புதன், 10 ஆகஸ்ட், 2016

ஹலோ நான் திருடன் பேசறேன்..

கொலுசு மின்னிதழில் நான் எழுதும் கட்டுரைத் தொடரில் இந்த மாதம் ....

தேநீர் இடைவேளை தொடர் 5

ஹலோ நான் திருடன் பேசறேன்..

சிலநாட்கள் முன் ஒரு அலைபேசி அழைப்பு வந்தது, ஒரு பெண் பேசினாள். குலுக்கலில் எனது பெயர் தெரிவாகியிருக்கிறதாம். 5000 ரூபாய் மதிப்புள்ள வெள்ளி லட்சுமி சிலை, ஒரு குத்துவிளக்கு, ஒரு எந்திரம், இன்னும் என்னவோ சொன்னார்கள் அத்துனையும் எனக்கு இலவசமாக அனுப்பி வைப்பார்களாம். இது அவர்களது கம்பெனி விளம்பரத்துக்காகவாம். இதைக் கேட்டதும் உலகத்தில் இவ்வளவு நல்லவர்கள் இருக்கிறார்களா என்று தான் கேட்டேன். அந்தப் பெண் உங்கள் போன் நெம்பர் செலக்ட் ஆகியிருக்கு என்றவள், இதற்காக தபால் செலவு 1500 மட்டும் நீங்கள் கட்டினால் போதும் என்றாள். இப்போ தான் மேட்டருக்கே வருகிறாள் என்று நினைத்தேன். 5000 பரிசு தருபவர்கள் 1500 தபால் செலவு ஏத்துக்க மாட்டிங்களா என்றேன். இல்லை சார், கம்பெனி விதிமுறைப்படி நீங்க கட்டனும் என்றாள். நான் சரிங்க, 1500 ரூபாய் தபால் செலவு போக 3500க்கு மட்டும் எனக்கு பரிசு குடுங்க கூரியர்ல அனுப்பி வைங்க இல்லனா உங்க ஆபீஸ் அட்ரஸ் குடுங்க வந்து வாங்கிக்கறேன் என்றேன். நான் கலாய்க்கும் மூடில் இருப்பது தெரிந்துவிட்டது போல, அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

இந்த மாதிரி அவ்வப்போது ஏதாவது அழைப்பு வரும். அலைபேசி வாங்கிய புதிதில் கண்டமேனிக்கு இப்படி அழைப்புகள் வருவதுண்டு. DND யில் பதிவு செய்த பிறகு கொஞ்சம் குறைந்துவிட்டது. True caller இல் இப்போது தகவல்கள் வந்துவிடுகின்றன.

சதுரங்க வேட்டை படம் மாதிரிதான், விதவிதமாக யோசித்து நம்மை சாய்க்க வருவார்கள் இவர்கள். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது இப்போதெல்லாம் திருடர்களும் வளர்ந்துவிட்டார்கள். இணையத்தில் கண் இமைக்கும் நேரத்தில் நமது பணத்தை இழக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

நைஜீரிய விதவை பல லட்சம் பவுண்டுகள் பணத்துடன் காத்திருப்பதாக நம்மில் பலருக்கும் மின்னஞ்சல் வந்திருக்கும் அல்லவா, அதே மாதிரி ஒரு மின்னஞ்சல் நண்பன் ஒருவனுக்கு வந்துள்ளது. அவனுக்கு இது மோசடி மின்னஞ்சல் எனத் தெரியும் இருந்தும் அதிலுள்ள இணைப்பில் என்ன தான் இருக்கிறது எனப்பார்க்கலாம் என்று சொடுக்கி டவுன்லோட் செய்துள்ளான். ஏதோ ஒரு இணையப் பக்கம் திறந்துள்ளது, டவுன் லோட் செய்யப்பட்ட பைலையும் உடனே அழித்தும் விட்டான். ஆனால் , ஹேக்கர்ஸ் எனும் இணையத் திருடர்கள் மதிநுட்பம் மிகுந்த தந்திரக்காரர்கள் என அன்று தான் நான் உணர்ந்து கொண்டேன். அவன் டவுன்லோட் செய்த அடுத்த கணத்தில் அவனது ஜிமெயில் கணக்கு விவரம், வங்கிக்கணக்கு விவரம் அனைத்தும் திருடப்பட்டிருக்கிறது . ( நண்பன், தனது வசதிக்காக தனது லேப்டாப்பில் ஜிமெயில்,ஃபேஸ்புக், கணக்கு விவரங்களனைத்தையும் சேமித்து வைத்திருக்கிறான். Autofill மூலமாக ) இரண்டாம் நாள் அவனது கணக்கிலிருந்த பணம் முழுதும் காலி.

அலுவலகத்தில் புதிதாக அலுவலக உதவியாளராகச் சேர்ந்த பையனுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வங்கிக் கணக்கில் தான் போடுகிறார்கள். அவனுக்கு இப்படி ஏதோ லிங்க் வந்திருக்கிறது. ஒரு ரூபாய்க்கு ஆண்ட்ராய்ட் போன் என்று வந்ததும் பையன் உற்சாகமாகி அந்த லிங்கைச் சொடுக்கியிருக்கிறான். அதில் இவனது வங்கிக் கணக்கு எண், கடவுச்சொல், அலைபேசி எண் எல்லாம் கேட்டிருக்கிறது இவனும் நல்ல பிள்ளையாக அனைத்துத் தகவல்களையும் ஓரமாக உட்கார்ந்து கொடுத்திருக்கிறான். கொஞ்ச நேரத்தில் என்னிடம் வந்து அண்ணா யாரோ அலைபேசியில் அழைத்து ஆங்கிலத்திலும் இந்தியிலும் என்னவோ கேட்கிறார்கள் புரியவில்லை பேசுங்கள் என்று என்னிடம் கேட்டான். நானும் என்னவோ என்று வாங்கிப் பேசினால், அவன் உங்கள் செல்பேசிக்கு OTP ( One time password ) வந்திருக்கும் அதைச் சொன்னால் உங்களுக்கு ஆண்ட்ராய்டு போன் அனுப்பி வைக்கப்படும் என்று சொல்கிறான் கொஞ்சம் சுதாரித்து இவனிடம் என்னடா நடந்தது என்று விசாரித்து இவனை இரண்டு திட்டு திட்டிவிட்டு அலைபேசியில் இருந்தவனிடம் இரண்டு வசைமொழிகள் பாடிவிட்டு வைத்தேன். உடனடியாக இவனது வங்கிக் கணக்கின் கடவுச்சொல்லை மாற்றச் சொன்னேன். நல்லவேளையாக பெரும் மோசடியிலிருந்து தப்பிவிட்டான்.

ஆச்சர்யமாக, வேறொரு பிரிவில் இருந்த ஒரு பையனுக்கு இப்படி ஒரு அழைப்பு வந்திருக்கிறது. வங்கியிலிருந்தே அழைப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அவன் சகலத்தையும் சொல்ல அவனது கணக்கில் இருந்த எட்டாயிரம் ரூபாயை அப்படியே லவட்டிவிட்டார்கள். புலம்பியவன் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளான். இப்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் ஒரு பெரிய கூட்டமே வேலை செய்கிறது. புதிதாக வங்கிக் கணக்கு துவங்குபவர்களின் விவரங்கள் எப்படியோ அவர்களுக்குச் செல்கிறது. அவர்கள் வலையை வீசுகிறார்கள். மாட்டுபவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்.

ஒரு நண்பன் பவர் பேங்க் விலை வெறும் 300 ரூபாய் என்று வந்ததை நம்பி வாங்கினான். அவர்கள் சொன்னது மூன்று முறை சார்ஜ் செய்யலாம் என்று ஆனால் ஒரு முறை கூட முடியவில்லை. பிரித்துப்பார்த்தால் அதில் மூன்று பேட்டரி இருக்கும் இடத்தில் ஒரு பேட்டரியும் மிச்ச இரண்டும் டம்மியாகவும் உள்ளது. பவர்பேங்க் இன்னும் என்னிடம் தான் கிடக்கிறது. இப்படி நுட்பமாக ஏமாற்றக்கூடும். அவனும் 300 ரூபாய் தானே போகட்டும் என விட்டுவிட்டான், ஆனால் திருடர்களுக்கு எத்தனை 300 கிடைத்திருக்கும்.

நான் சீனாவின் ஒரு நம்பகமான தளத்தில் பென் டிரைவ் வாங்கினேன், 64GB. எல்லாம் சரியாகத்தான் இருந்தது. 64 ஜிபி என்று தான் காட்டியது 16 ஜிபி வரை கோப்புகளைப் போட்டு உபயோகப்படுத்தி வந்தேன். இரு மாதம் கழித்து 16ஜிபி க்கு மேல் ஏற்றும் போது ஏறவே இல்லை. அப்போது தான் புரிந்தது 16 ஜிபி பென் டிரைவை 64 ஜிபி என்று ஏமாற்றி விற்றுவிட்டார்கள் என்பது. வாரன்டி காலமும் முடிந்துவிட்டது. புகார் தந்து வேறு வாங்கவோ, திருப்பித்தரவோ வாய்ப்பில்லாமல் போய்விட்டது. எனவே ஆன்லைனில் எந்தப் பொருள் வாங்கினாலும் அவற்றை உடனடியாக முற்றிலும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.

சமீபத்தில் எங்கள் அலுவலகத்தின் ஐ.டி துறையிலிருந்து ஒரு சுற்றறிக்கை வந்தது. அதில் குறிப்பிட்டிருந்தது என்னவென்றால், எங்கள் நிறுவனம் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒரு தனியார் வங்கியின் இணையதள முகவரியைப் போலவே ஒரு திருட்டுக்கும்பல் இணைய தள முகவரியைத் துவங்கியுள்ளது. எங்களுக்கு சம்பளமெல்லாம் அந்த வங்கியில் தான் போடுவார்கள். அச்சு அசல் ஒரிஜினல் வங்கி இணையதளம் போலவே இருக்கிறது. மிக உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே அது போலியான இணையதளம் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். எனவே பயனர்கள் போலி இணையதளத்தில் விவரங்களைக் கொடுத்து ஏமாந்து விடவேண்டாம் என எச்சரித்திருந்தார்கள். ஒரு வேளை நாம் நமது கடவிச்சொல் , பயனர் கணக்கு உள்ளிட்ட விவரங்களை போலி தளத்தில் பதிவிட்டால் நமது வங்கிக் கணக்கு சூறையாடப்படும். இப்படி ஒவ்வொரு தளத்துக்கும் இணையத்தில் போலி தளம் உருவாக்கி திருடுபவர்கள் இருக்கிறார்கள்.

நமது விவரங்களை மிக நுட்பமான பல வழிகளில், பல காரணங்களுக்காக நம்மிடமிருந்தே திருடுகிறார்கள். இவற்றிலிருந்து கவனமாக தப்பிக்க சில யோசனைகள் எனக்குத் தெரிந்தவற்றைச் சொல்கிறேன்

 • வங்கிக் கணக்கு, ATM Pin, போன்ற விவரங்களை யாரிடமும் எக்காரணம் கொண்டும் தர வேண்டாம். மேலும், வங்கிக் கணக்கு, மின்னஞ்சல் போன்ற முக்கியமான பயனர்கணக்குகளுக்கு அடிக்கடி கடவிச்சொல்லை மாற்றிவிடவும்.
 • கடவுச்சொல் உங்கள் பெயர்123 போல எளிமையாக வைக்க வேண்டாம்.
 • தேவையற்ற மின்னஞ்சல் இணைப்புகளைச் சொடுக்க வேண்டாம். அவையெல்லாம் தொட்ட .. நீ கெட்ட வகைகள் தாம்.
 • இலவசமாக செல்பேசி கிடைக்கிறது, டி.வி கிடைக்கிறது என்று உங்கள் நண்பர்களே அனுப்பினாலும அதைச் சீண்ட வேண்டாம்
 • இப்போது முகநூலில் உங்கள் ஜாதகம், உங்களுக்குப் பொருத்தமான நடிகை என பல்வேறு விளையாட்டுகள் வருகின்றனவல்லவா அந்த செயலி அல்லது இணையதளங்கள் வழியாகக் கூட உங்கள் விவரங்களைத் திருட முடியும். காரணம் அந்த இணைப்பு அத்தனையிலும் நாம் நமது பயனர் பெயர், கடவுச் சொல் கொடுத்துத்தான் உள்நுழைகிறோம் எனவே கவனம்.
 • மிக முக்கியமாக, பண பரிவர்த்தனை நடக்கும் தளங்கள் அனைத்தும் https:// என்று துவங்குகிறதா என்று பார்க்கவும். இதில் S – என்பது பாதுகாப்பான தளம் (Secured) என்பதைக் குறிக்கிறது.
 • தளங்களில் தேவையற்ற பாப்-அப்களை ப்ளாக் செய்து வையுங்கள்
 • வெளிநாட்டு எண்களிலிருந்து அழைப்பு வருவதைப்போல +31 போன்ற எண்கள் வரும்போது கவனம். தவறிய அழைப்பு வந்தால் தயவு செய்து திரும்ப அழைத்துப்பார்க்க வேண்டாம்.
 • முடிந்த வரை கடவுச் சொல் உள்ளிட்ட முக்கியத் தகவல்களை எங்கும் சேமித்து வைப்பதோ, எழுதி வைப்பதோ, அல்லது தானியங்கி முறையில் கணினியே நிரப்பிக்கொள்ளும்படியோ ( Autofill ) வைக்க வேண்டாம்.
 • பணப்பரிவர்த்தனைகளை இன்டெர்நெட் பிரெளசிங்க் சென்டர்களில் செய்வதைத் தவிருங்கள்.
 • வங்கியிலிருந்து அழைத்து எப்போதும் உங்கள் பயனர் எண், கடவுச்சொல் ஆகியவற்றைக் கேட்க மாட்டார்கள். கேட்டால், கவனமாக துண்டித்துவிடுங்கள்.
 • ஆன்லைனில் பொருட்கள் வாங்க நம்பகமான தளத்தை மட்டும் பயன்படுத்தவும், அவற்றிலும் பாதுகாப்பான முறையில் இயக்கவும். சில பெயர் தெரியாத தளங்களில் 500 ரூபாய் பொருள் 50 ரூபாய் தான் என விளம்பரம் வந்தால் அங்கும் போய் ஏமாற வேண்டாம்.
 • ஸ்மார்ட் போன் வைத்திருப்போர், அங்கீகரிக்கப்பட்ட தளங்களிலிருந்து ( கூகுள் ப்ளே, ஆப் ஸ்டோர் ) மட்டுமே செயலிகளைத் தரவிறக்கவும். வேறு இணைப்புகளிலிருந்து தரவிறக்க வேண்டாம். செயலிகளில் புதிய வெர்சன் வந்தால் அங்கீகரிக்கப்பட்ட தளங்களிலேயே கிடைக்கும். மற்றவர்கள் பகிர்வது ஆபத்தானவை ( சமீபத்தில் வாட்சப் கோல்டு என்று அனைவருக்கும் வந்ததே, அது போலி. அதை சொடுக்கியவர்கள் எத்தனை பேருக்கு வாட்சப் கோல்டு கிடைத்தது ??)
 • உங்கள் மொபைல், கடனட்டை, வங்கி அட்டை எது தொலைந்து போனாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனம் / வங்கிக்கு அழைத்து அவற்றைச் செயலிழக்க வையுங்கள். பின்னர் புதிது வாங்கிக்கொள்ளலாம்.


இவையெல்லாம் என் அனுபவத்திலும், அறிவிலும் இருந்து சொல்லப்பட்டவை. இந்தப் பரந்த உலகத்தில் திருடர்கள் பரந்து கிடக்கிறார்கள். உஷாரய்யா உஷார் ...

கொலுசு இதழில் வாசிக்க

http://kolusu.in/kolusu/kolusu_aug_16/index.html#p=13