வியாழன், 11 ஜூலை, 2019

மணல் வீடு சிற்றிதழ்




ஒரு நல்ல திரைப்படத்தைப் பணம் கொடுத்து திரையரங்கம் சென்று பார்ப்பது போல, ஒரு நல்ல புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கிப் படிப்பது போல அறம் மிகுந்த செயல் ஒரு சிற்றிதழைப் பணம் கொடுத்து வாங்கி வாசிப்பது.

மணல் வீடு சிற்றிதழ் எழுத்தாளர் மு.ஹரிகிருஷ்ணன் அவர்களால் பல ஆண்டுகளாக மிகச் சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் இதழ். சீரான கால இடைவெளி எல்லாம் இல்லை. அதிகபட்சம் அரையாண்டு இடைவெளிக்குள் இதழ் வந்துவிடும்.

இதழ் வடிவம், உள்ளடக்கம், பக்கங்கள் என அத்துணை விஷயங்களிலும் கனமான இதழாக இருக்கும். பெரிய வடிவத்தில், தடிமனான பக்கங்களுடன், மிகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகளுடன் வெளி வருகிறது. கவிதைகள், கட்டுரைகள், கதைகள், எதிர் இலக்கியங்கள், நேர்காணல்கள், ஓவியங்கள் என மணல்வீடு ஒவ்வொரு இதழும் பல காலம் பாதுகாத்து வைத்துப் படிக்க வேண்டிய தகுதியுடைய ஓர் இதழ் தான்.

எந்த சமரசமும் இல்லாமல் படைப்புகளில், படைப்புகளின் தேர்வுகளில் இயங்கக் கூடியவர் மு.ஹரிகிருஷ்ணன். மாற்று இலக்கியத்தையும், தொல்கலைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருபவர்.

தற்போது இதழ் எண் 37-38 வெளிவந்துள்ளது. 192 பக்கங்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், மொழியாக்கம்,விமர்சனம்,ஓவியங்கள் என அற்புதமாக வந்துள்ளது. வாசிக்கத் துவங்கியிருக்கிறேன்.






இந்த இதழில் பெரு.விஷ்ணுகுமார்,பெருந்தேவி,ஷா அ, யாழ் அதியன் , கறுத்தடையான்,அனார், றாம் சந்தோஷ், சுதந்திரவல்லி கவிதைகளை வாசித்தேன். இன்னும் சிறுகதைகள், மொழி பெயர்ப்புகள், கட்டுரைகள் இருக்கின்றன.... 192 பக்கங்களில் A4 அளவில் புத்தகம்  என இதழ் கனக்கிறது..


மணல்வீடு இதழ் வேண்டுவோர் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் சந்தா தொகையைக் கட்டி விட்டு அதன் ஆசிரியருக்கு தகவல் சொல்லிவிட்டு முகவரியைத் தந்துவிட்டால் இதழ் உங்கள் முகவரி தேடி வந்துவிடும். ஓர் ஆண்டுக்கான சந்தா ரூபாய் ஐநூறு மட்டும் தான் ...

ஒரு நல்ல சிற்றிதழை வாசிக்க, ஒரு நல்ல சிற்றிதழை ஊக்குவிக்க அவசியம் சந்தா செலுத்துங்கள்

முகவரி :

மு.ஹரிகிருஷ்ணன்
ஆசிரியர் - மணல்வீடு சிற்றிதழ்
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்,
மேட்டுர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
அலைபேசி - 98946 05371
மின்னஞ்சல் - manalveedu@gmail.com
manalveeduhari@gmail.com



சந்தா செலுத்த வங்கி விவரம்

M. Harikrishnan
Indian Bank, Mecheri

A/C No : 534323956
IFSC : IDIB000M025



வியாழன், 4 ஜூலை, 2019

சிற்பி இலக்கியப் பரிசு பெறும் கவிஞர் சோலைமாயவன்

கவிஞர் சிற்பி அவர்கள் வழங்கும் சிற்பி இலக்கியப் பரிசு இந்த ஆண்டு கவிஞர் சோலைமாயவன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இவரது விரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி கவிதைத் தொகுப்புக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்தத் தொகுப்புக்கு ஏற்கெனவே கோவை புத்தகக் கண்காட்சியின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மிக முக்கியமான விருதுகளை இந்த ஆண்டு கவிஞர் சோலை மாயவன் பெறுகிறார்

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் பெருமையுடன் வாழ்த்துகிறது ..

மனம் நிறைந்த வாழ்த்துகள் சோலைமாயவன்

இன்னும் விரியட்டும் சிறகு





தேயிலை நிழலில்
உறங்குகிறது
வனமிழந்த சிறுத்தை

- சோலைமாயவன்

செவ்வாய், 2 ஜூலை, 2019

தகப்பன் பாடும் தாலாட்டு

கவிஞர் ஆன்டன் பெனி அவர்களின் மகளதிகாரம் தொகுப்புக்கு 
நான் எழுதிய வாசிப்பனுபவம் இந்த மாத இனிய உதயம் இதழில் வெளியாகியுள்ளது.. உங்கள் வாசிப்புக்கு ஏதுவாக இங்கு ...





மகளதிகாரம் - தகப்பன் பாடும் தாலாட்டு

பெண் குழந்தைகளைப் பெற்ற தகப்பன்கள் எப்போதும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். அன்னையின் வழியாக, சகோதரிகளின் வழியாக, தோழிகளின் வழியாக, மனைவியின் வழியாக என எல்லா உறவுகளின் வழியாகவும் பெண் அன்பு ஓர் ஆணை வந்தடைந்து தான் இருக்கிறது என்றாலும் அவனது வழியாக அவனது வாழ்க்கையாக ஒரு பெண்ணை மகளாகத் தனது கரங்களில் முதன் முதலில் ஏந்திக் கொள்ளும் போது அவன் புதிதாகப் பிறக்கிறான். அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டபடியே விலாவின் இரு புறங்களிலும் இறக்கைகள் முளைக்க, ஒரு புதிய வானத்தில், புதிய திசையில் , புதிய ஒரு பறவையாகப் பறக்கத் துவங்குகிறான். எதிர்பால் குழந்தைகளின் ஈர்ப்பு என்று அறிவியலே ஒப்புக்கொண்டாலும், ஆணின்பால் மகள் கொண்ட அன்பு என்பது ஆயுளுக்கும் சுரந்து கொண்டே இருக்கும் முலைப் பால்.

மகளதிகாரம் - கவிஞர் ஆண்டன் பெனியின் மகள் மீதான பெருங்காதலை, அளவிட முடியாத அன்பை, அந்நியோன்யத்தை, மகளைக் கொண்டாடும் தந்தைமையை திகட்டத் திகட்ட கவிதைகளாக்கி நம் கைகளில் நமது ஒரு மகளாகத் தவழச் செய்திருக்கும் ஒரு கவிதைத் தொகுப்பு. மகள்களைப் பற்றி நிறைய அப்பாக்கள் கவிதைகள் எழுதியிருக்கிறார்கள், மகளதிகாரம் என சற்றேறக்குறைய நூறு கவிதைகளை நிறைத்துத் தந்திருப்பது இவர் தானென நினைக்கிறேன்.

ஒவ்வொரு இரவும்
தூங்கும் மகளின்
முகத்தைப் பார்த்துக்கொண்டு இருப்பேன்
தியானம் என்று
தனியாக எதுவும்
செய்வதில்லை

இந்தக் கவிதை ஒரு தந்தையின் பேரன்பை ஒரு அழகான காட்சியாக நம் கண்களுக்கு முன்னால் காட்டி விடுகிறது. மகள் தூங்கிக் கொண்டிருக்கிற அழகை ரசிக்கும் தந்தை அதை தியானம் என்கிறார். கொஞ்சம் கண்களை மூடி யோசித்துப் பார்த்தோமானால் உண்மையில் மகள் தூங்குவதை அமர்ந்திருந்து ரசிப்பது தியானத்தை விடவும் மனதை எவ்வளவு சாந்தப்படுத்தும் …. இந்தக் கவிதையின் அழகியலுக்கு இணையானது இந்தத் தந்தைமையின் அன்பியல்.
குழந்தைகளின் கண்கள் வழியாகப் பார்க்கும் போது தான் இந்தப் பிரபஞ்சமே அவ்வளவு அழகானதாகவும் வியப்புக்குரியதாகவும் இருக்கிறது. அவர்கள் இயற்கையை வியந்து நேசிக்கிறார்கள். இயற்கையும் அவர்களைத் திரும்ப நேசிக்கத்தானே செய்யும் ? அதைத் தான் இந்தக் கவிதையில் நட்சத்திரங்கள் செய்கின்றன.

நட்சத்திரங்களை
எண்ணிக்கொண்டிருக்கும் போது
தூங்கிவிட்டாள் மகள்
நான் எவ்வளவு சொல்லியும்
இரவு முழுவதும் காத்திருந்தன
நட்சத்திரங்கள்
எழுந்துவிடுவாள் என

இந்தக் கவிதையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் ஒரு அப்பா நட்சத்திரமும், ஒரு மகள் நட்சத்திரமும் சேர்ந்தே ஜொலிக்கின்றன. இந்தக் கவிதையும் ஒரு நட்சத்திரம் தான்.

தந்தையுடன் நடக்கும் மகள்களைப் பார்க்கும் போது ஒரு இசைமை இருக்கும் அவர்களது துள்ளல் நடையில். அப்பாவின் விரல்களைப் பிடித்துக்கொண்டு அவர்கள் நடக்கும் வயது வரைக்கும் அப்பா ஒரு மிகப்பெரிய கதாநாயகனாக இருப்பார் மகள்களுக்கு.
இந்தக் கவிதை ஒரு கணம் நம்மை நெகிழச் செய்கிறது.

என் கைகளில்
மோதிர விரலுக்கு அடுத்து இருப்பது
மகள் விரல்

மகளைப் பெற்ற அப்பாக்களின் மோதிர விரலுக்கு அடுத்த விரல் மகள் விரல் என்கிறார். அவ்வளவு இறுக்கமாக மகள்கள் அந்த விரலைப் பற்றியபடியிருக்கிறார்கள் வாழ்வெங்கும்.

ஒரு தந்தையும் மகளும் முதல் பிரிவை சந்திக்கும் தருணம் மகள் முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் தருணமாக இருக்கும். மகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டுவிட்டு வரும் அப்பாவின் மனநிலையைப் பிரதிபலிக்கும் கவிதை இது.

மகளையும் என்னையும்
பள்ளிக்கு அனுப்பிவிட்டு
நான் மட்டும்
தனியே இருப்பேன் வீட்டில்

மகளைப் பள்ளிக்கு அனுப்பி விடும் போது கூடவே தனது மனதையும் அவளுடன் அனுப்பி விட்டு, வீட்டில் வெறுமையாக இருக்கிறேன் என்கிறார் இந்தத் தந்தை. இந்தப் பிரிவின் கவிதை மகளை வேலைக்கு வெளியூர் அனுப்பும் தந்தையை, மகளுக்கு திருமணம் செய்து புகுந்த வீடு அனுப்பும் தந்தையை மிகப் பரிவுடன் நினைக்கச் செய்கிறது.

குழந்தைகள் கவிதைகள்; கவிதைகள் குழந்தைகள். இது என்ன சொல் விளையாட்டு. ஆனாலும் உண்மைதான் குழந்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குட்டிக் குட்டிக் கவிதைகள். கவிதைகள் ஒவ்வொன்றும் தூக்கிக் கொஞ்ச வேண்டிய குழந்தைகள் தாம். அவ்வாறாக மகள்களின் கொலுசுச் சத்தங்களும் சிரிப்புச் சத்தங்களுமாக நிறைந்து கிடக்கும் மகளதிகாரக் கவிதைகளில் ஆண்டன் பெனி எனும் அற்புதத் தகப்பனின் பேரன்பின் இசை நம்மை நிறைவாக்குகிறது இந்தக் கவிதைத் தொகுப்பை வாசிக்கும் போது.

கவித்துவமும், அழகியலும் , அன்பின் உணர்வுகளும்  மிகுந்த இந்த கவிதைத் தொகுப்பை வாசிக்கும் பெண் பிள்ளைகளின் தகப்பன்கள் தங்களது மகளை இன்னும் கூடுதலாக நேசிப்பார்கள், மற்றவர்கள் தங்களுக்கு ஒரு பெண் பிள்ளையைக் கற்பனை செய்து கொண்டு அவளை நேசிப்பார்கள். இது ஒரு தகப்பன் தனது மகளுக்கு எழுதிய கவிதைத் தொகுப்பு என்று மட்டுமல்லாது எல்லாருக்குமான கவிதைத் தொகுப்பாக, இந்த சமூகம் பெண்கள் மேல் பார்க்கும் பார்வையை இன்னும் கனிவாக்கும் ஒரு கவிதைத் தொகுப்பாக இந்தத் தொகுப்பு இருக்கும். ஒரு படைப்பு சமூகத்தில் நிகழ்த்தும் மாற்றம் அதிரடியான மாற்றமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, சமூகத்தில் மெல்ல மெல்ல அன்பை விதைத்து , சக மனுஷியின் மேலான மரியாதையையும் அன்பையும் மலரச் செய்யும் மென் மாற்றங்களையும் செய்யலாம். அப்படி ஒரு மாற்றத்துக்கான கவிதைகளைத் தந்திருக்கும் கவிஞர் ஆன்டன் பெனி அவர்களின் கைகளை இறுகப் பற்றிக் குலுக்குகிறேன், அவரது மகளின் பிஞ்சுக் கைகளையும் சேர்த்துக் குலுக்குவதாக இருக்கிறது அது.

வாழ்த்துகள் கவிஞர் ஆன்டன் பெனி ..