இன்று உலக புத்தக தினம்
புத்தகங்கள் மனிதனை இன்றைய நாகரீக மனிதனாக்கியதில் பெரும்பங்கு வகிக்கும் கருவிகள். புத்தகங்களும் கல்வியும் எழுத்தும் இல்லாமல் போனால் இன்றைய வளர்ச்சி சாத்தியமில்லாதது.
ஏப்ரல் 23 ம் தேதி, உலக மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் மறைந்த தினம். மேலும் உலகப்புகழ் பெற்ற டான் குவிக்சாட் நாவலை எழுதிய எழுத்தாளர் செர்வாண்ட்ஸ் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரும் இந்த தினத்தில் தான் மறைந்தனர். மேலும் விலாதிமீர் நொபோகோவ்ம் மவுரீஸ் டூரான், ஜோசப் பிளா உள்ளிட்ட எழுத்தாளர்களின் பிறந்த தினமாகவும் இது அமைகிறது இவை தான் இந்த தினம் புத்தக தினமாகக் கொண்டாடக் காரணிகள்.
புத்தகம் என்பதை புது அகம் எனப் பொருள் கொள்ளலாம். ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் நம் அகம் புத்துணர்வு பெறும் என்பதாக உணரலாம்.
புத்தகம் காலத்தின் கண்ணாடி என்பது நிதர்சனம். புத்தகங்கள் தாம் எழுதப்பட்ட காலத்தின் சமூக, அரசியல், பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கின்றன. இதன் வழியே வரலாற்றை நாம் அறிந்து கொண்டோம். எகிப்தின் வரலாறு மம்மிக்கள் என்கிற பிணங்களைக் கூறாய்ந்தே அறியப்பட்டது. ஆனால் தமிழ் மொழியின் வரலாறு, இந்த மொழியில் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே எழுதப்பட்ட இலக்கிய விழுமியங்களை வைத்துக் கணக்கிடப் பட்டது. மற்ற நாகரிகங்கள் எழுந்து நடக்கப் பழகியிருந்த காலத்திலேயே தமிழன் சிந்தனையில் எழுத்தில் பறக்கப் பழகியிருந்தான் என்பதற்கான சாட்சிகளாக நம் பண்டைய இலக்கியப் படைப்புகள் இருக்கின்றன. நமது தலையாய பெருமைகளில் ஒன்றாக அவை விளங்குகின்றன.
புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே என்கிறார் தோழர் லெனின். எத்துணை சத்திய வாக்கு இது. புரட்சி என்பது நமக்கு நமது வாழ்வாகவே இருக்கிறது அடுத்த நாளைக் கடத்துவதும், அடுத்த நாளை நிச்சயமாக்குவதுமே பெரும் போராட்டமாக இருக்கிறது. புத்தகங்கள் இந்த வாழ்க்கைக்கான மிகப் பெரிய ஆயுதங்களாக இருக்கும் என்பது உண்மை தான்.
" உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!" என்கிறார் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட். சில ஆண்டுகள் மட்டுமே வாழ வாய்க்கும் வாழ்க்கையை நீட்டிக்கும் ஆவலில் மனிதன் இந்த உடலின் மீது எத்துணை கவனக்குவிப்புகளை நிகழ்த்துகிறான், உடற்பயிற்சி, ஆரோக்ய உணவு, மருத்துவம் என இந்த உடலைப் பேணிக்காக்க நினைக்கிறான். ஆனால் இந்த உடலை இயக்கும் ஆதார சக்தியான மனதைக் கண்டு கொள்கிறோமா ? அதற்கு என்ன மருத்துவம் என்ன பயிற்சி அளிக்கிறோம் ? மனதுக்கான பயிற்சி தான் புத்தக வாசிப்பு. புத்தகங்கள் நமது அகத்தைத் திறக்கும் சாவிகள். மனிதனை மனிதனாக வாழ புத்தகங்கள் சாவிகள் தருகின்றன.
ஒரு புத்தகம் என்பது ஒரு எழுத்தாளன் இருக்கும் தவம். அதனை வாசிப்பதன் வழியாக யாரோ இருந்த தவத்தின் பலனை நாம் அடைந்துகொள்கிறோம். ஒரு வகையில் இது வரத்தை அடைய ஒரு குறுக்கு வழியல்லவா ?
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் வாசிப்புப் பழக்கம் தற்போது குறைந்துவிட்டது. கல்வி தரும் அழுத்தம், செல் பேசி, கணினி, தொலைக்காட்சி போன்ற கருவிகளின் நேர அபகரிப்பு, போன்ற காரணிகளால் நாம் நமது வாசிப்பின் மகத்துவத்தை மறந்து விட்டிருக்கிறோம்.
வாசிக்கும் கணங்களில் நாம் நமக்கு சிறகுகளைப் பொருத்திக் கொள்கிறோம்; புத்தகத்தின் பக்கங்களில் குறிப்பிடப் பட்டிருக்கும் ஊர்களுக்கு பறந்து செல்கிறோம். புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மனிதர்களுடன் உரையாடுகிறோம். புத்தகங்களின் மாந்தர்கள் சிரிக்கும் போது சிரித்தும் அழும் போது அழுதும் நமக்குள் இருக்கும் ஈரத்தைத் தக்க வைத்துக் கொள்கிறோம். மொத்தத்தில் புத்தக வாசிப்பின் போது நாம் அந்தப் புத்தகத்தின் வாழ்க்கையை வாழ்கிறோம். அது தரும் சுவை அலாதியானது. அந்த சுவையை நாம் அனுபவிக்கவும் ; நமது பிள்ளைகளை அனுபவிக்கச் செய்வதும் நமது கடமை.
ஓர் ஆண்டுக்கு தமிழில் மட்டும் எத்துணை ஆயிரம் புத்தகங்கள் அச்சாகின்றன ? அவற்றை எல்லாம் படித்து முடித்து விட முடியுமா ? தமிழ் மொழியில் சங்க இலக்கியங்கள் தொட்டு, புராண, இதிகாச, தத்துவ, இலக்கண நூல்கள் எத்தனை எத்தனை இருக்கின்றன. அவற்றின் அளப்பரிய அறிவுச் செல்வத்தை நாம் நமதாக்கிக் கொள்ள வேண்டாமா ?
வாசிப்பு தவம். மற்ற எந்தப் பொழுது போக்குகளையும் விடவும் மேன்மையான மற்றும் அறிவார்ந்த செயல். சொல்லப் போனால், வாசிப்பு என்பது ஒரு வகை போதை தான். நல்ல போதை. மற்ற தீய போதைகளிலிருந்து நம்மைக் காக்கும் ஒரு நல்ல போதை வாசிப்பு. தினமும் சில பக்கங்களைப் புரட்டி வாசிப்பதன் மூலம் நமது வாழ்வின் பக்கங்களை அர்த்தமாக்கிக் கொள்ள முடியும். வாசிப்போம் .
பல லட்சக்கணக்கான புத்தகங்கள் அறிவுக் கடலென காத்திருக்கின்றன கற்று முடிக்க நம் ஆயுள் போதாது இன்றே வாசிக்கத் துவங்குவோம்..வாழவும்..
உலக புத்தக தின வாழ்த்துகள்
அருமை அண்ணா 👌👏👏
பதிலளிநீக்குஅருமை வாசிப்பு என்பது தவமே, வாசித்தவர் தான் வாசித்தவற்றை லயித்த விழிகளுடன் கூறுவதை கேட்பது என்று வரமே!
பதிலளிநீக்குஎப்போதும் நல்ல புத்தகங்கள் பெறுமதியான செல்வம். பலரும் வாசித்து பயன் பல பெறலாம்.
பதிலளிநீக்குஒரு புத்தகத்தின் சிறப்பான முன்னுரை போன்ற அருமையான பதிவு.
பதிலளிநீக்குசிறப்பான பதிவு.
பதிலளிநீக்குபுத்தகங்கள்தான் சிறந்த மனிதர்களை உருவாக்குகிறது என்பதில் ஐயமில்லை
பதிலளிநீக்குபத்திரப்படுத்த வேண்டிய பதிவு
பதிலளிநீக்குவருப்பில் பகிரலாம்
நலம்தானே கவிஞரே