ஞாயிறு, 29 ஜனவரி, 2017

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் 2016ஆம் ஆண்டுக்கான வளரும் படைப்பாளர் விருது

தேனியில் தோழர் விசாகன் பொதுச்செயலாளராக இருந்து சிறப்புடன் இயங்கி வரும்
தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின்  2016ஆம் ஆண்டுக்கான வளரும் படைப்பாளர் விருது எனக்கும் அறிவித்திருக்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி. 
உடன் விருது பெறும் சக படைப்பாளர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்...

இதில் கூடுதல் மகிழ்ச்சி என்னவெனில் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துக்கு மூன்று விருதுகள் என்பது. எனக்கு, கவிஞர் ஆன்மன் மற்றும் கவிஞர் யாழ் தண்விகா ( விஜயராஜ் காந்தி ) என மூன்று பேருக்கு இந்த விருது கிடைக்கப்போவது பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் பயணத்தில் ஒரு முக்கிய நிகழ்வு.

மேலும் விருதுகள் பெறும் சக படைப்பாளர்கள் அனைவரும் நண்பர்கள் என்பது மட்டற்ற மகிழ்வு...

பிப்ரவரி 25 அன்று மாலை தேனியில் விருது விழா... நண்பர்களைச் சந்திக்கவிருப்பதில் மகிழ்ச்சி...வியாழன், 26 ஜனவரி, 2017

இந்த வார ஆனந்த விகடனில் எனது கவிதை

இந்த வார ஆனந்த விகடனில் எனது கவிதை வெளியாகியுள்ளது. நண்பர்களின் பார்வைக்கு ...
புதன், 18 ஜனவரி, 2017

கொம்புகள்
No automatic alt text available.
எப்போதாவது ஆயிரம் கரங்கள் நீளும்
அதிகாரத்துக்கு எதிராகவோ
ஆபத்தில் அரவணைக்கவோ,

எப்போதாவது ஆயிரம்
கண்களில் கண்ணீர் மல்கும்
சக உயிர்களின் மீதான
வன்முறைக்கும் வலிகளுக்கும்

எப்போதாவது போல
இப்போது ஆயிரம் கொம்புகள் முளைத்திருக்கின்றன
நமக்கு.
உரிமையை மீட்கவும்
உணர்வைக் காட்டவும்

நமக்கும் கொம்புகளுண்டென
அவர்கள் அறிந்து கொண்டார்கள்;
நாமும்.

இனி அநீதிக்கெதிராகவும்
அடக்குமுறைக்கெதிராகவும்
அவ்வப்போது முளைக்கட்டும்
நம் கொம்புகள்

வெள்ளி, 13 ஜனவரி, 2017

தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்


நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் நம் பண்பாட்டின் மிச்சங்கள் மட்டுமல்ல, அவை நம்மை, நம் உறவை , நம் நட்பை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் கண்ணி

பல்வேறு பிரிவினைக் காரணிகளால் நாம் சிதறுண்டு கிடந்தாலும், நம்மை அரூபமாய் ஒரு உணர்வு இணைத்துக்கொண்டபடியே இருக்க வேண்டும். 
அது மொழியுணர்வு, இனவுணர்வு என எதுவாகினும் அதன் அடிநாதம் அன்பாய் இருத்தல் வேண்டும்.

நாம் அகத்திலும் புறத்திலும் சேர்த்துக்கொண்டே இருக்கும் அழுக்குகளும், தேவையற்ற குப்பைகளையும் கழித்து, நல்லனவற்றை, புதியனவற்றை வரவேற்க வேண்டும்

நமது ஆதித் தொழிலான உழவு தான் இன்று வரைக்கும் நமது தட்டில் உணவை நிறைக்கும் தொழில். உழவுத்தொழிலைப் போற்ற வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேல், நாம் ஒருவரை ஒருவர் காண வேண்டும். புறக்கண்களால் ஆகாவிடினும் அகக்கண்களால் கண்டு அன்பு செய்ய வேண்டும். ஆரத்தழுவிக்கொள்ள வேண்டும்.

இத்தனைக்குமான ஒரு பண்டிகை தான் பொங்கல்.. இந்நன்னாளில் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கலைப் போல மகிழ்ச்சியும் குதூகலமும்
பொங்கிட மனம் நிறைந்த வாழ்த்துகள்/....செவ்வாய், 10 ஜனவரி, 2017

கவி இன்குலாப் - அதிர்ந்தோய்ந்த பறையிசைகவிதை என்பது ஒரு மகாகருவி, ஒரு மந்திரக்கோல் என்பதை கண்களை மூடிக்கொண்டு உங்களைப் போலவே நானும், என்னைப்போலவே ஏராளமானோரும் நம்புகிறோம். ஆகவே தான் நம் நாட்களின் எல்லா உயிர்ப்புகளிலும் ஏதாவதொரு வகையில் கவிதை இருந்துகொண்டே இருக்கிறது. அப்பெருங்கருவிதான் போராளிகளின் ஆயுதமாகவும், கேடயமாகவும் இருக்கிறது.அதைக்கொண்டு தான் பூக்களை மலரச் செய்கிறோம்,குழந்தைகளைப் புன்னகைக்கச் செய்கிறோம், சமுதாயத்தின் சட்டைக்காலரைப் பிடிக்கிறோம், அகம் உருக அன்பு செய்கிறோம்,அதி தீவிரமாகக் காதலிக்கிறோம்., தேம்பிக் கொண்டிருப்பவர்களை ஓடோடிப் போய்க் கட்டிக்கொள்கிறோம். இப்படி வாழ்வின் யாவுமாக இருக்கத் தெரிந்த ஒன்றைத்தான் கவிதை என்கிறோம்.

இப்படி, கவிதைகளைக் கைக்கொண்டு தன் இனம், மொழி, சமூகம் ஆகியவற்றில் ஏதாவதொன்றில் ஆழப் பதிந்து விடுபவர்களைக் காலம் ஒரு போதும் மறப்பதில்லை.
அப்படியான ஒரு மாபெரும் மக்கள் கவிஞனைத்தான் இன்று நாம் இழந்திருக்கிறோம்.

கவிதைகளில் புல்லாங்குழல் இசையையும் இசைக்க முடியும், பறையிசையையும் இசைக்க முடியும், புல்லாங்குழல் இசை தன் மென் குரலால் தாலாட்டும் உறங்கச் செய்யும். பறையிசை அதிர வைக்கும், உறங்கவிடாது. கவிஞர் இன்குலாப் அவர்களின் கவிதை பறையிசையைப் போலத்தான். ஒலித்த ஒரு கணத்தில் மட்டுமலலாது நீண்டு எதிரொலித்து அதிர்ந்து கொண்டேயிருக்கும்.

கவிதை எழுதுபவன் கவியன்று
கவிதையே வாழ்க்கையாக உடையோன்
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன்
அவனே கவி
- பாரதி

இந்த பாரதியின் வரிகளை, நமக்கு முன்பும் நம் காலத்திலும் பல கவிதைக்காரர்கள் உண்மையாக்கியும் நியாயம் செய்தும் இருக்கிறார்கள். அப்படி ஒரு பெருங்கவியாகத்தான் இன்குலாப் அவர்களைப் பார்க்கிறேன்.

இன்குலாப் அவர்கள் தனது கவிதைகளுக்கு ஒரு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதையும் கவிதையிலேயே தந்துள்ளார். தனது கவிதைகள் யாவும் மொழிபெயர்ப்புதான் என கர்வமாக ஒப்புக்கொண்டார். எங்கிருந்து அவற்றை மொழிபெயர்த்திருக்கிறார் என்பதையும் இந்தக் கவிதையில் சொல்லியிருக்கிறார்.

எழுதியதெல்லாம்
மொழிபெயர்ப்புத்தான்.
இளைஞர் விழிகளில்
எரியும் சுடர்களையும்,
போராடுவோரின்
நெற்றிச் சுழிப்புகளையும்
இதுவரை கவிதையென்று
மொழிபெயர்த்திருக்கிறேன்!

இளைஞர்களின் விழிகளில் எரியும் சுடர்களையும், போராளிகளின் நெற்றிச் சுழிப்புகளையும் மொழிபெயர்த்தால் கிடைப்பது நெருப்புக் கவிதையாகத் தானே இருக்க முடியும். அப்படித்தான் இருந்தது.

இந்த தேசம் கட்டமைத்திருக்கிற போலிக் கட்டுப்பாடுகளையும், அது சாட்டும் போலிக் குற்றச்சாட்டுகளையும் சாட இவருக்கு மூன்றே மூன்று வரிகள் போதுமானதாக இருக்கின்றன

பருந்தை எதிர்க்கிற
தாய்க்கோழியைப் பார்த்தா சொன்னாய்
தீவிரவாதமென்று

இந்த மூன்று வரிகள் போதுமானதாக இருக்கின்றன. தீவிரவாதமென்று ஒரு இனத்தின் போராட்டத்தைச் சாடும் இன விரோதிகளுக்கு பதிலாக.

எதை எழுத வேண்டும் என்ற தேர்வை விட எதை எழுதக் கூடாது என்பதற்கான தேர்வை ஒரு எழுத்தாளன் மிகத் தெளிவாகத் தேர்வதில் தான் அவனது சுயம் ஒரு சூரியனைப்போல ஒளிரும். அப்படியான ஒரு தெளிவில் இருந்தவர் தான் கவிஞர். எதை எழுத மாட்டேன் எனச் சொன்ன கவிதை இது .

எழுதமாட்டேன்

எழுதமாட்டேன்
ஒருவரி கூட
நீ
ஒப்பும்படி

எழுத்திலும் அதிரும்
என் பறையொலி
நாராசமாய்
உன்
செவியில் இறங்குதல் போல்

உன்
மெளனவரியும்
அருவருக்க ஊரும்
என்
கண்ணிலூம் மனசிலும்
ஒரு
கம்பளிப் புழுவாய்

என்
கவிதை முளைவிடும்
மனுசங்க வெளியை
உன்
கால்விரல் நகமும்
தீண்டாதது போலவே

மேட்டிமைத் திமிரும்
உன்
சபை வாசலில் கூட
நீளவே நீளாது
என் மயிரின்
நிழலும்

இன்குலாப் அவர்களின் கவிதைகளில் அழகியல் இல்லை என்பது தான் குறையென சில இலக்கியவாதிகளின் விதண்டாவாதத்தைக் காணமுடிகிறது. அழகியல் இல்லை என்றெல்லாம் குறை சொல்லிவிட முடியாது. இருக்கிறது. அது ஒரு மெல்லிசையைப் போல மெல்ல ஊடுருவியல்லாது ஒரு பறையிசையைப் போன்று
சற்று தூக்கலான அழகியல் இருந்தது எனச் சொல்லலாம். அவரது கவிதைகளில் அழகியலுக்கு உதாரணமாய் இந்தக் கவிதையையும் சொல்வேன்.

வேண்டுதல்

ஏந்திய கைகளுக்கு மேலே
எப்பொழுதும்
சலனமற்றிருக்கும்
வானம்

இந்தக் கவிதை விரியும் காட்சி எவ்வளவு அழகானது. ஆனாலும் இதனுள்ளும் அரசியல் இருக்கிறது என்பது இன்னொரு கோணம்.

மீண்டும் பாரதியின் வரிகளைக் கடன் வாங்குகிறேன்,

காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன் 

என்று மரணத்தைத் துச்சமென மதித்தவன் பாரதி. இன்குலாப் அவர்களும் இப்படித்தான் எழுதுகிறார். அவர் வாழ்வையே தன் காலடியில் கிடக்கப் பணிக்கிறார்.
வாழ்க்கை காத்திருக்கட்டும் உன் மிதியடியில் என்கிறார்.

கவிஞர் இன்குலாப், தனது கவிதையை, கவிதை ரசனையை அறிவிக்கிற அறிவிப்பாக இந்தக் கவிதையைப் பார்க்கிறேன். அதற்கு ரசனை பயங்கரம் எனத் தலைப்பிடுகிறார்..

ரசனை பயங்கரம்

மல்லாக்கப் படுத்தபடி
நூறு தூண்களால்
வானம் துழாவினேன்
என்றாலும்
தகிக்கும் வெயிலில்
சரளைக்கல் அள்ளும் சட்டியில்
உருகும் தாரால்
மை தீட்டலாம் என்றாலும்
உச்சுக் கொட்டும்
ரசனை உனது
எனக்குத்தான் தெரியவில்லை

கசடு பிடித்துச் 
சீழ் வடியும் காயத்தைத்
தோலின் புன்சிரிப்பென்று
புனையவும்
இன்னும்

அறுசுவையுடன்
ஒரு கண்ணீர்த்துளியைச் சமைக்கவும்

தனது கவிதைகளுக்கான ஒட்டுமொத்த அறிவிப்பாகவே அவர் இந்தக் கவிதையைப் படைத்துள்ளார். கசடு பிடித்துச் சீழ் வடியும் காயத்தைத் தோலின் புன்சிரிப்பென்று அழகாகப் புனையத் தெரியாதவர் பாவம் எப்படி அழகியல் கவிதைகளை நிறையத் தந்திருக்கக் கூடும்.

கவிஞன் காலங்களற்றவன், இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என முக்காலத்துக்குமான பயணி. இறந்த காலத்துக்குச் சென்று வரலாற்றின் புரட்டுகளைப் பகடி செய்யவும், நிகழ்காலத்தின் சமுதாயப்பிறழ்வுகளைச் சாடுபவனாகவும், எதிர்காலத்துக்குமான இயங்கு திட்டங்களை வகுக்கத் தெரிந்தவனாகவும் கவிஞன் இருப்பான். ஆக, இன்குலாப் காலமாகவே முடியாது. எல்லாக் காலங்களிலும் கவிதையாக வாழ்வார்.

இன்குலாப் காற்றின் திசைகளெங்கிலும் வாழட்டும் கவிதையாக உயிர்ப்புடன்.


குறிப்பு : பொள்ளாச்சியில் தீ இனிது இலக்கிய இயக்கம் ஒருங்கிணைத்த கவிஞர் இன்குலாப் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம்கறந்த பாலிலும் கலப்படம்

கொலுசு மின்னிதழில் நான் எழுதும் கட்டுரைத் தொடரான தேநீர் இடைவேளையில் இந்த மாதம் வெளியாகியிருக்கும் கட்டுரை உங்கள் பார்வைக்கு ...


கறந்த பாலிலும் கலப்படம்

மரபார்ந்த உணவுப்பழக்கம் நமது என்று இப்போதெல்லாம் மார்தட்டிக் கொள்கிறோம். மண்பானை சமையல், இயற்கை உணவு, சிறு தானிய உணவு, பச்சைக்காய்கறிகள் என நமது உணவின் மகத்துவம் எல்லாம் நாம் தெரிந்து மட்டுமே வைத்திருக்கிறோம் அல்லது தெரியாமலே இருக்கிறோம். நமது பண்பாட்டு வழக்கமான " மருந்தே உணவு, உணவே மருந்து " என்ற வழக்கத்தை காற்றில் விட்டுவிட்டு சற்றேறக்குறைய விஷத்தை உண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் வெளியிலிருந்து வந்த அவசரகால , நவீன யுக உணவு முறைக்கு அடிமையாகிவிட்டோம் என்பது ஒரு புறம் நமது ஜீன்களை மெல்ல அழித்துக் கொண்டு நோய் நிறைந்த சந்ததியை உருவாக்கிக் கொண்டிருக்க, நமது பண்பாட்டு உணவுப் பொருட்களிலும் காசுக்காகவும் வியாபாரத்துக்காகவும் மனசாட்சியைக் கழற்றி வைத்துவிட்டு பல்வேறு வகைமையில் கலப்படம் செய்தும் நாம் நமது ஆரோக்கியத்தை அழித்துக்கொண்டிருக்கிறோம்.

எல்லாக் காலத்திலும் கலப்படம் நடைமுறையில் தான் இருந்திருக்கிறது. முன்பெல்லாம், பொருளின் அளவை அதிகரிக்க பாதிப்புகள் குறைவான பொருட்களை வைத்து உணவுக் கலப்படம் செய்து வந்தனர்.  உதாரணத்துக்கப் பாலில் தண்ணீர் சேர்ப்பது, காபி பொடியில் புளியங் கொட்டையை அரைத்து சேர்ப்பது என உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத சில பொருட்களைச் சேர்ப்பார்கள். ஆனால், இன்றோ பெரிய நிறுவனங்கள் கூட தங்களது பொருட்களின் தரத்துக்காக, உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் பொருட்களை சேர்க்கின்றனர். சாக்லெட்டில் தொடங்கி  ஆயத்த உணவுகள் வரை கலப்படம் தொடர்கிறது. குழந்தைகளுக்காகத் தயாரிக்கும் பால் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களிலும் இது தொடர்வது தான் வேதனையின் உச்சம்.கலப்படம் என்பது என்ன என்பது நாம் கொஞ்சமாகத் தெரிந்து வைத்திருக்கிறோம் தான் என்றாலும், வியாபாரிகள் நம்மைவிடவும் ஆழமான அறிவுடன் இதில் இயங்குகிறார்கள். கலப்படம் என்ற சொல்லை சட்டம் எப்படி புரிந்து வைத்திருக்கிறது என்றால் உணவுப் பொருளில் கலப்படம் செய்யப்படும் நோக்கத்தில் சேர்க்கப்பட்ட அல்லது தெரியாமல் சேர்ந்த பொருட்கள் கலப்பட பொருட்கள் என சட்டத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்

உணவுப் பாதுகாப்புத் தரச் சட்டத்தில் பாதுகாப்பற்ற உணவு என்பதற்கு பின்வரும் விளக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
* தரம் குறைந்த விலை குறைந்த பொருட்கள் முழுமையாகவோ, பகுதியாகவோ உணவுப் பொருளின் தரத்தைக் குறைக்கும்படி சேர்க்கப்பட்டிருந்தால்
*உணவில் உள்ள பொருட்கள் முழுமையாகவோ பகுதியாகவோ  சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு, கட்டப்பட்டு சுகாதாரமற்ற முறையில் பாதுகாக்கப்பட்டிருந்தால் அதனால் தரம் குறைந்து, சுகாதாரக் கேடு ஏற்பட்டால் அது கலப்படமாகக் கருதப்படுகிறது

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் 1954ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட  “உணவுக் கலப்படத் தடைச் சட்டம்’  நீக்கப்பட்டு ஆகஸ்டு 2011 முதல் “உணவுப் பாதுகாப்புத் தரச்சட்டம்’ 2006 அமுலுக்கு வந்துள்ளது, இச்சட்டத்தில் “கலப்படம்’ என்ற சொல் நீக்கப்பட்டு பாதுகாப்பற்ற உணவு பற்றிய விளக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன..

இணையத்தில் கட்செவியஞ்சலில் நிறைய காணொலிகள் மற்றும் செய்திகளைப் பார்க்கிறோம், எண்ணெயில் கலப்படம், பாலில் கலப்படம், பழங்களில் மருந்துகள் கலப்படம் என்றெல்லாம். அவை அனைத்துமே உண்மைதான். அவற்றைத் தாண்டியும் நிறைய உண்மைகள் இருக்கின்றன.
என்னென்ன பொருட்களில் எவ்வெவற்றைக் கலக்கிறார்கள் என நான் படித்ததை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

பால் அடர்த்திக்கு அமோனியம் சல்பேட், பால் நுரைத்து வருவதற்கு டிடர்ஜென்ட் சோப், நீண்ட நாள் கெடாமல் இருக்க பார்மலின், யூரியா போன்றவை சேர்க்கப்படுகின்றன கடைகளில் விற்கப்படும் ‘சின்தட்டிக்’ மில்க்கில் வழவழப்பு, பளபளப்புக்கு வெள்ளை நிற வாட்டர் பெயின்ட், எண்ணெய், அல்கலி (Alkali) மற்றும் டிடர்ஜென்ட் பவுடர் கலக்கப்படுகின்றன.
இதன் காரணமாக வயிற்றுவலி, வயிற்றுபோக்கு, கெட்ட கொழுப்பு சேருதல், முக வீக்கம், இதயப் பிரச்னை, வயிற்றுக் கோளாறு, சருமப் பிரச்னைகள், ஆஸ்துமா போன்றவை வரலாம்.

ரெடிமேட் தோசை மாவு சீக்கிரத்தில் புளிக்காமல் இருக்க, கால்சியம் சிலிகேட்,
மிளகாய் தூளில் செங்கல்தூள், சூடான் டை, சிட்ரஸ் ரெட், கான்கோரைட்.
மல்லி தூளில் மரத்தூள், குதிரை சாணம், மாலசைட் பச்சை (Malachite green – வீட்டு வாசல் பச்சை நிறமாக மாற, சாணத்துக்குப் பதிலாகப் பயன்படுத்தும் நிறமி),
மஞ்சள் தூளில் காரிய க்ரோமல், அக்ரிடைன் மஞ்சள் (Acridine yellow),
கடுகில் ஆர்ஜிமோன் விதை,
தூள் உப்பு கட்டியாகாமல் இருக்க ஆன்டிகேக்கிங் ஏஜென்ட்,
டீ தூளில் முந்திரி தோல் மற்றும் செயற்கை வண்ணங்கள்,
தேனில் வெல்லப் பாகு, சர்க்கரை,
சமையல் எண்ணெய்களில் காட்டு ஆமணக்கு எண்ணெய் ஆகியவை கலக்கப்படுகின்றன.
வனஸ்பதி மற்றும் நெய்யில் விலங்குக் கொழுப்பு,
வெண்ணெயில், மாட்டுக் கொழுப்பு,
மைதாவில் மணிலா (வேர்க்கடலை) மாவு போன்றவை கலக்கப்படுகின்றன.
சிப்ஸ், பாக்கெட் மற்றும் டின் உணவுகளில் விலங்குக் கொழுப்பு,
வெள்ளை சர்க்கரையில் கால்நடைகளின் எலும்புத் தூள், கலக்கப்படுகின்றன

இத்தனை கலப்படமா என்று பதற்றமாக இருக்கிறதா..? இன்னும் இருக்கிறது.
பழங்கள் மிகச்சிறந்த உணவு, மிக ஆரோக்கியமான உணவு என நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். பெரியவர்கள், மருத்துவர்களும் அதையே சொல்கிறார்கள். ஆனால் அவற்றிலும் ஊழல் நடக்கிறது.

உணவுப் பாதுகாப்புத் துறை, பழங்களைப் பழுக்கவைக்க, ‘எத்திலின்’ பயன்படுத்தச் சொல்லி அறிவுறுத்தினாலும், பெரும்பாலான வணிகர்கள் அதைப் பயன்படுத்தாமல் கார்பைடு கல்லைப் பயன்படுத்துகின்றனர். தர்பூசணிப் பழம் அடர் சிவப்பு நிறத்தில் இருப்பதற்கு, பீட்டா எரித்ரோசின் (Beta erythrocin) என்ற ரசாயனம் ஊசி மூலமாகச் சேர்க்கப்படுகிறது.
எலிகளை வைத்து எரித்ரோசின் பரிசோதிக்கப்பட்டதில், தைராய்டு கட்டி உருவானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எரித்ரோசின் கலக்கப்பட்ட பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டால், புற்றுநோய் வரும். கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கும்.
மாம்பழம்,தக்காளி,பப்பாளி,சப்போட்டா,வாழைப்பழம் போன்ற பழுங்களைப் பழுக்கவைக்க, கார்பைட் (Carbide) பயன் படுத்துகின்றனர். கார்பைடினால் மறதி, மூளையில் ரத்த ஒட்டம் குறைதல், தலைவலி, மூளை பாதிப்புகள் ஏற்படலாம் என மருத்துவத்துறை அச்சுறுத்த ஆங்காங்கே சோதனைகள் நடத்தி வியாபாரிகளைப் பிடித்து வருகிறார்கள்.
ஒரே மாதிரி அழகாக பழுத்துள்ள, பளபளப்பான பழங்களில், இயற்கையான வாசம் இருக்காது. அவற்றை கவனமாக தவிர்க்க வேண்டும். சீசன் பழங்களை, சீசன் இல்லாதபோது வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். பழங்களை உப்பு நீரில் ஊறவைத்து நன்றாகக் கழுவி, தோல் நீக்கி சாப்பிட வேண்டும். தோல் நீக்கி நீண்ட நேரம் வைக்கவும் கூடாது. தோல் ஒரு பாதுகாப்பு அரணும் கூட.

பழங்கள் மட்டுமா, கீரைகளிலும் அவை பளபளப்பாகத் தெரிய பச்சை நிறத்தில் ரசாயனத்தைத் தெளிக்கிறார்களாம், பூச்சி அரிக்காமல் இருக்கவும் மருந்துகள் தெளிக்கப்படுகின்றனவாம்.

இரண்டு நிமிட நூடுல்ஸ் என்று பெருமையாக நாம் உண்ணும் உணவு செரிக்க இரண்டு நாளாகும். அதில் சேர்க்கப்பட்ட மெழுகு, உடலில் சென்று கழிவாகத் தேங்கி நம் வயிற்றை ரணமாக்கிவிடும். உணவை செரிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் 48 மணி நேரம். இதில்  அதிக அளவில் கலக்கப்படும் சோடியம் மிக ஆபத்தானது. பீட்சா, பரோட்டா பற்றியெல்லாம் சொல்லவே தேவையில்லை. பக்கம் கூட போய்விட வேண்டாம்.

குழந்தைகள்  குடிக்கும் அனைத்து ஊட்டச்சத்து பானங்களும், டெல்லியில் பரிசோதனை செய்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. வேர்க்கடலையிலிருந்து எடுக்கப்பட்ட தேவையில்லாத, விலங்குகளுக்கு தருகின்ற 'சக்கை' சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தேவையில்லாத பொருட்களே ஒவ்வொரு பெயரில் புது புது பாட்டிலில் அடைத்து விற்கப்படுகின்றன. எவற்றை நம்பி வாங்குவது என்பது புரியவில்லை.

நம்மில் பலருக்கு டீ குடிக்காமல் இருக்கவே முடியாது. நமக்கு கிடைக்கும் டீ தூள்கள் மூன்றாம் ரகம்தான். இந்த டீ தூள்களில் இரும்பின் தேவையில்லாத கழிவுகள் மற்றும் நிறமூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இது பெரிய நிறுவனங்களின் டீ பாக்கெட்களிலும் இருக்கின்றன என்பது தான் உண்மை. அதுமட்டுமல்லாது, பெரிய ஓட்டல்கள், டீக்கடைகளில் டீ வடிகட்டி வீணாகத் தூக்கிப் போடும் சக்கையை எடுத்து வந்து அதனுடன் நிறமூட்டிகள், டீத்தூள் மற்றும் வாசனைப் பொருட்களைக் கலந்து மீண்டும் சந்தையில் விற்றுவிடுகிறார்கள்.

முன்பெல்லாம் வீட்டிலேயே செய்யப்படும் கேசரி, லட்டு வகைகள் , அப்பளம் மற்றும் வடாம் போன்றவை வெள்ளை நிறத்திலேயே இருக்கும். அதில் எந்தவிதமான வண்ணங்களும் கலக்காமல் உணவுப்பொருளாக மட்டுமே உடலுக்கு நன்மை பயத்தன. ஆனால், இன்று எல்லா உணவுப்பொருட்களிலுமே கவர்ச்சியான வண்ணங்களுக்காக பல்வேறு ரசாயனங்களைப் பயன்படுத்துகிறார்கள். அப்பளங்களே பலவண்ணங்களில் வருகின்றன. இப்படிப்பட்ட வண்ணங்கள் அனைத்துமே உடலுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவைதான்.உள்ளூர் வியாபாரிகள் உணவுப்பொருட்களில் கலப்படம் செய்வது போதாது என்று, சீனா , பாகிஸ்தான் போன்ற நாடுகள் திட்டமிட்டு நம்மை அழிக்க போலி உணவுப்பொருட்களைப் பரப்பி வருகின்றன. அரிசியப்போலவே பிளாஸ்டிக் அரிசியைத் தயாரித்து அரிசியில் கலந்து கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இது உடல் நலத்துக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இப்போது, முட்டையிலும் போலி முட்டை தயாரித்து சந்தைப் படுத்தத் துவங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வேதிப்பொருட்களாலேயே உருவாக்கப்பட்டு ஊசி போட்டே வளர்க்கப்படும் பிராய்லர் கறிக்கோழிகள் எவ்வளவு ஆபத்தானவை என்று நமக்குத் தெரியும். இப்படியே பார்த்துக்கொண்டு போனால், நாம் உண்ணும் உணவு அனைத்துமே வேதிப்பொருட்களாலான மெல்லக் கொல்லும் விசம் என்பது அதிர்ச்சியான உண்மை.

எதைத்தான் சாப்பிடுவது என்று தோன்றுகிறது. இயற்கை உணவுகளை நாமே நேரடியாகப் பரிசோதித்து வாங்குவது, பூச்சி மருந்துகள் பயன்படுத்தாத அருகாமை விவசாயிகளிடம் வாங்குவது, ரெடிமேட் உணவு வகைகளை வாங்காமல் நாமே தயாரித்து உண்பது, ஃபாஸ்ட் புட் உணவுகள் மற்றும் குளிர்பான வகைகளைத் தவிர்ப்பது , போன்ற எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாளலாம்.

கறந்த பாலில் கலப்படம் இருக்குமா என்பது நேர்மைக்கு சாதகமாக நாம் பிரயோகிக்கும் நல்ல சொல்லாடல். ஆனால் நவீன யுகத்தில் அதிலும் கலப்படம் இருக்கும் சாத்தியமுள்ளது. பசுவுக்கு நச்சுகளை நவீன யுத்திகளின் மூலம் உட்செலுத்துவதன் மூலம் அந்தப் பாலிலும் நாம் அறியா விஷக்கிருமிகளை வளர்க்கத் துவங்கிவிட்டோம்.

இந்த மானுடத்தைக் காக்க இயற்கை பெரும் போராட்டம் நடத்திக்கொண்டிருக்க , நாம் அதைவிட வேகமாக நமது தீய அறிவினாலும், பேராசையாலும் அழித்துக்கொண்டிருக்கிறோம் .


கொலுசு மின்னிதழில் வாசிக்க

http://kolusu.in/kolusu/kolusu_jan_17/index.html#p=32