திங்கள், 2 மார்ச், 2015

நீயா நானா


சென்ற ஞாயிறு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நீயா நானா நிகழ்ச்சியில் நான் பங்கேற்றிருந்தேன்.

முந்தைய இரவு கிளம்பி, பேருந்திலும் தூங்காமல் காலையில் முகச் சவரம் கூடச் செய்யாமல் AVM போய் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இரவே கிளம்பி வந்து சேர்ந்தேன்.

முதன் முறை என் முகம் தொலைக்காட்சியில் தெரிகிறது என்பதால் வீட்டில் அனைவரும் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒளிபரப்பு தேதி எனக்கும் தெரிந்திருக்கவில்லை. முந்தைய தினம் நிகழ்ச்சியைப் பற்றிய அறிவிப்பு வரும் விளம்பரத்தில் நான் பேசுவதைக் காட்டியிருக்கிறார்கள். நண்பர்கள் அதைப்பார்த்து நான் தானா என்று அழைத்துக் கேட்ட பின் தான் நானும் தெரிந்து கொண்டேன்.

நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கும் போதே மகள் கேட்டாள், ஏம்பா ஷேவிங் கூட பண்ணாம போயிட்டீங்க .? ( ம்க்கும், பண்ணிட்டு போனா மட்டும் ? - This is My mind voice ) என்றாள். அவசரமா போனேனா, நேரம் இல்ல டா என்று சொல்லிவிட்டேன்.

பெரியவங்க கிட்ட எளிதில் தப்பிச்சுட முடியுது, குழந்தைகளிடம் தான் எக்குத் தப்பா மாட்டிக்குறேன். குஜராத்திலிருந்து மோனிகா சேகர் தம்பதியினரின் தவப்புதல்வி நர்மதா குட்டி போன் போட்டாங்க.

மாமா, நீயா நானா ல நல்லா பேசுறீங்க "

சரி டா தங்கம் "

ஆமா உங்களுக்கு எத்தன குறள் தெரியும் மாமா "

இந்தக் கேள்வியைக் கேட்டதுமே பகீரென்றது

எனக்கு என்ன டா ஐம்பது அல்லது நூறு தெரியும் "

சரி மாமா , நீங்க டி.வி பாருங்க, நாளைக்கு போன் பண்றேன், அம்பது திருக்குறளும் எனக்கு சொல்லுங்க " என்றாள்.

நெஞ்சே அடைத்துக் கொண்டது. எவ்வளவு புத்திசாலித்தனமா கோர்த்து விட்டுட்டாங்க.. நல்லா இருங்க மோனிகா அக்கா...


முகநூலில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி நிறையப்பேர் குறைபட்டு எழுதியிருந்தார்கள். திருக்குறளை மட்டும் சொன்னாங்க, விஜய் நிறுவனம் பப்ளிசிடி ஸ்டன்ட் செய்கிறார்கள் என்று.

எது எப்படியோ இந்த நிகழ்ச்சியின் மூலமாக திருக்குறள் தெரியாதவர்களை வாசிக்கத் தூண்டியிருக்கிறது என்பதும், தெரிந்தவர்கள் மீண்டும் படிக்கத் தூண்டியிருக்கிறது என்பதும் நான் கண்டுகொண்ட உண்மை.

இதுவரை இருபது நண்பர்களாவது அந்நிகழ்ச்சியில் நான் சொன்ன திருக்குறளையும் அதன் பொருளையும் வாட்ஸ் அப், முகநூல், மற்றும் குறுஞ்செய்தி வழியாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். தம்மாத்தூண்டு நேரமே பேசிய எனக்கே இப்படி என்றால், மகுடேஸ்வரன், ஆறுமுகத் தமிழன், .வெண்ணிலா போன்றவர்களால் குறளின் வீச்சு இன்னும் நிறைய இடங்களுக்கு சென்றிருக்கும் என்பதே என் கருத்து.

இந்நிகழ்ச்சியை, எனக்காகவே எனது நண்பர்களும், உறவினர்களுமாக குறைந்தபட்சம் நூறு பேராவது பார்த்திருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் சில குறள்கள் இப்போது பரிச்சயமாகியிருக்கும் அல்லவா..?

நேர்மறை எண்ணங்கள் தான் நமக்கு முக்கியம்.


முன்பே ஒருமுறை பதிவிட்டபடி, சென்ற கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு தினம் திருக்குறள் சொல்லிக் கொடுத்தேன். அதில் ஜனனி எனக்கு அழைத்து அடுத்த கோடை விடுமுறைக்கும் வருகிறோம் திருக்குறள் படிக்கிறோம் என்றாள். மேலும் அவள் விடுமுறை முடிந்து வீட்டுக்குப் போய்விட்ட பின்பும் பல நாட்கள் திருக்குறள் எழுதி, படித்து வந்தாளாம். அவளது ஆர்வத்தை இப்போது இந்த நிகழ்ச்சி தூண்டி விட்டிருக்கிறதென்பது சரிதானே.

மேலும், இந்நிகழ்ச்சிக்குப்பிறகு, பாரதியும் மீண்டும் திருக்குறள் படிக்கலாம் என்று சொல்கிறாள். நல்லதுதானே.

மற்றபடி நிகழ்ச்சியில் ஆறுமகத்தமிழன், மகுடேஸ்வரன் அவர்களின் பேச்சை மிகவும் ரசித்தேன்.

நீயா நானாவைப்பற்றிய ஒரு புரிதல் கிடைத்தது. அவ்வளவே...

1 கருத்து:

  1. நீயா நானா பார்ப்பது இப்போது குறைந்துவிட்டது! நல்ல நிகழ்ச்சிதான்! கலந்துகொண்டமைக்கு பாராட்டுக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு