ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

கவிதை ரசனை - 3

கொலுசு இதழில் நான் எழுதும் கவிதை ரசனை தொடரில் இந்த மாதம் இரண்டு கடல்களைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன்...

ஒன்று கவிஞர் தாமரை பாரதி எழுதிய உவர்மணல் சிறுநெருஞ்சியில் இருக்கும் கடல்.. மற்றொன்று கவிஞர் அதீதன் சுரேன் எழுதிய மேதகு அதிகாரி தொகுப்பிலிருக்கும் கடல்... உங்கள் வாசிப்புக்கு இங்கே..

                                        கவிதை ரசனை - இரா.பூபாலன் கவிதை என்பது காணாதன காணுதல் ... கண்கள் கண்டதையே வேறொன்றாக மனக் கண்ணால் காணுதல்.. இன்னொன்றாக, இன்னும் பலவாக வாசகனைக் காணச் செய்தல்.. கவிதை நதியைப் போல எங்கோ உற்பத்தியாகி செல்லும் வழிகளிலெல்லாம் பசுமையை விதைத்து விட்டுப் பாய்ந்தபடி இருக்கிறது. சமயங்களில் அது வில்லிலிருந்து புறப்பட்ட மாய அம்பைப் போல ஒன்றெனக் கிளம்பி பலவென உருவெடுத்து இலக்கான இதயங்களைத் துளைத்து வெளியேறும் வல்லமை கொண்டது. ஒரு கவிதை தரும் கண நேர சிலிர்ப்பையும், நெடு நேர அதிர்ச்சியையும் , பலநாட்கள் தொந்தரவு செய்யும் நினைவின் ஊடாடுதல்களையும் வேறெதுவும் தந்துவிடக் கூடுமா தெரியவில்லை. ஆனால் கவிதை மொழியின் உச்சத்தில் இருந்து கொண்டு அவற்றை நிகழ்த்திக் காட்டுகிறது. இரண்டு கடல் கவிதைகளை வாசிக்க நேர்ந்தது சமீபத்தில். ஒன்று கடலைப் பேரெழில் கண்களால் பார்த்து ரசித்து கடைசி வரியில் கடல் நம்மைப் பார்ப்பதாக கணநேர சிலிர்ப்பைத் தரும் கவிதை...
கவிஞர் தாமரை பாரதியின் சமீபத்திய தொகுப்பான உவர்மணல் சிறுநெருஞ்சியில் இருக்கும் அந்தக் கவிதை இதோ...
                        கடல் பார்த்தல்
நீராலான கடலாய் விரிந்திருக்கிறாள்
பிரபஞ்சத்தின் முதல் உயிரியைப் பிரசவித்த பெருந்தாய்
உலகின் பெரிய விலங்கு முதல் சிறிய உயிரி வரை
அனைத்தையும்
தனக்குள் பொதிந்து வைத்திருக்கும்
கடலை
இரு கண்களால் பார்த்துக்கொண்டிருப்பவனை
பல்லாயிரம் கோடிக் கண்களால் கடல் பார்த்துக்கொண்டிருக்கிறது.
- தாமரை பாரதி
" உவர்மணல் சிறுநெருஞ்சி " வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ் தொடர்புக்கு : 9940446650 இந்தக் கவிதையின் கடைசிப்பத்தி தான் கவிதை... அதிலும் கடைசி இரு வரிகள் தரும் சிலிர்ப்பு அற்புதம். தேவதச்சனின் இல்லாத குருவிகளின் சப்தம், இசையின் இல்லாத கால்களை ஆட்டுதி அமுதே தரும் இனிமை, ஷங்கர் ராம சுப்ரமணியனின் இலையெல்லாம் இல்லாத கிளிகளாகும் மாயம் என பல நல்ல கவிதைகள் தந்த சிலிர்ப்புகளின் இன்னுமொரு துளி... உவர்மணல் சிறுநெருஞ்சி நல்ல வாசிப்பனுபவத்தையும், மொழிநுட்பத்தின் தேர்ந்த சொற்களின் நிறைவையும் தரும் தொகுப்பு.. இன்னொரு கடல் கவிதை கவிஞர் அதீதனின் மேதகு அதிகாரி தொகுப்பில் வாசித்தது. இந்தக் கடல் நிஜக் கடலைப் போல பேரமைதியாகத் துவங்கி, பேரலையென மேலெழும்பி உள்ளுக்குள் சுழற்றி இழுத்துக் கொண்டது. இந்தக் கவிதை மனதுக்குள் ஓயாமல் அலையெழுப்பிக் கொண்டிருக்கிறது.. அதுவும் வெவ்வேறு அலைகளை... அந்தக் கவிதை...
                இருளில் தொலைந்திடும் கடல்
எவ்வழியே வெளியேறுவதெனும் தெளிவற்றுத்
தவிக்கிறது இச்சிறு மீன்
அதன் உலகம் இனி இக்கண்ணாடிச் செவ்வகத்திற்குள்தான்.
என்கிற உண்மையை ஏற்க மனமின்றி
அங்குமிங்கும் அலைபாய்ந்துகொண்டிருக்குமதைத் தன் கைகளில் எடுக்குமவளுக்குப் புறவளர்ச்சி பதினாறாயினும்
உள்ளுக்குள் இன்னமும் குழந்தைதான்
சினைக்கால முட்டையிலிருந்து வெளிவருகையில்
பருத்து வெளித்தெரியத் தொடங்கின மார்புகள்
உப்பை விரலால் தொட்டுச் சுவைக்கும் வாய்க்குள்
பெருகும் அலைகளில் துள்ளியாடி கடலைச் செதில்களால் அளக்குமதன் கண்களுக்குள் சிரித்துக்கொண்டிருக்கிறாள் ஏதுமறியாதவள்
புதிதாய் வந்துசேர்ந்திருக்கும் இடத்தின்
அந்நியத்தன்மையை கிரகிக்க முடியாமல் .
நாற்சுவர்களிலும் மோதிக்குலைந்து போயிருக்கும்
இருவுயிர்களும் வேறெவருக்கும் கேட்காதவாறு
பேசிக்கொள்கின்றன
வெளிச்சமற்ற அறைக்குள் பயந்திருப்பவளின் மேலங்கிக்குள் முகமறியா ஒருவனின் கைகள் நுழையும் கணத்தில் விழுந்துடைகிறது மீன்தொட்டி.
- அதீதன்
"மேதகு அதிகாரி" வெளியீடு : கடல் பதிப்பகம் தொடர்புக்கு 8680844408 இந்தக் கவிதை ஒரு தொட்டி மீனையும், மனவளர்ச்சியற்ற ஒரு பதினாறு வயதுப் பெண்ணையும் ஒரு சேர ஒரு செவ்வக அறைக்குள் சுழல விடுகிறது. ஒரு குறும்படத்தைப் போல காட்சிகளாகக் கதை சொல்லிக்கொண்டே வந்து இறுதிக் காட்சியில் பட்டென்று செவ்வகத்தை உடைத்துப் பேரதிர்ச்சியைத் தெளிக்கிறது நம் மீது.. அந்த இரண்டு மீன் குஞ்சுகளுமோ துள்ளத் துடிக்க நம் நினைவுகளைச் சலனப் படுத்தியபடியே இருக்கிறார்கள்... சலனப்படுத்தவும், சிலிர்ப்பைத் தரவும், சிரிக்க அழ வைக்கவுமான கவிதைகள் நம்மிடையே உற்பத்தியாகிக் கொண்டேயிருக்கின்றன. நாம் தேடிக் கண்டடைந்து விட்டால் போதும்.... ஒவ்வொரு மாதமும் வாசித்த புத்தகங்களிலிருந்து நேசித்த சில கவிதைகளை வாசகரகளுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் - இரா.பூபாலன்