ஞாயிறு, 17 நவம்பர், 2019

நடுநிசி உலா சிற்றிதழில் எனது ஐந்து கவிதைகள்

பொள்ளாச்சியிலிருந்து நண்பர் குமாரராஜன் நடுநிசி உலா என்ற பெயரில் ஒரு சிற்றிதழைத் துவங்கியுள்ளார் ...

முதல் இதழில் எனது ஐந்து கவிதைகள் வெளியாகியுள்ளன .. உங்கள் வாசிப்புக்கு இங்கு ..

1)

தனது பிரம்மாண்ட மாளிகையின்
உப்பரிகையில் நின்றபடி
தேசத்தின் சகல கோணங்களையும்
பார்வையிடுகிறார் அரசர்
ஒரு தீபாவளித் திருநாளில்

வானெங்கும் வானவேடிக்கைகள்
வண்ண வண்ணமாக
வெடித்துச் சிதறுகின்றன
வலுத்துப் பெய்கிறது
மழை
சாலையெங்கும்
ஊர்ந்து கொண்டிருக்கின்றன ரதங்கள்
தெருக்களில் களிநடனமாடிக்கொண்டிருக்கின்றனர்
மக்கள்
தனது கொற்றத்தின் கீழ்
செழித்து நிற்பதாக தேசத்தைப் பற்றிய
வரலாற்றுக் குறிப்பொன்றை
எழுதி வைத்துவிட்டுப்
புளகாங்கிதப் புன்னகை பூக்கிறார் அரசர்

பட்டாசு ஆலை வெடிவிபத்தில்
கருகிய குடும்பமும்
வெள்ளப் பெருக்கில் இழுத்துச்
செல்லப்பட்ட குடிகளும்
ஆழ்துளைக் கிணறொன்றில்
சிக்கிக் கொண்ட
சிறுவனொருவனின் கதறலும்
குடிச்சாலைக்கு வெளியே
அடிபட்டுச் செத்துக் கிடந்தவர்களும்
வழக்கம் போலவே
அவைக் குறிப்பிலிருந்து
நீக்கப்பட்டிருந்தனர்


2)

ஒரு புத்தகத்தை
அதன் நடுப்பக்கத்திலிருந்து
வாசிக்கத் துவங்கினேன்
முன்புறம் ஒரு பக்கம்
பின் புறம் ஒரு பக்கம்
என
இடதும் வலதுமாக
பக்கங்களைப் புரட்டி
வாசிக்க வாசிக்க
எனக்குள் சொற்கள் விரியத் துவங்கின
நானவற்றை வரிசைக்கிரமமாக
அடுக்கிக் கொண்டேன்
இடைவெளிகளில்
கொஞ்சம் முன்காலத்துக் கதைகளை
சொருகிக் கொள்வது நலமென்றானது
முதல் பத்து பக்கங்களையும்
கடைசி பத்து பக்கங்களையும்
நெருங்குவதற்குள்
நிறுத்தம் வந்து விட
அவசர அவசரமாக இப்போது
அந்தப் புத்தகத்தைப் பற்றிய
அறிமுக உரையை
உங்கள் முன் ஆற்றுவது .....

3)

ப்ரியத்தின் இரண்டு
முனைகளும்
எவ்வளவு கூரானவை
நட்ட நடுவில்
அதைப் பற்றிக் கொண்டிருக்கும் வரை
அது நமக்குத் தெரிவதேயில்லை
இந்தப் புறமும்
அந்தப் புறமும்
சற்றே சறுக்கினால் போதும்
பின்பது
ரத்தத்தைப் பார்க்காமல் போகாது

4 )

வகுப்பறை சன்னலுக்கு வெளியே
சாலையில் நடுங்கியபடி
நிற்கிறது ஒரு சிறு விலங்கு
பள்ளி வளாக மரங்களில்
பசியில் கரைந்து கொண்டிருக்கின்றன
காக்கைகள்
நீரின்றி பட்டுப் போய்க்
கிடக்கின்றன தாவரஙகள்

படம் வரைந்து பாகம் குறித்துக்கொண்டிருக்கிறது
பாடம்

5)

நிகழ்காலம் மூன்று நாட்கள்

ஒரு குழந்தையின்
உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம்
ஒரு மாணவியின்
வன்புணர்வுக்குப் போராடிக் கொண்டிருக்கிறோம்
ஒரு அநீதியை
ஒரு அதிகார ஆதிக்கத்தை
ஒரு சாதிக் கலவரத்தை
ஒரு அடக்குமுறையை
ஒரு சமூகக் குற்றத்தை

பொறுத்துக் கொள்ளமாட்டாமல்
போராடத் துவங்குகிறோம்
முதல் நாளில் தீயெனத் துவங்கும்
நம் கோபம்
அடுத்த நாளில் கங்கெனக்
கனன்றுகொண்டிருக்கிறது
மூன்றாம்நாளில் அதன் மீது
யாரோ நீர் தெளித்துவிடுகிறார்கள்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

நிகழ்காலத்தின் காலம் வெறும்
மூன்றுநாட்கள் தாம்


நடுநிசி உலா இதழ் வேண்டுவோர் தொடர்பு கொள்ள :

குமாரராஜன் : 9488382644

படைப்புகள் அனுப்ப மின்னஞ்சல் : nadunisiyula@gmail.com

வெள்ளி, 15 நவம்பர், 2019

எனது பெயர் ஒரு தற்கொலைக் கருவிஎனது பெயரில் இருந்திருக்கிறது
எனது மரணம்
பாருங்கள் அது எப்படி உங்களைக் கண்டு
அஞ்சி நடுங்குகிறது

பாருங்கள் அது எப்படி உங்களை
மன்றாடுகிறது
பாருஙகள் அது உங்கள்
மனசாட்சியை
ஒரு மில்லிமீட்டர் கூட
அசைக்கத் திராணியற்று விசும்புகிறது
அதை நீங்கள்
வாழ்க்கையின் குறுகலான விளிம்புக்கு
விரட்டிக்கொண்டே இருக்கிறீர்கள்

என் பெயரின் பொருட்டு
நீங்கள் என் சுதந்திரங்களைப்
பறித்தீர்கள் நீங்கள் என் கல்வியை
மறுத்தீர்கள்
நீங்கள் என்னை ஒரு
தீவிரவாதி என வரைந்து காட்டினீர்கள்
நீங்கள் என்னை தேசத் துரோகி என்றீர்கள்
நீங்கள் என்னை
நாடு விலக்கச் சொன்னீர்கள்

எதுவுமே செய்ய இயலாத
எனது பெயரை
இன்றொரு தூக்குக் கயிற்றில்
கட்டித் தொங்க விட்டிருக்கிறேன்
நீங்கள் உங்கள்
குறுக்குக் கயிறைத் தடவித் தடவிப்
பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்

வெள்ளி, 1 நவம்பர், 2019

சின்னஞ்சிறிய மரணம்

இந்த மாதம் கொலுசு மின்னிதழில் எனது ஏழு கவிதைகள் வெளியாகியுள்ளன... 

உங்கள் வாசிப்புக்கு இங்கே ..

1)

மிகச் சிறியது  மரணம்
ஆழ்துளைக் கிணறொன்றில்
இரு கைகளை உயரத் தூக்கியபடி
குறுகிக் கிடக்கிறது
வாழ்வை யாசித்துக்கொண்டு
அரசும் அதிகாரமும்
மொத்த மனுசங்களின்
மெத்தனமும்
ஒரு ரொட்டித் துண்டென
அதன் உயிரை நீட்டி நீட்டிப் பார்க்கிறது
எட்டும் தூரத்தில் இருந்து
எட்டாத ஆழத்தில் அது
தன்னை உட்செலுத்திக் கொண்ட போது
இன்னும் சின்னதாகிப் போனது.
மரணம் எவ்வளவு சிறியதென்றால்
நமது கண்களுக்குத் தெரிந்து 
விடாத அளவு

2)

மிகச் சிறியது நம் துயர்
விளம்பர இடைவேளைகளில்
வாசலுக்கு ஓடிப் போய்
வாங்கி வைத்திருக்கும்
வண்ண வெடிகளை
கொளுத்திவிட்டு
தொலைக் காட்சித் திரைக்குத்
திரும்பி வந்து
கன்னத்தில் கை வைத்து அமர்ந்து கொள்கிறது
37 ஆவது அடியில் சுழலும்
ரிக் எந்திரம்
இன்னும் அறுபது அடிக்கு சுழல வேண்டும்
இன்னும் எத்தனை விளம்பர இடைவேளைகள்
இன்னும் எத்தனை தீபாவளிகள்

3 )

இன்னும் மூடப்படாமல் கிடக்கின்றன
தோண்டி வைக்கப்பட்ட சவக்குழிகள்
நீர் செத்த நெடுங்குழிகள்
வாய் பிளந்து காத்திருக்கின்றன
செல்லங்களே
ஓரமாய்ப் போங்கள்
மரணத்தோடு விளையாட வேண்டா
அது எங்கள் அரசாங்கத்தின் வேலை

4 )

சின்னஞ்சிறிய சவப்பெட்டி
ஒன்று தயாரான போது
கடவுளின் கதவுகள் திறந்துகொண்டன
கொடுமை என்னவெனில்
எத்தனை சவப்பெட்டிகளுக்குப் பின்பும்
அவரது கண்கள் தாம் திறக்கவேயில்லை

5 )

டிஜிட்டல் இந்தியா

எங்கள் அரசர் எங்கள் தேசத்தை
கணினி மயமாக்கிவிட்டார்
எங்கள் காலைக் கடன்களுக்காக
கணினிக் கக்கூஸ்கள் தயாராகிவிட்டன
எங்கள் வங்கிகள் கணினி மயமாகிவிட்டன
நாங்கள் கண்காணிக்கப் படுகிறோம்
எங்கள் மளிகைக் கடைகள் கணினிமயமாகிவிட்டன
பணத் தாள்களுக்கு அங்கு வேலையே இல்லை
எங்கள் சுடுகாடுகள் கணினி மயமாகிவிட்டன
எங்கள் பிணங்கள் தாமாகவே எரிந்துவிடும்
எங்கள் உலகில்
இன்னும்
மனித மலத்தை அள்ளவும்
மரணக் குழிகளுக்குள் புகவும்
தான் ஒரு கணிப்பொறியைக்
கண்டுபிடிக்க இயலவில்லை

6) 

அச் சிறுவனைப் பார்த்து கடவுள் கேட்டார்
இன்னும் நீ ஏன் கைகளைத் தூக்கிக்
கொண்டே இருக்கிறாய் ?
நான் எனது மரணக் குழிக்குள்
இப்படித்தான் கிடந்தேன் 
இப்படித்தான் நீங்கள் 
என்னைக் கைவிட்டீர்கள் 
உங்கள் கரங்கள் 
எனது கரங்களுக்கு நீளும் என்று நீட்டியபடியே இருந்தேன் நீங்கள் என்னைக் கைவிட்டீர்கள் 

இனி என் அம்மாவுக்கு இச் சிறுகையால் அளாவிட முடியாது
என் அண்ணனை அணைத்துக்
கொள்ள முடியாது
அப்பாவின் விரல்களைப் 
பற்றிக்கொள்ள முடியாது
எனது கைகளை மடக்க இயலாது
எனது கைகள் அழுகி விட்டன இப்படியேதான் எனது கைகள்
 புதைக்கப்பட்டன
நீங்கள் என்னைக் கை விட்டீர்கள்

இப்படியே தான் நான் இங்கும் 
இருக்க முடியும் என்றான்

கடவுள் தனது பன்னிரு கைகளையும்
கத்தரித்துக் கொள்ளத் துவங்கிவிட்டார்... 

7 )

கடைசியாக ஒரு 
சின்னஞ் சிறிய சவப்பெடிக்குள்
சின்னஞ்சிறிய மரணத்தை
அடைத்துப் புதைத்தனர்
அது 
மிகச் சிறியதாக்கி விட்டது
இந்த பூமியை 


கொலுசு மின்னிதழில் வாசிக்க :

http://kolusu.in/kolusu/z_want_to_see_book.php?parameter=52K4K2613

Show quoted text