செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

நினைவுகளின் வாதை

ஒரு நாளை நினைவு வைத்துக்கொள்வதில்
எப்போதும் பிணக்குண்டு
சதா நச்சரிப்பாள்
இந்த நாளை மறந்துவிட்டாயா
இந்த நாளைக் கூட மறந்துவிட்டாயா
என்றவள் கேட்கும் போதெல்லாம்
உள்ளுக்குள் குறுகிக் கொள்ளும் மனப் பறவை
அப்போதெல்லாம் 
தன் நினைவுகளைத் தானே
சபித்துக் கொள்வான்.
எந்த நல்ல நாளையும் எளிதில்
மறந்துவிடும் ஒரு முட்டாளுக்கு
வேறென்ன தர ?
இந்த நாளை
ஒரு
கொடுஞ்சாபமெனத் தந்துவிட்டுப்
போயே விட்டாள்
இந்த நாள்
ஒரு கருந்திட்டுப் போல
அப்பிக்கொண்டுவிட்டது
இனி
ஒவ்வொரு ஆண்டும்
என் முன் வந்து நிற்கும்
நான் அதன் காலில் விழுவேன்
கதறுவேன்
அது மேலும் மேலும்
துயரத்தை சிங்காரித்துக்கொண்டு
என்னைப்
பழிவாங்கும்
ஆம் 
நினைவுகளின் வாதைகள்
கொடுந்தண்டனைகிழமைகள் கவிதைகள் மற்றும் குரங்குகள்

1.

அதிகாலையின்
அரைகுறை விழிப்பில்
திங்கட்கிழமையைக் கண்டு கொள்வது
எளிது
எல்லாக் கிழமைகளிடமும்
காலை வணக்கம் சொல்வேன்.
பதில் வணக்கம் சொல்லாது
திங்கட்கிழமை மட்டும் முறைக்கும்

2.

செவ்வாய்க்கிழமைகள்
புனிதமானவை
விரதங்களால் துவங்கும் வழக்கம் அவற்றுக்கு
கோவில் பிரகாரங்களில்
வழிபாட்டுக் கூட்டங்களில்
செவ்வாய்க்கிழமை மிக 
எளிதில் காணக் கிடைக்கும்
செவ்வாய்க்கிழமையை
எதிர்கொள்வதில் ஒரு தொந்தரவும்
இருக்காது
மேலும் ஒரு திங்கட்கிழமைக்குப்
பழகியவன்
செவ்வாய்க்கு வழக்கமாகிவிடுவான்

3.

பொன் கிடைத்தாலும்
புதன் கிடைக்காது என்பவர்களின்
மத்தியில் இருக்கிறது கிழமை
எல்லா புதன் கிழமையிடமும்
பொன்னை எதிர்பார்ப்பதில்லை என்றாலும்
எந்த ஒரு புதன் கிழமையும்
பொன்னென மிளிர்ந்ததில்லை
இது நாள் வரை
வாரத்தின் மத்தியில்
வந்தமர்ந்து விட்ட புதன்கிழமையை
வரவேற்கவும் தோன்றாது
வழியனுப்பவும் தோன்றாது


4.

வியாழக் கிழமைக்கென்று
விஷேஷம் ஏதும் இருப்பதில்லை
அதைப் பெரிதும் யாரும்
போற்றுவதுமில்லை தூற்றுவதுமில்லை
வகுப்பறையில்
அலுவலகத்தில்
நகர் வீதிகளில் என
எப்போதும் கூட்டத்தில் ஒருத்தன்
முகம் வியாழக்கிழமைக்கு

5.

வெள்ளிக்கிழமைகள்
வெறுமையாகிக் கிடக்கின்றன
மஞ்சளும் பச்சையுமாக மினுங்கும்
அவற்றை இப்போதெல்லாம்
காண முடிவதில்லை
அதிகாலை வாசலில் மொழுகப்பட்ட
சாணத்தின் வாசனையை
வைத்திருப்பவை வெள்ளிக்கிழமைகள்
வெள்ளிக்கிழமைகள் தாவணிகள் அணிபவை
கண்ணாடி வளையல்களும்
பெரிய ஜிமிக்கிகளும்
பாண்ட்ஸ் பவுடரும்
கூடுதல் அடையாளங்கள் அவற்றுக்கு
அம்மன் கோவில் பிரகாரங்களில்
சிரிப்பொலிகளாய் சிதறிக்கிடக்கின்றவை அவை
இப்போதெல்லாம்
பன்னாட்டு நிறுவனங்களின் புண்ணியத்தில்
வெள்ளிக்கிழமை மாலைகள்
வண்ணம் பூசிக்கொள்கின்றன
கொண்டாட்டங்களுக்கென

6

சனிக்கிழமைகள்
உழைப்பவர்களின் கனவு நாட்கள்
வாரக்கூலிக்கு
சனிக்கிழமைக்குக் காத்திருக்கும் மனிதர்கள்
வலி முதல் பசி வரை
யாவற்றையும்
சனிக்கிழமைக்கு ஒத்திப் போடுகிறார்கள்
சனிக்கிழமைக்கு
எப்போதும் வியர்வை வாசம்


7

ஞாயிற்றுக்கிழமையின் மீது அவனுக்கு
அவ்வளவு காதல்
வேலைநாட்களின் எல்லா
அழுத்தங்களையும் அவன் அதனிடம் தான்
இறக்கி வைப்பது வழக்கம்
ஞாயிறு அவனைத் தாலாட்டும்
ஞாயிறு அவனைக் கொண்டாடும்
ஞாயிறு அவனுக்கு சர்வ சுதந்திரத்தைத் தரும்
ஞாயிறு அவனுக்கு அம்மாவைப் போலஒவ்வொரு கிழமையின் மீதும்
ஒரு குரங்கு குதித்துக் கொண்டிருந்ததல்லவா
அதற்கு உண்மையில்
கிழமைகள் குறித்து
ஒரு பிரக்ஞையுமில்லை
ஒரு கவலையுமில்லை
எல்லா நாளும் ஒரு நாளே
என்றது குதித்துக் கொண்டிருக்கிறது

நன்றி : புன்னகை  கவிதை இதழ் 79

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

இனிய உலக புத்தக தின வாழ்த்துகள்

 இனிய உலக புத்தக தின வாழ்த்துகள்

புத்தகம் ஆகச்சிறந்த வழிகாட்டி;
அற்புதமான துணை.

உலக புத்தக தினத்துக்காக தனது சேனலில் ஏதாவது பேசுங்கள் என மகள் பாரதி எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்..

நீங்களும் இதைக் கேளுங்கள்.. குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவியுங்கள்..


புதன், 24 பிப்ரவரி, 2021

சலுகை விலையில் எனது புதிய மூன்று கவிதைத் தொகுப்புகள்

வணக்கம்

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் வெளியிடப்பட்ட ரூ 270 மதிப்புள்ள எனது மூன்று கவிதை நூல்களும் சலுகை விலையில் ரூ200க்கு நண்பர்களுக்கு அளிக்கப்படும். 

தேவைப்படும் நண்பர்கள் ரூ200 + தபால் செலவு ரூ50 மொத்தம் ரூ 250 எனது கீழ்க்கண்ட எண்ணுக்கு கூகுள் பே செய்யலாம் அல்லது எனது வங்கிக் கணக்கில் பணம் செலுத்திவிட்டு முகவரி அனுப்புங்கள் உடனே அனுப்பி வைக்கப்படும்

கூகுள் பே எண் : 98422 75662

வங்கிக் கணக்கு விவரம்

R BOOBALAKRISHNAMOORTHY

ICICI - RAMNAGAR Branch

Account Number : 615201510464

IFSC : ICIC0006152