ஞாயிறு, 5 மே, 2019

ஆதிமுகத்தின் காலப்பிரதி கவிதைகளுக்கு கவிஞர் ஆண்டன் பெனியின் அழகான அறிமுக உரை

படைப்பு குழுமத்தில் காஃபி வித் கவிதை என்று ஒரு நிகழ்வு ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்புகிறார்கள், ஒவ்வொரு வாரமும் ஒரு கவிஞரது கவிதைகளை கவிஞர் ஆண்டன் பெனி அறிமுகம் செய்து வைக்கிறார்.
இந்த வாரம் எனது ஆதிமுகத்தின் காலப்பிரதி கவிதை நூலை அறிமுகம் செய்திருக்கிறார்.

கவிஞர் ஆண்டன் பெனி அவர்களது அறிமுக உரை அவ்வளவு அழகாக இருக்கிறது. கவிதைகளைக் கொண்டாடும் , நேசிக்கும் ஒருவரால் தான், அதுவும் சக படைப்பாளியை எந்தவித எதிர்பார்ப்புமற்று நேசிக்கும் ஒருவரால் தான் இவ்வாறு எழுத முடியும் ... மன நிறைவைத் தந்த ஓர் அறிமுகம்.

வாசியுங்கள் ....“எனக்கான தனித்த வலி மிகுந்த தருணங்களில் நான் தேக்கி வைத்திருக்கும் சொற்களை என்ன செய்வது?
யாரிடமும் பகிரப் பிரியப்படா யாவற்றையும் என்ன செய்வது? 

கவிதைகள் இருக்கின்றன எப்பேர்ப்பட்ட இடரிலும் ஒரு நம்பிக்கையை தர….
ஒரு புன்னகையை தர…. 

ஆகவே கவிதைகளிடம் என்னை ஒப்படைத்திருக்கிறேன்”

என்று தன்னை இலக்கியச் சூழலுக்கு ஒப்புக் கொடுத்ததன் வாக்குமூலத்தினைப் பதிவு செய்கிறார் பூபாலன்.

கவிதைகளை ஒரு தோளிலும்… கவிஞர்களை மறு தோளிலும் தூக்கித் திரியும் மனிதர்களோடு எனக்கு எப்போதும் வாழப்பிடிக்கும்…

பூபாலன் அப்படியொரு வகையே.. தன் தோளில் இலக்கியத்தின் கனமேற்றித் திரிகிறார்.

தனது "ஆதிமுகத்தின் காலப்பிரதி" நூலில் சமூகத்தின் அனைத்து வேர்களோடும் பயணப்பட்டிருக்கிறார்.

நான் இந்த விமர்சனப் பார்வையில் உறவுகளின் ஆணிவேரினை மட்டும் காட்சிப்படுத்தியிருக்கிறேன்.

பூபாலனும் ஒரு மகளதிகாரத் தந்தை.

அவரை எங்குதேடியும் கிடைக்கவில்லையெனில்… மகளின் உள்ளங்கைக்குள் பாருங்கள் அங்கிருப்பார்.

மகள்களுக்குப் பிடித்த அப்பாவை… கவிதைகளுக்கும் பிடிக்கும்.

மகள்களின் உலகத்திற்குள் நுழைவது அசாத்தியமானது… கடவுள்களும் காத்திருக்கும் இடம் அது.

பூபாலன் அந்த உலகத்திற்குள் கடவுளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு உள்நுழைந்ததோடு… கவிதைகளிலும் நிறைகிறார் இப்படி...

“கதைப் புத்தகத்தின் பக்கத்தில் 
புலி துரத்திக்கொண்டோடும் மானுக்குக் 
கூடுதலாக இரண்டு கால்கள் 
வரைகிறது குழந்தை”

இன்னொரு கவிதையில் அழகியலின் உச்சம் தொடுகிறார் இவ்வாறு...

“மாடிப்படியில் அடிபட்டு 
இறந்து கிடந்த மைனாவை 
அப்புறப்படுத்தி விட்டு வருகிறேன் தூங்கிவிட்ட மகளுக்கு 
இன்றிரவு என்னிடம் 
கதைகள் இல்லை”

இம்மாதிரியான அப்பாக்களைத் தேடிக் கண்டுபிடித்துப் பிறந்துவிடுகிறார்கள் சில மகள்கள்…
**

பொள்ளாச்சி இலக்கியவட்டத்தைத் தவிர்த்துவிட்டு என் இலக்கிய வாழ்வைப்பற்றி நான் பேசிவிடமுடியாது.

பொள்ளாச்சி அபி
பொள்ளாச்சி அம்சபிரியா
பொள்ளாச்சி பூபாலன் மூவர்மட்டுமே அப்போது எனக்கான பொள்ளாச்சியின் அடையாளங்கள்

ஒரு மண் தன்னிலிடும் விதைகளை மட்டும் முளைக்க வைப்பதில்லை… தன்மீது பாதம் அமர்த்தும் மனிதர்களின் ஆற்றலையும் முளைவிடச் செய்துவிடுகிறது.

தாமிரபரணித் தண்ணீருக்குப் பிறகு… நான் கட்டிக்கொண்டு ஆனந்தக் கூத்தாட ஆசைப்பட்டது ஆழியாற்றுத் தண்ணீர்.

பொள்ளாச்சிக்கும் எனக்குமான அன்பு நானிங்கு பணியேற்கும் முன்பிருந்தே தொடங்கிவிட்டது.

மிக வறண்ட பூமியில் உறவுகளின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்….
மிகவும் செழிப்பான பூமியிலும் உறவுகளின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்…

உறவுகளின் தூர் மரணம் அவலம்தான் எனினும்… தூர் மரணத்தைத் தவிர்த்துவிட்டு வாழ்வது அதைவிடவும் அவலம் என்பதை மிக அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இந்தக் கவிதையில்.

மரணம் என்பது விடுதலா? விட்டுவிலகலா? என்ற வாதம் வேண்டாம்…

வாழ்தல் மரணத்தையும் விடக்கொடியதாக இருக்கிறது இங்கே பலருக்கும்.

அம்மா என்பதை அம்மா என்றே நேரிடையாகச் சொல்லிவிடலாம் என்பதுபோல் பூபாலனின் காட்சிப் படிமங்கள் ஔிவுமறைவற்ற வார்த்தைகளில்… நேருக்கு நேர் பேசிவிடுகின்றன…

உங்களுக்கு அம்மா இருக்கிறார் என்றால்… உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்றே பொருள்…

நமக்காக வாழ்வின் துயரங்களைச் சுமந்து திரிகிற அம்மாவை கடவுள் என்றுதானே சொல்லவேண்டும்.

பூபாலனின் இந்தக் கவிதைக்கு நானென்னெ விளக்கவுரை சொல்லிடமுடியும்?

“வாழ்வதை எதை விடவும் 
அதிகம் வெறுத்த அம்மா 
அடுக்களையில் மறைவாக 
ஒளிந்து சாணிப் பவுடரைக் 
குடிக்கப் போன சமயம் 
எனக்கொரு வாய் 
குடுங்க அம்மா என்று 
கேட்டபோதுதான் 
அவள் சாவை விடவும் 
கொடுமையான இந்த 
வாழ்வைத் தேர்ந்தெடுத்தாள்”
**

நிலம் குத்தியே விதைக்க வேண்டியதில்லை… விதைகளை விசிறிவிட்டும் விதைக்கலாம் என்கிறது பூபாலனின் கவிதைகள்…

அவலங்களை அவல வார்த்தைகளால் சொல்லாமல்… அழகியலாகச் சொல்கிறது அவரது கவிதைகள்…

தன் எழுதுகோலில் மயிலிறகைக் கோர்த்து எழுதுகிறார்…

வாசிப்பவர்களுக்கு உடலும் மனதும் கூசுகிறது…

“வேலியோர முட்புதருக்குள் 
வீறிட்டழும் சிசுவிற்கு 
யாரிடத்தும் 
யாதொரு புகார்களில்லை 

அதன் அழுகையெல்லாம் 
முலையமிழ்ந்து கிடைக்கும் 
ஒரு மிடறு 
பாலுக்காகத் தான்”

இந்தக் கவிதையினை பூபாலனின் ஆகச்சிறந்த ஒன்று என்றே சொல்வேன்.

உலகத்தரம் என்ற ஒன்றை உன்னைவிட்டுத் தொலைதூரம் இருக்கிற ஒருவர்தான் எழுதவேண்டுமென்பதில்லை.

உன் சக தோழனாலும் எழுதமுடியும்… உன் சக பயணியாலும் எழுதமுடியும் என்பதை முதலில் நம்புங்கள் தோழர்களே.
*
தன் குழந்தைக்குக் காதலியின் பெயர் வைப்பது வரை இருக்கிறது…
ஒரு ஆண் மகன் காதலின் ஆயுள்நீட்டிப்பு… 

காதல் என்பது ஆணுக்கு வேறு… பெண்ணுக்கு வேறு என்கிற யதார்த்தத்தினை பகடித் தொணியில் சொல்லப்பட்ட விதம் அருமை.

காதலியின் பெயரை மகளில் திணிப்பதையும்.. அதனை மனைவியைக் கொண்டு அழைப்பதையும்…. பகடி செய்யாமல் வேறென்ன செய்யமுடியும்?

அந்தக் கவிதை இதோ…

“சரஸ்வதி அக்காவை 
அக்காவென்று சொல்லாதே 
அண்ணியென்று சொல்லு என 
நச்சரித்த ஆறுமுகம் அண்ணனுக்கு வாக்கப்பட்டு வந்த 
செல்வி அத்தாட்சிக்கு 
மூன்று பிள்ளைகள் 
முதல் பிள்ளையின் பெயர் 
சரஸ்வதி 

மிச்சம் இரண்டும் 
யாரெனத் தெரியவில்லை”
***

அவரவர்களுக்கு விதிக்கப்பட்டதை அவரவர்கள் செய்கிறார்கள்…

யார் மீதும் யாருக்கும் அக்கரையில்லை.

தனது "ஆதிமுகத்தின் காலப்பிரதி" கவிதை நூலில் அவ்வாறு நம்மால் புறக்கணிக்கப்பட்ட / நிராகரிக்கப்பட்ட மனிதர்களையே காட்சிப்படுத்தியிருக்கிறார்…

ஆடுகிறவர் இல்லையென்றாலும் நமக்கு விதிக்கப்பட்ட ஜதிகளை விதிப்படி சொல்லிக் கொண்டிருக்கிறோம்…

சக பயணத் தோழனுக்கான ஆபத்து நல்லவேளை நமக்கில்லை என்று எளிதாக கடந்துவிட கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்தக் கவிதையில் பூபாலன் சொல்கிறபடியே...

“நடன காரியின் 
கம்மல்  கழன்று 
மேடையில் செங்குத்தாய் 
நிற்கிறது 
ஊசி முனையை நீட்டி 

ஜதி சொல்பளின் 
பார்வையெல்லாம் 

தத்தோம் தித்தோம் 
ததிங்கனத்தோம்”

பூபாலனின் கவிதைகளைப் படிக்க கவிதை மனது வேண்டியதில்லை… அதன் உள்ளார்ந்த அர்த்தத்தினைப் புரிந்துகொள்ள… கொஞ்சம் சூடும் சொரணையும் வேண்டும்...

சூடு சொரணை என்பது…

அவரது கவிதைகளில் வரும் காட்சிப் பிம்பங்களை ஏற்கனவே நீங்கள் கடந்திருந்தால்… அந்த அவலங்கள் இப்போதாவது உங்களுக்குப் புரியவேண்டும்..

இனி எப்போதாவது பார்க்க நேர்ந்தால்…
கண்களில் தூசி விழுந்ததாக நினைத்துக்கொண்டு கண்களைக் கசக்கிக் கொஞ்சம் கண்ணீர் எடுங்கள் அதுவே பூபாலனுக்குப் போதும்...

...ஆண்டன் பெனி

ஒலிப்பதிவைக் கேட்க :

https://www.youtube.com/watch?v=hTcYw-hJ3Yo