செவ்வாய், 17 மார்ச், 2015

விஷமாகிக் கொண்டிருக்கும் வாழ்க்கை

குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவின் மீது எப்போதும் கொஞ்சம் நமது கவனம் அதிகமாக இருக்கும். முன்பெல்லாம் பாக்கெட்டில் சில மிட்டாய்களை வைத்திருப்பேன். சந்திக்கும் குழந்தைகளுக்குக் கொடுக்கவென. ஒரு முறை அம்சப்ரியா சொன்னார், மிட்டாய் சில குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளாது சளி பிடித்துவிடும் அதனால் தான் நான் நிறுத்திவிட்டேன் என்று. அன்று முதல் மிட்டாய் கூட வாங்கி வைப்பதில்லை. கடைகளில் கிடைக்கும் பட்சத்தில் பாக்கெட் செய்யப்பட்ட இரண்டு ரூபாய் கடலை பர்பியை அல்லது நல்ல சாக்லேட்டுகளை மட்டுமே வாங்கித் தருகிறேன்.

இதுவரைக்கும் பாரதிக்கு குர்குரே, லேய்ஸ் போன்ற பாக்கெட் தின்பண்டங்களை வாங்கித் தந்ததில்லை. சிறுவயதிலிருந்தே அது தீங்கானது என்று சொல்லி வளர்த்ததால் அவளும் ஆசைப்பட்டுக் கேட்டதே இல்லை. மற்றவர்கள் சாப்பிடுவதைப் பார்த்தால் அவற்றைச் சாப்பிட வேண்டாம் என சொல்லும் அளவுக்கு பக்குவத்துக்கு வந்துவிட்டாள். Fanta,Coke,Pepsi போன்ற குளிர்பானங்களையும் இதுவரை தந்தது இல்லை.

ஐஸ்கிரீம், சாக்கலேட்டுகள் குழந்தைகளுக்கு அலாதி ப்ரியம் என்பதால் எப்போதாவது அவற்றை மட்டும், அதுவும் தரமானவற்றையே வாங்கித் தருகிறோம். இப்படி , பார்த்துப் பார்த்து தான் ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைகளின் நலனுக்காக ஒவ்வொன்றையும் செய்கிறோம். அதுவும், உணவுப் பொருட்கள் விசயத்தில் ரொம்பவே கவனமுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.

பாரதிக்கு முதல் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்த இரண்டாவது நாள், அவளுக்கு வாயிலும் வயிற்றிலும் நிற்காமல் போகிறது. பல முறை போனதால் துவண்டு விட்டாள். பாட்டி வைத்தியங்கள் எதுவும் மாலை வரை முயன்று பார்த்தும் பலனளிக்காத்தால், இரவு ஒன்பது மணிக்கு மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடினோம். மருத்துவரைப் பார்க்க இரவு 12 ஆகிவிட்டது. மருத்துவர் , சாப்பிட என்ன கொடுத்தீர்கள் என்றதும் மனைவி சாதத்துடன் பீட்ரூட் சட்னி என்று சொன்னதும் மருத்துவர் கன்னாபின்னாவென திட்ட ஆரம்பித்துவிட்டார். தெரிந்தவர்தான். ஒரு வயதுக் குழந்தைக்கு பீட்ரூட் சட்னி எதுக்குக் கொடுத்தீங்க. மண்ணுக்குக் கீழே விளையும் பொருட்களில், குறிப்பாக பீட்ரூட்டில் மருந்து ( pesticides ) தெளித்திருப்பார்கள் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். பெரியவர்களுக்கே பீட்ரூட் சாப்பிட்ட அடுத்த நாள் காலைக்கடன் கழிக்கையில் பாருங்கள் எப்படி எரியுமென்று என்று பயப்படுத்தினார். இரண்டு இரவுகள், மூன்று பகல்கள் மருத்துவமனையில் தான். கொடுமை என்னவென்றால், பாரதி ரொம்பவும் துவண்டுவிட்டதால் குளுகோஸ் போட வேண்டும் என்று சொல்லி செவிலியர்கள் பாப்பாவின் கையில் அவள் கதறக்கதற ஊசியில் துளைத்தார்கள். சின்னக் குழந்தை, நரம்பு கிடைக்கவில்லை ரத்தம் பொங்கிக் கொண்டு வந்துவிட்டது. நாங்கள் அழுதுவிடும்படி ஆகிவிட்டோம். அப்பா கோபத்தில் செவிலியர்களிடமிருந்து குழந்தையைப் பிடுங்கிக் கொண்டு மருத்துவரிடம் சண்டைக்குப் போய்விட்டார். பின்பு அவர் வந்து, எங்களை வெளியில் போகச் சொல்லிவிட்டு குழந்தையின் இன்னொரு கையில் ஊசியைச் செலுத்திப் படுக்கை வைத்தார். இரண்டு இரவுகளும் ஒரு துளி கூடத் தூங்காமல் அவள் அருகில் அவளைப் பார்த்தபடியே இருந்தோம். கை கால் அசைந்து ஊசி எங்கும் ஏறிவிடுமோ , குழாயை இழுத்துவிடுவாளோ என்று..


நிகழ்காலத்துக்கு வருவோம், நேற்று அப்பா தர்பூசணி வாங்கி வந்திருந்தார். அனைவரும் வட்டாமாக அமர்ந்து, அழகாக வெட்டி சாப்பிட அமர்ந்தோம். தர்பூசணி செக்கச் செவேலென்று அழகாக இருந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு நண்பர்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பிய வீடியோ ஞாபகம் வந்தது. கீழுள்ள இணைப்பில் வீடியோ இருக்கிறது பாருங்கள்.



https://www.dropbox.com/s/2hr8wiurw756xvt/VID-20150311-WA0007.mp4?dl=0 

இதைப்பார்த்து விட்டு எப்படிச் சாப்பிடுவது. அதற்குள் எல்லோரும் பாதி சாப்பிட்டு விட்டார்கள். எனக்கு இப்போது வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாமல் ஒரு உருண்டை உருள்கிறது நிஜமாலுமே.

இந்த எரித்ரோசின் பி என்ற வேதிப்பொருளைப் பற்றி இணையத்தில் பார்த்தால் கண்ணைக் கட்டுகிறது.

நீங்களும் படித்துப் பார்க்கலாம். தின்பண்டங்களில் வண்ணம் தர உபயோகப் படுத்துகிறார்கள் எனினும் அமெரிக்காவில் இது தடை செய்யப்பட்ட ஒன்று.

http://en.wikipedia.org/wiki/Erythrosine

இதன் MSDS இதையே தான் சொல்கிறது. கொஞ்சம் ஆபத்தான திரவம் தான் இது.

http://www.sciencelab.com/msds.php?msdsId=9923927

எத்தனை மாபாதகர்கள் இவர்கள், வியாபாரத்துக்காக, தர்பூசணி சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மருந்தை ஊசியின் வழியாக உட்செலுத்துகிறார்கள். இதன் பின் விளைவுகள் அறிவார்களா இவர்கள். சினிமாவில் வருவதைப்போல இந்தப் பழத்தை மறந்தாற்போல அவர்கள் வீட்டுக்கே எடுத்துப் போக, அவர்களின் குழந்தைகள் சாப்பிடுவதைப் பார்த்தால் தான் இவர்களுக்குப் புத்தி வருமா.

ஜங்க் புட் சாப்பிட வேண்டாம், ரசாயன குளிர்பானங்களைக் குடிக்க வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். பழங்கள் தான் உடலுக்கு ஆரோக்கியம் என்றும் அறிவுறுத்துகிறோம். ஆனால் இன்று அந்தப் பழங்களை நம்பி சாப்பிட முடிகிறதா .?

மாம்பழங்களை கார்பைடு கல் வைத்துப் பழுக்க வைக்கிறார்கள் - உடலுக்கு மிகவும் தீங்காகிறது

திராட்சைகள் கெடாமல் இருக்க மேலே பூச்சி மருந்து தெளிக்கிறார்கள்.

ஆப்பிள் , பேரிக்காய்கள் கெடாமலும், கண்கவரும் வண்ணமும் இருக்க மெழுகை ( Wax Coating ) பூசி விற்கிறார்கள்.

வாழைப்பழம் மஞ்சள் நிறத்தில் அழகாக இருப்பதுவும் ரசாயனம் தான்.

இதுபோக, உணவுப் பொருள் அனைத்திலும் கலப்படம்
குருமிளகில் பப்பாளி விதை
காபிப் பொடியில் புளியங்கொட்டைப் பொடி


நாம் சாப்பிடும் அனைத்து உணவுப் பொருட்களிலும் நஞ்சைக் கலக்கிறார்கள்.

எத்தனை துயரம் மிகு செயல்கள் இவை. சுகாதாரத்துறையும் அரசும் இவற்றைக் கண்டு கொள்வதாகவே இல்லை. மருத்துவமனைகளும் புதிய புதிய நோய்களும் பல்கிப் பெருகாமல் என்ன செய்யும்.

அடுத்த உலகப் போர் தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருத்துச் சொல்கிறார்கள்.

ஆனால், அது வரைக்கும் இந்த மனித இனம் உயிரோடு இருக்குமா எனத் தெரியவில்லை, தனக்குத் தானே சோற்றில் விசம் வைத்துத் தின்று செத்துவிடுவோம் என்றே நினைக்கிறேன்.


2 கருத்துகள்:

  1. இன்று எல்லா உணவிலும் நஞ்சு கலந்துவிட்டது கொடுமைதான்! ஐயையொ! நான்கூட நேற்று தர்பூசணி சாப்பிட்டேன்! இனி சாப்பிட யோசிக்க வேண்டும் போல! குழந்தைகளுக்கு உணவு அளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்தான்! என் பெண்ணுக்கும் மாஸா, சாக்லேட்ஸ் ஒத்துக் கொள்வதில்லை! ஆனால் ஆசைப்படுகிறாளே என்று கொஞ்சமாக கொடுப்போம்! அப்புறம் டாக்டருக்கு நிறைய கொடுப்போம்! சிறப்பான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு