வியாழன், 28 பிப்ரவரி, 2019

கவிதை நிமித்தம் ஒரு பறத்தல்

இந்த மாதம் படைப்பு மின்ன்னிதழில் எனது பயணக்கட்டுரை ஒன்று இடம் பெற்றுள்ளது.. உங்களுக்கு வாசிக்கத் தருகிறேன் ...



கவிதை நிமித்தம் ஒரு பறத்தல் 
( சாகித்ய அகாடெமி இளம் எழுத்தாளர் சந்திப்புக்கு டெல்லி பயண அனுபவங்கள்.. )





பயணம் எப்போதும் அனுபவங்களால் ஆனது. பழகிய பாதையிலேயே செக்கு மாடெனச் சுற்றிச் சுழலும் மனதைக் கொஞ்சம் மாற்றுப்பாதைக்கு அழைத்துச் சென்று ஆசுவாசப்படுத்துவது.

பயணம் நிறைய புதிய முகங்களை அறிமுகம் செய்கிறது, நிறைய புதிய சித்திரங்களை நம்முள் வரைகிறது. புதிய பாதைகள்,புதிய இடங்கள், புதிய காட்சிகள் என ஒரு புதிய திசைப் பயணம் ஒரு புதிய வாழ்க்கையையே வாழச் செய்கிறது.   அப்படியான பயணம் ஒன்று கவிதையின் நிமித்தம் அமைந்தால் எப்படி இருக்கும் ? அப்படியான ஒரு பயணமாகத்தான் அமைந்தது டெல்லி பயணம். சாகித்ய அகாடெமியின் இளம் எழுத்தாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தமிழகத்தின் சார்பில் கவிதை வாசித்துவிட்டுத் திரும்பியிருக்கிறேன். அந்த அனுபவங்கள் இன்னும் கொஞ்ச நாட்கள் டெல்லியின் மூடுபனியைப் போல நினைவின் வெளிகளில் மங்கலாகப் படர்ந்தபடியிருக்கும்.

 சாகித்ய அகாடெமியின் இளம் எழுத்தாளர் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும் என சில மாதங்களாகவே கவிஞர் சிற்பி ஐயா கேட்டுக்கொண்டே இருந்தார் , வேலைப்பளு, சொந்த நிகழ்வுகள் என ஏதாவது காரணத்தின் பொருட்டு என்னால் கலந்து கொள்ள இயலாமலே இருந்தது. இந்த முறை அவர் அழைத்ததும் மறுக்க இயலவில்லை. உடனே ஒப்புக்கொண்டேன். எப்போதும் வெளியூர்ப் பயணம் என்றால் தனியாக அல்லது நண்பர்களுடன் செல்லத்தான் வாய்க்கும். இந்த முறை டெல்லி செல்ல வேண்டியிருப்பதை வீட்டில் சொன்னவுடன் மகள் பாரதியும் நானும் வருகிறேன் அப்பா என்றாள் ஆச்சர்யமாக. ஏதோ ஆர்வத்தில் கேட்கிறாள் என்று நினைத்து விட்டேன். ஆனால், மிகுந்த ஆர்வத்துடன் தினமும் கேட்கத் துவங்கிவிட்டாள். எப்போதும் இப்படி அவள் விரும்பியதில்லை. ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டு விட்டு சரி என்று ஒப்புக்கொண்டேன். ஒரு நாள் கவிதை வாசிப்புக்கு சாகித்ய அகாடெமியில் கலந்து கொள்வது மேலும் இரண்டு நாட்கள் அவளுக்கு டெல்லியைச் சுற்றிக் காட்டுவது என்று திட்டமிட்டுக் கொண்டேன். நான் மூன்று நாட்கள் அலுவலகத்துக்கு விடுப்பு, அவள் பள்ளிக்கு விடுப்பு. இது எங்கள் இருவருக்குமே முதல் முறை இவ்வாறு தனியாகப் பயணிப்பதும் இத்தனை நாட்கள் விடுப்பு எடுப்பதுவும்.

ஜனவரி 31 மாலை 4 மணிக்கு , ரவீந்திர பவனில் கவிதை வாசிக்க வேண்டும். ஜனவரி 30 கிளம்புகிறோம்.  டெல்லியில் தட்பவெப்ப நிலை 8 டிகிரி என்றார்கள். குளிராடைகளையெல்லாம் வாங்கி தயாராகிவிட்டோம். ஜனவரி 30 அன்று விமானம். பாரதிக்கு இது முதல் விமான அனுபவம்.  உற்சாகமாகக் கிளம்பிவிட்டாள். விமானம் பறக்கத் துவங்கியது.. மேகத்துக்கு மேல் பறக்கும் அனுபவத்தை ஒரு குழந்தையின் கண் கொண்டு பார்ப்பது அவ்வளவு அழகான அனுபவமாக இருக்கும். பாரதியின் கண்களில் அது தெரிந்தது. சன்னல் இருக்கைகள் எப்போதும் குழந்தைகளுக்கானவை அல்லது வளர்ந்தவர்களைக் குழந்தைகளாக்குபவை என்று பேருந்துப் பயணத்தைப் பற்றி எப்போதோ ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். அது விமானப் பயணத்துக்கும் பொருந்துகிறது தான். நாங்கள் சென்று சேரும்போது மாலை 4 மணியாகிவிட்டது. அங்கிருந்து கரோல் பாக் என்ற இடத்தில் ஒரு விடுதியில் சாகித்ய அகாடெமி அறை ஏற்பாடு செய்திருந்தது. ஒரு மணி நேரப் பயணத்தில் அறையை அடைந்தோம். டெல்லியின் பனிக் காற்று முகத்தை ஈரமாக்கிக் கொண்டிருந்தது. அன்றைய மாலையை ஒரு சிறு நடைப்பயணத்துடன் டெல்லியின் தெருக்களை வேடிக்கை பார்த்து முடித்துக்கொள்ள விரும்பி கரோல் பாக் சந்தைக்குள் நடந்தோம். தம்பி தினேஷ் கவிபாடி , முகநூலில் என் நிலைத்தகவலைப் பார்த்துவிட்டு அழைத்தான், இரவு உணவுக்கு சந்திக்கலாமா என்று. அவனே கரோல் பாக் வந்து தனது இந்திய வேளாண் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தின் விடுதிக்கு அழைத்துச் சென்றான். மரங்கள் அடர்ந்த அந்தக் கல்லூரியின் சாலை முகப்பிலிருந்து விடுதி வரை ஒரு மைல் தூரம் நீண்டிருந்தது. குளிர் பொங்கும் இரவில் அந்தச் சாலையில் நடப்பதை பாரதி கொண்டாட்டமாக்கிக் கொண்டாள். அங்கு நிறைய தமிழ் மாணவர்கள், அவர்களுடன் பேசிவிட்டு இரவு உணவை முடித்துவிட்டு வந்தோம்.

ஜனவரி 31, மாலை 4 மணிக்குத் தான் எனது கவிதை வாசிப்பு அமர்வு. ஆனால், காலையிலேயே சாகித்ய அகாடெமி சென்றுவிடுவதாகத் திட்டமிட்டோம். காரணம் , அதற்கு முந்தைய தினம் தான் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு சஞ்சாரம் நாவலுக்கு இந்த ஆண்டின் சாகித்ய அகாடெமி விருது வழங்கப்பட்டிருந்தது. அவருடன் பேராசிரியர் இரா.வேங்கடாசலபதி அவர்கள் உரையாடும் நேர்முகம் என்ற நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்கள்.  அந்த நேர்முகத்தில் கலந்து கொள்ளலாம் மேலும் பல நிகழ்வுகள் இருந்தன அவற்றிலும் கலந்து கொள்ளலாம் என நினைத்தோம்.  அன்றைய நிகழ்வுக்கு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் வந்திருந்தனர். தம்பி தமிழ் பாரதனை அங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி. முழு நாளும் உடன் இருந்தான்.  பேராசிரியர் இரா.வேங்கடாசலபதி எழுத்தாளர் எஸ்.ரா அவர்களை மிகச் சிறப்பாக நேர்முகம் செய்தார். அவரது இயல்பான கேள்விகளுக்கு எஸ்.ரா  உடனடியான அதே சமயம் ஆழமான பதில்களைத் தந்தார். தான் கதைகளால் ஆனவன், கட்டுரை,சிறுகதை,நாவல் அல்லது பத்தி என எதை எழுதினாலும் அதில் கதை இருக்கும் என்றார். மிக அழகான உரையாடலாக அமைந்தது. நிகழ்வின் பின்னர் மாணவர்களுடன் தரையில் வட்டமாக அமர்ந்து வெகு நேரம் உரையாடிக் கொண்டிருந்தார்.  எழுத்தாளர் மாலன், மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் ஆகியோரைச் சந்தித்து உரையாடியதில் மகிழ்ச்சியாக இருந்தது.


மாலை 4 மணிக்கு கவிதைக்கான அமர்வு, எனது கவிதைகளை மங்கலபிரதாபன் , அனாமிகா ரிஷி, சிந்து ஆகியோர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தந்திருந்தனர் . ஆங்கிலத்தில் இரண்டு கவிதைகள், தமிழில் ஒரு கவிதை வாசிக்கக் கேட்டிருந்தார்கள். தயாராக இருந்தேன்.

இளம் எழுத்தாளர் சந்திப்புக்கு அனைத்து மாநிலங்களில் இருந்தும் இளம் கவிஞர்கள்  வந்திருந்தனர். பெரும்பாலும் இந்தியில் வாசித்தனர். சிலர் ஆங்கிலத்தில் வாசித்தனர். சுஃபியா, ஶ்ரீஜித் ஆகியோர் நன்றாகப் பேசினார்கள், ஶ்ரீஜித் மலையாளத்தின் சமகால இலக்கியப் போக்குகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். எனது முறை வந்ததும் கவிதைகளை வாசித்தேன். கவிதை வாசிப்பை ஒரு திருவிழா போல சாகித்ய அகாடெமி கொண்டாடியதைப் பார்த்தேன். கவிதைகளை நேசிப்பவனுக்கு அது எவ்வளவு பெரிய ஆறுதலாக இருந்திருக்கும். அப்படித்தான் இருந்தது.

மாலை மலைமந்திர் கோவிலுக்கு தமிழ் பரதனுடன் சென்று விட்டு, தில்லி தமிழ்ச் சங்கத்துக்குச் சென்றோம். அங்கு எஸ்.ரா அவர்களுக்குப் பாராட்டு விழா. நான் சென்றதன் முக்கியக் காரணம் ஷாஜகான் ஐயாவையும், கவிஞர் சுரேஷ் பரதனையும் சந்திக்க. சுரேஷ் பரதனின் ஊர் நடுவே ஒரு வன தேவதை கவிதைத் தொகுப்பை வாசித்திருக்கிறேன். சிறப்பான தொகுப்பு அவரது கவிதைகளை இரு முறை பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் படித்ததில் பிடித்தது பகுதியில் பகிர்ந்துகொண்டிருக்கிறேன் ஆகவே அவரைச் சந்திக்க ஆவலாயிருந்தேன். ஷாஜகான் ஐயாவின் எழுத்தும் சமூகச் செயல்பாடுகளும் எப்போதும் நான் வியந்து பார்க்கும் ஒன்று. ஆகவே அவரையும் சந்திக்க விரும்பினேன். அதிக நேரமில்லை, காரணம் பாரதியும் காலையிலிருந்து இலக்கியத்தின் முகத்திலேயே திரும்பத் திரும்ப முழித்ததால் சோர்வாக இருந்தால். சுரேஷ் பரதன், வனிதா ரெஜி ( சுரேஷ் பரதனின் மனைவி),ஷாஜகான் ஐயா, தமிழ்பரதன் கொஞ்சம் பேச்சு ஒரு குவளை காபி. அவ்வளவு தான் வேகமாக அறைக்கு வந்து விட்டோம். அன்று மட்டும் தான் பாரதி வெகு சீக்கிரம் உறங்கிவிட்டாள்.

வெள்ளிக்கிழமை, டெல்லியைச் சுற்றிப்பார்க்கக் கிளம்பினோம், பனிக்கர் டிராவல்ஸில் முன்பதிவு செய்திருந்தேன். தினமும் காலையில் ஒரு பேருந்து டெல்லி முழுக்கச் சுற்றிக்காட்டச் செல்லும். ஒரு ஆளுக்கு நானூற்று ஐம்பது ரூபாய்.  குதுப்மினார், செங்கோட்டை, மகாத்மா காந்தி சமாதி, தாமரைக்கோவில், என டெல்லி முழுக்கச் சுற்றிக் காட்டினார்கள். பேருந்தில் நிறைய தமிழர்கள் இருந்தனர். ஒவ்வொரு இடத்திலும் இறக்கி விட்டு விட்டு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் கால அவகாசம் தருவார்கள் அதற்குள் பேருந்துக்குத் திரும்பிவிட வேண்டும். முதல் இரண்டு இடங்களில் நானும் பாரதியும் நெடுநேரம் சுற்றிவிட்டுத் தாமதமாக வந்தோம். வழிகாட்டி சொன்னார். சீக்கிரமாக வாங்க இல்லை என்றால் பேருந்து கிளம்பி விடும் அடுத்த இடத்துக்கு ஆட்டோ பிடித்து தான் வர வேண்டும் என்றார். அடுத்தடுத்த இடங்களில் சரியான நேரத்துக்கு வந்துவிட்டோம்.

சனிக்கிழமை ஆக்ரா சென்றுவிட்டு இரவு விமானத்தில் ஊர் திரும்புவதாகத் திட்டம். பனிக்கர் டிராவல்ஸில் அதற்கும் ஒரு பேருந்து இருக்கிறது. ஒரு ஆளுக்கு ஆயிரத்து நூறு ரூபாய். ஆனால் அவர்கள் டெல்லி திரும்ப இரவு பத்து மணி ஆகிவிடும், நான் விமானத்தைப் பிடிக்க முடியாது. ஆனால், ஆக்ரா போக பாரதி ஆர்வமாக இருந்தாள். எனவே,நண்பரிடம் சொல்லி ஆக்ராவுக்கு டாக்சி ஏற்பாடு செய்து கொண்டோம். நண்பரும் எங்களுடன் இணைந்து கொண்டார். அதிகாலை ஐந்து மணிக்கே கிளம்ப வேண்டும். நான்கு மணிக்கு எழுந்து குளிக்க வேண்டும். பள்ளிக்குக் கிளம்ப அத்தனை பாடுபடும் பாரதி ஒரு மறுப்பும் இல்லாமல் நான்கு மணிக்கு எழுந்துவிட்டாள். வாகனம் கிளம்பும்போது பார்க்கிறோம் எதிரில் ஒரு வெண் திரையென பனி படர்ந்து கிடக்கிறது. சாலை தெரியவேயில்லை. கார் கண்ணாடி முழுதும் பனி படர்கிறது ஆனால் அவற்றை அவ்வப்போது துடைத்துக்கொண்டு வண்டி போய்க் கொண்டே இருக்கிறது. சில்லென்றிருந்த அனுபவம் அது. மதுராவில் கிருஷ்ணன் பிறந்த இடம்,  ஆக்ரா கோட்டை மற்றும் தாஜ்மகால் சென்றோம். பனி மூடிக் கிடந்த தாஜ் மகாலை தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு, ஒரு வெள்ளை நிறப் பிரம்மாண்டம். அதற்குள் தான் மும்தாஜூம் அருகிலேயே ஷாஜகானும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். உலகின் மிக அழகான ஒரு கல்லறையில் உறங்கும் பேறு பெற்றவர்கள்.

நாங்கள் திட்டமிட்டு நேரமின்மையால் அக்‌ஷர்தாம் கோவிலுக்குச் செல்ல இயலவில்லை. சென்ற முறை நான் சென்ற போதும் அங்கு செல்ல இயலவில்லை. இன்னொரு முறை பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டு திரும்பி வரும் போது ஒரு குறுஞ்செய்தி வந்தது. உங்களது விமானம் இரண்டுமணிநேரம் தாமதாமாகும் என. டாக்சியை அப்படியே அக்‌ஷர்தாம் கோவிலுக்கு விடச் சொல்லிவிட்டோம். இரவு 7 மணிக்கு தினமும் அக்கோவிலில் ஒலி ஒளி அமைப்புகளுடன் அரை மணி நேர இசை நிகழ்ச்சி ஒன்று நடக்கும். முழுமையாக அதைப் பார்த்தோம். அற்புதம். தொழில் நுட்பத்தின் பிரம்மாண்டத்தை மிகப் பொருத்தமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஏராளமான பார்வையாளர்கள் அதற்கு. இரவு சீக்கிரமாக விமான நிலையம் வந்து விட்டோம். கோவை வந்து சேர அதிகாலை மூன்று மணி ஆகிவிட்டது. வீட்டில் அனைவரும் வந்து அழைத்துச் சென்றார்கள். இந்தப் பயணம் தந்த நினைவுகள் அவ்வளவு சீக்கிரம் அழியாது மனதை விட்டு அப்படி தற்காலிகமாக மறந்தாலும் ஒவ்வொரு இடத்திலும் நாங்கள் எடுத்துக் கொண்ட நூறு புகைப்படங்கள் அந்த மகிழ் கணத்தினை உறைவித்துத் தரும்.

நான் பள்ளி நாட்களில் அடிக்கடி விமானத்தை வரைந்து பார்ப்பேன்.  கோட்டோவியத்தில் வரைய எளிதான ஒரு கனவு வாகனம் அது என்பதால். இத்தனை வருடம் ஆகியிருக்கிறது அந்தக் கனவுக்குள் என்னைப் பொருத்திக் கொள்ள. இந்த முறை என்னை இவ்வளவு உயரத்தில் பறக்க வைத்த என் கவிதைகளுக்கு நன்றி. கவிதை தான் என் சிறகு. அதைப் பொருத்திக் கொண்டு தான் நான் கனவிலும் கண்டிடாத வெளிகளில் எல்லாம் பறந்து திரிகிறேன். இப்போது கூடடைகிறேன். வணக்கம்.

படைப்ப்பு இதழ் வாசிக்க : 

https://padaippu.com/thagavu-10