சனி, 24 செப்டம்பர், 2022

கவிதை ரசனை - 7

கவிதை ரசனை கவிதைகள் ஒரு குளத்தில் பூக்கும் பல்வேறு நிறமும் மணமும் கொண்ட பூக்கள். அழகியல், அறிவியல், அனுபவம், சமூகத்தின் மீதான குறுக்குவிசாரணை, ரெளத்திரம், என பல குணங்களையும் கொண்டவை. மிடுக்கும் சிடுக்குமாக எப்போதும் அலையும் ஓர் இராணுவ அதிகாரி வீடு வந்ததும் தன் ஆடைகள் தளர்த்தி, உடைக்கு உள்ளேயிருக்கும் மிடுக்கைக் கொஞ்சம் தளர்த்தி தன் குழந்தையிடம் குழைவாரே அப்படி கவிதைகளும் குழந்தைகளிடம் குழைகின்றன. குழந்தைகளுடன் நடை பயின்று விளையாடுகின்றன. கவிதை குழந்தைமையைக் கொண்டாடுகிறது. குழந்தைகளுக்கென தயாராகும் எல்லாப் பொருட்களிலும் கலைநயம் மிளிரும்; குழந்தைகளைக் கவரும் வண்ணங்கள் நிறைந்திருக்கும். குழந்தைகளைப் பற்றிய கவிதைகளிலும் அப்படியான வண்ணங்கள் வந்து நிறைந்துவிடுகின்றன. 


இயல்பாகவே குழந்தையின் குறும்புகளை ரசிக்கும் நாம் கவிதையென்று வரும் போது அதைக் கொண்டாடுகிறோம். குழந்தைமையைக் கவிதையில் கொண்டாடிய கவிதைகள் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது முகுந்த் நாகராஜனின் கவிதைகள் தாம். நீர் தெளித்து விளையாடுதல், குழந்தைக்கு பந்து வீசுதல், ஜன்னல் சீட் போன்ற பல கவிதைகள் என்றென்றைக்கும் நினைவில் இருக்கும்படியான படைப்புகள். அவரது மொழியும், சின்னச் சின்ன சம்பவங்களையும் அழகிய கவிதைகளாக்கிவிடும் அவரது சொல்நேர்த்தியும், அவரைத் தனித்துவமான கவிஞராக அடையாளம் காட்டுகின்றன. அவரது கவிதை ஒன்று...


                        பூப்பறித்தல்


வழியில் அழுது அடம் பிடிக்கும் 

குழந்தையை மிரட்ட

இருப்பதிலேயே சின்னக் கிளையை

சாலையோர மரத்தில்

தேடுகிறாள் அம்மா.

அழுகையை நிறுத்திய குழந்தை 

அதே மரத்தின்

பூ வேண்டும் என்கிறது.


முகுந்த் நாகராஜன்

கிருஷ்ணன் நிழல் தொகுப்பிலிருந்து 


குழந்தையை மிரட்டும் சின்ன சம்பவம் தான் கவிதை. இந்தக் கவிதையில் சில சொற்களை எவ்வளவு லாவகமாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது இந்தச் சின்ன சம்பவத்தின் மீது அழகுப் பூச்சுகளைப் பூசி மெருகேற்றியிருக்கிறது. இருப்பதிலேயே சின்னக் கிளை என்கிற வரி அம்மாவின் மனதைக் காட்டுகிற வரி. குழந்தையை மிரட்டவும் வேண்டும், வலிக்காமலும் அடிக்க வேண்டும் என்பதான அம்மாவின் மனதினை இந்த ஒரு வரி காட்டிவிடுகிறது. அதே மரத்தின் பூ வேண்டுமெனக் கேட்கும் குழந்தையின் மனம் தான் இந்தக் கவிதை. அழுகையை நிறுத்தியவுடனே அழுகையிலிருந்து மீண்டுவிடும் சக்தி குழந்தைகளுக்குத் தான் வாய்க்கின்றன. அடித்தாலும் கொன்றாலும் மீண்டும் அம்மாவின் காலைக் கட்டிக்கொள்ளும் குழந்தையை இந்தக் கவிதை அழகுற நம் முன் வடித்துத் தந்திருக்கிறது. பூப்பறித்தல் எனும் கவிதையிலில்லாத கவிதையின் தலைப்பு இந்தக் கவிதையில் நிகழும் நிகழ்வாக மட்டுமன்றி வாசிக்கும் மனங்களில் நிகழும் விளைவாகவும் இருக்கிறது. 


குழந்தைகள் எதுவரை குழந்தைகளாக இருக்கிறார்கள் என்பது மிக முக்கியமான கேள்வி. நம் நவீன வாழ்வு தந்த பேரழுத்தங்களில் ஒன்று இந்தக் கேள்வி. நம் குழந்தைகள் நம் குழந்தைகளாக இருப்பதில்லை, குழந்தைகள் குழந்தைகளாகவே இருப்பதுமில்லை. மூன்று வயதுக்கும் முன்னரே பள்ளிகளுக்கு அனுப்பப்படும் குழந்தைகள் தம் பால்யங்களைத் தொலைத்துவிடுகிறார்கள். தங்கள் குழந்தைமையைத் தொலைத்துவிடுகிறார்கள். இவ்வுலகை அழகிய கண்களால் தரிசித்து மகிழ வேண்டிய வயதில் அவர்கள் மீது கணக்கும் அறிவியலும் திணிக்கப்படுகிறது. உலக அறிவையெல்லாம் மூன்று வயதிலேயே அடைந்துவிட வேண்டுமென்கிற பெற்றோர்களின் நிர்பந்தம், போட்டி நிறைந்த உலகிற்குள் அவர்களை இழுத்துவந்து விடுகிறது. ந.பெரியசாமியின் இந்தக் கவிதை, குழந்தைகள் என்று தம் குழந்தைமையைத் தொலைத்தார்கள் என்று பேசுகிறது. பள்ளிக்கூடம்


அடிக்கடி நீரிலிட்டு

புதிது புதிதாக சோப்பு வாங்க 

பூனை மீது பழி போடுவாள்


விருந்தினரின் செருப்புகளை ஒளித்து 

புறப்படுகையில் பரபரப்பூட்டி 

நாயின் மீது சாட்டிடுவாள்


தேவைகளை வாங்கிக் கொள்ள 

உறுதியளித்த பின் தந்திடுவாள் 

தலையணை கிழித்து மறைத்த ரிமோட், வண்டி சாவிகளை


கொஞ்ச நாட்களாக குறும்புகள் ஏதுமற்றிருந்தாள்


மாதம் ஒன்றுதான் ஆகியிருந்தது 

அவளை பள்ளிக்கு அனுப்பி.


- ந.பெரியசாமி

குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீல வானம் தொகுப்பிலிருந்து


இது இயல்பாக நாம் எதிர்கொள்ளும் சிக்கல் தான். பள்ளிக்குச் செல்லும் வரை இருந்த குழந்தை தனியார் பள்ளிகள் தரும் மன அழுத்தத்திலும் வீட்டுப்பாடச் சுமைகளிலும் கசக்கப்பட்டு தன் குழந்தைத் தன்மையை இழந்து விடுகிறது. அதுநாள் வரைக்குமான குறும்புகள் குறைந்து குழந்தைகள் வளர்ந்துவிடுகிறார்கள் வெகு வேகமாக. முந்தைய தலைமுறைக் குழந்தைகள் அனுபவித்த பல அற்புதங்களை இழந்து நம் காலத்துக் குழந்தைகள் நவீன வாழ்வின் சாட்சியாக வளர்கிறார்கள். கல்விமுறையிலும் பெற்றோர் மனங்களிலும் தற்போது ஏற்பட்டு வரும் விழிப்புணர்வு இன்னும் அதிகமாகி புதிய கற்பித்தல் முறைகளாலும், வாழ்வியல் கல்வி முறைகளாலும் நாம் வேறொரு திசையை நோக்கிப் பயணிக்க வேண்டிய காலம் இது. இப்படியான காலத்தின் சாட்சி தான் ந.பெரியசாமியின் கவிதை.


-


ஒவ்வொரு மாதமும் வாசித்த புத்தகங்களிலிருந்து நேசித்த சில கவிதைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் - இரா.பூபாலன்