டுரைகள் , தலையங்கம் , கவிதைகள் அனைத்தையும் குறிப்பிட்டுப் பேசினார்.

நட.சிவக்குமார் தனது உரையில் போலந்து நாட்டுக் கதை உட்பட மூன்று நல்ல சிறுகதைகளை சுவை படச் சொல்லி பேசியது சிறப்பாக அமைந்தது.

கவிஞர் கலைவாணன் எழுதிய " ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் " என்ற நூலை நாணற்காடன் அறிமுகம் செய்தார். நாணற்காடன் தனது உரையில் " நாவிதர்கள் போன்ற விளிம்பு நிலை மக்களின் வாழ்வை இந்த நூல் படம்பிடித்துக் காட்டுகிறது. இந்தக் கவிதைகளைப் படித்து முடிக்கும் போது நமக்கு நாவிதர்கள் மேல் பரிதாபம் வரவில்லை மாறாக நமக்கு குற்ற உணர்ச்சி மேலோங்குகிறது. அதுவே இந்த நூலின் வெற்றியாகும். “என்றார்.

கவிஞர் கலைவாணன் பேசுகையில் முன்பு பண்டுவம் ( மருத்துவம்), முண்டிதம்(அழகுக்கலை),இங்கிதம்(சடங்குகள்),சங்கீதம்(இசை) என நால்விதம் தெரிந்தவன் நாவிதன். இன்று கையில் சவரக்கத்தியோடும், வெறும் சடங்காற்றுபவனாகவும்நின்று கொண்டிருப்பதன் வலி தான் வார்த்தைகளாகி இந்தக் கவிதைகளை எழுதியிருக்கிறேன். ஆண்டாண்டுகளாக அடக்குமுறைக்கு ஆட்பட்ட ஒரு இனத்தின் வலிகளையே நான் பதிவு செய்திருக்கிறேன் என்று பேசினார்.

எழுத்தாளர் இமையம் எழுதிய சிறுகதைத் தொகுப்பான சாவு சோறு நூலை பேராசிரியர் ராம்ராஜ் அறிமுகம் செய்து பேசினார். ராம்ராஜ் ஒரு நேர்த்தியான  கதை சொல்லி. அவரிடம் கதை கேட்கும் போது நாமும் குழந்தையாகிவிடுவோம் அல்லது நம்மை அவ்வாறாக உணர்ந்தே அவர் கதைகளைச் சொல்வார். இமையத்தின் எழுத்துகள் எடிட்டிங் உட்பட அனைத்து அழகுபடுத்தலுக்கும் உட்பட்டு ராம்ராஜின் வார்த்தைகளாக வரும்போது கதைக்குள் நாம் நம்மை மறந்து உலவுகின்றோம்.


நிகழ்ச்சியில் தற்காலக் கல்வி முறையில் மாற்ற வேண்டியவை என்ற தலைப்பில் மாணவர்கள், வாசகர்கள் பேசி விவாதித்தனர்.

மேலும், மாணவர்கள், கவிஞர்கள் கலந்து கொண்ட கவியரங்கம் சிறப்பாக நடந்தது. கவிஞர்கள் கனகீஸ்வரி, செளவி, உதயசங்கர்,மெளனம் ரமேசு,அபூர்வ ஹரணி, நிவேதா,சிதம்பரநாதன் அனைவரும் கவிதை வாசித்தனர்.

கவிஞர் அம்சப்ரியாவின் நன்றியுரையோடு விழா இனிது  முடிந்தது.

பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் செய்தி மடல் வெளியிடப்பட்டது. உங்கள் பார்வைக்கு ..

https://www.dropbox.com/s/kwpz7poqbsctz9i/Seythimadal%2016.pdf?dl=0


அடுத்த நிகழ்வு முழுநாள் நிகழ்வாக, குழந்தைகள் கலைக் கொண்டாட்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மே 17.. தயாராக வேண்டும்.. 

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

அலோ யார் பேசறது - செல்போன் படுத்தும் பாடு


போன வாரத்துல சாயங்காலம் நண்பனொருவன் அழைத்தான், எடுத்துப் பேசினேன் " என்னடா, ரெண்டு ரிங் லயே எடுக்கற , போன் கையிலயே வெச்சுட்டு இருக்கியா " னு கேட்டேன்.

" ஏண்டா, மிஸ்டு கால் விடலாம்னு பாத்தியா, அட்டென் பண்ணிட்டனா " எனக் கேட்டேன். " இல்லை வேலை இல்லாம சும்மா இருக்கியோ அதான் உடனே எடுத்துட்ட" னு கேட்டான். கடுப்பாயிட்டேன்.

இன்னிக்கு காலைல கூப்பிட்டான், அட்டென் பண்ணலயே , கடைசி ரிங் ல எடுத்தேன். எடுத்த உடனே " என்னடா ரொம்ப பிஸி யா, இத்தன நேரம் ரிங் போகுது எடுக்க மாட்டிங்கற" னு கேட்டான். வந்துச்சு பாருங்க கோபம்,

நல்ல வார்த்தையில நாலு திட்டு திட்டினேன். மக்களே அது என்ன போன் உடனே எடுத்தா வெட்டியா இருக்கேன்னு கேக்கறீங்க, லேட்டா எடுத்தா ரொம்ப பிசியா இருக்கேன் னு கேக்கறீங்க. எப்ப தான் எடுக்கறது..?

இன்னொரு கூத்து. போன் பண்ணினா நேரடியா மேட்டருக்கு வரதில்ல, எப்படி இருக்கீங்க னு கூட கேக்கறதில்ல. முதல் கேள்வி " எங்க இருக்க" ஆமா அத தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க அய்யா. 

இன்னொரு நல்ல மனுசன் இருக்காரு. பேசிட்டு இருக்கறப்பவே வச்சிடுவாரு. ரெண்டு மூணு முறை கண்டுக்கல. ஒரு முறை கேட்டுட்டேன். " நீ தான் ஓ.கே னு சொன்ன அதான் வச்சுட்டேன் னு சொன்னார் " அப்ப தான் புரிஞ்சுது. எப்ப ஓ.கே னு சொன்னாலும் வச்சுடுவாரு.
" நாளைக்கு வரயா பூபால்"
'ஓ.கே"
டொக். 
வச்சுட்டாரு.. அடேய் அடேய் எங்க வரணும் எதுக்கு வரணும் சொல்லுங்கடா. 
அத அப்புறமா போன் பண்ணி மறுபடி கேக்கணும்.

தெரிஞ்சவங்களே இப்படினா ராங் கால் அன்பர்கள் சொல்ல வேண்டுமா,

ஒரு நாள் ஒருத்தர் போன் பண்ணினாரு " நல்லா இருக்கீங்களா" னு பண்பா கேட்டாரு. நானும் " நல்லா இருக்கேன்" னு சொல்லிட்டு யாருங்க னு கேக்கறக்குள்ள " நம்ம ஊர்ல மழைங்களா" னு கேட்டார். நானும் " ஆமாங்க, ஒரு வாரமா நல்ல மழை" னு சொன்னேன். சொல்லச் சொல்ல " அப்புறம் ஏண்டா தண்ணி இல்லனு புலம்புனியாமா கிணத்துல " னு சொன்னாரு. நான் அப்புறம் கேட்டேன் " ஏங்க யாருங்க, நான் பூபாலனுங்க பொள்ளாச்சிங்க" னு சொன்னேன்.
" அத மொதல்லயே சொல்லித் தொலைக்க வேண்டியது தான " னு திட்டிட்டு வச்சுட்டாரு. " எங்கீங்ணா சொல்ல விட்டீங்க..?

இன்னொரு நாள் ஒருத்தர் போன் பண்ணினாரு " அரிசிக் கடைங்களாண்ணா"
" இல்லைங்க ராங் நம்பருங்க"
மறுபடி போன் " அரிசிக் கடைங்களாண்ணா" 
" இல்லைங்க ராங் நம்பருங்க. மறுபடி எனக்கே கூப்பிட்டுட்டீங்க" என்றேன்.
நாலு முறை இப்படியே பண்ணினார். கடுப்பாயிடுச்சு. ஐந்தாவது முறை

" அரிசிக் கடைங்களாண்ணா"
" ஆமா, சொல்லுங்க"
" எத்தனை மூட்டை போடறதுணா, 20 மூட்டை பொன்னி போட்டுடலாமா"
" சரி போடுங்க" னு சொல்லிட்டு வச்சுட்டேன் பிறகு வரவே இல்ல.

ஒருநாள் ராத்திரி 2 மணி இருக்கும் போன் வந்துச்சு : " திண்டுக்கல்லுல அப்புச்சி ஒருத்தர் தவறிட்டாருனு சித்தப்பா போன் பண்ணியிருக்கார். அப்பா, மாமனார் ரெண்டு பேர்கிட்டயும் சொல்லிடுனு சொன்னார். சரினு சொல்லிட்டு தூங்கிட்டேன். எதோ கனவு மாதிரி இருந்துச்சு. காலைல வழக்கம் போல வேலைக்குப் போயிட்டேன். 11 மணிக்கு திட்டிர்னு ஞாபகம் வந்துச்சு. அவசர அவசரமா போன் பண்ணி அப்பாவுக்கும் மாமனாருக்கும் சொன்னேன். அடிச்சு புடிச்சு கிளம்பிப் போனாங்க.

ஒரு நாள் ஒரு போன் வந்துச்சு எடுத்த எடுப்புலயே ஒரு பொண்ணு இந்தியில எதோ பேசி அழுவுது. நான் ஹலோ ஹலோ னு சொல்றேன் எதுமே கேக்கல. அது பாட்டுக்கு கதறி அழுவுது. எனக்கும் அழுவாச்சியா வந்துச்சு.எனக்கு இந்தி தெரியல. கடைசியா 5 நிமிஷம் கழிச்சு ராங் நம்பர் னு மட்டும் சொல்லிட்டு வச்சுட்டேன். அன்னிக்கு ராத்திரி முழுக்க தூக்கம் வரல. எனக்கு மட்டும் தான் இப்படியா..?

மனைவி, தோழிகளின் தொல்லை வேற மாதிரி. விடிய விடிய ஆன்லைன்லயே இருக்கீங்க ஆனா வாட்ஸ் அப், மெசஞ்சர் எதுல அனுப்பினாலும் ரிப்ளை பண்ண மாட்டீங்கறீங்க என சலித்துக் கொள்வார்கள். நெட் ஆன்ல யே இருக்கும் அதுனால ஆன்லைன்னு வருதுனு சொன்னாலும் கேக்க மாட்டாங்க. கோவிலுக்குள்ள, மருத்துவமனைக்குள்ள, எதாவது கூட்டங்கள்ல, பள்ளி கல்லூரிகளுக்குள் போகும் போது எல்லாம் நான் எனது அலைபேசியை அமைதி அல்லது அதிர்வு நிலைக்கு மாற்றிவிடுவது தான் வழக்கம். அது தான் நல்ல பழக்கமும் கூட. ஆனா எழவு வீட்டுல கூட " ஏய் செல்ஃபி புள்ள கிவ் மீ உம்மா " என செல்போன் கதறும் போது செத்தவன் கூட எந்திரிச்சு உக்காந்து அழுவான். இப்படி பண்றீங்களேமா.

ஸ்மார்ட் போன் வச்சிருந்தா பத்தாது மக்கா, ஸ்மார்ட்டா உபயோகிக்கணும், ஸ்மார்ட்டா நடந்துக்கணும்.

சில வருடங்களுக்கு முன்னால் விகடனில் வெளியான எனது கவிதையொன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வளவுதான் ...

புதன், 8 ஏப்ரல், 2015

மரக்கட்டைகளினும் மலிவானது மனித உயிர்

செய்தி : செம்மரக்கட்டை கடத்தியதாக 20 தமிழர்களை ஆந்திர காவல்துறையினர் திருப்பதி வனப்பகுதியில் சுட்டுக் கொன்று விட்டனர்செம்மரக்கட்டை கடத்தினதுக்கு என்கெளன்டரில் இருபது உயிரை எடுக்கும் அளவுக்கு அரக்கத்தனமான சூழலில்தானா வாழ்கிறோம்.?

தீக்காயங்கள் தெளிவாகப் புகைப்படத்தில் தெரிகின்றன ,  இவர்களை முன்னமே கைது செய்து கைகள் கட்டப்பட்டு அழைத்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. ஆக இது திட்டமிட்ட கொலையா.? பதறுகிறது மனம்.

என்னதான் கடத்தலில் ஈடுபட்டிருந்தாலும் விசாரணையெல்லாம் இல்லாமல், யாரிடமும் உத்தரவு வாங்காமல் எடுத்த எடுப்பிலேயே டொப் டொப்பென்று சுட்டுவிட முடியுமா. முழுப்பூசணியை சோற்றில் ஏனடா மறைக்கீறீர்கள்.

கொலைபாதகம் செய்பவனுக்கே மரண தண்டனை வேண்டாம்னு போராடிட்டு இருக்கும் சூழலில் இருபது உயிர்களை ஈவு இரக்கமே இல்லாம எடுக்கும் உரிமையை இவர்களுக்கு யார் தருவது.

செம்மரக்கட்டைகளைக் கடத்துவது குற்றம் தான். ஆனால் அதற்கு இதுதான் தண்டனையா. நாட்டில் போதை கடத்தல் , ஆள் கடத்தல், உடல் உறுப்புகள் கடத்தல் என கோடிகளில் புழங்கும் பெரிய முதலைகளை விடுத்து அன்றாடம் காய்ச்சிகளின் மீது தானா உங்கள் வன்மம் வெளிப்பட வேண்டும்.
இது ஒன்றும் ஆரோக்கியமான சூழலாக இல்லை. அச்சமூட்டும் ஒரு சூழலில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உண்மையில் நம் ஒவ்வொருவரின் குரல்வளையை நோக்கியும் குறி பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது ஒரு துப்பாக்கி. எப்போது எந்தக் காரணத்துக்காக நாம் சுட்டு வீழ்த்தப்படுவோம் என்பது தெரியாது.

இலங்கையில் இனப்படுகொலையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் உயிர்கள் பறிக்கப்பட்டுவிட்டன. இங்கும் அந்த வன்கரங்கள் தமிழர்களின் மீது பாய்வது மகாக் கொடுமை. தமிழர்கள் என்று மட்டுமில்லை. இது ஒரு மிகப்பெரிய மனித உரிமை மீறல்.

மனித உரிமை அமைப்புகள், தமிழ் அமைப்புகள் என அனைவரும் ஒன்று கூட வேண்டிய சமயம். முக்கியமாக ஆந்திராவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பறந்து பறந்து நடிக்கும் திரைத்துறையினர் வாய்திறப்பார்களா பார்க்கலாம். ( எல்லாத்துக்கும் இவர்களிடம் கருத்து கேட்பதும் தப்பு தான்)

ஜூஸ் குடிக்கறதுக்குக் கூட விஞ்ஞானி மாதிரி யோசிப்போம்


உங்ககிட்ட ஒரு ரகசியம் சொல்றேன்.... நீங்களும் பின்பற்றலாம்

வாரா வாரம் சனி மற்றும் ஞாயிறுகளில் எங்க ஊர்ல இருக்கற ஜூஸ் கடைல நானும் பாரதியும் ஜூஸ் குடிப்போம். அதுல ஒரு ட்ரிக் இருக்கு, எப்பவும் ஜூஸ் வாங்கினா பார்சல் தான் வாங்குவோம். காரணம், பார்சல் ஒரு ஜூஸ் வாங்கினா ரெண்டரை டம்ளர் வரும். பார்சல் வாங்கிட்டு பாரதியின் நடன வகுப்புக்கு போற வழில குடிச்சுடுவோம். சாதாரணமா ஜூஸ் விலை 40 அல்லது 50 இருக்கும். கடைல குடிச்சா ரெண்டு பேருக்கு 100 ரூபாய் ஆயிடும். இதுவே பார்சல்னா 50 ரூபாய் தான். அதிகமா குடிச்ச மாதிரியும் ஆச்சு. 

நான் சாத்துக்குடி தான் அதிகமா குடிப்பேன் ( ஏன்னா அது தான் விலை கம்மி ) , பாரதிக்கு ஆரஞ்சு தான் பிடிக்கும். சில சமயங்களில் கூட யாராவது இருந்தா ரெண்டு பார்சல் வாங்குவோம். 4 டம்ளருக்கும் மேல வரும். 

# கஞ்சூஸ்னெல்லாம் திட்டாதீங்க. பிடிச்சா இத நீங்களும் பின்பற்றலாம்.

யாராவது கடைக்காரன் கிட்ட போட்டு குடுத்துடாதீங்க பா. ரகசியம் நமக்குள்ள இருக்கட்டும்