புதன், 29 ஜூலை, 2015

I love my family

சென்ற மாதம் மகள் பாரதியின் பிறந்தநாள். காலையில் இலக்கிய வட்டத்துக்கு அவளை அழைத்துச் சென்று அனைவருக்கும் இனிப்புகள் கொடுத்துவிட்டு வந்தோம். மாலையில் கேக் வெட்டுவதாக ஏற்பாடு.

விழாவாகவெல்லாம் அல்லாமல்,  குடும்பத்தினர் மட்டும் கேக் வெட்டுவோம். கேக் வெட்டி அனைவரும் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள் பேசிக் கொண்டிருக்கையில் பாரதி ஒரு பலூனில் என்னவோ எழுதிக் கொண்டிருந்தாள் தனியாக வெளியே அமர்ந்து. என்னவென்று போய்ப் பார்க்கலாம் என்றால் எழுந்து வேறுபக்கம் போய் அமர்ந்து கொள்வாள். யாருக்கும் தெரியாமல் எழுதுகிறாளாம். சரி பார்க்கலாம் என்று மறைந்து நின்று பார்த்தோம். அவள் அதை எழுதி மொட்டை மாடிக்குச் சென்று பறக்கவிட்டாள். அது என்ன ஹீலியம் பலூனா என்ன. நான் வாய் வைத்து ஊதியதுதானே வீட்டை ஒரு சுற்று சுற்றிவிட்டு வீட்டின் பின் புறம் விழுந்துவிட்டது. நாங்கள் அதை ஓடிப் போய் எடுத்துப் பார்த்தால் எங்களுக்கு இன்ப அதிர்ச்சி.

இன்னைக்கு என்னோட பிறந்தநாள்
இன்னைல இருந்து நான் நல்லா படிக்கனும்
I love my family
என்னோட Family நல்லாயிருக்கனும்
இது இறைவனிடம் போய் சேரட்டும்

என்று எழுதித்தான் வான் நோக்கிப் பறக்க விட்டிருக்கிறாள். அதைப்பார்த்ததும் வீட்டில் அனைவருக்கும் அத்தனை பூரிப்பு.

குழந்தைகள்தான் எத்தனை அன்பானவர்கள். எல்லாக் குழந்தைகளும் குழந்தையாயிருக்கும்போது இப்படித்தான் இருக்கிறார்கள்.

வளர்ந்த பின்புதான் மாறி விடுகிறார்கள் அல்லது மாற்றப்பட்டு விடுகிறார்கள். குழந்தைகளால் எல்லோரிடமும் அன்பாக இருக்க முடிகிறது.
நம்மால் தான் கொஞ்சநேரம் கூட குழந்தையாக இருக்க முடியவில்லை.






செவ்வாய், 28 ஜூலை, 2015

இன்று நான் ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறேன்


எனது பிறந்தநாளான ஜூலை 22ல் எழுதியது...


இன்று நான் ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறேன்.

இந்த வரி எனக்கு காலை 8 மணியிலிருந்தே தோன்றியது. மாலையும் தோன்றியது. இந்த இரவில் அந்தக் கேள்விக்கான பதிலை அசை போடுகிறேன்.

இன்று நான் ஏன் இவ்வளவு அழகாயிருக்கிறேன்.

வழக்கம்போலவே
அதிகாலை பரபரப்பில்
கிளம்புகையில்
வழக்கத்துக்கு மாறாக
உறைந்த கடைவாய் உமிழ்நீருடன்
ஒரு முத்தம் தந்து
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்றாள் மகள்

ஒவ்வொரு கவிதைக்கும்
ஐ லவ் யூ அண்ணா
என்று அனுப்பும்
சின்ட்ரெல்லா தங்கைக்கு
( அப்படித்தான் தன்னைச் சொல்லச் சொல்கிறாள் )
ஐ லவ் யூ தங்காய் என்று அனுப்பினேன்.


பேருந்தைப் பிடிக்கும்
பரபரப்பில்
அப்பா அம்மாவிடம் ஆசிர்வாதம்.

வழியெங்கும் தொடர்ந்தபடி இருந்தன
இரவெங்கும் நண்பர்களிடம்
குவிந்த வாழ்த்துகள்.

கைகளும் மனமும்கொள்ளாத
அளவுக்கு நண்பர்களின்
பரிசுப் பொருட்களும்
புத்தகங்களும்.

ஒவ்வொரு வாழ்த்தும்
ஒவ்வொரு விதம்
அத்தனையிலும் அன்பிருக்கிறது
அது போதும்

எனது புகைப்படத்தை
முகப்புப் படமாக
வாட்ஸப்பில் வைத்து
வாழ்த்துச் சொல்லி
நெகிழச் செய்கிறார்கள்
சகோதரிகள்.

இரவு முதலே தொடர் அழைப்புகளில்
வாழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள்
நட்புகள்.

ஆம்

இன்று எனக்குப் பிறந்தநாள்.

அதனால் அழகாக இருக்கிறேனா? இருக்கலாம்.

அழகு அகத்தில் இருக்கிறது. அது தான் புறத்தை ஒளிரச் செய்கிறது
என நம்புகிறேன். மனம் மகிழ்ச்சியாக இருக்கும் போது நாம் அழகாயிருப்பதாக உணர்கிறோம் தான். கொண்டாட்டங்களும் மகிழ்ச்சிகளும் நான் அழகாயிருப்பதை உணரச் செய்யுமா என்றால், அது கொஞ்ச நேர மாயை தானே. இது அப்படி இல்லை.

இன்னும் சில காரணங்கள் இருக்கலாம்.

கிளம்பும் போதே அம்சப்ரியா அழைத்து அந்த அற்புதமான செய்தியைச் சொன்னார். என்னிடம் தான் முதன் முதலாகச் சொல்கிறார். அவருக்கு ஆகஸ்ட் மாதம் ஒரு முக்கிய விருதைத் தருவதாக அறிவித்திருக்கிறார்கள். அதைக் கேட்டதும் என் பிறந்தநாள் மட்டுமல்ல எல்லாமே மறந்து விட்டது. அத்தனை மகிழ்ச்சி அடி மனதின் ஆழத்திலிருந்து பெருக்கெடுத்தது. பின்னே இருக்காதா நான் பிறப்பதற்கும் முன்னரிலிருந்தே கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகாலமாக கவிதையை, இலக்கியத்தை, மக்கள் பணியை எல்லாம் இறுகப் பற்றிக் கொண்டு தன் வாழ்வை அதற்காகவே அர்ப்பணித்தவர் அவர். அவருக்கு மிகப் பொருத்தமான விருது. சந்தோஷத்தில் நண்பர்கள் நாலு பேருக்கு அழைத்துக் கூவிவிட்டேன். பிறகுதான் யோசித்தேன்.கொஞ்சம் அவசரப்படுகிறோமோ விருது முறைப்படி அனைவருக்கும் அறிவித்தபின்பு தானே நான் சொல்ல வேண்டும் ..?  சந்தோஷத்தில் இப்போது கூட வாய் நம நமக்கிறது. ஆனால் இறுகப் பொத்திக்கொள்கிறேன். இன்னும் சில நாட்களில் சொல்லிவிடலாம்.

பிறகு ..?


நேற்று ஒரு கல்லூரி மாணவிக்குக் கல்விக் கட்டணம் கட்டக் கடைசி நாள். பணம் இல்லை. வறுமை. மேலும் அவரது அம்மாவின் மருத்துவ அறுவை சிகிச்சைக்காக நிறைய செலவாகிவிட்டது. உதவி கேட்டிருந்தார். 16000 ரூபாய். அம்சப்ரியாவிடமும் என்னிடமும் அவ்வளவு பணம் இல்லை. இலக்கியவட்டத்துக்கு மாதம் மூன்று முதல் நான்காயிரம் செலவாகிவிடுகிறது எங்கள் இருவருக்கும். அது போக மாதா மாதம் யாருக்காவது இப்படி உதவுகிறோம், எப்போதும் கொஞ்சமாவது கையிருப்பு இருக்கும். இந்த மாதம் பாப்பாவுக்கு பள்ளிக் கட்டணமெல்லாம் போக வெறும் பை தான் இருந்தது. ஆனால் அவருக்கு உதவ வேண்டும் எப்படியாவது. யாரிடமும் கேட்கவும் சங்கடம் . யோசித்து யோசித்து 4 நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் கேட்டோம். அவர்கள் உதவுவதாகச் சொல்லி கொஞ்சம் பணம் தந்தார்கள் 9000 சேர்ந்தது. மீதி 7000 உடனடித் தேவை. என்ன செய்வது. யாரிடமும் கடன் வாங்க வேண்டாம் என்ற கொள்கைகளை தூக்கி எறிந்து விட்டு கடன் வாங்கியாகிவிட்டது. சம்பளம் வந்ததும் திருப்பித் தர வேண்டும். இரவு 8 மணிக்கு மாணவியின் வீட்டுக்குச் சென்று பணத்தைத் தந்துவிட்டு வந்த போது அவ்வளவு நிம்மதி.

இன்னும் …

வழக்கத்தைவிடவும் கூடுதல் அன்பினாலும் கரிசனங்களாலும் கழிந்தது இந்த நாள். மாலையில் இன்னுமொரு காரியம் செய்தேன். பேருந்துக்கு நின்றிருந்த போது ஒரு மனநிலை பிறழ்ந்தவர் நடந்து வந்து கொண்டிருந்தார். எதிரில் போன பெண்களும் ஆண்களும் முணுமுணுத்து முகம் சுழித்தபடி நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். நான் கிளம்ப வேண்டிய பேருந்து தூரத்தில் வருவது தெரிந்து விட்டது. அப்போது அவர் என்னைக் கடக்கும் போது பார்த்தேன். சட்டையை பேன்டுக்குள் விட்டு இன் செய்திருக்கிறார். தவறு அது அல்ல. அவரது பேன்டில் ஜிப் இல்லை. எனக்கும் தர்ம சங்கடம் ஆகிவிட்டது. பேருந்து வேறு நெருங்கி விட்டது. கொஞ்சம் வேகமாக அவர் அருகில் நடந்து போய் வேகமாக சட்டையை இழுத்து வெளியே விட்டுவிட்டு வந்து பேருந்தில் ஏறிவிட்டேன். அவர் மீண்டும் இன் செய்ய மாட்டார் என நம்பிக்கையுடன்.

பேருந்தில் ஏறியதும் தோழியின் அழைப்பு. ஏற்கனவே அழைத்திருக்கிறாள் கவனிக்கவில்லை. இப்போது எடுத்தவுடன் என்ன தான் பண்றீங்க என்று கேட்டவளுக்கு, நடந்ததைச் சொன்னேன். எதுவுமே பேசாமல் வைத்துவிட்டாள். நான் அவரது சட்டையை இழுத்து விட்டதை தூரத்தில் இருந்து பார்த்த விவரம் தெரியாதவர்கள் என்ன நினைத்திருப்பார்கள் ..?


அவ்வளவுதானா ..? இன்னும் ஒன்று, இரவு மகள் கேட்டாள், அப்பா எப்பவும் பிறந்தநாளுக்கு சாரணாலயம் இல்லத்துக்கு இல்லனா வேற இல்லத்துக்கு உதவலாம்னு சொல்லுவிங்களே இன்னிக்கு பண்ணுனிங்களா என்றாள். இல்லை என்றேன். ஏம்பா, இனிமேலாவது சரியா பண்ணுங்க என்றாள். சந்தோசமாக சரி என்றேன்.

அழகாக இருப்பது என்றால் மகிழ்ச்சியாக இருப்பதும் பொருள் தானே...

திங்கள், 20 ஜூலை, 2015

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இருபத்தி ஏழாவது சந்திப்பு


எப்போதும் இலக்கிய வட்டத்துக்கு முந்தைய நாள் மதியத்திலிருந்து அடுத்த நாளுக்கான பணி ஆரம்பமாகிவிடும். இந்த முறையும் அப்படித்தான். சனிக்கிழமை மதியமே நான், கார்த்தி, சோலை மாயவன் மூவரும் அப்புறம் மழையும் பொள்ளாச்சியில் சந்தித்துக் கொண்டோம். அரங்கத்தைத் தயார் செய்வது, ஃப்ளெக்ஸ் வாங்குவது அதை ஒட்டுவது என்று பரபரப்பாக இருந்தோம். வேலை முடிய இரவு 8 மணியாகிவிட்டது. மாமா செந்தில்குமாரும் வந்து விட்டார். திரைப்படத்துக்குப் போகலாம் இரண்டாவாது ஆட்டம் என்றார்கள். நான் திரையரங்கம் சென்று பல வருடங்கள் ஆகிவிட்டிருக்க தயங்கிப் பின் சம்மதித்தேன். பாபநாசம் திரைப்படம். இரவு பத்துமணிக்காட்சி. ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுக் காத்திருக்க அம்சப்ரியாவும் வந்துவிட ஐந்துபேரும் படம் பார்த்தோம். இந்தப் படத்தைப்பற்றி நிறைய எழுத வேண்டும் ஆனால் அதுக்கும் மேலயும் நிறையப்பேர் வலிக்க வலிக்க எழுதிவிட்டதால் அந்த வேலையைக் கை விடுகிறேன். இரவு வீட்டுக்குப் போய் தூங்கும்போது மணி 2. நாளை காலை இலக்கிய வட்டம், எழுந்து விடுவோமா என்று மூன்று அலாரம் வைத்துவிட்டுப் படுத்தேன். எப்படியோ விடிந்தே விட்டது...

:-)

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இருபத்தி ஏழாவது இலக்கிய சந்திப்பு 19.07.2015 அன்று பாலக்காடு சாலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

வழக்கமாக கோவையிலிருந்து நண்பர்கள் குறைந்தது ஐந்து பேர் வந்து விடுவார்கள் இந்த முறை அத்தனை பேரும் விடுப்புக் கடிதம் தந்துவிட்டார்கள் யாழி,அனாமிகா, விவேக்,ரதிபாலா ம்ஹூம் யாரும் வரவில்லை. அதுவே கொஞ்சம் கலக்கமாக இருந்தது. இவர்கள் வரவில்லை என்றால் இவர்களது ரசிகர்கள் வேறு நச்சுவார்களே என்று. இருப்பினும் எப்படியாவது கூட்டம் வந்து விடும் என்று மட்டும் நம்பினேன்.

மெல்ல மெல்ல அனைவரும் வரத்துவங்கினர். கவிஞர் ச. மணி காவல் தலைமை ஆணையர், அவர் காவலர் புடை சூழ நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். ஆனால் அவரது பேச்சிலும் பழகும் விதத்திலும் அத்தனை கனிவு. இந்தக் கனிவு கவிதையாகியிருக்கிறதா அல்லது கவிதை இந்தக் கனிவைத் தந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. கவிஞர் அமிர்தம் சூர்யா, மு.ஆனந்தன் அனைவரும் வந்துவிட வழக்கம் போலவே அரங்கம் நிறைந்து அமர இடமில்லாமல் சிலர் வெளியில் நின்று கொண்டிருக்க , அவர்களுக்கும் அமர ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போது முகம் மலர்ந்தது.
இனி நிகழ்ச்சிகள் துவக்கம் …

வழக்கம்போல படித்ததில் பிடித்தது. செந்தில்குமார்,மலையப்பன்,அபிநயா,வாசுதேவன் இன்னும் சிலர் தாங்கள் படித்ததில் தங்களைக் கவர்ந்த கதை, கவிதைகளை சிலாகித்துப் பேசினர்.

அடுத்து கவிஞர் இரா.பூபாலன் ( நாந்தான் , நானேதான் சொல்லிக்கறேன் ) வரவேற்புரையாற்றினார் . கவிஞர் சிவமணி எழுதிய சிற்பி கவிதைகளில் மனித உறவுகள் எனும் ஆய்வு நூலை கவிஞர் அம்சப்ரியா அறிமுகம் செய்து பேசினார்.  சிற்பியின் கவிதைகளில் மனிதமும் மனித உறவுகளும் எவ்வாறு கையாளப் பட்டிருக்கிறது என்பதை உதாரண கவிதைகளுடன் எடுத்துரைத்தார். கவிஞர் சிவமணி தனது ஆய்வுக்காக சிற்பியின் கவிதைகளை வாசிக்கத் தொடங்கி அந்தக் கவிதைகளில் தன மனதைப் பறிகொடுத்ததை தனது ஏற்புரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

கவிஞர் ச.மணி அவர்களது கவிதை நூலான வெயிலில் நனைந்த மழை நூலை கவிஞர் ஜனனன் பிரபு அவர்கள் அறிமுகம் செய்து பேசினார்
காவல் துறையின் அயராத பணிகளுக்கு இடையிலும் கவிதை எழுதும் மனது
கவிஞர் ச.மணியின் மனது என்றும் முற்றிலும் மழையைப் பற்றிய கவிதைகளை அவர் எழுதியிருப்பது அற்புதமான கவிதை அனுபவம் என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.

கவிஞர் ச.மணி அவர்கள் தனது ஏற்புரையில் எந்தக் காலகட்டத்திலும் வாசிப்பு மற்றும் எழுத்துப் பழக்கத்தை நாம் விட்டுவிடக் கூடாது என்றும் பணிச்சுமை எல்லாம் வாசிப்புப் பழக்கத்தை பாதிக்கக்கூடாது என்றும் கூறினார் தான் ஒரு காவல்துறை உயரதிகாரியாக மிகுந்த வேலைப்பளு இருப்பினும் வாசிப்பதையோ, குடும்பத்துடன் நேரம் செலவு செய்வதையோ, குழந்தைகளுடன் விளையாடுவதையோ விட்டுவிடுவதில்லை. கிடைக்கும் நேரங்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துகிறேன் என்று பேசியது பலருக்கு வியப்பு.


நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் தமிழின் சிறந்த  ஐம்பது கவிதைகளை அச்சிட்டு வழங்கியிருந்தோம். வாசகர்கள் அதைப் படித்துவிட்டு உரையாடலாம். வழக்குரைஞர் மு.ஆனந்தன் வாசகர்கள் மற்றும் கவிஞர்களுடன் நவீன கவிதைகளின் தற்காலப் போக்கு குறித்தும் எது நல்ல கவிதை என்பது பற்றியும் கலந்துரையாடினார்.

அந்தக் கவிதைகள் உங்கள் பார்வைக்கு,

https://www.dropbox.com/s/zpe2xxrnxlw82mv/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88.pdf?dl=0

நாங்கள் படித்தவற்றில் தேர்ந்தெடுத்த கவிதைகள், அவசரத்துக்குக் கிடைத்த கவிதைகள் என இவற்றை வடிவமைத்தோம். இன்னும் சிறப்பான பல கவிதைகள் இருக்கின்றன என்பதனையும் வாசகர்களுக்கு தெளிவாகச் சொல்லிவிட்டோம்.


ஒவ்வொரு மாதமும் செய்திமடல் வெளியிடுவோம். சென்ற மாத நிகழ்வின் புகைப்படங்கள் , வாசித்த கவிதைகள் அனைத்தையும் பதிவாக்கிவிடுவோம். இம்முறை செய்திமடலை கவிஞர் அமிர்தம் சூர்யா வெளியிட, வேள்வி இதழாசிரியர் கோவிந்தராஜன் பெற்றுக் கொண்டார்.

செய்தி மடல் உங்கள் பார்வைக்கு...

https://www.dropbox.com/s/ee7my2gdjbr92c9/Seythimadal%2018.pdf?dl=0



கவிஞர் அமிர்தம் சூர்யா அவர்களது சிறப்புரையில் ஒரு எழுத்தாளனுக்கு சொல் மிக முக்கியம். பல்லாயிரக்கான சொற்கள் நிறைந்த நம் தமிழ் மொழியில் ஒரு எழுத்தாளன் மிக நுட்பமான , செறிவான சொற்களைத் தேர்ந்தெடுத்து தனது படைப்புகளில் பயன்படுத்துகிறான் . சொல் என்பது வெறும் சொல்லல்ல ஒரு சொல்லுக்குப் பின் ஒரு கலாசாரம் இருக்கிறது ஒரு வாழ்வு  இருக்கிறது ஒரு வரலாறு இருக்கிறது. ஆகவே படைப்பாளி தனது படைப்புக்கான சொற்களைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும் என்றார். நவீன கவிதை புரிவதில்லை என்ற குற்றச்சாட்டு இங்கு பரவலாக  உள்ளது. யாரும் புரியாத மொழியில் எழுதுவதில்லை. தொடர்ந்து வாசிப்பதும்
நவீன கவிதையை வெறும் வார்த்தைகளாகப் பார்க்காமல் அனுபவமாக உள்வாங்கிக் கொள்வதும் தான் நவீன கவிதையை அணுகுவதற்கான சரியான வழி என்றும் பேசினார். அவரது கவிதை உதரணங்களும், கதைகளுமான பேச்சும் அனைவரையும் மதியநேரப் பசியை மறக்கடித்து உற்சாகமாக்கியது.
அடுத்ததாக அரவாணி ரேவதி எழுதிய வெள்ளை மொழி என்ற சுய வரலாறு நூலை கவிஞர் உமாபாரதி அறிமுகப் படுத்திப் பேசினார். நேரமாகிவிட்ட படியால் தனது உரையை சுருக்கி சுருக்கி சுருக்கிக் கொண்டார்.
வாசகர்கள் கவிஞர்கள் கலந்து கொண்ட கவியரங்கம் நடந்தது 17 கவிஞர்கள் தமது கவிதைகளை வாசித்தனர். கவிதைகளை விமர்சனமும் செய்து பேசினர்.

கவிஞர் அம்சப்ரியா அவர்களுடைய நன்றியுரையுடன் விழா இனிது முடிந்தது
பிறகு அனைவரும் உணவருந்திவிட்டு செய்திகளை நாளிதழ் அலுவலகங்களுக்குத் தந்து விட்டு 6 மணிக்கு வீட்டுக்குக் கிளம்பினால் , வீட்டிலிருந்து அழைப்பு நேத்து நீங்க பாபநாசம் போனீங்க தான இன்னிக்கு நாங்க எல்லோரும் போறோம் என்று . முன்னிரவு செய்யின் பின்னிரவு தாமே விளையும் என்று பழமொழியை திருப்பிப் போட்டுவிட்டு வீட்டுக்குக் கிளம்பினோம்.

அடுத்த மாத நிகழ்வு ஆகஸ்ட் 16 .. இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும்