வியாழன், 31 டிசம்பர், 2015

ஹேப்பி நியூ இயர் ப்ரோ...

இதுவரை ஒரு போதும் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடியதில்லை. இது வழக்கம் போல ஒரு நாளே. வாழ்த்துகள் பகிரும் நட்புகளுக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் பகிர்வதோடு சரி.

சென்ற மாதத்தில் ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கையில் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தலைவர் அம்சப்ரியா அவர்களின் ஆலோசனையின் படி இந்த ஆண்டின் துவக்கத்தை புத்தகங்களோடு கொண்டாடுவோம் என்று முடிவுசெய்தோம். நண்பர்களுக்கு, வாசிப்புப் பழக்கம் இருக்கும் புத்தகம் வாங்க இயலா மாணவர்களுக்கு முடிந்த அளவு புத்தகங்களைப் பரிசளிக்கலாம் எனத் தீர்மானித்தோம்.

கொஞ்ச நாட்களில் இந்து நாளிதழ், பபாசி இணைந்து புத்தாண்டு முதல் நாள் நள்ளிரவு அனைத்துப் புத்தகக் கடைகளும் திறந்திருக்கும்; புத்தகங்களோடு புத்தாண்டைக் கொண்டாடுவோம் என்ற அறிவிப்பு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. நேற்றைய இந்து செய்தியிலும் நாங்கள் எதிர் புத்தகக் கடையில் சந்திப்பதாகச் செய்தி வந்திருந்தது.திட்டமிட்டபடி நேற்று மாலை நான், அம்சப்ரியா, சோலைமாயவன், புன்னகை ஜெயக்குமார் நால்வரும் பொள்ளாச்சியில் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைக் கடந்த மாதம் வெளியிட்டிருக்கும் எழுத்தாளர் வாமனன் அவர்களைச் சந்தித்து சிறப்புச் செய்துவிட்டு அவரை பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துக்கு அழைத்துவிட்டு அறவொளி அவர்களின் வீடு வந்தோம். உமா அறவொளி அவர்களின் கைகளால் இரவு உணவு தித்தித்தது.

11 மணிக்கு எதிர் புத்தகக் கடையில் சந்தித்தோம் அனுஷ், கனகராஜன், சோழநிலா, பாலமுருகன் உள்ளிட்டோர் ஏற்கனவே அங்கு இருந்தனர்.

சற்று நேரத்தில் அனைவரும் தாங்கள் இந்த வருடத்தில் வாசித்த நல்ல புத்தகங்கள், இதழ்கள் பற்றிப் பகிர்ந்து கொண்டோம். அம்சப்ரியா அவர்களின் உரை மிக சுவாரஸ்யமாக இருந்தது வழக்கம்போலவே. நள்ளிரவு 12 மணிக்கு அனுஷ் மகள், சோழ நிலா மகள் இணைந்து கேக் வெட்டினார்கள். பின்னர் நண்பர்களுக்குப் புத்தகங்களைப் பரிசளித்துவிட்டு அவர்களிடமும் அன்பை புத்தகங்களாகப் பெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்கையில் மணி 1,30.2015 நிறையக் கொடுத்திருக்கிறது. நிறைய நல்ல நண்பர்களை, ஒரு மிகப்பெரிய விருதை, மிகுந்த நம்பிக்கையை இப்படி நிறைய.. நிறைய வலிகளையும் தான். சென்ற ஆண்டில் ஏற்பட்ட ஒரு மனவருத்தத்தில் நான் மிகவும் மதிக்கும் அண்ணன், ஆலோசகர் கனகராஜன் அவர்களை விட்டு விலகிவிட்டேன். என் வாழ்வில் யாரையும் விட்டு இப்படி விலகியதில்லை. காரணங்கள் பல இருந்தபோதும் நான் அப்படிச் செய்தது எனக்கே உறுத்தலாக இருந்து கொண்டிருந்தது.  பலமுறை நேருக்கு நேர் பார்த்தும் பேசிக்கொள்ளவில்லை சென்ற ஆண்டு முழுதுமே என்னை அரித்துக் கொண்டிருந்த விசயம் இது. பல நாட்கள் இதை நினைத்து மனச்சோர்வு அடைந்ததுண்டு.

நேற்று தயக்கங்களையெல்லாம் உடைத்துவிட்டு அவரிடம் பேசிவிட்டேன். எனது புத்தகத்தை அவரிடம் கொடுத்துவிட்டேன். மனம் லேசானது, குற்றவுணர்ச்சியிலிருந்து கொஞ்சம் விடுபட்டு மகிழ்ந்தது. 2016 நல்லபடியாகத்தான் விடிந்திருக்கிறது. இது தொடர வேண்டும்.

வண்டியில் வரும் வழியெங்கும் இளைஞர்கள் கூச்சலிட்டபடி கொண்டாடியபடி இருசக்கர வாகனங்களில் கடந்து கொண்டிருந்தனர்.சாலையில் ஆடிக் கொண்டிருந்தனர். யாருமற்ற சாலையில் நடுச்சாலையில்   புத்தாண்டு வாழ்த்துகளை எழுதிக்கொண்டிருந்த இளைஞர்கள் எனக்காகவே எழுதிக்கொண்டிருந்ததாகப்பட்டது. நான் எதிர் பார்த்தபடியே சாலையோரத்தில் ஆடிக்கொண்டிருந்த ஒரு இளைஞன் வாகனத்தில் இடிக்குமளவு நெருங்கிவிட்டான். எதிர்பார்த்திருந்த காரணத்தால் சுதாரித்துக்கொண்டு நகர்ந்தேன். மதுப்போத்தலோடு ஒருவன் " ஹேப்பி நியூ இயர் ப்ரோ. பாத்துப் போங்க" என்றான். சிரித்துக் கொண்டே ஹேப்பி நியூ இயர் சொல்லிவிட்டு நான் என் வாகனத்தில் முன்பக்கம் இருந்த புத்தகங்களைத் தடவிப்பார்த்துக் கொண்டேன்.

ஹேப்பி நியூ இயர்

வியாழன், 24 டிசம்பர், 2015

உலகத்தமிழ்ப் பண்பாட்டு மைய விருது - எனது மகிழ்வுரை

மேடையிலும் அவையிலும் அமர்ந்திருக்கும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய சான்றோர்கள் அனைவருக்கும் என் அன்பான காலை வணக்கம். இது என் வாழ்வின் மிக முக்கியமான உன்னதமான தருணம்.இந்தத் தருணம் உட்பட என் பயணத்தின் மிக முக்கியமான தருணங்களை எனக்கு என் தமிழும் கவிதையுமே தந்திருக்கின்றன. அன்னைத் தமிழையும் கவிதையையும் வணங்கி என் மகிழ்வுரையைத் துவங்குகிறேன். இந்தத் தருணத்தில் நான் நிறையப் பேருக்கு என் நன்றியைச் சொல்லியாக வேண்டும் நன்றி மறத்தல் நன்றன்று.

உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் இந்த ஆண்டுக்கான சிறந்த இளம் படைப்பாளிக்கான விருது எனக்கு, எனது " பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு " கவிதை நூலுக்காக வழங்கியிருக்கிறார்கள். உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் நிறுவனர் டாக்டர் நல்லபழனிச்சாமி அய்யா அவர்களை வணங்கி மகிழ்கிறேன். மருத்துவச் சேவை தவிரவும் தமிழுக்கு நீங்கள் செய்யும் சேவைகள் அளப்பரியன. தங்களைப்போன்றோர்களால் எங்களைப் போன்றோர் உற்சாகமாக எழுத வாய்ப்பளிக்கிறீர்கள். பாரதிய வித்யாபவன் தலைவர் அய்யா கிருஷ்ணராஜ வானவராயர் அவர்களின் கரங்களிலிருந்து விருதைப் பெற்றது கூடுதல் சிறப்பு. அவரை அன்புடன் வணங்கி மகிழ்கிறேன். இந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றியும். வானம்பாடி இயக்கத்தின் மூலம் புதுக்கவிதையில் நீங்காத வரலாற்றுப் பாதையை உருவாக்கிய பொள்ளாச்சியின் இலக்கிய அடையாளம் அய்யா கவிஞர் சிற்பி அவர்களை அன்புடனும் நன்றியுடனும் வணங்கி மகிழ்கிறேன். எனக்கு, பொள்ளாச்சி இலக்கியவட்டத்துக்கு எல்லா விதங்களிலும் அவர் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றி. உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் அறங்காவலர்கள் முனைவர் இரா.கிருஷ்ண மூர்த்தி,பேராசிரியர் ப.க. பொன்னுசாமி,டாக்டர் தவமணி தேவி பழனிசாமி ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி.

தமிழறிஞர் விருது பெற்ற பேராசிரியர் கா. செல்லப்பன் அவர்களையும், இதழியல் விருது பெற்ற முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் அய்யா அவர்களையும் வணங்கி வாழ்த்துகிறேன்.

எனது இந்த விருதை எனக்காகவே தன் வாழ்நாட்களை வகுத்துக்கொண்ட என் பெற்றவர்களுக்கு நான் அர்ப்பணிக்கிறேன். நான் கவிதை எழுதவும், வாசிக்கவும், வாழவும் அவர்கள் தந்த சுதந்திரம் அளப்பரியது. நான்காம் வகுப்புப் படிக்கும் காலத்திலேயே வெறும் பாடப்புத்தகங்களை மட்டும் படிக்காமல் அதைத்தாண்டியும் கதைப்புத்தகங்களையும் நான் படித்த போது கொஞ்சமும் கண்டிக்காமல் அவர்கள் என்னை வளர்த்த விதம் ஆகட்டும், மிகவும் வறுமையான காலங்களிலும் அவர்களது கஷ்டங்களை எனக்குக் கடத்தாமல் என்னைக் காப்பாற்றியதாகட்டும், என் கல்லூரிக் காலங்களில் எனக்குக் கல்விக் கட்டணம் 9000 ரூபாய். அதைக் கட்டப் பணம் இருக்காது. ஆனால், பணம் கட்ட தாமதமோ சிரமமோ ஆகிவிடக் கூடாது என்பதற்காக கல்விக்கட்டணம் கட்ட பத்து நாட்கள் முன்னரே வட்டிக்குப் பணம் வாங்கி வைத்து விடுவார் பள்ளிக்கூடப் படிப்பின் வாசனையே இல்லாது போன என் அப்பா. அன்றிலிருந்து இன்று வரைக்கும் எனக்காகவே உழைத்து எனக்காகவே வாழ்ந்து வரும் என் அம்மா, அப்பாவுக்கு இந்த விருதைச் சமர்ப்பித்து மகிழ்கிறேன்.

தொடர்ந்து இலக்கியம் கவிதைகளில் நான் பயணிக்க நிறைய வார இறுதி நாட்களைத் தியாகம் செய்தாக வேண்டிய சூழலிலும் எனக்காக அத்தனை குடும்ப வேலைகளையும் கவனித்துக் கொண்டு என்னை இயங்கச் செய்யும் என் மனைவிக்கும், என்னை என் கவிதைகளுக்காக கூடுதலாய் நேசிக்கும் என் மகளுக்கும் என் அன்பு. பள்ளியில் சேர்ந்து ஐந்து வருடங்களில் முதல் முறையாக எனக்காக இன்று விடுப்பு எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார் என் மகள் தனிக்‌ஷா பாரதி என்பது கூடுதல் மகிழ்ச்சி.

என் சிறு வயதில் எனக்குக் கவிதைகளின் மீது மையல் வரக் காரணமாக இருந்தவர்கள் பாரதியும், என் தமிழாசானும் இவர்களுடன் என் மாமா ச.தி.செந்தில்குமாரும் தான். எங்கு பயணமாக இருந்தாலும் என்னைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்லும் என் மாமா பயணத்தில் நிச்சயம் எனக்கொரு புத்தகம் வாங்கிக் கொடுப்பார். இப்படியாக என் வாசிப்பை வளர்த்தும், அன்று முதல் இன்று வரை எனது எல்லா இலக்கிய மற்றும் சமூக செயல்பாடுகளில் முதல் ஆளாக எனக்குத் தோள் கொடுத்து ஆதரவாக என்னுடனே பயணிக்கும் என் மாமாவுக்கும், நான் எதைச் செய்தாலும் அது அற வழியில் நல்லதாகவே இருக்கும் என நம்பி எப்போதும் எனக்குத் துணை நிற்கும் தம்பி கார்த்திக்கும் இந்தத் தருணத்தில் நன்றி.

எனது முதல் கவிதைத் தொகுப்பு பொம்மைகளின் மொழி 2010 ல் வெளியானது. 2001 லிருந்து எனது கவிதைகள் பல்வேறு சிற்றிதழ்களிலும், 2007 லிருந்து எனது கவிதைகள் ஆனந்தவிகடன், கணையாழி,கல்கி,போன்ற ஜனரஞ்சக மற்றும் இலக்கிய இதழ்களிலும் தொடர்ந்து வெளிவந்த போதெல்லாம் என்னை ஒவ்வொரு முறையும் உற்சாகப் படுத்தி ஊக்கப்படுத்தியவர் சிந்தனைக்கவிஞர் கவிதாசன் அய்யா அவர்கள். எனது கவிதைகளைத் தொகுப்பாகப் போடச் சொல்லி அவர் சொன்ன போது தொகுப்பு போடும் அளவுக்கு பொருளாதார ரீதியாக நான் தயாராகவில்லை என்று சொன்னவுடன் தனது சொந்தச் செலவில் எனது பொம்மைகளின் மொழி தொகுப்பை சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அய்யா தான் கொண்டு வந்தார். அன்று முதல் இன்று வரை என் மீதும் என் எழுத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டு எனது எல்லா இலக்கியச் செயல்பாடுகளிலும் என்னை ஊக்கப்படுத்தி வரும் அவருக்கு எனது நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

நான் பணிபுரியும் ரூட்ஸ் குழும நிறுவனர் அய்யா கே,ராமசாமி அவர்கள் நான் இப்போது வாழும் நல்ல வாழ்வில் பெரும்பங்கு வகிக்கிறார். அவரை நன்றியுடன் வணங்கி மகிழ்கிறேன்.

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் எனது வாழ்வின் மிக முக்கிய அங்கம். கடந்த 2013ஆம் ஆண்டு இப்படி ஒரு அமைப்பைத் துவங்க வேண்டும் அதற்கு நீங்கள் தான் தலைவராக இருக்க வேண்டும் என்று நான் கேட்ட போது மறுக்காமல் ஏற்றுக் கொண்டு அன்று முதல் இன்று வரை பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் தலைவராக, எங்களுக்கு நல்ல ஆசானாக, நண்பனாக என பல பரிமாணங்களிலும் என்னை வழி நடத்தும் கவிஞர் க.அம்சப்ரியா அவர்களுக்கு எனது பேரன்பும் ப்ரியங்களும். இந்த விருதை நான் பெற அவரும் ஒரு முக்கியக் காரணி. அவர்தான் எனது தொகுப்பையும் சேர்த்து உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் அறிவிப்பைப் பார்த்துவிட்டு விருதுக்கு அனுப்பி வைத்தவர். பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெறும் இலக்கியக்கூட்டங்களை மட்டும் நடத்தாமல் சமூகப் பணிகள் பலவற்றைச் செய்து வருகிறது. இப்போது கூட கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் உள்ளிட்ட மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சுமார் இரண்டரை லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களைத் திரட்டி அனுப்பியிருக்கிறோம். கவிஞர் அம்சப்ரியா அவர்களின் தலைமையில் இளைஞர்கள் கூடி பில்சின்னாம்பாளையம் கிராமத்தை மது இல்லாத கிராமமாக மாற்றவும் அறிவார்ந்த இளைஞர்களை உருவாக்கவும் போராடி வருகிறார். இப்படியாக பொள்ளாச்சி இலக்கியவட்டத்தை தனது தலைமையில் மிக நேர்மையாகவும் வீரியத்துடனும் வழிநடத்தும் கவிஞர் அம்சப்ரியா அவர்களுக்கு நான் தரும் உறுதிமொழி எப்போதும் இதே அன்புடனும் ஆவலுடனும் சுறுசுறுப்புடனும் இலக்கியப் பணிகளை மேற்கொள்வோம் என்பதே.

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் மிக முக்கியமான பணிகளை எங்களோடு தோளோடு தோளாக நின்று சுமக்கும் இனிய நண்பர் சோலைமாயவன், புன்னகை ஜெயக்குமார்,அறவொளி அவர்கள், உமா அறவொளி அவர்கள், த.வாசுதேவன், ஆன்மன்,இரா.பானுமதி,இன்பரசு,மலையப்பன்,பொள்ளாச்சி அபி,  உள்ளிட்ட எங்கள் ஆலோசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு.

எனது முதல் கவிதையை நான் அச்சில் பார்த்தது நான், என் மாமா உட்பட ரூட்ஸ் மல்டிக்ளீன் நிறுவன நண்பர்களுடன் இணைந்து நாங்களே துவங்கிய இளைய வேர்கள் என்ற சிற்றிதழ் மூலமாகத்தான். அச்சில் வந்த எனது முதல் கவிதைக்கு முதல் வாழ்த்து வந்தது அஞ்சல் அட்டை வடிவத்தில் புன்னகை இரமேஷ் அவர்களிடமிருந்து. அதன் பின்னர் எனது கவிதைகள் தொடர்ந்து புன்னகை சிற்றிதழிலும் வெளியாகின. புன்னகை சிற்றிதழில் வெளியான ஒரு கவிதையைத்தான் எழுத்தாளர் சுஜாதா ஆனந்த விகடன் இதழின் கற்றதும் பெற்றதும் பகுதியில் தனக்குப் பிடித்த சிறந்த கவிதையாகக் குறிப்பிட்டுப் பாராட்டினார். இதன் மூலம் எனது கவிதைகள் மீது ஒரு வெளிச்சம் வந்தது. அன்று முதல் இன்று வரை எங்களது அனைத்து செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருக்கும் புன்னகை இரமேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.


எனது பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு கவிதைத் தொகுப்பின் தயாரிப்பு வேலைகளில் நான் இருந்த போது, எனது கவிதைகளைத் தேர்ந்தெடுப்பதில் பெரும் உதவியாக இருந்த எனது இரண்டு நண்பர்களில் ஒருவர் அனாமிகா இங்கு இருக்கிறார். இன்னொருவரான ப.தியாகு இங்குதான் அரூபமாக இருந்து கண்கள் விரிய என்னை வாழ்த்திக் கொண்டிருப்பார் என நினைக்கிறேன். தனது எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை என்ற அற்புதமான கவிதைத் தொகுப்பால் இலக்கியத்தில் இடம் பிடித்து 36 வயதிலேயே அவசரப்பட்டு இவ்வுலகை விட்டு வெளியேறிவிட்ட தியாகுவிற்கு எனது நன்றிகளைக் காற்றில் சொல்லியனுப்புகிறேன்.

எனது செயல்பாடுகளை ஊக்கப்படுத்தி என்னோடு இருக்கும் கோவை இலக்கிய சந்திப்பு முன்னோடி நண்பர்கள் எழுத்தாளர் இளஞ்சேரல் , பொன் இளவேனில், யாழி ஆகிய மூவருக்கும் நந்தலாலா இணைய இதழ் ஆசிரியர் கவிஞர் வைகறை அவர்களுக்கும் நான் என் நன்றிகளை நட்பாகக் காணிக்கையாக்குகிறேன்.

எனது கவிதைகளை தீவிரமாக நேசிக்கும் செலினா,கிருத்திகா, அனிதா, அஸ்வினி,கோகிலா மற்றும் அனைத்து பொள்ளாச்சி இலக்கியவட்ட நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

என்னை வாழ்த்தும் பொருட்டு வேலை நாளிலும் இங்கு வந்து என்னை வாழ்த்திக்கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் கீதாப்ரகாஷ், இலக்கியன் விவேக் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

எனது இந்த நூலுக்கு முகப்பு அட்டையை அற்புதமாக வரைந்து மதிப்புக்கூட்டிய ஞானப்ரகாசம் ஸ்தபதி, வடிவமைத்த பாலா, எனது நூலை வெளியிட்டு அதைப்பற்றிய ஒரு அற்புதமான அறிமுக உரையைத் தந்த நான் மதிக்கும் கவிஞர் நண்பர் இளங்கோ கிருஷ்ணன், முதல் படியைப் பெற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் எங்கள் அனைவரின் நூல்களிலும் ஐம்பது ஐம்பது பிரதிகளை வெளியிட்ட அன்றே விலை கொடுத்து வாங்கிக் கொண்ட அறம் கிருஷ்ணன். நூல் வடிவமைப்பிலும் அதை அச்சிட்டுக் கொண்டு வருவதிலும் அலைந்த நண்பர் நிலாரசிகன்,

சிறு வயதில் எனது கற்பனை வளம் பெருக மிக முக்கியமாக இருந்தவை கதைகள் தான். என் அப்பத்தா எனக்குச் சொன்ன கதைகளில் இருந்த நீதியும் , கற்பனை வளமும் தான் என்னை இன்னும் கதைகளையும் கவிதைகளையும் வாசிக்கத் தூண்டியது. காட்சி ஊடகங்களால் தர முடியாத கற்பனை வளத்தையும் நன்னெறிகளையும் கதைகளின் வழியாகத் தான் குழந்தைகளுக்குத் தர முடியும். இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கு தாத்தா பாட்டிகளின் கதைகள் கிடைப்பதில்லை. ஆனால் அவை மிகவும் அவசியம். ஆகவே குழந்தைகளுக்கு நல்ல கதைகளைச் சொல்லுங்கள் அவர்களையும் கதைகள் சொல்லச் சொல்லுங்கள்.

ஒரு இளைஞனாக , கவிஞனாக நான் பெருமிதம் கொள்ளும் தருணம் இது. இது இளைஞர்களின் காலம் சென்னை, கடலூர் வெள்ளத்தின் போது இடர்களைக் களைய இணைய இளைஞர்கள் படை மிகப்பெரிய சக்தியாக ஒருங்கிணைந்ததை நினைத்துப் பெருமைப்படுகிறேன். அதே வேளையில் பெண்களை மிகக் கேவலமாச் சித்தரித்து பீப் பாடல்கள் வெளியிடும் கொண்டாட்ட இளைஞர்களும் இருக்கிறார்கள் என்பதை மிக வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். ஒரு கவிஞனாக நான் துணுக்குற்று ஆத்திரம் கொண்டேன் பீப் பாடலைக் கேட்டபோது. ஒரு திரைப்படம் என்பது ஆயிரம் பொதுக்கூட்டங்களுக்குச் சமம் என்று அறிஞர் அண்ணா சொன்ன கூற்றை நினைத்துப்பார்க்கிறேன். அத்தனை சக்தி வாய்ந்த சினிமா ஊடகத்தை நாம் ஆக்கப்பூர்வமான நல்ல பொழுது போக்குகளுக்குப் பயன் படுத்த வேண்டும். எதை வேண்டுமானாலும் எழுதலாம், எதை வேண்டுமானாலும் பேசலாம் என இருக்க முடியாது. அறிவார்ந்த , கலாச்சாரத் தொன்மை வாய்ந்த சமூகம் நம்முடையது. இந்த மண்ணில் பிறந்து கொண்டு இப்படிப் பட்ட பாடல்கள் சினிமாக்கள் என அத்துமீறல்கள் எங்கு நடந்தாலும் அதை எதிர்த்துக் கிளம்பும் முதல் குரல் நம் போன்ற இளைஞர்களின் குரலாகத்தான் இருக்க வேண்டும். படைப்பாளர்கள் தங்களது படைப்பை சுய தணிக்கை செய்துகொள்வது அவசியம் என்பது எனது கருத்து.

இந்த விருதும் இன்றைய நிகழ்வும் இனி நான் செய்யும் இலக்கிய மற்றும் சமூகப் பணிகளுக்கு நிச்சயம் ஒரு உந்து சக்தியாக இருக்கும் எனவே இந்த விருதை எனக்கு வழங்கிய உலகத்தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் நிறுவனர், அறங்காவலர்கள், தேர்வுக்குழு உள்ளிட்ட அனைவரையும் மீண்டும் ஒருமுறை நன்றியுடன் வணங்குகிறேன்.

கடைசியாக

எமக்குத் தொழில் கவிதை; நாட்டுக்குழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்.

இது சுப்ரமணிய பாரதி தனக்குத் தானே தந்து கொண்ட தன்னிலை விளக்கம் மட்டுமல்ல. அவன் வழித்தோன்றிய பல்லாயிரம் கவிகளுக்கும் இளவல்களுக்கும் சேர்த்தே தான் எழுதி வைத்துப் போனான். அது தான் என் சொல்லும்

எமக்குத் தொழில் கவிதை; நாட்டுக்குழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்.

நன்றி. வணக்கம்.

உலகத்தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் சிறந்த இளம் படைப்பாளி விருது

கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி பேருந்தில் சென்று கொண்டிருக்கிறேன் கணபதியிலிருந்து. மாலை ஆறு மணியிருக்கும். அலுவலகம் முடிந்து ஊஞ்சல் இலக்கியக்கூட்டத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். கவிஞர் சிற்பி  அவர்களின் எண்ணிலிருந்து அழைப்பு வருகிறது. அவரது எண்ணைப் பதிவு செய்து வைத்திருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட நான் அவருக்கு அழைத்ததில்லை. அவர் இதற்கு முன் ஒரே ஒரு முறை என்னை அழைத்துள்ளார். அது இரண்டு ஆண்டுகளுக்கு முன் கருந்துளை சிற்றிதழில் நாங்கள் எழுதிய தலையங்கம் சிறப்பாக இருந்தது என்று பாராட்ட. இத்தனை நாட்கள் கழித்து இப்போது தான் அழைக்கிறார் என்றதும் நிச்சயம் முக்கியமான செய்தியாக இருக்கும் என நினைத்தேன். எதாவது நிகழ்ச்சிக்கு அழைப்பார் என்று தான் நினைத்தேன்.

அலைபேசியை எடுத்ததும் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார். இப்போது வீட்டுக்கு வரமுடியுமா என்று கேட்டார். பேருந்து சத்தத்தில் நான் பேசுவது அவருக்குக் கேட்கவில்லை. உடனே பாதி வழியிலியே பேருந்திலிருந்து இறங்கிவிட்டேன். நடந்து கொண்டே பேசுகிறேன். " அய்யா, கோவையில் இருக்கிறேன், ஊஞ்சல் இலக்கியக் கூட்டத்துக்குச் சென்று கொண்டிருக்கிறேன் இப்போது கிளம்பினாலும் வர இரவாகிவிடும். நாளை வரட்டுமா என்ன விசயம் ?” என்றேன். அவர், “ வேறொன்றும் இல்லை, நல்ல செய்திதான், உலகத்தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் சிறந்த இளம் படைப்பாளி விருதுக்கு, தங்களைத் தேர்வு செய்திருக்கிறோம். வாழ்த்துகள் "என்றார்.  எனக்குத் தலைகால் புரியவில்லை சந்தோஷத்தில். “ என்னென்ன பேசினேன் என்று கூட நினைவிலில்லை. அவர் " இன்னும் சில தினங்களில் அவர்கள் அழைப்பார்கள், அதுவரை பொறுத்திருங்கள் " என்றார்.

அந்தக்கணத்தின் மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. உடனடியாக இதை முதன் முதலாக கவிஞர் அம்சப்ரியா அவர்களிடம் தான் சொல்ல வேண்டும் என நினைத்தேன். இந்த விருதுக்கு எங்கள் அனைவரின் தொகுப்பையும் அவர்தான் அனுப்பி வைத்தார். மேலும், நாங்கள் இருவரும் இணைந்து நடத்தும் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் மூலம் எங்கள் நட்பும், நட்பு வட்டமும் அதிகரித்தது. அதன் மூலம் பரவலாக அறியப்பட்டேன். மேலும் அம்சப்ரியா ஒரு ஆசானாக இருந்து என்னை வழிநடத்துவார், நல்ல நண்பனாக எனது இலக்கிய மற்றும் சொந்த விஷயங்களில் நிறைய ஆலோசனை சொல்வார். அவருக்கு அழைத்தால் எடுக்கவில்லை, ஒரு மணி நேரம் கழித்து பள்ளி விட்டு வெளியில் வந்ததும் அழைத்தார். அப்போது அவரிடம் சொன்னேன் விஷயத்தை அவரது குரலிலும் உற்சாகம் தொற்றிக்கொண்டது மிகவும் மகிழ்ந்தார். அவரிடம் சொன்ன பின்பு பெற்றோரிடம், மனைவியிடம் மற்றும் குறிப்பிட்ட நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டேன். அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

டிசம்பர் 19 அன்று நிகழ்ச்சி என்று உறுதியாகி அழைப்பிதழ் வந்து விட்டது. நானும், அம்சப்ரியா,மாமா, சோலை மாயவன், புன்னகை ஜெயக்குமார் அனைவரும் அழைப்பிதழை நிறைய நண்பர்களுக்குக் கொண்டு சேர்த்தோம்.

அந்த நாளும் வந்தது … டிசம்பர் 19.

அப்பா,அம்மா கேன்டீன் வைத்திருக்கிறார்கள் விடுப்பு சொல்லிவிட்டனர். மாமா, மனைவி, மச்சான் , அம்சப்ரியா அனைவரும் விடுப்பெடுத்துவிட்டனர். பள்ளி சேர்ந்த 5 வருடங்களில் பாரதி ஒரு நாள் கூட விடுப்பெடுக்கவில்லை. எந்தக் காரணத்துக்கும் எடுக்க முடியாது என்று சொல்லி விடுவாள். எங்கள் வீடு புண்ணியர்ச்சனையின் போது கூட ஒரு மணி நேரம் இருந்துவிட்டுப் பள்ளிக்குச் சென்றுவிட்டாள். ஆனால், எனக்கு விருது என்றவுடன் ஒருமுறை கூட மறுப்புச் சொல்லாமல் விடுப்பு எடுத்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாள் எங்களுக்கெல்லாம் அவ்வளவு ஆச்சரியமும் சந்தோஷமும்.
நாங்கள் அனைவரும் மாமா,கார்த்தி அனைவருடனும் நண்பர் ஒருவரின் காரில் புறப்பட்டுவிட்டோம். கல்லூரிக்குள் நுழைந்து, அரங்கத்துக்குள் நுழைந்தவுடன் என்னைத் தனியே அழைத்துப் போய் சிறப்பு விருந்தினர்களுக்கு அறிமுகம் செய்து உரையாட வைத்தனர். நல்ல பழனிசாமி அய்யா, சிற்பி அய்யா உட்பட அனைவரும் அவ்வளவு இனிமையாகப் பழகினர்.

மிகச் சரியாகப் பத்துமணிக்கு நிகழ்ச்சி துவக்கம். அப்போது தான் எங்களை மேடைக்கு அழைத்து வந்தார்கள்.. மேடையில் அமர்ந்த பின்பு தான் வந்திருந்த நண்பர்களைக் கவனித்தேன்...

பொள்ளாச்சியிலிருந்து இரண்டு கார்களில் அம்சப்ரியா,புன்னகை ரமேஷ், அறவொளி,உமா அறவொளி,ஆன்மன்,சோலை மாயவன், புன்னகை ஜெயக்குமார்,ஆன்மன், இன்பரசு,கிருத்திகா , கோகிலா, கீதாப்ரகாஷ் ஆகியோர் வந்திருந்தார்கள்.

கோவையிலிருந்து இளஞ்சேரல்,பொன் இளவேனில், தெய்வீகன்,அனாமிகா, இலக்கியன் விவேக்,த.வாசுதேவன்,பாலச்சந்தர்,சுபாலன்,செந்தில்  வந்திருந்தனர்.அவினாசியிலிருந்து அனிதா வந்திருந்தார்.

இரா.பானுமதி அவர், அவரது மகள் மற்றும் மகளின் இரண்டு தோழிகளுடன் வந்திருந்தார். மூவரும் என் கவிதைகளின் ரசிகைகளாம். கண்கள் விரிய நன்றி சொன்னேன்.

இவர்களையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்க நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது...

மூவருக்கு விருது, ஒரு நூல் வெளியீடு. இது தான் திட்டம். மேடையில் இருந்ததிலேயே பொடியன் நான் தான்.

பேராசிரியர் கா.செல்லப்பன் அவர்களுக்கு தமிழறிஞர் விருது, திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்கு இதழியல் விருது, இவனுக்கு இளம் படைப்பாளர் விருது.

எங்களைப் பற்றி அறிவித்ததும், முதலில் பூச்செண்டு கொடுத்தார்கள். விருது பெறுபவர்களை சிற்பி அய்யா அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்கள்.
பின்னர் டாக்டர் கிருஷ்ணராஜ வானவராயர் கைகளால் விருது வழங்கினார் டாக்டர் நல்ல பழனிசாமி அவர்கள். முதலில் ஒரு பொன்னாடை போர்த்தினார், பின்னர் ஒரு பெரிய கேடயம் அதில் என்னைப்பற்றிய அறிமுகம், எனது செயல்பாடுகள் அடங்கிய தகவல்களை அச்சிட்டு ப்ரேம் செய்து வழங்கினர், பின்னர் தங்க நிற விருதுக் கேடயம். அதன் பின்னர் ஒரு அழகான பொற்கிழியில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம். சகலமும் நிறைந்தது. எவ்வளவு பெரிய விருதும் மதிப்பும் எளியவனுக்கு.


நூல் வெளியீடு,அறிமுகத்தில் கொஞ்சம் காலம் கடந்ததால் என்னைப் பதினைந்து நிமிடத்துக்குள் பேசுமாறு ப.க.பொன்னுசாமி அய்யா அவர்கள் அறிவுறுத்தினார். நீங்கள் சொல்லாவிட்டாலும் நான் அவ்வளவு தான் பேசுவேன் என்று பேசக் கிளம்பினேன்.

இது எனது முதல் விருது, முதல் பிரம்மாண்ட மேடை, எனவே ஒருவர் விடாது அனைவருக்கும் என் நன்றியைச் சொல்லிவிட வேண்டும் என விரும்பினேன். நான் பேசத்துவங்கி சற்று நேரத்தில் என் பெற்றோரைப் பற்றிச் சொன்னதில் , என் அப்பா கண் கலங்கிவிட்டார் என்று மனைவி சொன்னார். மகளைப்பற்றிச் சொல்லும்போது அவளும் அழுதுவிட்டாளாம். இதையும் மனைவி சொன்னாள். கடைசி வரை அவளும் கண்கலங்கினேன் எனச் சொல்லவில்லை. அனிதா இதை என்னிடம் சொல்லிவிட்டாள்.

நான் பேசிக்கொண்டிருக்கும் போதே 13ஆவது நிமிடத்திலேயே ப.க.பொன்னுசாமி அய்யா தந்த சமிக்ஞையால் திட்டமிட்ட அனைத்தையும் பேசாமல் கீழிறங்கிவிட்டேன் இடையில் நிறுத்திக்கொண்டு. பேசியிருக்க வேண்டிய சொற்கள் இன்னும் உள்ளுக்குள் குதிக்கின்றன .
எனது பேச்சின் எழுத்து வடிவத்தை அடுத்த பதிவில் பதிந்திருக்கிறேன் பாருங்கள்.

நிகழ்ச்சி முடிந்து நண்பர்களிடம் பிரியாவிடை பெற்று வண்டியில் வரும்போதே ஒரு லட்சம் பணத்தை அம்மா, அப்பாவிடம் கொடுத்து இந்தப்பணத்தை என் எந்தச் செலவுக்கும் கேட்க மாட்டேன் இதில் உங்கள் இருவருக்கும் பிடித்ததை வாங்கிக் கொள்ளுங்கள். அம்மாவுக்காவது எதாவது வாங்கித் தந்திருப்பேன். அப்பாவுக்கு இதுவரை பெரிதாக எதுவுமே வாங்கித் தந்ததில்லை, அப்பாவுக்கு தங்கச் சங்கிலி ஒன்று போட்டால் ஜம்மென்று இருப்பார் அதையும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். பெருமிதத்தில் இருந்த அவர்கள் கண்களில் இருந்தேன் நான்.

இந்த விருது என்னை உசுப்பியிருக்கிறது. என்னை நிறைய யோசிக்க வைக்கிறது மகிழ்ச்சியை விடவும் அதிகமாக. பொதுவாகவே நல்லவன் அனைவருக்கும் நல்லவனாக இருக்கிறேன் என்பதையும் உடைத்திருக்கிறது.
எல்லோரிடத்திலும் அன்பை யாசிப்பவன், அனைவருக்கும் பிரியமானவன் என்பதைத் தாண்டி, நெருக்கமானவர்களின் பொறாமைக்கண்கள் என் மீதும் உண்டு என்பதையும், வாழ்த்துகள் எனச் சொல்லக் கூட விரும்பாமல் விலகிப் போனவர்களையும் இந்த விருது அடையாளம் காட்டியிருக்கிறது. யார் மீதும் எந்தக் குறையுமில்லை. எல்லோர்க்கும் என் அன்பு.
வந்திருந்த அத்துனை நல்ல நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் நன்றி.. வராமல் போன இன்னும் சில முகங்களைக் கண்கள் தேடின என்பதும் உண்மைதான் ..திங்கள், 14 டிசம்பர், 2015

கடலூருக்கும் சென்னைக்கும் நீண்ட பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் கரங்கள் ...

மழை வெள்ளத்தில் சென்னை , கடலூர் மக்கள் தத்தளித்துக் கொண்டிருந்த காட்சியைப் பார்த்த யாருமே ஒரு கணம் அந்த மக்களுக்காக வருந்திடாமல் இருக்க முடியாது. வீடுகள்,உடமைகள், வாகனங்கள் , உறவுகள் என அவர்களது இழப்பு மிக அதிகம். அவற்றையெல்லாம் நம்மால் மீட்டுத்தர இயலாது என்றாலும், அவர்களாக இதிலிருந்து மீண்டு வர குறைந்தது ஒரு மாதமாவது வேண்டும். அது வரைக்கும் அவர்களுக்கு உணவு, குடிநீர், உடைகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளையாவது நாம் தான் நிறைவேற்ற வேண்டும்.
சென்னை , கடலூர் மக்களுக்கு பொள்ளாச்சி இலக்கியவட்டம் எதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம். அரசு முழு வீச்சில் பெரிய அளவில் எதையும் செய்ததாகத் தெரியவில்லை, செய்வதும் பெரிய காரியம் தான். தன்னார்வலர்கள், தனியார் அமைப்புகள் எல்லோரும் கரம் கோர்க்க வேண்டும்.
நாம் செய்வதை நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். சென்னையை விடவும் கடலூரில் வெள்ள பாதிப்பு மிக அதிகம் என்றும் ஆனால் ஊடகங்கள் சென்னையையே முன்னிருத்துகின்றன என்றும் நம்பத்தகுந்த நண்பர்களின் நேரடி அனுபவங்கள் மூலமாக அறிந்து கொண்டோம். மேலும் சென்னைக்கு நிறைய நிவாரணப் பொருட்கள் சென்ற வண்ணம் இருந்தன. எனவே கடலூருக்கு பொருட்களைக் கொண்டு செல்வது என முடிவு செய்தோம். முகநூல் மற்றும் வாட்ஸப்பில் இந்தத் தகவலைப் பகிர்ந்ததும். நிறைய உதவிகள் குவிந்தன. முதல்கட்டமாகப் பொருட்களை டிசம்பர் 3 அன்று அனுப்புவதாக முடிவு செய்து கொஞ்சம் தாமதமாக டிசம்பர் 5 நள்ளிரவு ஒரு மணிக்கு அனுப்பி வைத்தோம். இன்னும் உதவிகள் வந்து கொண்டே இருந்ததால் இங்கு இருந்து அதை கவனிக்க வேண்டும் மேலும் கடலூரில் நண்பர்கள் கனிமொழி ஜி, யாழி மற்றும் பல தன்னார்வலர்கள் இருப்பதால் பொருட்களை மட்டும் அனுப்பினால் போதும் அவர்கள் சரியான இடத்துக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொண்டு சேர்த்து விடுவார்களாதலால் பொருட்களை மட்டும் அனுப்ப முடிவு செய்தோம்.
முதலில் யாரும் பணமாகத் தரவேண்டாம், போர்வைகள், பாய்கள், புதிய உடைகள், அத்தியாவசியப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் இப்படித்தான் கேட்டோம். அதுதான் சரியெனவும் பட்டது. ஆனால் வெளியூர் மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் தங்களால் பொருளாகத் தர இயலாது என்று சொன்ன பின்னர் பணமாக அவர்களிடம் பெற்றுக் கொண்டு பொருட்களாக நாம் வாங்கி அனுப்பலாம் என்று முடிவு செய்தோம்.
ஆனைமலையிலிருந்து புன்னகை ரமேஷ் அவர்களின் ஒருங்கிணைப்பில் நண்பர் வணங்காமுடி மற்றும் ஊர் மக்களின் அன்பில் அதிக அளவில் அத்தியாவசியப் பொருட்கள் சேகரித்துவிட்டனர், குடிநீர் பாட்டில்கள், பிஸ்கெட் பெட்டிகள், பற்பசை, பிரஷ்,, உடைகள் என ஒரு வண்டி நிறைய வந்து இறங்கி விட்டது. இது முதற்கட்டம் தானாம் ...
முதற்கட்டமாக எங்களுக்குப் பணம் அனுப்பியவர்கள் மற்றும் செலவுப் பட்டியல் இதோ..


பணமாக வந்தவற்றைக் காட்டிலும் பொருளாக வந்தது தான் அதிகம். அவற்றையெல்லாம் பொள்ளாச்சி இலக்கியவட்ட நண்பர், கொலுசு மின்னிதழ் ஆசிரியர் அறவொளி அவர்களின் வீட்டிலேயே அவ்வப்போது சேகரிக்கத் துவங்கினோம்.
பணமாக வந்தவற்றுக்கு, கீழ்க்கண்ட பொருட்களையும் வாங்கினோம்..

பொள்ளாச்சி இலக்கிய வட்டத் தலைவர் கவிஞர் அம்சப்ரியா, செயலாளராக நான், சோலை மாயவன், .தி.செந்தில்குமார், ஆன்மன்,அறவொளி, உமா அறவொளி,கிருத்திகா, என பொள்ளாச்சி இலக்கியவட்ட நண்பர்கள் அனைவரும் பொருட்கள் சேகரிப்பிலும், கடைகளில் பொருட்கள் வாங்குவதிலும் தீவிரமாக சனிக்கிழமைதான் இறங்கினோம். எப்படியும் சனிக்கிழமை இரவு அனுப்பிவிடத் தீர்மானம்.
இந்தப் பொருட்களோடு ஆனைமலையிலிருந்து புன்னகை ரமேஷ் அவர்களின் ஒருங்கிணைப்பில் அரைலிட்டர் குடிநீர் பாட்டில்கள் 1000, பிஸ்கெட் பாக்கெட்டுகள் 1000, ரஸ்க் பாக்கெட்டுகள் 500,பால்பவுடர் 260 பாக்கெட், நாப்கின்கள்,பேஸ்ட், பிரஷ், உடைகள், கொஞ்சம் போர்வைகள் என அது ஒரு மினி ஆட்டோ நிறைய வந்து இறங்கின.
பிரியா சுங்கம் பகுதியில் தனது உறவினர்களிடம் சொல்ல அவர்கள் கொஞ்சம் உடைகளைக் கொடுத்துள்ளனர். நான்கு பைகளில் உடைகளுடன் அவரும் எங்களுடன் வந்து சேர்ந்து கொண்டார். அவர் சொன்ன செய்தி நெகிழ்ச்சியாக இருந்தது.
பிரியா , வெள்ள நிவாரணத்துக்காக நான்கு பெரிய பைகளில் துணிகளைச் சேகரித்து அலுவலகத்தில் வைத்திருந்திருக்கிறார். அப்போது அங்கு வழக்கமாக சாம்பிராணி பொடி போடும் பாய் வந்தவர், என்ன பேத்தி இது என்று கேட்க, இவரும் பெருமையாக இப்படிப் பொள்ளாச்சி இலக்கியவட்டம் மூலமாக கடலூர் மக்களுக்கு அனுப்புகிறோம் என்று சொல்ல, அவர் நேற்றே என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று கோபித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல அதன் பின் அவர் செய்த காரியம் எங்கள் கண்களைக் கலங்க வைத்துவிட்டது. இப்போது தான் இரண்டு மூன்று கடைகளுக்குப் போய் வருவதாகவும் , இன்றைய கலெக்‌ஷன் இவ்வளவுதான் என்றும் சொல்லி பிரியாவின் கையில் ஐம்பது ரூபாயைத் தந்து இதையும் கடலூர் மக்களுக்கு என் பங்காக அனுப்பிவிடு என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.
இதைக்கேட்டதும் மனம் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. எல்லா மனிதர்களுக்குள்ளும் இன்னும் மனிதம் இருப்பதை இந்த மழை காட்டியது, இப்படிப்பட்ட எளிய மனிதர்களுக்குள் தான் ஈரம் அதிகமாக இருப்பதையும் இந்த மழைதான் காட்டியது.
மாலை ஆகிவிட்டது, வந்திருந்த பொருட்களுக்குக் கணக்கு செய்து 700 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பைகள் பேக்கிங் செய்யத் திட்டமிட்டோம்.
நான் மளிகைப்பொருட்கள் வாங்கப்போனேன் சோலைமாயவனுடன், அப்படியே அட்டைப்பெட்டிகள், பால்பவுடர் என அனைத்தையும் வாங்க மாமா செந்தில்குமார் போர்வைகள் துண்டுகள் வாங்கி வந்தார். பொருட்களைக் கொண்டுவந்து சேர்க்கவே 7 மணியாகிவிட்டது.
பேக்கிங் செய்ய வருகிறேன் என்று சொன்ன நண்பர்களால் வரமுடியாமல் போக, நான், ஆன்மன், அறவொளி, உமா அறவொளி,சோலைமாயவன்,செந்தில்குமார்,கிருத்திகா,பிரியா, பீஷ்மா,மணிராஜ் ஆகியோர் பேக்கிங்கில் இறங்கினோம். ஒன்பது மணிக்கு பீஷ்மா மற்றும் பிரியா கிளம்பிவிட
மற்றவர்கள் சாப்பிட்டுவிட்டு வேலையை ஆரம்பித்தால், பேக்கிங் முடிய இரவு ஒன்று ஆகிவிட்டது. கிட்டத்தட்ட 700 பார்சல் தயாரித்து அவற்றை முறையாக அட்டைப்பெட்டிகளில் அடுக்கி வண்டியில் ஏற்றி வண்டியை அனுப்பும்போது மணி 2.
700 பாக்கெட்டுகளில் இருந்தவை பிஸ்கெட் பாக்கெட்டுகள் 2,பால்பவுடர் 2,பேஸ்ட் 1,பிரஷ் 1, ஷாம்பு 1,மெழுகுவர்த்தி 2, தீப்பெட்டி1,ரஸ்க் 1,சோப்பு 1, டீத்தூள் 1,நிலவேம்பு 1.
இவை போக போர்வைகள்,பாய்கள், துண்டு,மருந்துகள், உடைகள், தின்பண்டங்கள் தனி. இது மட்டுமன்றி வண்டி வாடகை 6000 ரூபாய் மற்றும் கிளீனர் அவர்களுக்கு 1000 என போக்குவரத்து செலவு முழுவதையும் தோழர் ஆன்மன் ஏற்றுக்கொண்டார்.
அத்தனை நேரம் வரை எங்களுக்கு சோர்வு வராமலிருக்க உமா அறவொளி அவர்கள் அவ்வப்போது காபி கொடுத்து உற்சாகப்படுத்தியது, நள்ளிரவென்றும் பாராமல் எங்களோடு கிருத்திகா தனியாகவே இருந்து அத்தனை வேலைகளையும் செய்தது, எங்களை நம்பி அவளது அம்மா அவளை அனுமதித்தது என அத்தனையும் அன்பால் நிகழ்ந்தது.
இரவு 2 மணிக்கு நானும் மாமாவும் சோலைமாயவன் அறைக்கு வந்து தூங்கினோம். கிருத்திகாவை ஆன்மன் நண்பர் தனது காரில் வீட்டில் விட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றார்.
மழையில் நனைந்து கொண்டே அலைந்தது, ரொம்ப வருடம் கழித்து வேலை செய்தது எல்லாம் சேர்த்து காலையில் சளியும் காய்ச்சலும் வந்தே விட்டது. வீட்டுக்குப் போனதும் அம்மா கேட்டார் காய்ச்சல் அடிக்குது போல ஏன் இவ்வளவு அலைச்சல் என்று. எனக்கே இப்படி என்றால், கழுத்தளவு மழை+சாக்கடை நீரில் அல்லாடியபடி ஓடி ஓடி மக்களுக்கு உதவிக்கொண்டிருக்கும் தன்னார்வலர்களை வணங்கித்தான் ஆகவேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு வண்டி சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களுடன் கடலூர் சென்றுவிட, யாழி,கனிமொழி நண்பர்கள் அவற்றை மிகவும் பாதித்த கிராம மக்களுக்கு நேரடியாக பல சிரமங்களுக்கு மத்தியில் சென்று சேர்த்தனர் என்ற செய்திதான் நிம்மதியாக்கியது.
இரண்டாம் கட்டமாகவும் இதே வேலைகள் நடந்தன. இந்த முறை ஆனைமலையில் வணங்காமுடி நண்பர் தனது வீட்டில் 100 பார்சல் தயார் செய்திருந்தார். பில்சின்னாம்பாளையம் கிராமத்தில் தலைவர் அம்சப்ரியா, ஜெயக்குமார், ராமகிருஷ்ணன்,காளிமுத்து,அஜீத்குமார்,கலையரசு போன்ற நண்பர்கள் இணைந்து 233 பார்சல்கள் தயார் செய்திருந்தனர்.
இந்தப் பொருட்கள் போதும் என முடிவு செய்து நாங்கள் அரிசிப்பைகள், மளிகை ஜாமான்கள், போர்வைகள், பாய்கள் மற்றும் மருந்துகள் மட்டும் வாங்கினோம். இந்த முறை கூடுதலாக சுமார் ஒன்றரை லட்சத்துக்குப் பொருட்கள் சேர்ந்தன.

இவை போக எழில் எம்ப்ராய்டரி செல்வி அவர்கள் தங்கள் கடையிலிருந்து 4 மூட்டை நிறைய புதிய சேலைகள்,ஸ்வெட்டர்கள் தந்து தனது பெரிய மனதைக் காட்டினார். கீதாப்ரகாஷ் உடைகள், குழந்தைகளுக்கான பள்ளிப்பைகள் வாங்கித் தந்தார்.

ஆன்மன் அவர்களின் நண்பர் ஆட்டோ ஓட்டுநர் பூபதி வெறும் மூவாயிரம் ரூபாய்க்கு டீசல் அடித்தால் போதும் நான் பொருட்களைக் கடலூர் கொண்டு சேர்க்கிறேன் என்று தானாக முன் வந்தார்.

எழுத்தாளர் கனக தூரிகா 2500 ரூபாய்க்கு மெழுகுவர்த்தியும், தீப்பெட்டிகளும் கோவையிலிருந்து வாங்கி அனுப்பினார். அவற்றையும் சேர்த்துக்கொண்டோம். இப்படித்தான் இன்னும் இன்னும் நிறைய அன்புக்கரங்கள் எங்களோடு இணைந்தன.
ஒன்பதாம் தேதி இரவு பத்துமணிக்கு வண்டி கிளம்பியது. காலை 8 மணி சுமாருக்கு கடலூரைச் சென்றடைந்தது.
இரண்டாம் கட்ட உதவிக்குப் பணம் தந்த அன்பர்கள்

இரண்டாம் கட்டமாக வாங்கிய பொருட்கள் ..
இரண்டாம் கட்ட உதவியின் போது கடலூருக்கு ஒன்றரை லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பியது போக. விழுப்புரம் மாவட்டம் சாத்தூர் கிராமத்திலும் ஏரி உடைந்து ஒரு கிராமமே வெள்ளத்தில் மூழ்கியதைக் கேள்விப்பட்டு, அந்தத் தகவலை சோலைமாயவன் சகோதரி மூலம் நேரடியாகச் சென்று உறுதி செய்த பின்னர் 100 பைகள் அரிசி வாங்கி வழங்கினோம். மேலும் சென்னையில் சேற்றுப்புண்ணால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாமல் இருக்கும் மக்களுக்கு அவசரமாக மருந்துகள் தேவைப்பட்டதால் அவற்றையும் உடனடியாக வாங்கி கூரியரில் அனுப்பி வைத்தோம். அதுமட்டுமன்றி, மீனவ கிராமத்துக் குழந்தைகளுக்கு உதவக்கேட்டிருந்த தோழருக்கு 200 நோட்டுப் புத்தகங்கள், 100 பென்சில்கள், 100 பேனாக்கள், 100 அழிப்பான்கள், 100 ஷார்ப்னர்கள் , 100 ஸ்கேல்கள் அடங்கிய100 பென்சில் பெட்டியுடன் பொருட்களை அனுப்பி வைத்தோம்.
ஆக மொத்தம் இரண்டு முறையும் வரவு : ரூபாய் 79050.00
பொருட்கள் வாங்கிய செலவு : ரூபாய் 82851.00
இப்படியாக ஒரு 3800 ரூபாய் கையைக்கடித்தது. அதை நான் ஏற்றுக் கொண்டேன். போர்வை வாங்கும் போது பணம் பற்றாக்குறையால் மாமா இன்னும் கொஞ்சம் சேர்க்க, அவரோடு கடைக்கு வந்த மணிகண்டன் தானும் ஒரு ஆயிரம் ரூபாய் தந்து உதவியிருக்கிறார். மேலும் ஆன்மன் தோழரும் தோள் கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். எத்தனை கரங்கள் நீள்கின்றன.. நினைக்கவே பெருமிதமாக இருக்கிறது. அலுவலகத்திலும் ஒரு நாள் சம்பளத்தை சென்னை மக்களுக்காக பிடித்தம் செய்து நிவாரணப்பொருட்கள் வாங்கி சைலேந்திரபாபு அவர்கள் தலைமையில் விநியோகமும் செய்துவிட்டார்கள்.
எங்களை நம்பி, இத்தனை பணத்தையும் பொருளையும் தந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பேருதவி செய்த அத்தனை நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். யாருடைய பெயரையும் விட்டுவிடவில்லை, இருந்தும் தீவிரமாக உழைத்த சோலைமாயவன்,ஆன்மன்,செந்தில்குமார் உள்ளிட்ட அத்தனை நன்னெஞ்சங்களுக்கும் நன்றியும் அன்பும்...

இன்னும் நிறைய செய்ய ஆசை... நண்பர்கள் குழுக் குழுவாக ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து மொத்தமாக வளச்சிப் பணிகளைக் கவனித்துக் கொண்டு அனைத்து உதவிகளையும் செய்யத் திட்டமிட்டுள்ளார்கள். இன்னும் நிறைய செய்ய வேண்டும். பார்க்கலாம்..

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

மகிழ்ச்சியான செய்தி


வணக்கம் நண்பர்களே,

ஒரு மகிழ்ச்சியான செய்தி. உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இந்த ஆண்டுக்கான சிறந்த இளம் படைப்பாளி விருது எனக்கு, எனது பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு கவிதைத் தொகுப்புக்கு அறிவித்திருக்கிறார்கள்.

வரும் சனிக்கிழமை 19ம் தேதி, கோவை காளப்பட்டி சாலை என்.ஜி.பி கல்லூரியில் காலை 10 மணிக்கு விருது வழங்கும் விழா. அன்புடன் அழைக்கிறேன்வியாழன், 10 டிசம்பர், 2015

அன்பு சூழ் உலகிது, அன்பு சூழ் வாழ்விது...

                       குறை சொல்லவும் , ஆதங்கப்படவும் , ஆத்திரப்படவும் என்னிடம் நிறைய சொற்கள் இருக்கின்றன ஆனால்.. ஆனால் ...... அதை விடவும் நெகிழவும், மகிழவும், கட்டியணைத்து கண்கள்  பனித்தும் நிறைய நன்றியும் அன்பும் நிறைந்த வார்த்தைகள் தான் முண்டியடிக்கின்றன.. என்ன சொல்வதெனத் தெரியவில்லை . லவ் யூ ஆல். யாரைக்குறிப்பிட்டுப் பாராட்ட, யாருக்கு நன்றி சொல்ல..

வெள்ளத்தில் தத்தளித்த சென்னை, கடலூர் மக்களுக்கு நீண்ட கரங்கள் அத்தனையையும் மானசீகமாகப் பற்றி கண்களில் ஒற்றிக் கொள்கிறேன். இந்த எளிய மனிதனால் அது மட்டுமே முடிகிறது.

சென்னை , கடலூரில் பெய்தது 112 ஆண்டுகளுக்குப் பின் பெய்யும் மாபெரும் மழை. முதல் நாள் மழை பெய்தபோது மாமழை போற்றுதும் என வழக்கம் போலவே கவிஞர்கள் கவிதைகள் எழுதினோம், மற்றவர்கள் கொண்டாடினோம். இரண்டாம் நாள் மழை இன்னும் உக்கிரத்தோடு பொழிய மெல்ல முகம் மாறத் துவங்கினோம். மூன்றாம் நாளிலேயே நம் சாலைகளின் , கட்டுமானங்களின், கட்டமைப்புகளின் சாயம் வெளுக்கத் துவங்கின.
நான்காம் நாளில் மழையின் முன் மண்டியிட்டு மன்றாடத்துவங்கிவிட்டோம் இரண்டு வாரங்களாகிவிட்டன. சாலைகளில், வீடுகளில் எங்கும் வெள்ளம். இப்போது மழை சற்று அமைதியாகிவிட்டாலும் வெள்ளமும் அதில் கலந்துவிட்ட சாக்கடைநீர் மற்றும் குப்பைகளும் இன்னும் கொஞ்ச நாட்களுக்குப் பெரும் விளைவுகளைத் தந்து கொண்டேயிருக்கும்.

இந்த நாட்களில் எத்தனை எத்தனை அவலங்கள், பசிக்குரல்கள், மரண ஓலங்கள். இவற்றையெல்லாம் தாண்டி மழை நம்மை நெகிழ்த்தியிருக்கிறது. இந்த மழை வெள்ளத்தில் மக்களின் கருணை வெள்ளத்தைப் பார்த்தேன். அன்பு நதியைப் பார்த்தேன். உதவத்துடித்து எந்த பேதமுமற்று முன்வந்த மனிதத்தைப் பார்த்தேன். சக மனிதனுக்கு ஒரு இடரென்றால் பதறி ஓடிவரும் மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதே இந்த வாழ்வின் மீது நம்பிக்கையை அளிக்கிறது.

இந்தப் பெருமழையின் தாண்டவத்தை நேரில் பார்க்கவில்லையெனுனும் தொலைக்காட்சி ஊடகங்களிலும், இணையத்திலும் காணும் காட்சிகள் கதிகலங்க வைத்தன. நேற்றுவரை அமைதியாக , சொகுசாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்த எல்லோரையும் புரட்டிப் போட்டிருக்கிறது மழை வெள்ளம்.

வெள்ளம் எத்தனை பேரை இணைத்திருக்கிறது என்று நினைத்தாலே சோகத்திலும் ஒரு ஆறுதல் அலை மனதுக்குள் அடிக்கிறது.
ஓடி வந்து உயிர்களையும் உறவுகளையும் காப்பாற்றவேண்டிய அரசு படு மந்தமாக செயல்பட்டது அல்லது செயல்படவே இல்லை என்பதை மக்கள் நன்கு அறிந்து கொண்டார்கள்.

டிசம்பர் 6 நாளென முத்திரை குத்தி பந்தோபஸ்து செய்துகொண்டிருந்தவர்களை அன்றைய தினம் பார்க்க முடியவில்லை. இந்த வெள்ள நிவாரணத்தில் இசுலாமிய சகோதரர்களின் பணியும்,உதவியும் மிகவும் முக்கியமானது. ஏராளமான இசுலாமிய சகோதரர்கள் பணமாகவும்,பொருளாகவும் அள்ளித் தந்தபடியே இருக்க, களத்திலும் அவர்களது செயல்கள் மெய்சிலிர்க்கும்படி இருந்தன. உணவு,உடை, குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளை வெள்ளம் என்றும் பார்க்காமல் உயிரைப்பணயம் வைத்து தேடித் தேடிப் போய் உதவினார்கள். சக மனிதனுக்கு ஒரு ஆபத்து என்றால் கூட்டமாக ஓடிவரும் மனிதர்கள் இருக்கும் வரை மதத்தால், சாதியால், இனத்தால் எவற்றாலும் எதுவும் செய்ய இயலாது. பாதிக்கப்பட்ட மக்களைப் பள்ளிவாசல்களில் தங்க வைத்ததாகட்டும், கர்ப்பிணிப் பெண் சித்ராவை யூனுஸ் தன் உயிரைப் பொருட்படுத்தாது காப்பாற்றியதாகட்டும் ( சித்ராவிற்குப் பிறந்த பெண் குழந்தைக்கு யூனுஸ் என்று பெயர் சூட்டி நன்றியைத் தெரிவித்திருக்கிறார்கள். நெகிழ்ச்சியாக இருக்கிறது ) இந்துக் கோவிலை சுத்தம் செய்ய உதவியதாகட்டும் இசுலாமியர்களின் சேவை கண்கள் பனிக்கச் செய்வன.எங்களது நிதித் திரட்டலிலும் பெரும் களப்பணியும், நிதிப்பங்கும் இசுலாமிய நண்பர்களுடையது தான் எனும் போது பெருமை பொங்குகிறது.

மற்ற நடிகர்கள் இவ்வளவு தந்தார்கள் இவர் இவ்வளவுதான் தந்தார் என்று பொங்குபவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. என்ன சொல்ல.? நடிகர்களை நாம் நடிகர்களாக மட்டுமா பார்க்கிறோம் ? தரத் தவறியவர்களை ஏசுவதை விடவும் தாராளமாகத் தந்து உதவியர்களை நாம் நன்றி பாராட்டியாக வேண்டும். தெலுங்கு நடிகர்கள் மிக தாராளமாக நிதியளித்தது மனம் நிறையச் செய்தது. தமிழ் நடிகர்களில் பலர் பணமாக உதவினர், சிலர் பொருளாக, நிவாரணமாக, தங்கும் இடமாக உதவினர். அனைவருக்கும் நன்றி. நடிகர்கள் சித்தார்த் மற்றும் பாலாஜியின் களப்பணி இணையத்தில் அனைவராலும் பாராட்டப்பட்டது. இவர்களை விடவும் நமது நண்பர்களே அதிகம் உழைத்தவர்கள் இருக்கிறார்கள் என்றாலும். புகழில் இருப்பவர்கள் இப்படி களப்பணியில் இறங்குவது பாராட்டுதலுக்கும், வரவேற்புக்கும் உரியது. இவர்களின் மேல் குவியும் ஊடக வெளிச்சம் நிச்சயம் பலருக்கு உந்துதலாக இருக்கும் அவர்களும் உதவிக்கு வர.

தமிழகம் அவ்வப்போது தவிக்கவிடும் மீனவர்களின் உதவியும் மீட்புப் பணியில் மிகக் குறிப்பிடத்தகக்து. படகுகளை வெள்ளத்தில் இயக்கி அனைவரையும் மீட்டதும், நிவாரணப் பொருட்கள் கொண்டு சேர்த்ததுமாக மிகச்சிறப்பான பணிகளைச் செய்துள்ளனர்.

இந்த இக்கட்டிலும், பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள்,துப்புரவுப் பணியாளர்கள், ரயில்வே துறை, இப்படி அரசு ஊழியர்கள் அனைவரின் தொடர் பணியையும் நாம் மனமாரப் பாராட்டியே ஆக வேண்டும்.

பள்ளிகள், தனியார் ஊழியர்கள், அரசு ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், இணைய நண்பர்கள் என பலரும் வண்டி வண்டியாக உணவுப்பொருட்களையும், அத்தியாவசியப் பொருட்களையும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவை சரியாகப் போய்ச் சேருமானால், அடுத்த பத்துப் பதினைந்து நாட்களுக்கு அந்த மக்களுக்கு நல்ல ஆதரவு. அதன் பின்பு..? அரசுதான் மறுசீரமைப்பைத் துரிதமாக செய்யவேண்டும். செய்வீர்களா ..? நீங்கள் செய்வீர்களா …?

இவர்களையெல்லாம் விட கண்களில் நீர் வரும் அளவுக்கு நெகிழ வைத்தவர்கள் இவர்கள் தான். பாலியல் தொழிலாளர்கள் தங்களது இரு வேளை உணவைக் குறைத்துக் கொண்டு ஒரு லட்சம் சேர்த்து அனுப்பியதும், தாய்மார்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரத் துணிந்ததும் படித்தவுடன் உருகச் செய்துவிட்டன.
இந்த வெள்ளம் ஒரு பேரிடர் என்றாலும், இது புரிய வைத்திருக்கிறது ஆபத்துக்காலங்களில் உதவிக்கு கரங்கள் நீள்கின்றன, மதம் இனம் மற்ற எல்லா பேதங்களையும் உடைத்து எறிந்துவிட்டு மனிதம் உதவி செய்ய கூட்டம் கூட்டமாகக் கிளம்பி வரும் என்பதை.

வாழ்வின் மீது ஒரு நம்பிக்கை வந்திருக்கிறது.

அன்பு சூழ் உலகிது, அன்பு சூழ் வாழ்விது, பிரதிபலன் பார்க்காது நம்மால் முடிந்தவரை சக மனிதன் மீது, சக உயிர்களின் மீது அன்பு செய்வோம்.
புதன், 2 டிசம்பர், 2015

சென்னை , கடலூர் நண்பர்களின் துயர் துடைக்கக் கரம் சேர்ப்போம்

வணக்கம் நண்பர்களே.
சென்னை கடலூர் மாவட்டங்கள் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. நமது வாழ்நாளில் நாம் பார்த்திராத பெருமழை. மக்கள் வீடிழந்து, உடமைகள் இழந்து, வாழ்விழந்து நமது உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் நம் சகோதரர்களுக்காக கரம் சேர்க்க வேண்டிய நேரம் இது. பொள்ளாச்சி இலக்கிய வட்டம் சார்பாக அத்தியாவசியப் பொருட்களை அனுப்பும் பணியை முன்னெடுக்கிறோம். வாய்ப்புள்ள அனைத்து நல்ல உள்ளங்களும் முடிந்த வரை பொருளாக வாங்கிக் கொடுங்கள். முடியாதவர்கள் பணமாகவும் தரலாம். நாளை 03.12.15 அன்று நமது முதற்கட்ட உதவிப் பொருட்களை அவர்களுக்கு அனுப்ப வேண்டும். தொடர்பு கொள்ளுங்கள்.
இரா.பூபாலன் 98422 75662
.அம்சப்ரியா 90955 07547
பொருளாகத் தருபவர்கள், கீழ்க்கண்ட பொருட்களைத் தரலாம். அத்தியாவசியப் பொருட்கள் வேறு விடுபட்டிருப்பின் தெரிவிக்கவும்
 • போர்வைகள்
 • பாய்
 • துண்டு
 • உடைகள் ( அனைத்து வகையிலும் )
 • பற்பசை, ப்ரஷ்
 • சோப்பு மற்றும் ஷாம்பு வகைகள்
 • மண்ணெண்ணெய் அடுப்புகள்
 • மருத்துவ உபகரணங்கள்
  உணவு வகைகள் :
 • ரொட்டி
 • பிஸ்கட் வகைகள்
 • பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்
 • பால் பவுடர்கள், பால் புட்டிகள்
பணமாக அனுப்புபவர்கள் கீழ்க்காணும் வங்கிக் கணக்குக்கு அனுப்பலாம். அனுப்பிவிட்டு விவரத்தைத் தெரிவிக்கவும்
R Boobalakrishnamoorthy
Account number 615201510464
ICICI bank
Ifsc ICIC0006152

Ramnagar branch