எனது பிறந்தநாளான ஜூலை 22ல் எழுதியது...
இன்று நான் ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறேன்.
இந்த வரி எனக்கு காலை 8 மணியிலிருந்தே தோன்றியது. மாலையும் தோன்றியது. இந்த இரவில் அந்தக் கேள்விக்கான பதிலை அசை போடுகிறேன்.
இன்று நான் ஏன் இவ்வளவு அழகாயிருக்கிறேன்.
வழக்கம்போலவே
அதிகாலை பரபரப்பில்
கிளம்புகையில்
வழக்கத்துக்கு மாறாக
உறைந்த கடைவாய் உமிழ்நீருடன்
ஒரு முத்தம் தந்து
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்றாள் மகள்
ஒவ்வொரு கவிதைக்கும்
ஐ லவ் யூ அண்ணா
என்று அனுப்பும்
சின்ட்ரெல்லா தங்கைக்கு
( அப்படித்தான் தன்னைச் சொல்லச் சொல்கிறாள் )
ஐ லவ் யூ தங்காய் என்று அனுப்பினேன்.
பேருந்தைப் பிடிக்கும்
பரபரப்பில்
அப்பா அம்மாவிடம் ஆசிர்வாதம்.
வழியெங்கும் தொடர்ந்தபடி இருந்தன
இரவெங்கும் நண்பர்களிடம்
குவிந்த வாழ்த்துகள்.
கைகளும் மனமும்கொள்ளாத
அளவுக்கு நண்பர்களின்
பரிசுப் பொருட்களும்
புத்தகங்களும்.
ஒவ்வொரு வாழ்த்தும்
ஒவ்வொரு விதம்
அத்தனையிலும் அன்பிருக்கிறது
அது போதும்
எனது புகைப்படத்தை
முகப்புப் படமாக
வாட்ஸப்பில் வைத்து
வாழ்த்துச் சொல்லி
நெகிழச் செய்கிறார்கள்
சகோதரிகள்.
இரவு முதலே தொடர் அழைப்புகளில்
வாழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள்
நட்புகள்.
ஆம்
இன்று எனக்குப் பிறந்தநாள்.
அதனால் அழகாக இருக்கிறேனா? இருக்கலாம்.
அழகு அகத்தில் இருக்கிறது. அது தான் புறத்தை ஒளிரச் செய்கிறது
என நம்புகிறேன். மனம் மகிழ்ச்சியாக இருக்கும் போது நாம் அழகாயிருப்பதாக உணர்கிறோம் தான். கொண்டாட்டங்களும் மகிழ்ச்சிகளும் நான் அழகாயிருப்பதை உணரச் செய்யுமா என்றால், அது கொஞ்ச நேர மாயை தானே. இது அப்படி இல்லை.
இன்னும் சில காரணங்கள் இருக்கலாம்.
கிளம்பும் போதே அம்சப்ரியா அழைத்து அந்த அற்புதமான செய்தியைச் சொன்னார். என்னிடம் தான் முதன் முதலாகச் சொல்கிறார். அவருக்கு ஆகஸ்ட் மாதம் ஒரு முக்கிய விருதைத் தருவதாக அறிவித்திருக்கிறார்கள். அதைக் கேட்டதும் என் பிறந்தநாள் மட்டுமல்ல எல்லாமே மறந்து விட்டது. அத்தனை மகிழ்ச்சி அடி மனதின் ஆழத்திலிருந்து பெருக்கெடுத்தது. பின்னே இருக்காதா நான் பிறப்பதற்கும் முன்னரிலிருந்தே கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகாலமாக கவிதையை, இலக்கியத்தை, மக்கள் பணியை எல்லாம் இறுகப் பற்றிக் கொண்டு தன் வாழ்வை அதற்காகவே அர்ப்பணித்தவர் அவர். அவருக்கு மிகப் பொருத்தமான விருது. சந்தோஷத்தில் நண்பர்கள் நாலு பேருக்கு அழைத்துக் கூவிவிட்டேன். பிறகுதான் யோசித்தேன்.கொஞ்சம் அவசரப்படுகிறோமோ விருது முறைப்படி அனைவருக்கும் அறிவித்தபின்பு தானே நான் சொல்ல வேண்டும் ..? சந்தோஷத்தில் இப்போது கூட வாய் நம நமக்கிறது. ஆனால் இறுகப் பொத்திக்கொள்கிறேன். இன்னும் சில நாட்களில் சொல்லிவிடலாம்.
பிறகு ..?
நேற்று ஒரு கல்லூரி மாணவிக்குக் கல்விக் கட்டணம் கட்டக் கடைசி நாள். பணம் இல்லை. வறுமை. மேலும் அவரது அம்மாவின் மருத்துவ அறுவை சிகிச்சைக்காக நிறைய செலவாகிவிட்டது. உதவி கேட்டிருந்தார். 16000 ரூபாய். அம்சப்ரியாவிடமும் என்னிடமும் அவ்வளவு பணம் இல்லை. இலக்கியவட்டத்துக்கு மாதம் மூன்று முதல் நான்காயிரம் செலவாகிவிடுகிறது எங்கள் இருவருக்கும். அது போக மாதா மாதம் யாருக்காவது இப்படி உதவுகிறோம், எப்போதும் கொஞ்சமாவது கையிருப்பு இருக்கும். இந்த மாதம் பாப்பாவுக்கு பள்ளிக் கட்டணமெல்லாம் போக வெறும் பை தான் இருந்தது. ஆனால் அவருக்கு உதவ வேண்டும் எப்படியாவது. யாரிடமும் கேட்கவும் சங்கடம் . யோசித்து யோசித்து 4 நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் கேட்டோம். அவர்கள் உதவுவதாகச் சொல்லி கொஞ்சம் பணம் தந்தார்கள் 9000 சேர்ந்தது. மீதி 7000 உடனடித் தேவை. என்ன செய்வது. யாரிடமும் கடன் வாங்க வேண்டாம் என்ற கொள்கைகளை தூக்கி எறிந்து விட்டு கடன் வாங்கியாகிவிட்டது. சம்பளம் வந்ததும் திருப்பித் தர வேண்டும். இரவு 8 மணிக்கு மாணவியின் வீட்டுக்குச் சென்று பணத்தைத் தந்துவிட்டு வந்த போது அவ்வளவு நிம்மதி.
இன்னும் …
வழக்கத்தைவிடவும் கூடுதல் அன்பினாலும் கரிசனங்களாலும் கழிந்தது இந்த நாள். மாலையில் இன்னுமொரு காரியம் செய்தேன். பேருந்துக்கு நின்றிருந்த போது ஒரு மனநிலை பிறழ்ந்தவர் நடந்து வந்து கொண்டிருந்தார். எதிரில் போன பெண்களும் ஆண்களும் முணுமுணுத்து முகம் சுழித்தபடி நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். நான் கிளம்ப வேண்டிய பேருந்து தூரத்தில் வருவது தெரிந்து விட்டது. அப்போது அவர் என்னைக் கடக்கும் போது பார்த்தேன். சட்டையை பேன்டுக்குள் விட்டு இன் செய்திருக்கிறார். தவறு அது அல்ல. அவரது பேன்டில் ஜிப் இல்லை. எனக்கும் தர்ம சங்கடம் ஆகிவிட்டது. பேருந்து வேறு நெருங்கி விட்டது. கொஞ்சம் வேகமாக அவர் அருகில் நடந்து போய் வேகமாக சட்டையை இழுத்து வெளியே விட்டுவிட்டு வந்து பேருந்தில் ஏறிவிட்டேன். அவர் மீண்டும் இன் செய்ய மாட்டார் என நம்பிக்கையுடன்.
பேருந்தில் ஏறியதும் தோழியின் அழைப்பு. ஏற்கனவே அழைத்திருக்கிறாள் கவனிக்கவில்லை. இப்போது எடுத்தவுடன் என்ன தான் பண்றீங்க என்று கேட்டவளுக்கு, நடந்ததைச் சொன்னேன். எதுவுமே பேசாமல் வைத்துவிட்டாள். நான் அவரது சட்டையை இழுத்து விட்டதை தூரத்தில் இருந்து பார்த்த விவரம் தெரியாதவர்கள் என்ன நினைத்திருப்பார்கள் ..?
அவ்வளவுதானா ..? இன்னும் ஒன்று, இரவு மகள் கேட்டாள், அப்பா எப்பவும் பிறந்தநாளுக்கு சாரணாலயம் இல்லத்துக்கு இல்லனா வேற இல்லத்துக்கு உதவலாம்னு சொல்லுவிங்களே இன்னிக்கு பண்ணுனிங்களா என்றாள். இல்லை என்றேன். ஏம்பா, இனிமேலாவது சரியா பண்ணுங்க என்றாள். சந்தோசமாக சரி என்றேன்.
அழகாக இருப்பது என்றால் மகிழ்ச்சியாக இருப்பதும் பொருள் தானே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக