புதன், 26 அக்டோபர், 2016

மழை = கவிதை

# 1
பெருங்கோடை நிலத்தில்
நாலே நாலு துளி தான்
பெய்திருக்க
அவசரமாய் வந்து
கவிதை கேட்கிறாய்
மழை வேண்டுமா
கவிதை வேண்டுமா

# 2

மென் தூறல் கிளர்த்தும்
மண் வாசனைக்கு
மயங்குபவன்
தவறவிடுகிறான்
நகரத்துக்குச் செல்லும் கடைசிப் பேருந்தை

# 3

முன்னேற்பாடுகள்
எதுவுமின்றி ஒரு
மழைநாளில்
நமக்குள் நிகழ்ந்துவிடுகின்ற
ஒரு முத்தத்தை

இன்னும் என்னால்
கவிதையாக்க முடியவில்லை.

# 4

முற்றத்தில்
மழை கவிதை எழுதிக்கொண்டிருக்க
மழைக் கவிதைதான் வேண்டுமா

# 5

முதன் முதலில் 
என்னைச் சபித்தபடிப் பெய்கிறது 
இந்த மழை. உன் கண்களில் பெய்யும் 
மழையைப் பொருட்படுத்தாது 
வழியனுப்பி வைக்கிறேன் நான்

கழிவுகளின் தலைநகரம்

வீட்டிலிருந்து காலையில் கிளம்பி இருசக்கர வாகனத்தில் கோவில்பாளையம் வந்து ஸ்டேண்டில் நிறுத்திவிட்டு பேருந்தில் வேலைக்குச் செல்வது வழக்கம். எப்போதும் காலையில் அடித்துப் பிடித்து தான் வருவேன். எனவே கொஞ்சம் வேகமாக வருவேன். எவ்வளவு வேகமாக வந்தாலும் யாராவது லிப்ட் கேட்டால் நிறுத்தி ஏற்றிக்கொண்டுதான் வருவேன்.

ஒரு நாள் வேலைக்கு வரும்போது சாலையில் ஒருவர் பதட்டமாக கை காட்டி கிட்டத்தட்ட வழிமறித்தார். எங்க போகனும் ஏறுங்க என்றேன். இல்லை எங்கயும் போக வேண்டாம். உடனடியா வண்டியை ஓரம் கட்டுங்க என்றார். எனக்குப் புரியவில்லை. நேரம் வேறு ஆகிவிட்டது. கோபமாக  எதற்கு என்று கேட்டேன். அவசரம் வாங்க, அங்க பாருங்க ஒரு மினிடோர் வண்டி நிக்குதுல அதுல கேரளாவிலிருந்து கோழி இறைச்சிக் கழிவெல்லாம் சாக்கு மூட்டைல கொண்டு வந்து இங்க கொட்ட வந்திருக்காங்க. நான் நடந்து போய்ட்டு இருந்தேன் அவங்கள பாத்ததும் நின்னு கவனிச்சேன். அதைப் பார்த்த அவங்க சும்மா பாத்ரூம் போற மாதிரி நடிக்கறாங்க என்றார்.

வண்டியை ஓரம் கட்டினேன். நேரமானாலும் பரவாயில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் இப்படி அந்தச் சாலையில் இரண்டு சாக்கு மூட்டை கோழிக் கழிவுகளைக் கொட்டிச் சென்றுவிட்டனர். ஒருத்தரும் அந்தப்பாதையில் நடக்க முடியவில்லை. குடலைப்புடுங்கும் துர்நாற்றம். நாய்கள் வேறு அவற்றைக் குதறி இழுத்து ஆங்காங்கே சிதறி விடுகின்றன. நோய் பரவும் அபாயம் வேறு உள்ளது.

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு மினிடோர் வண்டிக்காரனிடம் போய் என்ன இது என்று கேட்டோம். ஏதோ ஒரு ஊர் பேரை சொல்லி அங்கே போகிறேன் என்றான். பொய் சொல்கிறான் என்று தெரிந்து விட்டது. அவனிடம் சண்டை கட்டினோம்.( வாய்ச் சண்டை ஒன்லி )

நாங்கள் இருவரும் அவனிடம் வாக்குவாதம் செய்துகொண்டிருப்பதைப் பார்த்து இன்னொரு இருசக்கர வாகனத்துக்காரரும் துணைக்கு வந்தார். மூன்று பேரும் சேர்ந்து போலீஸ் ஸ்டேசன் போலாம் வா என்று அவனை இழுத்த போது பயந்து விட்டான். அய்யோ சாரே, மன்னிக்கனும், இந்தப்பக்கமே இனி வர மாட்டேன் என்றான். நாங்கள் விடவில்லை. ஆனால், அவன் காலில் விழாத குறையாகக் கெஞ்சியதாலும், புள்ள குட்டிக்காரன் என்று சென்டிமென்டாகக் கெஞ்சியதாலும் வேறு வழியில்லாமல் அவனை மிரட்டி திரும்ப அனுப்பி வைத்துவிட்டோம். அதற்கு பிறகு மீண்டும் அந்தப்பாதையில் அப்படி எதையும் பார்க்கவில்லை.

இதோ இன்று செய்தித்தாளில் பார்த்த இந்தச் செய்தி பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுவிட்டது.
கோவை, கேரள எல்லையில் இருப்பதால், கோவை, பொள்ளாச்சி , உடுமலை போன்ற பகுதிகளில் இப்படி கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டுவது அதிகம். நம் வீட்டு வாசலை நன்றாகப் பெருக்கி பக்கத்து வீட்டு வாசலில் யாரும் பார்க்காத நேரத்தில் தள்ளிவிட்டு விட்டு வீராப்பாக நடந்து வருவோமே அப்படியான மனநிலையில் நிகழ்த்தப்படுவது.

கிட்டத்தட்ட 22 லாரி நிறைய இப்படி இறைச்சி,ரப்பர், தோல் மற்றும் மருத்துவக் கழிவுகளை ஒரு தோட்டத்தில் கொட்டி தரம்பிரித்து விற்கத் திட்டமிட்டிருக்கின்றனர். இதில் பலருக்குப் பங்கிருந்திருக்கும். பெரும் பணம் கூட கை மாறியிருக்கும். சோதனைச் சாவடி, காவலர்கள் என பலரையும் தாண்டி வந்திருக்கிறது.

இரண்டு மாநிலங்களுக்கிடையில் இப்படி தில்லுமுல்லு என்றால், நாடுகளுக்கிடையில் இதைவிட பெரிய தில்லுமுல்லுகள் நடக்கின்றனவாம்.

மேலை நாடுகளில், குப்பைகளாக சேகரிக்கப்படும் மின்னணுக் கழிவுகள் ( E-Waste) , மருத்துவக் கழிவுகள் எல்லாம் டன் கணக்கில், கண்டெய்னர் கண்டெய்னராக கப்பல்களில் வந்து இறங்குகின்றனவாம். அவற்றை இங்கிருக்கும் தரகர்கள் வாங்கி பல்வேறு வகையில் விற்றும் , எரித்தும் , புதைத்தும் காசு பார்க்கிறார்கள். சில சமயங்களில் அவர்களது கடல் எல்லைகளில் கொட்டுவதால் மீன் வளம் மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்படும் என்பதால், நமது கடல் எல்லைகளில் கொட்டிவிடவும் நிறையப் பித்தலாட்டம் நடக்கிறதாகப் படித்திருக்கிறேன்.

அவர்கள் குப்பையின்றி சுகாதாரமாக வாழ நமது நாட்டைக் குப்பைத் தொட்டியாக மாற்றிவிடுகின்றனர்.

மேலை நாட்டுக்காரனுக்கு நம் நாடு குப்பைத் தொட்டி, அண்டை மாநிலத்தவனுக்கு நம் மாநிலம் குப்பைத் தொட்டி, பக்கத்து வீட்டுக்காரனுக்கு நம் வீடு குப்பைத் தொட்டி..

வாழ்க பாரதம் , வாழ்க நின்புகழ்


செவ்வாய், 25 அக்டோபர், 2016

இளைஞர் எழுச்சி நாள் - அரசுப்பள்ளிகளில்

கிணத்துக்கடவு வட்டம் வடசித்தூரில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார் தோழர் ஜீவாபாரதி.. அவர் நல்ல அரசுப்பள்ளி ஆசிரியர் மட்டுமல்ல, நல்ல வாசிப்பாளர், தொடர்ந்து எங்களது பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துக்கு வருகை தருபவர். பல்வேறு ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்து வருபவர். அது மட்டுமல்லாமல் நல்ல சமூக செயல்பாட்டாளர். நிறைய உதவிகள் செய்து வருபவர். அதில் ஒன்று தான், கொலுசு நூலகத்தில் நடக்கும் அரசுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான இலவசப்பயிற்சி முகாமில் ஒவ்வொரு வாரமும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பெடுக்கிறார்.

இத்தனை சிறப்பு மிகு தோழர், கடந்த 15-10-2016 அன்று மேதகு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அய்யா அவர்களின் பிறந்த நாளை அரசு இளைஞர் எழுச்ச்சி நாளாகக் கொண்டாடுவதையொட்டி மாணவர்களிடம் உரையாற்ற முடியுமா என என்னை அழைத்தார். இதற்கு முன் இரண்டு மூன்று முறை அவர் அழைத்தும் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது ஆகவே இம்முறை வருவதாக ஒப்புக்கொண்டேன்.

ஒன்பதிலிருந்து, பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நிகழ்ச்சியாக இருந்தது. மாணவர்களுக்கு அறிவுரையாக அல்லாமல் ஒரு உரையாடலாக கலாம் அவர்களின் கனவு , நமக்குத் தேவையான சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, முதல் நிலைத் தயக்கத்தைத் தவிர்த்தல், ஆசிரியர்கள் பெற்றோர்களை மதித்தல் போன்ற நல்ல கருத்துகளை கதைகளின் மூலமாகத் தெரிவித்தேன். ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் வெகுவாகக் குறைந்து வரும் வாசிப்புப் பழக்கத்தை சுட்டிக்காட்டி வாசிப்பின் அவசியத்தை விளக்கினேன்.


ஆசிரியர்களும் மாணவர்களும் பேசி முடித்தவுடன் நன்றாகத்தான் பேசியதாக சான்றளித்தார்கள். விஸ்தாரமான மைதானம், நல்ல கட்டிடங்கள், சிறந்த ஆர்வமான ஆசிரியர்கள் என , தனியார் பள்ளிகளில் இல்லாத அம்சங்களைக் காண முடிந்தது. மன நிறைவான நிகழ்வாக இருந்தது.

முன்னதாக , ஆசிரியர் ஜீவபாரதி என்னை பத்துமணிக்கு மேல் வரச்சொல்லியிருந்தார், எல்லா இடத்துக்கும் தாமதமாகப் போகும் அபார சுறுசுறுப்பு கொண்ட நான் , அன்று வழி தெரியாது என்ற காரணத்தினாலும் , ஆர்வக்கோளாறினாலும் வெகு சீக்கிரமாகவே கிளம்பி 9 மணிக்கே அவர்களது பள்ளியை நெருங்கிவிட்டேன். என்னடா இவ்வளவு நேரமே போய் என்ன செய்யப்போகிறோம் என நினைத்து வண்டியை ஓரம் கட்டினேன்.

போகும் வழியில்  உள்ள ஒரு அரசு நடுநிலைப்பள்ளியில் தான் கவிஞர் பானுமதி அம்மா தலைமையாசிரியராகப் பணிபுரிகிறார். மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். இலக்கியவட்டத்துக்கு பல்வேறு சமயங்களில் உதவியிருப்பவர் மேலும் தவறாமல் கலந்து கொள்ளக்கூடியவர். அவர் கடந்த இரண்டு கூட்டங்களுக்கு வரவில்லை. சரி, பார்த்து நாட்களாகின்றனவே , போகும் வழிதானே என்று நினைத்து வண்டியை அவரது பள்ளிவாசலில் நிறுத்தி வந்துவிட்டாரா என்று கேட்க அலைபேசினேன்.

காலை 9.30மணிக்கு துவங்கும் பள்ளி என நினைத்து வந்திருப்பாரா என்ற சந்தேகத்தில் அழைத்தால், நான் ஒரு நாள் கூட தவறாது 8.30 மணிக்கே வந்து விடுவேன் என்று சொன்னவர், பள்ளிக்கு வெளியேவே வந்து முகம் மலர என்னை பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.

நான் சும்மா அவரைப் பார்த்து நலம் விசாரிக்கவே வந்தேன் கிளம்புகிறேன் என்றேன். ஆனால் அவரோ விடுவதாயில்லை. வராதவர் வந்திருக்கிறீர்கள் எங்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உங்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்று சொன்னவர். அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆசிரியர்களை அழைத்து அறிமுகப்படுத்தினார். மாணவர்கள் ஒரு அறையில் குழுமச் செய்து இளைஞர் எழுச்சி நாள் ஆகையால் எங்கள் மாணவர்களுடன் ஒரு சிறு உரையை நிகழ்த்தி நல்ல கருத்துகளைச் சொல்லிவிட்டு செல்லுங்கள் என்றார். மறுக்க முடியவில்லை. தயாரானேன்.

அந்தக் குழந்தைகளிடமும் சிறிது நேரம் பேசினேன். பின்னர் கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டிகளில் வென்ற குழந்தைகளுக்கு பரிசளிப்பு நிகழ்வு. மொத்தமே பள்ளியில் எண்பதுக்கும் குறைவான குழந்தைகள் தான் பயில்கிறார்கள் . சிலவருடங்கள் முன்பு கிட்டத்தட்ட 400 குழந்தைகள் படித்த பள்ளி என பானுமதி அம்மா சொல்லும் போது கொஞ்சம் மனது வருத்தப்பட்டது, குற்றவுணர்ச்சிக்கும் ஆளானது. ஆனால், இருக்கும் குழந்தைகள் அனைவரும் அவ்வளவு அறிவாகவும், துருதுருவெனவும் இயல்பான குழந்தைத்தன்மையுடனும் இருக்கிறார்கள். நன்றாகப் பேசுகிறார்கள் , படிக்கிறார்கள்..

ஓரளவு இடவசதியும் கட்டமைப்பும் உள்ள பள்ளிதான் . இடவசதிதான் இருக்கிறது. தனியார் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் நவீன கல்வியெல்லாம் இம்மாதிரி அரசுப்பள்ளிக்கு வந்து சேர இன்னும் சில தலைமுறைகள் தாண்ட வேண்டியிருக்கும். கோவை பூசாகோ கல்லூரி மாணவர்கள் தன்னார்வலராக இந்தப்பள்ளிக்கு வந்து சில வசதிகளைச் செய்து தந்திருக்கிறார்கள். குழந்தைகள் நல்ல கல்வி கற்க கணிப்பொறி, மற்றும் ப்ரொஜெக்டரைத் தங்கள் சொந்தச் செலவில் வாங்கித் தந்திருக்கிறார்கள்.

மாணவர்கள் படு சுட்டியாக இருக்கிறார்கள். கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, பேச்சுப்போட்டி என அனைத்துப்போட்டிகளிலும் மிகு உற்சாகத்துடன் கலந்து கொள்கிறார்கள்.

தனியார் பள்ளிகளில் இப்படியான கலை இலக்கிய ஈடுபாடு மிக மிகக் குறைவாகவும் சுத்தமாகவே இல்லாமலும் இருப்பதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறேன்.  கவிதை, கட்டுரை, பேச்சு, இலக்கியம் ஏன் குழந்தைகளுக்கான உரையாடல்கள், கதைகள் எதுவுமே நான் சென்று பார்த்த தனியார் பள்ளிகளில் இல்லை. ஆனாலும் பல்வேறு காரணங்களுக்காக தனியார் பள்ளிகளுக்குத்தான் பிள்ளைகளை அனுப்புகிறோம்.

தனியார் பள்ளிகளின் கட்டமைப்பும், வசதிகளும், முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இப்போது தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் சில அரசுப்பள்ளிகளும், அரசுப்பள்ளி ஆசிரியர்களும் மிகத் திறமையாகவும் தன்னார்வத்துடனும் செயல்பட்டு வருகின்றன.

பள்ளிகளில் நாடகம், கவிதை, கதை, வாசிப்பு, பேச்சு , விளையாட்டு, பொம்மலாட்டம், இன்னும் பல வடிவங்களில் அறிவுசார் குழந்தைகள் நிகழ்வுகளை நண்பர்கள் பலர் சிரத்தையெடுத்து ஒருங்கிணைத்து வழங்குகிறார்கள். அரசுப்பள்ளி ஆசிரிய நண்பர்கள் பலர் மிகச் சிறப்பாக இவ்வேலைகளில் தங்களது சுய ஆர்வத்தின் அடிப்படையில் இயங்கிவருகிறார்கள்.

இன்னும் கொஞ்சநாளில் அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு அனைத்து விதத்திலும் போட்டியாக சவாலாக வந்து விட வேண்டும்.

அப்போது தான் கல்வி அனைவர்க்குமாகும், நேர்மையான ஏட்டுக் கல்வியுடன் , கலை, இலக்கிய மற்றும் செயல்முறைக் கல்வியும் கிடைக்கும்.

வந்துவிடும்செவ்வாய், 18 அக்டோபர், 2016

பிஞ்சு மனதில் பரவிவரும் நஞ்சுசில விஷயங்களை எழுத ரொம்ப யோசிப்பேன். தயக்கங்களையெல்லாம் தாண்டி ஏதோ ஒரு எண்ணம் எழுதச் சொல்லும். அப்படிப் பல முறை யோசித்த பின் தான் இதை எழுதுகிறேன்.

சமீபத்தில் ஊரில் ஒரு அதிர்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டேன். ஊர் பள்ளியில் இரண்டு குழந்தைகள் தவறாக நடந்து கொண்டார்கள் என்று. குழந்தைகள் என்றால் சின்னஞ்சிறு குழந்தைகள் மூன்று, நான்கு வயதிருக்கும். ஊரில் அங்கன்வாடியில் படிக்கிறார்கள். அங்கன்வாடியில் ஏதோ ஒரு இடைவேளையில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண்குழந்தையும் செடிகளுக்குப் பின்னால் ஒதுங்கியிருக்கிறார்கள்.  

இதில் அதிர்ச்சியாக என்ன இருக்கிறது, குழந்தைகள் தானே என நினைத்தேன். பிறகு கேள்விப்பட்டது தான் அதிர்ச்சியான செய்தி. அவர்கள் பெரியவர்கள் உடலுறவு கொள்வதைப்போலான செயல்களைச் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். 

திடீரென குழந்தைகளைக் காணவில்லையென்று தேடிய ஆசிரியை, அவர்களைக் கண்டு அதிர்ச்சியாகியுள்ளார்.  சின்னக்குழந்தைகள் , அடிக்கவோ திட்டவோ கூடாதென முடிவெடுத்தவர், அவர்களுக்கு கொஞ்சம் பக்குவமாகச் சொல்லியுள்ளார். பின்னர், ஊர்த்தலைவர் அம்மாவுடன் இணைந்து அவர்களது பெற்றோர்களை வரவழைத்துப் பேசியுள்ளார் , அறிவுரை சொல்லி அனுப்பியுள்ளார்.  இதைக்கேட்டதிலிருந்து மனது என்னவோ செய்தபடியிருக்கிறது.

பெரிதாக அதிர்ச்சியடைய , வருந்த எதுவுமற்ற நிகழ்வு என்று கூட சிலர் சொல்லலாம். இந்நிகழ்வின் பின்னணியிலிருக்கும் உளவியலும் , இப்படியான விதிமீறல்களுக்குப் பின்புலக் காரணிகளாக இருக்கும் பல்வேறு சமூகக் காரணிகளும் பல கோணங்களில் சிந்திக்க வைப்பன. 

உளவியல் , மருத்துவ நிபுணர்களின் சில கருத்துகளைப் படித்த ஞாபகம் . பிறந்த குழந்தைகளுக்குமே  பாலுணர்வு இயற்கை. அதன் வெளிப்பாடு தான் கை சூப்புதல், உறுப்புகளை தேய்த்தல், போன்ற பல செய்கைகள். இவையெல்லாம் இயற்கைக் காரணிகள். இவற்றை விட்டு விடலாம். புறத்திலிருந்து நமது குழந்தைகளுக்கு என்ன மாதிரியான நெருக்கடிகள் வருகின்றன என நினைத்துப் பாருஙகள்.

இந்தக் குழந்தைகளின் நடத்தையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் பொதுவாக வந்த தகவல்களில் ஒன்று, இவர்கள் பிற்படுத்தப்பட்ட ஏழ்மையான குழந்தைகள். ஒரே அறையைக் கொண்ட குடிசையில் மூன்று குழந்தைகள் , கணவன் , மனைவி என வசிக்கும் படி வாய்த்தவர்கள். அவர்களுடைய அப்பா, அம்மா இருவருமே குடிப்பார்களாம் , குடித்துவிட்டு போதையில் குழந்தைகள் பார்ப்பதைக் கூட கவனிக்காமல் அல்லது பார்க்கவில்லை என்ற நினைப்பில் உறவில் ஈடுபடுவார்கள் அதைப் பார்த்த குழந்தைகள் நிலை என்ன ஆகும் என யோசித்துப் பாருங்கள் என்கிறார்கள் . இது உண்மையாகவும் இருக்கலாம் இல்லாமலும் போகலாம். ஆனால், இப்படியான வசிப்பிடம் தான் நம்மில் பலருக்கும் வாய்த்திருக்கிறது.

ஒரே அறையில் குழந்தைகளுடன் தூங்க நேர்கிறது . கணவன் மனைவிக்கு என்று பிரத்யேக அறை இருப்பதில்லை. பெரும்பாலான நடுத்தர வர்க்க தம்பதிகள் குழந்தை உறங்குவதற்காகக் காத்திருக்கிறார்கள் அல்லது விடுமுறை நாட்களில் குழந்தைகள் ஊருக்குப் போவதற்காகக் காத்திருக்கிறார்கள்.  இது முற்றிலும் மறுக்க முடியாத உண்மை. ஒருவேளை தங்கள் அப்பா அம்மா அந்நியோன்யமாக இருப்பதைப் பார்க்க நேரிடும் குழந்தைகள் மனதில் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் ? அதை அவர்கள் ஒரு விளையாட்டாக நினைத்து , அதை முயற்சித்துப் பார்க்கும் அபாயம் கூட இருக்கிறதல்லவா. அப்படியும் நடந்திருக்கலாம் மேற்சொன்ன சம்பவம்.

முக்கியமாக, குழந்தைகளின் மீதான பாலியல் அத்துமீறல்களும், பாலியல் வன்முறைகளும் அவர்களின் உளவியல் சிக்கல்களுக்கு வழிவகுக்கின்றன.
தாத்தா, மாமா, அண்ணன், தூரத்து உறவு, பக்கத்து வீட்டுக்காரர்களால் சீரழிக்கப்பட்ட குழந்தைகளைப் பற்றிய செய்திகள் எத்தனை படித்திருக்கிறோம். அவையெல்லாம் செய்தியாக வந்தவை. செய்தியாக வராமல், வெளியுலகுக்குத் தெரியாமல் இன்றும் தொடர்பவை ஏராளம் உள்ளன. இவர்களிடமிருந்தும்  குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பு பெற்றவர்களுடையதாகிறது.

குடும்பத்தில் நடக்கும் இம்மாதிரியான நிகழ்வுகளை மட்டும் குழந்தைகள் பிரதிபலிப்பதில்லை, நமது சமூக ஊடகங்கள் தரும் பாடமும் இவை தான். சினிமாவும் குறிப்பாக தொலைக்காட்சியும்  கற்றுத் தரும் கல்வி பெரும் கல்வி. 
( நன்றாக வாசிக்கவும் 'கல்வி' என்று தான் குறிப்பிட்டுள்ளேன் ).

கடந்த மாதம், காலாண்டு விடுமுறை சமயம், அண்ணன் மகள் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். வீட்டுக்கு வந்திருந்தாள். வீட்டில், அவளும், பாரதி(9 வயது), இனியா(5 வயது) மூவரும் இருப்பார்கள். நிறைய கதைகள், புத்தகங்கள் , விளையாட்டு இப்படித்தான் நேரத்தைச் செலவு செய்யச் சொல்லி இருக்கிறேன். இருப்பினும் தொலைக்காட்சி பார்க்காமலா இருப்பார்கள். முந்தைய நாள் , ஒரு நண்பன் நான்கு திரைப்படங்கள் பென் டிரைவில் கொடுத்தான். அதில் ஒரு படத்தைப் பார்த்து விட்டு அப்படியே பென்டிரைவை தொலைக்காட்சிப்பெட்டியிலேயே விட்டு விட்டு வந்துவிட்டேன். பென்டிரைவில் நிறைய குழந்தைகள் திரைப்படமும் வைத்திருந்தேன். அவர்கள் பார்ப்பதற்காக.

நண்பன் எனக்குக் கொடுத்த திரைப்படங்களில் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற காவியப்படமும் ஒன்று. நான் அதைப் பார்க்கவேயில்லை. இரண்டு நாட்கள் கழித்து நண்பன் சொன்னான். அண்ணா, திரிஷா இல்லனா நயன் தாரா னு ஒரு படம் அதுல இருக்கும் அதைக் குடும்பத்தோட பார்க்க முடியாது கவனமாகப் பாருங்க என்றான். எனக்கு பகீரென்றது. அப்போது தான் பென்டிரைவ் தொலைக்காட்சியிலேயே இருப்பது உறைத்தது.

அன்று வீட்டுக்குப் போனதும் வழக்கம் போல பாப்பாக்களிடம் கேட்டேன், இன்னிக்கு என்னென்ன செய்தீர்கள் என, விளையாட்டு, சைக்கிள் ஓட்டம், படிப்பு என அனைத்துடன் டிவியும் பாத்தோம் என்றார்கள். நான் பதைபதைப்புடன் படம் பார்த்தீர்களா என்றேன். ஆமாம் ரெட் பலூன் பார்த்தோம் என்றார்கள். எனக்கு அப்பாடா என்றிருந்தது. இருந்தாலும் கேட்டேன். த்ரிஷா இல்லனா நயன் தாரானு ஒரு படம் பார்த்தீர்களா என்றேன். அவர்கள் அது நேத்தே பார்த்தோம் ஜோக்காக இருந்தது என்றார்கள். அதிர்ந்து போய், மிகவும் வருத்தப்பட்டேன் . அன்று இரவுதான் அந்தப் படத்தை முழுமையாகப் பார்த்தேன் . குழந்தைகள் பார்த்திருப்பார்கள் என்பதை மனதில் வைத்துக் கொண்டே பார்த்தேன். குப்பையிலும் குப்பை. அத்தனை ஆபாசம் படத்தில், காட்சிகளில், வசனத்தில் என அத்தனையும் ஆபாசம். 

திரையரங்கத்துக்குச்  சென்று குழந்தைகள் இந்த மாதிரிப் படங்களையெல்லாம் பார்க்க மாட்டார்கள் தான். வயது வந்தோருக்கு மட்டும் என்று சான்றிதழ் அளிக்கப்பட்டு A முத்திரையுடன் வரும் அது ஒரு வகையில் நிம்மதி. ஆனால், இன்னும் சில மாதங்களில் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்று அறிவித்தபடி நடுவீட்டுக்கு தொலைக்காட்சியில் வருமே அப்போது யார் தடுப்பது. பெரியவர்கள் கூட இருந்தால் சேனல் மாற்றி குழந்தைகள் பார்க்காமல் தடுக்கலாம். இல்லாவிடில் ??? இது ஒரு எடுத்துக்காட்டுக்குத் தான். தொலைகாட்சிகளில் வரும் பாடல்கள், சீரியல்கள் ஏன் விளம்பரங்களைக் கூட கவனித்துப்பாருங்கள் அத்தனையும் ஆபாசம் அத்தனையும் வன்முறை. 

குழந்தைகள் பங்குபெறும் நிகழ்ச்சிகளைப் பாருங்கள் ஆபாசமான பாடல்களை முக்கல் முனகல்களுடன் குழந்தைகளைப் பாட வைப்பது, இடுப்பை வளைத்து வளைத்து ஆட வைப்பது, அறிவு ஜீவிகளாகக் குழந்தைகளைக் காட்டுவதாக அசட்டுத்தனம் செய்வது என நமது பேராசைகளுக்கும் புகழ் போதைக்கும் குழந்தைகளைப் பணயம் வைக்கிறோம்.

இப்படி வீட்டுக்குள்ளேயே விசத்தை வைத்திருக்கிறோமே என்று எத்தனை நாள் நாம் யோசித்திருக்கிறோம். இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் தணிக்கை வருமா வராதா ?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஆபாசம் ஒரு புறம், அக்கம் பக்கத்தில் மற்றும் சொந்த வீடுகளில் கேட்க, பார்க்கக் கிடைக்கும் ஆபாசங்கள் ஒரு புறமுமாக வளரும் குழந்தைகள் வேறெதைக் கற்றுக் கொள்வார்கள்.

நவீன காலக் குழந்தைகளை மிக மிக கவனமாக வளர்க்க வேண்டியுள்ளது. அவர்களின் கேள்விகளை, நாட்களை, அனுபவங்களை, நடத்தையை கவனமாகக் கையாள வேண்டியுள்ளது. அந்தப் பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும்  மட்டுமல்ல பக்கத்து வீடு, எதிர் வீடுகளில் இருந்தாலும் நமக்கும் உள்ளது. சிந்திப்போம்

இதற்கான தீர்வுகளை நாம் நமது வசம் தான் வைத்திருக்கிறோம். எனது சிற்றறிவுக்கு எட்டியவரை சிலவற்றைக் கோடிட்டுக் காட்டுகிறேன் நண்பர்கள் உங்கள் பரிந்துரைகளையும் இங்கு பகிரலாம். அறியாமையை அகற்ற உதவும்

  • குழந்தைகளிடம் பெற்றவர்கள் அதிகமாக உரையாட வேண்டும். அவர்கள் பள்ளியில், வெளியில் தினமும் என்ன நடக்கிறது என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதற்கு அவர்கள் என்ன எதிர்வினையாற்ற வேண்டும் என்பதை தோழமை உணர்வுடன் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்
  • குழந்தைகளை முடிந்த வரை தனிமையில் விடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • தொலைக்காட்சி , திரைப்படங்கள் பார்ப்பதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும். முக்கியமாக செல்பேசியைப் பயன்படுத்தி விளையாடுதல்
  • குழந்தைகளின் கேள்விகளுக்கு நாம் செவி சாய்க்க வேண்டும். நமக்கு பல்வேறு வேலைகள் இருப்பதைக் காரணம் காட்டி அதெல்லாம் கேட்காத போய் விளையாடு, போய் டீவி பாரு என்று அனுப்புவது ஆகாது
  • குழந்தைகளுக்கு குட் டச் எது, பேட் டச் எது என அவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் சொல்லித் தருதல் அவசியம்
  • மிக முக்கியமான ஒன்று, குழந்தைகளுக்கு நாம் செய்ய மறந்த ஒன்று கதை சொல்லுதல். நீதிக்கதைகளின் மூலம் சிறு வயதிலிருந்தே அவர்களின் மனதில் அறவுணர்ச்சியைத் தூண்டுவது கதைகள் தாம். முடிந்த வரை தினமும் நல்ல கதைகளைச் சொல்ல வேண்டும்.
  • குழந்தைகளின் மனங்களில் தீய எண்ணங்கள் வளர்க்கும் செயல்களை, எதிர்மறை எண்ணங்களை விதைக்கும் செயல்களைப் பெரியவர்கள் குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாது.

செவ்வாய், 11 அக்டோபர், 2016

மதமா மனிதமா

கொலுசு மின்னிதழில் வெளிவரும் எனது கட்டுரைத் தொடரான தேநீர் இடைவேளையில் இந்த மாதம் வெளியான எனது கட்டுரை ..


தேநீர் இடைவேளை : 7

மதமா மனிதமா

அது ஒரு வெள்ளிக்கிழமை. காலை வழக்கம் போல வேக வேகமாக வண்டியை ஓட்டிவந்து கோவில்பாளையம் ஸ்டேன்டில் நிறுத்திவிட்டு அவசரமாக நடந்துவந்து வந்த அரசுப்பேருந்தில் ஏறிக்கொண்டேன்.
உக்கடம் சென்று அங்கிருந்து அலுவலகப் பேருந்தைப்பிடித்து கணபதியிலுள்ள அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். அப்போதே பேருந்து நிலையத்தில் கசமுசா கசமுசா என வழக்கத்துக்கும் மாறாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அவசரத்தில் காது கொடுக்கவில்லை. பேருந்திலும் ஒரே சலசலப்பு, நடத்துனரிடம் இரண்டொருவர் விசாரித்தபடியே இருந்தனர். ஏங்க பஸ்ஸெல்லாம் ஓடுதா, எதுவும் பிரச்சினையில்லையா என்று. எனக்குக் குழப்பமாக இருந்தது. இரவு நேரமே தூங்கிவிட்டேன், காலையிலும் அவசர அவசரமாகக் கிளம்பி வந்து விட்டேன் எனவே செய்தி பார்க்கவில்லை. பக்கத்திலிருந்த நண்பரிடம் கேட்டபோது தான் விவரம் சொன்னார். யாரோ இந்து முன்னணி நிர்வாகியை கோவையில் கொன்ருவிட்டார்களாம் என்று.

அப்போதுதான், செல்பேசியில் இணையத்தை உயிர்ப்பித்து செய்தியைப்பார்த்தேன். இந்து முன்னணி இயக்கத்தின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் கோவை சுப்ரமணியம்பாளையத்தில் யாரோ அடையாளம் தெரியாத சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். . பேருந்துகள் பொள்ளாச்சி வழித்தடத்தில் மிகக் குறைவாகவே ஓடுவதை பேருந்தில் போகப் போகத்தான் புரிந்து கொண்டேன். வழக்கமாக உக்கடத்திலிருந்து அலுவலகப்பேருந்து இருக்கும். வழக்கத்துக்கு மாறாக அந்தப்பேருந்து வேறு வழியில் சுற்றி அரை மணிநேரம் தாமதமாக அலுவலகம் வந்து சேர்ந்தோம். நாள் முழுவதும் இதே செய்தி தான், இதே பேச்சு தான். அங்கு கலவரம் இங்கு கலவரம் என.

கொஞ்ச நேரத்தில், பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன, காரணம் அங்கங்கு பேருந்து மேல் கல் எடுத்து எறிகிறார்கள். அப்பா அழைத்து சீக்கிரம் வந்துவிடச் சொன்னார், இலக்கியவட்டச் சகோதரி சத்யபாமா அழைத்து சுந்தராபுரத்தில் பேருந்தின் கண்ணாடியை உடைத்துவிட்டார்கள் இனி பேருந்து ஓடாது, பார்த்து சீக்கிரம் வந்து விடுங்கள் அண்ணா என்றார். கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது எப்படி வீட்டுக்குப் போகப்போகிறோம் என.

மாலை அலுவலக நண்பருடன் பைக்கில் கிளம்பினேன். மலுமிச்சம்பட்டி வரை அவர் வருவார். அங்கு மச்சானை பைக் எடுத்து வரச்சொல்லி அவருடன் வீடு வந்து சேர்ந்தேன். வரும் வழியில் தான் பார்த்தேன். கடைகள், பேருந்துகள் ஏன் அதிக மக்கள் நடமாட்டம் கூட இல்லாமல் நகரம் வெறிச்சோடிக் கிடந்தது. அங்கங்கு சாலையோரங்களில் காவலர்கள் பாதுகாப்பில் இருந்தனர்.

சசிக்குமார் உடல் இறுதியாத்திரை தான் இன்னும் கொடுமையானது. அரசுப்பொதுமருத்துவமனையிலிருந்து கிட்டத்தட்ட பத்துகிலோமீட்டர் இறுதியாத்திரை. எனக்குத் தெரிந்து எவ்வளவு பெரிய ஆளுக்கும் இவ்வளவு தூரம் இறுதி யாத்திரைக்கு அனுமதி தந்ததாகத் தெரியவில்லை. அரசு மருத்துவமனையிலிருந்து ஊர்வலம் கிளம்பும் பகுதியில் இசுலாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி உள்ளது அங்கு இவர்கள் கூச்சலிட்டும் கல்லெடுத்து எறிந்தும் கலவரம் செய்துள்ளனர். வரும் வழியெங்கும் இசுலாமியர்களின் கடைகளில் கல்லெடுத்து எறிவது, பூட்டிய கடைகளை அடித்து நொறுக்குவதுமாக கோர விளையாட்டு விளையாடியுள்ளனர்,

துடியலூரில் ஒரு செல்போன் கடையில் புகுந்து செல்போன்களை சூறையாடிச் சென்றுள்ளனர் ஒரு போலிஸ் வாகனத்தையே தீக்கிரையாக்கியுள்ளனர் . இதையெல்லாம் காட்சிப்பதிவுகளாகவும், காணொலிப் பதிவுகளாகவும் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். நன்றாக கவனித்திருந்தால் ஒன்று புலப்படும். இப்படியான செயல்களில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 22 வயது முதல் 28 வயதுவரையான இளைஞர்கள். இதுதான் பெரிய அதிர்ச்சி.

இவர்களெல்லாம் பெரும்பாலும் வேலையில்லாதவர்களாகவோ அல்லது கிடைத்த வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் நிரந்தர வேலையற்றவர்களாகவோ இருப்பார்கள்/ இவர்கள் ஏன் இப்படி ஆனார்கள் ? இதற்கு பின்னால், அரசியல் ஆதாயம் தேடும் ஒரு சுய நலக் கூட்டம் இருக்கும். அவர்களின் தொடர் மூளை சலவையால் தான் இவர்களது மனதில் இப்படியான வன்மம் விஷமாக ஏறியிருக்கிறது.

1998ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்புக் கலவரத்தில் அதுநாள் வரைக்கும் கட்டமைக்கப்பட்டிருந்த கோவையின் சாந்த சொரூப முகம் அகோரமானது. அந்த முகத்தின் கோரம் தணியவே சில ஆண்டுகள் ஆயின. அப்போதைய கலவரத்தைத் தொடர்ந்த நாட்களில் கோவையில் ரியல் எஸ்டேட் தொழில் படுத்தது, நிறைய கோவைக் காரர்களுக்கு வேலை பறிபோனது, கோவை மாப்பிள்ளை என்றதும் பெண் தரக்கூட மறுத்தனர். பூகோள ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கோவைக்கு இருந்த பாதுகாப்பான அம்சங்களைக் கட்டுக்குலைத்தது அந்தக் குண்டுவெடிப்பு. அதற்குப்பிறகு இப்போது மீண்டும் அந்த நிலை வருமோ என அச்சநிலை ஏற்பட்டது.

கொலையாளர்கள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், யாரின் சுய ஆதாயத்துக்காகவோ, யாருடைய மனவக்கிரத்துக்காகவோ கொலைகாரர்கள் இசுலாமியர்கள் தான் என ஆதாரமின்றி தகவல்களைப் பரப்பினார்கள். விளைவு, இந்தக்கலவரம்.

மதம், சாதி போன்ற வஸ்துக்கள் அந்தக்காலத்தில் ஏதோ ஒரு காரணத்துக்காக, ஏதோ ஒரு நம்பிக்கைகாக , பழக்கவழக்கங்கள் மற்றும் தொழில் போன்றவற்றின் அடிப்படையில் உருவாக்கியிருக்கக் கூடும். அப்போது அது அவர்களுக்குத் தேவையானதாகக் கூட இருந்திருக்கலாம். இன்றைய காலகட்டத்தில் அவை தேவைதானா என்ற கேள்வி எழுகின்றது.

மற்ற நாடுகள் அனைத்தும் பல்வேறு வகையில் விளையாட்டு, தொழில்நுட்பம், அறிவியல் என அனைத்திலும் அசுர வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்க, , ஆதியிலேயே அறிவியல், மருத்துவம், கல்வி என அனைத்திலும் உலகின் முன்னோடியாக இருந்தவர்கள் இப்போது எல்லாவிதத்திலும் தாழ்ந்து போயிருக்கக் காரணம் அரசியலும் , அதற்காகவே வசதியாக இருக்கும் மத, இன, சாதிப் பிரிவினைகளும் தான். பல நாட்டவர்கள் நம்மை அடிமையாக்கி ஆளவும் இவை தான் காரணமாக இருந்தன என்பது வரலாறு.

எத்தனையோ தலைவர்கள் தோன்றி, இவற்றை எதிர்த்து குரல் கொடுத்த போதிலும் அவர்களால் முழுமையாக மாற்ற முடியவில்லை. காரணம், பகுத்தறிவாளர் ஒரே ஒருவர் தலைவராக வந்தால், எதிரில் பத்துத் தலைவர்கள் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களை மழுங்கடித்துவிடுகிறார்கள்.

இன்னும் கிராமப்புறத்தில் நாம் பார்க்கலாம். நான் அனுபவித்திருக்கிறேன். வேறு வேறு சாதியினர் ஏன் மதத்தினர் கூட மாமா மச்சான் உறவு முறை போல பழகுவார்கள் அவர்களுக்குள் என்றுமே சாதிச் சண்டை வந்ததில்லை. ரம்ஜானுக்கு பிரியாணியும் பொங்கலுக்கு சர்க்கரைப் பொங்கலும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதில் மட்டுமல்ல அவர்களது ஒற்றுமை. அதைத் தாண்டியும் நல்ல உறவு, நல்ல ஒற்றுமை இருந்துதான் வருகிறது.

நகரங்களிலும் மாநகரங்களிலும் மதக்கலவரங்கள அதிகமாகின்றன. விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால் பெரும்பான்மை நிலை இது தான். இந்தக் கலவரநிலை அதிகமாகக் காரணங்களில் ஒன்று தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் தான். நன்மைக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் சாதனங்கள் அதனினும் அதிகமாக தீமைகளை விளைவித்தபடியிருக்கின்றன.

ஒரே ஒரு நொடியில் உலகம் முழுக்க வலம் வந்துவிடுகிறது ஒரு வதந்தி. அது வதந்தி தானா இல்லையா என்பதை உறுதி செய்யாமலே உணர்ச்சி வேகத்தில் ஊருக்கே தகவல்களை பரிமாறிவிடுகிறோம். அவர்களும் அந்த வதந்தியை உணர்ச்சி வேகத்தில் நம்பி செயல்களில் இறங்கி விடுகிறார்கள்.

அங்க பஸ்ஸ கொளுத்திட்டாங்களாமா, இங்க பதிலுக்கு ஒருத்தன கொன்னுட்டாங்களாமா, கொலைகாரன் யார்னு தெரிஞ்சுடுச்சாமா, ஒரு கூட்டமே கிளம்பி ஊர்வலம் போறாங்களாமா இப்படி பல வதந்திகளால் நிறைந்து கிடந்தது கோவை மாநகரம் அன்றைய நாளில். அலுவலகத்திலும், வீட்டிலும், இன்னும் பல இடங்களிலும் பதட்டத்துடனும் பீதியுடனும் எந்த நேரம் என்ன ஆகுமோ என்ற அச்சத்திலும் பெண்கள் , குழந்தைகள் உட்பட அனைவரும் உறைந்து போயிருந்தனர். காலையிலேயே இந்தப்பிரச்சினைகள் ஆரம்பித்ததால், பால்காரர்கள் வரவில்லை, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தண்ணீரில் பால்பொடி கலந்து கொடுத்து சமாளித்தார்கள். மளிகைக் கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டன. மக்கள் கிடைத்ததை உண்டு சமாளித்தார்கள்.

நல்லவேளையாக ஒரே நாளில் ஊர் சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டது. இல்லையென்றால் என்ன நடந்திருக்கும் என நினைக்கவே பயமாக இருக்கிறது.

கல்வி, இளைஞர்களை அறிவார்ந்த செயல்களைத் தான் செய்யத் தூண்டும். இந்த இளைஞர்கள் கல்வி கற்றவர்களாக இருப்பின் வேதனை. அது நமது கல்வியமைப்பின் படுதோல்வி. ஆனாலும், இந்தப் பெரும் சோதனைக்கு ஒரே தீர்வு கல்வி தான். அதன் மூலம் தான் வரும் சந்ததியை இம்மாதிரியான வன்மமற்ற அறிவார்ந்த சமூகமாக மாற்ற முடியும். அப்படியான நேர்மையான கல்வியைத் தர , அரசால் தான் முடியும். தனிமனிதர்கள் தங்கள் மதத்தை அஸ்திவாரமாகக் கொண்டு கட்டி நடத்தும் கல்வி நிறுவனங்கள் ஆபத்தைத் தான் உற்பத்தி செய்யும்.

மக்களே நாம் மனிதர்கள். மதம் இனம் சாதி என எத்தனை பிரிவுகளால் நாம் பிரிந்து கிடந்தாலும் நமது அடிப்படை உணர்வு மனிதம். அதையும் தொலைத்து விட்டு நாம் ஏன் வாழவேண்டும்.... ?

கொலுசு மின்னிதழில் வாசிக்க ..

http://kolusu.in/kolusu/kolusu_oct_16/index.html#p=10


புதன், 5 அக்டோபர், 2016

இருக்கற இடம் தெரியாம இருந்துட்டுப்போயிடனும்

இருக்கற இடம் தெரியாம இருந்துட்டுப்போயிடனும் 

நேற்று மாலை வேலை முடித்து மேட்டுப்பாளையம் சாலை வந்து நான்காம் எண் தனியார் பேருந்தில் ஏறி உக்கடம் வந்து கொண்டிருந்தேன்.ஒரு கையில் லேப்டாப் பை இன்னொரு கையை மேலே பிடித்து நின்றுகொண்டு வந்தேன். வழக்கமாகவே மாலையில் கூட்டமாக இருக்கும். இன்றும் அப்படித்தான். நான் சன்னல் வழியாக வேடிக்கை பார்த்தபடியே வந்துகொண்டிருக்கிறேன் ஏதோ நெருடலாக உணர என் சட்டைப்பையிலிருந்து ஒருவன் என் செல்போனை எடுக்கிறான். பார்த்துவிட்டேன். சுள்ளென்று கோபம் வந்துவிட்டது. பளாரென அறைந்துவிட்டேன்.கன்னாபின்னாவென நாலுவார்த்தை திட்டியும் விட்டேன் ( கெட்ட வார்த்தையெல்லாம் பேச மாட்டேன். கேட்ட வார்த்தைதான் :-) ).

அமைதியாகவே திருதிரு என முழித்தான். பேருந்தில் எல்லோரும் வேடிக்கைதான் பார்த்தார்கள். அவனோ ஐந்து நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு ஏண்ணா அடிச்சீங்க, கை தெரியாம பட்டுடுச்சு, நானெல்லாம் உழைச்சு சம்பாதிக்கறவன் அப்படி இப்படி என பேசிக்கொண்டே இருந்தான். நான் நடத்துனரிடம் போலீஸ் ஸ்டேசனில் வண்டியை நிறுத்துங்க என்று சொன்னேன். அவரோ சண்டை போடறுதுனா இறங்கி சண்டை போடுங்க, இப்ப டிக்கட் வாங்குங்க என்று கடமையில் சற்றும் சறுக்காதவராக காரியத்தில் கண்ணாயிருந்தார். ஒரே ஒருவர் மட்டும் அவனை  மிரட்டினார். அவனை நானும் மிரட்டிக்கொண்டே இருக்கும் போதே இன்னொருவன் அவனை கையைப் பிடித்து இழுத்து இறங்குடா நீ என்ன வேலை பண்ணிட்டு இருக்க என்று மிரட்டுவதாக பாவனை செய்து இறக்கிவிட்டான். இறங்கி இரண்டு பேரும் வேகமாக நடந்து போய்விட்டார்கள். ( கூட்டுக் களவாணிகள் ).

இப்போதுதான் சுற்றிலும் பார்க்கிறேன். பாதிப்பேர் விறுவிறுப்பான சண்டைக்காட்சியை அவ்வளவு அழகாக ரசித்தபடி வேடிக்கை பார்க்கிறார்கள். இடது பக்க இருக்கையில் இரண்டு பாலிடெக்னிக் மாணவர்கள் கேண்டி க்ரஷ் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். முன்னிருக்கை மாணவிகள் செல்போனில் கதைத்தபடியிருக்க, வலது பக்கத்து மாணவர்களும் செல்போனைத் தேய்த்தபடியிருக்க யாவும் சுபமாக நடந்துகொண்டிருக்கிறது.

அந்த ஒரே ஒருத்தர் குரல் கொடுத்தார் அல்லவா, அவர்தான் இன்னும் புலம்பியபடியே வந்தார். "என்னங்க யாருமே எதிர்த்து ஒரு கேள்வி கேட்க மாட்டேங்கறீங்க. ஒருத்தராவது சப்போர்ட் பண்ணி பேசினாதானே நாங்க அவன பிடிக்க முடியும். கண்டக்டரும் கண்டுக்கல, மத்தவங்களும் கண்டுக்கல. நானும் அவரும் மட்டும் தான் கத்திட்டு இருக்கோம். இப்படி இருந்தா எப்படி ??  என்னோட சொந்த ஊர் கேரளா. அங்க பப்ளிக்ல எவனாவது இப்படி நடந்திருந்தா எல்லோரும் பிரிச்சு மேஞ்சிருப்பாங்க தெரியுமா.? " என்று அங்கலாய்த்தார்

என்ன சேட்டா இப்படிக் கேட்டுட்டீங்க, நாங்க சங்கர அரிவாளால வெட்டுறப்பவே ஒரு கல்லெடுத்து வீச துப்பில்லாம லைவ் கொலைய பாத்ததே இல்லை னு பாத்துட்டு இருந்தோம், ஸ்வாதிய வெட்டினப்பவும் அப்படித்தான் இருந்தோம். இதுக்கெல்லாம் அசருவோமா என நினைத்தபடியே வந்தேன்.

ஒரு தோழர், "பிரதர் , நம்மாளுங்கெல்லாம் சினிமால எவனாவது ஹீரோ மாதிரி தப்ப தட்டிக்கேட்டா கை தட்டுவோம். நிஜத்துல அப்பா படத்துல வர்ற மாதிரி நாமெல்லாம் இருக்கற இடம் தெரியாம கமுக்கமா இருந்துட்டு போயிடனும்.” என்று சொல்லிவிட்டுச் சென்றார் பேருந்து விட்டு இறங்கியதும்.

சில மாதங்களுக்கு முன்னர் இதே வழித்தடத்தில், இதே மாதிரி நெரிசலான சமயம். பேருந்தில் வந்து கொண்டிருக்கிறேன். பெண்கள் கூட்டம் அதிகம். ஒரு பெண், திடீரென கத்தினார். நான் பார்க்கும் போது அவனது கை, அந்தப்பெண்ணின் இடுப்பில் இருந்தது. செருப்பால அடிப்பண்டா நாயே , நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கலயா என்ற அந்தப்பெண்ணின் குரல் வேறு என்னை உசுப்பி விட்டது. நானும் அதே டயலாக்கை பேசிக்கொண்டே, ஓங்கி அவனைக் குத்தினேன். நானெல்லம் புல்தடுக்கி பயில்வான். நான் குத்தி வலித்திருக்குமோ என்னவோ ஆனால் எனக்கு இன்னும் கட்டைவிரல் வலிக்கிறது. வேகமாக குத்தியதில் விரல் மடங்கிவிட்டது போலும். என்ன ஆச்சு என்று தெரியவில்லை. நான் குத்தியதும், அந்தப்பெண் கத்தியதும் பார்த்த ஒரு பெரியவர் அவனது சட்டையப் பிடித்தார். அரண்டு போனவன் வேகவேகமாக எல்லோரையும் இடித்துத் தள்ளிவிட்டு சிக்னலில் குதித்துவிட்டான்.

வழக்கம் போல இரண்டு பெரிசுகள் தான் " இடிக்கறதுக்குனே பஸ்சுல வர்றானுக கொள்ளைல போறவனுக " என்றார்கள். நான் அடுத்த சிக்னலில் குதித்துவிட்டேன். அவனைப்பிடித்து இன்னும் நாலு சாத்து சாத்த அல்ல. எனக்கு அந்த சிக்னலில் தான் இறங்க வேண்டும். இறங்கி வந்து விட்டேன். அந்தப்பெண்ணின் முகத்தை சரியாகப் பார்க்கவில்லை. கையில் வயர் கூடையுடன் இருந்தார். மில் வேலைக்கோ, கூலி வேலைக்கோ போய் வருபவராக இருக்கக் கூடும். இந்த மாதிரி எத்தனை எச்சைகளைக் கடந்து போய்வருவார் என்று மட்டும் நினைவுக்கு வந்தபடியே இருக்கும் கட்டைவிரல் வலிக்கும் ஒவ்வொரு தருணத்திலும்.

ஒரு பெரிய பெருமூச்சு ….. டாட்.


திங்கள், 3 அக்டோபர், 2016

பத்தே பத்து நிமிஷம் தான் ...

ஒரு பத்தே பத்து நிமிஷம் நேரமே கிளம்பிட்டா இந்த உலகம் எவ்வளவு அழகாயிடுது. நாம எவ்வளவு நல்லவனாயிடுறோம்.

வேக வேகமா நடந்து போற ஒருத்தருக்கு வண்டிய நிறுத்தி லிப்ட் குடுத்து கூட்டிட்டு வர முடியுது

பேருந்து ஏற சிரமப்படும் ஒரு குழந்தையை தூக்கி ஏத்தி விட்டு அவசரமில்லாம ஏற முடியுது

அவசரத்துல வேகமா இடிச்சுட்டு ஓடுறவன் மேல எந்த வன்மமும் இல்லாம புன்னகைக்க முடியுது

சில்லறை இல்லைனு சொல்லிக் கத்தும் நடத்துனரிடம் பரவாயில்லை நாளைக்கு வாங்கிக்கறேன்னு பொறுமையா பதில் சொல்ல முடியுது

நிறுத்தம் வந்ததும் முண்டியடித்துக்கொண்டு இறங்கும் கூட்டத்தில் விலகி நின்று பெண்களை இறங்கச் செய்து பின்பு நிதானமாக இறங்க முடியுது

சாலையைக் கடக்கக் காத்திருக்கும் முதிர்ந்த ஜோடி ஒன்றுக்கு சாலை கடக்க ஏதுவாக வரும் வாகனங்களுக்குக் கை காட்டியபடி உதவ முடிகிறது

அப்போதும் மிக வேகமாக சாலையில் முறைத்துக்கொண்டே செல்லும் இருசக்கர வாகனக்காரனை தீர்க்கமாகப் பார்க்க முடிகிறது

யாவற்றுக்கும் மேலாக , ரைம்ஸ் சொல்லியபடி நடக்கும் பள்ளிக் குழந்தைகள், இன்டக்ரேசன் ஃபார்முலாக்களை விவாதித்தபடி பேருந்தில் கடக்கும் கல்லூரி மாணவர்கள், மிக மெதுவாக சாலையின் குப்பைகளை நேர்த்தியாகக் கூட்டும் துப்புறவாளர், பழங்களை முக்கோண வடிவில் அடுக்கி வைத்தபடியே கடையைத் தயார் செய்யும் பழக்கடைக்காரர், என காலை நேரக் காட்சிகளை ஒவ்வொரு சட்டகமாகவும் ரசிக்க முடிகிறது ...

ஒரு பத்து நிமிஷம் தான் ... ம்ம்ம்