வெள்ளி, 24 ஏப்ரல், 2020

காக்கைமை - வானமெங்கும் கருமையை மிதக்க விடும் கவிதைகள்

  காக்கைமை - வானமெங்கும் கருமையை மிதக்க விடும் கவிதைகள்

பறவைகள் நமக்கு விருப்பமானவை. நமது வளர்ப்புப் பிராணிகளில் பறவைகள் பிரத்யேக இடம் பிடிப்பவை. கிளிகளை,குயில்களை, புறாக்களை விரும்பும் நாம் காக்கைகளை விரும்புகிறோமா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. காக்கைகள் நாம் பெரிதும் பொருட்படுத்தாத பறவைகள். நமது வரலாற்றில் காக்கைகளுக்கு நல்ல இடம் உண்டு. சங்க காலத்தில் இருந்தே நமது இலக்கியங்களில் பதிவான; தமிழ் மக்களுடன் நெருக்கமான உறவில் இருந்த பறவை காக்கை. காக்கைக்குச் சோறிடுதல் தமிழரின் பழங்காலத்திலிருந்து இன்று வரை தொடரும் பழக்கங்களில் ஒன்று. நம்மோடு, நம் நிலத்தில் எண்ணிக்கையில் நிறைந்து இருக்கும் இந்தப் பறவை நவீன இலக்கியத்தில் மிக அரிதாகவே பதிவாகிக் கொண்டிருக்கிறது. இச்சூழலில், காக்கையை பிரதானப் பாடுபொருளாக்கி காக்கைமை என்கிற ஒரு நவீன கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார் கவிஞர் பூர்ணா.

குரல்கள் ஒப்பீடு எதற்கு
குயிலின் வளர்ப்புத் தாய் காக்கை

என்று முதல் வரியிலேயே தனது கவிதையில் அரசியலைத் துவங்கிவிடுகிறார். குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது, அவை காக்கையின் கூட்டில் முட்டையிட, காக்கை அதனை அடை காத்து குஞ்சு பொறிக்கும் என்பது நாம் படித்துத் தெரிந்துகொண்ட உண்மை. குயிலின் குரலை உயர்த்திப் பேசும் போதெல்லாம் ஒப்பிட நமக்குக் கிடைப்பது காக்கையின் குரல் தானே ? ஒப்பீடு எதற்கு என்கிற கேள்வியோடு முடியும் இந்தக் கவிதையில் குயிலாகவும் காக்கையாகவும் நாம் எதையும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்; குறிப்பாக குழந்தைகளைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளும் போது காக்கைமை குழந்தைமையைக் கவனிக்கச் செய்யும் கவிதையுடன் துவங்குகிறது.

எச்சத்தில் வேப்பமரங்களை
விதைக்கும் காக்கையை
நிழலில் படுத்துக் கொண்டு
கல் எறிகிறார்கள்

இந்த பூமியில் இருக்கும் பெரும்பங்கு மரங்களையும் வனங்களையும் விதைத்து உருவாக்கியது பறவையினங்களும் விலங்கினங்களும் தாம். நாம் அவற்றை அழிப்பதில் தான் குறியாயிருக்கிறோம் என்பதை உணர்த்தும் கவிதை இது.

நண்பகல் மணியடித்தவுடன்
பறந்து வரும் காக்கைகள்
பள்ளி விடுமுறையில் எங்கு திரியும் ?

மனிதம் துளிர்க்கும் கவிதைக் கேள்வி இது. இந்தக் கவிதை சொல்லும் துயரம் புரிந்தது. நான் சொல்ல வந்தது இந்தக் கவிதைக்கான அழகான பதில் ஒன்றை. பொள்ளாச்சி அருகே பெத்தநாயக்கனூர் கிராம அரசுப் பள்ளியில் இந்தக் கதை நடந்தது. மதிய வேளைகளில் உணவுக்கு வரும் காக்கைகள் கோடை விடுமுறையில் பசிக்கு அலைய வேண்டாம் என நினைத்த சில மாணவர்கள் தினமும் தங்களது மதிய உணவை பள்ளிக்கே கொண்டு வந்து உண்டு பறவைகளின் பசியாற்றியிருக்கிறார்கள். கூடவே கோடை விடுமுறையில் பள்ளி வளாகத்தைத் தூய்மைப் படுத்தி மரக்கன்றுகள் நட்டுப் பராமரித்து பசுமையாக்கியிருக்கிறார்கள்.

பசியாறிக் கூவுகிறது குயில்
பசியாறக் கத்துகிறது காக்கை

என்கிற கவிதையிலும், பொதுப் புத்தி உயர்த்திப் பிடிக்கும் ஒன்றை, காரியமின்றி அது கூவாது என்பதாகக் கட்டுடைக்கிறார். பசியாறக் கத்தும் காக்கை, சக காக்கைகளை அழைத்து உண்பதைக் காட்சிப் படுத்துகிறார்

காக்கையை அரசியல் குறியீடாகவும் சமூகக் குறியீடாகவும் பயன்படுத்தி பல கவிதைகளை எழுதியிருக்கும் கவிஞர் காக்கைகளுக்காக இப்படி இரங்குகிறார்

அந்தியில் கூடு திரும்பாத காகங்களைக்
கணக்கெடுப்பது யார் ?

அதானே, காக்கைகள் கூடு திரும்பினாலும் திரும்பாமல் போனாலும் கூட்டைத் தவிர யார் கவலைப்படக் கூடும் ? எளிய ஒன்றின் இருப்பும் இல்லாமையும் யாரையும் சிஞ்சிற்றும் அசைத்திடாது தான்.

காக்கைப் பதிகம், காகம் இனிது, காக்கைமை, காக்கையின் நிலம், காக்கை நாற்பது என காக்கைகளுக்கான அதிகாரங்களாக கவிதைகளை அடுக்கியிருக்கும் கவிஞர் மேலும் சில பாடுபொருட்களைத் தொட்டிருக்கிறார். அவையும் இந்த வகைமைக்குள் வர வேண்டியவை தாம். பறை நாற்பது என்ற தலைப்பில் பறை இசைக்கருவியைப் பற்றிய கவிதைகள் நாற்பது உள்ளன.

பதமாக நெருப்பில் காய்ச்சி
காற்றின் காது கிழிய அடித்தோம்
விழவேயில்லை சாமியின் காதுகளில்

இந்தக் கவிதையும் விளிம்பு நிலை மக்களின் அவலநிலையைப் பேசும் கவிதைதான். அதிகாரத்தின் காதுகளிலாகட்டும் ஆண்டவனின் காதுகளிலாகட்டும் எளிய குரல்கள் சென்று விழுவதேயில்லை. கவிதைகள் அந்தப் பணியைச் செய்யட்டும்.

பந்து விளையாட்டில்
என்னையும் சேர்த்துக்கொண்டார்கள்
சாக்கடையில், மலக்குழியில் பந்து விழுந்தால்
எடுத்துத் தருவதற்கு

இந்தக் கவிதை ஒரு ஆணியின் கூர்மையென இறங்குகிறது இதயத்தில். ஒரு கவிதை செய்ய வேண்டியது அது தானே.

இந்நிலத்தில் காக்கைக்கென்று ஒன்றுமில்லை
அதன் இறகுகளும், சூடான உதிரம் தவிர

அந்தச் சிறகொடிந்த காக்கையின்
உதிர்ந்த இறகுகளிலிருந்து
எழுதிக் கொண்டிருக்கிறேன்
அதன் வரலாற்றுப் பக்கங்களை

எளிய, மிக எளிய பறவையொன்றின் இறகில் அதன் வரலாற்றை எழுதிக் கொண்டிருப்பதாக இந்த சுய அறிவுப்பு சொல்கிறது. வரலாறு புனையப்பட்டது போதும், எளிய மனிதர்களின் கைகளில் அவை ரத்தமும் நிணமுமாக ஆவணமாகட்டும். அது தான் நாளை பாடங்களாகும்.

காக்கைமை தொகுப்பில் பூர்ணா காக்கைகளாகப் பறக்கவிட்டிருப்பவை அனைத்தும் விளிம்புநிலை வாழ்வின் குறியீடுகள் தாம். காக்கைமை என்பது ஒரு புதிய தத்துவமாக புதிய கோட்பாடாக உருவாகியிருக்கிறது இந்தத் தொகுப்பில்.

தொடர்ந்து பறக்கட்டும் காக்கைகள்.


வெளியீடு : குறி வெளியீடு, வேடசந்தூர், திண்டுக்கல்
ஆசிரியர் : பூர்ணா தொடர்புக்கு : 9443827346

வியாழன், 23 ஏப்ரல், 2020

ஊரடங்கு வாசிப்பு

 உலக புத்தக தின வாழ்த்துகள்

புத்தகங்கள் இல்லாத பால்யம், புத்தகங்கள் இல்லாத பதின் பருவம், புத்தகங்கள் இல்லாத தனிமை இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்க இயலவில்லை. புத்தகங்கள் இல்லாமல் போயிருந்தால் என்னவாக ஆகியிருப்பேன் என்று சொல்ல முடியவில்லை. புத்தகங்களால் நானாகியிருக்கிறேன் என்று மட்டும் நம்புகிறேன்.

2016 வரைக்கும் வாழ்க்கை வண்ணமயமாக இருந்தது. 2017 மார்ச்சில் அப்பா தவறியதும் அது சுருங்கிப் பொலிவிழந்தது போலாகிவிட்டது. அப்பாவின் வேலைகளையும் குடும்ப வேலைகளையும் பார்த்துக் கொள்வது, அப்பாவின் இழப்பில் இழந்த மனதை மீட்டெடுக்க முடியாதது என பழைய வாசிப்பு , எழுத்து எதையும் தொட முடியவில்லை. நேரமும் சுத்தமாக அமைவதில்லை. இந்த ஊரடங்கில் ஒரு நாளும் வெளியில் போகவில்லை. வீடு தான் ; அறை தான் உலகம். தினம் ஒரு திரைப்படம், தினம் ஒரு புத்தகம், விளையாட்டு, என முழு நேரமும் எனதாக இருந்தது.

வாசிக்காமல் வைத்திருந்த, பாதியில் நிறுத்தி வைத்திருந்த புத்தகங்களில் பலவற்றை வாசித்துவிட வாய்ப்புக் கிடைத்தது.
கொரானாவுக்கு நன்றி. பல புத்தகங்களை வாசித்தேன். சில புத்தகங்களைப் பற்றி எழுதி இதழ்களுக்கு அனுப்பியிருக்கிறேன். நிறைய கவிதைத் தொகுப்புகள், தன் வரலாறு, சிறுகதைகள், இரு நாவல்கள், சுய முன்னேற்றக் கட்டுரைகள் என கலந்து கட்டி வாசித்தேன்.

தமிழில் சில பதிப்பகங்களைத் தவிர்த்து பெரும்பாலான பதிப்பகங்கள் தரமான தாளில், தரமான அச்சில் புத்தகங்களைத் தருவதில்லை.

பல பதிப்பகங்கள் எழுத்துப் பிழைகளை, சந்திப் பிழைகளைக் கவனத்தில் கொள்ளாமல் கொல்கின்றன. இது வரலாற்றுப் பிழை. பிழைகளுடன் ஒரு படைப்பை வாசிக்கும் போது அதன் உன்னதத்தை உணர்ந்து கொள்ள மனம் ஒட்டாமல் ஒரு வித சலிப்பு வந்து விடுகிறது.

இந்த ஒரு மாத காலமும் நான் வாசித்தவற்றில் சில புத்தகங்களை இங்கு பகிர்கிறேன். விரைவில் இவை குறித்த அறிமுகக் குறிப்புகளையும் எழுதுகிறேன்

நாவல் :

1. வெண்ணிற இரவுகள் - ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
2. கொண்டல் - ஷக்தி ( மீள்  வாசிப்பு )
3. வேள்பாரி - சு.வெங்கடேசன் ( வாசிப்பில் )

சிறுகதை 

1, சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை - அ.கரீம்
2.ராக்கெட் தாதா - ஜி.கார்ல் மார்க்ஸ்

கட்டுரைகள்

1. நீ இன்றி அமையாது உலகு - முகில்
2. உணவு சரித்திரம் - முகில்
3. ஐயா (எ) 95 வயது குழந்தை - வடிவரசு
4. அகம் புறம் - வண்ணதாசன்

சிறுவர் கதைகள் 

1. முட்டாளின் மூன்று தலைகள் - எஸ்.ராமகிருஷ்ணன்

கவிதைகள்

1. ஒளிர் விதை - கனிமொழி.ஜி
2. அந்த வட்டத்தை யாராவது சமாதானப் படுத்துங்கள் - கார்த்திக் திலகன்
3. சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம் - ஜெ.பிரான்சிஸ் கிருபா
4. கரப்பானியம் - வே.நி.சூர்யா
5. நெடுபனையில் தொங்கும் கூடுகள் - விஜயபாரதி
6. நீர்மையின் சாம்பல் சித்திரங்கள் - முருக தீட்சண்யா
7. எண் 7 போல் வளைபவர்கள் - மொழிபெயர்ப்பு : அனுராதா ஆனந்த்
8. மாயப்பட்சி - பா.ராஜா
9. வைன் என்பது குறியீடல்ல - தேவசீமா
10. நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன் - இசை
11. பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும் - இளங்கோ கிருஷ்ணன்
12. டல்ஹெளஸியின் ஆரஞ்சு இரவு - சம்யுக்த மாயா
13. சலூனில் காத்திருக்கிறான் சிந்துபாத் - கணேச குமாரன்
14. யட்சியின் வனப்பாடல்கள் - மனுஷி
15. கருநீல முக்காடிட்ட புகைப்படம் - மனுஷி
16. அறிந்திடாத இரவு - ஜீனத்
17. பிள்ளைத் தானியம் - ஜெயாபுதீன்
18. தபுதாராவின் புன்னகை - தாமரை பாரதி
19. மழை நிரம்பிய கால்சட்டைப் பை - மகேந்திரன் கோ
20. கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் - சேலம் ராஜா
21.அசைந்தபடியே இருக்கிறது தூண்டில் - இரா.மதிபாலா
22. கடவுளின் ஆண்குறி - சாமான்யன்
23. வேனிற்காலத்தின் கற்பனைச் சிறுமி - ராஜேஷ் வைரபாண்டியன்
24. அக்காளின் எலும்புகள் - வெய்யில்
25. கல் முதலை ஆமைகள் - ஷங்கர் ராமசுப்ரமணியன்
26. தாழம்பூ - பொன்முகலி
27. பிடிமண் - முத்துராசா குமார்
28. அரோரா - சாகிப்கிரான்
29. ஈஸ்ட்ரோஜன் - ஜான்ஸி ராணி


இவை தற்போது வரை வாசித்த பட்டியல். இன்னும் பத்து நாட்கள் இருக்கின்றன. கூடும். மேலும், நான் வாசித்தவற்றில் பிடித்தமான தொகுப்புகளை மட்டுமே பட்டியலில் சேர்த்துள்ளேன்.

இந்த எழுத்தாளர்களுக்கு என் நன்றியும் அன்பும். இந்தத் தனித்த நாட்களை அர்த்தமாக்கித் தந்தீர்கள்.

புத்தகங்கள் வரங்கள் - உலக புத்தக தினம்

இன்று உலக புத்தக தினம்புத்தகங்கள் மனிதனை இன்றைய நாகரீக மனிதனாக்கியதில் பெரும்பங்கு வகிக்கும் கருவிகள். புத்தகங்களும் கல்வியும் எழுத்தும் இல்லாமல் போனால் இன்றைய வளர்ச்சி சாத்தியமில்லாதது.

 ஏப்ரல் 23 ம் தேதிஉலக மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் மறைந்த தினம். மேலும்   உலகப்புகழ் பெற்ற டான் குவிக்சாட் நாவலை எழுதிய எழுத்தாளர் செர்வாண்ட்ஸ் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரும் இந்த தினத்தில் தான் மறைந்தனர். மேலும் விலாதிமீர் நொபோகோவ்ம் மவுரீஸ் டூரான், ஜோசப் பிளா உள்ளிட்ட எழுத்தாளர்களின் பிறந்த தினமாகவும் இது அமைகிறது  இவை தான் இந்த தினம் புத்தக தினமாகக் கொண்டாடக் காரணிகள்.

புத்தகம் என்பதை புது அகம் எனப் பொருள் கொள்ளலாம். ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் நம் அகம் புத்துணர்வு பெறும் என்பதாக உணரலாம்.

புத்தகம் காலத்தின் கண்ணாடி என்பது நிதர்சனம். புத்தகங்கள் தாம் எழுதப்பட்ட காலத்தின் சமூக, அரசியல், பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கின்றன. இதன் வழியே வரலாற்றை நாம் அறிந்து கொண்டோம். எகிப்தின் வரலாறு மம்மிக்கள் என்கிற பிணங்களைக் கூறாய்ந்தே அறியப்பட்டது. ஆனால் தமிழ் மொழியின் வரலாறு, இந்த மொழியில் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே எழுதப்பட்ட இலக்கிய விழுமியங்களை வைத்துக் கணக்கிடப் பட்டது. மற்ற நாகரிகங்கள் எழுந்து நடக்கப் பழகியிருந்த காலத்திலேயே தமிழன் சிந்தனையில் எழுத்தில் பறக்கப் பழகியிருந்தான் என்பதற்கான சாட்சிகளாக நம் பண்டைய இலக்கியப் படைப்புகள் இருக்கின்றன. நமது தலையாய பெருமைகளில் ஒன்றாக அவை விளங்குகின்றன.

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே என்கிறார் தோழர் லெனின். எத்துணை சத்திய வாக்கு இது. புரட்சி என்பது நமக்கு நமது வாழ்வாகவே இருக்கிறது அடுத்த நாளைக் கடத்துவதும், அடுத்த நாளை நிச்சயமாக்குவதுமே பெரும் போராட்டமாக இருக்கிறது. புத்தகங்கள் இந்த வாழ்க்கைக்கான மிகப் பெரிய ஆயுதங்களாக இருக்கும் என்பது உண்மை தான்.

" உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!" என்கிறார் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட். சில ஆண்டுகள் மட்டுமே வாழ வாய்க்கும் வாழ்க்கையை நீட்டிக்கும் ஆவலில் மனிதன் இந்த உடலின் மீது எத்துணை கவனக்குவிப்புகளை நிகழ்த்துகிறான், உடற்பயிற்சி, ஆரோக்ய உணவு, மருத்துவம் என இந்த உடலைப் பேணிக்காக்க நினைக்கிறான். ஆனால் இந்த உடலை இயக்கும் ஆதார சக்தியான மனதைக் கண்டு கொள்கிறோமா ? அதற்கு என்ன மருத்துவம் என்ன பயிற்சி அளிக்கிறோம் ? மனதுக்கான பயிற்சி தான் புத்தக வாசிப்பு. புத்தகங்கள் நமது அகத்தைத் திறக்கும் சாவிகள். மனிதனை மனிதனாக வாழ புத்தகங்கள் சாவிகள் தருகின்றன.

ஒரு புத்தகம் என்பது ஒரு எழுத்தாளன் இருக்கும் தவம். அதனை வாசிப்பதன் வழியாக யாரோ இருந்த தவத்தின் பலனை நாம் அடைந்துகொள்கிறோம். ஒரு வகையில் இது வரத்தை அடைய ஒரு குறுக்கு வழியல்லவா ?

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் வாசிப்புப் பழக்கம் தற்போது குறைந்துவிட்டது. கல்வி தரும் அழுத்தம், செல் பேசி, கணினி, தொலைக்காட்சி போன்ற கருவிகளின் நேர அபகரிப்பு, போன்ற காரணிகளால் நாம் நமது வாசிப்பின் மகத்துவத்தை மறந்து விட்டிருக்கிறோம். 

வாசிக்கும் கணங்களில் நாம் நமக்கு சிறகுகளைப் பொருத்திக் கொள்கிறோம்; புத்தகத்தின் பக்கங்களில் குறிப்பிடப் பட்டிருக்கும் ஊர்களுக்கு பறந்து செல்கிறோம். புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மனிதர்களுடன் உரையாடுகிறோம். புத்தகங்களின் மாந்தர்கள் சிரிக்கும் போது சிரித்தும் அழும் போது அழுதும் நமக்குள் இருக்கும் ஈரத்தைத் தக்க வைத்துக் கொள்கிறோம். மொத்தத்தில் புத்தக வாசிப்பின் போது நாம் அந்தப் புத்தகத்தின் வாழ்க்கையை வாழ்கிறோம். அது தரும் சுவை அலாதியானது. அந்த சுவையை நாம் அனுபவிக்கவும் ; நமது பிள்ளைகளை அனுபவிக்கச் செய்வதும் நமது  கடமை.

ஓர் ஆண்டுக்கு தமிழில் மட்டும் எத்துணை ஆயிரம் புத்தகங்கள் அச்சாகின்றன ? அவற்றை எல்லாம் படித்து முடித்து விட முடியுமா ? தமிழ் மொழியில் சங்க இலக்கியங்கள் தொட்டு, புராண, இதிகாச, தத்துவ, இலக்கண நூல்கள் எத்தனை எத்தனை இருக்கின்றன. அவற்றின் அளப்பரிய அறிவுச் செல்வத்தை நாம் நமதாக்கிக் கொள்ள வேண்டாமா ?

வாசிப்பு தவம். மற்ற எந்தப் பொழுது போக்குகளையும் விடவும் மேன்மையான மற்றும் அறிவார்ந்த செயல். சொல்லப் போனால், வாசிப்பு என்பது ஒரு வகை போதை தான். நல்ல போதை. மற்ற தீய போதைகளிலிருந்து நம்மைக் காக்கும் ஒரு நல்ல போதை வாசிப்பு. தினமும் சில பக்கங்களைப் புரட்டி வாசிப்பதன் மூலம் நமது வாழ்வின் பக்கங்களை அர்த்தமாக்கிக் கொள்ள முடியும். வாசிப்போம் . 

பல லட்சக்கணக்கான புத்தகங்கள் அறிவுக் கடலென காத்திருக்கின்றன கற்று முடிக்க நம் ஆயுள் போதாது இன்றே வாசிக்கத் துவங்குவோம்..வாழவும்..

உலக புத்தக தின வாழ்த்துகள்

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

தனிமையின் கண்களுக்கு ஒளியூட்டல்

இந்த மாத கொலுசு மின்னிதழில் எனது இரண்டு கவிதைகள் காணொலியாக வெளியாகியுள்ளன..

வாசிக்கவும், பார்க்கவும் இங்கு ...

https://youtu.be/fuRx2A1EqDo

கவிதை ஒன்று

தனிமை
வரம் சாபம் என
யாவரும் மதில்மேல் பூனையாகியிருக்க
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாகியிருக்கிறது
தனிமை

தனிமையின் மிகப்பெரிய கதவுகளை
இந்தக் காலம்
திறந்து விட்டிருக்கிறது
மற்றமையின் கதவுகள்
ஒவ்வொன்றாய் அடைத்துக்கொண்டபோது
இந்தக் கதவுகள் திறந்து கொள்வது
இயல்பு தான்

தனிமையின் வாசலுக்கு
வந்து சேர்பவற்றில்
யாவும் இருக்கின்றன

மிக அதிகமாகக் குரூரம் படையெடுக்கிறது
வெறுமனே கடந்து போகும்
சிற்றுயிர் ஒன்றின் தலை திருகி
நசுக்கி ரசிக்கிறது தனிமை

கண்காணிக்கும் கண்களைப் பற்றிய
பயமேதுமின்றி
அந்தரங்கங்களை அலையேற்றி
விடுகின்றது 

ஒப்பனைகளின் அவசியமற்றுப் போன
தனிமை
தனது சிரங்குகளை கீறிச் சுகம் காண்கிறது
நிணவாடையையும் ரசித்துத் தொலைக்கிறது

ஒரு சாத்தானைப் பழக்கப்படுத்துவது
போல இருக்கிறது
ஒரு தனிமையை
நல்லூழின் பக்கமாகத் திசை திருப்புவது

ஒரு வெறிநாயைக் கட்டிப் போடுவது போல
தூணில் கட்டி
பயந்து பயந்து
அதன் முன்னர்
அறத்தைப் பிசைந்து ஊட்டுகிறேன்

குருதி, மாம்சம் , என பழக்கப்பட்ட அது
மிக மெதுவாக
அறத்தின் பக்கமாக வர
கொஞ்சம் காலமாகும் தான்

ஒரு வளர்ப்பு மிருகத்துக்கான
பக்குவம் வந்த பின்பு
இசை
புத்தகம்
ஓவியம்
என்று ரசனையின் பக்கம்
அதைத் திருப்பியிருக்கிறேன்

இப்போதெல்லாம்
வாலைக் குழைத்தபடி
இந்தப் பத்துக்குப் பத்து
அறையைச் சுற்றி சுற்றி வருகிறது
யாதொரு குறையுமின்றி

பாருங்களேன்
அது இப்படி ஒரு
சுமாரான கவிதையைக் கூட
எழுதப் பழகிவிட்டிருக்கிறது இப்போது


கவிதை 2

தனிமையின் கணங்கள்
இருள் நிறைந்தவை

கடவுள் சிலைகளின்
கண் திறத்தல் போல
சில சடங்குகள்
இருக்கின்றன
தனிமையின் கண்களைத் திறப்பதற்கு

தனிமையின்
கண்களுக்கு ஒளியூட்டுவது
தனிமைக்கு உண்மையில்
இருட்டைப் பழக்குவது தான்

முதலில் முரண்டு பிடிக்கும்
பின்பு அது
கைகளில் அடைபட்ட
சிறு பறவையைப் போல
பழக்கமாகி விடக் கூடியது

தனிமைக்கு
ஒளியை அறிமுகப் படுத்துங்கள்
நிறங்களை அறிமுகப் படுத்துங்கள்
முதலில் கருப்பு
பின்பு நீலம்
பச்சை சிவப்பென

தனிமைக்கு
மெல்ல மெல்ல
வெளிச்சத்தைப் பழக்கப்படுத்துங்கள்
தனிமையிடமிருந்து
தப்ப
நமக்கு வேறு வழியில்லை

எப்போதாவது வாய்க்கும் தனிமைக்கும்
எப்போதும் உடன் இருக்கும்  தனிமைக்கும்
நம்மை நாம் ஒரு ஒளிக் கீற்றென
அறிமுகமாகிக் கொள்வோம்

தவறிவிட்டால்
தனிமையின்
அந்தகாரத்துக்குள்
நம்மை நாம் தொலைத்துவிடுவோம்

நீங்களும் உங்கள் கவிதைகளை கொலுசு இணைய இதழுக்கு படைப்பாகவோ, காணொலியாகவோ, ஒலிப்பதிவாகவோ அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி


சனி, 4 ஏப்ரல், 2020

இனிய உதயம் இதழில் ஐந்து கவிதைகள்

இந்த மாத இனிய உதயம் இதழில் எனது ஐந்து கவிதைகள் வெளியாகியுள்ளன உங்களின் வாசிப்புக்கு எளிமையாக இங்கு ...

கவிதை # 1

இந்தக் கவிதைக்குக் கண்ணீர் முகம்
ஒரு கண்ணீர்த் துளியை நீ காணச்
சகிய மாட்டாய் எனில் முகம் திருப்பிக் கொள்

இந்தக் கவிதைக்கு கண்ணீரின் புலம்பல் குரல்
ஒரு புலம்பல் ஒலியை உன்னால் கேட்கவே முடியாது
உன் காதுகளை மூடிக் கொள்ளலாம்

இந்தக் கவிதைக்கு கண்ணீரின் பாவனை
ஒரு சவளைப் பிள்ளையின் கையேந்துதலைப் போலான
இதன் பாவனை உன்னைத் துன்புறுத்தக் கூடும்
நீ புறக்கணிக்கலாம் மறுதலிக்கலாம்

ஆனால் 
உன்னிடம் சொல்ல மிகக் கடைசியாக
என்னிடம் ஒன்று உள்ளது

ஒரு கண்ணீர்த் துளி
யார் விரலும் துடைக்காது
யார் காதுகளிலும் விசும்பாது
யார் கண்களின் இரக்கப் பார்வையும் படாது
யார் கைக்குட்டையையும் நனைக்காது
அப்படியே உலர்ந்து போவதென்பது
அத்துணை துயர் மிகுந்தது


கவிதை # 2

அப்பாவின் மறைவுக்குப் பிறகு
அம்மா அடிக்கடி
கோவில்களுக்குச் செல்வதை
கைபிசைந்தபடிப் பார்க்கிறேன்
தூரம் பக்கம் என
விரும்பிய கோவில்கள் அனைத்துக்கும்
சென்று வருகிறாள்
குல தெய்வக் கோவிலுக்குச் சென்றுவந்து
ஆண்டுகளாகின்றன என அங்கலாய்த்தவளை
ஒரு முறை அழைத்துச் சென்றேன்
மரங்களடர்ந்த வனத்திடை
வீற்றிருக்கும் குல தெய்வத்தைக் காண
யாரும் அதிகம் வந்திடாத
அந்தத் திறந்த வெளிக் கோவிலில்
நடப்பட்டிருந்த
கற்சாமிகளைக் கண்கொட்டாது பார்த்து
கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டவள்
ஒரு நீண்ட பாறையின் மீது அமர்ந்து
இது தான்
அப்பாவும் நானும் கல்யாணம் கட்டிக்கிட்ட இடம்
என்றாள் கண்கள் பனிக்க
சற்றுத் தள்ளி நின்று பார்க்க
அவளருகில் அப்பா அமர்ந்திருந்தார்
புது மஞ்சளும் குங்குமமும் மினுங்க
அவ்வளவு ஒளி கூடி அமர்ந்திருந்த
அம்மாவின் அருகில்

கவிதை # 3

கடும் கோடைப் பகலில்
மழைப் பாடலொன்றைத்
தொலைக்காட்சியில்
கண்ட மகள்
மழை வேண்டுமெனக் கேட்டழுகிறாள்

கோடையில் மழை வராது
என்பதைச் சொல்லி சமாளிக்க இயலாமல்
குளியலறை ஷவர்
சல்லடைத் தூறல் 
என விதம் விதமான
விஞ்ஞான முயற்சிகளிலும்
தோற்று
கடைசியில் சரணடைந்தேன்

மழையைத் தொலைத்துவிட்டேன்
என்று அழத் துவங்கினேன்
என்னைச் சமாதானம் செய்ய வந்தவள்
மழையை எங்கே தொலைத்தீர்கள்
என்று கேட்க
புதிதாகக் கட்டப்பட்ட
நான்கு வழிச் சாலையைக் காட்டினேன்

கவிதை # 4

எல்லா அதிகாலைகளிலும்
ஏதோ ஒரு முருகன் பாடலுடன்
கடையைத் திறந்து விடுவார்
டீக்கடை செல்வராசண்ணன்

செளந்தரராஜனோ கேபி.சுந்தராம்பாளோ
அவரை இயக்கத் துவங்குவார்கள்

நெற்றி நிறைய விபூதியுடன்
சவ்வாது மணம் கமழ
ஐந்து மணிக்கே
முதல் டீயை ஆத்தத் துவங்கி விடுவார்

வெள்ளிக்கிழமைகளில்
முதல் போணிக்கு
சக்கரைப் பொங்கல் இனாம் உண்டு

பச்சைக் குழந்தைகளுக்கும்
பச்சை உடம்புக்காரிகளுக்கும்
ஆண்டாண்டுகளாய்
அரைக் காசுக்கும் கால் காசுக்கும்
பால் ஆற்றிக் கொடுப்பவர்

கடையெங்கும் பழைய காலண்டர்
அட்டைப் புகைப்படத்தில்
விதம் விதமான முருகன்கள்
புன்னகைப்பர்

நாலு தங்கைகளைக்
கரையேற்றுவதிலேயே
நாற்பது வயதை விழுங்கிவிட்டவர்
ஐம்பதின் தொடக்கத்திலும்
பிரம்மச்சாரியாகவே 
இன்னும் டீ ஆத்திக் கொண்டிருக்கிறார்
என
ஊர் உச்சுக் கொட்டும்

காலண்டர் முழுக்க
வள்ளி தெய்வானை என
குடும்ப சகிதம்
அருள் பாலிக்கும் அந்தக் குமரனுக்கு
செல்வராஜண்ணனை 
அடையாளம் தெரிவதேயில்லை
ஐம்பது ஆண்டுகளாக

கவிதை # 5

யாரிடமாவது சொல்லி அழ வேண்டும்
போல இருக்கும் துக்கத்தை
இறுகப் பற்றிக் கொண்டு
அலை பேசியைத் தேய்த்தால்
அகர வரிசையில் துவங்கி
அஃர வரிசை வரைக்கும்
துக்கங்களாக இருக்கின்றன
துக்கம் 1 துக்கம் 2 துக்கம் 3
எனவும்
சின்ன துக்கம் பெரிய துக்கம்
எனவும்
துக்கம் பழையது துக்கம் புதியது
துக்கம் ஏர்டெல் துக்கம் வோடபோன்
துக்கம் அக்கா துக்கம் அண்ணா
எனவும்
பதிந்து கிடக்கும் வித விதமான
துக்கங்கள்
சேர்ந்து பெருந் துக்கமாக
விழி பிதுங்கி
வெளி வராமல்
உள்வாங்கும் கடலென
சடக்கென உள்ளேகி
தொண்டைக் குழி இறங்கி
அடி வயிற்றுக்குள் அமிழ்ந்து விடுகிறது
துக்கத்தின் கண்ணீர்


நன்றி : இனிய உதயம் இதழ், திரு.ஆரூர் தமிழ்நாடன் ஐயா