செவ்வாய், 21 மார்ச், 2023

செவிடர்கள் காதில் விழ வைக்க பெரிய சத்தத்தை எழுப்ப வேண்டுமல்லவா ? - பகத்சிங்


 


செவிடர்கள் காதில் விழ வைக்க பெரிய சத்தத்தை எழுப்ப வேண்டுமல்லவா ?


- மாவீரன் பகத்சிங் தனது இறுதிக்கடிதத்தில்


ஞாயிற்றுக்கிழமை  பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 105ஆவது சந்திப்பில் படித்ததில் பிடித்தது நிகழ்வில் பேசிய வாசகர்கள் அனைவருக்கும் பகத்சிங் துர்காபாபிக்கு எழுதிய கடிதம் எனும் சிறு நூலைப் பரிசாக வழங்கினோம். கவிஞர் சோலைமாயவன் இந்நூலின் ஐம்பது பிரதிகளை வாங்கி அனைவருக்கும் வழங்கினார். இந்நூல் கவிஞர் நாணற்காடன் அவர்களின் சிறப்பான மொழிபெயர்ப்பில் கீற்று வெளியீடாக வந்துள்ளது. மிக முக்கியமான நூல்... 

இலக்கிய வட்டம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் பாரதியிடம் அந்நூலைக் கொடுத்துவிட்டு அம்மாவை ஊரில் விட நாங்கள் கிளம்பிவிட்டோம். பாரதி நாங்கள் இரவு திரும்ப வரும் போது கேட்டாள் ஏன் என்னை அழ வைத்துவிட்டுப் போனீர்கள் என்று. சட்டென எனக்கு நினைவில் வரவில்லை.. ஏன் அழுதாய் என்று கேட்டபோது.. தனியாக இந்நூலைப் படித்து வெகுநேரம் அழுதேன் என்றாள்...

இன்றைய நாளான 22 மார்ச் 1931 ல் பகத்சிங் எழுதிய கடிதம் இது.. மார்ச் 23 தூக்கிலிடப்பட்டார்..
நானும் வாசித்தேன்.. நீங்களும் வாசிக்க வேண்டும்மொழிபெயர்ப்பாளர் நாணற்காடன் அவர்கள் இந்தச் சிறுநூலுக்கு எழுதிய முன்னுரை இங்கு..

23 வயதில் நாட்டு விடுதலைக்காக, மக்களின் மாண்புக்காக சீரிய சிந்தனையும், சிறந்த செயல்களும் செய்து தூக்குக் கயிற்றை முத்தமிட்ட பகத்சிங், எனது இளமை உணர்வுகளில் மின்னலாகத் தங்கிவிட்ட வரலாற்று நாயகன். அன்றைய பகத்சிங், ராஜ்குரு, சந்திரசேகர ஆசாத், சுக்தேவ் இவர்களின் போராட்ட வரலாற்றுக்குள் துர்கா பாபியின் பங்களிப்பைத் தவிர்க்க இயலாது.

தனது இறுதி நொடிகளில் துர்கா பாபி க்கு பகத்சிங் எழுதிய இந்தக் கடிதம் ஏற்கனவே தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ஹிந்தியில் இந்தக் கடிதத்தை வாசித்து முடிக்கும்போது யாரோ சிறைக்கம்பிகளைத் தட்டும் ஓசை எனக்கும் கேட்கத் தொடங்கியது. அந்த ஓசை அனைத்துச் செவிகளுக்கும் கேட்கட்டும்.

செவிடர்கள் காதில் விழ வைக்க பெரிய சத்தத்தை எழுப்ப வேண்டுமல்லவா? என பகத்சிங் துர்கா பாபிக்கு எழுதிய சொற்கள் எல்லோருக்குமானவை தாமே.

அவர்கள் சோசலிச நாட்டைக் கட்டமைக்கும்போது எந்தக் குறையும் வைக்க மாட்டார்கள். அப்போது அனைவருக்கும் உணவு கிடைக்கும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேற்றுமைகள் இருக்காது. சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமமாக பார்க்கப்படுவர்.- பகத்சிங்

பேரன்புடன்

நாணற்காடன்


நூலிலிருந்து சில வரிகள் :

அரசாங்கம் எனது உடலை வேண்டுமானால் அழிக்கலாம். ஆனால், எனது சிந்தனைகளை ஒருபோதும் கொல்ல முடியாது.

அநியாயத்தையும், கொடுமைகளையும் செவிட்டு அரசாங்கத்தின் காதுகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டி இருந்தது. செவிடர்கள் காதில் விழ வைக்க பெரிய சத்தத்தை எழுப்ப வேண்டுமல்லவா ?

அநியாயமும் அடக்குமுறையும் தாம் வன்முறை. அதற்கெதிராக தமது வலிமையை வெளிப்படுத்திக்காட்டுவது வன்முறை ஆகாது.

மதம் குறுகிய மனப்பான்மையை வளர்க்கிறது. மேலுமது, புரட்சியின் பாதையில் பல தடைகளை உண்டாக்குகிறது.

நமது புரட்சியின் லட்சியமே சோசலிச அரசை அமைப்பது தான். மனிதனை மனிதன் உறிஞ்சுவதையும், ஒரு நாடு இன்னொரு நாட்டைச் சுரண்டுவதையும் அதன் மூலம் தான் முடிவுக்குக் கொணர முடியும்.


கடைசி நேரம் நெருங்கிவிட்டது. இப்போது நான் கடவுளை நினைத்துக்கொண்டால், பகத்சிங் ஒரு கோழை என்று அனைவரும் சொல்வார்கள். வாழும்வரை எப்படி இருந்தேனோ, அப்படியே மரணத்தையும் தழுவி இந்த உலகை விட்டு நீங்க விரும்புகிறேன். மரணத்தை எதிரில் கண்டதும் அவனது கால்கள் நடுங்கத் தொடங்கிவிட்டன என்று யாரும் சொல்லிவிடக் கூடாது.

எனது தாய்நாட்டின்
இந்த மண்ணிலிருந்து
வரும் நறுமணம்
இறந்தாலும் என் இதயத்திலிருந்து வெளியேறாது
விடைபெறுகிறேன்

- பகத்சிங்


நூல் விலை ரூ 10/-
தொடர்புக்கு : 9942714307 
திங்கள், 13 மார்ச், 2023

வாழ்வென்பது வேறொன்றுமல்ல - கவிதை ரசனை 10

வாழ்வென்பது வேறொன்றுமல்ல


கலையின் மகத்தான பணிகளில் ஒன்று தனிமனிதனின் தனிமைக்குத் துணையாக, ஆறுதலாக எப்போதும் உடன் வருவது. தனிமனிதனின் அகத்தேடல் தான் கலையாக புறத்தில் வெளிப்பட்டது. புறத்தே கலை நிகழ்த்தும் பணி அளப்பரியது. சமூகத்தின் சிறு துளைகளுக்குள்ளும் காற்றெனெ நுழைந்து இசையின் கொண்டாட்டத்தினைக் கொணர்வதும், ஊசியென நுழைந்து கிழிசல்களைத் தைப்பதுமாக கலை அளப்பரிய பணியைச் செய்கிறது என்பது உண்மைதான். அகத்தே கலை நிகழ்த்தும் பணியோ அற்புதமானது. ஒவ்வொரு மனிதனும் நவீன வாழ்வில் தனித்துவமாக இருக்கிறான், தனக்குள் தனியனாக இருக்கிறான். அவனுக்கு யாரையும் விட தான் எனும் ஒருவன் தேவைப்படுகிறான். தன்னையே இழந்து நிற்பவனைக் காலமும் கை விட்டுவிடும். எதை இழப்பினும், எவரை இழப்பினும் தன்னை இழக்காத வரைக்கும் ஒருவனுக்கு எதுவும் பெரிய இழப்பன்று. யாவும் மீளக் கூடியவை தான். தன்னை இழக்காது அதாவது சுயத்தை எப்போதும் பாதுகாத்து வைக்க கலை ஒருவனுக்குத் துணை நிற்கிறது. 

நமது குரலைக் கேட்டுக்கொள்ளும் செவிகள் நமக்குத் தேவையாயிருக்கின்றன சமயங்களில். மறு பேச்சு, ஆதரவுக் குரல், பதில்கள் என எதுவும் தேவைப்படும் முன், நமக்குத் தேவையாயிருப்பது வெறுமனே நமது பேச்சை அல்லது புலம்பல்களைச் செவிமடுத்துக் கேட்டுக்கொள்வது தான். அதற்கான யாரும் இல்லாத போது தான் தனித்து விடப்பட்டதாக உணர்கிறோம்.  செடிகள், மரங்கள், ஏன் கற்கள், சிலைகள் என அஃறிணைகளோடு பேசுபவர்களையும் தனித்து காற்றோடு வெறுமையாய்ப் பேசுபவர்களையும் நாம் பார்க்கிறோம். அவர்களின் தேடல்களெல்லாம் கேட்டுக்கொள்வதற்கான செவிகள்… செவிகள் மட்டுமே.

அவ்வாறான செவிகளை யாசிக்கும் அல்லது அவ்வாறான செவிகள் அருளப்பெற்ற கவிதை ஒன்று… 


என் பேச்சைப்  பொறுமையாகக்

கேட்டுக்கொண்டிருக்கின்றன

இந்தக் கட்டிடங்கள்

இனி வாழ்வின் மேல்

எனக்கு ஒரு குறையுமில்லை


             - கார்த்திகா முகுந்த்  

- “ஒரு வெப்பமண்டலத் தாவரமாகிய நான்”  எழுத்து பிரசுரம் வெளியீடு , 

செவிகள் யாவர்க்கும் தேவையெனினும் இந்திய சமூகத்தில் பெண்களின் குரல்களைப் பெரும்பாலும் யாரும் செவிமடுப்பதேயில்லை நூற்றாண்டு காலமாக. அவர்களது சொற்கள் புறம் தள்ளப்படுகின்றன, அவர்களது புலம்பல்களும் கோரிக்கைகளும் நிராகரிக்கப்படுகின்றன. இச்சூழலில், வீடுகளில் தனித்திருக்கும் அவர்களது மொழிகளைக் கேட்க ஏதாவதொன்றைக் கைப்பற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. செல்லப் பிராணிகளை, விருப்பக் கடவுளரின் சிலைகளை, தொட்டிச் செடிகளை பெண்கள் அதிகம் நேசிப்பதன் பின்பான உளவியில் இதுவாகவும் இருக்கலாம்.

“என் பேச்சைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றன இந்தக் கட்டிடங்கள்” எனும் முதல் பகுதியில் இந்தக் கவிதையின் குரலில் ஒரு வலி தென்படுகிறது. அது பெண்வலி என்பது சட்டெனப் புரிந்தும் விடுகிறது. அந்தக் குரலில் நம் அம்மாக்கள், அக்காக்கள் தென்படுகிறார்கள். அவர்களது முந்தைய நாட்களின் நினைவுகளை நமக்கு இந்தக் கவிதை காட்சிப்படுத்துகிறது. “ இனி வாழ்வின் மேல் எனக்கு ஒரு குறையுமில்லை “ என்கிற இந்தக் கவிதையின் பின்பகுதியில் ஒலிப்பது விரக்தியின் குரல். அது விரக்தியோடும், சலிப்போடும், ஒருவித எள்ளலோடும் மாறி மாறி ஒலிக்கிறது நம் காதுகளில்.  யாருக்கும் நாம் தனிமையை வலிந்து பரிசளித்திடக் கூடாது எனப் புரியவைக்கிறது கவிதை.

கட்டிடங்களெனும் அஃறிணைகளாவது இல்லாத செவிகளைத் திறந்து எனது சொற்களைக் கேட்டுக்கொண்டிருக்கின்றன எனும் ஆதங்கத்தின் வரைதல் தான் இந்தக் கவிதையாகியிருக்கிறது.

கேட்கும் செவிகளற்று இருப்பவர்களின் பக்கமும் கலை நகர்ந்து நிற்கும். கவிதை இறங்கி வந்து பார்க்கும். அப்படியான ஒரு கவிதை …


யாரும் எடுத்துக்கொள்ளாத ஏதாவதொன்று...


எல்லாப் பேருந்திலும் யாரும் அமராத

பக்கத்து இருக்கையுடன் 

திருநங்கை ஒருவர்

எனக்காகக் காத்திருக்கிறார்...

ஒவ்வொரு பிரார்த்தனைவேளையிலும் 

என் முன் வரிசையில் ஒரு குழந்தை 

என்னைப்பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு வகுப்பறையிலும் 

எனக்கென்று முகிழாது காத்திருப்பான் 

ஒரு மெல்லக்கற்பவன்...

எனக்குப் பரிசாகத் தாம் படிக்காத 

அல்லது தமக்குப் பரிசாகக் கிடைத்த 

புத்தகங்களை அளித்து  

தம் செலவை 

மிச்சம்பிடித்துக்கொள்கிறார்கள் நண்பர்கள்...

விழாக் கூட்டத்தில்

மேடை சரியாகத் தெரியாத மூலையில்

எப்பொழுதும் எனக்கென்று 

ஒரு நாற்காலி கிடைத்துவிடும்...

அதனருகில் ஒரு தொட்டிசெடியும்

சில பூக்களும் இருந்துவிடும்....

யாரும் எடுத்துக்கொள்ளாத

ஏதாவதொன்று

தினமும் எனக்குக் கிடைத்துவிடுகிறது...

அதுவே எனக்குப் பிடித்தும் இருக்கிறது!


- ப்ரிம்யா கிராஸ்வின் 

“ தப்பரும்பு” , வாசகசாலை வெளியீடு, 9942633833


யாரும் எடுத்துக்கொள்ளாது தனித்துவிடப்பட்ட ஒன்றை இந்தக் கவிதை ஆதரவாக அணைத்துக்கொள்கிறது. யாரும் இல்லையென்று யாருமில்லை என ஆறுதலாகிறது. 

திருநங்கைக்கு அருகில் விகல்பமின்றி அமர்ந்து கொள்கிறது, மெல்லக் கற்பவனின் மனதுக்கு நெருக்கமாகிவிடுகிறது மேலும் மேடை தெரியாத போதும் அருகிலிருக்கும் சிறு செடியை ரசித்தபடி அமைதியாகிறது இந்தக் கவிதை.  கவிதையின் ஆதாரமாக இருக்கும் அன்பு எப்போதும் ஏங்கிச் செத்தபடியிருக்கும் ஒவ்வோர் உயிருக்கும் துணையாவது மட்டுமே அதன் அடிப்படை குணமாக இருக்கும்.

யாரும் இல்லாத ஒருவளாக ஒலிக்கும் கவிஞர் கார்த்திகா முகுந்தின் கவிதைக்கும், யாரும் இல்லாதவர்களுக்காக உடன் நிற்பதாக ஒலிக்கும் கவிஞர் ப்ரிம்யா கிராஸ்வினின் கவிதைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இவற்றின் அடியாழத்தில் ஒலிப்பது அன்பின் குரல். மனிதத்தின் கிளர்ந்தெழும் நறுமணம். கூப்பிடு தொலைவில் இருக்கக் கூடிய வாழ்வின் சிறு பரிணாமம்.

வாழ்வென்பது வேறொன்றுமல்ல, யாருக்காவது அன்பைத் தேக்கிவைத்தல், யாரிடமாவது அன்பாயிருத்தல், யார் பொருட்டாவது அன்பைச் சுமந்து கொண்டே அலைதல்.