வெள்ளி, 30 மார்ச், 2012

கவன ஈர்ப்பு

 

எத்தனை முக்கியமான

வேலையில்

மும்முரமாக

இருந்தாலும்

நிமிர்ந்து பார்க்க

வைத்து விடுகிறது

கடந்து போகும்

கொலுசுச் சத்தம்


புதன், 21 மார்ச், 2012

என் புன்னகை


என் கவிதைகளில்
நிரம்பி வழிகிற
கண்ணீர் எனதே எனது.
 
என் கவிதைகளில்
எப்போதாவது
கிளையும்
புன்னகை நிச்சயம்
உனது.
 

திங்கள், 12 மார்ச், 2012

ரத்த தேசம்


 
Channel -4 வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்தீர்களா நண்பர்களே.
நெஞ்சு பதைபதைத்து கண்கள் முட்டவில்லையா..?
நமது இனம் இன்னும் எத்தனை கொடுமைகளைத் தாங்கும்..?
நமது சகோதர சகோதரிகள் வன்கொடுமைக்கு ஆளாவதையும்,
சிதறுண்டு சாவதையும் எப்படி சகிப்பது..?
 
If you want see it again Visit :

http://thaaitamil.com/?p=11947

எதுவுமே செய்யாத எல்லாரையும் காலம் கவனித்துக்
கொண்டே இருக்கிறது. நாளைய வரலாற்றில் நம்
பெயர்கள் துரோகிகளாகவும்,கையாலாகாதவர்களாகவும்
பதியப்படும்.

புத்த தேசம்
ஆனது
ரத்த தேசம்.


புன்னகை - கவிதை இதழில் வெளியான எனது கவிதை:
 
 
தாய்ப்பால் பற்றிய - ஒரு
கவிதையை எழுத
நினைக்கையில் அங்கு
அறுத்தெறியப் படுகின்றன
சில மார்பகங்கள்...
குழந்தையின் புன்னகையை
கவிதைப் படுத்த நினைக்கையில்
அங்கே புதைக்கப்படுகின்றன
பல குழந்தைகளின் கடைசிப்
புன்னகைகள்...
பூக்களை எழுதலாம் என்றால்
சாம்பல் காடுகளே
எஞ்சியிருக்கின்றன..
எதைப்பற்றியும்
எழுதவியலாமல் கடைசியில்
கடவுளைப் பற்றி எழுத
நினைக்கையில் அங்கு
குண்டு சத்தங்களுக்கு பயந்து
கருவறையை
காலி செய்துகொண்டு
ஒடி விட்டாராம் கடவுள்....
கடவுளே இல்லாத ஊரில்
யாரிருக்கிறார் இப்போது..?

 

புதன், 7 மார்ச், 2012

மகளிர் தின வாழ்த்துக்கள்.

அன்பு - இந்த
அழகான சொல்லுக்கு
முதல் அர்த்தம்
அம்மா.
எப்போதும் சீண்டி
தோல்விகளில் தூண்டி
தன்னை நமது
முதல் குழந்தையாகவே
காட்டிக் கொள்வாள்
தங்கை.
நம்மில் பாதியாய்
நம் கரம் பற்றி
நம்மை முழுமையாக்குபவள்
மனைவி.
நம் வாழ்வின்
அடையாளமாய்,
அங்கீகாரமாய்,
வசந்தம் தரும் தேவதையாய்
மகள். 
 
பெண்கள் இல்லாத உலகம்
நிச்சயம் சாத்தியப் படாது.
பெண்கள் இல்லாத வாழ்க்கை
நிச்சயம் வாழ்க்கையாயிருக்காது.
 
மகளிர் தின வாழ்த்துக்கள்.
பெண்மையைப் போற்றுவோம்.

நீயும் என் அன்னை

யாரிடத்தும்
சொல்லியழ முடியாத
என் உள் வலியை
உன்னிடம் சொல்லாமலே
புரிந்து கொண்டு
தேற்றுகிறாய் என்னை.

இதன் காரணமாகவே
சொல்கிறேன் - நீயும்
என் அன்னை என்று.

திங்கள், 5 மார்ச், 2012

கவிதைகள்

நெடுந்தூரப்
பயணமானாலும்,
நெடுநாள் தங்கலாயினும்.
தனிமையைத்
தவிர்த்து விட
முடிகிறது எளிதாய்.
வழி நெடுகிலும்
என்னுடன்
வந்து கொண்டே
இருக்கிறதுன் காதல்.
குரலோசையகவும்,
குறுஞ்செய்திகளாகவும்.
***************************************************
ரயில் பயணத்தில்
எதிர் இருக்கையில்
உறங்கிக் கொண்டிருந்த
குழந்தை
அழகழகாகப்
பேசிக் கொண்டே
வந்தது உறக்கம்
வராமல் உட்கார்ந்திருந்த
என்னிடம்.
*************************************************
விபத்தில்
எல்லா இடத்திலும் தான்
அடிபட்டது என்றாலும்
கைக் கட்டில்
மட்டும் முத்தமிட்டு
விரைவில் நலமாகி வா
என நீ சொல்லிப் போனதில்
வருத்தம் தான் எனக்கு.
***************************************************
காதலர் தினப்
பரிசாக
இது வேண்டுமா
அது வேண்டுமா
எனக் கேட்டேன்
வழக்கம் போலவே.
எதுவும் வேண்டாம்
என்றாய்  வழக்கம் போலவே.
எதை வாங்குவது
என குழம்பி
முழம் மல்லிகைப்
பூவுடனும் - சில
முத்தங்களுடனும்
முடித்துக்
கொள்கிறேன் இப்போதும்.
************************************************
என் கண்களும்
உதடுகளுமே
உன்னிடம் வெகுநேரம்
பேசிக் கொண்டிருக்க,
பொறுமையிழந்த
என் கை கடைசியில்
உன் தலை முடியைக்
கொதிவிட்டுத்
தேற்றிக் கொள்கிறது. 
****************************************************
எல்லாரிடத்தும்
சொல்வதற்காக
எதையாவதொன்றை
வைத்திருக்கிறாய்
எப்போதும்.
என்னிடம் மட்டுமே
சொல்ல வைத்திருக்கும்
உன் காதலை
எப்போது சொல்லப் போகிறாய்.?
*******************************************************