புதன், 23 ஜூன், 2010

என் காதல்...

தோழி..

உன் கனவுகள் எதையும்
நான் கலைத்து விடவில்லை..

உன் பூக்களை ரசித்தேன்
பறிக்கவில்லை ...

உன் சிறகுகள் இன்னும்
உன் வசம் தான் இருகின்றன...

உன் விருப்பப் படி
நீ எது வேண்டுமானாலும் செய்யலாம்...
உன்,என் எல்லைகளுக்குட்பட்டு ...

நான் என் சுயத்திற்கு
தரும் அதே மரியாதையை
உன் சுயத்திற்கும் தருகிறேன்..

பிறகும் ஏன் யோசிக்கிறாய்
என் காதலை ஏற்க...?

உனக்கு சிறகுகள் தருவேனா தெரியாது..
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் ..
என் காதல உனக்கு விலங்கு பூட்ட
ஒரு போதும் நினைக்காது .....

என்ன சொல்லி அழ..?

செங்குருதி வழிந்தோடும்
வீதிகளில் பல்லக்கு
பவனி வருகிறார்
மாமன்னர்...
நாடெங்கும் மயானக்
காட்சிகளைக் கண்டு
கழிக்கிறார்...
சிதறிக்கிடக்கும்
மனிதத் தலைகளையும்,
பதறித்தவிக்கும்
எஞ்சிய தலைகளையும்
எண்ணிக் கணக்கு
சொல்கிறார் மந்திரி.
மன்னன் மகிழ..
புறமுதுகில் தோட்டாக்களைப்
பாய்ச்சுவதும்,
கன்னிப் பெண்களின்
கற்பறுப்பதுவும்,
புதிய யுத்த தர்மமென
அரசியல் சாசனம்
அவசர அவசரமாக
திருத்தி எழுதப்படுகிறது ...
மொத்தக் குடும்பமும்
செத்துப் போனபின்
இரங்கல் பாடல்களும்,
நிதி உதவிகளும்
யாரைப் பொய் சேர...?