வெள்ளி, 1 நவம்பர், 2019

சின்னஞ்சிறிய மரணம்

இந்த மாதம் கொலுசு மின்னிதழில் எனது ஏழு கவிதைகள் வெளியாகியுள்ளன... 

உங்கள் வாசிப்புக்கு இங்கே ..

1)

மிகச் சிறியது  மரணம்
ஆழ்துளைக் கிணறொன்றில்
இரு கைகளை உயரத் தூக்கியபடி
குறுகிக் கிடக்கிறது
வாழ்வை யாசித்துக்கொண்டு
அரசும் அதிகாரமும்
மொத்த மனுசங்களின்
மெத்தனமும்
ஒரு ரொட்டித் துண்டென
அதன் உயிரை நீட்டி நீட்டிப் பார்க்கிறது
எட்டும் தூரத்தில் இருந்து
எட்டாத ஆழத்தில் அது
தன்னை உட்செலுத்திக் கொண்ட போது
இன்னும் சின்னதாகிப் போனது.
மரணம் எவ்வளவு சிறியதென்றால்
நமது கண்களுக்குத் தெரிந்து 
விடாத அளவு

2)

மிகச் சிறியது நம் துயர்
விளம்பர இடைவேளைகளில்
வாசலுக்கு ஓடிப் போய்
வாங்கி வைத்திருக்கும்
வண்ண வெடிகளை
கொளுத்திவிட்டு
தொலைக் காட்சித் திரைக்குத்
திரும்பி வந்து
கன்னத்தில் கை வைத்து அமர்ந்து கொள்கிறது
37 ஆவது அடியில் சுழலும்
ரிக் எந்திரம்
இன்னும் அறுபது அடிக்கு சுழல வேண்டும்
இன்னும் எத்தனை விளம்பர இடைவேளைகள்
இன்னும் எத்தனை தீபாவளிகள்

3 )

இன்னும் மூடப்படாமல் கிடக்கின்றன
தோண்டி வைக்கப்பட்ட சவக்குழிகள்
நீர் செத்த நெடுங்குழிகள்
வாய் பிளந்து காத்திருக்கின்றன
செல்லங்களே
ஓரமாய்ப் போங்கள்
மரணத்தோடு விளையாட வேண்டா
அது எங்கள் அரசாங்கத்தின் வேலை

4 )

சின்னஞ்சிறிய சவப்பெட்டி
ஒன்று தயாரான போது
கடவுளின் கதவுகள் திறந்துகொண்டன
கொடுமை என்னவெனில்
எத்தனை சவப்பெட்டிகளுக்குப் பின்பும்
அவரது கண்கள் தாம் திறக்கவேயில்லை

5 )

டிஜிட்டல் இந்தியா

எங்கள் அரசர் எங்கள் தேசத்தை
கணினி மயமாக்கிவிட்டார்
எங்கள் காலைக் கடன்களுக்காக
கணினிக் கக்கூஸ்கள் தயாராகிவிட்டன
எங்கள் வங்கிகள் கணினி மயமாகிவிட்டன
நாங்கள் கண்காணிக்கப் படுகிறோம்
எங்கள் மளிகைக் கடைகள் கணினிமயமாகிவிட்டன
பணத் தாள்களுக்கு அங்கு வேலையே இல்லை
எங்கள் சுடுகாடுகள் கணினி மயமாகிவிட்டன
எங்கள் பிணங்கள் தாமாகவே எரிந்துவிடும்
எங்கள் உலகில்
இன்னும்
மனித மலத்தை அள்ளவும்
மரணக் குழிகளுக்குள் புகவும்
தான் ஒரு கணிப்பொறியைக்
கண்டுபிடிக்க இயலவில்லை

6) 

அச் சிறுவனைப் பார்த்து கடவுள் கேட்டார்
இன்னும் நீ ஏன் கைகளைத் தூக்கிக்
கொண்டே இருக்கிறாய் ?
நான் எனது மரணக் குழிக்குள்
இப்படித்தான் கிடந்தேன் 
இப்படித்தான் நீங்கள் 
என்னைக் கைவிட்டீர்கள் 
உங்கள் கரங்கள் 
எனது கரங்களுக்கு நீளும் என்று நீட்டியபடியே இருந்தேன் நீங்கள் என்னைக் கைவிட்டீர்கள் 

இனி என் அம்மாவுக்கு இச் சிறுகையால் அளாவிட முடியாது
என் அண்ணனை அணைத்துக்
கொள்ள முடியாது
அப்பாவின் விரல்களைப் 
பற்றிக்கொள்ள முடியாது
எனது கைகளை மடக்க இயலாது
எனது கைகள் அழுகி விட்டன இப்படியேதான் எனது கைகள்
 புதைக்கப்பட்டன
நீங்கள் என்னைக் கை விட்டீர்கள்

இப்படியே தான் நான் இங்கும் 
இருக்க முடியும் என்றான்

கடவுள் தனது பன்னிரு கைகளையும்
கத்தரித்துக் கொள்ளத் துவங்கிவிட்டார்... 

7 )

கடைசியாக ஒரு 
சின்னஞ் சிறிய சவப்பெடிக்குள்
சின்னஞ்சிறிய மரணத்தை
அடைத்துப் புதைத்தனர்
அது 
மிகச் சிறியதாக்கி விட்டது
இந்த பூமியை 


கொலுசு மின்னிதழில் வாசிக்க :

http://kolusu.in/kolusu/z_want_to_see_book.php?parameter=52K4K2613









Show quoted text

7 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வேதனை தந்த செய்தி. இனியாவது திருந்துவோமா?

    பதிலளிநீக்கு
  2. மனித மலத்தை அள்ளவும்

    மரணக் குழிகளுக்குள் புகவும்

    தான் ஒரு கணிப்பொறியைக்

    கண்டுபிடிக்க இயலவில்லை//

    அருமையான வரிகள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வலியின் கோடுகள் ஒவ்வொரு வரியிலும்.. நாம் வாழும் யதார்த்தம் இது, அருமை என்ற ஒற்றை வார்த்தைக்குள் பூட்டிவிடமுடியாது..

    பதிலளிநீக்கு
  4. அருமையான வரிகள் படித்தபின்பு கனத்தது இதயம்.

    பதிலளிநீக்கு