செவ்வாய், 17 மார்ச், 2015

விஷமாகிக் கொண்டிருக்கும் வாழ்க்கை

குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவின் மீது எப்போதும் கொஞ்சம் நமது கவனம் அதிகமாக இருக்கும். முன்பெல்லாம் பாக்கெட்டில் சில மிட்டாய்களை வைத்திருப்பேன். சந்திக்கும் குழந்தைகளுக்குக் கொடுக்கவென. ஒரு முறை அம்சப்ரியா சொன்னார், மிட்டாய் சில குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளாது சளி பிடித்துவிடும் அதனால் தான் நான் நிறுத்திவிட்டேன் என்று. அன்று முதல் மிட்டாய் கூட வாங்கி வைப்பதில்லை. கடைகளில் கிடைக்கும் பட்சத்தில் பாக்கெட் செய்யப்பட்ட இரண்டு ரூபாய் கடலை பர்பியை அல்லது நல்ல சாக்லேட்டுகளை மட்டுமே வாங்கித் தருகிறேன்.

இதுவரைக்கும் பாரதிக்கு குர்குரே, லேய்ஸ் போன்ற பாக்கெட் தின்பண்டங்களை வாங்கித் தந்ததில்லை. சிறுவயதிலிருந்தே அது தீங்கானது என்று சொல்லி வளர்த்ததால் அவளும் ஆசைப்பட்டுக் கேட்டதே இல்லை. மற்றவர்கள் சாப்பிடுவதைப் பார்த்தால் அவற்றைச் சாப்பிட வேண்டாம் என சொல்லும் அளவுக்கு பக்குவத்துக்கு வந்துவிட்டாள். Fanta,Coke,Pepsi போன்ற குளிர்பானங்களையும் இதுவரை தந்தது இல்லை.

ஐஸ்கிரீம், சாக்கலேட்டுகள் குழந்தைகளுக்கு அலாதி ப்ரியம் என்பதால் எப்போதாவது அவற்றை மட்டும், அதுவும் தரமானவற்றையே வாங்கித் தருகிறோம். இப்படி , பார்த்துப் பார்த்து தான் ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைகளின் நலனுக்காக ஒவ்வொன்றையும் செய்கிறோம். அதுவும், உணவுப் பொருட்கள் விசயத்தில் ரொம்பவே கவனமுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.

பாரதிக்கு முதல் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்த இரண்டாவது நாள், அவளுக்கு வாயிலும் வயிற்றிலும் நிற்காமல் போகிறது. பல முறை போனதால் துவண்டு விட்டாள். பாட்டி வைத்தியங்கள் எதுவும் மாலை வரை முயன்று பார்த்தும் பலனளிக்காத்தால், இரவு ஒன்பது மணிக்கு மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடினோம். மருத்துவரைப் பார்க்க இரவு 12 ஆகிவிட்டது. மருத்துவர் , சாப்பிட என்ன கொடுத்தீர்கள் என்றதும் மனைவி சாதத்துடன் பீட்ரூட் சட்னி என்று சொன்னதும் மருத்துவர் கன்னாபின்னாவென திட்ட ஆரம்பித்துவிட்டார். தெரிந்தவர்தான். ஒரு வயதுக் குழந்தைக்கு பீட்ரூட் சட்னி எதுக்குக் கொடுத்தீங்க. மண்ணுக்குக் கீழே விளையும் பொருட்களில், குறிப்பாக பீட்ரூட்டில் மருந்து ( pesticides ) தெளித்திருப்பார்கள் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். பெரியவர்களுக்கே பீட்ரூட் சாப்பிட்ட அடுத்த நாள் காலைக்கடன் கழிக்கையில் பாருங்கள் எப்படி எரியுமென்று என்று பயப்படுத்தினார். இரண்டு இரவுகள், மூன்று பகல்கள் மருத்துவமனையில் தான். கொடுமை என்னவென்றால், பாரதி ரொம்பவும் துவண்டுவிட்டதால் குளுகோஸ் போட வேண்டும் என்று சொல்லி செவிலியர்கள் பாப்பாவின் கையில் அவள் கதறக்கதற ஊசியில் துளைத்தார்கள். சின்னக் குழந்தை, நரம்பு கிடைக்கவில்லை ரத்தம் பொங்கிக் கொண்டு வந்துவிட்டது. நாங்கள் அழுதுவிடும்படி ஆகிவிட்டோம். அப்பா கோபத்தில் செவிலியர்களிடமிருந்து குழந்தையைப் பிடுங்கிக் கொண்டு மருத்துவரிடம் சண்டைக்குப் போய்விட்டார். பின்பு அவர் வந்து, எங்களை வெளியில் போகச் சொல்லிவிட்டு குழந்தையின் இன்னொரு கையில் ஊசியைச் செலுத்திப் படுக்கை வைத்தார். இரண்டு இரவுகளும் ஒரு துளி கூடத் தூங்காமல் அவள் அருகில் அவளைப் பார்த்தபடியே இருந்தோம். கை கால் அசைந்து ஊசி எங்கும் ஏறிவிடுமோ , குழாயை இழுத்துவிடுவாளோ என்று..


நிகழ்காலத்துக்கு வருவோம், நேற்று அப்பா தர்பூசணி வாங்கி வந்திருந்தார். அனைவரும் வட்டாமாக அமர்ந்து, அழகாக வெட்டி சாப்பிட அமர்ந்தோம். தர்பூசணி செக்கச் செவேலென்று அழகாக இருந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு நண்பர்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பிய வீடியோ ஞாபகம் வந்தது. கீழுள்ள இணைப்பில் வீடியோ இருக்கிறது பாருங்கள்.https://www.dropbox.com/s/2hr8wiurw756xvt/VID-20150311-WA0007.mp4?dl=0 

இதைப்பார்த்து விட்டு எப்படிச் சாப்பிடுவது. அதற்குள் எல்லோரும் பாதி சாப்பிட்டு விட்டார்கள். எனக்கு இப்போது வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாமல் ஒரு உருண்டை உருள்கிறது நிஜமாலுமே.

இந்த எரித்ரோசின் பி என்ற வேதிப்பொருளைப் பற்றி இணையத்தில் பார்த்தால் கண்ணைக் கட்டுகிறது.

நீங்களும் படித்துப் பார்க்கலாம். தின்பண்டங்களில் வண்ணம் தர உபயோகப் படுத்துகிறார்கள் எனினும் அமெரிக்காவில் இது தடை செய்யப்பட்ட ஒன்று.

http://en.wikipedia.org/wiki/Erythrosine

இதன் MSDS இதையே தான் சொல்கிறது. கொஞ்சம் ஆபத்தான திரவம் தான் இது.

http://www.sciencelab.com/msds.php?msdsId=9923927

எத்தனை மாபாதகர்கள் இவர்கள், வியாபாரத்துக்காக, தர்பூசணி சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மருந்தை ஊசியின் வழியாக உட்செலுத்துகிறார்கள். இதன் பின் விளைவுகள் அறிவார்களா இவர்கள். சினிமாவில் வருவதைப்போல இந்தப் பழத்தை மறந்தாற்போல அவர்கள் வீட்டுக்கே எடுத்துப் போக, அவர்களின் குழந்தைகள் சாப்பிடுவதைப் பார்த்தால் தான் இவர்களுக்குப் புத்தி வருமா.

ஜங்க் புட் சாப்பிட வேண்டாம், ரசாயன குளிர்பானங்களைக் குடிக்க வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். பழங்கள் தான் உடலுக்கு ஆரோக்கியம் என்றும் அறிவுறுத்துகிறோம். ஆனால் இன்று அந்தப் பழங்களை நம்பி சாப்பிட முடிகிறதா .?

மாம்பழங்களை கார்பைடு கல் வைத்துப் பழுக்க வைக்கிறார்கள் - உடலுக்கு மிகவும் தீங்காகிறது

திராட்சைகள் கெடாமல் இருக்க மேலே பூச்சி மருந்து தெளிக்கிறார்கள்.

ஆப்பிள் , பேரிக்காய்கள் கெடாமலும், கண்கவரும் வண்ணமும் இருக்க மெழுகை ( Wax Coating ) பூசி விற்கிறார்கள்.

வாழைப்பழம் மஞ்சள் நிறத்தில் அழகாக இருப்பதுவும் ரசாயனம் தான்.

இதுபோக, உணவுப் பொருள் அனைத்திலும் கலப்படம்
குருமிளகில் பப்பாளி விதை
காபிப் பொடியில் புளியங்கொட்டைப் பொடி


நாம் சாப்பிடும் அனைத்து உணவுப் பொருட்களிலும் நஞ்சைக் கலக்கிறார்கள்.

எத்தனை துயரம் மிகு செயல்கள் இவை. சுகாதாரத்துறையும் அரசும் இவற்றைக் கண்டு கொள்வதாகவே இல்லை. மருத்துவமனைகளும் புதிய புதிய நோய்களும் பல்கிப் பெருகாமல் என்ன செய்யும்.

அடுத்த உலகப் போர் தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருத்துச் சொல்கிறார்கள்.

ஆனால், அது வரைக்கும் இந்த மனித இனம் உயிரோடு இருக்குமா எனத் தெரியவில்லை, தனக்குத் தானே சோற்றில் விசம் வைத்துத் தின்று செத்துவிடுவோம் என்றே நினைக்கிறேன்.


திங்கள், 16 மார்ச், 2015

பொள்ளாச்சி இலக்கியவட்டம் 23ஆவது சந்திப்பு

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இருபத்தி மூன்றாவது இலக்கிய சந்திப்பு நேற்று (15.03.2015) ஞாயிற்றுக் கிழமை பாலக்காடு சாலை, நகரமன்ற ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

வழக்கமாக நடக்கும் அறையில் கட்டிட வேலைப் பொருட்களை வைத்திருந்ததால், உள்ளே ஒரு வகுப்பறை தான் கிடைத்தது. மின்விசிறி, மின் விளக்கு இரண்டும் இல்லை. கோடை நெருங்கும் காலம். புழுக்கமாக இருக்குமே என பயந்தோம். நல்ல வேளை, வானிலை நமக்குக் கொஞ்சம் சலுகை காட்டியது.

ஓரளவுக்குப் போதுமான அறைதான் எனினும், இந்த முறை நிறைய புதிய நண்பர்கள் வந்திருந்தார்கள். கிட்டத்தட்ட 75 வாசக,படைப்பாளர்கள், பங்கேற்பாளர்களால் அறை நிரம்பிவிட்டது. கொஞ்சம் பேர் வெளியில் நின்று கேட்கும் படி ஆனது. ஆனாலும் மிகவும் உற்சாகமானதாக இருந்தது.வழக்கம் போலவே ஒன்பது மனிக்கு ஆரம்பித்து ஒரு மணிக்குள் முடித்தே ஆக வேண்டும் என்ற திட்டமிடலுடன் வந்திருந்தோம். ஆனால், குமரகுருவைச் சுமந்து வந்த பேருந்து 7 மணிக்குப் பொள்ளாச்சி வருவதாகச் சொல்லிவிட்டு 9 மணிக்குத்தான் வந்தே சேர்ந்தது. அவர் குளித்து தயாராகி வரவே 10 ஆகியிருக்க, அவைநாயகன் மற்றும் சு.வேணுகோபால் ஆகியோர் இன்னும் தாமதமாக வர, நிகழ்ச்சியை ஆரம்பிக்க 10.30 ஆகிவிட்டது.

நிகழ்ச்சியி ல்முதலில் என்னைக் கவர்ந்த பெண் ஆளுமை என்ற தலைப்பில் மாணவர்கள், வாசகர்கள் பல்வேறு பெண் ஆளுமைகளைப் பற்றிப் பேசினர். குறிப்பாக பூ.சா.கோ மாணவிகள் நாகஷியாமளா, சந்திரமதி, பி.கே.டி மாணவி கோகிலா மற்றும் பெரியகுளம் இர.அறிவழகன் ஆகியோரது உரை சிறப்பாக அமைந்தது.

நிகழ்ச்சிக்கு முதல்முறை வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் மிமிக்ரி செய்யட்டுமா என்று கேட்டான். இலக்கியக் கூட்டத்திலும் மிமிக்ரியா? இருந்தாலும் சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றினோம். பல முன்னணி நடிகர்களின் குரலில் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்தான். அரங்கமே உற்சாகத்தில் நிறைந்தது. கைதட்டல்களில் நிறைந்தது. கவிதை வாசிப்புக்கு இப்படி கைதட்டல்கள் கிடைக்குமா ..?

அடுத்ததாக படித்ததில் பிடித்தது பகுதியில் செலீனா , .தி.செந்தில்குமார் உள்ளிட்டோர் பேசினர்.

நான் வரவேற்புரையாற்ற. எழுத்தாளர் அவைநாயகன் அவர்கள் எழுதிய கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது என்ற நூலை எழுத்தாளர் சு.வேணுகோபால் அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.

எழுத்தாளர் சு.வேணுகோபால் பேசியதாவது " மாயா ஏஞ்சலோ எழுதி அவைநாயகன் மொழி பெயர்த்த கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது எனும் நூல், மாயா ஏஞ்சலோவின் சுய வரலாரின் ஒரு பகுதி ஆகும். இவர் தன் வாழ்க்கை வரலாறை ஏழு பாகங்களாக எழுதியுள்ளார். முதல் பாகமான இந்த நூல் அவரதி 3 வயதிலிருந்து 17 வயது வரையிலான காலகட்டத்தின் பதிவாக உள்ளது. பொதுவாக ஒரு சுயசரிதை நூல் , நூலாசிரியரின் வாழ்க்கைக் குறிப்பு என்ற அடைப்புக்குறிக்குள் நின்றுவிடும், ஆனால் மாயா ஏஞ்சலோவின் வாழ்க்கை வரலாறு ஒட்டு மொத்த கருப்பின மக்களின் வரலாற்றின் ஒரு பதிவாகவே உள்ளது. கருப்பின மக்களின் வாழ்க்கை முறையின் ஒரு குறியீடாகவும், ஆண்,பெண் பாலினங்களுக்கு அப்பாற்பட்ட ஒடுக்கப்பட்ட ஒரு மனிதனின் வேதனைக்குரலாகவே உள்ளது.

தமிழில் இதுவரை மொழிபெயர்க்கப்பட்ட சுயசரிதை நூல்களில் இந்நூல் மிக முக்கியமான ஒன்றாகும். இந்த நூல், மாயா ஏஞ்சலோ என்னும் கருப்பினப் பெண்ணின் ரத்தத்தால் எழுதப்பட்ட ஒரு காவியமாகவே தோன்றுகிறது. மேலும் இந்த நூலை வாசிக்கையில் கருப்பினர்கள் சந்தித்த போராட்டங்களை நமது தலித் மக்கள் , அவர்களுடைய போராட்டங்களை அறிந்து உணர்ந்துகொள்ளக் கூடிய வகையிலேயே இருக்கிறது.” என்று பேசினார்.

கவிஞர் குமரகுரு அன்பு எழுதிய மணல் மீது வாழும் கடல் கவிதைத் தொகுப்பை கவிஞர் செளந்தரராஜன் அறிமுகப்படுத்தி வைத்துப்பேசினார்.

முதல் மேடை என்று கூச்சத்துடனே ஏற்புரை வழங்கினார் குமரகுரு. அப்பாவின் கால்கள் கவிதையைத் தன் அப்பாவுடன் நினைவு படுத்தி அவர் சொன்னபோது நெகிழ்ச்சியாக இருந்தது.

பின்னர் கவியரஙக்த்தில் மாணவர்கள், கவிஞர்கள் என மொத்தம் பதினேழு பேர் கவிதை வாசித்தனர். கனகீஸ்வரி, நாகஷியாமளா,அனாமிகா, யாழி ஆகியோரது கவிதைகள் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருந்தன.

ஒவ்வொரு மாதமும் நடக்கும் நிகழ்வுகளை அடுத்த மாதம் புகைப்படங்களுடன் பொள்ளாச்சி இலக்கிய வட்ட செய்தி மடல் என்று அச்சிட்டு வழங்குவது வழக்கம். இந்த முறையும் செய்தி மடல் வெளியிட்டோம். செய்தி மடல் உங்கள் பார்வைக்கு இங்கு இணைத்துள்ளோம். வாசித்துவிட்டு ஆலோசனைகளைப் பகிரலாம்.


சிறு விவாதத்துக்குப் பிறகு நிகழ்ச்சி கவிஞர் அம்சப்ரியாவின் நன்றியுரையோடு இனிது முடிந்தது.

மதிய உணவு சித்ரா அம்மா வீட்டில் இந்த முறை. நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அவரது கையால் உணவும் அன்பும். உணவுக்குப் பின் திண்ணையில் வட்டமாக அமர்ந்து சு.வேணுகோபால், அவைநாயகன் மற்றும் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். இந்த செளகர்யம் எங்கும் கிடைக்காது.கிளம்பும் போது சித்ரா அம்மா சொன்னார், தனியாகவே இருப்பேன், மாதத்தில் ஒருநாள் தான் இந்த வீடு கலகலப்பாக இருக்கிறது என்று. மனம் கொஞ்சம் கனமானது. அடுத்த வாரம் குடும்பத்துடன் சென்று அவரைப் பார்த்துவிட்டு வர வேண்டும்.

நண்பர்கள் கிளம்பிவிட, பத்திரிகைக்கு செய்தி கொடுத்துவிட்டு வீட்டுக்கு வர வழக்கம் போல ஆறு மணியாகி விட்டது. பம்பிக் கொண்டே வந்தேன். வாசலிலேயே காத்திருந்த பாரதி காலைக் கட்டிக் கொண்டாள். கொஞ்ச நேரம் வாசலிலேயெ இனியா , பாரதியுடன் விளையாடிக் கொண்டிருந்த அந்த இடைவெளியில் மனைவியின் முகம் மலர்ந்துவிட்டிருக்குமென்றே நினைக்கிறேன். யாவும் சுமூகமாகவே முடிந்தது.

இனி ஏப்ரல் மாதக் கூட்டத்துக்கு யோசிக்க வேண்டும். அத்துடன் மே மாதம் குழந்தைகள் கலைக் கொண்டாட்டமாக முழுநாள் நிகழ்வாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். அதற்கும் இப்போதிருந்தே தயாராக வேண்டும் ..


திங்கள், 2 மார்ச், 2015

இன்னும் வளரனும் பாப்பா ...

வழக்கமாகவே வார இறுதி நாட்களில் பாரதியின் சிறப்பு வகுப்புகளுக்கு நாங்கள் கிளம்பினாலே குஷி தான்.

இந்தவாரம் சனிக்கிழமை விடுமுறை மேலும் வேறு வேலை இல்லாததால் கொஞ்சம் முன்னதாகவே சென்றுவிட்டோம். வழக்கம் போலவே கெளரி கிருஷ்ணா போகலாம் என்றாள். அவளுக்கு கேக், எனக்கு எலுமிச்சை ஜூஸ்.

அப்போது, டிஸ்யூ பேப்பர் எடுத்து கிழிச்சு கிழிச்சு ஒரு பாப்பா விளையாடினாள். அவளது அக்காவோ நிறைய டிஸ்யூ பேப்பரை கசக்கி டேபிள் நிறைய நிறைச்சு வெச்சிருந்தா.

பாரதியின் கடமையுணர்வு வேலை செய்ய ஆரம்பித்தது.

"அப்பா, நீங்க தான சொன்னீங்க, 3000 பேப்பர் செய்ய ஒரு மரத்த வெட்டுவாங்க அதுனால பேப்பர் வேஸ்ட் பண்ண கூடாதுனு “.

" ஆமாம் "

" அங்க பாருங்க எத்தன பேப்பர் வேஸ்ட் ஆகுது னு. ஒரு ஐடியா பா, வரவங்களுக்கெல்லாம் ஒரு கர்சீப் கொடுத்துடலாம் அவங்க துடைச்சிட்டு திருப்பி தரனும், ஹோட்டல் காரங்க அத துவைச்சு மறுபடி யூஸ் பண்ணனும். அப்ப, பேப்பர் வேஸ்ட் ஆகாது தான..? “ ( ஓட்டல்காரங்கோவ் நோட் பண்ணுங்கோவ் )

" அட சூப்பர் பாப்பா, இத போய் அந்த மேனேஜர் அங்கிள் கிட்டயும், சப்ளையர் அங்கிள் கிட்டயும் சொல்லிட்டு வா"

" அப்பா இன்னொன்னும் சொல்லனும், எலுமிச்சை ஜூஸ் னா, அம்மா போடற மாதிரி இனிப்பா இருக்கனும் தான, இங்க என்ன கசப்பா இருக்கு, நீங்க குடிச்சுட்டிங்க, குழந்தைங்க எப்படி குடிப்பாங்க ? “

" கரெக்டு டா. இதையும் போய் சொல்லிட்டு வா "

" போங்கப்பா, நீங்களே சொல்லுங்க "

" தைரியமா போய் சொல்லுடா, நல்லது தானே சொல்ற "

" கிளம்பினாள், வேக வேகமாக மேனேஜர் டேபிள் வரை நடந்து விட்டு சிரித்துக் கொண்டே ஒரு சுத்து சுத்தி வந்தாள் "

" ஏண்டா சொல்லலயா "

" போங்கப்பா " என்று சிரித்தாள்.

" போய் சொல்லிட்டு வா “. மீண்டும் போய் விட்டு, சிரித்துக் கொண்டே ஓடி வந்து விட்டாள்.

சப்ளையர் எங்களைப்பார்த்து வந்தார். “ என்ன சார் வேணும் "

இல்லங்க, பாப்பா எதோ உங்க கிட்ட சொல்லனுமாமா "

சொல்லு பாப்பா "

அங்கிள் , ஒன்னும் இல்ல நீங்க போங்க " சிரித்தபடியே கிளம்பி விட்டாள்.


இன்னும் வளரனும் பாப்பா...

நீயா நானா


சென்ற ஞாயிறு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நீயா நானா நிகழ்ச்சியில் நான் பங்கேற்றிருந்தேன்.

முந்தைய இரவு கிளம்பி, பேருந்திலும் தூங்காமல் காலையில் முகச் சவரம் கூடச் செய்யாமல் AVM போய் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இரவே கிளம்பி வந்து சேர்ந்தேன்.

முதன் முறை என் முகம் தொலைக்காட்சியில் தெரிகிறது என்பதால் வீட்டில் அனைவரும் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒளிபரப்பு தேதி எனக்கும் தெரிந்திருக்கவில்லை. முந்தைய தினம் நிகழ்ச்சியைப் பற்றிய அறிவிப்பு வரும் விளம்பரத்தில் நான் பேசுவதைக் காட்டியிருக்கிறார்கள். நண்பர்கள் அதைப்பார்த்து நான் தானா என்று அழைத்துக் கேட்ட பின் தான் நானும் தெரிந்து கொண்டேன்.

நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கும் போதே மகள் கேட்டாள், ஏம்பா ஷேவிங் கூட பண்ணாம போயிட்டீங்க .? ( ம்க்கும், பண்ணிட்டு போனா மட்டும் ? - This is My mind voice ) என்றாள். அவசரமா போனேனா, நேரம் இல்ல டா என்று சொல்லிவிட்டேன்.

பெரியவங்க கிட்ட எளிதில் தப்பிச்சுட முடியுது, குழந்தைகளிடம் தான் எக்குத் தப்பா மாட்டிக்குறேன். குஜராத்திலிருந்து மோனிகா சேகர் தம்பதியினரின் தவப்புதல்வி நர்மதா குட்டி போன் போட்டாங்க.

மாமா, நீயா நானா ல நல்லா பேசுறீங்க "

சரி டா தங்கம் "

ஆமா உங்களுக்கு எத்தன குறள் தெரியும் மாமா "

இந்தக் கேள்வியைக் கேட்டதுமே பகீரென்றது

எனக்கு என்ன டா ஐம்பது அல்லது நூறு தெரியும் "

சரி மாமா , நீங்க டி.வி பாருங்க, நாளைக்கு போன் பண்றேன், அம்பது திருக்குறளும் எனக்கு சொல்லுங்க " என்றாள்.

நெஞ்சே அடைத்துக் கொண்டது. எவ்வளவு புத்திசாலித்தனமா கோர்த்து விட்டுட்டாங்க.. நல்லா இருங்க மோனிகா அக்கா...


முகநூலில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி நிறையப்பேர் குறைபட்டு எழுதியிருந்தார்கள். திருக்குறளை மட்டும் சொன்னாங்க, விஜய் நிறுவனம் பப்ளிசிடி ஸ்டன்ட் செய்கிறார்கள் என்று.

எது எப்படியோ இந்த நிகழ்ச்சியின் மூலமாக திருக்குறள் தெரியாதவர்களை வாசிக்கத் தூண்டியிருக்கிறது என்பதும், தெரிந்தவர்கள் மீண்டும் படிக்கத் தூண்டியிருக்கிறது என்பதும் நான் கண்டுகொண்ட உண்மை.

இதுவரை இருபது நண்பர்களாவது அந்நிகழ்ச்சியில் நான் சொன்ன திருக்குறளையும் அதன் பொருளையும் வாட்ஸ் அப், முகநூல், மற்றும் குறுஞ்செய்தி வழியாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். தம்மாத்தூண்டு நேரமே பேசிய எனக்கே இப்படி என்றால், மகுடேஸ்வரன், ஆறுமுகத் தமிழன், .வெண்ணிலா போன்றவர்களால் குறளின் வீச்சு இன்னும் நிறைய இடங்களுக்கு சென்றிருக்கும் என்பதே என் கருத்து.

இந்நிகழ்ச்சியை, எனக்காகவே எனது நண்பர்களும், உறவினர்களுமாக குறைந்தபட்சம் நூறு பேராவது பார்த்திருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் சில குறள்கள் இப்போது பரிச்சயமாகியிருக்கும் அல்லவா..?

நேர்மறை எண்ணங்கள் தான் நமக்கு முக்கியம்.


முன்பே ஒருமுறை பதிவிட்டபடி, சென்ற கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு தினம் திருக்குறள் சொல்லிக் கொடுத்தேன். அதில் ஜனனி எனக்கு அழைத்து அடுத்த கோடை விடுமுறைக்கும் வருகிறோம் திருக்குறள் படிக்கிறோம் என்றாள். மேலும் அவள் விடுமுறை முடிந்து வீட்டுக்குப் போய்விட்ட பின்பும் பல நாட்கள் திருக்குறள் எழுதி, படித்து வந்தாளாம். அவளது ஆர்வத்தை இப்போது இந்த நிகழ்ச்சி தூண்டி விட்டிருக்கிறதென்பது சரிதானே.

மேலும், இந்நிகழ்ச்சிக்குப்பிறகு, பாரதியும் மீண்டும் திருக்குறள் படிக்கலாம் என்று சொல்கிறாள். நல்லதுதானே.

மற்றபடி நிகழ்ச்சியில் ஆறுமகத்தமிழன், மகுடேஸ்வரன் அவர்களின் பேச்சை மிகவும் ரசித்தேன்.

நீயா நானாவைப்பற்றிய ஒரு புரிதல் கிடைத்தது. அவ்வளவே...

பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் அடுத்த பரிணாமம்

கொஞ்சம் இடைவெளியாகிவிட்டது. புத்தக வெளியீட்டு வேலைகள் அப்புறம் சோம்பேறித்தனம்....

பொள்ளாச்சி இலக்கிய வட்ட வெளியீடாக எனது மற்றும் நண்பர்களின் கீழ்க்கண்ட புத்தகங்கள் வெளியாகியுள்ளன.

எனது கவிதைத் தொகுப்பு " பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு '

கவிஞர் க.அம்சப்ரியாவின் " என் இரவு ஒரு தேநீர் கோப்பையாகிறது " - கவிதைத் தொகுப்பு.

கவிஞர் வைகறையின் " ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப்படுகிறான் " - கவிதைத் தொகுப்பு

கவிஞர் சோலைமாயவனின் " வனத்தில் மிதக்கும் இசை " கவிதைத் தொகுப்பு

கவிஞர் புன்னகை பூ ஜெயக்குமாரின் " முதற்படி " - கவிதைத் தொகுப்பு

நிலாரசிகனின் " ஜூலி யட்சி " - சிறுகதைத் தொகுப்பு.

ஆறு புத்தகங்களையும் சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் 11.01.2015 அன்று வெளியிட்டோம், அடுத்த வாரமே 18.01.2015 அன்று பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியில் வெளியீடு.

வெளியீட்டு விழாவுக்குள் புத்தகங்களை அச்சகத்திலிருந்து கொண்டுவர ஜேம்ஸ்பாண்ட் சாகசங்களெல்லாம் செய்ய வேண்டி இருந்தது தனிக்கதை ஆனாலும் நல்ல அனுபவம்.

இனி ஒவ்வொரு வருடமும் குறைந்தது இருபது புத்தகங்களாவது பொள்ளாச்சி இலக்கியவட்ட வெளியீடாகக் கொண்டு வர வேண்டும் என்பது இலக்கு.

பொள்ளாச்சி இலக்கியவட்ட வெளியீடுகள் கீழ்க்கண்ட இடங்களில் கிடைக்கும்

கோவையில்

விஜயா பதிப்பகம், டவுன் ஹால்
கீதம் பதிப்பகம் உக்கடம் பேருந்து நிலையம்

பொள்ளாச்சி

ஆசியன் புத்தகக் கடை, மகாலிங்கபுரம்
அட்சயா அச்சகம் ( சுதர்சனம் வார இதழ் ), பேருந்து நிலையம் அருகில்
அன்பு புத்தகக் கடை , பேருந்து நிலையம்

சென்னையில்

அகநாழிகை புத்தக அங்காடி
டிஸ்கவரி புக் பேலஸ், கே கே நகர்
ஓலைச்சுவடி பதிப்பகம், அண்ணா சாலை
வீ கேன் ஷாப்பிங்

ஆன் லைனில் வாங்க