சனி, 16 அக்டோபர், 2021

மழை முத்தங்களில் பூக்கும் மனமலர்

முத்தம் # 1

முதல் துளி
மண்ணை முத்தமிடுகிறது
நிலத்தின் நரம்புகளெங்கும்
மின்சாரம் பாய
நெடுநாள் காதலியின்
முதல் ஸ்பரிசத்து நினைவில்
ஒரு முறை தன்னை
சிலிர்த்துக் கொண்டு
பெரும் கூடலுக்குத் தயாராகும்
உடலென
தயாராகிறது
நிலம்

முத்தம் # 2

மழையின்
இடையறாத முத்தத்தை
சலிப்புகளோடும்
அலைக்கழிப்புகளோடும்
அல்லாடியபடி
அனுபவித்துக் கிடக்கும்
இந்த மஞ்சள் மலர்
சதா 
என்ன பேசியபடி இருக்கிறது
மழையோடு ?

முத்தம் # 3

லட்சாதி லட்சம் 
முத்தங்கள் மண்ணை நோக்கி
இடப்படுகின்றன
அலைபேசி முத்தங்களை
காதலனுக்கும் காதலிக்குமிடையில்
காற்றில் களவாடிவிடும்
ஒலிக்கற்றைகள் போல
எங்கெங்கும் சிதறியது போக
சிற்சில முத்தங்களே
சேரிடம் சேர்கின்றன

முத்தம் # 4

மழை ஏன் இவ்வளவு
ஆக்ரோஷமாகப் பெய்கிறது ?
பொருள்வயிற் பிரிவின் 
நெடுநாள் காத்திருப்பின் பின்னர்
சந்திக்கும் தலைவனின்
முதல் முத்தத்தைப் போல ?

முத்தம் # 5

ஒவ்வொரு துளியாகத் தொடங்கி
பெரு மழையெனப்
பொழிந்து கொண்டேயிருக்கும்
இந்த மழை முத்தங்களை
யார் தருவது
யார் பெறுவது ?
எல்லோர்க்கும் பெய்யும் மழையென
எல்லோர்க்குமான முத்தம்